இந்த பூமி தனியே உருவாக்கப்படவில்லை. ஆரம்பத்தில் “பெருவெடிப்பு” (Big Bang) அல்லது அதிர்வெடி ஒன்றிலிருந்து ஒன்றாக இருந்த பொருள் அல்லது வஸ்து (matter) அண்டசராசரங்களாக, தீக்குழம்புக் கோள்களாக திக்கெல்லாம் தெறித்துச் சிதறி இன்று நாம் காணும் இந்த நிலைக்கு, பேரண்டமாக, அண்டங்களாக, மண்டலங்களாக, கோள்களாக, வின்கற்களாக உருவெடுத்துள்ளன. ஆம்பத்தில் ஒன்றாக இருந்தது மாற்றம் கண்டு இன்று பலவாக பல்கிப் பெருகியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த பூமி ஒரு தீக்குழம்புக் கோளாகவே இருந்துள்ளது. பிறகு சிறுகச் சிறுக குளிர்ந்து வாயு வகைகள் வாயுக்களாகவும், ஆவியாக இருந்த திரவ வகைகள் குளிர்ந்து அந்த அந்த திரவ வகைகளாகவும், குழம்பாக இருந்த வஸ்து வகைகள் இருகிய வஸ்துக்களாகவும் மாறின. பூமியின் மேல் தளத்தில் குளிர்ந்து திரவ நிலைக்கு வந்த நீராவி பிறகு ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் உருவெடுத்தது.
சமுத்திரங்களின் தோற்றத்தினால் அவற்றில் உயிரனங்கள் தோன்றுவதற்குச் சாதகமான சூழ்நிலை உருவாகியது. ஆரம்பத்தில் ஓருயிரணுவாகவும் பிறகு அவை தங்களுக்குள் பிளந்து பல்கூறு நிலை உயிரணுக்களாகவும் மாறின. இப்படியே பல கட்டங்களான மாற்றங்களினால் நீர்வாழ் உயிரினங்களாகவும், அவை மேம்பாடடைந்து நீரிலும் நிலத்திலும் வாழும் நிலைக்கும், இவையும் மேம்பாடு அடைந்து முழுமையாக நிலத்தில் வாழும் ஆற்றல் பெற்றன.
நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காலப்போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு “டைனசோர்” (dynosaur) வகை மிருகங்கள் தோன்றின. இவை பல கோடி வருடங்கள் உலகில் வெற்றிகரமாக வாழ்ந்து இறுதியில் பிரமாண்ட வின் கல், அல்லது சிறு கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் இந்த இராட்சத மிருகவகைகள் அழிந்தன. ஆனால், இந்த இராட்சத மிருகங்களின் நிழலில் வாழ்ந்த சிறு வகை மிருகங்கள் இந்த தாக்குதலில் அழியாமல் வேறு வகைகளான ஊர்வனவாகவும் பாலூட்டிகளாகவும் பரிணமித்தன. இவற்றினூடே மனிதனும் தோன்றினான்.
ஓரணுவாக, பன்னணுக்களாக, நீர்வாழ் ஜந்துவாக, பிறகு நீர்நிலவாழி (amphibian) வகைகளாக, அதன் பிறகு நிலம் வாழ் உயிராக, குரங்கு போன்றிருந்து முழு மனிதர்களாக நாம் இன்று மேம்படு அடைந்துள்ளோம்.
அதாவது, மாற்றம் என்பது மேம்பாடு அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை. மேம்பாடு வேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும்.
மனிதனின் வாழ்க்கை முறையிலும், அவன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலிருந்து கற்காலம், வெண்கலம், இரும்பு காலங்கள் எல்லாமே மனிதன் மாற்றம் பெற்றதினால் ஏற்பட்ட மேம்பாடுகள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதவாழ்வில் பெரும் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. வேட்டுவ-சேகரிப்பாளர்களாக இருந்த மனிதர்கள் விவசாயத்தை கற்றுக்கொண்டு நெல் போன்றவற்றை பயிர் செய்தனர். இதனால் மனித வாழ்வில் தினமும் வேட்டையாட வேண்டும், கனி மற்றும் பிற உணவுப்பொருட்களை சேகரிக்கவேண்டும் எனும் நிர்ப்பந்தம் நீங்கியது. மனிதனின் கவனம் மற்ற விஷயங்களின் பக்கம் திரும்பியது. ஆன்மீகம் தோன்றியது, கலாச்சாரம் தோன்றியது. எல்லா மேம்பாடுகளுமே மானிடத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டாயின.
ஆனால் சில விஷயங்களில் மனிதன் மாற்றம் காண மறுத்து வருகிறான். சமயவேறுபாடுகளை களைவதற்கு, இனவேறுபாடுகளை களைவதற்கு, பொருளாதார வேறுபாடுகளை நீக்குவதற்கு மனிதர்கள் சுணக்கம் காண்பிக்கின்றனர். இன்று உலகில் நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இத்தகைய வேறுபாடுகளே காரணமாக உள்ளன. பஹாவுல்லாவின் பின்வரும் குறிப்பைக் காண்போம்:
“உலக மக்களே, நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் கனிகள், ஒரே கிளையின் இலைகள்”
நாம் அனைவருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம், ஒரே நிலத்தில் வாழ்கின்றோம் அந்த ஒரே நிலம் நமக்கு உணவளிக்கின்றது, ஒரே சூரியன் நமக்கு ஒளி கொடுகின்றது மற்றும் வாழ்வாதாரமாக இருக்கின்றது, ஒரே வானம் மழை கொடுக்கின்றது. இத்தனை இருந்தும் மனிதர்களாகிய நாம் இன்னமும் மதத்தால், நிறத்தால், இனத்தால், பொருளாதாரத்தால், பிளவுபட்டு கிடக்கின்றோம். இத்தகைய குறுகிய சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மறுக்கின்றோம். பஹாவுல்லாவின் மற்றொரு குறிப்பு பின்வருமாறு:
என்றென்றும் தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தினை முன்னெடுத்துச் செல்லவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்.
நாம் பகுத்திறிவில், ஆன்மீக ஆற்றலில், கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மேம்பாடுகள் காண வேண்டுமானால் மனிதர்கள் தங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக நமக்கு சமய ரீதியில் மாற்றம் தேவை. சமயங்கள் அனைத்தும் ஒன்றே என கண்டுகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இத்தகைய சிந்தனை மாற்றத்திற்கு உதவியாக பஹாவுல்லா தமது போதனைகளை உலகிற்கு வழங்கியுள்ளார். அவர் கேட்டுக்கொள்வதெல்லாம், அவரது போதனைகளை ஒவ்வொரு மனிதனும் சுயமாக ஆராய வேண்டுமென்பதே. இறைவன் நமக்குக் கொடுத்துள்ள பகுத்தறிவாற்றலைப் பயன்படுத்தி சுயமாக சிந்தித்து பஹாவுல்லாவின் போதனைகளை ஆய்வு செய்து அவற்றில் உலகின் மேம்பாட்டிற்கான வழிவகைகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
நன்று. அருமையான கட்டுரை.