அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்


அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்

தமது தந்தையிடம் சேகரித்த விஷயங்களின் அடிப்படையில் மார்ஸியே கேய்ல் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரை.

மாலை வேளைகளில் நியு யார்க் நகரின் மேற்புறமாக உள்ள அந்த பழைய இடுகாட்டில் அவரும் நானும் நடப்போம். கல்லரைகள் எங்களைச் சூழ்ந்திருக்க, மரங்களின் கீழ் மேலும் கீழுமாக நடந்த வன்னம் இருப்போம். மறுமை வாழ்வைப் பற்றி நான் அவரிடம் வினவுவேன், அவர் அதற்கு பதிலளிக்க மாட்டார். ஒரு நாள் நான் பொறுமை இழந்து அவரிடம் கேட்டே விட்டேன்:

‘மாஸ்டர் அவர்கள், நான் உங்களோடு இருக்கும் போது பல விஷயங்களை கற்க முடியும் என்றார், ஆனால் நான் எதையுமே கற்க முடியவில்லை… நான் மறுபடியும் உங்களை கேட்கின்றேன்: இவ்வுலகில் நாம் நமது பௌதீக உடலால் அறியப்படுகிறோம்; மறுமை உலகில் நாம் எவ்வாறு அறியப்படுவோம்? மாஸ்டர் அவர்கள் நீங்கள் இதைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்வீர்கள் எனக் கூறியுள்ளார்.’

அதற்கு அவர்: நீர் என்னை வற்புறுத்துகின்றீர், நான் பதிலளித்தே ஆகவேண்டும். ஆனால் நான் அளிக்கும் பதிலினால் நீர் சந்தோஷப்படப்போவதில்லை.’

‘ஏன்’

‘ஏனென்றால், இறப்பிற்குப் பின் வரும் வாழ்க்கையை நீர் புறிந்துகொள்ள இயலாது.’

‘ஆனால் நான் ஷொப்பன்ஹோவர் மற்றும் காண்ட் ஆகியோரின் எழுத்துக்களை புறிந்துகொள்ள முடிகிறதே. கிரேக்கர்களை என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. இதை மட்டும் என்னால் புறிந்துகொள்ள முடியாது என ஏன் கூறுகிறீர்கள்?’
அதற்கு அவர்: நீர் இது குறிந்து கேள்வி கேட்கின்றீர் என்பதே இதை நீர் புறிந்து கொள்ளமுடியாதவர் என்பதற்கு ஆதாரம்,’ என்றார்.

அதன் பின், படைப்பினங்கள் வாழும் தளங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்த தளத்தை வர்ணிக்க பாஷை ஒன்று தேவைப்படுகிறது, என என்னிடம் கூறினார். பூவுலகில், இங்கிருப்பதை விட உயர்ந்த நிலையில் வாழும் ஆன்மாவின் வாழ்வைப் பற்றி விளக்கங்கள் அளிக்கக்கூடிய பரிபாஷை ஏதும் கிடையாது என்றார்.  அதன் பிறகு, அமர நிலை குறித்து எனக்கு பல வழிகளிலும் விளக்கமளிக்க முற்பட்டார். அவர் உபயோகித்த ஓர் உதாரணம் முதிர்ச்சி நிலை குறித்தது: ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி நிலை என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு தகுந்த மொழி கிடையாது என்றார். அக்குழந்தை குழந்தை பருவத்தைத் தாண்டி ஒரு முதிர்ச்சி நிலைய அடைந்த பிறகே அதை புறிந்து கொள்ள முடியும். ‘அமர நிலையை புறிந்துகொள்ளத்தக்க ஒரு நிலையை நாம் எப்படி அடைவது?’ என நான் கேட்டேன்.

‘சமயத்தை தொடர்ந்தாற் போன்று பக்தியுடன் ஒழுகி வருவதன் மூலம்,’ என அவர் பதிலளித்தார். ‘சிறுகச் சிறுக ஒருவர் அந்த ஞானத்தை அடையலாம். நீர் சேவை செய்கிறீர்; ஆகவே நீர் சரியான திசையில் செல்கிறீர். நீர் அந்த ஸ்தானத்தை புறிந்து கொள்ள நான் பஹாவுல்லாவை வேண்டிக்கொள்கின்றேன். ஆனால் அது கல்வி கற்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த (அமர) நிலை குறித்த ஒருவரது அறிவு அவரது செயல்களின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் அந்த அறிவு நிலையை எய்திவிட்டார் என மக்கள் மனதில் படுமே அன்றி அது வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாதது.

மிர்ஸா அவர்கள் அமெரிக்க சென்றது இதுவே முதன் முறை அன்று. பாரசீகத்தின் குல்பைகான் எனும் இடத்தில் 1844 அவர் பிறந்தார். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் கட்டளைகளுக்கினங்க சமயத்தைப் பரவச் செய்ய பல்வேறு இடங்களுக்கு அவர் சுமார் 30 வருட காலம் பிராயணங்கள் மேற்கொண்டார். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர் ஒரு சிறந்த கல்விமான் என்பது குறித்து அறிவிக்கப்பட வேண்டியதில்லை; ஹக்கீம்-ஹாஷீம் எனப்படும் தெஹரானின் முன்னனி அரபுப் பல்கலைக்கழகம் ஒன்று அவர் தலைமையில் இயங்கியது என்றும், மேலும் அங்கு அவர் தத்துவ ஞானம் பற்றி விரிவுரையாற்றினார் எனவும்; ஆயிரம் ஆண்டுகள் ஆன இஸ்லாமியக் கல்வி மையமான கைரோவின் புகழ்பெற்ற அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் அவர் இஸ்லாமியச் சான்றுகள் குறித்து ஒரு அதிகார நிலையில் இருந்தார் எனவும் (அத்தாரிட்டி), அங்கு அவர்கள் தாங்கள் இயற்றிய காரியங்களை பரிசீலனை செய்திட அவரை நாடினர் என்றும்; புதிய மற்றும் பழைய பாரசீக மொழிகளில் புலமை பெற்றவர் எனவும், அரபு மொழி வல்லுனர் எனவும், கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களை நன்கு அறிந்தவராகவும் அவர் விளங்கினார். 1876-இல் எட்டு மாத விவாதத்திற்குப் பிறகு சமயத்தை ஏற்றார், அதன் பிறகு சமயத்தின் போதனைகளை அச்சமின்றி போதித்ததன் பயனாக பல முறை சிறை சென்றும் மரண தண்டனை பெறக் கூடிய ஒரு நிலைக்கும் உள்ளானார். அமெரிக்காவிற்கு பிராயணம் செய்வதற்கு முன்பாக, பாரசீகம், துருக்கி, ரஷியா, கோக்கசஸ், தார்த்தரி, சிரியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அவர் பிரயாணம் செய்தும், போதித்தும், எழுத்துப் பணிகளும் செய்திருந்தார்; சமயத்தை சீனாவின் எல்லை வரையிலும் கொண்டு சென்றிருந்தார். தமது போதனைத் திறன்களுக்கு தமக்காக பஹாவுல்லா வெளிப்படுத்தியிருந்த ஒரு பிரார்த்தனையே காரணம் என அவர் சுட்டினார்: ‘பஃடல் அவர்கள் விவேகத்துடனும் விளக்கத்துடனும் தமது உண்மையை பொதிக்க உதவிடுமாறும், அவரது அறிவின்கண் மறைக்கப்பட்டும் அரும்பொருளாய் வைக்கப்பட்டும் உள்ளவற்றை திரைநீக்கம் செய்திடவும், யான் ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். மெய்யாகவே அவரே வலிமைமிக்கவர், வழங்குபவர்!’

நான் மட்டும் அப்துல் பஹாவையும் பாதுகாவலரையும் அறியாது இருந்திருந்தால், பஃடல் அவர்களே இவ்வுலகில் ஒரு மாபெரும் மனிதர் என நினைத்திருப்பேன். மாஸ்டர் அவர்கள் நான் அவரை விட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் எனக் கூறியபோது நான் விம்மி அழுதேன். என் துக்கம் பாரசீக முறையில் வெளிப்பட்டு அதன் பயனாக ஆக்கா நகரில் மாஸ்டர் அவர்களின் வீட்டுச் சுவற்றில் நான் என் சிரசை மோதிக்கொண்டேன். ‘மிர்ஸா அவர்களின் பெரும் கல்வி மற்றும் சமயத்தின்பாலான அவரது பக்தியை நோக்குங்கால் நீர் அவருடன் இருக்க இதுவே உமக்கு நல்லதொரு வாய்ப்பு, எனப் பிறகு அப்துல் பஹா கூறினார்.
அந்த நாட்களில் மாஸ்டர் அவர்களின் உதவியாளர்கள் மிகக் குறைவு, மற்றும் சமயத்தின் வேலைப் பழு அதிகரித்த வன்னமாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் என் சேவை அதிகமாகத் தேவைப்பட்டது. மாஸ்டர் அவர்களுக்காக இரவும் பகலுமாக சேவை செய்து வந்தேன். ஆனால், அந்த அமெரிக்கா சம்பந்தமான வேலை அதி முக்கியமானதாக இருந்தபடியால் அவர் என்னை என் கடமைகளிலிருந்து விடுவித்தார். 1901-ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது, திருமதி லுவா மற்றும் அவரது கனவருடன் நான் பாரீஸ் சென்றடைந்தேன். அங்கு மிர்ஸா அவர்கள் மே போல்ஸ் (பின்னாளில் திருமதி மே மாக்ஸ்வல்), லோரா பார்னி, ஜூலியட் தோம்சன், சார்ல்ஸ் மேசன் ரேமி, லிட்டல் சிகுர்ட் ரஸ்சல் மற்றும் ஏனைய நம்பிக்கையாளர்களுடன் இருக்கக் கண்டேன். மாஸ்டர் அவர்கள் என்னை உடனடியாக அமெரிக்கா செல்லும்படி உத்தரவிட்டார். நியு யார்க்கில், என்னை சிக்காகோ போகும்படி கட்டளையிட்ட, அப்துல் பஹா அனுப்பி வைத்த இரண்டாவது தந்தியைக் கண்டேன். இருண்டு மாதங்கள் சென்று மிர்சா அவர்கள் அங்கு என்னுடன் வந்து சேர்ந்துகொண்டார்.

சிக்காகோவில் நடந்தது இதுதான்: அந்த சிரியா நாட்டவரான, இபுராஹிம் கைருல்லா, புனர்ஜன்மம், கனவு விளக்கம், மாயவித்தைகள் போன்ற தமது சொந்து கற்பனைகள் பலவற்றை சமய போதனைகளுடன் சேர்த்து போதித்து வந்தார். அவர் இவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதி அதை அச்சிடுவதற்கு அனுமதி கேட்க ஆக்கா நகருக்கும் சென்றார். மாஸ்டர் அவர்கள் அவரை இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டுவிடுமாறு கூறினார். அவர் அவ்வாறு செய்து சமயத்தை மட்டும் ஒழுங்காக போதிப்பாரேயானால் அவர் ஒரு முன்னனி போதகராக திகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பி அப்புத்தகத்தை வெளிட்டார். நம்பிக்கையாளர்கள் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது; அப்பிளவை சரிசெய்ய மிர்சா அவர்களும் நானும் அனுப்பிவைக்கப்பட்டோம்.

