உலக நீதி மன்றம் 19 ஏப்ரல் 2001
அறிமுகம்:
உலக அமைதி பற்றிய பஹாய் எழுத்துக்கள், ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக மலர்ச்சி அடைகின்ற இரண்டு வெவ்வேறு வளர்செயல்பாடுகள் உச்சநிலை அடையும்போது அந்த அதிபெரிய அமைதி ஏற்படும் என எதிர்ப்பாக்கின்றன. இந்த வளர்செயல்பாடுகளில் ஒன்று, நிர்வாக முறையின் பரிணாம வளர்ச்சியுடனும், அது பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையில் மலர்ச்சிப்பெறும் வேளையில் பஹாய் சமூகத்தின் வளர்ச்சியோடும், மேம்பாட்டோடும் தொடர்புற்றுள்ளது. அடுத்த வளர்செயல்பாடு என்பது, அதாவது இந்த நினைவுக் குறிப்பின் தலைப்பாகப் பட்டது. இன்னும் குறிப்பாக தேசங்களின் ஒருமைப்பாடு மற்றும் சிற்றமைதியினை நிறுவுதலுடன் தொடர்புற்றுள்ளது.
தேசங்களின் ஐக்கியம் மற்றும் சிற்றமைதி:
பஹாவுல்லா “பூமியின் எல்லா அரசர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் சிற்றமைதியினை பற்றிக்கொள்ளவேண்டும் என அழைப்பதாகவும், மேற்படி சிற்றமைதி அவர்தம் திருவெளிப்பாட்டின் ஆற்றலைப் பற்றி முழுமையான உணர்வுபெற்று அவர்தம் சமயத்தின் போதனைகளை உறுதியோடு பின்பற்றுகின்றவர்கள் மட்டுமே பிரகடணம் செய்து இறுதியில் நிறுவக்கூடிய அந்த அதிபெரிய அமைதியைக் காட்டிலும் வேறுபட்டதாகும்…” என ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகிறார். பஹாவுல்லாவின் வார்த்தைகளில்:
“இப்போது நீங்கள் அதிபெரிய அமைதியை நிராகரித்துவிட்டமையால், நீங்கள் இந்த சிற்றமைதியினைப் பற்றிக்கொள்வீராக, அதனால் நீங்கள் ஒருகால் உங்கள் சொந்தச் சூழ்நிலையையும், உங்களைச் சார்ந்தவர்களின் சூழ்நிலையையும் ஓரளவுக்கு மேன்மையுறச் செய்யக்கூடும்.
பூமியின் அரசர்களே! நீங்கள் உங்களுக்குள் இணக்கம் காண்பீர்களாக, அதனால், உங்களுடைய எல்லைகளையும் இராஜ்யங்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான அளவைத் தவிர கூடுதல் ஆயுதங்கள் உங்களுக்குத் தேவைப்படாது போகக்கூடும். அனைத்தும் அறிந்தவரும், விசுவாசமானவருமானவரின் ஆலோசனையை புறக்கணிக்காதவாறு கவனமாக இருப்பீராக.
உலகின் அரசர்களே! நீங்கள் புரிந்துகொள்பவர்களாயின் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக, காரணம், அதன்வழியாக இணக்கமின்மை எனும் புயல் உங்கள் மத்தியில் அடக்கப்படக்கூடும், உங்கள் மக்களும் ஓய்வைக் காணக்கூடும். உங்களில் யாராவது இன்னொருவர் மீது ஆயுதம் ஏந்தினால் நீங்கள் யாவரும் அவருக்கு எதிராக எழுவீராக, ஏனெனில் இது தெளிவான நியதியன்றி வேறெதுவுமில்லை.
இன்னொரு பகுதியில், பஹாவுல்லா சிற்றமைதியை ஒற்றுமைக்கும் இணக்கத்திற்குமான வழிமுறைகள் வகுப்பதற்கான உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும் ஓர் மாநாட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.
யாம் இறைவனிடம் — அவர்தம் மகிமை மேன்மையுறட்டுமாக — வேண்டி அவர் கிருபயையுடன் செழுமை மற்றும் ஆற்றலின் வெளிப்பாடுகள் மற்றும் அரசாட்சி மற்றும் மகிமையின் பகலூற்றுகளாகிய உலக அரசர்கள் — கடவுள் அவர்தம் பலப்படுத்தும் கிருபையினால் அவர்கட்கு உதவுவாராக — சிற்றமைதியை நிறுவுவதில் உதவவேண்டும் எனும் எதிர்பார்ப்பை போற்றி வளர்க்கின்றோம். இது, உண்மையில், தேசங்களின் சாந்தத்தை உறுதிபடுத்துவதற்கான மிகப் பெரிய வழிமுறையாகும். மனுக்குலமுழுமைக்கும் பாதுகாப்பான தலையாய கருவியாக உள்ள இந்த அமைதியினை ஒற்றுமையுடன் பற்றிக்கொள்வது உலக அரசர்களின் — கடவுள் அவர்களுக்கு உதவுவாராக — கடமையாகும். அவர்கள் மனிதனின் நலவாழ்வுக்கு உகந்தது எதுவோ அதனை சாதிப்பதற்காக எழுவார்கள் என்பது எங்களின் எதிர்பாபார்ப்பாபகும். அனைத்தையும் உள்ளடக்குகின்ற ஒரு கூட்டத்தைக் கூட்டுவது அவர்களின் கடமையாகும், அதில் அவர்களே அல்லது அவர்களின் அமைச்சர்கள் கலந்துகொள்வர், மற்றும் மனிதர்களின் மத்தியில் ஒற்றுமையையும் இணக்கத்தையும் நிறவுவதற்குத் தேவைப்படுகின்ற எல்லா வழிமுறைகளையும் அவர்கள் அமுலாக்க வேண்டும். அவர்கள் போர் ஆயுதங்களை அப்பால் வைத்துவிட்டு உலக மறு சீரமைப்பு எனும் கருவிகளின்பால் திரும்ப வேண்டும். ஓர் அரசர் இன்னொரு அரசருக்கு எதிராக எழுந்தார் என்றால், அவரைத் தடுப்பதற்காக மற்ற அரசர்கள் யாவரும் எழவேண்டும். அப்பொழுது அவரவரின் நாடுகளின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தேவையானதற்கு மேல் ஆயுதங்களும் போர்ப்படைகளும் தேவைப்படாது. அவர்கள் இநத ஈடிணையற்ற ஆசியை எய்துவார்களானால், ஒவ்வொரு நாட்டின் மக்களும் சாந்தத்தோடும் மனநிறைவோடும் தங்களின் சொந்த தொழில்களை மேற்கொள்வர், பெரும்பாலான மனிதர்களின் புலம்பல்களும் ஓலங்களும் நிறுத்தப்படும்.
