ஹிக்மத் நிருபம்


லோ-இ-ஹிக்மத்
(மெய்யறிவிற்கான நிருபம்)

காஃயின் எனப்படும் நகரத்தைச் சார்ந்த பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான, ஆகாஃ முகமது எனும் குடும்பப் பெயர் கொண்ட நபில்-இ-அக்பர் என்பாருக்கு இந்நிருபம் வரையப்பட்டது. (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 1-5 காண்க). காஃயினைச் சார்ந்த வேறொரு பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான முல்லா முகமது அலி என்பார் நபில்-இ-காஃயினி என  வழங்கப்பட்டார் (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 49-54 காண்க). அப்ஜட் குறிப்பில் ‘முகமது’ எனும் பெயர் ‘நபில்’ எனும் பெயருக்கு ஈடான எண்ணியல் மதிப்பு கொண்டது.

இது உச்சரிப்பு எனும் இராஜ்ஜியத்திலிருந்து சர்வ-தயை மிகுந்தவர் அருளிய ஒரு திருமுகமாகும். சிருஷ்டி மண்டலத்தில் வசிப்போருக்கு இது மெய்யாகவே உயிர்கொடுக்கும் மூச்சுக்காற்றாகும். எல்லா உலகங்களுக்கும் பிரபுவானவர் புகழொளி சாற்றப்படுவாராக! முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு நிருபத்தில் நபில் எனப் பெயரிடப்பட்டவரும், தனது பிரபுவானவரான, இறைவனின் நாமத்தை மிகைப்படுத்தியவருமானவரைக் குறித்து இத்திருமுகத்தில் எழுதப்பட்டுள்ளது.

முகமதுவே! ஸாஃப்ரான் எனும் நிலத்திலிருந்து மேற்றோன்றியுள்ள விண்ணவ விருட்சத்திலிருந்து உரக்கக் கூவியழைக்கும், மகிமை மண்டலத்திலிருந்து விளைந்துள்ள குரலுக்குச் செவிசாய்ப்பாயாக. மெய்யாகவே, எல்லாம்-அறிந்தவரும், விவேகியுமான இறைவன் எம்மைத் தவிர வேறெவருமிலர். வாழ்வுலகின் தருக்களுக்குச் சர்வ-தயைமிக்கவரின் தென்றல்களைப்போலிருந்து, நீதிமானும், எல்லாம் அறிந்தவருமாகிய உனது ஆண்டவரது நாமத்தின் ஆற்றலால் அவர்களது வளர்ச்சியைப் பேணுவீராக. மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக விளங்கக்கூடியதைப் பற்றி உமக்கு அறிவிக்க யாம் விரும்புகிறோம், அதனால், அவர்கள் தங்களிடையே நடைமுறையிலுள்ள விஷயங்களைக் கைவிட்டு, நேர்மைமிக்கவர்களின் ஆண்டவராகிய, இறைவனை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பட்டும்.

நீதியின் வதனத்தில் மாசு படிந்தும், நம்பிக்கையின்மையின் அனற்கொழுந்துகள் உயரமாக எரிந்து கொண்டும் இருக்கும், விவேகமெனும் மேலாடை அகலக் கிழிபட்டும், சாந்தமும் விசுவாசமும் நலிவுற்றும், சோதனைகளும் கொடுந்துன்பங்களும் கடுமையாகச் சீறியெழுந்தும், ஒப்பந்தங்கள் மீறப்பட்டும் பந்தங்கள் முறிக்கப்பட்டும், எந்த மனிதனும் இருளிலிருந்து ஒளியை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவோ அல்லது வழிகாட்டுதலிலிருந்து தவற்றைப் பிரித்துணரவோ தெரியாதிருக்கும் இந்நாட்களிலே யாம் மனுக்குலத்திற்கு நன்மதி பகர்கின்றோம்.

உலக மாந்தரே! எல்லாத் தீங்குகளையும் விட்டொழியுங்கள், நன்மைப் பயப்பனவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா மக்களுக்கும் ஒளிரும் உதாரணங்களாகவும், இறைவனின் சிறப்பியல்புகளின் உண்மை நினைவுறுத்தல்களாகவும் இருக்க முயலுங்கள். எமது சமயத்திற்குச் சேவை செய்ய முன்னெழுபவர் எமது விவேகத்தை வெளிப்படுத்தியும், மண்ணுலகிலிருந்து அறியாமையை விரட்டிட எல்லா முயற்சிகளை எடுத்திடவும் வேண்டும். அறிவாலோசனை வழங்குவதில் ஐக்கியமாகவும், சிந்தனையில் ஒற்றுமையாகவும் இருங்கள். ஒவ்வொரு காலைவேளையுைம் அதன் மாலைவேளையினும் மேற்பட்டதாகவும், ஒவ்வொரு மறுநாளும் அதற்கு முந்தியநாளினும் செழிப்புமிக்கதாகவும் இருக்கட்டுமாக.

மனிதனின் நன்மதிப்பு, சேவை மற்றும் நன்னெறி ஆகியவற்றிலன்றி செல்வச்செழிப்பு மற்றும் பொருள்வளம்  ஆகியவற்றின் பகட்டாரவாரக்காட்சியில் இல்லை. உங்கள் வார்த்தைகள் வீண் கற்பனை மற்றும் பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் உங்கள் செயல்கள் சூழ்ச்சி மற்றும் ஐயுறவு ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் பொண்ணான வாழ்க்கைச் செல்வங்கள் தீவினை மற்றும் துராசை ஆகியவற்றில் அழிந்திடவோ, அல்லது உங்கள் முயற்சிகள் யாவும் உங்கள் தன்னலங்களை மேம்படுத்திடுவதில் செலவிடப்படவோ அனுமதியாதீர்கள்.

செல்வம் நிறைந்த நாட்களில் பரோபகாரத்துடனும், வறிய நேரத்தில் பொறுமையுடனும் இருங்கள். துரதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வெற்றியும் துன்பத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சிகளும் பின்தொடரும். இளையவராயினும் முதியவராயினும், உயர்ந்தவராயினும் தாழ்ந்தவராயினும், வீண்பொழுது மற்றும் சோம்பல் ஆகியவற்றிற்கெதிராக கவனத்துடன் இருந்தும், மனுக்குலத்திற்கு நன்மைப் பயப்பனவற்றை இருகப்பற்றிக்கொள்ளவும் வேண்டும். மனிதர்களிடையே கருத்துவேறுபாடெனும் புல்லுறுவிகளை விதைப்பதிலிருந்தோ அல்லது தூய்மையும் பிரகாசமும் நிறைந்த உள்ளங்களில் சந்தேகமெனும் கள்ளியை நடுவதிலிருந்தோ எச்சரிக்கையாக இருங்கள்.

ஆண்டவரின் அன்பிற்கினியவர்களே! அன்பெனும் தெளிந்த நீரோடையைக் களங்கப்படுத்தக்கூடியனவற்றையோ அல்லது நட்பெனும் நறுமனத்தினை அழிக்கக்கூடியனவற்றையோ புரியாதீர்கள். ஆண்டவரின் நேர்மைத்தன்மையின் மீது சாட்சியாக! நீங்கள் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு காட்டவன்றி நெறிப்பிறழ்வையும் கசப்புணர்வையும் காட்டுவதற்காக அல்ல. உங்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலல்லாது உங்கள் சகஜீவர்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலேயே நீங்கள் பெருமைக் கொள்ளுங்கள். உங்கள் தேசத்தின் மீது அன்பு கொள்வதிலின்றி, எல்லா மனிதர்கள் மீதும் அன்புகொள்வதில் பெருமைகொள்வீர்களாக. உங்கள் கண் கற்புடையதாகவும், உங்கள் கரம் விசுவாசமாகவும், உங்கள் நா வாய்மையுடனும், உங்கள் உள்ளம் தெளிவு பெற்றதாகவும் இருக்கட்டும்.

பஹாவில் அறிவுபெற்றோரின் ஸ்தானத்தைத் தாழ்த்திடவும், உங்களிடையே நீதியைச் செயல்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களின் நிலையைக் குறைத்துமதிப்பிடவும் செய்யாதீர். நீதியெனும் படையின் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பீர்; விவேகம் எனும் போர்க்கவசம் பூணுவீர்; மன்னிக்குந்தன்மையும் தயையும் மற்றும் இறைவனின் நல்லாதரவு பெற்றோரின் இதயங்களைக் களிப்புறச் செய்வனவும் உங்கள் அனிகலன்களாக இருக்கட்டுமாக.

எமது உயிரின் மீது ஆணை! உமது துக்கங்கள் எம்மைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உலகார்ந்த புத்திரர்களையும் அவர்தம் செய்கைகளையும் பெரிதுபடுத்தாதீர் ஆனால் கடவுளின் மீதும் அவரது முடிவே இல்லாத இராஜ்ஜியத்தின் மீதும் உமது பார்வையைக் குவித்திடுவீர். அவர் மெய்யாகவே, மனுக்குலம் முழுமைக்கும் களிப்பின் தோற்றுவாயாக விளங்கும் அதனை உமக்கு நினைவுபடுத்துகின்றார். இவ்வலிமைமிகு அறனில் உம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளவராகிய — தெய்வீக வெளிப்பாட்டின் தோற்றவாயாகியவர் உச்சரிப்பு எனும் கிண்ணத்திலிருந்து பருகத்தரும் மெய்சிலிர்க்க வைக்கும் இன்பமெனும் உயிர்ப்பளிக்கும் நீரைப் பருகிடுவீர். சொல்வண்மையுடனும் விவேகத்துடனும் உண்மையெனும் வார்த்தையை தின்மையுடன் நிலைப்படுத்திடவும் உலகத்திலிருந்து பொய்மையை அகற்றிடவும் உமது இயன்றளவு வலிமைகளைக் கொண்டு முயலுங்கள்.

எமது நாமத்தின் பெயரால் பேசுகின்றவரே! இம்மக்களையும் எமது நாட்களில் அவர்கள் இழைத்தவற்றையும் சிந்திப்பீராக. உலகவாசிகள் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை ஆட்சியாளர்களில் ஒருவருக்கு வெளிப்படுத்தி, இறைவனின் அத்தாட்சியையும், அவரது ஆதாரங்களையும், அவரது மகிமை மற்றும் மாட்சிமை, ஆகியவற்றை அவருக்கு நிரூபிப்பதற்காக இக்காலத்தின் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் முன் எம்மை நேருக்கு நேர் நிறுத்திட யாம் வேண்டுகோள் விடுத்தோம். யாம் விரும்பியதெல்லாம் இதன்மூலம் பெரும் நன்மையைத் தவிர வேரொன்றுமில்லை.

ஆனால், நீதி மற்றும் நியாயம் ஆகிய நகரங்களின் மக்களைப் புலம்பச்செய்யதிட்ட ஒன்றை அவர் இழைத்தார். இவ்வாறாகவே எமக்கும் அவருக்கும் இடையில் நியாயம் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாகவே, உமது ஆண்டவரே விதிப்பவரும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். நீர் காண்கின்ற இவ்விதச் சூழ்நிலைகளில், வீண் கற்பனைகள் மற்றும் ஆழ்ந்த வெறுப்புணர்வெனும் கற்களால் தனது இறக்கைகளில் தாக்கப்பட்டும், தகர்க்கவியலாத கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அடைக்கப்பட்டும் உள்ள தேவப்பறவையானது தெய்வீக மர்மங்களெனும் ஆகாயத்தில் எவ்வாறுதான் பறக்கக்கூடும்? கடவுளின் நேர்மைத்தன்மையின் மீது ஆணையாக! மக்கள் ஒரு கொடும் ஆநீதியையே இழைத்துள்ளனர்.

சிருஷ்டியின் ஆரம்பம் பற்றி நீர் அறுதியிடுவது குறித்து (கூறுவதானால்), மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் பலவாறு உள்ளதன் காரணத்தினால் அபிப்ராயங்கள் வேறுபடும் ஒரு விஷயமாகும் இது. அது என்றென்றும் இருந்துள்ளது மற்றும் இனி என்றென்றும் இருந்தே வரும் என நீர் வலியுறுத்தினாலும், அது உண்மையாகவே இருக்கும்; அல்லது புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற அதே எண்ணத்தை நீர் கொண்டிருந்தாலும், அது குறித்தும் சந்தேகங்கள் இருக்காது, ஏனென்றால் அது உலகங்களின் ஆண்டவராகிய, கடவுளாலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாகவே அவர் மறைக்கப்பட்டிருந்த ஓர் அரும்பொருளாவார். இது என்றுமே வர்ணிக்கப்படவோ அல்லது குறிப்பிடுவதற்கோ கூட முடியாததாகிய ஒரு ஸ்தானமாகும். மற்றும் ‘யாம் எம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினோம்!,’ எனும் ஸ்தானத்தில், இறைவன் இருந்தார்,  மற்றும் ஆரம்பமே இல்லாத ஓர் ஆரம்பத்திலிருந்து, ஒரு முதன்மை எனக்கருத முடியாத ஒரு முதன்மையால் இது முந்தப்பட்டிருந்த நிலையையும் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் அனைவராலும் கண்டுகொள்ளப்பட முடியாத ஒரு மூலகர்த்தாவினால் முன்னுருவாக்கப்பட்ட நிலையையும் தவிர்த்து அவரது படைப்புகள் யாவும் அவரது அடைக்கலத்தின் கீழேயே எப்போதும் இருந்துவந்துள்ளன.

இதுவரை இருந்துவந்துள்ளவை இதற்கு முன் இருந்தவையே, ஆனால் நீர் இன்று காணும் வகையில் அல்ல. செயல்படும் சக்தி மற்றும் அதனை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டிற்கிடையே ஏற்பட்ட இனைந்தசெயற்பாட்டில் விளைந்த வெப்பசக்தியின் மூலமாக இருப்புலகம் தோற்றம் கண்டது. இவை இரண்டும் ஒன்றானவை, அதேசமயம் வெவ்வேறானவை. ‘அதிவுயர்ந்த அறிவிப்பு’ இவ்வாறாகவே இம்மகிமைமிகு கட்டமைப்புக் குறித்து உமக்குத் தெரியப்படுத்துகின்றது. உருவாக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மற்றும் அதன் தாக்கத்தை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டுமே எல்லா படைப்புக்களும் தோன்றக் காரணமாக இருந்த தடுக்கவியலாவசீகரமிக்க இறைவனின் வார்த்தையின் மூலமாகவே படைக்கப்பட்டுள்ளன. அதே வேளை, அவரது வார்த்தையைத் தவிர்த்து மற்ற யாவும் அதன் படைப்பினங்களும் விளைவுகளுமே ஆகும்.

மேலும், இறைவனின் — அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக — வார்த்தையாகப்பட்டது, புலன்களால் கண்டுணரப்படுவதற்கும் அப்பாற்பட்டு உயர்ந்தும் அதிமேலான நிலையில் உள்ளதென்பதையும், உணர்வீராக, ஏனென்றால் அது இயல்புகள் மற்றும் வஸ்துக்கள் ஆகியவற்றிலிருந்து புனிதப்படுத்தப்பட்டுள்ளது. புலப்பட்டுள்ள மூலவஸ்துக்களின் வரம்புகளுக்கப்பால் அது மிகவுயர்ந்த நிலையில் உள்ளதோடு, எல்லா இன்றியமையாத மற்றும் அறியப்பட்டுள்ள வஸ்துக்களினும் அது மேன்மையுடையதாக இருக்கின்றது. அது சொல்லசைவுகளும் ஒலியும் இன்றி வெளிப்பாடு கண்டது, மற்றும் அஃது எல்லா படைக்கப்பட்ட பொருட்களையும் ஊடுருவி நிற்கும் இறைவனின் கட்டளையன்றி வேறில்லை. இருப்புலகிலிருந்து அது என்றுமே மீட்டுக்கொள்ளப்பட்டதில்லை. எல்லா திருவருளும் தோன்றக் காரணமான, யாவற்றையும் வியாபிக்கும் கடவுளின் திருவருளே அது. இருந்துவந்துள்ள மற்றும் வரப்போகின்ற யாவற்றிலிருந்தும் அதிவுயர்த்தப்பட்டுள்ள ஒரு பொருளாகும் அது.

இவ்விஷயத்தை மேலும் விரிவுபடுத்துவதை யாம் விரும்பவில்லை, ஏனெனில் நம்பிக்கையற்றோர்கள், ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்கவல்லவருமான இறைவனுக்கெதிராகக் குற்றங்கண்டிட தங்களுக்கு உதவுவனவற்றைச் செவிமடுத்திடுவதற்காகத் தங்கள் செவிகளை எம்மிடம் திருப்பியுள்ளனர். தெய்வீகப் பிரகாசமானது வெளிப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறிவு மற்றும் விவேகங்கள் சார்ந்த மர்மங்களை அவர்கள் அறிய இயலாததன் காரணத்தினால், அவர்கள் எதிர்ப்புகொண்டெழுந்து, கடுங்கிளர்ச்சி செய்கின்றனர். ‘விளக்கவுரையாளர்’ அளிக்கும் விரிவுரையையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாதவற்றை அறிந்துள்ளவரான, ஒரே உண்மைக் கடவுளானவர் அளிக்கும் மெய்மைகளையோ அவர்கள் எதிர்க்கவில்லை, மாறாக அவர்கள் எதைப் புரிந்துகொண்டுள்ளார்களோ அதையே அவர்கள் எதிர்க்கின்றனர் என்பது உண்மை. அவர்ககளது ஆட்சேபங்கள் ஒவ்வொன்றுமே, அவர்கள் மீதே திரும்பிப் பாய்கின்றன, மற்றும் அவர்கள் புரிந்துகொள்ளுந் தன்மையற்றவர்கள் என உமது உயிரின் மீது யாம் ஆணையிட்டுக் கூறுகின்றோம்.

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தோற்றுவாயும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு கட்டிடக்கலைஞரும் கண்டிப்பாக இருக்கவேண்டும். மெய்யாகவே, இறைவனின் வார்த்தையே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவவரின் பிரகாசங்களினால்  இந்நிலையற்ற உலகத்திற்கு முன்பாக  தோன்றிய விணைமுதலாகும், இருந்தும் அது எந்நேரமும் புதுப்பிக்கப்படவும் புத்துயிரளிக்கவும் படுகின்றது.  இவ்வதிவிழுமிய கட்டமைப்பை எழுப்பிய முன்மதிமிக்க இறைவன் அளவிடற்கப்பால் உயர்ந்தவராவார்.

இவ்வுலகைப் பார்த்து அதன் நிலைதனை சிறிது சிந்திக்கவும். அது உமது கண்முன்பாகவே தன்னைப் பற்றிய நூலைத் திரைநீக்கம் செய்தும் வடிவமைப்பாளரும், எல்லாம்-அறிந்தவருமாகிய உமது ஆண்டவரின் எழுதுகோல் அதனுள் வரைந்திட்டவற்றை வெளிப்படுத்திடவும் செய்கின்றது. அது அதனுள்ளும் அதன்புறத்திலும் அடங்கியுள்ளவற்றை உமக்குப் அறிமுகப்படுத்தியும் நாவளம் மிக்க எந்தவொரு விளக்கவுரையாளரும் தேவைப்படாத சுதந்திரத்தை அடைந்திட அவசியமான தெளிவான விளக்கங்களை உமக்களிக்கும்.

கூறுவீர்: அதன் சாரத்தைப் பொருத்தமட்டில் இயற்கையானது, உருவாக்குபவர், படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பண்புருவம் ஆகும். அது வெளிப்படுத்தக்கூடியவை பல்வேறு மூலகாரணங்களினால் பலவகைப்பட்டும், பகுத்தறியும் தன்மைப்பெற்ற மனிதர்களுக்கு இப்பல்வகைமையில் பல அறிகுறிகளும் தென்படுகின்றன. இயற்கையென்பது இறைவனின் விருப்பாற்றலும், இந்நிலையற்ற உலகினுள்ளும் அதன் மூலமாகவும் வெளிப்படுகின்ற அதன் பாவவெளிப்பாடும் ஆகும்.  அது சர்வ-விவேகியான நியமகரால் ஆணையிடப்பட்ட  தெய்வீக அருளளிப்பாகும். இருப்புலகில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இறைவனின் திருவிருப்பமே அதுவென எவரேனும் வலியுறுத்தினால், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கலாகாது. கல்வியறிவு மிக்க மனிதர்களும் அதன் மெய்யியல்பைக் கிரகிக்க இயலாத அளவிற்கு அது ஆற்றல் படைத்ததாகும். மெய்யாகவே, அகப்பார்வையுடைய மனிதர் எவரும் படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பிரகாசத்தைத் தவிர்த்து அதனுள் வேறு எதனையுமே காணமுடியாது. இது அழிவென்பதையே அறியாத ஓர் இருப்புநிலையாகும், மற்றும், அதன் வெளிப்பாடுகளினாலும், அதன் வலிந்தீர்க்கும் ஆதாரங்களினாலும் மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்துள்ள அதன் பிராகாசமிகு மகிமையினாலும் இயற்கையே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.

கடந்தகாலங்களுக்கோ அல்லது சமீப காலங்களுக்கோ நீர் உமது பார்வையைத் திருப்புவது உமக்கு ஏற்புடையதாகாது. இந்த நாளைக் குறித்தே நீர் உச்சரித்தும், அதன்வழி தோன்றியுள்ளவற்றை மிகைப்படுத்தவும் செய்வீராக. உண்மையாகவே அது எல்லா மனிதர்களுக்கும் போதுமானதாகும். மெய்யாகவே அவ்வித விஷயங்கள் குறித்த விளக்கவுரைகளும் விரிவுரைகளும் ஆன்மவுணர்வுகளைச் சில்லிட்டுப் போகச் செய்யும்.  உண்மையான நம்பிக்கையாளர்களின் இதயங்களைக் கொழுந்துவிட்டெரியவும் அவர்களது உடல்கள் வானில் மிதப்பதைப்போல் உணர்வுண்டாகும் வகையிலும் நீர் பேச வேண்டியது ஏற்புடைமையாகும்.

எவராயினும் மனிதனின் மறுபிறவியில் உறுதியாக நம்பிக்கைக்கொள்பவராகவும் அப்புதிய சிருஷ்டியின் மீது அதிவுயர்ந்தவராகிய இறைவன் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்துகின்றார் என முழுமையாக உணர்பவராகவும் இருப்பாராயின், மெய்யாகவே அவ்வித மனிதன் இவ்வதிபெரும் திருவெளிப்பாட்டில் அகப்பார்வைகள் அளிக்கப்பெற்ற மனிதர்களுல் ஒருவரென மதிக்கப்படுவார். இதற்கு ஒவ்வொரு பகுத்துணரும் நம்பிக்கையாளரும் சாட்சியம் பகர்கின்றார்.

அதிபெரும் நாமத்தின் சக்தியால் இருப்புலகினும் மேன்மையுடைய நடத்தையுடையவராக நீர் இருப்பீராக, அதனால் நினைவிற்கப்பாற்பட்ட மர்மங்கள் குறித்து விழிப்புணர்வு பெறவும் எவருமே அறிமுகம் அடைந்திராதவற்றோடு நீர் அறிமுகம் பெறவும் கூடும். மெய்யாகவே, உமது ஆண்டவரே உதவியாளரும், சர்வ-ஞானியும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். சிருஷ்டியின் உடலினூடே துடிக்கும் இரத்தநாளத்தைப் போன்றிருப்பீராக. அதனால், அத்துடிப்பின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் மூலமாக தயக்கம் காட்டிடுவோர் இதயங்களுக்கு உயிர்ப்பூட்டக்கூடிய ஏதோ ஒன்று தோன்றிடக்கூடும்.

எண்ணிலடங்கா முகத்திரைகளுக்குப் பின்னால் யாம் மறைந்திருந்த நேரத்தில் நீர் எம்மோடு தொடர்பு கொண்டும் எமது முன்மதியெனும் சுவர்க்கத்தின் ஒளிப்பிழம்புகளையும் எமது உச்சரிப்பு எனும் சமுத்திரத்தின் பேரலைகளையும் கண்டீர். மெய்யாகவே உமது ஆண்டவர் உண்மையானவர், நம்பிக்கைக்குறியவர். அதிபெரும் கொடையாளியும் சர்வ-விவேகியுமான தனது ஆண்டவரின் நாட்களில் இச்சமுத்திரத்தின் தாராளப் பிரவாகத்தை அடைந்தவரின் ஆசீர்வாதம் பெரிதே.

இராக் நாட்டில் எமது நிவாசத்தின் போது யாம் மஜீத் எனப்படும் ஒருவரின் இல்லத்தில் இருந்தபோது சிருஷ்டியின் மர்மங்கள் பற்றியும் அதன் தோற்றுவாய், அதன் உச்சநிலை மற்றும் அதன் விணைமுதல் ஆகியவற்றை உமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம். ஆயினும், எமது புறப்பாட்டுக்குப் பிறகு பின்வரும் வலியுறுத்தலோடு யாம் நிறுத்திக்கொண்டோம்: ‘மெய்யாகவே, என்றும்-மன்னிப்பவரும், கொடையாளியுமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.’

புதர்களைத் தீப்பிடித்து எரியச் செய்யக்கூடிய பேச்சாற்றலுடனும், அதனிலிருந்து, ‘மெய்யாகவே சர்வ-வல்லவரும், கட்டுப்படுத்தப்படாதவருமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை’ எனும் அழைப்பு எழுப்படும் வகையிலும் இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக. கூறுவீர்: மனிதப் பேச்சு தனது செல்வாக்கைப் பதிக்க அவாவுரும் ஒரு சாரம், அதற்கு மிதப்போக்கு அவசியமாகும். அதன் செல்வாக்கைப் பொறுத்தவரை அது நற்பண்பை நிபந்தனையாகக் கொண்டுள்ளது; இந்நற்பண்பு பற்றற்றதும் தூய்மையானதுமான இதயங்களைச் சார்ந்துள்ளது. அதன் மிதப்போக்கைப் பொறுத்தவரை, அது புனித நூல்களிலும் நிருபங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு நயம் மற்றும் முன்மதி ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். எல்லா அருளுக்கும் தோற்றுவாயாகிய, உமது ஆண்டவரின் திருவிருப்பமெனும் சுவர்க்கத்திலிருந்து ஊற்றெடுத்து வந்துள்ள அவற்றின் மீது தியானம் செய்வீராக, அதனால் புனித வாசகங்களின் பரிசுத்த ஆழங்களில் ஆலயித்துள்ள உத்தேசமான அர்த்தங்களை நீர் கிரகிக்கக்கூடும்.

இறைவனை நிராகரித்தும் தன்னுள் அது இருப்பது போல் இருக்கும் இயற்கையைப் பற்றிக் கொண்டும் உள்ளவர்கள், மெய்யாகவே, அறிவும் முன்மதியும் அற்றவர்கள்.  உண்மையாகவே அவர்கள் தூர விலகிச் சென்றவர்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் மிகவுயர்ந்த சிகரத்தை எட்டிப்பிடிப்பதில் தோல்வியடைந்தவர்களும், இறுதி நோக்கத்தை அடைவதில் வெற்றிபெறாதவர்களும் ஆவர்; இதன் காரணமாக, அவர்களிடையே இருந்த அவர்களது தலைவர்கள் கடவுளிலும் அவரது வெல்லமுடியாத இறைமையிலும் நம்பிக்கைக் கொண்ட அதே வேளை, இவர்களது கண்கள் மூடப்பட்டும் இவர்களது சிந்தனைகள் வேறுபட்டும் இருந்தன. ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவருமான உமது ஆண்டவர் இதற்கு சாட்சியம் பகர்கின்றார்.

கிழக்கில் உள்ள மக்களின் கண்கள் மேற்கில் உள்ள மக்களின் கலைகளாலும் அற்புதங்களினாலும் ஈர்க்கப்பட்டபோது, பொருள்வகை நோக்கங்களெனும் பாலையில், காரணங்களுக்கு மூலகாரணமானவரும், அவற்றை ஆதரிப்பவருமாகியவரைப் பற்றிய கவனமின்றி குழப்பமுற்றவர்களாக அலைந்து கொண்டிருந்தனர். அதே வேளையில், முன்மதியின் தோற்றுவாய்களாகவும் ஊற்றுக்களாகவும் விளங்கிய மனிதர்கள் இக்காரணங்களின்பின்னனியில் இயங்கிக்கொண்டிருந்த தூண்டுவிசையையோ, அல்லது சிருஷ்டிகர்த்தாவையோ அல்லது அவற்றின் தோற்றுவாயையோ மறுக்கவில்லை. உமது ஆண்டவர் உணர்ந்துள்ளார், இருந்தும் பெரும்பான்மையான மக்கள் உணராமல் உள்ளனர்.

இப்போது யாம், நாமங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனின் பொருட்டு, சாதுக்கள் ஒரு சிலரின் விவரங்களை இந்நிருபத்தில் அளித்திடும் பணியை மேற்கொள்கின்றோம். அதன் வாயிலாக மக்களின் கண்கள் திறக்கப்பட்டும், மெய்யாகவே அவரே செய்பவர், எல்லாம் வல்லவர், படைப்பாளர், ஆரம்பிப்பவர், எல்லாம் அறிந்தவர், சர்வ-ஞானி என அவர்கள் முழுமையாக உறுதியடையவும் கூடும்.

சமகாலத்து அறிவாற்றல் மிக்க மனிதர்கள் தத்துவஞானம், கலைகள் மற்றும் கைத்திறன்கள் ஆகியவற்றில் பெரும் தகுதிகள் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என அறியப்பட்டிருந்தபோதும், வேறுபடுத்தியுணரும் கண்களோடு எவரேனும் பார்ப்பார்களேயானால் இந்த அறிவின் பெரும் பங்கு அக்கடந்தகால சாதுக்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது என்பதை உடனடியாக உணர்வார்கள், ஏனெனில் தத்துவஞானத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்து, அதன் கட்டமைப்பைப் பேணி மற்றும் அதன் தூண்களை மறுவுறுதிப்படுத்தியவர்கள் இவர்களே ஆவார்கள். இவ்வாறாகவே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவரான உமது ஆண்டவர் உமக்கு உணர்த்துகிறார். கடந்தகால சாதுக்கள் தங்கள் அறிவை தீர்க்கதரிசிகளிடமிருந்தே பெற்றனர், ஏனெனில் தெய்வீகத் தத்துவங்களின் விளக்குனர்களாகவும் தெய்வீக மர்மங்களின் வெளிப்பாட்டாளர்களாகவும் இவர்களே இருந்துள்ளனர். மனிதர்கள் அவர்களின் தெளிந்த, உயிர்தரும் உச்சரிப்பெனும் நீரினைப் பருகினர், அதே சமயம் பிறர் அடிமண்டிகளைக் கொண்டு திருப்தியுற்றனர். ஒவ்வொருவரு அவரவர் தகுதிக்கேற்ப தங்கள் பாகத்தினைப் பெறுவர். மெய்யாகவே அவரே நடுநிலையாளர், ஞானி.

தத்துவ ஞானத்தில் பிரசித்தி பெற்றவரான எம்படோக்கல்ஸ், டேவிட்டின் சமகாலத்தவர். அதே வேளை, பைத்தாகரஸ் டேவிட்டின் புத்திரனான சாலமனின் காலத்தில் வாழ்ந்து, திருநாவுரைமை எனும் பொக்கிஷத்திலிருந்து முன்மதியினைப் பெற்றார். தான் விண்ணுலகங்களின் முனுமுனுக்கும் ஓசைகளைச் செவிமடுத்ததாகவும், தேவதூதர்களின் ஸ்தானத்தை எட்டிவிட்டதாகவும் உரிமைக்கொண்டாடியவர் இவரே. உண்மையாகவே, அவர் விரும்பினால் எல்லா விஷயங்களையும் உமது ஆண்டவர் தெளிவாக எடுத்துக்காட்டுவார். மெய்யாகவே, அவரே ஞானி, யாவற்றையும் வியாபிப்பவர்.

இறைத்தூதர்களிடமிருந்தே தத்துவஞானத்தின் சாரமும் அடிப்படைகளும் தோன்றியுள்ளன. அவற்றின் உள்படையான அர்த்தங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து மக்கள் வேறுபாடுகள் கொண்டுள்ளனர் என்பதற்கு அவர்களது கண்ணோட்டங்களின் மற்றும் உள்ளங்களின் வேறுபாடுகளே காரணமெனக் கொள்ளவேண்டும். பின்வருவதை யாம் உமக்கு மகிழ்வுடன் விவரிக்கின்றோம். ஒரு முறை, இறைத்தூதர்களில் ஒருவர் சர்வ-வல்லமை மிக்க ஆண்டவர் அவருக்கு உள்ளுணர்த்தியவற்றை தமது மக்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.

உண்மையாகவே, உமது ஆண்டவர் அகத்தூண்டுதலளிப்பவர், கிருபையாளர், மேன்மைமிக்கவர். அவரது உச்சரிப்பெனும் நீரூற்றிலிருந்து முன்மதியெனும் நீர்த்தாரையும் பேச்சாற்றலும் பீரிட்டு, தெய்வீக அறிவெனும் திராட்சைமது அவரது திருவாசலை நெருங்கியோர் அனைவரையும் மயக்கமுறச் செய்திட்டபோது: ‘அகோ! அனைவரும் ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளர்,’ என அவர் குரலெழுப்பினார். அங்கிருந்து மக்களில் ஒருவர் இக்கூற்றை இருகப் பற்றிக்கொண்டு, தமது வீண் கற்பனைகளால் தூண்டப்பட்டு, ஆவியென்பது உண்மையிலேயே உடலை ஊடுருவவோ அல்லது அதனுள் நுழையவோ செய்கிறது எனும் எண்ணத்தைத் தோற்றுவித்துக்கொண்டார்., மற்றும் விரிவான விளக்கவுரைகள் மூலமாக இக்கருத்தை நிலைநாட்டிட ஆதாரங்களை முன்வைத்தார்; கும்பல் கும்பலாக மக்களும் அவரது பாதையில் பின்தொடர்ந்தனர்.

இச்சமயத்தில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதோ, அல்லது இவ்விஷயம் குறித்து ஒரு விரிவான விவரிப்பை உமக்களிப்பதோ சொல்மிகைக்கு இட்டுச் சென்று, மையக்கருப்பொருளை விட்டு விலகிச் சென்றுவிடும். மெய்யாகவே, உமதாண்டவரே சர்வ-ஞானி, எல்லாம்-அறிந்தவர். அருளாளரும், பெருந்தன்மைமிக்கவருமான உமதாண்டவரின் செய்யுட்களை வெளிப்படுத்தியவரானவரது நாவின் திறவுகோலினால் தனது முத்திரை அகற்றப்பட்ட நனிசிறந்த திராட்சை மதுவினைப் பருகியவர்களில் ஒருவரும் இருந்தார்.

நாட்களுக்கெல்லாம் ஆதியானவரை தத்துவஞானியர் மெய்யாகவே, மறுக்கவில்லை. அவரது மர்மங்களை ஆழங்காணுவதில் தங்களது தோல்வி குறித்துப் புலம்பியவாறு அவர்களில் பெரும்பான்மையினர் மறுமை எய்தினர், என அவர்களில் ஒரு சிலர் சான்றளித்துள்ளனர். மெய்யாகவே, ஆலோசகரும், எல்லாம்-அறியப்பெற்றவரும் உமதாண்டவரே ஆவார்.

மருத்துவரான, ஹிப்போகிரேட்டிசைப் பாருங்கள். இறைவனில் நம்பிக்கை வைத்தும் அவரது மாட்சிமையை ஏற்றும் கொண்ட பிரபலமான தத்துவஞானியருள் இவரும் ஒருவராவார். இவருக்குப் பிறகு மெய்யாகவே முன்மதிமிகுந்தவரும், சாதனைகள் புறிந்தவரும், நேர்மையாளருமான சாக்கிரடீஸ் தோன்றினார். இவர் அகமறுத்தலைக் கடைபிடித்தார்; சுயநல இச்சைகளை அடக்கினார்; மற்றும் லௌகீக ஆசைகளிலிருந்து அப்பால் திரும்பினார். இவர் மலைகளுக்குப் பின்வாங்கி, அங்கு ஒரு குகைதனில் வாழ்ந்தார். சிலைவழிபாட்டுக்கெதிராக மக்களுக்கு அறிவுரை கூறி, இரக்கம் மிக்க ஆண்டவரான, இறைவனின் பாதைக்கு, அறிவற்றவர்கள் அவருக்கெதிராக பொங்கியெழும் வரை, வழிகாட்டினார்.  அவர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அவருக்கு விஷமிட்டுக் கொன்றனர். இவ்வாராகவே இத்துரிதமாக-நகரும் எழுதுகோல் எடுத்துரைக்கின்றது.

இச்சிறந்த மனிதர் தத்துவஞானம் குறித்து எத்தகைய கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார்! எல்லா தத்துவஞானியருள்ளும் இவரே அதி புகழ்வாய்ந்தவராகவும் விவேகத்தில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவராகவும் திகழ்ந்தார். இத்துறை சம்பந்தமான சான்றோர்களுல் இவரும் ஒருவரெனவும், அதற்காக பாடுபட்டோர்களில் இவர் தனிச்சிறப்பு வாய்ந்தவரெனவும் யாம் சாட்சியம் கூறுகின்றோம். அக்காலக்கட்டத்தில் மக்களிடையே நடப்பிலிருந்த விஞ்ஞானங்கள் பற்றியும், அதோடு மனிதர்களின் மனங்களுக்கு மறைக்கப்பட்டிருந்தவைகளைப் பற்றியும் இவர் ஆழமான அறிவு பெற்றிருந்தார்.

அதிபெரும் சமுத்திரமானது ஒளிரச் செய்வதும், உயிரளிக்கக்கூடியதுமான நீரினைக் கொண்டு கரைபுரண்டோடிய போது அதிலிருந்து இவர் ஒரு மிடறைப் பருகினாரெனவே யாம் எண்ணுகின்றோம். மனித ஆவிக்கு மிகவும் ஒப்பான ஒற்றுமையுடையதும், தனிச்சிறப்புடையதும், பக்குவமானதுமான ஊடுருவும் ஆற்றல்மிகு இயல்பொன்று எல்லா பொருட்களிலும் உள்ளது என இவரே முதன் முதலில் கண்டுணர்ந்தார். இவ்வியல்பு, வஸ்துக்களின் ஆக்கமைவுப்பொருட்களின் தூய்மையான நிலைகளிலினின்றும் தனிவேறுபட்டதாகும் எனவும் இவர் கண்டார். இம்முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து இவர் ஒரு விசேஷ அறிவிப்பும் செய்தார். இவ்விரிவுரைக் குறித்து இத்தலைமுறையினரில் லௌகீக விஷயங்களிள் அறிவுபடைத்தோரை நீர் வினவுவீராயின், அதைக் கிரகிப்பதில் அவர்களது இயலாமயை நீர் காண்பீர். மெய்யாகவே, உமது ஆண்டவர் உண்மைப் பேசுகின்றார் ஆனல் பெரும்பாலான மக்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

சாக்கிரடீசுக்குப் பிறகு பிலாட்டோ தோன்றினார். இவர் முன்னவரது மாணவரும், அவருக்குப் பிறகு தத்துவஞானபீடத்தில் அவரது பின்னமர்வாளராகவும் வீற்றிருந்தார். இறைவன் மீதும், இருந்துவந்துள்ளன மற்றும் வரப்போகின்றவை யாவற்றையும் வியாபித்துள்ள அவரது அடையாளங்களின் மீதும் இவர் தமது நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர். அதற்குப் பிறகு அறிவாற்றல் மிக்கவரென புகழ்பெற்ற அரிஸ்டாட்டில் தோன்றினார். வாயுக்களின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர் இவரே. மக்கள் தலைவர்களாக தனிச்சிறப்பும் அவர்களிடையே  பிரபலமும் பெற்ற இம்மனிதர்கள் அனைவருமே, எல்லா விஞ்ஞானங்களுக்கும் கடிவாளமாக விளங்கக்கூடியவற்றைத் தனது கரங்களில் பிடித்துள்ள அழிவற்றவராகியவரின் மீது தங்கள் நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர்.

தனது பச்சைமணிக் கல்வெட்டுகளில் சிருஷ்டியின் மர்மங்கள் பற்றி ‘தத்துவஞானத்தின் தந்தை’ முன்வைத்த புணைகருத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருந்த பாலினுஸ் வாய்மொழிந்த வேண்டுதலை உமக்காக யான் குறிப்பிடுகிறேன். இதன் மூலம், நியாயம் மற்றும் அறிவெனும் கரங்களினால் அழுத்தினால் எல்லா படைக்கப்பட்ட பொருட்களும் புத்துயிர்பெற உயிர்ஆவியை அளிக்கக்கூடிய இத்தெளிவான நிருபத்தில் யாம் உமக்காக மேற்கோளிட்டு விளக்கியுள்ள விஷயங்கள் குறித்து எல்லோரும் முழு உறுதியடையட்டும். இச்சமுத்திரத்தில் நீந்திக்கொண்டும் கிருபையாளரும் அதிநேசிக்கப்படுபவருமான தனது ஆண்டவரின் புகழைப் பாடிக்கொண்டுமிருப்பவரின் ஆசீர்வாதம் பெரியது. உமதாண்டவரின் செய்யுட்களிலிருந்து தெய்வீக வெளிப்பாடெனும் தென்றல்கள் வியாபித்திருப்பதானது, உண்மையாகவே, கேட்கும் சக்தி, பார்வை, அறிவாற்றல், மற்றும் எப்புலன்களுமற்றவர்களைத் தவிர அதன் உண்மைகளை மறுத்துரைக்கக்கூடியவர்கள் எவரும் இல்லை.  மெய்யாகவே இதற்கு உமது ஆண்டவரே சாட்சியமளிக்கின்றார், இருந்தபோதிலும் மக்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

இம்மனிதன் கூறியதாவது: முன்மதி மிக்கவனும், அற்புதங்கள் நிகழ்த்துபவனும், தாயத்துகள் தயாரிப்பவனுமாகிய பாலினுஸ் நானே! கலைகளையும் ஞானங்களையும் பரப்புவதில் இவரே அனைவரையும் விஞ்சி, பனிவு மற்றும் பிரார்த்தனைகளின் உச்ச சிகரங்களில் இவர் சிறகடித்துத் திரிந்தார். சகலத்தையும் கொண்டுள்ள, அதி மேன்மை மிகுந்தவரை இறைஞ்சி, அம்மனிதர் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்: ‘நான் என் ஆண்டவரின் முன்னிலையில் நின்று, என் வார்த்தைகளை ஒப்புக்கொள்ளும் மனிதர்களுக்குறிய ஆசிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கான தோற்றுவாயாக நான் ஆகிட, அவரது வெகுமதிகளையும் கொடைகளையும்  வாழ்த்தியும், எவற்றைக் கொண்டு அவர் தம்மைத் தாமே போற்றிக்கொள்கிறாரோ அவற்றையே கொண்டு அவரைப் போற்றியும் வருகிறேன்.’

அவர் மேலும் கூறியது:’ஆண்டவரே! நீரே கடவுள். உம்மையன்றி வேறு கடவுள் இல்லை. நீரே படைப்பாளர். உம்மையன்றி வேறு படைப்பாளர் இல்லை. உமது கிருபையால் எனக்கு உதவிபுரிந்து என்னைப் பலப்படுத்துவீராக. என் இதயத்தைத் திகில் ஆட்கொண்டுள்ளது, என் கைகால்கள் நடுங்குகின்றன, நான் என் அறிவை இழந்துவிட்டேன், என் மனமும் என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்குச் சக்தி அருளி என் நா முன்மதியோடு உரையாற்றிட உதவிபுரிவீராக. அவர் இதனினும் மேலும் கூறுவது: மெய்யாகவே, நீரே அறிவாளி, விவேகி, ஆற்றல்மிக்கவர், தயாளு.’ இம்முன்மதி மிக்க மனிதரே படைப்பின் மர்மங்களைப் பற்றி அறியப்பெற்றும் ஹெர்மத்திய நூல்களில் கோவில்கொண்டுள்ள நுட்பமான விஷயங்களை உணர்ந்திடவும் செய்தவர்.

மேற்கொண்டு எதையும் யாம் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால், திருஆவி எமது உள்ளத்தில் பதித்துள்ளவற்றையே யாம் குறிப்பிடுவோம். மெய்யாகவே, அறிந்தவரும், வல்லமைமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், அதிசிறந்தவரும், முழுமையாகப் போற்றப்படுபவருமான இறைவன் அவரின்றி வேறிலர். எமது உயிரின் மீது ஆணை! ‘மெய்யாகவே, ஈடினையற்றவரும், எல்லாம்-அறிந்தருமான இறைவன் எம்மைத் தவிர வேறு எவரும் இல்லை,’ எனும் இவ்வலியுறுத்தலைத் தவிர இந்நாளில் விண்ணுலக விருட்சம் வேறு எதனையும் உலகத்திற்குப் பிரகடனப்படுத்திட விரும்பவில்லை.
உம்மீது யாம் கொண்டுள்ள அன்பின்றி, இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒருவார்த்தையைக்கூட யாம் உச்சரித்திருக்கமாட்டோம். இந்த ஸ்தானத்தின் மதிப்பை மதித்துணர்ந்தும், உமது கண்ணைப் போல் அதைப் பாதுகாத்தும், உண்மையாகவே நன்றிமிகுந்தவர்களுல் ஒருவராக நீர் இருப்பீராக.

மனிதர்கள் பெற்றுள்ள நூல்களை யாம் கற்றதில்லை என்பதையும், அவர்களிடையே நடைமுறையிலுள்ள கல்வியையும் யாம் பெற்றதில்லை என்பதையும், நீர் நன்கு அறிவீர்.  இருந்தும், கற்றோர் மற்றும் முன்மதிமிக்கோர் மொழிந்துள்ளவைகளை யாம் குறிப்பிட விரும்பியபோதெல்லாம், உலகில் இதுவரை தோன்றியுள்ள மற்றும் புனித நூல்களிலும் சாஸ்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள யாவும் ஓர் ஏட்டுவில்லையின் உருவில், உமது பிரபுவின் முகத்திற்கெதிராகத் தோன்றும். இவ்விதமாகவே கண்கள் உணரக்கூடியவற்றை யாம் எழுத்தில் வடிக்கின்றோம். மெய்யாகவே அவரது அறிவு பூவுலகையும் விண்ணுலகங்களையும் சூழ்ந்துள்ளது.

இது இதுவரை இருந்துவந்துள்ளவை மற்றும் இனித்தோன்றப்போகின்றவை ஆகியவைக் குறித்த அறிவை அருவமானவரின் எழுதுகோல் வரைந்துள்ள ஒரு நிருபமே ஆகும். எமது அற்புத நாவினைத் தவிர வேறு எதுவுமே வியாக்கியனப்படுத்திட முடியாத ஓர் அறிவாகும் இது. மெய்யாகவே எமது இதயமானது உள்ளது உள்ளவாறு கற்றோரின் கருத்துக்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் விவேகிகளின் உச்சரிப்புக்களிலிருந்து புனிதப்படுத்தப்பட்டும் உள்ளது. மெய்யாகவே, அது இறைவனின் வெளிப்படுத்துதல்களைத் தவிர வேறு எதனையும் பிரதிபலிப்பதில்லை. இத்தெளிவுமிகு நூலில் பேராற்றல் மிக்கவரின் நா இதற்கு சாட்சியம் அளிக்கின்றது.
உலகமக்களே கூறுங்கள்! முன்மதி குறித்துப்பேசுவது அதன் தோற்றுவாயிடமிருந்து உங்களை விலக்கிவைப்பதிலிருந்தோ, அல்லது அதன் உதயஸ்தானத்தை அடைவதிலிருந்து உங்களைத் தடுப்பதிலிருந்தோ கவனமாயிருங்கள். கல்வியாளரும், சர்வ-விவேகியுமானவரான உங்கள் ஆண்டவரின் மீது உங்கள் இதயங்களை நிலைப்படுத்துங்கள்.
ஒவ்வொரு நாட்டிற்கும் யாம் ஒரு பங்கினை விதித்துள்ளோம், ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு பாகத்தை ஒதுக்கியுள்ளோம், ஒவ்வொரு அதிகார அறிவிப்புக்கும் ஒரு விதிக்கப்பட்ட நேரத்தையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்ததொரு விமர்சனத்தையும் வைத்துள்ளோம். கிரேக்க நாட்டைப் பாருங்கள். நெடுங்காலமாக அதனை முன்மதியின் இருப்பிடமாக்கியிருந்தோம். ஆனால், விதிக்கப்பட்ட நேரம் கூடியபோது, அதன் ஆட்சிபீடம் கவிழ்க்கப்பட்டும், அதன் நா உச்சரிப்பை நிறுத்திடவும் அதன் ஒளி மங்கிடவும் மற்றும் அதன் அறிவிப்புக்கொடி சாய்க்கப்படவும் செய்யப்பட்டது. இவ்விதமாகவே யாம் கொடுக்கவும் பின் அதை மீட்கவும் செய்வோம். மெய்யாகவே உமது ஆண்டவரே அளிப்பவரும் மீட்டுக்கொள்பவருமான, சக்திவாய்ந்த ஆற்றல்மிக்கவர்.
ஒவ்வொரு நிலத்திலும் யாம் அறிவொளிப்பிழம்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம் மற்றும் முன்நியமிக்கப்பட்ட நேரம் கைகூடும்போது, எல்லாம் அறிந்தவரும், சர்வ-ஞானியுமான இறைவனால் கட்டளையிடப்பட்டதுபோல் அது அதன் அடிவானத்திற்கு மேல் பேரொளியுடன் பிரகாசிக்கும். எமது திருவிருப்பத்திற்கு இனங்கியதாக இருப்பின், ஒவ்வொரு நிலத்திலும் இதுவரை தோன்றியவற்றையோ அல்லது கடந்துசென்றுள்ளவற்றையோ உமக்கு விவரிக்கும் முழு ஆற்றலை யாம் பெற்றுள்ளோம். மெய்யாகவே, உமது ஆண்டவரின் அறிவு விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் ஊடுருவியுள்ளது.
மேலும், தற்போதைய அறிவாற்றல்மிக்க மனிதர்கள் எவருமேஉருவாக்கமுடியாத பொருட்களை பண்டைய மக்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை அறிவீராக. கற்றோர்களில் ஒருவராக இருந்த முர்த்தூஸை உமக்காக யாம் நினைவுகூர்கிறோம். அறுபது மைல்கள் தூரத்திற்கு ஒலியை அனுப்பத்தக்க கருவி ஒன்றை அவர் உருவாக்கினார். அவருக்கடுத்து வேறு பலரும் இக்காலத்து மக்கள் கண்ணுறாத பல விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மெய்யாகவே உமது ஆண்டவர் தமது பங்குக்கு விவேகத்தின் சின்னமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தாம் விரும்பியதை வெளிப்படுத்துகிறார். உண்மையாக அவரே அதிவுயரிய ஆணையாளர், சர்வ-விவேகி.
ஓர் உண்மையான தத்துவஞானி கடவுளையோ அல்லது அவரது அடையாளங்களையோ மறுக்கமாட்டார், மாறாக, அவர் அவரது மகிமையையும் அவரது தடுக்கவியலாத மாட்சிமையையும் ஏற்றுக்கொள்ளவே செய்வார். மெய்யாகவே மனுக்குலத்தின் உயர் நன்மைகளை உயர்த்திடுவதற்குரிய விஷயங்களை வெளிப்படச் செய்துள்ள அறிவாற்றல் பெற்ற மனிதர்களை யாம் நேசிக்கின்றோம், மற்றும், எமது கட்டளைக்குட்பட்ட ஆற்றலின் மூலம் யாம் அவர்களுக்கு உதவிகளும் புரிந்தோம், ஏனெனில் யாம் எமது நோக்கங்களை நன்கு நிறைவேற்றிட இயன்றவராக இருக்கின்றோம்.

எமது அன்பிற்குறியவர்களே, மனிதர்களுக்கிடையில் ‘வடிவமைப்பாளர்’ எனும் அவரது நாமத்தின் விளக்குனர்களாக இறைவன் கருணைகூர்ந்து தேர்ந்தெடுத்துள்ள எமது கற்றுணர்ந்த சேவகர்களின் மதிப்பினை இகழ்வுபடுத்துவதிலிருந்து கவனமாயிருங்கள்
இளையவரோ முதியவரோ, எல்லோருமே பயன்பெறக்கூடிய குறிப்பிட்ட கைத்திறமுறைகளையும் பணிகளையும் உருவாக்கிட முழுவதும் சார்ந்த உங்கள் பெறுமுயற்சிகளில் ஈடுபடுங்கள். ஒருவரது வீண் கற்பனைகளுக்குக் கால்வாய்களாகவும் எல்லா மனிதர்களின் ஆண்டவரான இறைவனை மறுதளிக்கவுமே முன்மதியானது உள்ளது என மனப்பூர்வமாக கற்பனை செய்யும் அறிவிலிகளை யாம் துறந்துவிட்டோம்; இன்று, அதே நேரத்தில், அவ்வித வற்புறுத்தல்களை உரைத்திடும் கவனமற்றவர்களை யாம் செவிமடுக்கின்றோம்.

கூறுங்கள்: இறைவன் தெளிவாக வரையறுத்துள்ளவற்றை ஏற்றுக்கொள்வதே முன்மதியின் ஆரம்பமாகவும் அதன் தோற்றுவாயாகவும் உள்ளது, ஏனெனில் அதன் ஆற்றலின் மூலமாகவே, மனுக்குலமுழுமையின் பாதுகாப்புக்கான கவசமாக உள்ள ஆட்சிநயத்திறத்தின் அஸ்திவாரம், உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வற்புத நிருபத்தில் எமது அதிவுயரிய எழுதுகோல் பிரகடனப்படுத்தியுள்ளதை நீர் உணர்ந்திடுவதற்காக சற்று சிந்தியுங்கள். கூறுங்கள், ஆலோசிப்பிற்காக நீர் எழுப்பியுள்ள அரசாங்கம் சம்பந்தமான ஒவ்வொரு விஷயமும் அவரது மகிமைமிகுந்ததும் அதிவுயர்ந்ததுமான உச்சரிப்பெனும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வார்த்தைகள் ஒன்றின் நிழலின் கீழேயே அடங்கியுள்ளது. இவ்வாறாகவே, உமது உள்ளத்தை மகிழ்விக்கக்கூடியதும், உமது கண்களுக்கு ஆறுதல் வழங்கக்கூடியதும், மற்றும், எல்லா மக்களிடையேயும் அவரது சமயத்தை பரவச்செய்திட நீர் முன்னெழுவதற்கு உதவிடக்கூடியதுமான ஒன்றை யாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்.

என் நபிலே! எதுவுமே உம்மைத் துயருறச் செய்திட அனுமதியாதீர், மாறாக, யாம் உமது நாமத்தை உச்சரித்துள்ள காரணத்தினாலும், உம்மை நோக்கி எமது உள்ளத்தையும் முகத்தையும் திருப்பியுள்ள காரணத்தினாலும், இம்மறுக்கமுடியாததும் முக்கியமானதுமான விரிவுறையின் மூலமாக யாம் உம்மோடு உரையாடியுள்ள காரணத்தினாலும் நீர் எல்லையற்ற இன்பத்தால் மகிழ்வுறுவீராக. யாம் சுமக்க நேரிட்ட துயரங்களையும், யாம் அனுபவித்த சிறைவாசம் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றையும், எம்மைத் தாக்கிய துன்பங்களையும், மக்கள் எம்மீது சாற்றிய குற்றச்சாட்டுக்களையும் நீர் உமது உள்ளத்தில் எண்ணிப்பார்ப்பீராக. மெய்யாகவே பெரும் துன்பமளிக்கக்கூடிய மறைதிரையினால் இவர்கள் மூடப்பட்டுள்ளதைக் காண்பீர்.

உரையாடல் இக்கட்டத்தை எய்தியதும், தெய்வீகப் புதிர்களின் விடியல் தோன்றியது, பேச்செனும் ஒளியும் மங்கியது. சர்வ-வல்லவரும், சகல போற்றதலுக்கும் உரியவரான அவரால் பணிக்கப்பட்டவாறு முன்மதிமிக்க மக்களின் மீது அவரது மகிமை சாரட்டுமாக.

கூறுங்கள்: எனது கடவுளாகிய ஆண்டவரே, உமது நாமம் மிகைப்படுத்தப்படுமாக! மனுக்குலத்திடையே தெய்வீக வெளியிடுகையெனும் சுவர்க்கங்கள் நகரத்தொடங்கியதும் முன்மதியெனும் ஒளியின் புகழொளி எதன்வழி பிரகாசத்துடன் ஒளிர்ந்திட்டதோ, அதன்வழி உமது தெய்வீக உறுதிப்பாடுகளைக் கொண்டு எனக்குக் கருணைகூர்ந்து உதவிடவும், உமது ஊழியர்களிடையே உமது நாமத்தை நான் மகிமைப்படுத்திட எனக்கு உதவிடவும் உமது நாமத்தின் பெயரால் நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.

ஆண்டவரே! உம்மைத் தவிர  யாவற்றையும் துறந்தும் உமது பல்வகையான ஆசீகளெனும் அங்கியின் நுனியை இறுகப்பற்றிக்கொண்டும் நான் என் முகத்தை உம்மை நோக்கித் திருப்பியுள்ளேன். ஆகவே, மனிதர்களின் மனங்களை கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களையும் உணர்வுகளையும் களிப்புறச் செய்திடக்கூடியவற்றையும் நான் பிரகடனப்படுத்திட என் நாவைத் தளர்த்தி விடுவீராக. உமது படைப்பினங்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் ஏற்றத்தால் எனக்கு இடையூறு நேராமலோ, அல்லது, உமது இராஜ்ஜியத்தில் வாசம் செய்வோரிடையே உள்ள நம்பிக்கையற்றோர்களின் கடுந்தாக்குதல்களால் தடுக்கப்படாமலோ இருக்கும் வகையில் என்னை உமது சமயத்தில் வலுப்படச்செய்வீராக. உமது அறிவாற்றலெனும் ஒளி தணல்விட்டும், உமது அன்புக்கான ஏக்கம் நீடித்தும் இருக்கும் இதயங்களுடையோர் அதன் பிரகாசத்தால் வழிகாட்டப்படும் வன்னம் என்னை உமது நிலங்களினூடே ஒரு பிரகாசிக்கும் ஒளிவிளக்காக்குவீராக.

மெய்யாகவே, நீர் விரும்பியதைச் செய்வதற்கு நீர் வல்லமைபடைத்தவராகவும், படைப்பு இராஜ்ஜியத்தை உமது கைப்பிடியில் நீர் வைத்தும் உள்ளீர். சர்வ-வல்லவரும், சர்வ-விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-பஹாவுல்லாவின் நிருபங்கள்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: