நெறிமுறைகள் என்றால் என்ன?
நெறிமுறைகள் என்பன ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பின்பற்றப்படும் நன்நடத்தை முறைகளாகும். உதாரணமாக நீதி, நியாயம், நேர்மை ஆகியனவற்றை கூறலாம். நெறிமுறைகள் பொதுவாகவே வாழ்வில் ஒருவருடைய நன்நடத்தைக்குத் தோற்றுவாய்களாக விளங்கக்கூடியவைதான். ஆனாலும் ஒருவர் நல்ல நடத்தையுள்ளவர் என்பதால் அவர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்கிறார் என்று கூறிட முடியாது. காரணம், அவர் பழக்க தோஷத்தினால் அவ்வாறு வாழ்ந்துவரலாம். உதாரணமாக, சிறு வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தை ஒரு குழந்தைக்குக் கற்றுக்கொடுத்தும் அக்குழந்தை அதைக் கடைப்பிடித்தும் வருகிறது என வைத்துக்கொள்வோம். அக்குழந்தை அதை தான் செய்யக்கூடிய சில செயல்களின் மூலம் வெளிப்படுத்தும். ஆனால் தான் புரியும் அச்செயலின் மதிப்பு அக்குழந்தைக்குத் தெரியுமா? தாயின் கட்டுப்பாடே இங்கு அக்குழந்தையின் நடத்தையை வரையறுக்கின்றது. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் யாதெனில் நல்ல நடத்தையாகப்பட்டது கருவி அளவில் மட்டுமே செயல்படுகிறது. எக்கருவியாயினும் அதைத் தூய்மையான குறிக்கோளுடனோ தூய்மையற்ற குறிக்கோளுடனோ பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் பெரிதும் உதவி அவரிடம் அன்பு காட்டுகிறார் என வைத்துக்கொள்வோம். இது பார்ப்பதற்கு மனதுக்கு இதமாக இருக்கின்றது. ஆனால் அந்த முன்சொன்ன மனிதர் பெரும் பணக்காரர் என்றும் அவரால் அந்த மற்ற மனிதருக்கு நிறைய காரியங்கள் ஆக வேண்டியுள்ளது என்பதும் புரிய வந்தால் அது மனதுக்கு சந்தோஷம் அளிப்பதாக இருக்காது.
அதாவது நல்ல நடத்தையென்பது நடத்தையை மட்டும் சார்ந்த ஒன்றல்ல ஆனால் அது நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும் அல்லது அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து மற்றொரு பிரச்சினை யாதெனில், நெறிமுறைகளைப் பற்றி அறிந்திருந்தால் மட்டும் போதாது, மனித வாழ்வில் அவற்றின் பங்கு என்ன என்பதையும் நாம் புரிந்து வைத்திருப்பது நலம். நாம் எந்தக் குறிக்கோளை அடைவதற்காக நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
வெற்வேறு சமூகங்கள் வெவ்வேறுவிதமான நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்கின்றன. ஒரு சமூகத்திற்குச் சரியெனப்பட்டது மற்றொரு சமூகத்திற்கு ஏற்புடையதாகாது. கடந்த காலங்களில் சந்திக்காத ஒரு புதிய சவாலாக ஓரின சமூகத்தில் வாழ்ந்திருந்த மனிதர்கள் அனைவரும் இன்று பன்முகமான சமூகங்களில் வசிக்கின்றோம். ஒரே இனமாக ஒரேவிதமான நெறிமுறைகளுக்கிணங்க வாழ்ந்த சமூகங்கள் ஒன்றுகலந்து இன்று ஒருமுகப்படுத்தப்படவேண்டிய நெறிமுறைகளுக்கிணங்க வாழ வேண்டியுள்ளது. இதற்கு உதாரணமாக, அக்கம்பக்கத்து நாடுகளென சில நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளுக்கெல்லாம் இடையில் உள்ள ஏதோ ஓர் ஊருக்கு இந்த எல்லா நாடுகளையும் சார்ந்தவர்கள் போகவேண்டும். அவரவர் நாடுகளின் வரைபடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊருக்குச் செல்லலாம். ஆனால் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிலிருந்து அவரவர் பூர்வீக நாட்டு வரைபடங்களை வைத்துக்கொண்டு தாங்கள் எல்லாரும் பொதுவாக போக வேண்டிய ஊருக்குச் செல்ல முடியாது. இது போன்றுதான் இன்று உலகமும் இருக்கின்றது. எல்லாம் கலந்து ஒரே நாடாக கட்சியளிக்கும் இவ்வுலகில் எனது உனதென்று நாம் நெறிமுறைகளை வைத்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா மக்களையும் இனங்களையும் உள்ளடக்கக்கூடிய நெறிகளை நாம் கடைபிடித்தாக வேண்டும். எல்லோரையும் சமமாக மதிப்பதும் ஒரு நன்னடத்தையே. அப்படி சமமாக மதிக்கவேண்டுமானால் சமமான நடத்தை முறைகள் வேண்டும்.
இன்றைய உலகில் நல்ல மனிதர்கள் பலர் இருக்கின்றனர்தாம். ஆனால், அவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள் என நாம் உறுதியாக கூறமுடியாது. எவ்வளவுதான் நல்ல மனிதராயினும் தவறான ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு தான் செல்லவேண்டிய இடத்திற்கு அவர் செல்ல முடியாது. வாழ்க்கைக்கு நோக்கமும் வேண்டும் அதைச் செயல்படுத்தக்கூடியவையான நன்நெறிமுறைகளும் வேண்டும்.
நெறிமுறைகளுக்கான ஆதாரம் யாது
நன்கு ஆய்வு செய்தோமானால் நெறிமுறைகள் என்பவற்றுக்குப் பொதுவாக சமயங்களே தோற்றுவாய்களாக இருந்துவந்துள்ளன இருந்து கொண்டும் இருக்கின்றன என்பது புரியவரும். சுறுக்கமாக சொல்லப்போனால் சமயபோதனைகளுக்கிணங்க வாழ்வின் மெய்ப்பயனை அடைவதற்கான கருவிகளே நெறிமுறைகளாகும். இது சர்ச்சைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாமல் ஆய்வுக்குரிய விஷயமாகக்கொள்ளப்படவேண்டும்.
தனிநபர் வாழ்க்கையில் நெறிமுறைகளின் மதிப்பென்ன?
நாம் ஏற்கணவே கூறியது போல் நெறிமுறைகளின் மதிப்பு பிறவிப் பயனை அடைவதிலேயே இருக்கின்றது. நெறிமுறைகள் இல்லாமல் வாழ்வின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. அப்படியானால் வாழ்வின் நோக்கம் என்ன? பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா ஒரு பிரார்த்தனையில் பின்வருமாறு கூறுகின்றார்:
“உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி…”
அதாவது, இறைவனை அறிந்து அவரை வழிபடுவதே வாழ்வின் பிரதான நோக்கம். இந்த நோக்கத்துக்கு உகந்த கருவிகளாக நெறிமுறைகள் விளங்குகின்றன. இங்கு இறைவனை அறிந்துகொள்வதென்பது மனிதகுலத்திற்கான இறைவனின் நோக்கத்தை அறிந்துகொள்வதும், இறைவனை வழிபடுவதென்பது இறைவன் மனிதனுக்காக கொண்டுள்ள நோக்கத்தை அறிந்து அதற்கிணங்க வாழ்வதுமேயாகும்.
அதே வேளை சமூக வாழ்வும் ஒழுங்கில்லாத நிலையில் இருக்கும் போது அது நல்லவர்களோடு சேர்த்து ஒழுக்கக்கேடானவர்களையும் காலப்போக்கில் பாதிக்கின்றது. இதற்கு உதாரணமான சாலைப்போக்குவரத்தை குறிப்பிடலாம். இப்படித்தான் வாகனமோட்டுவேன் என ஒருவர் எப்படி வேண்டுமானால் தன் வாகனத்தை ஓட்டலாம். ஆனால் அதனால் அவர் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை என்பது நிச்சயம்.
நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வதற்கான ஊக்கம் யாது?
மனித வாழ்க்கையென்பது இவ்வுலக வாய்ப்புக்களும் மாற்றங்களும் மட்டும் இல்லையென்றும் இவ்வுலகம் தவிர்த்து இறைவனின் வேறு உலகங்களும் உண்டெனவும் அங்கு மனிதன் தொடர்ந்து வாழப்போகிறான் என்பதையும் உணர்வது மிகவும் முக்கியம். அத்தகைய வாழ்வு இவ்வுலக வாழ்வில் நாம் கடைபிடிக்கப்போகும் நெறிமுறைகளின் நல்விளைவுகளுக்கு உட்பட்டதாகும். அதாவது இவ்வுலகில் வாழ்வதற்கு நமக்கு உடலும் அதைச் சேர்ந்த அவயங்களும் மிகவும் அவசியம். கைகால்கள் இல்லையெனில் வாழ்க்கை பெரிதும் துன்பமாகிவிடும். நிறைய காரியங்களை நம்மால் செய்ய இயலாது போகும். அதே போல் அடுத்த உலகங்களில் நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு இவ்வுலகிற்குத் தேவைப்படும் கைகால்கள் போன்றுள்ள வேறு பல ஆற்றல்கள் அவசியமாகின்றன. அச்சக்திகள் இல்லாமல் அவ்வுல வாழ்க்கை நரகமாகிவிடும். நித்தியமான அவ்வுலக வாழ்வு அநித்தியமான இவ்வுலகில் நாம் கடைபிடிக்கப்போகும் நெறிமுறைகளையே பெரிதும் நம்பியுள்ளது. ஆக இவ்விஷயமே நம்மை ஓர் ஒழுங்குடனான வாழ்க்கை வாழ்வதற்குத் தூண்டுகோளாக இருக்கவேண்டும்.
நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வதின் சவால்கள்
நெறிமுறைகளின் முக்கியத்துவம் நமக்கு இப்போது தெரிந்துள்ளது. அவற்றை வாழ்க்கையில் கடைபிடிப்பதன் அவசியமும் தெரிந்துள்ளது. ஆக, நாம் அதற்கிணங்க வாழ வேண்டும். அப்படி வாயால் கூறுவது மிகவும் சுலபம். ஆனால், அதைக் கடைப்பிடிப்பதினும் சிரமமான காரியம் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை. இதை நாம் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இங்கு மற்றொரு சிந்தனைக்குகந்த விஷயமென்னவெனில், நெறிமுறைகளுக்குட்பட்ட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சவால்கள் மனித உறவு சம்பந்தமான சவால்களே. அதாவது மனிதர்களுக்கிடையிலான தொடர்பின் வசமாக ஏற்படும் சவால்கள். இது குடும்பம், சமூகம், தொழில், இளைஞர் சம்பந்தமான விஷயங்கள் போன்ற ரீதியில் ஏற்படக்கூடும்.
குடும்பம்
குடும்ப ரீதியில் நெறிமுறை சம்பந்தமான சவால்கள் யாவை? இது கனவன் மனைவிக்கிடையில் உருவாகலாம், அல்லது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையில் ஏற்படலாம், அல்லது சகோதர சகோதரிகளுக்கிடையிலும் ஏற்படலாம். இங்கு உருவாகும் சவால்களே சமூகத்தையும் தாக்குகின்றன, ஏனெனில் சமூகமென்பது குடும்பங்களின் சேர்க்கையினால் உருவாவதுதானே.
கனவன் – தான் மனைவியை விட ஒருபடி உயர்ந்தவன் எனும் பண்டைய போக்கைக் கைவிடமுடியாமல் இருப்பது. ஆணும் பெண்ணும் சமம் எனும் கோட்பாட்டை கடைப்பிடிக்க முடியாமல் பெண்னை அடக்கியாண்டே பழக்கப்பட்டுப்போன ஆண்களுக்கு ஏற்படும் சவால்.
குழந்தைகள் தங்களுடைய பிரத்தியேக சொத்துக்கள் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர்கள் எதிர்நோக்கும சவால். குழந்தைகள் இறைவன் தங்களுக்குக் கொடுத்த வரம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாங்கள் காப்பாளர்கள் மட்டுமே எனும் எண்ணமின்றி அவர்களை தங்கள் இஷ்டத்திற்கு வளர்த்து ஆளாக்குவது. அவர்கள் வயது வந்த பிறகும் அவர்களுக்கென தனி வாழ்க்கை ஒன்று உள்ளதெனும் எண்ணம் இல்லாமலிருப்பது.
பெற்றோர் குழுந்தைகளுக்கு உதாரணமாக நடக்காமல் இருத்தல். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்படு ஒன்று ஆனால் தாங்கள் கடைபிடிப்பது வேறொன்று. “அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எனும் பழமொழிக்கிணங்க வாழ்வது.
ஆக, சொந்தக் குடும்பமாக இருந்தபோதிலும் அதுவும் சவால்கள் நிறைந்ததே. கனவன் அல்லது தகப்பன் மட்டுமே அக்குடும்பத்துக்காக பாடுபடும் போது தான் சம்பாதிக்கும் பணம் அக்குடும்பத்தின் பொது உரிமை எனும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒரு சவாலே.
சமூகம்
சமூக ரீதியிலான சவால்கள் மனித உறவுக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்படுகின்றன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் மொழிக்கிணங்க எல்லாரையும் சகோதரர்களாக பாவிக்கின்றோமா? சமூகம் நமது தன்னலங்களை பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய ஓர் அரங்கமாக காணப்படுகிறதா? அதிலிருந்து நாம் என்ன ஆதாயத்தைப் பெறப்போகிறோம் எனும் எண்ணம் நம்மில் இருக்கின்றதா? இவற்றையெல்லாம் ஆழச் சிந்திக்க வேண்டும்.
தொழில்
வியாபார ரீதியில் நிறைய பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நெறிமுறையா பணமா எனும் சவாலைச் சந்திப்பது. தொழில் ரீதியில் தான் மற்றவர்களைவிட எப்போது உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் எனும் அவா. உத்தியோக ரீதியில் வேலை உயர்வு அல்லது உழைக்காமலேயே சம்பளம் வாங்குவது போன்ற சவால்கள்.
இளைஞர்
இளைஞர் பிரச்சினைகள் எனப் பார்க்கும் போது இது பெரும்பாலும் சினேகித தாக்கத்தினால் வரும். உதாரணமாக மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக சில கெட்ட பழக்கங்களை பின்பற்றுவது போன்றவை இதில் அடங்கும். இளமை பருவம் மிகவும் ஆபத்தான பருவமாகும். நல்லது கெட்டது என எதையும் சீர்தூக்கிப் பார்க்குமளவிற்கு நிதானம் இல்லாத மிகவும் விருவிருப்பான பருவம். உடலில் ஏற்படும் பௌதீக மாற்றங்கள் இங்கு மனதையும் பாதிக்கின்றது. அதைப் புரிந்து நெறிமுறைகளுக்கிணங்க வாழ்வது ஒரு சவால்.
இச்சவால்களை எப்படி வெற்றிகொள்வது
பொதுவாக எல்லாருமே நெறிமுறைகள் குறித்து ஓரளவிற்கு அறிந்து வைத்திருப்பார்கள். தெரியாது என யாருமே கூற முடியாது. அப்படி தெரியாவிட்டாலும் பாதகமில்லை, வாழ்க்கையின் நோக்கம் அறிந்து அதற்குகந்த நன்னடத்தையுடன் வாழ வேண்டும் எனும் ஆழமான அவா மனதில் பதிந்திருக்கவேண்டும். இது முதல் படியாகும். அதாவது மனத் தூய்மையோடு ஒரு காரியத்தில் இறங்குவது.
அடுத்து, அரைக்க அரைக்க அம்மியும் நகரும் என்பார்கள். அதே போல் நமது பழக்க வழக்கங்களையும் சிறுகச் சிறுகவே மாற்றிக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற்ற முடியாது. பழக்கங்கள் தாமாக மாறாது. அதற்கு முயற்சியும் தியாகம் செய்யும் குணமும் தேவை. இதில் விடாப்பிடியாக இருந்தோமானால் காலப்போக்கில் நிச்சயமாக வெற்றி காணலாம். ஆர்த்தர் பேரரசன் 16 முறை போர் தொடுத்து போரில் வென்றானாம். அதுவும் ஓர் எட்டுக்கால் பூச்சியின் முயற்சியைக் கண்டு. எதிலுமே நாம் கற்கும் மனப்பான்மையை பின்பற்ற வேண்டும்.