நபில்-இ-அக்பர்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்

நபில்-இ-அக்பர்

நாஜாப் என்ற நகரத்தில், ஷேய்க் முர்தாடா எனும் புகழ் பெற்ற முஜ்டாஹிட்டின் சீடராக, ஈடிணையற்ற மனிதர் ஒருவர் வாழ்ந்தார்.

பிற்காலத்தில் நபில்-இ-அக்பர் எனும் சிறப்புப் பெயரை இறைத்தூதரிடமிருந்து பெறப்போகும் இவரது இயற்பெயர் அகா-முஹம்மத்-இ-காஃயினி என்பதாகும்.

இந்த மாபெரும் மனிதர் அந்த முஜ்தாஹிட்டின் மாணவர்கள் கூட்டத்திலேயே தலைச்சிறந்த அங்கத்தினராக விளங்கினார். அந்த மாணவர்களிலிருந்து நபில் மட்டுமே விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முஜ்தாஹிட் எனும் பட்டம் அளிக்கப்பெற்றார் — ஏனெனில் காலஞ் சென்ற அந்த ஷேய்க் முர்தாடா இந்த முஜ்ாடஹிட் எனும் பட்டத்தை எவருக்குமே கொடுக்க மறுத்து வந்தார்.

இவர் இறையியல் மட்டுமல்லாது, மனித இயல், புத்தொளிபெற்றோர் (இல்லுமினாட்டி) தத்துவங்கள், ஷேய்க்கீ பள்ளியின் இறையியல் வாதிகளின் போதனைகள் போன்ற மற்ற பல அறிவியல் பிரிவுகளாகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.

இவர் தமக்குத் தாமே தாம் ஒரு சர்வலோக மனிதர் என்பதற்கு நிறைவான ஆதாரமாக விளங்கினார்.

இவரது கண்கள் இறைவழிகாட்டுதல் எனும் ஒளிதனிற்கு திறந்திட்டபோது, சுவர்க்கத்தின் நறுமணங்களை இவர் சுவாசித்திட்டபோது, இவர் இறைவனது தீச்சுடர் ஒன்றென ஆனார்.

அவருள்ளே அவரது இதயம் துள்ளிக்குதித்தது; பேரானந்தத்தின் போதையிலும் அன்பின் போதையிலும், ஆழ்கடலின் பேருருவென உரக்கக் கர்ஜித்தார்.

புகழ்மாலைகள் இவர் மேல் மழையெனப் பெய்திட, தமது புதிய பட்டத்தை முஜ்தாகிட்டிடமிருந்து பெற்றார். பிறகு நாஜாஃப்பை விட்டு இவர் பாக்தாத் வந்தார்; அங்குதான் இவர் பஹாவுல்லாவைச் சந்திக்கும் பெரும் பாக்கியமும் பெற்றார்.

புனித மாவிருக்ஷத்தின் மீது (தேவதரு) பெருந்தனல்விட்டெரிந்தப் பேரொளியை இங்குதான் இவர் கண்டார். அதன் பிறகு இவர், இரவுபகலென ஒரு நிலையில் இல்லாத மனநிலையை அடைந்தார்.

ஒரு நாள், ஆண்களுக்கான பிரத்தியேக வெளிமாடத்தின் தரையில் பஹாவுல்லாவின் இல்லத்தில், அவரது சந்நிதியில் மதிப்பிற்குரிய நபில் முழந்தாழிட்டவாறு இருந்தார்.

அத்தருணம் கர்பிலாவின் முஜ்டாஹிட்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் உடந்தையாளராகிய ஹாஜி மிர்ஸா-அமு, பஃக்ரு’த்-தௌலே ஆகியவரான சைனுல்-அபிடின் காஃனுடன் உள்ளே வந்தார். பணிவுடனும் மரியாதையுடனும் நபில் அங்கு முழந்தாழிட்டு வீற்றிருந்த காட்சி ஹாஜியைத் திகைப்படையச் செய்தது.

ஐயா, இவ்விடத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என அவர் முணுமுணுத்தார். அதற்கு நபில் அவர்கள், “நீங்கள் இங்கு வந்துள்ள அதே காரணத்தை முன்னிட்டுத்தான் நானும் வந்துள்ளேன்,” எனப் பதிலளித்தார்.

அவ்விரு விருந்தினர்களும் தங்களது திகைப்பிலிருந்து மீளவே இயலவில்லை. ஏனெனில், இந்த உத்தமர் முஜ்தாஹிட்களிலேயே நனிசிறந்தவர் எனும் புகழ்பெற்ற ஷேய்க் முர்த்தாடா அவர்களின் பிரத்தியேக சீடராவார் என எங்கும் பரவலாகத் தெரிந்திருந்தது.

பின்னாளில், நபில்-இ-அக்பர் பாரசீகத்திற்குக் — குறிப்பாக அங்கு குஃராசான் நகருக்குச் — சென்றார். ஆரம்பத்தில், காஃ’யின் நகரத்தின் அமீரான – மீர் அலாம் காஃன் – அவருக்குச் சகல மரியாதைகளையும் செய்து, அவரது நட்பையும் பெரிதாக மதித்தார்.

அமீர் அளித்த விசேஷ மரியாதையாகப்பட்டது, அவர் நபிலின் வசமாகிவிட்டார் என மக்களின் மனதில் ஒர் எண்ணத்தை ஏற்படுத்தியது, மேலும் மெய்யாகவே இவர் அந்தப் பண்டிதரின் சொல்வன்மை, அறிவு மற்றும் புத்தி சாதுரியம் ஆகியவற்றின்பால் வசியமாகியிருந்தார்.

இதிலிருந்து நபிலுக்கு மற்றவர்கள் செலுத்திய மரியாதைகள்தாம் எத்தகையவை என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஏனெனில், “மனிதர்கள் தங்களது மன்னர்களின் நம்பிக்கையையே பின்பற்றுவர்.”

இவ்வாறே நபில் புகழோடும், உயர் இடங்களின் தயையைப் பெற்றவருமாக சில காலங்கள் கழித்தார். ஆனால், இறைவன்பால் இவர் கொண்ட அன்பாகப்பட்டது எல்லா ஒளிவுமறைவுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அது அவரது இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்பி, அனல் கொண்டு அதன் மூடுதிரைகளை எரித்துவிட்டது.
நான் கொண்ட காதலை மறைத்திட
ஓராயிரம் வகைகளில் முயற்சித்தேன்
ஆனால், பற்றி எரிகின்ற அந்தச் சிதையில்
நான் தீப் பற்றிக் கொள்ளாதிருப்பது எப்படி

இவர் அந்தக் கா’யின் வட்டாரத்திற்கு ஒளியைக் கொண்டு வந்தார்; மற்றும் பெருவாரியான மக்களை மதம் மாற்றிடவும் செய்தார். இப்புதிய நாமத்தால் இவர் புகழ் பெற்ற போது, அழுக்காறும் விரோதமும் கொண்ட மத குருக்கள், அதனால் உந்தப்பட்டு, இவர்மேல் குற்றஞ் சாற்றி, நாசிரி’த்தீன் ஷா குரோதத்துடன் எழும் வகையில் தங்களது அவதூறுகளைத் தெஹரானுக்கு அனுப்பினர்.

ஷாவின்பால் பயங்கொண்டிருந்த அமீர், நபில் அவர்களைத் தன் வலிமைகள் அனைத்தையும் பிரயோகித்து எதிர்த்தார். அந்த நகரம் முழுமையும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது, அதன் மக்கள் அனைவரும் குரோதத்திற்கு அடிமையாகி, இவர் மேல் பாய்ந்தனர்.

அந்தப் பரவசமுற்ற இறைநேசர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை, மாறாக, அவர்கள் அனைவரையும் எதிர்கொண்டார். ஆனால், இறுதியில், அவர்கள் தன்னை வெளியேற்றினர் – இவர்கள் யாவரும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுவிட்ட அந்த மனிதரை வெளியேற்றினர் – பிறகு இவர் தெஹரானை நோக்கிச் சென்றார். அங்கு இவர் நாடோடியாகவும் இருப்பிடமற்றவராகவும் இருந்தார்.

இங்கும் அவரது எதிரிகள் அவரை மீண்டும் தாக்கினர். காவலர்களால் இவர் பின்தொடரப்பட்டார் – சிப்பாய்கள் இவரை வீதி வீதியாகவும், முடுக்குகள் தோறும் விசாரித்து  எல்லா இடங்களிலும் தேடி, அவரைப் பிடித்து வதை செய்திட வேட்டையாடினர்.

ஒளிந்துகொண்டு, கொடுமைக்குட்பட்டோர் விடும் பெருமூச்சைப் போல் இவர் அவர்களைக் கடந்து மலைகளை ஏகுவார், அல்லது, தவறிழைக்கப்பட்டோர் விடும் கண்ணீரைப் போல், இவர் பள்ளத்தாக்குகளுக்குள் சென்று மறைந்திடுவார்.

தமது பதவியைக் குறிக்கும் தலைப்பாகையை இவர் தொடர்ந்து அணிய இயலவில்லை – தம்மை அவர்கள் அடையாளம் கண்டிடாது விட்டு விடுவார்கள் என ஒரு சாதாரண மனிதனின் தலைப்பாகையை அணிந்து மாறுவேடம் பூண்டார்.

தனிமையில், இவர் தமது ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகித்துச் சமயத்தைப் பரப்புவதும் அதன் ஆதாரங்களை முன்வைப்பதுமாக இருந்தார், பல ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் இவர் திகழ்ந்தார். எல்லா நேரங்களிலும் இவர் அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டார், எல்லா வேளைகளிலும் விழிப்போடும் தற்காப்புடனும் இருந்தார்.

அரசாங்கம் இவரைத் தேடுவதைக் கைவிடவே இல்லை, அல்லது மக்களும் இவர் விஷயத்தைப் பற்றி ஆராய்வதை நிறுத்தவில்லை.

பிறகு இவர் புக்காஃராவிற்கும் இஷ்காபாத்திற்கும், அப்பிராந்தியங்களுக்கான வழிநெடுகவும் சமயத்தைத் தொடர்ச்சியாக போதித்தவாறும்  சென்றார்.

ஒரு மெழுவர்த்தியைப் போல், இவர் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்; ஆனாலும் தமது சோதனைகளுக்குப் புறம்பாக இவர் தமது உற்சாகத்தில் தளரவில்லை, மாறாக அவரது பேரானந்தமும் ஆவலும் நாட்பட நாட்பட அதிகரிக்கவே செய்தன.

இவர் சொல்வன்மை பெற்றவர்; இவர் திறன்வாய்ந்த மருத்துவர்; எல்லா நோய்களுக்கும் ஔஷதமாகவும், எல்லாக் காயங்களுக்கும் ஒரு நிவாரணியாகவும் திகழ்ந்தார்.

இல்லுமினாட்டிகளை (புத்தொளி பெற்றோர்) அவர்களது சொந்தத் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்டே கற்பிப்பார், யோகிகளுக்குத் தெய்வீக வருகையைப் பற்றி, “அருட்கிளர்ச்சி” மற்றும் “தெய்வீகத் தோற்றங்களைக்” கொண்டு நிரூபிப்பார்.

ஷேய்க்கீ தலைவர்களைத் தங்களது காலஞ் சென்ற ஸ்தாபகர்களான ஷேய்க் அஹமது மற்றும் செய்யித் காசீமின் சொற்களைக் கொண்டே நம்ப வைப்பார், மற்றும் இஸ்லாமிய பண்டிதர்களைத் திருமறையின் வாசகங்களைக் கொண்டும், மனிதர்களை நேர்வழி நடத்திய இமாம் பெருமானார்களிடம் இருந்து வந்த போதனைகளைக் கொண்டும் மதமாற்றம் செய்திடுவார்.

இவ்வாறாகவே இவர் நோயுற்றோருக்கு ஓர் அற்புத மருந்தாகவும், ஏழைகளுக்கு ஒரு செல்வக் கொடையாகவும் ஆனார்.

இவர் புக்காஃராவில் வறிய நிலைக்கும் பல தொல்லைகளுக்கும் ஆளானார், இறுதியாகத் தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இவர் உயிர்த் துறந்து, இல்லாமை என்பதே இல்லாத இராஜ்ஜியத்திற்கு விரைந்தார்.

நபில்-இ-அக்பர் சமயத்தின் உண்மைகளுக்கு ஆதாரமளித்திடும் ஓர் அற்புதக் காவியத்தின் ஆசிரியர் ஆவார், ஆனால் அந்தக் காவியம் தற்போது அன்பர்களின் கைகளில் இல்லை.

அது தேடி எடுக்கப்பட்டு, கற்றோருக்கு ஓர் அறிவுரையாகத் திகழும் என்பதே என் அவா.

இந்த விரைந்தோடிடும் உலகில் இவர் எண்ணிலடங்கா இன்னல்களுக்கு ஆளானார் என்பதே மெய் — ஆயினும், பலம் வாய்ந்த அந்த மத குரு பரம்பரைகள், முர்தாடா, மிர்சா ஹபீபுல்லா, ஆயாத்துல்லா-இ-குராசானி, முல்லா அசாடுல்லா-இ-மசாந்தாரானி – இவர்கள் யாவரும் ஒரு தடையமுமின்றி மறைந்து போய்விடுவார்கள்.

இவர்கள் எந்தப் புகழையோ, தடயத்தையோ, பலன்களையோ விட்டுச் செல்லப் போவதில்லை. இவர்களிடமிருந்து ஒரு சொல் கூட உலக சந்ததியினருக்குப் போய்ச் சேரப் போவதில்லை; எந்த மனிதனும் இவர்களைப் பற்றி விவரிக்கப் போவதும் இல்லை.

ஆனால், தாம் இந்தப் புனித சயமத்தில் உறுதியாக நின்றதன் காரணமாகத் தாம் ஆன்மாக்களை வழிநடத்தி இந்த சமயத்திற்குச் சேவையாற்றி அதன் புகழைப் பரப்பியதன் காரணமாக, நபில் என்ற அந்த விண்மீன், நிலையான ஒளியின் தொடுவானத்தில் இருந்து என்றென்றும் ஜொலிக்கும்.

இறைவனின் சமயத்திற்கு வெளியே சம்பாதிக்கப்படும் எந்தப் பெருமையும் இறுதியில் தாழ்மையாகிடவே செய்யும் என்பது திண்ணம் – இறைவனின் பாதையில் சந்தித்திடாத சுகமும் செழிப்பும் இறுதியில் சுமையும் சோகமுமே ஆகும் – அத்தகைய செல்வங்களெல்லாம் வறுமையே அன்றி வேறெதுவுமில்லை.

வழிகாட்டும் ஓர் அறிகுறியான இவர், இறை அச்சத்திற்கு ஓர் அடையாளமாகத் திகழ்ந்தார். இந்தச் சமயத்திற்காகத் தன் உயிரைப் பணையம் வைத்தார், இறுதியில் தமது மரணத்தில் இவர் வெற்றியே அடைந்தார்.

இந்த உலகையும் அதன் சன்மானங்களையும் இவர் கடந்து சென்றார் – பதவி மற்றும் செல்வத்தின்பால் இவர் தமது கண்களை மூடிக் கொண்டார் – இத்தகைய பிடிப்புகள் பிணைப்புகள் எல்லாவற்றிலுமிருந்து இவர் தம்மை விடுவித்துக் கொண்டு, சகல உலகளாவிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்தார்

விசாலமாகக் கற்றவரும், ஒரே நேரத்தில் ஒரு முஜ்தாஹிட்டாகவும், ஞானியாகவும், யோகியாகவும், உள்ளுணர்வு சார்ந்த உட்பார்வை எனும் வரப்பிரசாதம் பெற்றவருமான இவர், வெற்றிகள் பல கண்ட வித்தகரும், இணையற்ற சொற்பொழிவாளரும் ஆவார். இவர் அதிஉயர்ந்ததொரு விஸ்வ சிந்தை படைத்தவர்.

இறுதியில், இவர் ஒரு தெய்வீகக் கொடையைப் பெற்றமைக்காக இறைவன் போற்றப்படுவாராக. எல்லாம் வல்ல இறைவனின் மேன்மை அவரைச் சாருமாக.

இவர் நல்லடக்கமாகியிருக்கும் ஸ்தலத்தின் மீது இறைவன் அப்ஹா இராஜ்ஜியத்தின் பிரகாசங்களைப் பொழிந்திடுவாராக. மீண்டும் ஒன்றிணைதல் எனும் சுவர்க்கத்தினுள் இறைவன் அவரை வரவேற்று, ஒளிச் சமுத்திரத்தில் மூழ்கச் செய்து, நேர்மையாளர்களின் இராஜ்ஜியத்தில் அவரை என்றென்றும் காத்தருள்வாராக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: