புரிந்துகொள்ளல்-1


கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள வெகுமதிகளுள் பகுத்தறியும் ஆற்றலே அதி உயர்ந்தது என கூறலாம். இந்த ஆற்றலின் வாயிலாகவே மானிடம் அனைத்து உயிரினங்களில் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் ஒரே உயிரினமாக தனித்தன்மை பெற்றுள்ளது. மனிதனுக்குப் பஞ்சேந்திரியங்களான பார்வை, செவி, நுகர்வு, சுவை, ஸ்பரிசம் ஆகிய புற ஐம்புலன்கள் உள்ளன இவற்றின் உதவியுடன் மனிதன் வஸ்துநிலையில் உள்ளவற்றை உணர்கின்றான். இவையல்லாமல் மனிதனுக்கு கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளல், பொதுப்புலன் மற்றும் நினைவாற்றல்கள் என அக ஐம்புலன்கள் உள்ளன.

வெளிப்புலன்கள் மற்றும் உட்புலன்கள் என கூறுகின்றோம். புற ஐம்புலன்களான வெளிப்புலன்கள் குறித்து எல்லாருமே ஓரளவுக்கு அறிவுற்றிருப்பார்கள், ஆனால், இந்த உட்புலன்களின் தன்மை யாது? ஆங்கிலத்தில் இவற்றை:

  • imagination(கற்பனை)
  • thought(சிந்தனை)
  • comprehension(புரிந்துகொள்ளல்)
  • common faculty(பொதுப்புலன்)
  • memory(நினைவு)

என அழைக்கின்றோம். இந்த ஐந்து உட்புலன்களுள் பொதுப்புலன் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். பொதுப் புலனானது புறப்புலன்களுக்கும் அகப்புலன்களுக்கும் இடையீட்டாளராகச் செயல்படுகிறது. உதாரணமாக நமது கண்ணின் உதவியோடு நாம் ஒரு பூவைப் பார்க்கின்றோம். இந்தத் தகவலை பார்க்கும் ஆற்றலானது பொதுப்புலன் என்படும் இடையாற்றலுக்கு அனுப்பிவைக்கின்றது. இந்தப் பொதுப்புலன் அத்தகவலை கற்பனையாற்றலிடம் அனுப்புகிறது. கற்பனா சக்தி அத்தகவலை உருவகப்படுத்தி சிந்தனாசக்தியிடம் அனுப்புகிறது; சிந்தனாசக்தி அதை சிந்தனையில் செலுத்தி புரிந்துகொள்ளும் ஆற்றலிடம் அனுப்புகிறது, பிறகு புரிதலானது அதன் மெய்ம்மையை உணர்ந்தவுடன்,தகவலை நினைவாற்றலிடம் அனுப்பி, நினைவாற்றல் பிறகு அதை தனது களஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றது. பின்வரும் வரைபடத்தைக் காணவும்:

மிருகங்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவற்றுக்கு வெறும் புறப்புலன்கள் மட்டுமே உள்ளன மற்றும் பிறக்கும் போதே அவற்றுள் இயல்பாக உள்ள உள்ளுணர்வுகளின்(instincts) உதவியோடு செயல்படுகின்றன.

powers of a man

தாதுப்பொருட்களுக்கு பிணைப்பாற்றல் உள்ளது; தாவரங்களுக்கு பிணைப்பாற்றலோடு வளரும் ஆற்றல் உள்ளது; மிருகங்களுக்கு பிணைப்பாற்றல் மற்றும் வளரும் ஆற்றல்களோடு வெளிப்புலன்களான ஐம்புலன்களும் உள்ளன.

நாம் இதுவரை இங்கு அறிந்துகொண்டவரை மனிதனுக்கு ஆறறிவு உள்ளது எனக் கூறுவது தவறாகும். ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பது அவனுடைய உட்புலன்கள் ஐந்தில் ஒரு புலன் ஆகும் என்பதே உண்மை.

பஹாவுல்லா தமது எழுத்தோவியங்களில் மனிதனுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகளுள் புரிந்தல் ஆற்றலே மிக உயர்ந்தது எனக் கூறுகின்றார். இந்தப் புரிந்துகொள்ளும் ஆற்றலின்வாயிலாக மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தையும், தன்னைப் படைத்தவராகிய ஆண்டவரைப்பற்றியும் அறிந்துகொள்ளமுடிகிறது.
(தொடரும்)

எவின் சிறையிலிருந்து ஒரு பரிசு


5 ஜூன் 2009

இரான் நாட்டில் பஹாய் சமயம் ஆரம்பித்ததிலிருந்து பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், மற்றும் பல பஹாய்கள் ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் திருமதி பாஃரிபா கமாலபாடி.

திருமதி பாஃரிபா கமாலபாடி, மற்றும் ‘யாரான்’ எனப்படும் ஆறு பஹாய் தலைவர்கள், மற்றும் வேறு பல பஹாய்கள் பிரசித்தமான எவின் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் உடல்கள் சிறைப்படுத்தப்பட்டும் உளவியல் ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் உலகைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான அவர்களின் நலன்விரும்பிகளை மனதிற்கொண்டு அவர்களின் ஆன்ம ஒளி மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு
எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு


மார்ச் மாதம் திருமதி கமாலபாடியின் கடைக்குட்டி மகளான, தரானியின், பிறந்த நாளாகும், ஆனால் அவளுடைய அன்னையினால் தம் மகளுக்கு சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து ஒன்றும் செய்யமுடியவில்லை! இருந்தபோதும், தம்மால் முடிந்த ஒன்றை தமது மகளுக்காக செய்தார். அவர், கடுமையான சிறைவாசத்திற்கு உட்பட்டிந்தபோதிலும், தம்மைப்போல் சிறைப்படுத்தப்பட்டோருக்காக வாழ்வும் அன்பும் துளிர்விட முடியும் என்பதை நினைவூட்ட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு சிறு செடியை வளர்த்தார் — அச்செடியை தமது மகளான தரானிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் அச்செடியையும் அதைப் பெற்ற தரானியையும் காணலாம். அடுத்தவருடமாவது, எவின் சிறையின் கடுமைகளுக்கு வெகு தொலைவிற்கு அப்பால், தங்கள் சொந்த வீட்டிலேயே களிப்போடு ஒரே குடும்பமாக தரானியின் பிறந்த நாள் கொண்டாடப்பட நாம் பிரார்த்திப்போமாக.

இப்படம் Iran Press Watch எனப்படும் செய்தி நிறுவனத்திற்கு திருமதி பாஃரிபாவின் சகோதரரால் வழங்கப்பட்டது.

உலகில் அமைதி ஏற்படுமா?


சமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்?

மனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா?

இதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.

ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.

The Myth of Stephen Hawking

அடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940-ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் விண்பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100-களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.

இன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.

பூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.

வேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியாக பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பேரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரினங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயர்வதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.

பஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன?

இறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புகளிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

அறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.

பிரபஞ்சவியல் வாதம்

இப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.

இயல்திட்டவாதம்

இப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது

விவேகவாதம்

கட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.

மெய்ப்பொருள்மூலவியல்வாதம்

இறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.

நெறிமுறைவாதம்

மனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.

அதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.

ஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவுகள் பலவற்றைச் சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பினுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.

வாசகர் ஒருவரின் பதில்

நெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.

மனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.

என் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் (Frankenstein) அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.

மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.

சகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போட்டியிட இயலுமா? நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.

மனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன்? கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அதே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.

தப்ரீஸ் நகரில் ஒரு நாள்…


(மார்ஸியே கேய்ல் அவர்களின் – “தப்ரீஸ் நகரில் ஒரு நாள்” என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)

மரம் ஒன்றின் கீழ் வழிந்தோடும் நீரோடையின் கரைதனில் சாய்ந்துகொண்டு, ஓடையில் வழிந்தோடும் நீரை ஒரு பாரசீகர் மணிக்கணக்காகப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். சீனர்களோ, கண்ணாடியைப் போன்று தோற்றமளிப்பதும், சப்பென்றிருப்பதுமான நீரையே விரும்புவார்கள் எனக் கூறுகின்றனர்; ஆனால் ஒரு பாரசீகரோ, தெளிந்த, குறுகிய நீரோடையில் நெளிந்து பிரயாசையுடன் ஒடும் நீரையே விரும்பி ரசிப்பார். ஒரு வேளை அக்குளிர்ந்த நீரோடையினுள் ஒரு குடுக்கை நிறைய திராட்சை மதுவை அவர் குளிர வைத்துக்கொண்டும் இருக்கலாம். சித்திரங்களில் மட்டுமே காணப்படும் மறைந்து போய்விட்ட பாரசீகர்களைப் போல், மனித சஞ்சாரத்திற்கு அப்பால் அவரும் ஒரு குன்றின் ஓரமாக ஒரு சமுக்காளத்தில் சாய்ந்துகொண்டிருக்கலாம். முசுக்கட்டை மரத்தின் இலைகள் பரப்பப்பட்ட ஒரு தட்டில் நிறைய இலந்தைப் பழங்கள் அவர் முன் இருக்கின்றன. அவர் ‎ஹஃபீஸின் கவிதைகளில் ஒன்றை முனுமுனுத்துக் கொண்டிப்பார். ‎ஹஃபீஸ் பல காலங்களுக்கு முன் ஷிராஸில் வாழ்ந்த, “அருவமானவரின் நாவென” போற்றப்பட்ட ஒரு மாபெரும் கவிஞராவார். ‘உமது முக ஒளியினைத் தவிர வேறெதனிலும் என் பார்வை படாதிருக்க, உலகில் உள்ள அனைத்திலிருந்தும், ஒரு வல்லூறுக்கு மறைக்கப்பட்டிருப்பது போல் நான் என் கண்களை மறைத்துக்கொண்டுள்ளேன்.” அந்த பாரசீகரைச் சுற்றி மஞ்சள் நிற பாலைவனம்; அவரும் பூத்துக் குலுங்கும் ஒரு சேர்ரி மரத்தின் கீழோ, ஓடைக்கருகே நீரில் சாயந்துகொண்டிருக்கும் வில்லோ வகை மரத்தின் கீழோ அவர் சாய்ந்துகொண்டிருக்கலாம். ஏனெனில், இது நகரத்திற்கு வெகு தூரத்திற்கப்பால் இருக்கும்; அவருக்குப் பின்னால், பல மைல்களுக்கும் அப்பால், பளிச்சிடும் வெள்ளி மலைகள், இருக்கின்றன.

அவர் தான் அருந்திய மதுவாலும், கவிதையினாலும், அல்லது ஒரு வேளை நீரோடையின் ஈர்ப்பினாலும் போதையுற்று இருக்கலாம். ஓடைக் கரையின் ஓரங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் இளம் பசுமை நிற கொடிகளை அவரால் தொட முடிகிறது; இதை உமார்-இ-ஃகய்யாம் பின்வரும் நாலடிகளில் விவரித்துள்ளார்:

நாம் சாய்ந்திருக்கும் ஆற்று விளிம்பெனும் உதடுகளுக்குச் சிறகுகளோ,
வெனக் காட்சி தரும் மெல்லிய பசுங் கொடிகள்.
சாயும் போது மெல்லச் சாயுங்கள்! யாரே அறிவார் இங்கு
கனிந்த உதடு எதனிலிருந்து அறியா வன்னம் இங்கே இது உதித்தது!

இக்கவிஞர், ஆற்று விளிம்பின் இப்பசுமையை, இளைஞன் ஒருவனின் முகத்தில் தோன்றும் முதல் குறுமுடிகளுக்கு இணையாக வருணிக்கின்றார்.

பாரசீகர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேறுவது மிகவும் விரும்பத்தக்கதாகும். ஏனெனில், நகரங்களில் காவி நிற செங்கற்களிலான சுவர்களே எங்கும் காணப்படுகின்றன. அச் சுவர்களுக்கிடையே குளங்களும், எலுமிச்சை இன மரங்களும், மல்லிகைப் புதர்களும்; தட்டையான கூறை கொண்ட செம்மண் பூசப்பட்ட வீடுகளுமே இருக்கின்றன. குளிர்காலத்தில் அக்கூறைகளிலுள்ள வெண்பனி குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சீர்படுத்தப்படுகின்றன; கோடைக்கால இரவுகளில் அக்கூறைகளில் கொசுவலைகளின் தோற்றம். வீடுகளுக்கு உள்ளே, வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்; பளிச்சிடும் மாதாக்கோவில் ஜன்னல்கள் போன்ற நிறத்திலான செம்மையாகப் பின்னப்பட்ட சமுக்காளங்கள். நகங்களில் மருதானி பூசப்பட்டும், தலைகளில் முத்துக்கள் சூடியுமுள்ள பெண்களும் அங்கிருக்கின்றனர். வெளியே தூசிப்படலம் சூழ்ந்த தெருக்கள். பளிச்சிடும் பழுப்பு நிற மை பூசப்பட்ட வால்களைக் கொண்ட அரசகுலத்தினரின் அரபுக் குதிரைகளில் பவனி வரும் பிரபுக்கள். புண் அரித்துப்போன முகங்களுடைய பிச்சைக்காரர்களும் பிரபு ஒருவரின் வாசலில் நின்றுகொண்டிருக்கின்றனர். ப‎ஹாய்ப் பிரார்த்தனைகளில் இத்தகைய பிச்சைக்காரர்களை நாம் காணலாம். அருவமானவரின் வாயிலினருகில் நிற்கும் மனிதர்களின் ஏழ்மை நிலையைக் குறிப்பதற்கு இவர்களுடைய உவமானம் பயனுள்ளதாகின்றது.

19-ம் நூற்றாண்டுக்கும், 20-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த பாரசீகத்தின் ஓர் அகக்காட்சியே இது. பாப் அவர்கள் இதைக் கண்டிருக்க வேண்டும்; அவர் இவ்வாறு கண்டிருக்கக்கூடும்: நாம் இப்போது பார்க்க முடிவது போல, வேலமரத்தினூடே எழும் சந்திரோதயத்தை அவர் பார்த்திருந்திருக்கலாம். “கடவுளே, கடவுளே” என இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கும் ‎‘ஹக்’ பறவையை அவர் பார்த்திருந்திருப்பார்; இப்பறவை இரவு முழுவதும் கடவுளே, கடவுளே என கத்தி விடியற்காலையில் தன் தொண்டையைக் கிழித்துக் கொள்ளும் என்பது ஐதீகம்.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலை குறித்து வில்லியம் போலித்தோ இவ்வாறு எழுதியுள்ளார்: ‘ஐரோப்பா தன் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு சாவியைத் தொலைத்துவிட்டது…. ஒரு பூட்டிய அறைக்குள் ஏற்படக்கூடிய ஒரு வெடிப்பைப் பற்றி கற்பனைப் பண்ணிப்பாருங்கள்…’. பாப் அவர்கள் பாரசீகத்தில் தோன்றியது இதற்குச் சமமான ஒரு நிகழ்ச்சியாக வருணிக்கப்படலாம். அக்காலத்தில் பாரசீகம் ஓர் ஆன்மீகச் சிறைக்கூடமாக ஆகிவிட்டிருந்தது. ‘பாஸ்ட்டில்’ எனப்படும் பாரீஸ் சிறைச்சாலையைவிட பயங்கரமாக இருந்தது; ஆனால் மனிதர்கள் விடுதலையையும், ஒளியையும் தேடிக்கொண்டிருந்தனர். ஒரு மகத்தான நாள் நெருங்கி வந்துகொண்டுள்ளதாகையால், நம்பிக்கையை இழக்கவேண்டாமெனக் கூறும், மரபுக்கூற்றுகள் வழிவழியாக அவர்களையும் வந்தடைந்திருந்தன. திருக்குரானின், ஆராதனை அத்தியாயத்தில் ஒரு வரியுண்டு; அது பின்வருமாறு கூறுகின்றது:

விண்ணுலகங்களையும், மண்ணுலகையும் இறைவனே படைத்துள்ளார்… அவரைத் தவிர இரட்சகரோ, இடையீட்டாளரோ வேறு எவரும் இலர். ஆதலால் நீங்கள் இதைக் கருதமாட்டீர்களா? விண்ணுலகிலிருந்து மண்ணுலகு வரை அவர் அனைத்தையும் நிர்வகிக்கின்றார்; ஆயிரம் ஆண்டுகள் அளவு கொண்ட அந்த நாளில், அவர்கள் அவரிடமே திரும்பிச் செல்லப் போகின்றனர்…

வருடம் 260 ‎ஹிஜ்ரியில் இறுதியாகத் தோன்றிய இமாம் மறைந்துவிட்டார் என்பது எல்லா (ஷீயா) முஸ்லிம்களுக்கும் தெரியும்; ஹிஜ்ரி 1260ம் வருடத்தில் அவர்கள் காத்திருந்த நாட்கள் ஒரு முடிவுக்கு வரும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வேறு தீர்க்கதரிசனங்களையும், வேறு சமய நூலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வில்லியம் மில்லர் போன்ற சில மனிதர்கள் போதித்து வந்தது போல், பாரசீகத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்கள் இது குறித்து அவர்களுக்குப் போதித்து வந்தனர். ஒரு நாள் இத்தகைய தீர்க்கதரிசனங்கள் விளக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் பாப் பெருமானார் பிரவேசித்தார். அவர் உட்கார்ந்த போது அவருக்குக் குறுக்காக ஒளிக் கீற்று ஒன்று பளிச்சிட்டது. போதித்துக் கொண்டிருந்தவர் தமது பாடத்தை நிறுத்தினார். பாப் அவர்களை அவர் பார்த்தார். ‘அகோ, அந்த மடியில் விழுந்துள்ள ஓளிக் கீற்றைவிட உண்மை அதி வெளிப்படையாகவுள்ளது,’ எனக் கூறினார்.

ஒரு மாதாக்கோவிலைவிட ஒரு பள்ளிவாசல் வசிப்பிடமாக அதிகம் பயன்படுத்தப்பட்டும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும். வாரத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் மக்கள் அங்கு நடமாடிக்கொண்டும், பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பர். தேகசுத்திக்காக அங்கு நீரூற்றுகள் பாய்ந்த வண்ணம் இருக்கும் – அஃது உண்மையான நீராகும்; (மாதாக்கோவில்களில் காணப்படுவது போல, ஓர் அடையாள அறிகுறியாக நிலைதாழ்ந்துள்ள, ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரல்ல. தரைகளில் கம்பளங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் மண்டியிட்டுக்கொண்டும், எழுந்துகொண்டும், தலைவணங்கிக்கொண்டும் இருப்பர்; அங்கு, உள்ளம் விண்ணுலகச் சிந்தனைகளில் ஈடுபடுவதை தடுக்கும் சிலைகளோ, படங்களோ கிடையாது. பாப் அவர்கள் அடிக்கடி பள்ளிவாசல் செல்வார்; அங்கு அவருடைய கண்களில் கண்ணீர் மல்கும்; அவர், ‘கடவுளே, என் கடன்வுளே, எனதன்பரே, என் இதயத்தின் ஆவலே!’ எனக் கூறிக்கொண்டிருப்பார். அவர் வானிபத் தொழில் புரிந்து வந்தவர். வெள்ளிக்கிழமைகளில் அவருடைய கடை அடைக்கப்பட்டிருக்கும். அன்று அவர் தமது வீட்டின் உப்பரிகைக்குச் சென்று, வெள்ளி நிற சூரிய ஒளியில் நின்றும், மண்டியிட்டுக் கொண்டும், முஸ்ஸுல்மான்கள் வழிபடுவது போல் தாமும் வழிபடுவார்.

பார்ப்பதற்கு அவர் வசீகரம் மிக்கவராவார். ஒரு சாதாரன பாரசீகரைவிட அதிக வெண்மை நிறம் மிக்கவர்; உயரம் குறைந்தவர், மனதில் நிற்கும் குரல்வளம் படைத்தவர். இங்கு நான்காவது இமாமாகிய, பாதி பாரசீகராகிய சைனு’ல்-அபிதினை நாம் நினைவுகூர்கின்றோம். அவர் தமது வீட்டின் கூறையில் இரவு நேரங்களில் பிரார்த்தனைகளை ஓதிக் கொண்டிருப்பார்; கீழே கனமான தோல் பைகளில் நீர் கொண்டு செல்வோர் கூட அவர் ஓதுவதை சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டே செல்வர் என்பர். அவருடைய நடையும் நினைவில் நிற்கக்கூடியதாகும். தெய்வங்கள் அவற்றின் நடையிலிருந்து அறியப்படுகின்றன என வெர்ஜில் என்பவர் கூறியுள்ளார்; நம்மிடையே தோன்றும் மகாபுருஷர்களுக்கும் இது பொருந்தக்கூடியதாகும். ஒரு முறை பாப் அவர்களை முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தேடிக்கொண்டிந்தார். ஆனால், பாப் அவர்களின் சிஷ்யர் ஒருவர் வழியை மறைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாப் அவர்கள் அவ்வழியே நடந்து சென்றதைக் கண்ட அம்மனிதர்: ‘அவரை என்னிடமிருந்து ஏன் மறைக்க முயல்கின்றீர்? அவருடைய நடையிலிருந்தே அவர் யார் என்பது எனக்குத் தெரியும்,’ என்றாராம். பாப் அவர்கள் இறைத்தூதர் முகம்மது அவர்களின் வழித்தோன்றலாவார். அவர் அவரைப் போன்றே இருந்திருக்கக்கூடும். அவரைப் பற்றி சகாபாக்களில் ஒருவர், ‘முகம்மதைப் போன்று வேறு அழகு எதனையும் நான் கண்டதில்லை; அவருடைய முகத்தில் சூரியனே நகர்கின்றது எனக் கூறலாம், என்றாராம்.

பாப் அவர்கள் திருமணம் புரிந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சின்னாளில் இறந்தது. அதன் தந்தையார் அக்குழந்தையை இறைவனுக்கே அற்பணித்தார்: ‘என் இறைவா, என் மகனை நான் தியாகம் செய்துள்ளதானது… உமக்கு ஏற்புடையதாக இருந்திட அருள்வீராக. உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என்னையே… நான் அர்ப்பணம் செய்திடுவதற்கு இது ஒரு முன்னோடியாக இருந்திட அருள்வீராக.

பிறகு அவர்பால் சில மனிதர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர் அவர்களை ஆணையிட்டு அழைக்கவில்லை – அவர்களே, பாலைவனப் பிரதேசங்களைத் தாண்டி அவரைக் காணவந்தனர். சிலர் கழுதைகளின் மீதமர்ந்து வந்தனர் – வெள்ளை நிற கழுதைகள். ஒரு வேளை அவற்றின் மீது மருதானி பூசப்பட்ட கைகளின் கறை படிந்திருத்திருக்கலாம், நீலக்கல் மாலைகளை அவை அனிந்திருந்திருக்கலாம்; இத்தகைய கழுதைகள் பாரசீகத்தின் தெருக்களில் இன்னமும் காணப்படுகின்றன – கார்களும், இரயில் வண்டிகளும் அவற்றை இதுவரை ஒழிக்க முடியவில்லை. இம் மனிதர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் வாயிலாகவும், மனக்காட்சிகளின் வாயிலாகவும் பாப் அவர்களைக் காண வந்தனர்; பார்க்கப்போனால் பல அமெரிக்கர்களும் இதே முறையில் ப‎ஹாய்கள் ஆகியுள்ளனர். இந் நிகழ்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட வேண்டியவை. அவற்றை நாம் அறிவியற்கூட ரீதியில் புரிந்துகொள்ள இயலாது. ஓர் இறைத்தூதர் தோன்றப்போகும் வேளையில், அவருக்காகப் பல சிஷ்யர்கள் காத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். காலங்கள் தோறும் தோன்றும் ‘நம்பமுடியாத நூற்றுக்கணக்கான இறைக்காவலர்களிலிருந்து,’ தனிப்பட்டு நிற்கும் உண்மையான இறைத்தூதர்கள் உண்டென்பதும் நமக்குத் தெரியும்; மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மறுஉயிர்ப்புறச் செய்யும், மூலாதாரமாக இருக்கும் ஒருவர் இருக்கின்றார் என்பதும் நமக்குத் தெரியும். திருத்தூதர் முகம்மது அவர்களைப் பற்றி கார்லைல் இவ்வாறு கூறுகின்றார்:

புராதன மனிதர் என இத்தகைய மனிதரையே நாம் கூறுகின்றோம்; அவர் நம்மிடம் நேரடியாகத் தோன்றுகின்றார்… அவரை, கவிஞர், இறைத்தூதர், இறைவன் என நாம் அழைக்கலாம்; – இப்படியோ, அப்படியோ, அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் வேறு எந்த மனிதனும் உச்சரிக்க முடியாத வார்த்தைகள் என நாம் உணருகின்றோம். விஷயங்களின் உள்ளார்ந்த மெய்மையிலிருந்து அவர் நேரடியாகத் தோன்றுகின்றார்; – அவர் வாழுகின்றார், அதனோடு தினசரி தொடர்பு கொண்டு, அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும்… உலகின் மையத்திலிருந்தே அவர் தோன்றுகின்றார்; அவர் விஷயங்களின் பூர்வமெய்மையின் ஒரு பகுதியாவார்.

பாப் அவர்கள் இச் சிஷ்யர்களை ஆங்காங்கு அனுப்பினார். அவர்கள் கிழக்குப் பிரதேசங்களைத் தட்டியெழுப்பினர்; நூறு நகரங்களில், கருகிப்போனதும் உருக்குலைந்து போனதுமான தங்கள் உடல்களை விட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் தலைவரின் செய்தியை வழங்கினர். எந்தத் தோட்டாவும் அவர்களுடைய உதடுகளின் அசைவை நிறுத்தமுடியவில்லை. ஒரு மாபெரும் உலகக் காப்பாளர் குறித்த நற்செய்தியை அவர்கள் வழங்கினர். பாப் அவர்கள், ‘இறைவன் வெளிப்படுத்தவிருக்கும் அவருடைய கைகளில் நான் வெறும் ஒரு மோதிரம் மட்டுமே ஆவேன்.’ பிறகு அவர், இஸ்லாத்தின் அதிப்புனிதஸ்தலமாகிய மெக்காவுக்கு பயணம் செய்தார். அங்கு, கா’பாவின் புனித கருப்புநிற கல்லிற்கு முன்பாக அவர் தமது செய்தியைப் பிரகடணம் செய்தார்; அதன் வாயிலாக தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. சம்பிரதாயமாக வழங்கி வந்தது போல், அவர் மிகவும் சிறந்த செம்மறியாட்டு வகையிலிருந்து பத்தொன்பது ஆடுகளைப் பலி கொடுத்தார்; மிகவும் கவனமாக வாய்களில் சர்க்கரை ஊட்டப்பட்டவையாகவும், கண்களில் அஞ்சனம் பூசப்பட்டவையுமாக, அந்த ஆடுகள் இருந்திருக்கலாம். இந்தப் பலியானது ஏழைகளுக்குப் பெரும் ஆசீர்வாதம் போன்றதாகும், ஏனெனில், இறுதியில் அந்த ஆட்டிறைச்சி ஏழைகளுக்கே விநியோகம் செய்யப்படும். இந்த இறைச்சியிலிருந்து பாப் அவர்கள் தமக்கென ஒரு பங்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது, எப்போதும் குறைவான உணவே இருக்கும் முகம்மது அவர்களின் இல்லத்தில் ஓர் ஆடு எவ்வாறு பலி கொடுக்கப்பட்டது எனும் கதையை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. பலி கொடுக்கப்பட்ட அந்த ஆடு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நபியவர்களின் மனைவியான ஆயிஷா, இறைச்சி அனைத்தும் கொடுக்கப்படுகின்றதே என அங்கலாய்த்தார். ‘தோள்பட்டையைத் தவிர வேறொண்றும் மீதமில்லை,’ எனக் கூறினார். அதற்கு நபியவர்கள், ‘தோள்பட்டையைத் தவிற முழு ஆடும் மீதமுள்ளது,’ என்றாராம்.

பாரசீகத்தில் பாப் அவர்கள் பள்ளிவாசல்கள் அனைத்திலும் பிரகடனம் செய்தார். அங்கு அவர் நுழையும் போதெல்லாம் மக்கட் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். ஷிராஸில் நீர் ஓரத்தில் சா’ஆடி கூறியது போல்: ‘எங்கெங்கு அதிமதுரமான நீரின் ஊற்று இருக்கின்றதோ, அங்கெல்லாம் மனிதர்களும், பறவைகளும், பூச்சிகளும் ஒன்றாகத் திரளும்.’ உரையாற்றிட அவர் பள்ளிவாசல்களின் சமயமேடை ஏறி பேசும்போதெல்லாம் அவர்கள் அமைதியோடு நிற்பார்கள்.

இஸ்லாத்தின் மையங்களாகிய அவற்றில், அவர் முன்னெழுந்தார், தாக்கினார். மரணத்தை அரவனைக்கப் போகும் மனிதரைப்போல் அவர் அறைகூவல் விடுத்தார். அவர் மக்கட் கூட்டத்தின் பிரபுக்களாக விளங்கிய சமயத்தலைவர்களுக்கு எதிராக குரலெழுப்பினார். முல்லாக்களுக்கு திருக்குரான் மனப்பாடமாகும். ஆனால், பாரசீகர் எவருமே அதைத் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வாய்ப்புக் கிடையாது. முல்லாக்களுக்கு எது சட்டரீதியானது எது சட்டரீதியானதல்ல என்பதும், ஒரு மருந்து எப்போது உட்கொள்ளப்பட வேண்டும், அல்லது கூடாது என்பதும், ஒரு பயணம் எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும், ஒரு பெண்ணின் திருமணம் எப்போது நிகழ வேண்டும் என்பதெல்லாம் தெரியும். மற்ற மனிதர்களுக்குத் தெரியாததெல்லாம் முல்லாக்களுக்குத் தெரியும். ஆனால், அவரது மூதாதையரான முகம்மது நபி அவர்கள் அக்காலத்து அராபிய சிறுதெய்வங்களைக் குறை கூறியது போல் பாப் அவர்களும் முல்லாக்களை குறைகூறினார். முகம்மது அவர்கள்: ‘நீங்கள் அவற்றின்(சிலைகள்) மீது எண்ணெய், மெழுகு ஆகியவற்றைக் கொண்டு பூசுகின்றீர்கள், அவற்றின் மீது ஈக்கள் ஒட்டிக்கொள்கின்றன, – இவை வெறும் மரக்கட்டைகளே என நான் கூறுகின்றேன்!’ என்றார். இயேசு நாதர் தமது காலத்து மனிதர்களை, வேஷதாரிகள் – நாய்கள் – விஷப்பாம்புக் கூட்டம் – சோரம்போனவர்கள் என அதே போன்று கூறினார்.

பாரசீகம் முழுவதும் இப்போது அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. அவரை ஒரு மலைக்கோட்டையில் வைத்து அடைத்தார்கள். அங்கு அவர்: “இரவு நேரத்தில் எமக்கு ஒரு விளக்கு கொண்டு வருபவரும் கிடையாது.” இஸ்லாத்தின் பலன் பாப் அவர்களை ஏற்றுக்கொள்வதே, இருந்தும் அவர்கள் அவரை சிறைப்படுத்தியுள்ளனர்.’ அவர் மேலும் எழுதினார்: ‘இவ்விடத்தின் அனுக்கள் அனைத்தும், “இறைவனைத் தவிற வேறு இறைவன் கிடையாது!” என கூக்குரலிடுகின்றன. பிறகு அவர் பஹாவுல்லாவின் வருகையை முன்னறிவிக்கும், தமது படைப்புக்களிலேயே மாபெரும் படைப்பை தமது செயலாளருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஓதும் போது அவருடைய குரலொலி மலைக்குக் கீழும், மலைப்பள்ளத்தாக்கின் மீதும் எதிரொலித்தது. பனிக்காலத்தின் குளிரினால் அவர் பெரும் இன்னலுக்குள்ளானார். தமது தேகசுத்திக்காக அவர் பயன்படுத்திய நீர், அவருடைய முகத்திலேயே உரைந்து போனது.

மக்கள் அவரை நேசித்தனர், அவரைத் தேடி வந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்தும் கால் நடையாக வந்தனர். அவர் வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய விசுவாசிகள் தெருக்களில் கொலை செய்யப்பட்டனர்.

பிறகு தாப்ரீசில் ஒன்றுகூடியிருந்த இளவரசர், மதகுருக்கள் ஆகியோரின் முன்னிலைக்கு அவர் ஆணையிட்டு அழைக்கப்பட்டார். சபையில் ஒரு நாற்காலி மட்டுமே மீதமிருந்தது; அஃது இளவரசனுடையதாகும். பாப் அவர்கள் இந்த நாற்காலியிலேயே அமர்ந்தார். அவருடைய முகத்தில் பெரும் சக்தி பிரகாசித்தது; அதனால் சபை நிசப்தமானது. பிறகு, ஒரு மதகுரு கேள்வி கேட்டார்: ‘நீர் யாரென உம்மைப் பிரகடனப்படுத்துகின்றீர்?’ அதற்கு அவர்: ‘நீங்கள் ஆயிரம் வருடங்களாக எவருடைய நாமத்தை உச்சரித்தீர்களோ, எவருடைய வருகையைக் கண்ணுறுவதற்காக ஏங்கினீர்களோ… எவருடைய வெளிப்பாட்டின் நேரத்தைத் துரிதப்படுத்துமாறு இறைவனை வேண்டினீர்களோ, அந்த ஒருவர் யானே ஆவேன். மெய்யாகவே யான் கூறுகின்றேன், எமது வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டியது கிழக்கிலும் மேற்கிலுமுள்ள எல்லா மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டதாகும்…

பிறகு நடந்தது அனைத்தும் நமக்குத் தெரியும். ஆனால், இந்நாள்கள் அவரது வெற்றிக்கான நாள்கள். தாப்ரீசில் அந்தக் காலை வேளையில் அவர் எவ்வாறு ஒரு சுவற்றில் தொங்கவிடப்பட்டு சுடப்பட்டார் என்பதை நாம் நினைவுகூர்ந்திட வேண்டியதில்லை. மாறாக, அவர் இன்று உலகம் முழுவதும் வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது…


நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.  இத்தகைய பிரார்த்தனைகள் நோயை குணப்படுத்த உதவுகின்றனவா, அப்பிரார்த்தனையில் நாம் என்ன வேண்டுகிறோம் மற்றும் நாம் வேண்டுவதுதான் அந்நோயாளிக்குத் தேவையா என்பது போன்றவை குறித்த ஆய்வே பின்வரும் கட்டுரை.

நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.

“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

  • தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?
  • எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?
  • நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?
  • நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?
  • இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?
  • மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”

டாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”

மேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…

“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

அறிவியல் ஆராய்ச்சி

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.

(http://bci.org/prsamy/html/bns656.html)