இறைவனின் ரோஜா மலர்கள்


இறைவனின் அன்பெனும் பூங்காவிலுள்ள ரோஜா மலர்களே. அவரது அறிவின் ஒன்றுகூடலில் ஒளிவீசும் தீபங்களே. இறைவனின் மெல்லிய சுவாசக்காற்றுகள் உங்களை மோதிச் செல்லட்டுமாக, இறைவனின் ஜோதி உங்கள் உள்ளங்களின் தொடுவானத்தை பிரகாசிக்கச் செய்யட்டுமாக.

நீங்கள் அறிவெனும் ஆழக் கடலின் அலைகளாவீர், பற்றுறுதி எனும் புல்வெளியில் கூடி இருக்கும் படைகளும் ஆவீர், நீங்கள் இறைவனின் கருணை எனும் வானத்தில் உரைந்திடும் வின்மீன்கள் ஆவீர், முடிவான அழிவு நிலையிலுள்ள மக்களை ஓடச்செய்திடும் கற்களும் ஆவீர், நீங்கள் வாழ்வெனும் தோட்டங்களின்மேல் வீற்றிருக்கும் இறை கருணை எனும் மேகங்கள் ஆவீர், நீங்கள் படைக்கப்பட்ட யாவற்றின் சாரங்களின்பால் பொழியப்படும் இறை ஒருமைத்தன்மையின் அளவில்லா ஆதரவும் ஆவீர்.

திறந்திருக்கும் இவ்வுலகமெனும் ஏட்டில், நீங்கள் அவரது தனித்தன்மையின் வரிகள் ஆவீர் – நீங்கள் உயர்ந்த அரண்மனை கோபுரங்களின் மேல் தேவனின் கொடிகளும் ஆவீர். அவரது இரகசிய தோட்டத்தில் நீங்கள் பூக்களும் நருமணம் வீசும் செடிகளும் ஆவீர், ஆவியின் ரோஜாத் தோட்டத்தில் நீங்கள் சோக கீதங்கள் பாடிடும் இராப்பாடிகளும் ஆவீர்.

அறிவெனும் வானத்திற்குள் உயரப் பறந்திடும் பறவைகள் நீங்களே, இறைவனின் மணிக் கட்டின்மீது அமர்ந்திருக்கும் இராஜாளிகளும் நீங்களே. ஆகவே நீங்கள் ஏன் உற்சாகம் குன்றி இருக்கின்றீர்கள், ஏன் மௌனம், மனச்சுமையும் சோகமும் ஏன்?

நீங்கள் மின்னலைப் போன்று பளிச்சிட வேண்டும், பெருங் கடலைப் போன்று பேரிரைச்சல் செய்திட வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியைப் போன்று நீங்கள் ஒளி பாய்ச்சிட வேண்டும், இறைவனின் இளந்தென்றலைப் போல் நீங்கள் உலகெங்கும் வீசிடல் வேண்டும்.

தெய்வீக வனங்களில் இருந்து வீசிடும் இனிய சுவாசக்காற்றுகளைப் போலவும், தேவரின் பூங்காக்களிலிருந்து வீசிடும் கஸ்தூரி கமழும் மாருதங்களைப் போலவும், நீங்கள் அறிவுடையோருக்கான காற்றில் நறுமணம் கமழ்ந்திடச் செய்ய வேண்டும், மேலும் மெய்மை சூரியன் பொழிந்திடும் பிரகாசங்களைப் போல் நீங்கள் மனிதகுலத்தின் இதயங்களை பிரகாசிக்கச் செய்திடல் வேண்டும்.

ஏனெனில் நீங்கள்தாம் உயிர் தாங்கிவரும் மாருதங்கள், நீங்கள்தாம் மீட்கப்பட்டோரின் பூங்காவிலிருந்து வீசிடும் மல்லிகையின் வாசங்கள். ஆகவே இறந்தோர்க்கு உயிர் கொடுங்கள், உறங்கிட்டோரை விழித்திடச்செய்யுங்கள்.

உலக இருளில் பிரகாசிக்கும் சுடர்களாக இருப்பீராக – நரகமெனும் பாலையில் உயிர்கொடுக்கும் நீருற்றுகளாக இருப்பீராக, ஆண்டவராகிய தேவரிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாக இருப்பீராக.

இதுவே சேவை செய்ய வேண்டிய நேரம், இதுவே தீயைப்போல் உற்சாகமாய் இருந்திட வேண்டிய நேரம். இந்த வாய்ப்பின் மதிப்பை, எல்லையற்ற கொடையாக இருக்கும் இந்த பொருத்தமானநேரத்தின் மதிப்பை, உங்கள் கரங்களை விட்டு அது நழுவிச் செல்லும்முன் நீங்கள் அறிவீர்களாக.

நமது இந்த ஒரு சில நாட்கள், நமது மறைந்தோடிடும் வாழ்க்கை, விரைவில் கடந்துவிடும், பிறகு நாமும், வெருங்கையுடன், இனி பேச முடியாதவர்களுக்கென தோண்டப்பட்டிருக்கும் புதைகுழிக்குள் சென்றுவிடுவோம் – ஆகவேதான் நாம் வெளிப்படுத்தப்பட்ட அழகரோடு நம் இதயங்களை பிணைத்தும், என்றும் துவண்டிடாத உயிர்க்கொடியை பற்றிக் கொள்ளவும் வேண்டும்.

சேவைக்காக நாம் நம்மை தயார் செய்துகொண்டும், அன்பின் தீயை தீண்டிவிட்டும், அதன் அனலில் எரிந்திடவும் வேண்டும். இந்த பரந்த உலகின் இதயத்தையே தீமுட்டிடும் வரை நாம் நமது நாவுகளை தளர்த்திவிட வேண்டும், பிறகு வழிகாட்டுதல் எனும் பிரகாசமான கதிர்களைக் கொண்டு இருட்படைகளை மறைந்திடச் செய்யவேண்டும். அதன் பிறகு, தியாகம் எனும் களத்தில், நம் உயிர்களை, அவருக்காக நீத்திடவேண்டும்.

ஆகவே இறைவனை அறிதல் எனும் பொக்கிஷத்தின் மணிகளை எல்லா மக்களின்மீதும் தூவிடுவோம், பிறகு தீர்க்கமான வாள் எனும் நாவினைக் கொண்டும், குறிதவறா கனைகளெனும் அறிவைக் கொண்டும், அகங்காரம் மற்றும் உணர்வெழுச்சி ஆகிய படைகளை வென்று, உயிர்த் தியாக சதலத்திற்கு, தேவருக்காக உயிர் விடும் இடத்திற்கு நாம் விரைவோமாக.

அதன் பிறகு, பறக்கும் கொடிகளோடும், முரசுகளின் கொட்டு முழக்கத்தோடும், சர்வ-மகிமை மிக்கவரின் இராஜ்ஜியத்திற்கு விரைந்து, விண்படைகளோடு ஒன்று சேருவோமாக.

பெருஞ் செயல்கள் புரிவோர் நலன்தனை அடைவார்களாக.

(அப்துல் பஹாவின் புனிதவாசகங்களின் தேர்ந்தெடுப்புகள், பக்கம் 266-267)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: