பொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீக உள்ளர்த்தங்கள்


(பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை)

24 நவம்பர் 2001

அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திருப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும். உலக நீதிமன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அற்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்.

பஹாய் உலகத்திற்கும், தேசிய ஆன்மீக சபைகளுக்கும் சுமார் பத்துப் பதினான்கு நாள்களுக்கு முன் உலக நீதி மன்றம் அனுப்பிய கடிதத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அவை உலகத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, பஹாய் அனைத்துலக நிதிக்கு மேலும் அதிகமான உதவியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பது குறித்து தேசிய ஆன்மீக சபைகள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளை, உலக நீதி மன்றமும் அதனுடைய ஒதுக்கீடுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வழிவகைகளைப் பற்றி சிந்திக்கும்படி தனது செயலகங்களையும், இலாகாக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது; அந்த நடவடிக்கையும் நடந்துகொண்டிருக்கின்றது;

இந்தச் செயற்பாடுகள் இயங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, இங்கும் உலக நீதி மன்ற அடித்தள ஊழியர்களிடையேயும் ஓர் இயக்கம் தோன்றியுள்ளது; இது வரவேற்கப்படக்கூடியது, பெரிதும் மதிக்கப்படுகின்றது, மேலும், அவ்வித நடவடிக்கை உருவாகியுள்ளது மிகுந்த ஆரோக்கியமானதும்கூட. எனக்குத் தெரிந்த வரை இவ்வித ஒரு நடவடிக்கைத் தொன்றியுள்ளது இதுவே முதன் முறையென நான் நினைக்கின்றேன்.

இந்த விஷயத்தைப் பற்றி எப்படி உரையாற்றுவது என நான் நிறைய சிந்தித்தேன்; பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து சில வார்த்தைகளை குறிப்பிடுவது என நான் முடிவுசெய்துள்ளேன். அவ்வார்த்தைகள் எச்சரிக்கை விடுப்பவையாக உள்ளன:

“இறைவன்பால் அச்சங்கொள்ளுங்கள், மிதத்தன்மையின் எல்லைகளை மீறி, ஊதாரிகளோடு சேர்ந்தவர் என கணக்கிடப்படுவதிலிருந்து கவனமாக இருங்கள்.”
(பொறுக்குமணிகள், பக். 251)

அப்துல் -பஹாவிடமிருந்து:
“உதாரித்தனம் எப்போதும் கடுந்துன்பத்திற்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும். ஒரு தேவையை அல்லது கடமையை நிறைவுசெய்வதற்காகவே நாம் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உணவில் கூட, தேவைக்கு அதிகமாக ஒருவர் உண்பாரெனில், அது நிலைகுலைவுக்கும், உடல்நலக்குறைவுக்கும் வழிவகுத்து, நோய்களிலும், வியாதிகளிலும் முடியும்.”
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

மேலும், ஓர் உண்மையான ஆர்வலரின் பண்புகள் குறித்து கித்தாப்-இ-இஃகானில் பஹாவுல்லா கூறியவை குறித்து நீங்கள் பரிச்சயம் அடைந்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்று பின்வரும் பண்பு:

அவ்வார்வலர் சிறிதளவோடு திருப்தியுற்றும், மட்டுமீறிய ஆவல்களிலிருந்து விடுபட்டிருக்கவும் வேண்டும்.”
கித்தாப்-இ-இஃகான், பக். 193)

நமது புனிதவாசகங்களில் பொருளாதாரம் பற்றிய விஷயம் எவ்வாறு அனுகப்பட்டுள்ளது என்பதை இச்சில வாசகப்பகுதிகள் காண்பிக்கின்றன. இந்த இடத்திலாகட்டும் அல்லது உலகின் வேறு இடங்களிலும் சரி, அவற்றைப் படிக்கும்போது, அவற்றை நமது வாழ்க்கைமுறைகளோடு சில வேளைகளில் நாம் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.

“ஊதாரித்தனம்,” எனும் வார்த்தையை பஹாவுல்லா பயன்படுத்தியுள்ளார். “ஊதாரித்தனம்” என்பதன் அர்த்தம், “மிதம் மீறி செலவளித்தல்” என்பதாகும், மேலும், “தேவைக்கும் அதிகம்” என்பதும் ஆகும். அது ஒரு கோடியிலுள்ள நியையாகும். மறு கோடியில், “ஊதாரித்தனம்” என்பதன் எதிர்ப்பதம், “கஞ்சத்தனம்” அல்லது “கருமித்தனம்” என்பதாகும். அதுவும் நல்லதல்ல. ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையுள்ளது. ஒரு முறை, பஹாய் சமயம் என்பது நடுநிலையிலுள்ள ஒரு சமயமாகும் என ஷோகி எஃபெண்டி கூறியதாக ரூஹிய்யி ஃகானும் தெரிவித்துள்ளார்.

அவ்விரு கோடி நிலைகளுக்கும் இடையிலான நிலையை சிக்கனம் என வருணிக்கலாம். “சிக்கனம்,” என்பது “செலவுகள் குறித்து கவனமாக இருப்பது, மேலும், பணம் நமது பணமாக இருந்தாலும், சமயத்தின் நிதியாக இருந்தாலும், செலவுகள் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும்.

நாம் இன்று பகல் முழுவதும் இவ்விஷயங்கள் குறித்தே சிந்தித்தும், கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். “நாம் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளோம். இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மட்டுமே நான் பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டுமா,” என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது.

அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக்கொள்வதென்பது தனியாகவும், செயல்பாடு வாயிலாகவும் பெரும் ஆன்மீக மதிப்பினைக் கொண்டுள்ளதா? என் பனிவான கருத்து என்னவென்றால், நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, பணத்தைச் செலவு செய்வதன்பால் நாம் கொள்ளவேண்டிய மனப்பான்மை என்பது, தானாகவும், தனியதிகாரம் பொருந்தியதுமான ஒரு நற்பண்பாகும். அஃது இறைவனின் பார்வையில் தனிச்சிறப்புடையதாகும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ்வித மனப்பான்மையோடு அனுக்கமாகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது பஹாய் வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

உதாரணமாக, 1911ல் அப்து’ல்-பஹா பாரீசில் இருந்தபோது, அவர் பாரீசின் மிகவும் ஆடம்பரமான பகுதியில் ஒரு நேர்த்தியான அடுக்குமாடி விடுதி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். இந்த விடுதி இப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய ஆன்மீக சபையினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது:

அவ்வேளையில் அப்து’ல்-பஹா தம்மோடு வந்திருந்த அனைவரும் தம்முடைய காரியத்தைக் கண்டு சிறிது சஞ்சலமடைந்திருப்பதாக உணர்ந்தார். ஆகவே, அவர் தமது காரியத்திற்கு விளக்கமளிக்கவேண்டியிருந்தது. ஒன்றை நாம் உணர வேண்டும். பாரீஸ் நகரம் அப்போது பிரமுகர்கள் நிறைந்த ஓர் உலக நகரமாக விங்கியது. குறிப்பாக, கிழக்கிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஈரானிலிருந்தும் தொடர்ச்சியாகப் பிரமுகர்கள் ஒன்றுகூடும் இடமாக அது திகழ்ந்தது. சமயத்தின் நற்பெயரை நோக்கமாகக் கொண்டு, அவர், பிறர் கண்களுக்கு கௌரவமாகத் தென்படும் ஓரிடத்தை வாடகைக்கு அவர் அமர்த்த வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு விளக்கத்தைத்தான் அப்து’ல்-பஹா தமது குழுவிருக்கு வழங்கினார். அவர் பின்வருமாறு கூறினார்:

“செலவீட்டிற்கு வழிவகுக்கும் சம்பிரதாயமான செயல்களில் நான் ஈடுபடுவதை நீங்கள் கண்டீர்களென்றால், சமயத்திற்கு அது நன்மை பயக்கும், அதன் மரியாதை காப்பாற்றப்படும் எனும் ஒரே காரணத்திற்காகத்தான் என உணரவேண்டும். நான் பாக்தாத்திலும், ஏட்ரியாநோப்பிலிலும் இருந்தபோது, என் தலைப்பாகையும், என் துணிகளும் பல வருடங்கள் பழையனவாக இருந்தன. அவற்றின் பின்னல் வேலைகளெல்லாம் நைந்துபோயிருந்தன. கடனுக்குக்கூட புதியவற்றைப் பெறும் நிலையில் நான் அப்போது இல்லை. இப்போது, சில காரணங்களுக்காக அல்லாது இவ்விதமாக நான் செலவு செய்திருக்கமாட்டேன்; இந்நகரத்தில் ஆகத் தாழ்வானதும், விலை மலிவானதுமான விடுதியையே நான் வாடகைக்கு அமர்த்தியிருப்பேன்.
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

அப்து’ல்-பஹா இவ்விஷயத்தை அதிகம் விளக்க வேண்டியிருக்கவில்லை, ஏனெனில், அவருடன் இருந்த பாரசீக நண்பர்கள், அவர்மேல் பெரும் அன்பு வைத்திருந்தனர், அவரைப் பெரிதும் மதித்தனர், ஆகவே இறுதியில் பிரச்சினை எதுவுமே எழவில்லை.

ஆனால், அவர் தமது கோட்பாடு என்னவென்பதை விளக்க விரும்பினார். இப்போது, புனித நிலத்தில் உள்ள நினைவாலயங்களை நீங்கள் காணுகின்றீர்கள். அவற்றின் உள்ளும் புறமும் காணுகின்றீர்கள், அவற்றைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் நீங்கள் காணுகின்றீர்கள். என்ன கோட்பாட்டையொட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது?

வெளிப்படையாக பார்க்கும்போது அது பெரும் ஆடம்பரச் செலவாகத் தென்படும். நினைவாலயங்களிலும், நிலவடிவமைப்பு வேலைப்பாடுகளிலும், படிக்கட்டு வேலைகளிலும் பெரும் பொருள் வளத்திற்கு மேல் பொருள் வளத்தை நீங்கள் காணுகின்றீர்கள். இத்தோட்டங்கள், இவ்வுலகத்திலேயே அதிப்புனிதமான நினைவாலயங்களுக்கான சுற்றுச் சூழல்களாகும்.

ஷோகி எஃபெண்டி அவர்கள் விளக்கியது போல, இப்பூவுலகின் ஆன்மீக மையமாக இவ்விடம் விளங்குகின்றது. ஆகவே, இக்கட்டிடங்களும், தோட்டங்களும் உலக மையத்தில் வாழ்க்கை முறை இத்தகைய படாடோபம் மிக்கதாக இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு இல்லை. இது பாரீசில் அப்து’ல்-பஹா வாடகைக்கு அமர்த்திய அடுக்குமாடி விடுதியைப் போன்றது. இது சமயத்தின் நன்மதிப்பைக் காரணமாகக் கொண்டது. அவ்விரண்டையும் நாம் ஒன்றுகலக்க முடியாது.

அப்து’ல்-பஹா தமது தலைப்பாகை நைந்துபோயிருந்தது என்றார். நீங்கள் பழம்பொருள் காப்பகத்திற்குச் சென்றீர்களென்றால் ஷோகி எஃபெண்டி அவர்களின் துணிகளைப் பாருங்கள். அவை எவ்வளவு எளிமையானவை என்பதையும், எவ்வளவு நைந்துபோயுள்ளன என்பதையும் பாருங்கள்.

அவரை நண்பர்கள் காண வந்த போது அவர் அந்த பொருள்களைத் தான் அணிந்திருந்தார், அந்தக் காலனிகளைத்தான் பயன்படுத்தியிருந்தார். அவர் பொதுமக்களிடையே காட்சி தரவில்லையாதலால் அவர் அத்தகைய துணிகளை அனிந்திருந்தார்.

அங்கு நண்பர்களையெல்லாம் ஆட்கொண்டது, அவர் பிரகாசித்த மேன்மையும், அவருடைய புனிதத் தன்மையுமே, அவர் அணிந்திருந்த துணிகளல்ல. அவருக்காக எனப் பார்க்கும் போது அவர் பெரும் சிக்கனமாகவே வாழ்ந்தார், உணவும் உட்கொண்டார். அவ்விரு நிலைகளுக்கிடையிலும் பெரும் வேறுபாடு உண்டென்பதை நாம் உணரவேண்டும்.

