புரிந்துகொள்ளல்-1


கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள வெகுமதிகளுள் பகுத்தறியும் ஆற்றலே அதி உயர்ந்தது என கூறலாம். இந்த ஆற்றலின் வாயிலாகவே மானிடம் அனைத்து உயிரினங்களில் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் ஒரே உயிரினமாக தனித்தன்மை பெற்றுள்ளது. மனிதனுக்குப் பஞ்சேந்திரியங்களான பார்வை, செவி, நுகர்வு, சுவை, ஸ்பரிசம் ஆகிய புற ஐம்புலன்கள் உள்ளன இவற்றின் உதவியுடன் மனிதன் வஸ்துநிலையில் உள்ளவற்றை உணர்கின்றான். இவையல்லாமல் மனிதனுக்கு கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளல், பொதுப்புலன் மற்றும் நினைவாற்றல்கள் என அக ஐம்புலன்கள் உள்ளன.

வெளிப்புலன்கள் மற்றும் உட்புலன்கள் என கூறுகின்றோம். புற ஐம்புலன்களான வெளிப்புலன்கள் குறித்து எல்லாருமே ஓரளவுக்கு அறிவுற்றிருப்பார்கள், ஆனால், இந்த உட்புலன்களின் தன்மை யாது? ஆங்கிலத்தில் இவற்றை:

  • imagination(கற்பனை)
  • thought(சிந்தனை)
  • comprehension(புரிந்துகொள்ளல்)
  • common faculty(பொதுப்புலன்)
  • memory(நினைவு)

என அழைக்கின்றோம். இந்த ஐந்து உட்புலன்களுள் பொதுப்புலன் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். பொதுப் புலனானது புறப்புலன்களுக்கும் அகப்புலன்களுக்கும் இடையீட்டாளராகச் செயல்படுகிறது. உதாரணமாக நமது கண்ணின் உதவியோடு நாம் ஒரு பூவைப் பார்க்கின்றோம். இந்தத் தகவலை பார்க்கும் ஆற்றலானது பொதுப்புலன் என்படும் இடையாற்றலுக்கு அனுப்பிவைக்கின்றது. இந்தப் பொதுப்புலன் அத்தகவலை கற்பனையாற்றலிடம் அனுப்புகிறது. கற்பனா சக்தி அத்தகவலை உருவகப்படுத்தி சிந்தனாசக்தியிடம் அனுப்புகிறது; சிந்தனாசக்தி அதை சிந்தனையில் செலுத்தி புரிந்துகொள்ளும் ஆற்றலிடம் அனுப்புகிறது, பிறகு புரிதலானது அதன் மெய்ம்மையை உணர்ந்தவுடன்,தகவலை நினைவாற்றலிடம் அனுப்பி, நினைவாற்றல் பிறகு அதை தனது களஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றது. பின்வரும் வரைபடத்தைக் காணவும்:

மிருகங்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவற்றுக்கு வெறும் புறப்புலன்கள் மட்டுமே உள்ளன மற்றும் பிறக்கும் போதே அவற்றுள் இயல்பாக உள்ள உள்ளுணர்வுகளின்(instincts) உதவியோடு செயல்படுகின்றன.

powers of a man

தாதுப்பொருட்களுக்கு பிணைப்பாற்றல் உள்ளது; தாவரங்களுக்கு பிணைப்பாற்றலோடு வளரும் ஆற்றல் உள்ளது; மிருகங்களுக்கு பிணைப்பாற்றல் மற்றும் வளரும் ஆற்றல்களோடு வெளிப்புலன்களான ஐம்புலன்களும் உள்ளன.

நாம் இதுவரை இங்கு அறிந்துகொண்டவரை மனிதனுக்கு ஆறறிவு உள்ளது எனக் கூறுவது தவறாகும். ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பது அவனுடைய உட்புலன்கள் ஐந்தில் ஒரு புலன் ஆகும் என்பதே உண்மை.

பஹாவுல்லா தமது எழுத்தோவியங்களில் மனிதனுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகளுள் புரிந்தல் ஆற்றலே மிக உயர்ந்தது எனக் கூறுகின்றார். இந்தப் புரிந்துகொள்ளும் ஆற்றலின்வாயிலாக மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தையும், தன்னைப் படைத்தவராகிய ஆண்டவரைப்பற்றியும் அறிந்துகொள்ளமுடிகிறது.
(தொடரும்)

எவின் சிறையிலிருந்து ஒரு பரிசு


5 ஜூன் 2009

இரான் நாட்டில் பஹாய் சமயம் ஆரம்பித்ததிலிருந்து பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், மற்றும் பல பஹாய்கள் ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் திருமதி பாஃரிபா கமாலபாடி.

திருமதி பாஃரிபா கமாலபாடி, மற்றும் ‘யாரான்’ எனப்படும் ஆறு பஹாய் தலைவர்கள், மற்றும் வேறு பல பஹாய்கள் பிரசித்தமான எவின் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் உடல்கள் சிறைப்படுத்தப்பட்டும் உளவியல் ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் உலகைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான அவர்களின் நலன்விரும்பிகளை மனதிற்கொண்டு அவர்களின் ஆன்ம ஒளி மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு
எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு


மார்ச் மாதம் திருமதி கமாலபாடியின் கடைக்குட்டி மகளான, தரானியின், பிறந்த நாளாகும், ஆனால் அவளுடைய அன்னையினால் தம் மகளுக்கு சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து ஒன்றும் செய்யமுடியவில்லை! இருந்தபோதும், தம்மால் முடிந்த ஒன்றை தமது மகளுக்காக செய்தார். அவர், கடுமையான சிறைவாசத்திற்கு உட்பட்டிந்தபோதிலும், தம்மைப்போல் சிறைப்படுத்தப்பட்டோருக்காக வாழ்வும் அன்பும் துளிர்விட முடியும் என்பதை நினைவூட்ட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு சிறு செடியை வளர்த்தார் — அச்செடியை தமது மகளான தரானிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் அச்செடியையும் அதைப் பெற்ற தரானியையும் காணலாம். அடுத்தவருடமாவது, எவின் சிறையின் கடுமைகளுக்கு வெகு தொலைவிற்கு அப்பால், தங்கள் சொந்த வீட்டிலேயே களிப்போடு ஒரே குடும்பமாக தரானியின் பிறந்த நாள் கொண்டாடப்பட நாம் பிரார்த்திப்போமாக.

இப்படம் Iran Press Watch எனப்படும் செய்தி நிறுவனத்திற்கு திருமதி பாஃரிபாவின் சகோதரரால் வழங்கப்பட்டது.