நீடிக்கவல்ல உலக அமைதிக்குத் தேவைப்படுகின்ற வழிமுறைகளைப் பற்றி கலந்துபேசுவதற்கான கூட்டத்திற்கான கருப்பொருள் பஹாவுல்லாவின் எழுத்துக்களின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று:
மிகப்பெரியதும், யாவற்றையும் உள்ளடக்கவல்லதுமான மனிதர்களின் மாபெரும் கூட்டம் கூட்டப்பட வேண்டியதன் தவிர்க்க முடியாத தேவை அனைத்தலக ரீதியில் யாவராலும் உணரப்படும் காலம் வந்தாக வேண்டும். மண்ணுலக ஆட்சியாளர்களும், மன்னர்களும் அதன் கருத்தாய்வுகளில் பங்கெடுத்துக்கொண்டு மனிதர்கள் மத்தியில் உலக மகா சமாதானத்திற்கான அஸ்திவாரத்தை அமைப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும். இத்தகைய அமைதியை அடைவதற்கு, உலக மக்களின் சாந்தத்திற்காக வல்லரசுகள் தங்களுக்குள் முழுமையாக இணக்கம் காணவேண்டும் எனக் கோரப்படுகிறது. எந்த அரசராவது இன்னொருவர் மீது ஆயுதம் ஏந்தினால், அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து அவரைத் தடுக்க வேண்டும். இது செய்யப்படுமானால், தங்களின் இராஜ்யங்களின் பாதுகாப்பைக் காப்பதற்காகவும், தங்களின் எல்லைகளுக்குள் உள்நாட்டு ஒழுங்குமுறையைப் பேணுவதற்காகவும் தவிர உலக நாடுகளுக்கு எந்தப் படைகளும் இனி தேவைப்படாது. இது ஒவ்வொரு மக்களின் அரசாங்கத்தின் மற்றும் தேசத்தின் அமைதியையும் சாந்தத்தையும் உறுதிபடுத்தும்.
தொடர்ந்து, இந்தக் கூட்டத்தின் பலன்களில் ஒன்று ஒரு முழுமையான உடன்படிக்கையாக இருக்கவேண்டும் எனவும், அதன் உள்ளடக்கங்கள் எல்லா அரசாங்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்துல் பஹா குறிப்பிட்டுள்ளார்:
உலகின் உயர் எண்ணமுடைய அரசர்கள் — அர்ப்பணம் மற்றும் திடநோக்கம் ஆகியவற்றின் மின்னும்உதாரணர்கள் — எல்லா மனிதகுலத்தின் நலனுக்காகவும் மகிழ்வுக்காகவும், உலக அமைதிக்கான காரியத்தை நிறுவுவதற்காக உறுதியான முடிவோடும் தெளிவான தூரநோக்கோடும் எழும்போதெல்லாம் உண்மையான நாகரிகம் தன் கொடியை உலகின் இதயத்தின் ஆழத்தில் பறக்கவிடும். சமாதானத்தின் குறிக்கோளை அவர்கள் யாவரும் தங்களுடைய பொதுவான கலந்தாலோசிப்பின் முக்கியக் கருப்பொருளாகக் கொள்ளவேண்டும். அவர்களுடைய சக்திகளுக்குட்பட்ட எல்லா வழிவகைளின் மூலமாக உலக நாடுகளின் கூட்டரசினை ஸ்தாபிக்க வேண்டும். சட்டத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் உடன்படிக்கையை அவர்கள் உருவாக்குவதுடன், ஒப்பந்தமொன்றையும் அவர்கள் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் காணப்டும் விதிமுறைகள் யாவும் செம்மையானவையாகவும், மீற முடியாதவையாகவும், ஆணித்தரமானவையாகவும் இருக்க வேண்டும். அதனை அவர்கள் உலகம் முழுமைக்கும் பிரகடனப்படுத்துவதோடு மனிதகுலம் முழுமையின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும். மிக உயரிய, உன்னதமான பணியாகிய இதுவே உண்மையில் உலகினுடைய அமைதிக்கும், உலக மக்களுடைய சுகவாழ்வுக்கும் மூலகாரணமாக விளங்க வல்லது. ஆதலால், இவ்வுலகில் வாழும் யாவராலும் புனிதமான ஒன்றாக அது கருதப்படவேண்டும். மனிதகுலத்தின் எல்லா சக்திகளும், இந்த மாபெரும் ஒப்பந்தத்தினுடைய நிலைத்தன்மைக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் ஒன்றுதிரட்டப்படவேண்டும். எல்லா கூறுகளையும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்தினுள், ஒவ்வொரு நாட்டினுடைய எல்லைகளும், வரம்புகளும் மிகத்தெளிவாக நிர்ணயிக்கப்படவேண்டும். ஓர் அரசாங்கம் இன்னுமோர் அரசாங்கத்துடன் அரசாங்கத்துடனான உறவுகளை நிர்ணயிக்கும் அடிப்படைக் கொள்கைகள் தீர்க்கமாக குறிக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் எல்லாவிதமான அனைத்தலக உடன்படிக்கைகளும், கடமைகளும் இதில் நிச்சயிக்கப்படவேண்டும். இது போன்றே ஒவ்வொரு அரசாங்கமும் தன் கையிருப்பில் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் போர்க்கருவிகளின் அளவானது கட்டுப்படுத்தப்படவேண்டும். ஏனெனில், எந்தவொரு நாடாவது போருக்காக வேண்டிய தனது ஆயுதங்களையும், படைபலத்தையும் அதிகரித்துக்கொள்ளுமாறு அனுமதிக்கப்பட்டால் அது மற்ற நாடுகளின் சந்தேகத்தைக் கிளரும். இந்த பெருமிதமிக்க ஒப்பந்தத்தின் அடிப்படைக் கொள்கை எம்மாதிரியாக நிர்ணயிக்கப்படவேண்டும்மென்றால், அதற்குப் பின்னர் எந்த ஒரு நாடாகிலும் அதனுள் காணப்படும் எந்த ஒரு நிபந்தனையையாவது மீறிச் சென்றால், உலகின் மற்ற நாடுகள் யாவும் ஒன்று சேர்ந்து அந்த நாட்டினை பணிந்துபோகுமாறு செய்யவேண்டும். இன்னும் சொல்லப்போனால், மனிதகுலமே ஒட்டுமொத்தமாக திரண்டெழுந்து அதன் கைவசமுள்ள எல்லா சக்திகளையும் பயன்படுத்தி, அந்த அரசாங்கத்தினை நிர்மூலமாக்கிவிடவேண்டும். எல்லாப் பரிகாரங்களிலும் மிகச் சிறந்த பரிகாரமான இதனை பிணிகொண்ட இவ்வுலகின் சரீரத்தின்மீது பயன்படுத்தினால், சந்தேகமே இன்றி அது தன்னுடைய நோய்களிலிருந்து நிவாரணமடைந்து என்றும் நலமுடனும், பாதுகாப்புடனும் இருந்துவரும்.
உலக அமைதிக்கு அத்தியாவசிய அஸ்திவாரமாக தேசங்களின் ஒற்றுமை இருபாதாம் நூற்றாண்டில் நிறுவப்படும் என வாய்மூலமாகவும் எழுத்துபூர்வமாகவும் அப்துல் பஹா வழங்கிய வாக்குறுதி இந்தக் கருப்பொருளிலிருந்து குறிப்புடன் வேறுபட்டிருந்தாலும், அஃது அதனோடு அனுக்கமான தொடர்புடையதாகும்.
அவர்தம் பேருறை ஒன்றில் அவர் சொன்னார்:
இந்த நூற்றாண்டில் இந்த உயரிய எண்ணங்கள் மனித நலனுக்கு ஏதுவாக இருக்கவேண்டும் என நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன். இந்த நூற்றாண்டு கடந்த காலத்து நூற்றாண்டுகளின் சூரியனாக இருக்கட்டுமாக, அவற்றின் பிரகாசங்கள் என்றென்றும் நீடிக்கும். அதனால், இனி வரவுள்ள காலங்களில் அவர்கள், இந்த இருபதாம் நூற்றாண்டு என்பது ஒளிகளின் நூற்றாண்டாக இருந்தது, இந்த இருபதாம் நூற்றாண்டு உயிரின் நூற்றாண்டாக இருந்தது, இந்த இருபதாம் நூற்றாண்டு அனைத்துலக அமைதிக்கான நூற்றாண்டாக இருந்தது என இந்த இருபதாம் நூற்றாண்டை மகிமைப்படுத்தட்டும்…
மொண்ட்ரியல் டேய்லி ஸ்டார் எனப்படும் நாளிதழில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது:
“உலகின் நிரந்தரமான அமைதி ஒரு நியாயமான காலகட்டம் போன்ற ஒன்றில் நிறுவப்படும் என்பதற்கான அறிகுறிகள் ஏதாகிலும் உண்டா”? என அப்துல் பஹா கேட்கப்பட்டார். அஃது இந்த நூற்றாண்டில் நிறுவப்படும் அஃது இருபதாம் நூற்றாண்டில் உலக ரீதியாகும். அணைத்து தேசங்களும் அதற்குள் வலிய தள்ளப்படும்” என அவர் பதிலுரைத்தார்.
இந்த தலைப்பைத்தொட்டு மாஸ்டர் அவர்கள் ஆற்றிய மற்ற பிரகடணங்களைப் பற்றி கருத்துரைக்கையில், தம் சார்பாக வரையப்பட்ட ஜூலை 29 1974 என தேதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டது:
அப்துல் பஹா அவர்கள் தேசங்களின் ஒருமைப்பாட்டை நிறுவுதலை இருபதாம் நூற்றாண்டோடு தொடர்புபடுத்தி வாக்குமூலங்களை வெளியிட்டது உண்மைதான். உதாரணமாக, “ஐந்தாவது மெழுகுவர்த்தி என்பது தேசங்களின் ஒற்றுமை – இந்த ஒற்றுமையானது இந்த நூற்றாண்டில் பாதுகாப்புடன் நிறுவப்பட்டு, உலகின் எல்லா மக்களும் தங்களை ஒரே பொதுவான தந்தைநிலத்தின் பிரஜைகள் எனக் கருதுமாறு செய்யும்.” மற்றும், சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எனும் நூலில் உள்ள இதே போன்ற ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி ஷோகி எபெஃண்டி அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது எனும் நூலில் இந்த கருத்தை உரைக்கின்றார்: “இந்தக் கட்டத்தைத்தான் இந்த உலகம் இப்பொழுது அணுகுகிறது, அதுதான் உலக ஒற்றுமை எனும் கட்டமாகும். அஃது இந்த நூற்றாண்டில் பாதுகாப்புடன் நிறுவப்படும் என அப்துல் பஹா நமக்கு உறுதியளிக்கின்றார்.”
எனினும் தேசங்களின் ஒற்றுமையை எய்துவது என்பது சிற்றமைதியை எய்துவதற்குச் சமம் எனக் கருதப்படக்கூடாது. சிற்றமைதி ஏற்படும் காலம் பற்றிய கேள்விக்கு பதில் தருகையில், 1946ல் தம் சார்பான மடலில் ஷோகி எபெஃண்டி அவர்கள் குறிப்பிட்டதாவது: “நமக்குத் தெரிந்ததெல்லாம் சிற்றமைதியும், அதிபெரிய அமைதியும் கட்டாயம் வரும் என்பதாகும் – அவற்றின் திட்டவட்டமான தேதிகள் நமக்குத் தெரியாது.”
இருந்தபோதிலும், சிற்றமைதியை நிறுவுகின்ற நீண்ட வளர்செயல்பாட்டில் தேசங்களின் ஒற்றுமை என்பது சற்று முறையான ஒரு கட்டம் எனவும் – அதிலும் அஃது உண்மையில் ஒரு மிக முக்கியமான படி எனவும் கருதப்படலாம். ஒரு தனிப்பட்டவரிடம் இருந்து வந்த கேள்விக்கு பதிலுரைக்கையில் தன் சார்பாக வரையப்பட்ட 31 ஜனவரி 1985 என திகதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:
மனித வரலாற்றின் இக்காலத்தில் தோன்றுவதன் பஹாவுல்லாவின் தலையாய தூதுப் பணி என்பது மனுக்குலத்தின் ஒருமைப்பாட்டை நனவாக்குவதும் தேசங்களின் மத்தியில் அமைதியை நிறுவுவதுமாகும்; ஆகையினால், இந்த இலக்குகளை எய்துவதற்காக கவனம் காட்டப்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவர்தம் திருவெளிப்பாட்டினால் தாக்கமாகியுள்ளன. எனினும் அமைதி என்பது கட்டம் கட்டமாக வரும் என நமக்குத் தெரியும். முதலில், தேசங்களின் ஒற்றுமை எய்தப்பட்டதும் சிற்றமைதி ஏற்படும், பிறகு பஹாய் திருவெளிப்பாட்டின் அதி புனித நூலின் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கண்டிப்பான முறைக்கு ஏற்ப இயங்குகின்ற பஹாய் உலகப் பொது நல அரசு பஹாய்களின் முயற்சிகளின் வாயிலாக நிறுவப்பட்டதும். படிப்படியாக மனுக்குலத்தின் ஆன்மீக மற்றும் சமூக மற்றும் அரசியல் ஒற்றுமையாகிய அதிபெரிய அமைதி ஏற்படும்.
சிற்றமைதியைப் பொறுத்த வரைக்கும், பல்வேறு தேசங்களின் அரசாங்கங்களின் முடிவின் வழியாக அது தொடக்கத்தில் ஓர் அரசியல் ஒற்றுமையாக அமையலாம் என ஷோகி எபெஃண்டி விளக்குகின்றார்; அது பஹாய் சமூகத்தின் நேரடியான செயற்பாட்டினால் நிறுவப்படாது…
சிற்றமைதியும் கூட பல கட்டங்களைத் தாண்டிச் செல்லும்; தொடக்க கட்டத்தில் சமயத்தின் விழிப்பான ஈடுபாடு இன்றி அரசாங்கங்கள் முற்றிலும் தாங்களாகவே செயல்படும்; பிற்காலத்தில், கடவுளின் நற்காலத்தில், ஷோகி எஃபெண்டி தம்முடைய “ஒரு புதிய உலக அமைப்புமுறையின் குறிக்கோள்” எனும் நூலில் குறிப்பிட்டதுபோல், சமயம் அதன் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உருபெரும் காலகட்டத்தைப் பற்றி கிழக்கில் உள்ள நண்பர்களுக்காக பாதுகாவலர் வரைந்த பஹாய் ஆண்டு 105க்கான ரித்வான் மடலில், சிற்றமைதியின் படிப்படியான மேம்பாடு பற்றியும் அதன் வலுபெறுதல் பற்றியும் தெளிவாக்கப்பட்டுள்ளது:
“அதன் காலகட்டம் அறியப்படாமலும் கடவுளின் அறிவு எனும் பொக்கிஷத்துக்குள்ளே அது மறைக்கப்பட்டும் கிடக்கிறது. அதன் முடிவு என்பது இந்தப் பரிபூரண, இந்தப் பலம்பொருந்திய அமைப்புமுறை கிழக்கு மற்றும் மேற்கு முழுவதும் நிறுவப்படும் காலத்தோடு, மனித சமுதாயத்தின் உதிரிப்பாகங்களின் மத்தியில் உயிர்ப்பொருளியல்பான ஒற்றுமையின் பிரகாசமான உதயகாலத்தோடு மற்றும் உலகின் அரசுகள் மற்றும் தேசங்களின் மத்தியில் சிற்றமைதிக்கான அஸ்திவாரங்களின் வலுபெறும் காலத்தோடு நேரிடும்.
1996ம் ஆண்டுக்கான ரித்வான் செய்திக்கு தெளிவு தருமாறு ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாளரினால் கேட்டுக்கொள்ளபட்டபோது உலக நீதி மன்றத்தினால் மேலும் விளக்கம் தரப்பட்டது:
“அமைதிக்கான பாதை எவ்வளவு குறுதியதாக இருந்தாலும், அது கொடுமையானதாக இருக்கும்; தன் பாதையை அமைக்கவுள்ள அந்த எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் எவ்வளவுதான் நம்பிக்கைத் தருவதாக இருந்தபோதிலும், கடவுளின் சமயத்தின் நேரடித் தாக்கங்களின் கீழ் அதி பெரிய அமைதியென அஃது வெளிப்படக்கூடிய அந்த தருணத்தை நோக்கி அது தொடர்ந்து முன்னேறும். சோதனைகள், பின்னடைவுகள் மற்றும் சச்சரவுகளுடன் ஒரு நீண்ட கால பரிணாமத்தின வாயிலாக அது கண்டிப்பாக முதிர்ச்சியடையவேண்டும்.
அதன் சார்பாக அந்த தனிநபருக்கு பதிலாக அனுப்பப்பட்ட 29 ஜூலை 1996 என திகதியிடப்பட்ட அந்த மடலில் உலக நீதி மன்றம் இப்படி எழுதியது:
தெளிவாகவே, சிற்றமைதியின் உதயம் ஒரு படிப்படியான வளர்செயல்பாடாகும் மற்றும் அதன் பல்வேறு கட்டங்கள் சந்தேகமின்றி சோதனைகளையும் பின்னடைவுகளையும், இன்னும் மாபெரும் முன்னேற்றங்களையும் கண்ணுறும். எனினும் அது நிச்சயமாக ஒரு வரலாற்று முக்கியத்துவத்துவமுடைய மேம்பாட்டையும் உள்ளடக்கியிருக்கும்; அஃது உலகின் தேச அரசுகளில் பெரும்பாலானவை தங்களை அதிகாரபூர்வமாக ஸ்தாபனங்களையும் கட்டங்களையும் உள்ளடக்கிய உலக அமைப்பு முறைக்கு ஒப்புவித்தும், கூட்டு முடிவுகள் அமுலாக்கப்பட முடிகின்ற வழிமுறைகளை எந்தியும் இருக்கும் அந்தக் காலமாகும். இந்த மேம்பாடு எடுக்கவுள்ள திட்டவட்டமான வடிவத்தை நாம் தற்போது முன்னறியமுடியாத போதிலும், அது சிற்றமைதியின் செயல்பாட்டின் ஓர் அம்சம் என நாம் அங்கீகரிக்கின்றோம்.
கார்மல் மலையின் சரிவுகளில் நிர்வாக அமைப்புமுறையின் மாளிகைகளைக் கட்டுகின்ற தற்கால கட்டத்தின் நிறைவேற்றத்திற்கு அண்மைய ஆண்டுகளில் தரப்படுகின்ற முக்கியத்துவத்தினால், இந்தக் கட்டுமானத் திட்டத்தின் நிறைவேற்றத்திற்கும் சிற்றமைதியின் நிறுவதலுக்கும் இடையில் விளைவுண்டாக்கும் உறவு இருக்கிறதா என சில நம்பிக்கையாளர்கள் வினவியுள்ளனர். 14 டிசம்பர் 1987 என திகிதியிடப்பட்ட மடலில் உலக நீதி மன்றத்தின் செயலகம் இத்தகையதொரு கேள்விக்குப் பின்வருமாறு பதில் தந்துள்ளது:
சிற்றமைதி நிறுவப்படுதல் கார்மல் மலை மீது அறைவட்டத்தின் நிறைவேற்றத்தைப் பொறுத்துள்ளது என சமயத்தின் எழுத்துக்களில் எதுவும் இருப்பதாகத் தனக்கொன்றும் தெரியாது எனக் கூறும்படி உலக நீதி மன்றம் எங்களைப் பணித்துள்ளது.
ஒரு வேளை இந்தக் கருத்து எழும்படி செய்துள்ள அந்தப் பகுதி “பஹாய் உலகத்திற்கான செய்திகள்” எனும் நூலின் பக்கங்கள் 74-75 ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்ட அன்புக்குரிய பாதுகாவலரின் வாக்குமூலமாக இருக்கக்கூடும்… ஒரே நேரத்தில் இணையப்போகும் மூன்று விஷயங்களை பாதுகாவலர் இந்தப் பகுதியில் வருனிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அவர் சம்பவங்கள் அல்லாமல் வளர்செயல்பாடுகள் அல்லது மேம்பாடுகளை வருணிக்கிறார் என்பதை கவனிப்பது முக்கியமாகும், மற்றும் அவை சம நேரத்தில் ஒன்றுசேர்ந்து இயக்கம் காணும் என அவர் சொன்னாலும் கூட – இந்த வாக்குமூலம் தானே சமயத்தின் ஸ்தாபனங்களுக்கு முக்கியமான வழிகாட்டுதலை வழங்குகிறது – அவை ஒன்றை அடுத்ததை நம்பியுள்ளது என அவர் குறிப்பிடவில்லை.
இருபதாம் நூற்றண்டின் நிகழ்வுகள்
தேசங்களின் ஒற்றுமை மற்றும் சிற்றமைதியை நோக்கி மனிதகுலம் அடையும் முன்னேற்ற கட்டங்களைப் பிரதிபலிக்கின்ற இருபதாம் நூற்றாண்டின் சம்பவங்களைப் பற்றி பஹாய் எழுத்துக்களில் தோன்றும் சில வாக்குமூலங்களை மறு ஆய்வு செய்வது பலனுள்ளதாக இருக்கும். 1931ல் உலகலாவிய சிந்தனைகளின் உதயத்தைப் பற்றி ஷோகி எபெஃண்டி அவர்கள் பின்வரும் வார்த்தைகளில் விளக்குகின்றார்:
“சுயேச்சையாக இயங்குவதற்கான தங்களின் உரிமைகளை மீட்பதற்கோ, தங்களின் தேசிய ஐக்கியத்தை எய்துவதற்கோ தங்களை முன் ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் நெப்போலிய கிளர்ச்சியின் குழப்பத்தில் இருந்து தற்பொழுதுதான் வெளிப்படுகின்ற மாநிலங்களுக்கும், சிறுநாடுகளுக்கும் உலக கூட்டொருமைப்பாடு என்ற கருத்து எட்டாத ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிந்தித்துப்பார்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. தங்களுடைய சக்தியின் எழுச்சியை தடைசெய்ய முயற்சித்த புனித கூட்டணியின் அஸ்திவாரங்களைக் கவிழ்ப்பதில் வெற்றிக்கண்ட தேச உணர்வின் ஆற்றல்கள் வெற்றி பெறும் காலம் வரைக்கும் இந்த தேசங்கள் ஸ்தாபித்துள்ள அரசியல் ஸ்தாபனங்களின் வரையறைக்கு அப்பாற்பட்ட உலக அமைப்பு முறையின் சாத்தியம் கடுமையாக கருத்தில்கொள்ளப்படலானது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகே இந்த இறுமாப்பு மிக்க தேச உணர்வின் பிரதிநிதிகள் இத்தகைய அமைப்பு முறை தங்களுடைய தொடர்ச்சியான தேசிய வாழ்வை நம்பியுள்ள அத்தியாவசிய விசுவாசத்தை உறிஞ்சிடவல்லதொரு நாசகரமான சித்தாந்தத்தின் குறிக்கோள் என கருத ஆரம்பித்தனர்.
இந்தச் செயல்பாட்டில் ஒரு மிகவும் முக்கியமான சம்பவம் முதலாவது உலகப் போருக்குப் பிறகு நாடுகளின் கூட்டணியினை அமைத்ததாகும். பின்வரும் எச்சரிக்கையை அவர் வழங்கியபோதிலும், இந்த சம்பவம் அப்துல் பஹாவால் போற்றப்பட்டது:
…நாடுகளின் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டாலும்கூட அஃது உலக அமைதியைக் கொண்டுவரும் திறனைப் பெற்றிருக்கவில்லை.
இரண்டாவது உலகப் போர் மூள்வதற்கு முன்வந்த ஆண்டுகளில், ஷோகி எஃபெண்டி அவர்கள் பின்வரும் உறுதிமொழியை வழங்கினார்.
போருக்குப் பிந்திய தேச உணர்வினால் எழுப்பப்பட்ட மாபெரும் கூக்குரல் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகமாக வளர்ந்து அதன் வற்புறுத்துதல் மேலும் அதிகரித்தாலும்கூட, நாடுகளின் கூட்டணி இன்னும் முதிராநிலையில் இருந்தாலுங்கூட, கூடுகின்ற புயல் மேகங்கள் சில காலத்திற்கு அதன் ஆற்றல்களை முழுமையாக மறைத்து அதன் இயங்குமுறையை அழித்துவிட்டாலும்கூட, அந்த ஸ்தாபனத்தின் இயக்கம் செல்லும் திசை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அது தோன்றியது முதல் எழுப்பப்பட்ட கூக்குரல்கள், எடுக்கப்பட்ட முயற்சிகள், சாதிக்கப்பட்டுவிட்ட பணி ஆகியவை தற்போது தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம், அல்லது அதையும் விஞ்சக்கூடிய வேறெந்த அமைப்போ சாதிக்கும் விதியைக்கொண்டிருக்கும் வெற்றிகளை முன்னறிவிக்கிறது.
அவர் அதன் பல்நிலை வரலாற்றில் மிகவும் முக்கியமான சம்பவங்களின்மீது கவனத்தை ஈர்த்தார், அவற்றுள் பிரதானமாக நிற்பது, ஆக்கிரமிப்பு செயலைப் புரிந்துவிட்டதாக கூட்டணி கருதுகின்ற ஓர் அங்கத்துவ நாட்டின் மீது கூட்டுத் தடைகளை சுமத்துகின்ற அதன் முடிவாகும். ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டதாவது:
மனிதகுல வரலாற்றில் பஹாவுல்லாவினால் முன்னறிவிக்கப்பட்டதும், அப்துல் பஹாவினால் விளக்கப்பட்டதுமான கூட்டுப்பாதுகாப்பு எனும் முறை முதன் முறையாக முக்கியமாக மனக்கண்ணால் காணப்பட்டு, கலந்து பேசப்பட்டு சோதிக்ப்பட்டது. வரலாற்றில் முதன் முறையாக அஃது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இந்த கூட்டுப்பாதுகாப்பு என்ற முறை ஆக்ககரமாக நிறுவப்படுவதற்கு பலமும் வளைந்துகொடுக்கும் தன்மையும் தேவை என வெளிப்படையாகக் கூறப்பட்டது. அந்தப் பலம் பரிந்துரைக்கப்பட்ட அந்த முறையின் பயனை உறுதி செய்வதற்கு பொருத்தமான ஆற்றலைப் பயன்படுத்தவதை ஈடுபடுத்துகின்ற பலாமாகும், அந்த வளைந்துதரும் தன்மை என்பது அதன் பாதிக்கப்பட்ட ஆதரவாளர்களின் சட்டபூர்வமான தேவைகளையும் இலட்சியங்களையும் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட செயல்முறைக்கு உதவுவதாகும். மனித வரலாற்றில் முதன் முறையாக கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும், கூட்டு நடவடிக்கைகளுக்காக தங்கள் வார்த்தைகளான வாக்குறுதிகளை உண்மையாகவே தயாராவதன் வழி வலுப்படுத்துதற்கும் தேசங்களினால் தற்காலிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும், வரலாற்றில் முதன் முறையாக தேசங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பிரகடனம் செய்த தீர்ப்பினை ஆதிரப்பதற்காகவும், இத்தகைய முடிவினை மேற்கொள்வதில் கூட்டு நடவடிக்கைகளை உறுதிச் செய்வதற்காகவும் பொதுக்கருத்தின் இயக்கம் ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தச் செயலின் முக்கியத்துவம் பற்றிய அவர்தம் தொலைநோக்கு தங்கள் குறிப்பிட்ட இலக்குகளை எய்துவதற்கான கூட்டுத் தடைகளின் தெளிவான தோல்வியினால் மங்கச்செய்யப்படவில்லை
தேசங்களின் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் செயல்பாட்டின் குறிக்கோள் என்பது “…தேசங்களின் முழு அமைப்பின் ஐக்கியமே அனைத்துலக வாழ்வின் அதிகாரம் செலுத்தும் கோட்பாடாக்கப்படுகின்ற கட்டத்தை எய்துவதாகும்” என ஷோகி எபெஃண்டி உறுதிகூறுகிறார்.
இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1947ல் ஐக்கிய நாட்டு நிறுவனம் தேசங்களின் கூட்டமைப்பின் இடத்தில் தான் அமர்ந்து கொண்டு தன் சக்திகளையும், கடமைகளையும் மேம்படுத்துகின்ற பாதையில் தானே தொடர்கையில், ஷோகி எபெஃண்டி அவர்கள் இந்த செயல்பாட்டின் விவரங்களைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்;
இந்த செயல்பாடு “…வழி எவ்வளவு நீண்டதாகவும் கொடுமையுடையதாக இருந்திட்டாலும் கூட, அது பல வெற்றிகள் மற்றும் பின்னடைவுகளின் தொடரினால் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய அரைக் கோளங்களின் அரசியல் ஒற்றுமைக்கும், பஹாவுல்லாவினால் முன்கூறப்பட்டு, இறைத்தூதர் ஐசையா அவர்களினால் முன்னறிவிக்கப்பட்ட ஓர் உலக அரசாங்கத்தின் உதயத்திற்கும், சிற்றமைதியின் நிறுவதலுக்கும் இட்டுச் சென்றாக வேண்டும்.
இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட மேம்பாட்டின் செயல்பாட்டோடு வேறுபட்டிருந்தும், அதே வேளையில் அணுக்கமாக தொடர்பும் உடையதாக ஓர் உலகமய விழிப்புணர்வின் உதயம் உள்ளது. 1931ம் ஆண்டு காலத்திலேயே பாதுகாவலர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
…ஓர் ஒழுங்குமுறையற்ற சமுதாயத்தின் குழப்பத்தில் இருந்து தன்னியல்பாக எழுகின்ற உலக கூட்டொருமைப்பாட்டு உணர்வின் படிப்படியான பரவுதல்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்:
“இந்த உலகம் உண்மையாகவே அதன் விதியை நோக்கி நகர்கின்றது. உலகப் பிரிவினைச் சக்திகளின் தலைவர்கள் எதனைக் கூறினாலும் அல்லது செய்திட்டாலும்கூட, உலகமக்களின் ஒருவரையொருவர் நம்பியிருக்கும் தன்மை என்பது சாதிக்கப்பட்டுள்ள உண்மையாகும். பொருளாதாரத் துறையில் அதன் ஒற்றுமை இப்பொழுது புரிந்துகொள்ளப்பட்டும், அங்கீகரிக்கவும் பட்டுள்ளது.
“பஹாவுல்லாவின் தீர்க்கதரிசன எழுத்தானியினால் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்ட பிரமாண்டமான வெடித்துக்கிளம்பல்” எனவும் “நீண்ட காலமாக முன்கூறப்பட்ட உலகைச்சூழக்கூடிய கலகம்” எனவும் ஷோகி எபெஃண்டி அவர்களினால் வருணிக்கப்பட்ட உலக யுத்தத்தில் மனிதகுலம் மூழ்கடிக்கப்பட்ட போது, இந்த மாபெரும் சண்டை என்பது “உலக ஒற்றுமைக்கான அத்தியாவசிய முன்தேவை” என அவர் பஹாய்களுக்கு சுட்டிக்காட்டினார்.
அண்மைய மேம்பாடுகள்
அண்மைய ஆண்டுகளில், மனுக்குலம் தேசங்களின் மற்றும் பூமியின் மக்களின் ஒருமைப்பாட்டுக்காக வளர்ந்துவரும் வழிப்புணர்வை புலப்படுத்துகையில் பரந்த சமுதாயத்தில் ஏற்பட்டுவருகின்ற சம்பவங்களின் ஆழ்ந்த முக்கியத்துவத்தின்பால் உலகலாவிய பஹாய் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக உலக நீதி மன்றம் தன் ரித்வான் செய்திகள் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகின்றது.
குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை, உலக மக்களுக்காக 1985ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் வழங்கப்பட்ட “உலக அமைதிக்கான வாக்குறுதி” எனும் வாக்குமூலத்தின் பின்வரும் பகுதிகளாகும்:
சாதகமான அறிகுறிகளில் சில யாதெனில், இந்நூற்றான்டின் ஆரம்பத்தில் உலக அமைப்பு முறையை நோக்கி முதலில் சர்வதேச ஐக்கிய ஸ்தாபனத்தை உருவாக்குவதில் எடுத்துக் கொள்ளப்பட்ட வலுவான முயற்சிகளும், அதைத் தொடர்ந்து மேலும் பரந்ததோர் அடிப்படையினைக் கொண்ட ஐக்கிய நாட்டுச் சபையாக அது தோற்றம் பெற்றதுமாகும். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலான தேசங்கள் தங்களுடைய தேச நிர்மாணிப்புப் பணியினை நிறைவு செய்துவிட்டதன் அடையாளமாக சுதந்திரத்தினைப் பெற்றது; வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கும் புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்நாடுகள் வளர்ச்சிபெற்ற தேசங்களுடன் பரஸ்பர பொது விஷயங்களில் பங்கெடுத்தல்; அதன் பலனாக இதுகாறும் தனித்தும், எதிரும் புதிருமாக இருந்தும் வந்துள்ள மக்களும், இனங்களும் அனைத்துலக ரீதியில் விஞ்ஞானம், கல்வி, சட்டம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் மேற்கொண்ட ஒத்துழைப்பில் மாபெரும் அதிகரிப்பு; கடந்த சில பத்தாண்டுகளில் இதுகாறும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி அறைகூவல் விடுத்திடும் மகளிர், மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பெருக்கம்; ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதன் வழி இயல்பானதும், பெருகி வருவதுமான புரிந்துணர்வை நாடும் சாதாரண மக்களுடைய அமைப்புக்கள் முதலியன இந்தச் சாதகமான அறிகுறிகளில் சிலவாகும்.
உலக அமைப்பு முறையை நோக்கி, குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு எடுக்கப்பட்டு வரும் தற்காலிகமான நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. தங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய பொதுவான விஷயங்களில் கூட்டாகச் செயல்பட வேண்டி மென்மேலும் அதிகரித்து வரும் விகிதத்தில் நாடுகள் தங்களுக்கிடையே நல்லதோர் உறவினை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளன. தீர்க்கமான ஒரு முடிவை மேற்கொள்ளும் விவகாரத்தில் ஏற்படக்கூடிய அந்த முடக்க உணர்வை இறுதியில் எல்லா நாடுகளும் வெற்றிகொள்ளும் என்ற நம்பிக்கையினை இந்தக் கூட்டு ஒத்தழைப்பு முயற்சிகள் ஏற்படுத்துகின்றன. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்மேளனம், கெரீபியன் சமூகம், கெரீபியன் பொது வர்த்தகச் சம்மேளனம், மத்திய அமெரிக்கப் பொது வர்த்தகச் சம்மேளனம், பரஸ்பர பொருளாதார உதவித் திட்டத்திற்கான மன்றம், ஐரோப்பிய சங்கங்கள், அராபிய நாடுகளின் கூட்டணி, ஆப்பிரிக்க ஒற்றுமை நிறுவனம், அமெரிக்க நாடுகளின் சம்மேளனம், தென் பசிபிக் மன்றம் ஆகியவை போன்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் ஓர் உலக அமைப்பிற்கான வழிமுறையை ஏற்படுத்துகின்றன.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பலதரப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுகின்ற பூமியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரம், இனம் மற்றும் தேசத்தை உள்ளடக்கிய ஆண்களையும் பெண்களையும் கொண்ட படை ஒரு கிரக ஆளவிலான ‘பொதுச் சேவை’யை பிரதிநிதிக்கின்றது. அதன் கவர்கின்ற சாதனைகள் ஊக்கமளிக்காத சூழ்நிலைகளிலும்கூட எய்தவல்ல ஒத்துழைப்பின் அளவுக்கு அறிகுறியாக அமைகின்றன. ஆன்மீக வசந்தகாலத்தைப்போல ஒற்றுமையை நோக்கிய உந்துதல், பரந்த தலைப்புக்களைக் கொண்ட பிரிவுகளில் உள்ள மக்களை ஒன்றாகக் காட்டும் எண்ணற்ற அனைத்துலக மாநாடுகளின் வாயிலாக தன்னை மேம்பாடு காண செய்வதற்குப் போராடுகிறது. குழந்தைகளையும் இளைஞரையும் ஈடுபடுத்துகின்ற அணைத்துலகத் திட்டங்களுக்கான வேண்டுகோள்களை அஃது உந்துவிக்கின்றது. உண்மையில், வரலாற்றுபூர்வமாக பகைமைக்கொண்ட சமயங்கள் மற்றும் பிரிவுகளின் அங்கத்தினர்கள் எதன் வாயிலாக தடுக்கமுடியா வண்ணம் ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப்படுகின்றனரோ அந்த சமய ஐக்கியத்தினை நோக்கிய குறிப்பிடத்தக்க இயக்கத்தின் உண்மையான பிறப்பிடம் அதுவாகும். விடாமுயற்சியோடு தான் போராடுகின்ற, போர்முறை மற்றும் சுயவிருத்தி ஆகியவற்றை எதிர்க்கும் தன்மையோடு சேர்ந்து, உலக ஒற்றுமையை நோக்கிய இயக்கம் இருபதாம் நூற்றாண்டின் முடிவுறும் ஆண்டுகளில் இந்த உலக வாழ்வின் பிரதானமான, வியாபிக்கும் அம்சமாக அமைகிறது.
இருபதாம் நூற்றாண்டு தன் நிறைவை அணுகும்போது மாற்றத்தின் வேகம் துரிதமாகியது. 1996ம் ஆண்டில் உலக நீதி மன்றம் இவ்வாறு எழுதியது:
…ஒரு பஹாய் பார்வையாளருக்கு, உலகத் தலைவர்கள் அடிக்கடி எடுத்துவருகின்ற நடவடிக்கைகள், உலகப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தேசங்கள் மேற்கொள்கின்ற பொது அணுகுமுறையின் சாயலைச் சித்தரிக்கின்றன. உதாரணத்திற்கு, நானகாண்டுகளுக்கு முன் வந்த புனித ஆண்டின் அனுசரனைக்குப் பிறகு அசாதாரன எண்ணிக்கையில் இத் தலைவர்கள் ஒன்றதிரண்டதைக் கூறலாம். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாக கூறலாம். அவ்வேளை, பங்குபெற்ற தேசத் தலைவர்களும், அரசாங்கத் தலைவர்களும் உலக அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். உலகின் வெவ்வேறு பாகங்களில் நடைபெறுகின்ற பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசாங்கத் தலைவர்கள் எவ்வளவு விரைவாகவும் இயற்கைாயாகவும் கூட்டாகச் செயல்படுகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்தகைய போக்குகள் ஏதாவது ஒரு வகையில் உலகமய ஆளுமையை சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளின்பால் கவனம் காட்டப்படவேண்டும் என தெளிவுபெற்ற வட்டங்களில் இருந்து வரும் அதிகரிக்கன்ற கூக்குரல்களோடு இணைகின்றன. இந்தத் துரிதமாக வளர்ந்துவருகின்ற சம்பவங்களில் நாம் திருவருளின் திருக்கரத்தின் செயல்களை அல்லது உண்மையில் நமது எழுத்துக்களின் முன்கூறப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தின் முன்னறிவிப்பைக் காணக்கூடாதா?
அதே வேளையில் 1998ல் அஃது இவ்வாறு கருத்துரைத்தது:
…குழப்பத்தில் உள்ள சமுதாயத்தின் கூச்சலின் மத்தியில் சிற்றமைதியை நோக்கிய தெளிவான போக்கைப் பிரித்துணரலாம். சிந்தனையைத் தூண்டும் ஓர் அறிகுறியை, நீண்ட காலமாக இருந்துவந்துள்ள மற்றும் அவசரமான உலகப்பிரச்னைகளை கவனிப்பதில் ஆற்றல்மிக்க அரசாங்கங்களின் ஆதரவோடு கூடிய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மேலும் அதிகப்படியான ஈடுபாடு வழங்குகின்றது; இன்னொன்று அன்மைய மாதங்களில் வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் தேசங்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்துள்ளமையை உலகத் தலைவர்கள் தெளிவாக அங்கீகரித்துள்ளதில் இருந்து பெறப்படுகிறது – ஓர் உயிர்ப்பொருளியலான ஒன்றுபட்ட உலகின் ஓர் அத்தியாவசியமான அம்சம் என ஷோகி எபெஃண்டி அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சூழ்நிலையாகும் இது.
கடந்த நான்கு ஆண்டுகளாக உலகில் நடந்தேறிய முக்கியமான சம்பவங்களை மறு ஆய்வு செய்ைைகயில், தன்னுடைய ரித்வான் 2000 செய்தியில் உலக நீதி மன்றம் “ஓர் உலக அரசியல் அமைதியின் வடிவங்களை உருவாக்குவதை நோக்கி உலகத் தலைவர்கள் துணிவான படிகளை மேற்கொண்டனர்” எனவும், பின்வருமாறும் குறிப்பிட்டது:
…கூட்டுப் பாதுகாப்பின் வழிமுறைகளை அமுலாக்கம் செய்வதிலும் விரிவுபடுத்துவதிலும் முயற்சிகள் ஊக்கமாக மேற்கொள்ளப்பட்டன. அஃது அமைதியைப் பேணுவதற்கான பஹாவுல்லாவின் மாமருந்துகளில் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது; ஓர் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நிறுவப்படுவதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது, இது பஹாய் எதிர்பார்ப்புகளுடன் இசைகின்ற இன்னொரு செயலாகும்; உலக விவகாரங்களை கையாள்வதற்கு ஒரு பொருத்தமான முறையின் அவசியத் தேவைமீது கவனத்தை செலுத்துவதற்கு உலகத் தலைவர்கள் ஓர் ஆயிரத்தாவது ஆண்டு உச்சநிலை மாநாட்டில் சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது; அனைவரும் இந்தப் பூமியில் எவருடனும் தொடர்புகொள்வதற்கான புதிய தொடர்புமுறைகள் வழியைத் திறந்துள்ளன.
சில மாதங்களுக்குப் பிறகு அமைதிக்கான உலகப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக 2000ம் ஆண்டின்போது நியூ யார்க் மாநகரில் நடத்தப்பட்ட ஆயிரத்தாவது ஆண்டு கூட்டங்களைப் பற்றி, அதாவது மே மாதம் நடைபெற்ற ஆயிரத்தாண்டு கருத்தரங்கம், ஆகஸ்டு மாதம் நடைபெற்ற சமய மன்றம், ஆன்மீகத் தலைவர்களின் ஆயிரத்தாண்டு அமைதி உச்சநிலை மாநாடு, மற்றும் செப்டம்பர் மாதம் 150க்கும் கூடுதலான தேசங்களின் தலைவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆயிரத்தாண்டு உச்சநிலை மாநாடுகளைப் பற்றி — அறிக்கை விடுக்கையில், தன்னுடைய 24 செப்டம்பர் 2000 செய்தியில் உலக நீதி மன்றம் இவ்வாறு கருத்துரைத்தது:
அமைதி மற்றும் அதன் இயற்கையான செயல்பாட்டின் பஹாய் தொலைநோக்கை மனத்தில் ஊறவைத்த எந்தவொரு பார்வையாளருக்கும், கடந்த பத்தாண்டுகளில் தேசங்களின் தலைவர்களை ஈடுபடுத்திய முந்தைய உலக மாநாடுகளுடன் சேர்ந்து இந்த அண்மைய சம்பவங்களின் சாரத்தையும் அறிகுறிகளையும் காணும்போது, அது சிந்தித்துப்பார்ப்பதற்கே திருப்திகரமாக இருக்கும். பஹாய் யுகத்தின் இவ்வளவு ஆரம்பக்கட்டத்திலேயே பஹாவுல்லாவின் எழுதுகோலினால் இவ்வளவு தெளிவாக முன்னறிவிக்கப்பட்ட அந்த உலக அமைப்புமுறையின் பாதையில் முக்கிய சம்பவங்களை அமைத்துக்கொடுத்திட்ட இந்தச் சம்பவங்களில் நம்முடைய அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் பங்குகொண்டதை உணரும்போது இரட்டிப்பு சிலிர்ப்பைத் தரும்.