உதாரணமாக, உணவைப் பற்றிக் குறிப்பிடுகையில், பஹாவுல்லா கூறியருளிய வாக்கொன்று உள்ளது. அவர் கூறுவது என்னவென்றால்:

“உணவு ஒரே வகையாக இருக்குமானால், இறைவனின் பார்வையில் அது மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்”.
(கித்தாப்-இ-படீ – தற்காலிக மொழிபெயர்ப்பு)

இவை வெரும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடவில்லை; பஹாவுல்லா, அப்து’ல்-பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் இல்லங்களில் இவை செயல்படுத்தப்பட்டன. ஷோகி எஃபெண்டி அவர்களின் காலத்தில் நானும் இத்தகைய நாட்களைக் கண்டிருக்கின்றேன். ஒரே சமயலறைதான் இருந்தது. அச்சமயலறை ஷோகி எஃபெண்டி அவர்களின் இல்லத்திற்கு மட்டுமல்ல, உலக மையத்திற்கே அதுதான் சமயலறையாக விளங்கியது.

ஆனாலும், இப்போது இருப்பதுபோல், அப்போது உலக மையத்தில் 700 அல்லது 800 ஆட்கள் வேலை செய்யவில்லை. அது மிகவும் சிறிய மையமாக இருந்தது. ஆனால், வீடுகள் சிலரை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாஸ்டர் அவர்களின் வீட்டில் சுமார் 100 பேர்கள்தங்கியிருந்தனர்; அது சுமார் 200 பேர்களுக்காவது உணவு வழங்கவேண்டியிருந்தது. வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், என பலர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது. புனித யாத்ரீகர்களும் இருந்தனர்; அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் உலக மையத்தின் விருந்தினர்களாக இருந்தனர். உணவு ஒரு வகையாக மட்டுமே இருந்தது, ஷோகி எஃபெண்டி அவர்களுக்கும் உட்பட.

பழம்பொருள் காப்பகத்தில் ஷோகி எஃபெண்டி அவர்களின் பத்திரங்களும், தாள்களும் உள்ளன. அவர் கணக்குகள் வைத்திருந்தார்; அவர் தமக்கென பற்று வரவு கணக்குப்புத்தகம் வைத்திருந்தார்; ஒவ்வொரு புனித இடத்திற்கும் அவர் கணக்குகள் வைத்திருந்தார்; ஒவ்வொரு திட்டத்திற்கும் அவர் கணக்குகள் எழுதி வைத்திருந்தார். அவர் தமது கைகளாலேயே எழுதப்பட்ட கணக்குகளை வைத்திருந்தார். அவற்றை நாம் பழம்பொருள் காப்பகத்தில் காணலாம்.

உதாரணமா, “பிச்சைக்காரனுக்கு அறை பியாஸ்தர் கொடுக்கப்பட்டது,” என படிக்கலாம். அறை பியாஸ்தர் என்பது அறைக்காசு கூட பெறாது! “பற்பசைக்கு 15 பியாஸ்தர்கள்” எனப் படிக்கலாம். ஷோகி எஃபெண்டி அவ்வாறுதான் கணக்கு வைத்திருந்தார். அவர் நினைவாலயங்களின் காப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிதவை நிதி ஒன்றை கொடுத்திருந்தார். அஃது அக்காலத்து அமெரிக்க வெள்ளிகள் இரண்டுக்குச் சமமானது. அவ்வளவுதான். செலவீடுகள் இரண்டு வெள்ளிக்கும் அதிகமானால், பிரச்சினை அவரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்தான் முடிவு செய்வார்.

அவர் தமது வசந்தகாலத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு வைத்திருந்தார். அதை அவர் தமது பயணங்களுக்கு முன்பாகவே, உதாரணமாக சுவிட்சர்லாந்துக்குப் போகுமுன், ஒதுக்கி வைத்திருப்பார்; அவர் தமது நிதியொதுக்கீட்டை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார். அவரைக்கான விருந்தினர்கள் வருவார்கள்; உதாரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரைக்கான வருவார்கள்.

விருந்தோம்புபவர் அவரே; அவரே அவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்; அவை யாவும் அவருடைய நிதியொதுக்கீட்டுக்கு உட்பட்டே இருக்கும். அவரோடு எப்போதும் இருந்த ரூஹிய்யா ஃகானும், இவ்விதமான மேற்படி செலவுகளால் அவருடைய நிதியொதுக்கீடு குறைந்துகொண்டே போயிற்றாம். ஆகவே, அவர் குறைவாகவே உண்பார், உடன் ஃகானும் அவர்களும் அதில் பங்குகொள்வார். இத்தகையவையே ஷோகி எஃபெண்டி அவர்களின் செயல்முறைக்கொள்கைகள், அவ்வாறுதான் அவர் உலக மையத்தையும் நடத்தி வந்தார்.

தேசிய ஆன்மீக சபைகளுடனான அவருடைய உறவுகளில், இவை போன்றுதான் அவர் கூறக்கூடியவைகளும் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய ஆன்மீக சபை ஒன்றுக்கு அவருடைய சார்பாக அவருடைய செயலாளர் எழுதிய கடிதத்தில்:

அவர்… உங்களுடைய ஆன்மீக சபை தனது செலவீடுகளை… கவனமாக கண்கானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்… விவேகமான சிக்கனத்தின் வாயிலாக மட்டும், தேவையற்றவற்றை நீக்குவதன் வாயிலாகவும், தேவையானவற்றின்பால் கவனம் செலுத்துவதன் மூலமும், மிகவும் விழிப்புடனான கண்காணிப்பின் வாயிலாகவுமே உலக மையத்தில் நினைவாலயத்தையும், அனைத்துலக பழம்பொருள் காப்பகத்தையும் கட்டி, புனித நிலங்களைச் சுற்றிலும் மிகவும் படாடோபமான தோட்டங்களோ எனத் தோன்றும், ஆனால் உண்மையில் தீவிரமும், சிக்கனமும் மிகுந்த திட்டமிடுதலின் பயனான பூங்காக்களை உருவாக்கவும் பாதுகாவலரினால் முடிந்தது. இது பஹாய்களுக்கு மிகவும் அனுகூலமான ஓர் உதாரணமாக இருக்கும்… எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமும், நுண்ணறிவுமிக்க கண்கானிப்பும் நிறைந்த நடவடிக்கைகளை அவர்கள் காண்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு… அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
(மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க தேசிய ஆன்மீக சபைக்கு, 8 ஆகஸ்ட் 1957)

இவ்விதமான ஆலோசனைகளையே அவர் தேசிய ஆன்மீக சபைகளுக்கு வழங்கிவந்தார்.
உலக மயைத்திலுள்ள நாம் உலகம் உழுவதிலுமுள்ள மற்ற பஹாய்களோடு தொடர்புகொண்டுள்ளோம். நாம் இங்கு தன்னந்தனியாக இல்லை. 100 – 500 புனிதயாத்ரீகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். மூன்று நாள் யாத்ரீகர்கள் வருடம் முழுவதும் வந்து போகின்றார்கள். அவர்கள் நம்மைக் காண்கின்றார்கள். அவர்களை நாம் நமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம். அவர்களுக்கு நாம் விருந்தோம்பல் வழங்குகின்றோம். அவர்களுடைய மனதில் நாம் என்னவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றோம், அவர்கள் அந்த எண்ணங்களைத்தான் தங்களோடு தங்களுடைய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவர்கள் இங்கிருக்கும் போது தங்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்: வீடுகள் எப்படியிருந்தன, உணவு எப்படியிருந்தது, எத்தனை வகையான உணவு பரிமாறப்பட்டது போன்றவை. நாம் சிக்கனமாக இருந்தோமானால், நாம் சிக்கனமாக இருப்பது தெரியவரும், பஹாய் உலகமும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும். நமது நடத்தை, போக்கு ஆகியவற்றின் மூலமாக பல்வேறு சமூகங்களின்பால் நாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சிறப்பான நிலையை நாம் இங்கு பெற்றிருக்கின்றோம்.

உலக மையத்தை ஷோகி எஃபெண்டி நிர்வகித்த பாங்கையும், அவருடைய வாழ்க்கை முறையையும், அவர் கடைப்பிடித்து வந்த மூன்று பரந்த செயல்முறைக் கொள்கைகளின் வாயிலாக வரையறுக்கலாம். ஒன்று, உலக மையத்தின் எல்லா வரவுசெலவுகளையும் மிகுந்த கவனத்துடன் கண்கானித்தது. அடுத்தது நினைவாலயங்கள் குறித்தது.

