புறங்கூறாமை


புறம்பேசாதே-1

புறம் பேசுவது சாதாரன மனித இயல்பாக இன்று இருக்கின்றது. எங்காவது நான்கு பேர்கள் கூடிவிட்டால் அங்கு பிறரைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அவ்வாறு புறம்பேசுவதன் விளைவுகள் குறித்து அறியாமலும் ஆழச் சிந்திக்காமலும் இச் செயலில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்துல்-பஹா அவர்கள் நாம் ஒரு புலியைக் கண்டால் எவ்வாறு தலைதெறிக்க ஓடிடுவோமோ அவ்வாறே புறம்பேசுதலிலிருந்து ஓடிப்போக வேண்டுமென அறிவுறுத்துகின்றார். பஹாய் எழுத்தோவியங்கள் புறம்பேசுதலை கொலைக்குச் சமமாக மதிப்பிடுகின்றன மற்றும் கடவுளின் சாபத்தை ஈர்க்கும் ஒரு கொடிய செயல் எனவும் கூறுகின்றன. ஏன்? கொலையைவிட பெரும் பாவ காரியமாக புறம்பேசுதல் ஏன் கருதப்படுகின்றது? புறம்பேசுதல் எதை அழிக்கின்றது? இது குறித்து பின்வரும் குறிப்புகளைப் பார்ப்போம்:

“…மேலும் புறம்பேசுதல் உள்ளத்தின் ஒளியை தனியச் செய்தும் ஆன்மாவின் உயிரையும் அழித்துவிடும்.”

“நீயே ஒரு பாவியாக இருக்கும் வரையில் மற்றவர்களின் பாவங்களைப் பற்றி மூச்சுவிடாதே.”

“தீயதைப் பேசாதே, அதனால் மற்றவர்கள் அதை உன்னிடம் பேசுவதைக் கேட்கத் தேவையில்லை; மற்றவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாதே, அதனால் உன்னிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தோன்றாது…”

“உருவின் புத்திரனே! உன்னிடத்திலுள்ள குறைகளை மறந்துவிட்டு எப்படி நீ மற்றவர்களின் குறைகளைக் காணுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறாய்?” அங்ஙனம் செய்கிறவன், எமது சாபத்திற்கு ஆளாகிறான்.”

மனித குணங்களிலேயே, குறிப்பாக கடவுளின் நம்பிக்கையாளர்களின் நாவுகளிலிருந்து அது உதித்திடும்போது, புறம்பேசுதலே மிக மோசமனதும் அதி பெரும் பாவச்செயலாகவும் உள்ளது. புறம்பேசுலுக்கான வாசல்களை நிரந்தரமாக மூடுவதற்கு ஏதாவது வழிகளை அமைத்து நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை வாழ்த்துவதற்கு தங்கள் உதடுகளைத் திறந்தால், பஹாவுல்லாவின் போதனைகள் பரவியும், இதயங்கள் ஒளிபெற்றும், ஆன்மாக்கள் மகிமைபெற்றும், மனித உலகு என்றும் நிலையான களிப்புணர்வையும் அடையும்.”

மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் புறம்பேசுதல் ஒருவித மனநோயாகவும் கருதப்படக்கூடும். ஒருவரின் தாழ்வு மனப்பான்மை மற்றும் பொறாமை இதன் விளைநிலமும் பிறர் குறைகளை பெரிதாக்குவதன் வாயிலாக தன் குறைகளை மறைக்க முயலுவது இதன் ஓர் அடையாளமும் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தாழ்வுமனப்பான்மை வசப்பட்டவர்களாக இருக்கக்கூடும். இதைக் களைந்திட ஒரு வேளை ‘கௌன்சலிங்’ போகவேண்டியிருந்தாலும் இருக்கலாம்.

சாதாரணமாக, இத்தகைய கெட்ட பழக்கத்தை நாம் எவ்வாறு அகற்றுவது?

புறம்பேசாதே-3

ஒருவர் மனதில் வொறொருவரைப் பற்றி குறைபேசும் உணர்வு ஏற்படும்போது அவர் தான் குறை பேச நினைக்கும் மனிதரிடம் தான் கண்டுள்ள நல்ல குணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது இருளை முறியடிக்க வேண்டுமானால் அது ஒளியினால் மட்டுமே முடியும். புறம் பேசுவது என்பது இருள். அதை அன்பான எண்ணங்கள் எனும் ஒளியினால் அழிக்க முயல வேண்டும்.

“…வெறுப்பு எனும் எண்ணம் அதனினும் வலுவான அன்பு எனும் எண்ணத்தால் அழிக்கப்பட வேண்டும்”

மேலும் பஹாவுல்லா தமது ஊழியர்களைப் பற்றி கூறும்போது: “…ஏனெனில் அவன் முகமே என் முகம்,…” எனக் கூறியுள்ளார். மனிதனின் இயல்குணம் புறம் பேசுவது அல்ல. அவ்வாறு புறம் பேசுவதற்கு முன் தான் குறைசொல்லக்கூடியவரின் ‘முகம் கடவுளின் முகமே’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். மறைமொழிகள் நூலில், “யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளோம், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக்கொண்டுள்ளாய்…” என கூறுகின்றார்.

மேலும், புறம்பேசுவதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிந்திக்கவேண்டும். ‘ஒருவிரல் நீட்டி எதிரியைக் காட்டி குறை சொல்லும் வேளையிலே, மறுவிரல் நான்கும் மார்பினை நோக்கி வருவதை அறியாயோ,’ எனும் கூற்றின்படி நாம் மற்றவர்கள் குறைகளைப் பற்றி பேச முற்படும் முன் நாம் நமது குறைகளைப் பற்றி முதலில் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றி குறைபேசுவது ஒருவரின் ‘ego’வின் ஏற்றத்தை குறிக்கின்றது. அது சற்று நேரம் மனதுக்கு நிறைவைத் தரும். ஆனால், அந்த நிறைவு தற்காலிகமானது. நிறந்தர மனநிறைவு மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடுவதிலும், மற்றவர்களை சிறப்புப்படுத்துவதிலுமே இருக்கின்றது.

ஒரு பெண்மனி தன் குருவிடம் சென்று தனக்கு மிக மோசமான குறைபேசும் குணம் இருப்பதாகவும் அதை அவர் களைந்திட உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டாள். குருவும் அப்பெண்ணிடம் வீட்டிற்குச் சென்று ஒரு பையில் கோழி இறகுகளைக் கொண்டு வருமாறு கூறினார். அப்படி கொண்டுவரும்போது வரும் வழியில் அந்த இறகுகளை ஆங்காங்கே இரைத்துக்கொண்டு வரவேண்டுமெனவும் கூறினார். அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று அவர் கூறியபடியே கோழி இறகுகளை பையில் கட்டிக் கொண்டு பிறகு அவற்றை வழியெல்லாம் இரைத்துக்கொண்டும் வந்தாள். பிறகு குருவிடம் சென்று அவர் கூறியபடி செய்துவிட்டதாக கூறினாள். குருவும், “நல்லது, இப்போது திரும்பச் சென்று இரைத்த கோழி இறைகுகளையெல்லாம் மறுபடியும் சேகரித்துக்கொண்டு வருமாறு பணித்தார். அதற்கு அந்த பெண்மனி, அது எப்படி முடியும் கோழி இறகுகளெல்லாம் காற்றில் பறந்திருக்குமே என்றாள். அதற்கு குரு குறைபேசுவதும் அதுபோன்றதே எனக் கூறினார். சொன்ன சொற்களையெல்லாம் திரும்பப் பெற முடியாது. ஆகவே, ஒரே வழி குறைபேசாமல் இருப்பதே நலம் என்றார்.

புறம்பேசாதே-2

‘நாண் விட்ட அம்பும் வாய் விட்ட சொல்லும்…’ என்பதற்கிணங்க ஒரு சமுதாயத்தில் குறைபேசும் குணம் ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திவிடும். அதனால் ஏற்படும் தீமைகள் நீங்குவதற்கு பல ஆண்டுகாலம் ஆகும். ஒருமுறை அத்தவறை செய்துவிட்டால் அதை மீட்டுக்கொள்வதென்பது இயலாதது. ஆகவே, நாம் புறம்பேசும் குணத்தைக் கட்டுப்படுத்துவற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை உறுதியாக பின்பற்றவும் முயலவேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு:

…ஓர் ஒற்றுமை ஆவியினால் எல்லாருமே ஒட்டுமொத்தமாக உய்விக்கப்படும் ஓரு சூற்றுச்சூழலாக விளங்கும் — ஒரு சமூகத்தில்தோழமை உறவுகள் அவர்களை இணைக்கின்றன; தவறுகள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன, தோல்வி குறித்த பயம் குறைந்துவிடுகிறது; பிறரைக் குறைகூறுவது தவிர்க்கப்படுகிறது, பரஸ்பர ஆதரவு, ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு புறம்பேசுதலும் வெட்டிப்பேச்சும் வழிவிடுகின்றன;”

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

“…ஒரு தனிநபரின் போராட்டங்கள் சமூகத்தில் புறம்பேசுதலுக்கோ ஒற்றுமை குலைவிற்கோ காரணமாக இல்லாதிருப்பதை உறுதிச்செய்திட, நிச்சயமாகவே, கவனம் தேவைப்படுகின்றது.”

-சமயத்தின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் ஆன்மீக ஆரோக்கியத்தைப் பேணுதல்
சமயத்தின் திருவாக்குகளிலிருந்தும் உலக நீதி மன்றத்தின் வழிகாட்டல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள். -ஆகஸ்ட் 2017

“…பஹாய் சமூகத்தில் வீண்பேச்சுகளுக்கும் புறம்பேசுதலுக்கும் அல்லது பிறரை எடைபோடும் மனப்பான்மைக்கும் தானே-நேர்மையானவன் என்பதற்கும் இடமில்லை.”

உலக நீதிமன்றம், 23 ஏப்ரல் 2013