கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள வெகுமதிகளுள் பகுத்தறியும் ஆற்றலே அதி உயர்ந்தது என கூறலாம். இந்த ஆற்றலின் வாயிலாகவே மானிடம் அனைத்து உயிரினங்களில் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் ஒரே உயிரினமாக தனித்தன்மை பெற்றுள்ளது. மனிதனுக்குப் பஞ்சேந்திரியங்களான பார்வை, செவி, நுகர்வு, சுவை, ஸ்பரிசம் ஆகிய புற ஐம்புலன்கள் உள்ளன இவற்றின் உதவியுடன் மனிதன் வஸ்துநிலையில் உள்ளவற்றை உணர்கின்றான். இவையல்லாமல் மனிதனுக்கு கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளல், பொதுப்புலன் மற்றும் நினைவாற்றல்கள் என அக ஐம்புலன்கள் உள்ளன.
வெளிப்புலன்கள் மற்றும் உட்புலன்கள் என கூறுகின்றோம். புற ஐம்புலன்களான வெளிப்புலன்கள் குறித்து எல்லாருமே ஓரளவுக்கு அறிவுற்றிருப்பார்கள், ஆனால், இந்த உட்புலன்களின் தன்மை யாது? ஆங்கிலத்தில் இவற்றை:
- imagination(கற்பனை)
- thought(சிந்தனை)
- comprehension(புரிந்துகொள்ளல்)
- common faculty(பொதுப்புலன்)
- memory(நினைவு)
என அழைக்கின்றோம். இந்த ஐந்து உட்புலன்களுள் பொதுப்புலன் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். பொதுப் புலனானது புறப்புலன்களுக்கும் அகப்புலன்களுக்கும் இடையீட்டாளராகச் செயல்படுகிறது. உதாரணமாக நமது கண்ணின் உதவியோடு நாம் ஒரு பூவைப் பார்க்கின்றோம். இந்தத் தகவலை பார்க்கும் ஆற்றலானது பொதுப்புலன் என்படும் இடையாற்றலுக்கு அனுப்பிவைக்கின்றது. இந்தப் பொதுப்புலன் அத்தகவலை கற்பனையாற்றலிடம் அனுப்புகிறது. கற்பனா சக்தி அத்தகவலை உருவகப்படுத்தி சிந்தனாசக்தியிடம் அனுப்புகிறது; சிந்தனாசக்தி அதை சிந்தனையில் செலுத்தி புரிந்துகொள்ளும் ஆற்றலிடம் அனுப்புகிறது, பிறகு புரிதலானது அதன் மெய்ம்மையை உணர்ந்தவுடன்,தகவலை நினைவாற்றலிடம் அனுப்பி, நினைவாற்றல் பிறகு அதை தனது களஞ்சியத்தில் சேமித்து வைக்கின்றது. பின்வரும் வரைபடத்தைக் காணவும்:
மிருகங்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவற்றுக்கு வெறும் புறப்புலன்கள் மட்டுமே உள்ளன மற்றும் பிறக்கும் போதே அவற்றுள் இயல்பாக உள்ள உள்ளுணர்வுகளின்(instincts) உதவியோடு செயல்படுகின்றன.

தாதுப்பொருட்களுக்கு பிணைப்பாற்றல் உள்ளது; தாவரங்களுக்கு பிணைப்பாற்றலோடு வளரும் ஆற்றல் உள்ளது; மிருகங்களுக்கு பிணைப்பாற்றல் மற்றும் வளரும் ஆற்றல்களோடு வெளிப்புலன்களான ஐம்புலன்களும் உள்ளன.
நாம் இதுவரை இங்கு அறிந்துகொண்டவரை மனிதனுக்கு ஆறறிவு உள்ளது எனக் கூறுவது தவறாகும். ஆறாவது அறிவான பகுத்தறிவு என்பது அவனுடைய உட்புலன்கள் ஐந்தில் ஒரு புலன் ஆகும் என்பதே உண்மை.
பஹாவுல்லா தமது எழுத்தோவியங்களில் மனிதனுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகளுள் புரிந்தல் ஆற்றலே மிக உயர்ந்தது எனக் கூறுகின்றார். இந்தப் புரிந்துகொள்ளும் ஆற்றலின்வாயிலாக மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தையும், தன்னைப் படைத்தவராகிய ஆண்டவரைப்பற்றியும் அறிந்துகொள்ளமுடிகிறது.
(தொடரும்)