அவர், சமயத்தின் கௌரவத்தின் காரணமாக நினைவாலயங்களை பெரும் வள்ளன்மையுடனும், பெருந்தன்மையுடனும், தாரளத்துடனும் நிர்வகித்து வந்தார். மூன்றாவது, அவருடைய தனிப்ப்டட வாழ்க்கை, அவரோடு அனுக்கமாக இருந்தோர் ஆகிவற்றைப் பொருத்த வரையில், அவர் கண்டிப்பு, கடுமை ஆகியவை கூடிய சிக்கனத்தையே கடைப்பிடித்தார். அவ்விஷயத்தில் அவர் செலவீடுகள் குறித்து விழிப்போடும், எல்லா சூழ்நிலைகளிலும் சிக்கனத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

மீண்டும், ரூஹிய்யா ஃகானும் அம்மையார் கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. பாதுகாவலர் அவர்கள் நினைவாலயங்களுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக லண்டன் நகரின் கடைகளுக்குச் செல்லும் போது, தாம் விரும்பும், தமக்குத் தேவைப்படும் பொருட்களைக் காண்பார், அவை அதிக விலை மிக்கதாக இருக்கும். அஃது அவருக்குத் தேவைப்பட்டதென்றாலும் அவர் அதை வாங்க மாட்டார். அவர் கடைக்காரரிடம் தாம் விதிக்கும் விலையைக் கூறுவார்; அஃது ஏற்கப்ட்டதென்றால் ஏற்கப்பட்டது, இல்லையெனில் அஃது ஏற்கப்படவில்லை. அவருக்கென ஒரு கோட்பாடு இருந்தது, அவர் அக்கோட்ப்பாட்டைப் பற்றியே செயல்பட்டு வந்தார்.

தெய்வச் சமயத் திருக்கரம் திரு பல்யுஸி அவர்கள், அப்துல் பஹா குறித்த ஒரு கதையைச் சொன்னார். திரு பல்யுஸியின் தந்தை மாஸ்டர் அவர்களோடும், மற்றும் சில பஹாய்களோடும் லண்டனில் இருந்ததாகவும், அவ்வேளை அவர் ஹேரட்ஸ் எனப்படும் டிபார்ட்மண்ட் ஸ்டோருக்குச் சென்றதாகவும் கூறினார். இந்த ஹேரட்ஸ் என்பது மிகவும் பெரிய விற்பனைக்களமாகும்; பல மாடிகள் கொண்ட இதில் தேவைப்படும் எந்தப் பொருளையும் நாம் வாங்கலாம். மாஸ்டர் அங்கு எதையோ வாங்கச் சென்றார். விலையை விசாரித்தார், அது மிகவும் அதிகமாக இருந்தது.

அதற்கு அவர், “நான் இவ்வளவிற்குதான் அதை வாங்க இயலும்,” என தமது விலையைக் குறிப்பிட்டார். ஆனால், ஹேரட்ஸ் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் பேரமெல்லாம் பேச முடியாது. ஆனால், அப்து’ல்-பஹா தாமே விலையை நிர்ணயித்தார். விற்பணைப் பணிப்பெண், “மன்னிக்கவும், நான் அவ்வாறு உங்களுக்கு விற்க இயலாது,” என்றாள். ஆனால், மாஸ்டர் அவர்களின் இயல் தோற்றத்தையும், போக்கையும் கண்ட அப்பெண், அவர் அப்பால் திரும்பியவுடன், நிர்வாகியிடம் ஓடிச்சென்று நடந்தவற்றைக் கூறினாள். நிர்வாகியும் உடனடியாக வெளியே வந்து, வெளியேறிக்கொண்டிருந்த மாஸ்டர் அவர்களைப் பார்த்து, “தயவு செய்து திரும்பி வாருங்கள்; நீங்கள் கேட்ட விலைக்கே நாங்கள் அப்பொருளை விற்கின்றோம்,” என்றார். ஆக, செலவு செய்வதில் நமது சமயத்தின் தலைவர்கள் அனைவருமே பெரும் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் காண்கின்றோம்.

இப்போது, சில இறுதி வார்த்தைகள். ஆடம்பரச் செலவு என்பது நல்லதன்றென்பது நமக்குத் தெரியும், இருந்தும் நம்மையறியாமலேயே நாம் சில வேளைகளில் இவ்விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர்களாக தேவையற்ற செலவுகளை மேற்கொள்கின்றோம். இஃது ஒரு வேளை மனித இயற்கையோ என்னவோ. இதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயன்றுள்ளேன். பெஞ்சமின் ஃபிராங்லின் என்பவரின் பிரபலமான கூற்றாகிய, “நேரம் பணத்திற்குச் சமம்,” என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். “சரி, நான் இப்போது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என எனக்கு நானே கூறிக்கொண்டேன். அப்போது நேரத்தைப் பற்றி பஹாவுல்லா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன:
“மூச்சுக் காற்று ஒன்றைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மறைந்தோடிக்கொண்டிருக்கின்றன… இறைவனை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்… சோம்பலிலும், சுறுசுறுப்பின்மையிலும் உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.”
(கித்தாப்-இ-அக்டாஸ், பாரா. 40 #33)

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நமக்கு ஆலோசனை வழங்கும் நமது சமய ஸ்தாபகரின் குரல் இது. சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலே ஆகும். நானும் அவருடைய நம்பிக்கையாளர்களில் ஒருவர். பஹாவுல்லா, நான் சோம்பலாக இருக்கக்கூடாது எனவும், நேரத்தை வீனாக்கக்கூடாது எனவும் கூறுகின்றார், ஆனால், நான் என்னுடைய 24 மணி நேரத்தைக் ஆய்வு செய்யும் போது, “ஆஹா!” நிமிடங்கள் அல்ல, மாறாக பல மணி நேரங்களைக் கூட ஒன்றும் செய்யாமல் நான் வீணாக்கியுள்ளேன்!

“பெரும் கலைப்பினாலோ, சோம்பலினாலோ நான் ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றேன்.” எனக்கு நானே கூறிக்கொள்ளும் சமாதானம் இது. நாம் பெஞ்சமின் ஃபிராங்க்லின் வார்த்தைகளோடு ஒத்துப்போனால், “நேரம் பணத்திற்குச் சமம்,” என நினைத்தால், நாம் நேரத்தை எவ்வாறு செலவளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நேரம் பணத்திற்குச் சமமென்றால் வீனான நேரங்களை நாம் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சுலபத்தில் சோம்பலில் ஆழ்ந்துவிடுகின்றோம். நாம் செய்வன குறித்து நாம் உணர்வற்று இருக்கின்றோம். துரதிர்ஷ்ட வசமாக இதுவே மனித இயல்பாக உள்ளது.

மற்ற நேரங்களில், பஹாய் நிதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் செயலைச் சாறாத ஒன்றை உலக மைய ஊழியர் ஒருவர் செய்கின்றார் என வைத்துக்கொள்வோம்; பிறகு அதே போன்ற ஒரு செயலை மற்ற ஓர் ஊழியரும் செய்கின்றார். சாதாரணமாக, அக்காரியத்தை இரு நபர்கள் செய்ததனால், அதைப் பொதுவான ஒரு கருத்தாக்கி, பலர் அவ்விதமாக செயல்படுகின்ற காரணத்தினால், எல்லாரும் அவ்விதமாகவே செயல்படுகின்றனர் என நாம் கற்பனை செய்யக்கூடும்.

அதனால்: “உலக மையத்தில் இதுவே நடைமுறை போலிருக்கின்றது,” என நாம் முடிவு செய்யலாம். “நாம் ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போன்றுதான் நாமும் செயல்படவேண்டும். உலக மையத்தில் இதுதான் முறை,” ஆனால், அதே வேளை அவ்வாறு நடந்துகொள்ளாத ஒருவரோ, இருவரோ, அல்லது ஐந்து அல்லது பத்து தனிநபர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் கண்டுணரக்கூடாதா? அஃது அவர்களுடைய பிரச்சினை. ஒரு மனிதனின் நம்பிக்கை அம்மனிதனாலன்றி வேறு யாராலும் முடிவு செய்யப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்

அதே போன்று, ஒரு மனிதனின் செயல்கள், மற்றவர்களின் செயல்கள் அல்லது துர்செயல்களின் அடிப்படையில் நிலைப்படுத்தப்படக்கூடாது. இறைவனின் முன்னிலையில் நானே பொறுப்பாளியாவேன். மற்றவர்கள் செய்யக்கூடியன அல்லது செய்யாமலிருப்பனவற்றுக்கு நான் பொறுப்பாளியல்ல. எனக்கு நானே பொறுப்பாளியாவேன்; நான்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்; சரியானவையோ, தவறானவையோ, மற்றவர்கள் செய்யும் காரியங்கள், தெளிவாகவே, என் பிரச்சனைகள் அல்ல! நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம், ஆனால், அவர்களை நான் பின்பற்றக்கூடாது.

பாரசீகத்தில் “ஹம் சிஸ்மி”, என பாரசீகர்களால் அழைக்கப்படும் ஒரு மனப்போக்கு உள்ளது. அது, ஏறத்தாழ போட்டி மனப்பான்மையைக் குறிக்கும், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மேலும் நன்கு செய்யவேண்டும் எனும் மனப்போக்கையும் அது குறிக்கும். இம்மனப்பான்மையை பின்வருமாறு விளக்கப்படுத்தலாம்: “அந்த மனிதர் அதை செய்கின்றார், நானும் அதையே ஏன் செய்யக்கூடாது? நான் அவரைவிட ஒன்றும் குறைந்தவனல்லவே.” அல்லது, “அவள் அதைச் செய்கின்றாள், நானும் அதையே செய்யவேண்டும்.”

அஃது ஒரு விதமான பொறாமையாகும், அல்லது போட்டியாகும். இது ஆரோக்கியமானதல்ல, மிக மிக ஆரோக்கியமற்றதாகும்; இது துராசை; இத்தகைய ஆசைகளை பஹாவுல்லா கண்டித்துள்ளார். உங்களுக்குப் பழக்கமானவையான வார்த்தைகளை உங்களுக்கு இப்போது படித்துக்காண்பிக்க விரும்புகின்றேன்: “எல்லாப் பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக”. (பாரசீக மொழி தெரிந்த அன்பர்களுக்கு: பஹாவுல்லா இங்கு உபயோகிக்கும் வார்த்தை “ஃகணா’அத்”, எனனும் வார்த்தையாகும்; பாதுகாவலர் மறைமொழி நூலில் அதை “மனநிறைவு” என மொழிபெயர்த்துள்ளார்). நான் மீண்டு அதை கூறுகின்றேன்:
“எல்லா பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக, ஏனெனில் பேரிச்சைகொண்டோர் என்றென்றும் இல்லாதவர்களாகவும், மனநிறைவெய்தியோர் நேசிக்கவும், போற்றப்பட்டும் உள்ளனர்.” (பாரசீக மறைமொழிகள், #50)

இறுதியாக, ஒன்றே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இங்கு நிற்கும் மேடையை ஓர் உதாரணமாகக் கொள்ள விரும்புகின்றேன். இதன் ஒரு மூலை படாடோபமெனவும், மறு மூலை கஞ்சத்தனம் எனவும் எடுத்துக்கொள்வோம். அந்த இரண்டு குணங்களும் ப‎ஹாவுல்லாவால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நடுவில் ஒன்று உள்ளது; அதுதான் சிக்கனம். ஆக, இதுவே நாம் இருக்க வேண்டிய நிலையாகும். ஆனால், எத்தனை முறை ப‎ஹாய்கள் நடுப்பாகத்திலிருந்து ஓரங்களான படாடோப நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மூலை புயலைப் போன்றது, அதன் மறு மூலை பஞ்ச நிலையைப் போன்றது! நடுவில் விழுவதே தூரல். அவர் நாம்னைவரும் நடுவில் இருக்க வேண்டுமென கூறுகின்றார்; கூடக்குறைய ஐந்து விழுக்காடு அங்கும் இங்கும் இருக்கலாம். பாதுகாவலர் ரூஹிய்யா ஃகானும் அவர்களுக்கு கூறியது போல, “பஹாய் சமயம் நடுநிலை சமயமாகும்”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: