மனிதன் என்பவன்…


வருங்காலத்தில் மனிதர்களின் உணவு எதுவாக இருக்கும் என அப்து’ல்-பஹாவிடம் வினவப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

“பழங்களும் தானியங்களும். புலாலே உண்ணாத ஒரு காலம் வரும். மருத்துவ அறிவியல் இப்போது அதன் ஆரம்பப் பருவத்தில் இருக்கின்றது, இருந்தபோதும் அது நமது இயல்பான உணவு பூமியில் விளையக்கூடியவையே என எடுத்துக்காட்டியுள்ளது. இந்த இயற்கை உணவுக்கான நிலையை மனிதர்கள் படிப்படியாக அடைவார்கள்.”

வேறோர் இடத்தில், அவர் மனிதர் மற்றும் மிருகங்களின் பற்கள் மற்றும் ஜீரன உருப்புக்கள் குறித்து விளக்கினார். மனிதர்கள், தாவரவுண்ணிகள், புலாலுண்ணிகள் ஆகியவற்றின் பற்களை ஒப்பிட்டு, மனிதர்களின் பற்கள் தாவரங்கள் மட்டும் உண்பதற்கோ புலால் மட்டும் உண்பதற்கோ படைக்கப்பட்டதல்ல என்கிறார். அவை பழங்கள், தானியங்கள், கிழங்குகள் போன்றவற்றை உண்பதற்கான அமைப்பைக் கொண்டுள்ளன எனவும், அதே போன்று இம்மூன்று வகை உயிரினங்களின் ஜீரண உறுப்புக்களான குடல்களை ஒப்பிட்டு மனிதர்களின் குடல்முறை புலால் உண்பதற்கோ தாவர வகைகளை உண்பதற்கோ தேவையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என விளக்கினார். மாறாக, தானியங்கள், பழங்கள் போன்ற உணவு வகைகளை ஜீரணிப்பதற்கான அமைப்பை மட்டுமே அவை கொண்டிருக்கின்றன என அவர் மேலும் விளக்குகிறார்.

இன்று உலகின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என நாம் அடிக்கடி செவிமடுக்கின்றோம். இது ஓர் உலகளாவிய பிரச்சினையாகவும் இருக்கின்றது. மனிதர்கள் புலால் உண்பதற்கும் உலகின் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா?

உலகம் முழுவதும் எரிபொருளைப் பயன்படுத்தும் யந்திரங்கள் வெளியாக்கும் புகைகளின் அதிகரிப்பு காற்று மண்டலத்தை பாதிக்கிறது என்கிறார்கள் இது உண்மைதான். ஆனால், இதைவிட அதிகமாக, காற்றுமண்டல தூய்மைக் கேட்டிற்கு, ஐந்தில் ஒரு பகுதி பங்களிக்கும் ஒரு தொழில் இருக்கின்றது. அது உலகளாவிய கால்நடை தொழிலாகும் (Global livestock production). கால்நடைகளிலிருந்து வெளிப்படும் (மீத்தேன்)methane வாயு காற்று மண்டலத்தில் சேர்ந்து வெப்பத் தேக்கத்தை அதிகரிக்கின்றது.

இப்பிரச்சினை போக, கால்நடைகள் வளர்ப்புக்கு மற்ற உணவு வகைகளுக்குத் தேவைப்படும் வளங்களின் அளவைவிட இருமடங்கு தேவைப்படுகின்றது. மற்றும், மீன்பிடி தொழிலினால் இன்று கடுமையான பின்விளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதை இங்கு விளக்குவதற்கு இடம் போதாது.

மனிதர்கள் புலால் உண்ணும் பழக்கத்திற்கு சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பே ஆளாகிவிட்டனர் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் வாயிலாக தெரிய வருகின்றது. ஆனாலும், இது இடையில் ஏற்பட்ட பழக்கமே ஆகும். ஆங்கிலத்தில் இது  (acquired habit) என அழைக்கப்படுகிறது.

மனிதர்கள் புலால் உண்ணிகள் இல்லையென தெரிந்துகொண்டோம். அப்படியானால் அவர்களின் உண்மையான இயல்புதான் என்ன? மனிதன் தன் உண்மை நிலை அறியாமல் ஏன் ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றான். உண்மையில் மனிதனை கடவுள் எதற்காக படைத்துள்ளார் எனும் கேள்வியை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், மனிதர்களின் வாழ்க்கைமுறையில் அவர்கள் தங்கள் உண்மையான இயல்புக்கு எதிர்மாறான பல பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரியவரும். அவற்றோடு ஒப்பிடும்போது புலால் உண்ணுவது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தோன்றாது.

“மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை தெரிந்துகொண்டான்… மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை” எனும் பாடலை நாம் அடிக்கடி கேட்டதுண்டு. மனிதன் என்பவன் உண்மையில் யார் எனும் கேள்விக்கு காலம் காலமாக மனிதர்கள் பதில் தேடி அலைந்துள்ளனர். ஆனாலும், “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே” எனும் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மற்றும், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,” என்னும் பாடலும் ஞாபக்திற்கு வருகிறது.

அவ்வாறாயின், மனிதன் எவ்வாறு தெய்வமாகலாம்? மனிதன் தெய்வமாக முடியாது, ஆனால் அவன் தெய்வதன்மையை அடையலாம். தெய்வத்தன்மை என்பது கடவுளின் ஆன்மீக சிறப்புகளை பிரதிபலிப்பதன் மூலம் அடையப்படும். அன்பு, கருணை, இரக்கம், தயவு, பொறுமை, போன்ற ஆன்மீகப் பண்புகளே மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றன. அவற்றை நாம் தேடி அலைய வேண்டியதில்லை, அவை நமக்குள்தான், மறைந்திருக்கும் இரத்தினங்களைப் போன்று இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர வேண்டியதே நம் கடமை. அதற்கு முதல் படி, கடவுளை அறிந்துகொள்வது. அதையடுத்து அவருடைய சேவையில் ஈடுபடுவது. இதைச் செய்யும் போது ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’.

மாற்றங்களும் மேம்பாடும்


இந்த பூமி தனியே உருவாக்கப்படவில்லை. ஆரம்பத்தில்  “பெருவெடிப்பு” (Big Bang) அல்லது அதிர்வெடி ஒன்றிலிருந்து ஒன்றாக இருந்த பொருள் அல்லது வஸ்து (matter) அண்டசராசரங்களாக, தீக்குழம்புக் கோள்களாக திக்கெல்லாம் தெறித்துச் சிதறி இன்று நாம் காணும் இந்த நிலைக்கு, பேரண்டமாக, அண்டங்களாக, மண்டலங்களாக, கோள்களாக, வின்கற்களாக உருவெடுத்துள்ளன. ஆம்பத்தில் ஒன்றாக இருந்தது மாற்றம் கண்டு இன்று பலவாக பல்கிப் பெருகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த பூமி ஒரு தீக்குழம்புக் கோளாகவே இருந்துள்ளது. பிறகு சிறுகச் சிறுக குளிர்ந்து வாயு வகைகள் வாயுக்களாகவும், ஆவியாக இருந்த திரவ வகைகள் குளிர்ந்து அந்த அந்த திரவ வகைகளாகவும், குழம்பாக இருந்த வஸ்து வகைகள் இருகிய வஸ்துக்களாகவும் மாறின. பூமியின் மேல் தளத்தில் குளிர்ந்து திரவ நிலைக்கு வந்த நீராவி பிறகு ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் உருவெடுத்தது.

சமுத்திரங்களின் தோற்றத்தினால் அவற்றில் உயிரனங்கள் தோன்றுவதற்குச் சாதகமான  சூழ்நிலை உருவாகியது. ஆரம்பத்தில் ஓருயிரணுவாகவும் பிறகு அவை தங்களுக்குள் பிளந்து பல்கூறு நிலை உயிரணுக்களாகவும் மாறின. இப்படியே பல கட்டங்களான மாற்றங்களினால் நீர்வாழ் உயிரினங்களாகவும், அவை மேம்பாடடைந்து நீரிலும் நிலத்திலும் வாழும் நிலைக்கும், இவையும் மேம்பாடு அடைந்து முழுமையாக நிலத்தில் வாழும் ஆற்றல் பெற்றன.

நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காலப்போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு “டைனசோர்” (dynosaur) வகை மிருகங்கள் தோன்றின. இவை பல கோடி வருடங்கள் உலகில் வெற்றிகரமாக வாழ்ந்து இறுதியில் பிரமாண்ட வின் கல், அல்லது சிறு கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் இந்த இராட்சத மிருகவகைகள் அழிந்தன. ஆனால், இந்த இராட்சத மிருகங்களின் நிழலில் வாழ்ந்த சிறு வகை மிருகங்கள் இந்த தாக்குதலில் அழியாமல் வேறு வகைகளான ஊர்வனவாகவும் பாலூட்டிகளாகவும் பரிணமித்தன. இவற்றினூடே மனிதனும் தோன்றினான்.

ஓரணுவாக, பன்னணுக்களாக, நீர்வாழ் ஜந்துவாக, பிறகு நீர்நிலவாழி (amphibian) வகைகளாக, அதன் பிறகு நிலம் வாழ் உயிராக, குரங்கு போன்றிருந்து முழு மனிதர்களாக நாம் இன்று மேம்படு அடைந்துள்ளோம்.

அதாவது, மாற்றம் என்பது மேம்பாடு அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை. மேம்பாடு வேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும்.

மனிதனின் வாழ்க்கை முறையிலும், அவன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலிருந்து கற்காலம், வெண்கலம், இரும்பு காலங்கள் எல்லாமே மனிதன் மாற்றம் பெற்றதினால் ஏற்பட்ட மேம்பாடுகள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதவாழ்வில் பெரும் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. வேட்டுவ-சேகரிப்பாளர்களாக இருந்த மனிதர்கள் விவசாயத்தை கற்றுக்கொண்டு நெல் போன்றவற்றை பயிர் செய்தனர். இதனால் மனித வாழ்வில் தினமும் வேட்டையாட வேண்டும், கனி மற்றும் பிற உணவுப்பொருட்களை சேகரிக்கவேண்டும் எனும் நிர்ப்பந்தம் நீங்கியது. மனிதனின் கவனம் மற்ற விஷயங்களின் பக்கம் திரும்பியது. ஆன்மீகம் தோன்றியது, கலாச்சாரம் தோன்றியது. எல்லா மேம்பாடுகளுமே மானிடத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டாயின.

ஆனால் சில விஷயங்களில் மனிதன் மாற்றம் காண மறுத்து வருகிறான். சமயவேறுபாடுகளை களைவதற்கு, இனவேறுபாடுகளை களைவதற்கு, பொருளாதார வேறுபாடுகளை நீக்குவதற்கு மனிதர்கள் சுணக்கம் காண்பிக்கின்றனர். இன்று உலகில் நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இத்தகைய வேறுபாடுகளே காரணமாக உள்ளன. பஹாவுல்லாவின் பின்வரும் குறிப்பைக் காண்போம்:

“உலக மக்களே, நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் கனிகள், ஒரே கிளையின் இலைகள்”

நாம் அனைவருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம், ஒரே நிலத்தில் வாழ்கின்றோம் அந்த ஒரே நிலம் நமக்கு உணவளிக்கின்றது, ஒரே சூரியன் நமக்கு ஒளி கொடுகின்றது மற்றும் வாழ்வாதாரமாக இருக்கின்றது, ஒரே வானம் மழை கொடுக்கின்றது. இத்தனை இருந்தும் மனிதர்களாகிய நாம் இன்னமும் மதத்தால், நிறத்தால், இனத்தால், பொருளாதாரத்தால், பிளவுபட்டு கிடக்கின்றோம். இத்தகைய குறுகிய சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மறுக்கின்றோம். பஹாவுல்லாவின் மற்றொரு குறிப்பு பின்வருமாறு:

என்றென்றும் தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தினை முன்னெடுத்துச் செல்லவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்.

நாம் பகுத்திறிவில், ஆன்மீக ஆற்றலில், கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மேம்பாடுகள் காண வேண்டுமானால் மனிதர்கள் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக நமக்கு சமய ரீதியில் மாற்றம் தேவை. சமயங்கள் அனைத்தும் ஒன்றே என கண்டுகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இத்தகைய சிந்தனை மாற்றத்திற்கு உதவியாக பஹாவுல்லா தமது போதனைகளை உலகிற்கு வழங்கியுள்ளார். அவர் கேட்டுக்கொள்வதெல்லாம், அவரது போதனைகளை ஒவ்வொரு மனிதனும் சுயமாக ஆராய வேண்டுமென்பதே. இறைவன் நமக்குக் கொடுத்துள்ள பகுத்தறிவாற்றலைப் பயன்படுத்தி சுயமாக சிந்தித்து பஹாவுல்லாவின் போதனைகளை ஆய்வு செய்து அவற்றில் உலகின் மேம்பாட்டிற்கான வழிவகைகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

புறங்கூறாமை


புறம்பேசாதே-1

புறம் பேசுவது சாதாரன மனித இயல்பாக இன்று இருக்கின்றது. எங்காவது நான்கு பேர்கள் கூடிவிட்டால் அங்கு பிறரைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அவ்வாறு புறம்பேசுவதன் விளைவுகள் குறித்து அறியாமலும் ஆழச் சிந்திக்காமலும் இச் செயலில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்துல்-பஹா அவர்கள் நாம் ஒரு புலியைக் கண்டால் எவ்வாறு தலைதெறிக்க ஓடிடுவோமோ அவ்வாறே புறம்பேசுதலிலிருந்து ஓடிப்போக வேண்டுமென அறிவுறுத்துகின்றார். பஹாய் எழுத்தோவியங்கள் புறம்பேசுதலை கொலைக்குச் சமமாக மதிப்பிடுகின்றன மற்றும் கடவுளின் சாபத்தை ஈர்க்கும் ஒரு கொடிய செயல் எனவும் கூறுகின்றன. ஏன்? கொலையைவிட பெரும் பாவ காரியமாக புறம்பேசுதல் ஏன் கருதப்படுகின்றது? புறம்பேசுதல் எதை அழிக்கின்றது? இது குறித்து பின்வரும் குறிப்புகளைப் பார்ப்போம்:

“…மேலும் புறம்பேசுதல் உள்ளத்தின் ஒளியை தனியச் செய்தும் ஆன்மாவின் உயிரையும் அழித்துவிடும்.”

“நீயே ஒரு பாவியாக இருக்கும் வரையில் மற்றவர்களின் பாவங்களைப் பற்றி மூச்சுவிடாதே.”

“தீயதைப் பேசாதே, அதனால் மற்றவர்கள் அதை உன்னிடம் பேசுவதைக் கேட்கத் தேவையில்லை; மற்றவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாதே, அதனால் உன்னிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தோன்றாது…”

“உருவின் புத்திரனே! உன்னிடத்திலுள்ள குறைகளை மறந்துவிட்டு எப்படி நீ மற்றவர்களின் குறைகளைக் காணுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறாய்?” அங்ஙனம் செய்கிறவன், எமது சாபத்திற்கு ஆளாகிறான்.”

மனித குணங்களிலேயே, குறிப்பாக கடவுளின் நம்பிக்கையாளர்களின் நாவுகளிலிருந்து அது உதித்திடும்போது, புறம்பேசுதலே மிக மோசமனதும் அதி பெரும் பாவச்செயலாகவும் உள்ளது. புறம்பேசுலுக்கான வாசல்களை நிரந்தரமாக மூடுவதற்கு ஏதாவது வழிகளை அமைத்து நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை வாழ்த்துவதற்கு தங்கள் உதடுகளைத் திறந்தால், பஹாவுல்லாவின் போதனைகள் பரவியும், இதயங்கள் ஒளிபெற்றும், ஆன்மாக்கள் மகிமைபெற்றும், மனித உலகு என்றும் நிலையான களிப்புணர்வையும் அடையும்.”

மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் புறம்பேசுதல் ஒருவித மனநோயாகவும் கருதப்படக்கூடும். ஒருவரின் தாழ்வு மனப்பான்மை மற்றும் பொறாமை இதன் விளைநிலமும் பிறர் குறைகளை பெரிதாக்குவதன் வாயிலாக தன் குறைகளை மறைக்க முயலுவது இதன் ஓர் அடையாளமும் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மை வசப்பட்டவர்களாக இருக்கக்கூடும். இதைக் களைந்திட ஒரு வேளை ‘கௌன்சலிங்’ போகவேண்டியிருந்தாலும் இருக்கலாம்.

சாதாரணமாக, இத்தகைய கெட்ட பழக்கத்தை நாம் எவ்வாறு அகற்றுவது?

புறம்பேசாதே-3

ஒருவர் மனதில் வொறொருவரைப் பற்றி குறைபேசும் உணர்வு ஏற்படும்போது அவர் தான் குறை பேச நினைக்கும் மனிதரிடம் தான் கண்டுள்ள நல்ல குணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது இருளை முறியடிக்க வேண்டுமானால் அது ஒளியினால் மட்டுமே முடியும். புறம் பேசுவது என்பது இருள். அதை அன்பான எண்ணங்கள் எனும் ஒளியினால் அழிக்க முயல வேண்டும்.

“…வெறுப்பு எனும் எண்ணம் அதனினும் வலுவான அன்பு எனும் எண்ணத்தால் அழிக்கப்பட வேண்டும்”

மேலும் பஹாவுல்லா தமது ஊழியர்களைப் பற்றி கூறும்போது: “…ஏனெனில் அவன் முகமே என் முகம்,…” எனக் கூறியுள்ளார். மனிதனின் இயல்குணம் புறம் பேசுவது அல்ல. அவ்வாறு புறம் பேசுவதற்கு முன் தான் குறைசொல்லக்கூடியவரின் ‘முகம் கடவுளின் முகமே’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். மறைமொழிகள் நூலில், “யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளோம், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக்கொண்டுள்ளாய்…” என கூறுகின்றார்.

மேலும், புறம்பேசுவதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிந்திக்கவேண்டும். ‘ஒருவிரல் நீட்டி எதிரியைக் காட்டி குறை சொல்லும் வேளையிலே, மறுவிரல் நான்கும் மார்பினை நோக்கி வருவதை அறியாயோ,’ எனும் கூற்றின்படி நாம் மற்றவர்கள் குறைகளைப் பற்றி பேச முற்படும் முன் நாம் நமது குறைகளைப் பற்றி முதலில் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றி குறைபேசுவது ஒருவரின் ‘ego’வின் ஏற்றத்தை குறிக்கின்றது. அது சற்று நேரம் மனதுக்கு நிறைவைத் தரும். ஆனால், அந்த நிறைவு தற்காலிகமானது. நிறந்தர மனநிறைவு மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடுவதிலும், மற்றவர்களை சிறப்புப்படுத்துவதிலுமே இருக்கின்றது.

ஒரு பெண்மனி தன் குருவிடம் சென்று தனக்கு மிக மோசமான குறைபேசும் குணம் இருப்பதாகவும் அதை அவர் களைந்திட உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டாள். குருவும் அப்பெண்ணிடம் வீட்டிற்குச் சென்று ஒரு பையில் கோழி இறகுகளைக் கொண்டு வருமாறு கூறினார். அப்படி கொண்டுவரும்போது வரும் வழியில் அந்த இறகுகளை ஆங்காங்கே இரைத்துக்கொண்டு வரவேண்டுமெனவும் கூறினார். அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று அவர் கூறியபடியே கோழி இறகுகளை பையில் கட்டிக் கொண்டு பிறகு அவற்றை வழியெல்லாம் இரைத்துக்கொண்டும் வந்தாள். பிறகு குருவிடம் சென்று அவர் கூறியபடி செய்துவிட்டதாக கூறினாள். குருவும், “நல்லது, இப்போது திரும்பச் சென்று இரைத்த கோழி இறைகுகளையெல்லாம் மறுபடியும் சேகரித்துக்கொண்டு வருமாறு பணித்தார். அதற்கு அந்த பெண்மனி, அது எப்படி முடியும் கோழி இறகுகளெல்லாம் காற்றில் பறந்திருக்குமே என்றாள். அதற்கு குரு குறைபேசுவதும் அதுபோன்றதே எனக் கூறினார். சொன்ன சொற்களையெல்லாம் திரும்பப் பெற முடியாது. ஆகவே, ஒரே வழி குறைபேசாமல் இருப்பதே நலம் என்றார்.

புறம்பேசாதே-2

‘நாண் விட்ட அம்பும் வாய் விட்ட சொல்லும்…’ என்பதற்கிணங்க ஒரு சமுதாயத்தில் குறைபேசும் குணம் ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திவிடும். அதனால் ஏற்படும் தீமைகள் நீங்குவதற்கு பல ஆண்டுகாலம் ஆகும். ஒருமுறை அத்தவறை செய்துவிட்டால் அதை மீட்டுக்கொள்வதென்பது இயலாதது. ஆகவே, நாம் புறம்பேசும் குணத்தைக் கட்டுப்படுத்துவற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை உறுதியாக பின்பற்றவும் முயலவேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு:

…ஓர் ஒற்றுமை ஆவியினால் எல்லாருமே ஒட்டுமொத்தமாக உய்விக்கப்படும் ஓரு சூற்றுச்சூழலாக விளங்கும் — ஒரு சமூகத்தில்தோழமை உறவுகள் அவர்களை இணைக்கின்றன; தவறுகள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன, தோல்வி குறித்த பயம் குறைந்துவிடுகிறது; பிறரைக் குறைகூறுவது தவிர்க்கப்படுகிறது, பரஸ்பர ஆதரவு, ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு புறம்பேசுதலும் வெட்டிப்பேச்சும் வழிவிடுகின்றன;”

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

“…ஒரு தனிநபரின் போராட்டங்கள் சமூகத்தில் புறம்பேசுதலுக்கோ ஒற்றுமை குலைவிற்கோ காரணமாக இல்லாதிருப்பதை உறுதிச்செய்திட, நிச்சயமாகவே, கவனம் தேவைப்படுகின்றது.”

-சமயத்தின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பேணுதல்
சமயத்தின் திருவாக்குகளிலிருந்தும் உலக நீதி மன்றத்தின் வழிகாட்டல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள். -ஆகஸ்ட் 2017

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

உலக நீதிமன்றம், 23 ஏப்ரல் 2013

குரங்கிலிருந்து மனிதன்…


சமயம் மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் எனக் கூறுகின்றது, ஆனால் அறிவியலாளர்களோ மனிதன் குரங்கின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என வாதிடுகின்றனர். நடத்தையைப் பொறுத்த மட்டில் மனிதன் குரங்கின் சாயலைக் கொண்டுள்ளான் எனப் பிசகாமல் கூறலாம், ஆனால் அவன் மெய்நிலையைய் பொறுத்தமட்டில் அவனை அவ்வாறு கூற இயலாது. ஆவியின் புத்திரனே! யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளேன், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக் கொண்டு ள்ளாய். எதற்காக நீ படைக்கப்பட்டாயோ அதன்பால் உயர்வாயாக, என பஹாவுல்லா கூறுகின்றார்.

சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் 1980களில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐடா’ எனப் பெயர் சூட்டப்பட்ட குரங்கு போன்ற உருவுடைய புதைபடிமம் (fossil) ஒன்றை மறு ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அப்படிமம் குரங்கினம் மற்றும் மனித இனத்தை இணைக்கும் ஒரு வகை உயிரினமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளனர்.

ida darwinus
ida darwinus

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனும் வாதம் நீண்டகாலமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், குரங்கு இனத்திலிருந்து மனித இனம் எப்போது பிரிந்தது, ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (மனிதனின் அறிவியல் ரீதியான பெயர்) இனம் எப்போது ஆரம்பித்தது என்பது போன்ற கேள்விகளுக்கான பௌதீக ரீதியான தடயங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பல வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் சுமார் மூன்று அடி உயரமுள்ள குரங்கு போன்ற ஆனால் இருகாலின உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘லூசி’ என பெயர்கூட சூட்டப்பட்டது.

lucy
lucy

3 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த இந்த லூசியின் உடலமைப்பைப் பொருத்தவரை, அதன் தலை குரங்கினத்திற்கு சற்று ஒத்திருந்தும், அதன் உடல் வாகு இருகாலி மனிதனைப் போன்றும் உள்ளது மற்றும் இந்த லூசி ஒரு பெண் ஆவாள்.

பிற்காலத்தில் ஐடா மற்றும் லூசியிலிருந்து உதித்த மனிதன் பல மனிதப் பிரிவுகளாகி இறுதியில் ‘ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்’ ஆனான் என்பது அறிவியலாய்வு கருத்து. இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் காலமாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியாண்டர்த்தல்’ மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ்’ மனிதப்பிரிவுகள்.

இங்கு இவற்றை விவரிப்பதன் நோக்கம் தற்போது மனிதவியல் வல்லுனரிடையே நிலவும் ‘குரங்கிலிருந்துதான் மனிதன் பிரிந்துதித்தான்’ எனும் கருத்தை வலியுறுத்துவதற்காகவோ, சில சமய நம்பிக்கையாளர்கள் கூறுவது போன்று மனிதன் சுமார் 6000 வருடங்களுக்கு முன்புதான் தோன்றினான் என்பதை வலியுறுத்துவதற்காகவோ அல்ல.

Man's evolution
Man’s evolution

மனிதனின் தோற்றம் மற்றும் அவனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து பஹாய் எழுத்தோவியங்களில் பல குறிப்புகளைக் காணலாம். இவற்றோடு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒப்பிட்டுப்பார்த்து பஹாய் எழுத்தோவியங்கள் இவ்விஷயம் குறித்து என்ன விளக்கமளிக்கின்றன, இந்த இரண்டும் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதை காணலாம். ஒரு முக்கிய பஹாய் போதனை சமயமும் அறிவியலும் ஒன்றாக கைகோர்த்துச் செல்லவேண்டும் என்பதாகும். அறிவியல் என்பது வஸ்துக்கள் குறித்த உண்மை பற்றிய ஆய்வாகும்; சமயம் ஆன்மீக உண்மைகள் குறித்ததாகும். ‘உண்மை’ என்பது ஒன்றுதான் எனும்போது இந்த இரண்டு அறிவுப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்கு அடிப்படையே கிடையாது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அப்துல்-பஹா என்ன கூறுகிறார் என்பதை இப்போது பார்ப்போம்:

…தற்போது காணப்படும் இக் கோளம் திடீரென தோன்றிவிடவில்லை என்பது தெளிவு; ஆனால்… பல கட்டங்களைச் சிறுக சிறுக கடந்து தற்போதுள்ள இப்பூரண நிலையெனும் அலங்காரத்தைப் பெற்றுள்ளது. …

… மனிதன், தாயின் கர்ப்பத்தில் உள்ள கருவைப் போன்று, தனது தோற்றத்தின் ஆரம்பத்திலும் இவ்வுலகின் மடியிலும், சிறுக சிறுக வளர்ந்து மேம்பாடடைந்து, இந்த அழகுடனும் பூரணத்துவத்துடனும், இந்த ஆற்றலுடனும் வலிமையுடனும் … ஓர் உருவநிலையிலிருந்து வேறோர் உருவநிலைக்கு மாறியுள்ளான் … ஆரம்பத்தில் அவனுக்கு இந்த சௌந்தரியமும் அழகும் நளினமும் கிடையாது, மற்றும் அவன் சிறுக் சிறுகவே இந்த வடிவத்தையும், இந்த உருவத்தையும், இந்த அழகையும், இந்த நளினத்தையும் அடைந்தான். …

… இவ்வுலகில், ஆரம்பம் முதல் இந்த தோற்றத்தை, வடிவத்தை, மற்றும் நிலையை மனிதன் அடையும்வரை அவன் படைப்பு வெகு நீண்ட காலமுடையதாகும்… ஆனால், மனிதனின் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு தனிப்பட்ட உயிரினமாவான். …[மனித உடலில்] மறைந்துவிட்டதாக கூறப்படும் சில உறுப்புக்கள் உண்மையிலேயே மனிதனுக்கு இருந்திருந்தன என ஒப்புக்கொண்டாலும் அது அவ்வுயிரினத்தின் நிலையற்றதன்மை மற்றும் மூலமில்லாமையை நிரூபிக்கவில்லை. ஆகக்கூடிய வகையில் உருவம், வடிவமைப்பு, மற்றும் மனிதனின் உடலுருப்புக்கள் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன என்பதையே அது நிரூபிக்கின்றது. மனிதன் என்றுமே ஒரு வெகு தனிப்பட்ட உயிரினம், மனிதன், அவன் மிருகமல்ல.

ஆகவே, பஹாய் கருத்துக்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கருத்துக்களோடு ஒரே ஒரு விஷயம் தவிர மற்றெல்லாவற்றிலும் ஒத்திருக்கின்றன. அதாவது, மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை என்பது. கோடி வருடங்களுக்கு முன் அவன் பார்ப்பதற்கு நீண்ட வாலுடைய குரங்கைப்போன்று இருந்திருக்கலாம், அவன் மரத்திற்கு மரம் தாவியிருக்கலாம், அவனுடைய மரபனுக்கள் குரங்குகளுடையதோடு வெகுவாக ஒத்திருக்கலாம், ஆனால், மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை. அவன் ஓர் அனுவாக இவ்வுலகில் தோன்றியதிலிருந்து, நீரிலிருந்து நிலத்திற்கு மாறி சென்றதிலிருந்து, இன்றுவரை, அவன் அரிதான, ஓர் ஆன்மாவைப் பெற்ற, மானிடப் பிறவியே ஆவான். ஓர் உயிரினம் மற்றோர் உயிரினத்தை தோற்றத்திலும் மரபனுக்கள் வாயிலாகவும் ஒத்திருப்பதால் அவை இரண்டும் ஒன்றுதான் என முடிவு செய்யமுடியாது. குரங்கு குரங்குதான் மனிதன் மனிதன்தான்.

மனிதப் பே(போ)ரழிவுகள்


பள்ளிக்கூடங்களில் காணப்படும் சரித்திர பாடநூல்களைப் பார்க்கும் போது இந்த வருடம் இந்த சண்டை நடந்தது அந்த வருடம் அந்த சண்டை நடந்தது, அதில் அவ்வளவு பேர்கள் அழிந்தனர் இதில் இவ்வளவு பேர்கள் அழிந்தனர் என்பதுதான் சரித்திரமோ எனும் ஒரு பொதுவான எண்ணம் உருவாகக்கூடும். இதன் காரணம் உலக வரலாறு இது நாள் வரை இத்தகைய போர்களாலும் அழிவுகளாலும் நிறைந்துள்ளதுதான் காரணம்.

அப்துல்-பஹா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பே அப் போர் குறித்து முன்கூறியுள்ளார், அது மூளப்போவதற்கான காரணங்களையும், அதாவது பால்டிக் நாடுகள் குறித்த பதட்டநிலையை, எடுத்துக்காட்டியுள்ளார். முதலாம் உலக யுத்தம் உலக வல்லரசுகள் பெரும்பாலானவற்றை உள்ளடக்கிய ஒரு போராகும். இப்போர் “போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் போர்,” என அழைக்கப்பட்டது. அப்போது இருந்த ஐரோப்பிய நாடுகள் பல தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. சில நாடுகள் அரசியல் கூட்டுசேர்ந்திருந்தன. இந்த அரசியல் குட்டையில் நடந்த ஒரு சம்பவத்தில் 28 ஜூன் 1914ல் கேவ்ரிலோ பிரின்சிப் எனப்படும் போஸ்னிய-செர்பியனான மாணவன் ஒருவன் ஆஸ்த்திரிய நாட்டு அரசகுடும்பத்தினர் ஒருவரை கொலை செய்துவிட்டான். அக்கொலையில் செர்பியாவுக்கு சம்பந்தம் உண்டென நம்பிய ஆஸ்த்திரிய-ஹங்கேரி நாடு செர்பியாவின் மீது போர் தொடுக்க, அதில் ரஷ்யாவும் தனக்கு பாதகம் வரக்கூடாதென நினைத்து போர்க் குட்டையில் தானும் விழுந்து பிறகு ஐரோப்பாவே ஒரு மாபெரும் மயானமாகி உலகம் முழுவதும் ஆங்காங்கு சண்டைகள் நடந்தன.

வட்டியோடு முதலும் போய் அதுபோதாதென்று சிறிது வயிற்றுப்போக்கும் ஆன கதை.

ww1 trench sccene
ww1 trench sccene

அந்த மாணவன் எதற்காக கொலை செய்தானென தெரியாது. வெறும் சந்தேகமே முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு மூலகாரணமாகியது. இ்ந்த யுத்தத்தில் 8 மில்லியன் ஐரோப்பிய இராணுவ வீரர்கள் மடிந்தனர், 7 மில்லியன் வீரர்கள் கைகால்களை இழந்தனர், 15 மில்லியன் பேர்கள் மோசமான காயமடைந்தனர். இறுதியில், வட்டியோடு முதலும் போய் அதுபோதாதென்று சற்று வயிற்றுப்போக்கும் ஆன கதையாகியது. முதலாம் உலக யுத்தம் பொதுவாக 1919-ஆம் ஆண்டு வெர்சேல்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவிற்கு வந்ததாக கூறுகிறார்கள்.

இதன் பிறகு இரண்டாம் உலக யுத்தம் குறித்து அப்துல்-பஹா குறிப்புகள் காட்டியுள்ளார். 1 செப்டம்பர் 1939ல் ஜெர்மனி நாடு போலாந்து நாட்டின் மீது தொடுத்த போரோடு இந்த இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தது. இந்த போருக்குப் பிறகு இடது-இயக்கம் (movement of the left) தலைதூக்கும் எனவும் அவர் முன்கூறினார்.

detroyed church
detroyed church

20 மில்லியன் இராணுவ வீரர்களும் 40 மில்லியன் பொது மக்களுமாக இந்த இரண்டாம் உலக யுத்தத்தில் சுமார் 60 மில்லியன் மக்கள் மடிந்தனர். இந்த இரண்டாம் யுத்தத்தில்தான் அனு ஆயுதமும் முதன் முதலாக ஜப்பானின் ஹிரோஷிமா-நாகாசாக்கியில் பயன்படுத்தப்பட்டு ஜப்பான் அடக்கப்பட்டது. வெற்றிகரமாக ஜெர்மனி ஆரம்பித்த இந்த யுத்தம் இறுதியில் அந்த நாடு இரண்டாக பிளவுபடவும், யுத்தம் ஆரம்பிக்கவும் பல மில்லியன் உயிர்கள் மடியவும் காரணமான ஹிட்லர் இறுதியில் தற்கோலை புரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு யுத்தங்களினாலும் ஏற்பட்ட நன்மை யாதெனில், “லீக் ஆஃப் நேஷன்ஸ்” என ஆரம்பித்த உலக நாடுகளின் கூட்டு பிறகு இரண்டாம் உலக யுத்தத்தோடு இனி வரக்கூடிய போர்களை தடுப்பதற்கு “ஐக்கிய நாடுகள்” என உதயமாயிற்று. குறைந்த பட்ச ஆற்றல் கொண்டதாயினும் ஐ.நா. தன்னால் இயன்ற நன்மைகளை செய்தே வருகின்றது.

அப்துல்-பஹா அவர்கள் உலகில் ஏற்படக்கூடிய சிற்றமைதி குறித்து பேசுகையில், இவ்வுலகில் போர்கள் பெரும்பாலும் 20ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என கூறியுள்ளார். மானிடம் தனது பால பருவத்தைத் கடந்து தற்போது தனது முதிர்ச்சி நிலையை அடைந்துகொண்டிருக்கின்றது. இவ்வளவு காலமாக போரை அனுபவித்த மக்கள் இனி அமைதியை அனுபவித்துதான் பார்க்கட்டுமே!

பாரசீக உடையில் எட்வர்ட் ஜி பிரௌன்
பாரசீக உடையில் எட்வர்ட் ஜி பிரௌன்

பஹாவுல்லாவை சந்தித்த கிழக்கியலாளரான எட்வர்ட் ஜி. பிரௌன் என்பவரிடம் பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:

“…தாங்கள் ஒரு சிறைக்கைதியையும் தேசப்பிரஷ்டியையும் சந்திக்க வந்துள்ளீர். நாம் விரும்புவது உலக்ததின் நன்மையும், தேசங்களின் சந்தோஷமுமே; இருந்த போதும், கைதுறுதலுக்கும், நாடுகடத்துலுக்கும் தகுதியான சச்சரவையும் தேசத் துரோகத்தையும் தூண்டுபவராக எம்மை அவர்கள் கருதுகின்றனர். …தேசங்கள் அனைத்தும் சமயத்தில் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாவதும், மனிதர்களின் மைந்தர்களிடையேயுள்ள பாசம், ஒற்றுமை ஆகியவற்றின் பந்தங்கள் பலப்படுத்தப்படுவதும்; சமயத்தின் வேற்றுமை ஒழிய வேண்டும், இன வேற்றுமைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதும்… இதில் என்ன தீங்கு உள்ளது?… என்றாலும் அது அவ்வாறே இருக்கும். இந்த பலனற்ற சச்சரவுகள், இந்த அழிவுமிக்க போர்களும் மறைந்துவிட்டு, மாபெரும் அமைதி வரும்… ஐரோப்பாவிலுள்ள உங்களுக்கும் இது தேவை அல்லவா? இயேசு இது குறித்துதானே முன்கூறியுள்ளார்? …என்றாலும் உங்கள் மன்னர்களும் ஆட்சியாளர்களும், மனித குலத்தின் சந்தோஷத்திற்கு உகந்தவற்றின் மீது அல்லாது, மனித இனத்தின் அழிவிற்கான வழிமுறைகளின் மீது தங்கள் பொக்கிஷங்களை அளவின்றிச் செலவு செய்வதை யாம் காண்கிறோம்… இந்த சச்சரவுகளும், இந்த இரத்தம் சிந்துதலும் முரண்பாடுகளும் நீங்கி, மனிதர்கள் அனைவரும் ஒரே உறவினர்கள் போலும், ஒரே குடும்பத்தினர் போலும் இருக்க வேண்டும்… ஒரு மனிதன் தன் தேசத்தை நேசிப்பவன் என்பதில் பேருமை கொள்ளவேண்டாம், மாறாக அவன் தன் இனத்தை நேசிப்பவன் என்பதில் பெருமை கொள்ளட்டும்…”

பொருளாதார சீர்கேடு


இன்று உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளுள் பொருளாதாரப் பிரச்சினை முன்நிற்கின்றது. வேலை இழந்தவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கையும் தாண்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இதை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வித சீர்கேடுகள் எதனால் ஏற்படுகின்றன? ஒரு முறை ஏற்பட்டதென்றால் அது தற்செயலாக நேர்ந்தது என கூறலாம். ஆனால், இது அடிக்கடி ஏற்படுகிறது. இதன் விளைவாக சமூகத்தில் பல சீர்கேடுகள் விளைகின்றன. வேலை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்? திருட்டுகள் நடக்க ஆரம்பித்துவிடும். தற்கொலைகள் கூட நிகழலாம்.

பொருளாதார வீழ்ச்சியின் ஒரு விளைவு!
பொருளாதார வீழ்ச்சியின் ஒரு விளைவு!

1920-களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவில் பல அமெரிக்கர்கள் நியூ யார்க்கில் உள்ள “The Empire State” கட்டிடத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை புரிந்துகொண்டனர். வருவாய் இன்றி உணவுக்கு திண்டாடியவர்கள் வரிசை வரிசையாக கையில் தட்டேந்தி அரசாங்கத்தின் உணவளிப்புத் திட்டத்தில் உயிர்வாழ்ந்தனர். அதன் பிறகு அது போன்ற பொருளாதார சீர்கேடுகள் நிகழ்ந்தாலும், 1920-இல் நிகழ்ந்தது போன்ற சீர்கேடு இதுவரை நிகழவில்லை.

உணவுப் பொருளுக்காக காத்திருப்போர்
உணவுப் பொருளுக்காக காத்திருப்போர்

அதற்காக அதுபோன்ற ஒன்று நிகழாது என உத்திரவாதமும் கிடையாது. இவ்வித சீர்கேடுகளுக்கு மூலகாரணம் என்ன? பல வல்லுனர்கள் பல விதமான விளக்கங்களை அளிக்கின்றனர். பலவிதமான இடைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன மற்றும் தற்போது எடுக்கப்பட்டும் வருகின்றன. இத்தனை நடவடிக்கைகளிலும் மூல காரணத்தைப் பொதுவாக யாரும் கருத்தில் கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதனின் ஒழுக்கநெறியின்மையே இதற்கான மூலகாரணமாகும். பொருளாதாரக் கொள்கைகள் தன்னலம், பேராசை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும் வரையில் இவ்வித சீர்கேடுகள் தொடர்ந்து நிகழவே செய்யும். பஹாய்களின் உலக நீதி மன்றம் இது குறித்து தனது அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளது:

இதற்கு முன்பு ஏற்பட்டிறாத இந்தப் பொருளாதார நெருக்கடியும், அது மறைமுகமாக உருவாக்கியுள்ள சமூகச் சீர்கேடும், மனித இயல்பு குறித்த பெரும் தவறான கருத்துணர்வு ஒன்றை (conception) ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடப்பிலுள்ள அமைப்புமுறைகள் மனிதர்களுள் ஊக்குவிக்கும் செயல்பாடுகளின் தர அளவுகள் பற்றாதவை மட்டுமல்ல, பார்க்கப்போனால் உலக நிலவரங்களுக்கு முன் அவை பெரும்பாலும் பொருத்தமற்றவையாகவும் காணப்படுகின்றன. சமுதாயத்தை மேம்படுத்துவதானது வெறும் லெளகீக நிலைகளின் மேம்பாட்டிற்கும் அப்பால் உயர்வான குறிக்கோள் ஒன்றை கண்டு கொண்டால் ஒழிய, அது இந்த இலக்குகளைக் கூட அடையத் தவறிவிடும் என நமக்கு எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இக் குறிக்கோள் தொடர்முறையாக மாறிவரும் பொருளாதார காட்சிநிலை மற்றும் மானிட சமுதாயத்தின்மீது “மேம்பட்ட” எனவும் “மேம்படாத” எனவும் செயற்கையாக சுமத்தப்பட்டிருக்கும் வகுப்புமுறைகளினும் உயர்வான வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்கள் மற்றும் ஊக்குவிப்புமுறைகளிலும் காணப்படவேண்டும்.