சிக்காகோவில் நாங்கள் அசாடுல்லாவைச் சந்தித்தோம். அவர் அமெரிக்கவுக்கு எகிப்து நாட்டைச் சார்ந்த மிகவும் பற்று நிறைந்த இரு நம்பிக்கையாளர்களான ஹாஜி அப்துல்-காரிம் மற்றும் ஹாஜி மிர்சா ஹசான்-இ-குராசானி எனப்படுவோருடன் வந்திருந்தார். அவர் நன்கு அறிமுகமான ஒரு பொதகராக இருந்த போதிலும், கனவு விளக்கங்களும் மூட நம்பிக்கைகளையும் அவர் நம்பிக்கையாளர்களிடையே பரப்பிக் கொண்டிருந்தார். நம்பிக்கையாளர்கள், மிர்சா அபுல்-பஃடல் அவர்களோடு சிறிது பேசிய பிறகு அவர் ‘கடின சித்தமும் பகுத்தறிவு வாதமும்’ மிக்கவரென கூறினர். அசாடுல்லா ஆன்மீகமானவர், அவர் தங்கள் கனவுகளையெல்லாம் விளக்குகிறார் எனக் கூறினர். அவர்கள் மிர்சா அவர்களின் அரைக் கதவைக் கடந்து அசாடுல்லாவின் அரைக்கே செல்வர். அவர்கள் ஆவியினால் வழிகாட்டப்பட்டதாகவும், அல்லது அசரீரி ஒன்று அவர்களை தங்கள் சக நம்பிக்கையாளர் ஒருவர்பால் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்ததாகவும் சொல்வர். (மிர்சா அவர்கள் இவர்களை பேயோட்டிகள் என அழைத்தார்)

இந்த மாயஜாலங்கள் யாவும் அன்பரிடையே ஒரு பிளவையே உண்டாக்கும் என நாங்கள் நினைத்தோம். அவர்களில் பலர் சமய நம்பிக்கையில் இன்னும் உறுபடுத்தப்படாமல் இருந்தனர். நாங்கள் அவ்விஷயத்தைக் கலந்தாலோசித்து பின்வரும் வழியை பின்பற்ற முடிவு செய்தோம்: யாராவது எங்களிடம் வந்து, ஆவியினால் ஒரு காரியத்தை புரிய வழிகாட்டப்பட்டதாகக் கூறினால், சர்வலோக ஆவியே இன்று பஹாவுல்லாவிடம் வெளிப்பட்டுள்ளது, என நாங்கள் கூறினோம். உங்களுக்கு அசரீரியான காட்சிகள், அல்லது அனுபவங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை செய்யச் சொல்வது போல் தோன்றினால், அதை பஹாவுல்லாவின் வெளிப்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி கூறினோம். அச்செயல் சமய போதனைகளுக்கு ஒப்ப இருந்தால் அது உண்மையான வழிகாட்டுதலாகும், இல்லையேல் அது வெறும் கனவே.’

சிக்காகோவில், மிர்சா அவர்கள் வாரம் மூன்று வகுப்புகள் நடத்தினார். அதோடு நாங்கள் இருவரும் மேசனிக் மண்டபத்தில் வாரம் ஒரு முறையும் போதித்தோம். கிழக்கத்திய பஹாய் போதகர்களுக்கான மையமாக விளங்கிய எங்களது இல்லம், மேற்கு மொன்ரோ வீதியில் இருந்தது. அங்கு நாங்கள் சந்தித்த உறுதியான பக்திமிகுந்த நம்பிக்கையாளர்கள், தோர்ன்டன் சேஸ், அவரது செயலாளர், ஜெர்ட்ருட் புய்கெமா, குமாரி நாஷ், டாக்டர் பார்ட்லட், டாக்டர் தாட்சர், ஆர்த்தர் அக்னியு, திரு லேய்ஷ், அல்பர்ட் வின்டஸ்ட், திருமதி பிரிட்டிங்காம், திரு திருமதி சார்ல்ஸ் ஐயோவாஸ், கிரீன்லீஃப் எனப்படும் சிறந்த வழக்குறைஞரும் அவரது மனைவியும் ஆவர். அப்துல் பஹாவின் கடித வழி கட்டளையின் பேரில் திரு பீட்டர் டீலி அலபாமாவின் பேஃர்ஹோப்பில் இருந்து மிர்சாவுடன் சமய தீர்க்கதரிசனங்கள் மற்றும் அதன் பிற அம்சங்களை கற்க வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவின் முதல் பஹாயான திரு தோர்ன்டன் சேஸ் அவர்களைப் பற்றிய எனது முதல் ஞாபகம், எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்து ஒரு மூலை மருந்துக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று நான் மிகவும் வெறுத்த கொக்கக்கோலா பானத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதுதான். இது மருந்து, என நான் அவரிடம் கூறுவேன். ‘இல்லை,’ ‘இது நல்லதொரு பானம்; நீர் கண்டிப்பாக இதை விரும்பி அருந்தப் போகிறீர்,’ என அவர் கூறுவார். அவரது கூற்று தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

என் தந்தையாகிய, ஆரம்ப கால நம்பிக்கையாளர், ‘அப்துர்-ரஹீம் காஃன், தெஹரானின் நகர முதல்வராகவும், காவல் துறை தலைவராகவும் இருந்தபோது மிர்சா அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் பின்வரும் கதையைக் எனக்குக் கூறினார்: அவர், மிர்சா அபுல்-பஃடல், சமயத்தை ஏற்றக்கொண்ட போது, உற்சாகத் தீயில் மிதந்து கொண்டிருந்தார். சாயங்காலங்களில் அவர் அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குச் சென்று அங்கு மாடத்தைப் போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்து, பகிரங்கமாக சமயத்தைப் போதித்தார். ஒரு நாள் கிருஸ்துவ புரடஸ்ட்டன் பிரிவைச் சேர்ந்தவரும் தெஹரான் புரட்டஸ்டன் மிஷனோடு தொடர்புகொண்டவருமான ஓர் ஆர்மீனியர், அக்காப்பிக் கடைக்குள் நுழைந்து பஹாவுல்லாவைக் குறித்து மிகவும் தரக் குறைவாக ஏதோ கூறிவிட்டார். அதைக் கேட்டுத் தன் வசமிழந்த மிர்சா அவர்கள் கீழே குதித்து அந்த ஆர்மீனியரைத் தாக்கிவிட்டார். வெளிநாட்டுத் தூதரக வாரியத்திடம் அந்த மனிதர் பிராது ஒன்றை சமர்ப்பித்தார். அவர்கள் அதை காவல் துறையினரிடம் அனுப்பி மிர்சா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர். என் தந்தையாகிய கலாந்தர், ‘இவ்வித பிரச்சினைகளை நானே தீர்ப்பதுதான் நலம்,’ எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது பாதுகாப்பில் வைத்தார்; அவர் புரிந்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறினார்; மிர்சாவின் சமயநம்பிக்கையை மிகவும் பாராட்டுவதாகக் கூறினார், ஆனால் காலம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக காட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது காரியாலயத்திலேயே விட்டுவிட்டு அந்த ஆர்மீனியரை அழைத்து வர ஆளனுப்பினார். அவர் வந்தவுடன், “சிறிது நாட்களுக்கு முன் நமது மன்னர் கத்தோலிக்க சமயப்பணி மன்றத்தை எவ்வாறு மூடினார் என்பது உமக்கு ஞாபகத்தில் இருக்கின்றதா?” என வினவினார். மிர்சா அவர்கள் இந்த நாட்டு மதகுருமார்கள் மத்தியில் எவ்வளவு உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறார் என்பதை உமக்குத் தெரியும். மிர்சா அவர்கள் மேல் சாற்றப்படும் எந்த குற்றச்சாட்டும் மன்னரை கோபம் கொள்ளச் செய்வதோடு, அவர் உமது புரடெஸ்டன்ட் சமயப் பணி மன்றத்தையும் இழுத்து மூடிவிடுவார், நீர் உமது வேலையையும் இழக்கப் போகின்றீர். நீர் இப்போது எதை விரும்புகிறீர்? நான் மிர்சா அவர்களை தண்டிப்பதா அல்லது நீர் உமது வேலையை தக்க வைத்துக் கொள்வதா?” குற்றச்சாட்டுகள் அவசரத்துடன் வாபஸ் பெறப்பட்டன.

ஒரு நாள் மிர்சா அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பி என்னுடன் மிகவும் பனிவுடன் பேசினார். என் பின்னனியையும் குடும்பத்தையும் நன்குணர்ந்துள்ள அவர் மிகுந்த தயக்கத்துடனேயே ஒரு வாக்குறுதியை என்னிடமிருந்து பெற விரும்புவதாகக் கூறினார்: அதாவது சமயம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் நான் தலையிடக் கூடாது. அதற்கு நான், ‘மிர்சா அவர்களே, என் குடும்பத்தை உமக்கு நன்கு தெரியும், அதன் அங்கத்தினர்கள் எவருமே மகிமை மிகுந்த ஒருவரான உமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப்போவதில்லை. ‘எப்படியாயினும் நீர் வாக்குறுதி தாரும்,’ என அவர் வற்புறுத்தினார். நானும் வரப்போவது தெரியாமல் வாக்குறுதி அளித்தேன்.
1901 டிசம்பர் மாதம், நாங்கள் இருவரும் வாஷிங்டன் சென்றோம். அங்கு லோரா பார்னி அவர்கள் எங்களுக்கு தங்குமிடம் ஏப்பாடு செய்திருந்தார். எங்கள் அறைகள் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில் இருந்தன. மிர்சாவுக்கு இரைச்சல்கள் தாங்க முடியவில்லை; இதனாலேயே நாங்கள் வாஷிங்டனில் தங்கியிருந்த நான்கு வருட காலங்களில், இரைச்சல்களில் இருந்து தப்பிக்க அவர் பல முறை அவர் தமது தங்குமிடங்களை மாற்ற வேண்டியிருந்தது. அவர் தாம் எழுதிக்கொண்டிருந்த நூலில் கவனம் செலுத்த வேண்டியிருந்தபடியால், நாய்களோ அல்லது பிற குழப்பங்களோ (ஆனாலும் அவர் பூனைகளை விரும்புவார்) நிறைந்த மாடியின் கீழ்த்தளம் அவருக்கு பெரும் திகிலளித்தது.

அவரது உணவு கட்டிட உரிமையாளரினால் வழங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மிகக் குறைந்த அளவே உணவு உட்கொண்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. நாள் முழுவதும் கிழக்கத்திய தேநீர் வகை ஒன்றை தயாரித்து, அதுவும் நீரைப்போல, குடித்துக் கொண்டிருப்பார்; அவர் எகிப்திய சுருட்டு வகை ஒன்றை புகை பிடித்து வந்தார் (ஆனால் நண்பர்கள் அதை கண்டித்ததால் அவர்களுக்குச் சோதனையாக இருக்கக் கூடாத என விட்டுவிட்டார்); எப்போதாவது மெல்லிய பிஸ்கட் ஒன்றை உண்பார். அதனால் தாங்க முடியாத அந்த குளிரிலும் அன்னியமான சூழ்நிலையிலும் அவர் மிகவும் இளைத்துப்போக ஆரம்பித்தார். மாஸ்டர் அவர்களின் வேண்டுகோளின்படி அவர் எழுதிக்கொண்டிருந்த நூலை தொடர்ந்து எழுதும்படி நான் வற்புறுத்தி வந்தேன்; ஆனால் அவர் அதை செய்யக்கூடிய உடல் நிலையில் இல்லை என்பது தெரிந்த போதும், நான் அவருக்கு அளித்த வாக்குறுதியின்படி நான் எதிலும் தலையிட முடியவில்லை.

மிர்சா அவர்கள் சதா பிரார்த்தனையிலேயே லயித்திருப்பார். அவரது காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகள் பிரார்த்தனையிலேயே கடந்துவிடும். ஒரு முறை நான் அவரது அறைக்குச் சென்ற போது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டினேன் பதில் இல்லை. பிறகு கதவை உடைத்து உட்சென்ற போது, மிர்சா அவர்கள் தமது பிரார்த்தனையின் போது பிரக்ஞை இழந்துவிட்டதும், அவரது வாய் கிட்டித்துப்போயிருந்ததும் தெரிந்தது. அவர் அவ்விதம் மிகவும் கடுமையாகவும் உளம்இளகியும் வேண்டியதன் காரணம், அவர் இறைவனைப்பற்றி கொண்டிருந்த ஓர் அதி உயர்ந்த எண்ணமும் தம்மைத் தாழ்மையின் சாரமாக நினைத்ததுமே ஆகும். தெய்வீகக் கருனையினால் அருளப்பட்ட மிர்சாவின் ஜனனம், “உனது தேவரின் முகத்திலிருந்து பிரகாசிக்கும் கதிர்களின் ஒளியைத் தவிர வேறெதுவுமே காணக்கூடாத,” இந்நாளில் ஒரு பெரும் பாவம் என்பதே அவருடைய நம்பிக்கையாக இருந்தது.  ஒரு புனித ஆன்மாவாகிய நீர் இவ்விதம் அழுவதா? என நான் அவரிடம் கூறுவேன். நீரே ஒரு பாவி என்றால் நாங்கள் எல்லோரும் என்ன கதிக்கு ஆளாவது எனக் கூறினேன். அவர்: “நாம் பஹாவுல்லாவை வாழ்த்துவதற்கு தேவைப்படும் ஒரு மொழியாக பக்தியின் அளவை நீரும் அறிந்து கொள்ளும் நாள் வரும்”, என அவர் கூறினார்.

இறுதியில், மிர்சா மரணத்தோடு போராடிய காலம் வந்தது. மிர்சா அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்த லோராவின் தாயாரான பார்னி அவர்களிடம் நான் சென்றேன். நான் மிர்சாவிடம் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூறி, அதை அவர் ஏன் அப்போது வாங்கிக்கொண்டார் என எனக்குத் தெரியாது எனவும் கூறினேன்; அவர் அப்போதே ஒரு கோழியை சமைத்து, டெ சால்ஸ் வீதியில் இருந்த அந்த வீட்டிற்கும் கொண்டு வரப்படச் செய்தார். வந்தவுடன், விடுதித் தலைவியிடம் மிர்சா அனுப்பப்படும் உணவை ஏற்கிறாரா இல்லையா என வினவினார். ‘இல்லை, உணவுக்கு பணம் கொடுக்கிறார் ஆனால் அதைச் சாப்பிடுவதில்லை,” என பதில் வந்தது. அவர் பிறகு மேலே மிர்சாவிடம் சென்றார். நீங்கள் உணவு ஏதும் உண்பதில்லை என கீழே என்னிடம் கூறுகிறார்கள். ஒழுங்காக சாப்பிடாமல் நீர் உமது புத்தகத்தை எவ்வாறு எழுதப் போகிறீர்? எனக் கேட்டார். கண் புறுவத்திற்கு கீழே இருந்து அவரது சிறிய கூரிய கரு விழிகள் என்பால் பார்த்தன.

திருமதி பார்னி சென்றவுடன் அவர், ‘நீர் வாக்குறுதி அளித்தீர்,’ எனக் கூறினார்.

விடுதித் தலைவி அவரிடம் கூறினார் என நான் பதிலளித்தேன்.

உமக்கும் அதில் பங்கிருந்தது, என மிர்சா கூறினார்.

நீர் மரணத்தோடு போராடுவதை என்னால் காண முடியவில்லை என நான் கூறினேன்.

நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் என மிர்சா கூறினார்: ஒரு வீட்டைப் பற்றி அதில் 60 வருடம் குடியிருப்பவருக்கு நன்கு தெரியுமா அல்லது அதை அப்போதுதான் அறிந்தவருக்கு நன்கு தெரியுமா? அந்த இருவரில் அந்த வீட்டை யார் நன்கு அறிந்து வைத்திருப்பார்? ‘உண்மைதான், அந்த மனிதர் அதில் 60 வருட காலம் குடியிருந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் அது இப்போது ஒழுக ஆரம்பித்தும் சுவர்கள் இடிந்தும் குடியிருக்கத் தகுதியில்லாமலும் அல்லவோ போய்விட்டது,’ என நான் கூறினேன்.

மிர்சா சாப்பிடாமல் உடல் நலிவுற்றும், அமெரிக்க உணவையும் வாழ்க்கைைையயும் ஏற்க முடியாமல் இருந்தார்.  நான் அவருக்கு சேவை செய்வதையும் அவர் தடுத்து வந்தார். கடைகளுக்கு சாமான் வாங்க சென்றால் அவர் வாங்கும் பொருட்களைக் கூட தூக்கி வர விடமாட்டார். இறுதியில் பொறுக்க மாட்டாமல் நான் மாஸ்டர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். மிர்சாவின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் ஆன பொறுப்பு என்னால் பொறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. நிலைமையை உள்ளது உள்ளவாறு விளக்கி புத்தகம் எழுதும் வேலை சுனங்கிவிட்டிருப்பதையும் அப்துல் பஹாவிடம் எழுதினேன். பிரச்சினைக்குத் தீர்வாக மிர்சாவுக்கு உணவு தயாரிக்கவும் அவரது தேவைகளை கவனிக்கவும் ஒரு பார்சி உதவியாளன் இருந்தால் நல்லது எனக் கூறினேன். நான் போர்ட் சைட் வழியாக அமெரிக்கா வந்த போது, அங்கு பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அஹ்மத் யஸ்டியின் கடையில் வேலை பார்ப்பதைக் கண்டேன். அவன் பெயர் அஹ்மத்-இ-இஸ்பஃஹானி (பின்னாளில் அவன் தனது பெயரை அஹ்மத் சொஹ்ராப் என மாற்றிக்கொண்டான்) அப்பையன் தன்னை அமெரிக்கா அனுப்பி வைக்கும்படி மாஸ்டர் அவர்களை நான் வேண்டிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தான். இப்போது அவன் இங்கு வந்து மிர்சா கவனித்துக் கொள்ளலாம் என நான் மாஸ்டரிடம் கூறினேன். மாஸ்டர் அவர்களும் அவன் அமெரிக்கா வந்து மிர்சாவுக்கு சேவை செய்தும் பிறகு அவரோடு வீடு திரும்பலாம் எனவும் கூறினார். ஆனால் 1904-இல் மேக்நட் தம்பதியர், திருமதி ஜூலியா கிரன்டி, மற்றும் ஊட்கொக்களுடனும் அவர்களின் மகளுடனும் – மிர்சா நாடு திரும்பிய போது அஹ்மத்-இ-இஸ்பஃஹானி நாடு திரும்பவில்லை. அவன் மாஸ்டர் அவர்கள் 1912-இல் அமெரிக்கா வரும் வரையிலும் வந்து அவரோடு அவனை கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவன் அமெரிக்காவிலேயே இருந்தான். அப்போதும் அவனுக்கு நாடு திரும்ப விருப்பமே இல்லை.

எப்படியோ எங்கள் வேலை நடந்தது. எங்கள் வகுப்புகள் தவிர்த்து பொருளகத்திற்கு எதிரே இருந்த பழைய கோர்க்கோரன் கட்டிடத்தில் பஹாய் கூட்டங்களில் சொற்பொழிவாற்றுவோம். மிர்சா பேசும் போது நான் அருகே நிற்க, எழுந்து நின்றே சொற்பொழிவாற்றுவார். அவர் இயல்பாகவே சிறந்த சொற்பொழிவாளர்; மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேசுவார், அவரு பேசும் விஷயத்திற்குத் தகுந்தவாறு அவரது குரலும் மாறும், சில வேளைகளில் உரக்கவும் இருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் என் மொழிபெயர்ப்பு அவர் நினைத்தவாறு சரியாக இருக்கின்றதா, தெளிவாக இருக்கின்றதா; என என் உடல் அசைவுகளிலிருந்தும் அது செவிமடுப்போர்களில் என்ன விளைவினை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தும் தெரிந்து கொள்வார். சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிய பின் நான் அதை மொழி பெயர்த்திட தமது பேச்சை நிறுத்திக் கொள்வார்.

ஒரு சிறமான விஷயத்தை விளக்கிடும் போது, அது மனதில் நன்கு பதிந்திட மீண்டும் மீண்டும் அதே விஷயத்தையே பேசுவார். ஒரு நாள் ஒரு இளம் நம்பிக்கையாளர் மிர்சாவிடம் வந்து, ‘மிர்சா அவர்களே, நாங்கள் திறமைசாலிகள்தாம். நீங்கள ஒரு முறை ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் நாங்கள் அதை கிரகித்துக்கொள்ள முடியும். ஆனால் நேற்று இரவு நீங்கள் பேசியதைப் போன்று அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் நீங்கள் கூறினால் மக்கள் உங்களையும் எங்களையும் குறை கூறக்கூடும்,’ என்றார். மிர்சா அந்த இளம் பெண்ணுக்கு பனிவுடன் நன்றி கூறினார். ‘இது பேசப்படும் விஷயத்தை மேலும் தெளிவாக்கவே நான் அவ்வாறு செய்தேன்,’ எனக் கூறினார். சரி, இப்போது ஒரு சந்தேகம். நான் நேற்றிரவு எதைப்பற்றி மீண்டும் மீண்டும் கூறினேன்?’ என வினவினார். அந்தப் பெண் சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘எனக்கு ஞாபகமில்லை,’ எனக் கூறினார். ‘அதனால்தான் நான் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது,’ என மிர்சாவும் பதிலளித்தார்.

மிர்சா அவர்கள் ஒரு விஷயத்தை ஆழமாக ஆராய்வதில் நிபுணர் — வாதிடுவோரைச் சுற்றி ஒரு சுவற்றை எழுப்பி அவர்களை அதில் சிக்கிக் கொள்ளச் செய்து, ஒன்று தாம் கூறியவற்றை அவர்கள் ஏற்கவோ அல்லது அவர்கள் அறிவிலிகள் என்பதை ஒப்புக் கொள்ளவோ செய்திடுவார். சகல விதமான பண்டிதர்களும் அவருடன் வாதிடுவதை நான் கண்டேன். ஆனால் ஒரு முறை கூட அவர் தோற்றது கிடையாது. கிருஸ்தவ சரித்திரம், ஐரோப்பிய இறையியல் மற்றும் நுன்பொருள் கோட்பாட்டியல், அல்-அஸ்ஹாரில் அவர் பாண்டித்தியம் பெற்ற விஷயங்கள், ஆகியவற்றை அவர் ஆழக் கற்றிருந்தார். ஒரு முறை ஒரு கிருஸ்தவர் அவரிடம் வந்து நபி அவர்களை கடுமையாகச் சாடினார். அதற்கு மிர்சா: ‘முதலாம் நூற்றாண்டின் யூத மற்றும் ரோமானிய சரித்திர ஆசிரியர்கள் ஒருவர் கூட யேசு பிரானைப் பற்றி குறிப்பிடவில்லை எனவும், பலர் யேசு நாதரின் சரித்திரவாய்மைப் பற்றி சந்தேகப்படுவதாகவும் உங்கள் தலைமைத்துவம் கூறுகின்றது. ஜோசப்ஃபஸின் எழுத்துக்களில் ஏசு நாதர் குறித்து சில கிருஸ்தவர்களால் ஏதோ செருகப்பட்டதாகவும், ஆனால் அந்த ஏமாற்று வேலை பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் தெரியும். வேறு பலர் முதலாம் நூற்றாண்டிலேயே கிருஸ்தவ சமயம் சீனாவுக்கு பரவியதாகக் கூறும் ஒரு கல்வெட்டை அங்கு புதைத்தனர். ஆனால் அதுவும் ஏமாற்று வேலை என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறைத் தூதர் நபியவர்களைப் பொறுத்த மட்டில், அவர் சரித்திரவாய்மை பெற்ற ஏசுவை மட்டும் பிரகடணம செய்யவில்லை, அவரை 30 கோடி மக்கள் ஏற்கவும் செய்தார்; அவர்கள் அவரை ஒரு சரித்திர புருஷராக மட்டும் ஏற்காமல் அவரை இறைவனின் ஆவியாக  (ரூஹுல்லா) ஏற்கவும் செய்தார். இதையெல்லாம் பார்க்கும் போது, நீர் இப்போது சாடிக் கொண்டிருக்கின்றீரே, அந்த முகம்மது அவர்கள் உங்கள் சமயத்திற்கு கிருஸ்தவ சமயப் பிரச்சாரிகளை விட அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது தெளிவாகின்றதல்லவா?
பிரிவினையை ஏற்படுத்தும் எந்த ஒரு உரையாடலையும் மிர்சா ஊக்குவிக்க மாட்டார். ஒரு முறை ஒரு அன்பர் அவரிடம் வந்து வேறொரு அன்பர் சமயத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். மிர்சா அதை கவனத்துடன் கேட்டார். பிறகு தமது பதிலை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்குமாறு என்னிடம் கூறினார். ‘பஹாவுல்லாவே வாக்களிக்கப்பட்ட தெய்வீகப் படையினரின் நாயகர் என்பதை நீர் நம்புகிறீரா?’

‘ஆமாம்’.

‘நல்லது, அவர்தான் நாயகர் என்றார், இவர்கள் அவரது படையினர். அவரது படையினரைப் பற்றி குற்றம் பேசுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?’

மிர்சா அவர்கள் பஹாய் நிரூபணங்கள் எனும் அந்த நூலை எழுதச் செய்வதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் பக்கத்தையும் அவரிடமிருந்து பறிக்க வேண்டியிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அமெரிக்க நண்பர்கள், அது ஏன் நிறைய அறிமுகங்களையே கொண்டுள்ளது என கேட்கின்றனர். கிழக்கத்திய பண்டிதர்களின் மரபு முறை மட்டும் அல்ல இது, மிர்சா அதோடு சேர்த்து மேலும் ஒரு பெரிய நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். பொங்கும் அவரது அறிவுடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பெற்றிருப்பது சொற்பமே. மாஸ்டர் அவர்கள் மிர்சா அவர்களை நூலை எழுதச் சொல்லியும் என்னை அதை மொழி மாற்றம் செய்யும்படியும் கூறியிருந்தார். மிர்சா அவர்களும், மோசமடைந்து கொண்டே போன அவரது உடல் நலத்தையும் பாராமல், நூலை முடிக்காமல் அமெரிக்காவை விட்டு அகலவே இல்லை. அவர் மிகவும் கவனம் நிறைந்த, நுட்பத் திறமை வாய்ந்தவர். இருந்தும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் எந்த எழுத்தையும் அடிக்கமாலும் விரைவாகவே எழுதுவார். அவர் தமது தொடையின் மேல், பாரசீக முறையிலேயே, காகிதத்தை வைத்து நாணல் எழுத்தானி கொண்டு எழுதுவார்.

மிர்சா உண்மயிலேயே ஒரு தெய்வீகப் புலவர். தாம் இகான் நூலை பகுத்தறிவுக் கண்களுடன் 17 முறை படித்ததாகவும், ஆனால் அதன் வார்த்தைகள் அர்த்தமில்லாத வார்த்தைக் கோர்வைகளாகவே அவருக்குத் தென்பட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் பிறகு அவற்றை ‘பற்றுறுதியுடன்’ படித்த போது கடந்த கால சமய நூல்கள் அனைத்தின்  பூட்டுகளையும் திறக்கக்கூடிய சாவியை அதில் கண்டதாகக் கூறினார். இவ்வித விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பஃராய்ட்’ எனும் நூல் இன்னும் மொழி மாற்றம் செய்யப்பட வில்லை. 1914-இல் மிர்சாவின் மறைவுக்குப் பிறகு வாஷிங்கடன் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘அவரது ஆசீர்வதிக்கப்பட்ட இதயம், தகித்திருக்கும் ஒவ்வொருவரின் தாகத்தையும் தீர்க்கவல்ல,
மெய்மையும் குறிப்பிடத்தக்கவையும் நிறைந்த ஊற்றாகும்.’1 நூல் எழுதும் காரியம் மெதுவாகவே நகர்ந்தது எப்போதுமே அவருடையத் தவறாக இருந்ததில்லை. வகுப்புகள்–கூட்டங்கள்–அளவுக்கதிகமான விருந்தினர்கள் சந்திப்பு என நிறைய காரியங்ளை நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைச் சந்திக்க வருபவர்கள் அவருக்கு பூக்களும் பழங்களும் கொண்டு வந்தால் நிறையவே கோபப்படுவார். ‘இவற்றை இவர்கள் ஏன் எனக்காக கொண்டு வருகின்றனர்?’ எனக் கேட்பார். ‘நான் பஹாவுல்லாவின் அடியார்க்கு அடியான்தானே! எனக் கூறுவார். அவரது இத்தகைய பனிவின் அடிப்படையில் எழும் வார்த்தைகளை நான் மொழி பெயர்க்க மாட்டேன், ஏனெனில் அவற்றை கர்வத்தின் வெளிப்பாடுகள் என விஷயம் அறியாதவர்கள் நினைக்கக்கூடும். நானும் பழம் மற்றும் பூ கொண்டுவந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மிர்சா கூறியதை ஏன் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் அவரிடம் விளக்கிவிடுவேன்.

இரயில்களிலும் பொதுவிடங்களிலும் மக்கள் மிர்சாவை கவனிப்பார்கள். அவரும் அவர்களைத் தமது கூர்மையான, ஆழப் பதிந்த, கருமையான கண்களைக் கொண்டு பார்த்து புன்னகைப் புரிவார். எல்லா விஷயங்களையும் மிர்சா நுட்பமாக கவனித்தைப் போன்று கவனித்தவர் எவரையும் நான் கண்டதில்லை. அவர் எப்போது தவறமாட்டார். ஒரு முறை நான் சாமுத்திரிகா லக்ஷனங்கள் மூலம் ஒருவரது இயல்பைக் கண்டறியும் முறையைப் பற்றி லவாட்டர் எனும் ஜெர்மானியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். கீய்த் கூட அது ஒரு விஞ்ஞான முறைப்படியான விஷயம் அல்லவென கைவிட்டிருந்தார். அந்த வருடம் எமர்சனைப் போல் தோற்றமளித்த ஒரு முதியவரை கிரீன் ஏக்கரில் கண்டேன்; அவரது கடைவாய் சிறிது உறுதியற்று இருந்தாலும் அவருக்கும் எமர்சனைப் போலவே உயர்ந்த நெற்றியும் நீண்ட நாசியும் இருந்தன. லவாட்டரின் கூற்றுப்படி இவர் ஒரு பெரும் அறிவாளியாகவே இருக்க வேண்டும் என நான் மிர்சாவிடம் கூறினேன். மிர்சா என்னைப் பார்த்து புன்னகைத்து, ‘ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய ஞானம் கூட இவருக்கு இல்லையே,’ என்றார். ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘நானும் சாமுத்திரிகா லக்ஷனம் படித்துள்ளேன்,’ என்றார். ‘இருந்தாலும் என் சாமுத்திரிகா லக்ஷனம் பற்றிய எனது அறிவுக்கு இவர் கூர்மையான அறிவும் ஞானமும் பெற்றவராகவே இருக்கவேண்டும்,’ என நான் கூறினேன். அடுத்த நாள் காலை, எங்கள் வகுப்பிற்கு பிறகு அந்த மனிதர் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்வியிலிருந்தே அவரது ஞானம் துல்லியமாக வெளிப்படையாகி, அவர் குறைந்த அறிவு படைத்தவரே என்பதும் தெரிந்தது.

அமெரிக்காவில் நமது சமயத்திற்கு மிர்சா என்ன செய்துள்ளார் என்பதை எதிர்காலம் தீர்மாணிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையே நான் இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்; எவருமே அறியாத அவரது பயணங்களின் ஒரு சில பகுதிகளையே நான் எழுத்தில் வடித்துள்ளேன். மிர்சா அவர்கள் நாடு திரும்பியதும், அவர் விட்டுச் சென்ற காரியங்களை நான் தொடர வேண்டும் என மாஸ்டர் அவர்களின் கட்டளையினால் நான் எப்படி கதிகலங்கிப் போனேன் என்பதை எதிர்காலத்திலேயே மக்கள் உணர முடியும்.

அவர் மறைந்து பல காலங்கள் ஆகிவிட்டன. அப்துல் பஹாவும் நம்பிக்கையாளர்களும் அவரது மறைவினால் துக்கித்தனர். ஆனால் நான் அவரைக் காண்கின்றேன், அவர் இங்கு என் முன் இருப்பது போலவே தோன்றுகிறது. நல்ல உயரம், மெலிந்த தேகம், வெள்ளைத் தலைப்பாகை, இளம் பழுப்பு வண்ணத்தில் உடை. கலைத்திறன் மிகுந்த உணர்வுமிக்க ஆனால் அதே வேளை அறிவுத் திறனும்  ஆக்கமும் மிகுந்த அழகிய கரங்கள். உயர்ந்த நெற்றி, அசாதாரணமாக உயர்ந்திருந்த கண்ண எலும்பு, துறவியின் பார்வை, ரோஜா வாசனை.  மற்றும் அந்த சிறிய மிகக் கருமையான, கூர்ந்த கண்கள்.

ஆமாம், ஆனால் அவரது உண்மையான உயர்வைக் காண வேண்டுமென்றால் அவரை அப்துல் பஹாவின் முன்னிலையில்தான் பார்க்க வேண்டும். அந்த முன்னிலையில், அங்கு மிர்சாவின் அறிவு அவரை ஒன்றுமில்லா நிலைக்கு கொண்டு சென்றுவிடும். பரந்த சமுத்திரத்தின் கரைகளிலே அங்கு அவரை ஒரு சிறு கூழாங்கல்லாகவே காண்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: