படைப்புச்சக்திமிக்க இறைமொழி
(டாக்டர் பீட்டர் கான்)
அவைத்தலைவி அவர்களே, நண்பர்களே,
பஹாய்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக விளங்குகின்ற இந்த இடத்தில், இப்புனித கட்டிடத்தின் மண்டபத்தின் கீழ் ஒன்றுகூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய மாலைவேளையில், பல பழைய புதிய நம்பிக்கையளர்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
டாக்டர் கார்னி அவர்கள் அறிவித்ததைப்போன்று “படைப்புசக்திமிக்க இறைவார்த்தையின்” பரிபூரண மாற்றத்தின் சக்தி எனும் பொருள் பற்றி நான் பேசவிருக்கிறேன். பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு தன்னுள் பல புதிர்களை உள்ளடக்கியிருக்கின்றது என்றுதான் எனக்கு தோன்றுகின்றது, அதைப்பற்றி நமக்கு சிறிதளவே தெரிந்துள்ளது. கடவுள் அவதாரப்புருஷரின் வாயிலாக வருகின்ற திருவெளிப்பாட்டை புனித வாசகங்கள் விளக்குகின்றன. புனித வாசகங்கள் என்று நாம் கருதுகின்ற அந்த திருநூல்களின் ஒரு சில பகுதிகளே நமக்கு தெரிந்தவை.
உதாரணமாக, திருவெளிப்பாடு இறைதூதர்மீது பொழியும்போது, அந்த அருள் மழை மாபெரும் வேகத்தொடச்சியாகவும், பெரும்பாலும் இறைதூதரின் சுய விருப்பத்திற்கப்பாற்பட்டே சம்பவிக்கின்றது என நமக்குத் தெரியும். அத்தகைய அருள் மழை பொழியும்போது, பஹாவுல்லாவுக்கு அருகில் இருந்து அந்த திருவெளிப்பாட்டின் வரவைக் கண்ணுற்றவர்கள் அவர்மீது அந்த அருள் மழை எப்படி பொழிந்தது என்பதை விவரித்துள்ளனர் – பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட இறைவார்த்தைகள் பெருக்கெடுத்த வேகத்திற்கு ஈடுகொடுத்து எழுத முடியாமல் எப்படி அவரது செயலாளர்கள் திணறினார்கள் என்பதையெல்லாம் அவர்கள் விவரித்துள்ளனர். ஆக, நமக்கு அந்த திவ்விய அருள்மழையைப் பற்றி ஒன்று நிச்சயமாக தெரிகின்றது. அதாவது, அந்த அருள் மழை கடும் வேகத்தில் சம்பவிக்கின்றது. அந்த சம்பவத்தின்போது இறைமொழிகள் மடைதிறந்த வெள்ளம்போல் பிரவாகமெடுத்து அவை மனதிற்கு சவால் விடுக்கின்றன. நூற்றாண்டு காலங்களுக்கு தியானத்தின் மூலாதாரமாகவுள்ள மானிட ஆவியினை அந்த இறைமொழிகள் அதிர்ச்சியுறச் செய்கின்றன. ஆக, அந்த அருள் மழையின் ஒரு தன்மை கடும் வேகமாகும்.
அந்த திருவெளிப்பாட்டின் அருள் மழையோடு சம்பந்தப்பட்ட சக்தியான அந்த அருள்மழையின் இன்னொரு தன்மை. திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்ததை நேரில் கண்டவர்கள் அந்த அருள்மழையில் ஒரு மாபெரும் சக்தியை உணர்ந்ததாக விவரித்துள்ளனர். ஒரு மாபெரும் ஒளியினைக் கண்டதாக சிலர் சொல்லியுள்ளனர். வேறுசிலர் அதிர்ச்சியுற்றுவிட்டனர். ஈரான் நாட்டு உயிர்த்தியாகிகள் குடும்பம் என அழைக்கப்படும் வர்க்கா குடும்பத்தைச் சேர்ந்த வர்க்கா பஹாவுல்லாவின் முன்னிலையில் அனுமதிக்கப்பட்டபோது மயக்கமுற்று வீழ்ந்துவிட்டார். இந்ந அதிர்ச்சி, சக்தி எல்லாம் பஹாவுல்லாவின் சமயத்தில் மட்டும்தான் உண்டு என்பதற்கில்லை. முகம்மது நபியின் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது மாபெரும் சக்தி உணரப்பட்டதை இஸ்லாம் சமயத்தில் காண்கின்றோம். ஒருமுறை அண்ணல் முகமது நபி அவர்கள் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது அவர் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார். அந்த திருவெளிப்பாட்டின் சக்தியின் தீவிரத்தால் அந்த ஒட்டகம் மண்டியிட்டுச் சாய்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர். ஆக, அந்த அருள்மொழியின் இன்னொரு தன்மை மாபெரும் சக்தி என்பது நமக்கு தெரிகின்றது.
இந்த திருவெளிப்பாட்டின் மூன்றாவது தன்மை என்னவென்றால், அது பொழியப்படும் இறைதூதர் மீது ஏற்படும் அதன் பாதிப்புதான் அது. திருவெளிப்பாடு அண்ணல் முகமதுநபியின் மீது பொழிந்தபோது, அந்த அருள் மழையின் வேகத்தொடர்ச்சியின் தீவிரத்தால் எப்படியெல்லாம் அந்த அண்ணல் தமது போர்வையால் தம் முகத்தை மூடிக்கொண்டார் என்பதையெல்லாம் அங்கே சூழ்ந்திருந்தவர்கள் விவரித்துள்ளனர். அத்தகைய ஒரு சம்பவத்தின்போது முகமது நபியின் தோழர் ஒருவர் அவரது போர்வையை விலக்கிப் பார்த்தபோது அந்த அண்ணலின் திருமுகம் வேர்வை வெள்ளத்தில் இருந்ததைக் கண்டார். அந்த திருமுகம் செஞ்சிவப்பாக இருந்தது. திருவெளிப்பாட்டின் அதிதீவிரத்தால் அவர்தம் நெற்றியின் நரம்புகள் புடைத்து பெரிதாகி இருந்தன.
இம்மாலையில் இங்கு வந்திருக்கும் அன்புமிகு எட்னா ட்ரூவின் தாயாரும், தெய்வ சமயத்தின் திருக்கரமுமான கொரீன் ட்ரு அவர்கள், தாம் மாஸ்டர் அப்துல் பஹா அவர்களை சந்தித்த நிகழ்ச்சியை ஒருமுறை விவரித்துள்ளார். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்த ஒரு நிகழ்ச்சியையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட பாதிப்பையும் அப்துல் பஹா எடுத்துச் சொல்லியுள்ளார். அந்நிகழ்ச்சி குறித்து அப்துல் பஹா இப்படிச் சொல்லியுள்ளார் “ஆசீர்வதிக்கப்பட்ட பேரழகான பஹாவுல்லா தெய்வீக போதனையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த நாட்களில் அவர் மீது தெய்வீகத் திருவாக்கு சதா பொழிந்து கொண்டிருந்தது. அந்த தெய்வீகத் திருவாக்கின் பாதிப்பால் இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரால் மிகவும் சிறிதளவு உணவைத்தவிர வேறெதுவுமே சாப்பிட இயலாதிருந்தார். இறைதூதரின் மீது அந்த அருள் மழையின் பாதிப்பு இப்படித்தான் இருந்தது. அவரது இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரது நாளங்களுக்குள் இரத்தம் மிக வேகமாக பாயும். அவரது உடல் கடும் உதறலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டு அவரால் எதுவுமே சாப்பிட இயலாமல் போய்விடும்.
ஆக, திருவெளிப்பாடு பொழியும்போது ஏற்படும் ஒரு சிறு பகுதிதான் இந்த பாதிப்புக்கள். திருவெளிப்பாட்டு அருள் மழை என்பது ஒரு புதிரான ஜீவ அம்சம் என்பதைக் குறிக்க இந்த பாதிப்புக்கள் போதுமானவையே. கடும் உழைப்பின் பயனாகவும், மறு சரி பார்ப்புக்களினாலும், மாபெரும் சிந்தனை செலவழிப்புக்களினாலும், மிக மெதுவாகவும் உருவாக்கப்படும் மனிதனுடைய எழுத்துக்கோர்வையிலிருந்து இந்த இறை வாசகங்கள் வேறுபட்டவை என்பதைக் காட்ட அந்த பாதிப்புக்கள் போதுமானவையே. மாபெரும் சக்தியோடு இறைதூதரின் மீது பொழிந்து அந்த திருவுடலின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் திரு வெளிப்பாட்டு அருள்மழை என்பது ஒரு திடீர் சம்பவமாகும். ஆகவே, தேசிய ஆத்மீக சபை இந்த மாலையில் எனக்கு விடுத்த அழைப்பை ஏற்று இக்கருப்பொருள் பற்றி நான் பேசவிருக்கின்றேன். அந்தக் கருப்பொருள் பற்றி போசுவதற்கு முன்பதாக சமயத்தின் மூன்று அடிப்படை கோட்பாடுகளை விவரிக்க விரும்புகின்றேன். முதலாவது, படைப்பின் இயல்பு. இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடு. மூன்றாவது, பரிணாமம் எனும் கோட்பாடு. தெய்வீகத் திருவெளிப்பாட்டை போதுமான அளவுக்கு விளக்கிட எந்தவொரு முயற்சிக்கும் அடிப்படை இந்த கோட்பாடுகள்தான் என நான் நம்புகின்றேன். இந்த அடிப்படைக் கோட்பாடுகள் நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை கோட்பாடுகள் ஒவ்வொன்றைப்பற்றியும் சுருக்கமாக பேசிவிட்டு அந்த கோட்பாடுகள் எப்படி திருவெளிப்பாட்டுச் செயல்முறைக்கு பொருந்துகின்றன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
முதலாவதாக, படைப்பின் தன்மை நாம் வாழும் இவ்வுலகில் படைப்புச் செயலின் இரு ஜீவ அம்சங்கள் ஒன்றாகக் கலந்துள்ளன என அப்துல் பஹா அவர்கள் பல இடங்களில் அதனைப் பற்றி பேசும் பொழுது குறிப்பிட்டுள்ளர். அவற்றில் ஒன்று ஜடப் பொருள் எனும் வஸ்து. மற்றது உயிர்ப்பு சக்தி (ஆவி) . அவரது விளக்கங்களை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனென்றால், அவரது விளக்கங்கள் நடைமுறை வாழ்க்கையில் புழங்கி வரும் விளக்கங்களிலிருந்து மாறுபட்டவை. உதாரணமாக, அப்துல் பஹா அவர்கள் ஜடப்பொருளைப் (வஸ்து) பற்றி விவரிக்கும்போது, அதனை விசேஷ தன்மை கொண்டதாகவும், அமைதியான, ஐடமான ஒன்று என விவரிக்கின்றர். ஆகையால், அவரது விளக்கம் நமது விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பது புரிகின்றது. அதனை அவர் விவரிக்கும்போது இடத்ததை நிரப்பும் பொருள் என குறிப்பிடுகின்றார். ஒரு பௌதிக வல்லுணர் அதனை விளக்கும்போது, இடம் சம்பந்தப்பட்ட பொருளாகத்தான் அதனை குறிப்பிடுவார். அப்துல் பஹா அவர்கள் படைப்பின் இதர அமசங்களைப் பற்றியும் பேசுகின்றார். படைப்பை உயிர்ப்பு சக்தி எனக் குறிப்பிட்டு அதனை செயல்துடிப்பு, ஆக்கசக்தி, ஆன்மீக மற்றும் எல்லா ஜடப்பொருள்ளையும் ஊடுருவல்லது என விளக்குகின்றார் அப்துல் பஹா. அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நிருபங்களடங்கிய நூலில் படைப்பு என்பது ஜடப்பொருள், உயிர்ப்பு சக்தி இரண்டுக்கிடையே எற்படும் தொடர்புறவினால் ஆளப்படுவதுதான் என அப்துல் பஹா விளக்கியுள்ளார். இந்த விளக்கம் நம்மைச் சுற்றியுள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விளக்கம் என இப்போதைக்கு கருதிக்கொள்வோம்.
பெரும்பாலும் எல்லாருமே உயிர்ப்பு சக்தியைப்பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வர், அவர்கள் மண்வகை உயிர்ப்பு சக்தி, தாவர வகை உயிர்ப்பு சக்தி மற்றும் மிருக இன உயிர்ப்பு சக்தி உள்ளதை ஒப்புக்கொள்வர். பஹாய்கள் உட்பட பெரும்பாலான மக்கள் மிருக இன உயிர்ப்பு சக்திக்கும் மானிட உயிர்ப்பு சக்திக்கும் (மானிட ஆவி) உள்ள வேறுபாட்டை உணர்வர். இந்த வகையிலான உயிர்ப்பு சக்திகள் பற்றி விளக்கம் கேட்கப்படும் பொழுது, அவர்கள் மிருகம், மனிதன், மண், தாவரம் முதலிய ஒவ்வொரு பொருளோடும் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையே அந்தந்த உயிரினங்களுக்கு விளக்கங்களாக குறிப்பிடுவர். காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் மண்வகை, தாவர வகை, மிருக வகை முதலிய ஜீவ சக்திகளோடு சேர்த்து இன்னும் இரன்டு உயிர்ப்பு சக்தி (ஆவி)கள் இருப்பதாக பஹாய்கள் நம்புகின்றனர். அவற்றை நாம் நம்பிக்கை விசுவாசம் என்று ஒரு ஜீவ சக்தியாகவும், பரிசுத்த ஆவி என்று இன்னொரு உயிர்ப்பு சக்தியாகவும் கருதுகின்றோம். மேலே நான் சொல்லியுள்ள இதர உயிர்ப்பு சக்திகளின் வடிவங்களைத் தவிர்த்து தனித்தன்மை வாய்ந்த இந்த இரு ஜீவ சக்திகள் எல்லாம் வல்ல படைப்பாளியிடமிருந்து தோன்றுகின்றன. அதுவே நான் விவரிக்கப்போகும் மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடாகும். பஹாய் திருவாசகங்களின் பல இடங்களில் காணப்பட்டிருக்கும் இதுவே அடிப்படைக் கருத்தாக நான் கருதுகின்றேன். இந்த கோட்பாட்டை முழுமையாக சொல்லிய பிறகு அதற்கான சில உதாரணங்களை கொடுக்கின்றேன் பாஹாய் புனித வாசகங்களில் குறிக்கப்பட்டிருக்கும் காந்தசக்தி கோட்பாடு என நான் விளங்கிக்கொள்வது இதுதான். ஒரு தெய்விக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் ஓர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு அளவினை கவர்ந்து ஈர்க்கின்றது. நான் மீண்டும் அதனைக்கூறிவிட்டு சில உதாரணங்களைக் கொடுக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப ஒரு செயல் அல்லது ஒர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அந்த சம்பவம் உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு பகுதியை கவர்ந்திழுக்கிறது. இப்போது சில உதாரணங்களைச் சொல்கின்றேன். முதல் உதாரணம் அந்த காந்தம். எல்லாருக்குமே காந்தம், திசைக்காட்டும் கருவி என்பதெல்லாம் தெரிந்த ஒன்றுதான். அந்த காந்தத்தினுள் ஓர் ஒழுங்கு முறை ஒன்று உள்ளது. அங்கே அணுக்கள், மின்னணு முதலியவை உள்ளன. அங்கே காந்த ஈர்ப்புத்தன்மையின் ஆதிக்கம் ஒரு குறிபிட்ட ஒழுங்கு முறையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அந்த ஒழுங்குமுறை இந்த மண்ணுலகில் ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப உள்ளது. அந்த தெய்வீக நியதியை நீங்கள் காந்த சக்தியின் நியதி என்றோ, ஈர்ப்பு சக்தியின் நியதி என்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிட்டோ அழைக்கலாம். ஆனால், அது என்ன பெயராக இருந்தாலும், அது இயற்கையின் நியதி என்பதுதான் உண்மை. அந்த ஒழுங்கு முறை இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்குப் படுத்தப் பட்டிருப்பதால் அணுக்களின் அந்த ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்டுள்ள ஒரு பகுதியை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்கே உயிர்ப்பு சக்தியின் ஈர்ப்புக்கு மண்ணுலக உயிர்ப்பு சக்தி காந்த சக்தியின் ஒரு வெளிப்படையான தோற்றம் இது. நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் காந்தத்தினுள் அணுக்கள் ஒரு விஷேச முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு அமைந்திருப்பதால் அது இயற்கையின் நியதிக்கு ஏற்ற ஒரு சரியான அமைப்பு முறை. அதனால்தான் காந்தசக்தி அந்த உலோகத்தோடு தொடர்பு கொண்டுள்ளது.
நாம் இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு சாதாரண விதையை இப்பொழுது பாபர்ப்போம். செடி வளர்க்கப்படுவதற்காக தோட்டத்தினுள் தூவப்படுவது விதை. ஒரு விதையின் உள்ளே அடிப்படையிலேயே ஓர் ஒழுங்து முறை உள்ளது. அந்த சிறு சிதையை நாம் பிளந்து பார்த்தோமானால் அணுக்கள் பல ஒரு விஷேச முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும். அணுக்களின் குவியல் அங்கே ஒரு விஷேச முறையில் இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதால் அந்த சரியான அமைப்பு முறையானது உத்தரவிடப்பட்டுள்ள உயிர்ப்பு சக்தியினை கவர்ந்திழுக்கின்றது. உத்தரவிடப்பட்டுள்ள அந்த உயிர்ப்பு சக்தி என்ன? அதுதான் தாவர உயிர்ப்பு சக்தி. எனவே, தாவர உயிர்ப்பு சக்தி ஒரு விதையோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. காந்தசக்தி எனும் கோட்பாட்டினை மீண்டும் ஒருமுறை நான் வாசிக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் அல்லது ஓர் ஒழுங்குமுறை ஏற்படும்பொழுது, அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஓர் அளவினை ஈர்க்கின்றது. எனவே, காந்தத்தின் பரந்த அளவு விளக்கத்தினை நாம் பார்க்கும்பொழுது, அவ்விளக்கத்தின் ஒர் உதாரணம் விதையாகும். ஏனெனில், அந்த சிறு விதையில் அமையப்பட்ட ஒர் ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் ஒர் அளவினை ஈர்க்கின்றது. கருத்தரிக்கப்பட்ட மானிட சிசு மேலுமோர் உதாரணமாகும். கருத்தரிப்பின்போது ஆன்மா உலக வாழ்வுக்கு உருவெடுத்து வருவதாக பஹாய்களாகிய நாம் நம்புகின்றோம். இங்கே என்ன நடைபெருகின்றது என்பதைப்பார்ப்போம். இங்கு சினை, விந்து என்ற இரு இயற்கை அம்சங்கள் உண்டு. இந்த இரு அம்சங்களின் இணைப்பின்போது கருத்தரிப்பு உண்டாகின்றது. சினை கருத்தரிக்கப்பட்ட மானிட சிசுவாக கருவாகி உருவாகின்றது. இதன் பயனாக என்ன நடக்கின்றது? அணுக்களின் ஒழுங்கு முறை அங்கே உள்ளது. அந்த ஒழுங்கு முறை ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஓர் உயிர்ப்பு சக்திக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஒர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த உயிர்ப்பு சக்தியைத்தான் நாம் மானிட உயிர்ப்பு சக்தி என்றும் மானிட ஆவி என்றும் அழைக்கின்றோம். மீண்டும் ஒரு முறை காந்த சக்தியின் கோட்பாடு இங்கே இயங்குகின்றது. பஹாய் சமயத்தின் புனித வாசகங்களைக் கற்றிடும்போது எனக்கு புரிகின்ற விளக்கம் என்ன வென்றால், காந்த சக்தி என்பது இயற்கையின் நியதிகளுக்கு மட்டுமோ, அல்லது காந்த உலோகங்கள், விதைகள், கருத்தரிக்கப்பட்ட மானிடர் ஆகிய அம்சங்களுக்கு மட்டுமோ பொருந்தும் ஒன்றல்ல. கடவுளது இறைத்தூதர்கள் கொடுத்துள்ள தெய்வீக சட்டங்களக்கும் இந்த காந்த சக்தி பொருந்தும். அதாவது, எங்கெல்லாம் தெய்வீக சட்டம் இயங்குகின்றதோ அங்கெல்லாம் இந்த காந்த சக்தி கோட்பாடு வரும். இது இயற்கைச் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், கடவுளது இறைத்தூதர்களின் சட்டங்களுக்கும் பொருந்தும்.
மூன்றவது கோட்பாடு, பரிணாம் எனும் கோட்பாடு. பஹாய் புனித வாசகங்களைப்பற்றி அதிகம் தெரிந்துள்ளவர்கள் பரிணாம் எனும் கோட்பாடு பஹாய் நித்திய கோட்பாடுகளின் சாரம் என்பதை ஒப்புக்கொள்வர். அதாவது, காந்தம் என்பதை ஒரு மாபெரும் இசைவு பொருத்தத்தை, மாபெரும் ஒற்றுமையை, மாபெரும் ஒழுங்கு முறையை ஏற்படுத்தவல்ல உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. நமது உலோக காந்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். அதை நாம் கீழே போடுகிறோம் காந்தம் விழுந்த இடத்திற்கு அருகே இரும்புத்துகள்ளோ அல்லது காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட உலோகங்களோ இருந்தால், அவை காந்த உலோகத்தின் வட, தென் துருவங்களக்கு அருகில் ஒர் ஒழுங்கு முறையிலான அமைப்புடன் பொருத்தமாக ஈர்க்கப்பட்டிருக்கும். ஒரு மாபெரும் இசைவு பொருத்தம், மாபெரும் ஒழுங்கு முறை எல்லாம் அங்கே அணிவகுத்து நிற்கும். பரிணாமம் எனும் கோட்பாட்டின் இயக்கம் அங்கே இருக்கும். உலோக காந்தத்தின் இதே கோட்பாடுகள் விதை என்ற இன்னோரு காந்தத்தில் இருப்பதைக் காணலாம். அந்த விதை என்ற காந்தத்தோடு தாவர உயிர்ப்பு சக்தி தொடர்பு கொண்டுள்ளது. நாம் அழைத்திடும் காந்தத்தில் மென்மேலும் பல அணுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவாறு அமைந்திருக்கின்றன. இதன் பயனாக முதலில் இளந்தளிர், பிறகு செடி, அப்புறம் மரம் உருவாகும். மென் மேலும் அணுக்கள் ஒர் இசைவு பொருத்தத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு, அதன் பயனாக ஒற்றுமை சம்பவிக்கும். மானிட சிசு வளரும்போது இதே கோட்பாடுதான் இயங்குகின்றது. மானிட சிசு என நாம் அழைத்திடும் காந்த்ததோடு மானிட ஆவியானது பிறப்பு ஏற்படும் வரை மானிட சிசுவை மாபெரும் அளவில் வளர்த்து கொண்டே வருகின்றது. இசைவு பொருத்தம், மானிடபொருத்தம், மாபெரும் ஒற்றுமை வளர்ச்சி எல்லாம் சம்பவிக்கின்றது.
எனவே, பரினாமம் எனும் கோட்பாடு இயங்குகின்றது. இதனைத் தொட்டு பேசும்பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி குறிப்பிடுகின்றார்கள். “பரிணாம வளர்ச்சியின் போது, தனது வெளிப்படுத்துதலின் சாதனாமாக மானிட ஆவி எல்லையற்ற உபரிபாகங்களைக் கொண்ட அமைப்புக்களை அல்லது சரீரங்களை உருவாக்குகின்றது,” அப்துல் பஹா என்ன சொல்கின்றார் என்று எனக்கு என்ன படுகின்றது என்றால், பரிணாம வளர்ச்சியின் செயல்முறையின்போது, காந்தத்தின் ஒரு பகுதியான உயிர்ப்பு சக்தி, அந்த சக்தியின் வெளிப்படுத்துலுக்கான சாதனங்களையும், அமைப்புக்களையும், சரீரங்களையும் உருவாக்குகின்றது, கருநிலையிலுள்ள மானிட சிசுவோடு சம்பந்தப்பட்ட மானிட குழந்தையானது மானிட ஆவியை வெளிப் படுத்திக்காட்டும் ஓர் சாதனம் அல்லது வாகனம். இதுவே பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு என விளங்கிக் கொள்கின்றேன்.
இந்த மூன்று கோட்பாடுகளைப் பற்றி விளக்கிய பிறகு, அவற்றை நான் பேசப்போகும் தலைப்போடு தொடர்பு படுத்த வேண்டியதுதான் எனது வேலை. நான் பேச வேண்டிய தலைப்பு சக்திமிக்க இறைமொழி என்பதாகும். படைப்பு, காந்தசக்தி, பரிணாம் என்ற மூன்று கோட்பாடுகள் அவை. சுருக்கமாக சொன்னால், இந்த மூன்று கோட்பாடுகளும் இறைத்தூதரின் திருவெளிப்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானவை என்பது எனது கருத்தாகும். நான் ஏன் அப்படி சொல்கிறேன் எனறால், இறைத்தூதரிடமிருந்து வாருகின்ற திருவெளிப்பாடு ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப நிகழ்கின்றது என்பதுதான் காரணம். இறைத்தூதர் தமது திருவெளிப்பாட்டில் வெளியிடுகின்ற மெய்மையே தெய்வீக சட்டத்தின் வெளிப்பாடு. அது படைப்பு சக்திமிக்க சொல் என்று அழைத்திடும் இறைமொழியில் அடங்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாடு என்பது உயிர்ப்பு சக்தியின் மூலதாரம். ஏனெனில், அதுவே ஒரு காந்தம். அது ஏன் ஒரு காந்தம்? ஏனெனில், அது ஒரு தெய்வீக நியதியினைப் பின்பற்றுகின்றது அது ஒரு சொற்களஞ்சியம். திருவெளிப்பாட்டிலுள்ள சொற்கள் ஒரு நல்ல அகராதியில் இருக்கும். அந்த சொற்கள் வெப்ஸ்டர் அகராதியிலும் காணப்படுகின்ற வார்த்தைகள் தாம். ஆனால், திருவெளிப்பாட்டில் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அமைப்பில் உள்ளன. சாதரண அமைப்பு முறையில் இல்லாமல் இறைத்தூதர் வகுத்துள்ள ஓர் ஒழுங்கு முறையில் அவை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒழுங்குமுறையின் காரணத்தினால்தான் அந்த சொற்களஞ்சியம் ஓர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்புகொண்டுள்ளது. பரிசுத்த ஆவியின் சக்தி அந்த சொற்களஞ்சியத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த சக்தியைத்தான் நாம் படைப்பு சக்திமிக்க இறைமொழி என்று அழைக்கின்றேம். மனித சிசு என்பது கோடிக்கணக்கான அணுக்களின் கூட்டுத்திரட்டு. அந்த அணுக்களும் சாதரண அணுக்கள்தாம். ஆனால், அந்த அணுக்கள் அமையப்பட்டுள்ளது. அதே உவமானம்தான் திருவெளிப்பாட்டிற்கும். இறைதூதரினால் வழுங்கப்படும் வார்த்தைகள் அமையும் முறை, பரிசுத்த ஆவி அவற்றுடன் தொர்பு கொள்ளும் வகையில் அமையப்படுவதால் அவற்றை படைப்பு சக்திமிக்கசொற்கள் என அழைக்கின்றேம். பஹாவுல்ல இப்படிமொழிகின்றர், “எமது திருவாயிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனித கூட்டினுள் ஒரு புதிய வாழ்வினை வழங்கவல்ல அளவுக்கு ஆற்றலைக்கொண்டுள்ளது.” இன்னொரு இடத்தில் பஹாவுல்லா அவர்கள் இறைவனுடைய புதிர்களை இறந்து விட்ட உடல்களுக்கு ஒரு புதிய வாழ்வினை வழங்கவும் உயிர்வாழ்க்கையின் அமைப்புகளுக்கு பரிசுத்த ஆவியினை வழங்கவும் போதுமானது ஒரேயொரு வார்த்தை, என்று குறிப்பிடுகின்றார். மேலுமோர் அப்துல் பஹா அவர்கள் திருவெளிப்பாடு பற்றி பேசுகின்றார். அப்படி பேசும்பொழுது அவர் திருவெளிப்பாட்டினை தெய்வீக காந்தமாக விவரிக்கின்றார். அப்துல் பஹாவின் நிருபங்கள் என்ற புத்தகத்தில் அவர், ” இறைவனின் திருவாக்கினுடைய சக்தி எனும் தெய்வீக காந்தம் இதயங்களைக் கவர்ந்து ஆத்மாக்களின் மீது பேரின்பத்தையும் உற்சாகத்தையும் வழங்கும்,” என்று கூறுகின்றார்.
திருவெளிப்பாடுபற்றிய இன்னொரு அம்சம் என்னவென்றால், அதனுள் பரிணாம வளர்ச்தியின் கோட்பாடு உள்ளடங்யிருக்கிறது என்பதுதான். திருவெளிப்பாட்டின் சக்தி வயிலாகவும், அந்த இறைமொழிகளோடு ஒன்றரக் கலந்திருக்கும் ஆவியின் வாயிலாகவும் மாபெரும் ஒற்றுமை அமைப்பயையும் நம்மைச்சுற்றியுள்ள உலகில் நாம் காண்கிறோம். இறைவனின் திருவாக்கினை குறிப்பிட்டுப் பேசும் பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி மொழிகின்றார். “இறைவனின் திருவாக்கின்பால்தான் சகல மானிடமும் திரும்பவேண்டும். மானிட முழுவதிற்கும் அது ஒற்றுமையின் மையமாகும். அது மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்கு கூட்டு மையம், இதயங்களை இணைப்பதற்கும், தொடர்புறச் செய்வதற்கும் அது நித்திய வாழ்வின் மூலாதாரம், எனவே இங்குதான் நாம் இறைத்தூதரின் சுவடுகளைக் காண்கின்றோம். அவரது உடல் மண்ணில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மானிட உடல் வடிவில் அவர் இப்போது நம்மிடையே இல்லை. இறைத்தூதரோடு நாம் பிராத்தனைகள் வழியாகவும், தியானத்தின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். விண்ணுலகிற்கும் இறைதூதர் சிறகடித்து பறந்து சென்றுவிட்ட பிறகு, இவ்வுலகில் அவரது சுவடுகளை நாம் அவர்தம் திருவெளிப்பாட்டில்தான் காணமுடியும். நமது இதயங்களை இறைதூதரின் வார்த்தைகளின்பால் திறப்பதின்வழி, தியான நிலையில் நம்மை நாம் திருவெளிப்பாட்டிற்கு சரணடையச் செய்வதன் வழி, அந்த திரு ஆவியோடு நாம் தொடர்புகொள்கின்றோம். ஆவியினைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக நாமும் மாறிவிடுகின்றோம், பரிணாம வளர்ச்சியின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுகின்றோம். “மனித இனத்தின் ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு இணக்கமும், தொடர்பும் நிகழ்ந்தேறும்,” என அப்துல் பஹா கூறியுள்ளதற்கு நாம் வாகனமாக ஆகின்றோம். அந்த எல்லா கொட்பாடுகளுக்கும் முக்கியத்துவங்கள் உண்டு. உதாரணமாக, நாம் முழுதாக அடிப்படையிலே இறைவார்த்தைகளை பிரித்து உயர்த்திப்பார்க்க வேணண்டும். மானிட வார்த்தைகள் தெய்வீக வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும், மானிட வார்த்தைகள் ஒரு தேய்விக அமைப்பு முறையினை பின் பற்றுகின்றன என்றும் யார் கோரிக்கொள்ள முடியும்? முடியாது. ஏனெனில், இறைவனின் திருவாக்கு என்பது ஓர் ஆன்மீக காந்தத்தோடு தொடர்புகொண்டுள்ளது. இதன் பொருள் யாதெனில், இறைதூதரது வார்த்தைகளை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். அவற்றை புனிதமானதாகவும், பரிசுத்தமிக்கதாகவும், மரியாதைக்குரியதாகவும் பயபக்திக்குரியதாகாவும் கருதவேண்டும். ஏனெனில், இவ்வார்த்தைகள்,சாதாரண காகிதத்தாளில், சாதாரண அகரர்யில் காணப்படும் அதே சொற்கள் இங்கே இறைதூதரின் இறைமொழியாக ஓர் அமைப்பு முறையில் விளங்குகின்றது. அவற்றில் ஒரு மாபெரும் ஆன்மீக சக்தி தொடர்பு கொண்டுள்ளது. அறிவுக்காக மட்டும் திருவெளிப்பாட்டின்பால் நாம் திரும்ப்கூடாது உற்சாகத்திற்காகவும் நாம் அதன்பால் திரும்பவேண்டும். அறிவுக்காக ஒருவர் சில நேரங்களில் பஹாவுல்லாவின் நூல்களின்பால் திரும்பக்கூடும். வாழ்க்கைப்பற்றியும், இறப்புபற்றியும், ஆண் பெண்சமத்துவம் பற்றியும், இவ்வுலகின் எதிர்கால நிலைமை பற்றியும் பஹாவுல்லா என்ன சொல்கின்றார் என அறிவதற்காக ஒருவர் சமய நூல்களைப் படிக்கக்கூடும் ஆனால், நாம் சக்திக்காகவும், ஆன்மீக வாழ்வுக்காகவும் திருவெளிப்பாட்டு நூல்களின்பால் திரும்புவதுண்டு. தனிப்பட்டு களையிழந்து இருக்கும் நேரங்களிலும், உற்சாகமிழந்து, துணிவிழந்து இருக்கும் நேரங்களிலும் திருவெளிப்பாட்டின் நூல்களின்பால் நாம் திரும்புவதுண்டு. அத்தகைய நேரங்களில் நாம் அறிவுக்காக அந்தநூல்களை திறக்காமல் அவற்றில் உளளடங்கியுள்ள உயிர்ப்பு சக்திகாகவும் நாம் திருவெளிப்பாட்டின்பால் திரும்பவதுண்டு. அத்தகைய நேரங்களில் புனிதவாசங்காளாக இருந்தாலும் சரி, பிரார்த்தனைகளாக இருந்தாலும் சரி, ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூலாக இருந்தாலும் சரி, மறைமொழிகளாக இருந்தாலும் சரி, அல்லது பஹாவுல்லாவின் வேறெந்த நூலாக இருந்தாலும் சரி, அவை மனதிற்கு மனநிறைவையும், ஆறுதலையும் அளிப்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த புனித வார்த்தைகளின் பஹாவுல்லாவின் உயிர்ப்பு சக்தி ஒளிர்கின்றது அவற்றின்பால் நமது இதயம் கவர்ந்திழுக்கப்படுகின்றது.
நம்மில் சிலர் ஆர்வலர்களுக்கு திருவெளிப்பாட்டை அறிமுகம் செய்து வைக்க புதிய உத்திகளை கடைப்பிடிப்போம். ஆஸ்திரேலியாவிலும் பஸிபிக் தீவுகளிலும் மக்கள் எவ்வாறு திருவெளிப்பாட்டின் சக்தியினால் மட்டுமே சமயத்தின்பால் கவரப்பட்டனர் என்பதுபற்றி பல உதாரணங்களை போதிய நேரமிருந்தாலும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன், பீஜி நாட்டில் முதல் பஹாய் நம்பிக்கையாளர் எப்படி சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்பதை எனக்கு ஞாபகமிருக்கின்றது. 1950-இல் அல்லது 1951-இல், பீஜி நாட்டின் சுவா என்ற இடத்தில் எப்படி ஒரு முன்னோடி போனார், சுவா தகவல் ஒளிபரப்புக் கழகத்தில் எப்படி வேலை வாய்ப்பு பெற்றார், எப்படி எப்படி மக்களிடம் நட்புகொண்டு பழகலானார், ஆர்வமுள்ளவர்களுக்கு எப்படி சமயத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல ஆரம்பித்தார் என்பதையெல்லாம் நான் நினைவில் வைத்துள்ளேன். அந்த முன்னோடி வேலை செய்த தகவல் ஒலிபரப்புக் கழகத்தில் உள்ள சக தொழிலாழி சமயத்தில் ஆர்வம் காட்டினாராம். அக்காலத்தில் உள்ள பஹாய் சமயத்துண்டு பிரசுரங்கள் சிலவற்றையும், பஹாய் சமயத்தைப் பற்றி விளக்கும் கட்டுரைகளையும் அந்த முன்னோடி கொடுத்தாராம். அவர் அந்த கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் படித்தாலும் கூட அவர் சமயத்தின்பால் கவரப்படவில்லையாம். ஒரு நாள் முன்னோடி தாம் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு புனித வாசகத் தொகுப்பு நூலை கொண்டு வந்து தமது மேஜை மேல் வைத்திருந்தாரம் அங்கு வந்த அவரது நண்பர் அப்புத்தகத்தை திறந்து ஒரு சில வரிகளைப்படடித்து விட்டு “இதை நான் எடுத்துச் சென்று கண்டிப்பாக படிக்க வேண்டும். நான் இதைக் கொண்டு செல்லலாமா? “என்று கேட்டாராம். அந்த முன்னோடியும் “சரி” என்று அனுமதிக்கவே, அந்த நண்பரும் அப்புத்தகத்தை எடுத்த சென்றார். மறுநாள் புத்தகத்தைக் கொண்டு வந்து “நான் நம்புகிறேன், இப்பொழுது இது என் இதயத்தில் இருக்கிறன்றது” எனறாராம். இப்படிப்பட்டதுதான் திருவெளிப்பாட்டின் சக்தி. திருவெளிப்பாட்டடின் சக்தி பற்றிய உதாரணங்களில் இது ஒன்று. சமயத்தை சமய ஆர்வலர்களுக்கு போதிக்கும் போது திருவெளிப்பாட்டின் சக்தி பற்றிய கதைகள் பற்றி இங்கு குழுமியிருக்கும் நண்பர்கள் எத்தனையோ அநுபவங்களை சந்தித்திருப்பீர்கள். கடந்த ஆண்டின்போது ஆஸ்திரேலியாவில் (ஐக்கிய அமெரிக்காவில் கூட அது போன்று இருக்கக்கூடும்) சமயத்தைப் பொதிப்பதில் நமது அணுகுமுறை மாற்றப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் சமயத்தைப் போதித்தலில் நமது அணுகுமுறை பல வழிகளில் வழக்கமான ஒன்றாகத்தான் இருந்துவந்துள்ளது. அப்பொழுதெல்லாம் நாம் சமயத்தைப் போதிக்கும்பொழுது பஹாய் சமயத்தின் உலகளாவிய கோட்படுகள், உலக ஒற்றுமை, உலக உணர்வு, சமயங்களின் இணக்கம் விஞ்ஞானத்திற்கும் சமயத்திற்கும் இடையே இணக்கம், ஆண்பெண் சமத்துவம் மற்றும் இதர பொது விஷயங்கள் பற்றிதான் பேசுவோம். இத்தகைய உலகளாவிய கோட்பாடுகள் வழி மக்கள் பஹாய் சமயத்தை ஆய்வு செய்யவும், அதைப்பற்றி அக்கறையோடு எடைபோடவும் அவர்களை கவர்ந்திடுவோம். படிப்படியாக அவர்களும் இறைதூதரின் ஸ்தானத்தைப்பற்றி கேள்வி எழுப்பி, அவர்மீது நம்பிக்கைக்கொள்பவர்கள் சமயத்தை ஏற்று தாங்களும் ஒரு நம்பிக்கையாளர் என பதிவு செய்து கொள்வர். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நமது அணுகுமுறையும் முழுதாக மாறியுள்ளதுதான் நமக்குக் கிடைத்துள்ள வெற்றி. நாம் எப்படி அதை மாற்றினோம்? அது இப்படித்தான். ஆஸதிரேலியா என்பது இப்பொழுதெல்லாம் பொருள்வளமிக்க செல்வ செழிப்பு மிக்க ஒரு நாடு. சொல்வவளமிக்க, நகர்புற, நாகரிகமிக்க, கல்விகற்ற மக்களுக்கிடையே ஒர் ஆத்மீக பசி ஏற்பட்டுள்ளதை உனர்ந்துள்ளோம். அது ஓர் மாபெரும் ஆத்மீக தாகம். எனவே, இந்த சூழ்நிலைக்கு நமது அணுகுமுறை இப்பொழுது மாறுபட வேண்டாம்.
நாம் சர்வ சாதரணமாக சமயத்தைப்பற்றி ஒருவரிடம் பேசுவோம். மிக விரைவில் நாங்கள் அவருக்கு பஹாவுல்லாவின் ஆக்கசக்கமிக்க வார்த்தைகளை அறிமுகப்படுத்துவோம். ஒரு வருடத்திற்கு முன்பு விவேகமற்றது அவசரமிக்கது என நான் எதை கருதுவேனோ அதை அவருக்கு எடுத்துச் சொல்வோம். சமயத்தில் ஆர்வம் காட்டும் அந்த நபருக்கு நாங்கள் முதலில் கொடுக்கும் பத்தகங்களில் ஒன்று ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூல்தான். இதைக்கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனெனில், ஒவ்வொரு மனிதரும் மாறுபாடு மிக்கவர்தான். ஒருவருக்கு பொருத்தமில்லாத ஒன்றாக இருக்கும். ஒருவருடத்திற்கு முன்பு அதை நான் விவேகமற்றது என கருதினேனோ அது இந்த செயல்தான். இது மிகப்பொருத்தமான செயல்தானா என இவரும் என்னைக் கேட்டால், நான் “மிக ஆபூர்வமாக” என பதிலளிப்பேன். ஏனெனில், அந்த நூலின் ஆரம்பத்தில் முதல் இரண்டு பக்கங்களில் அகமது, மாமூட், முகமது என்றும், குர்-ஆன் மேற்கோள்களும் உள்ளன. சில சமூக பேதங்கள் கொண்ட சராசரி மேற்கத்திய நண்பருக்கு இதெல்லாம் பொருத்தமில்லாத விஷயங்கள். மூன்றாவது அல்லது நான்காவது பள்ளத்தாக்கிற்கு அந்நபர் சென்றால் கேட்கவே வேண்டாம் அவர் குழம்பிவிடுவார். என்ன நடக்கின்றது என்பது அவருக்கே தெரியாது. எதுவும் புரியாது. அத்தகைய தகவல் ஒரு நபரை துரத்திவிடும். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். இருந்தாலும், உண்மையில் இது உண்மை நிலையல்ல. நாம் சந்திக்கும் பெரும்பாலான மக்களுக்கு அக்கசக்திமிக்க திருமொழியினை அறிமுகப்படுத்தி, அதன் ஆவி அவர்களை ஓளிரச்செய்து அந்த ஆன்மீகப் பசியினை உரசட்டும் என்பதில் குறியாய் இருப்போம். தங்களுக்கு அந்த ஆன்மீகப் பசி உண்டென்பதை பெரும்பாலோர் ஒத்துக்கொள்வதில்லை, இப்படி அவர்களிடம் பேசும்பொழுது நாம் அவர்களிடம், “உங்களிடம் ஒரு மாபெரும் ஆன்மீக பசி உள்ளதை நான் உணருகின்றேன்,” என குறிப்பிடுவோம். அதற்கு, அவர்கள், “அது உண்மையல்ல, நான் கடவுளை நம்புவதில்லை. ஆன்மீக ஆற்றல்களையோ நான் நம்புவதில்லை. இதுபொன்ற விஷயங்களெல்லாம் பழமையானவை, அறையெல்லாம் மனநிலை விவாகாரம்” என்பார். இருப்பினும், பஹாய் போதனைகள் நமக்கு வழங்கிடும் கட்டொழுங்கின் உணர்வினால் அந்த ஆன்மீகப் பசியினை நாம் உணரமுடியும். கேட்கப்படாத அந்த கேள்வியினை நாம் எடுத்துரைக்க முடியும். தேடுபவரின் இதயத்தினுள்ளே இருக்கும் சொல்லப்படாத அந்த தேவையை நம்மால் எடுத்துரைக்க முடியும்.
நான் எனது தலைப்பின் இன்னொரு அம்சத்தைப்பற்றி பேசப்போகிறேன். அது திருவெளிப்பாட்டை புரிந்துகொள்ளுதலைப்பற்றியது. திருவெளிப்பாடு என்பது நாம் அனுபவப்படுகின்ற எல்லா விஷயங்களிலிருநஙதும் முற்றக மாறுபட்டது என்பதைத்தான் நான் சற்றுமுன்பு சொன்னேன். அதில் ஒரு தந்திரமான தன்மை உண்டு. அந்த தந்திரத்தன்மை என்னவென்றால் அந்த திருவெளிப்பாட்டின் வார்த்தைகள் சாதரணமாகத்தான் அச்சிடப்பட்டுள்ளன. மிகச்சாதாரண வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. பை பில் திருநூலின் புனித மத்தேயு சுவிசேசக்திற்கு ஏற்ப தமது வருகை குறித்து கோடிகாட்டியுள்ள மேகங்கள் இவைதான். தனிநபருக்கும் மெய்யான புரிந்துகொள்ளுதலுக்கும் இடையே மேகங்கள் என ஏசுநாதர் சொல்லியுள்ளார். திருவெளிப்பாடு மனிதர்களுடைய வார்த்தைகள் போன்றுதான் தோன்றும், மனிதர்களுடைய பேச்சுமொழியில்தான் இறைமொழிகள் வெளிப்படும் என்பதுதான் அந்த மேகம். இத்தகைய மேகங்களை யெல்லாம் ஊடுருவி அந்த மெய்யான திருவெளிப்பாட்டை கண்ணுறுவதுதான் நமது சாவல்களில் ஒன்று. அதனை நாம் அணுகிடும் முறையில் ஒரு மாபெரும் வேறுபாடு எழுகின்றது.
இங்கு அந்த மூன்று கோட்பாடுகள் சம்பந்தப்படுவதாக எனக்கு தோன்றுகின்றது. முதலாவது, திருவெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளல் என்பது எல்லையற்றது, முடிவற்றது என்பதைத்தான் பொதனைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. எந்தவொரு வேளையிலும் நாம் “நான் பஹாவுல்லாவினுடைய இந்த நூலை கற்று தேர்ந்துவிட்டேன். மறைமொழிகள், கித்தாப்-இ-இகான் அல்லது பஹாவுல்லாவின் மற்ற சில நூல்களைப் பற்றி எனக்கு இப்பொழுது முழுதாக புரிகின்றது,” என்று கூறிவிடவே முடியாது. புரிந்து கொள்ளுதல் என்பது எல்லையற்றது, பஹாவுல்லாவே இப்படி கூறுகின்றார். “கடவுளது (அவரது மகிமை உயர்த்தப்படுவதாக) திருவாக்கு சதாகாலமும் நீடித்திருக்கும் என நீங்கள் நம்புவதைப்போன்று, அதன் அர்த்தம் முடிந்துவிடாது என்பதையும் நீங்கள் சந்தேகமற்ற விசுவாசத்துடன் கண்டிப்பாக நம்பிவிடவேண்டும்,” இக்கூற்று நமக்கு மிகமுக்கியமான அம்சத்தை எடுத்துச் சொல்கின்றது. அதாவது, திருவெளிப்பாட்டை நாம் கற்பது ஒரு முடிவுக்கு வராது. நாம் வாழ்நாள் முழுவதுவே அக்கல்வியில் நாம் இன்பம் துய்க்கலாம். திருவெளிப்பாடு நமக்கு வழங்கவிருக்கும் விவேகத்தை நாம் பெறுகின்றோம். ஆதியில் எனது பின்னனி இஸ்லாம், பிற்காலத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் வீழ்ச்சியுற்றுவிட்டாலும், எனக்கு தூய்மையான ஆதிகால இஸ்லாமிய பாரம்பரியம் தெரியும். அன்றைய காலத்தின் பற்றுறுதிமிக்க நம்பிக்கையாளர்கள் எவ்வாறு திருக்குர்-ஆன் புனித நூலிலிருந்து தங்களது வாழ்வுக்கான ஆற்றலைப் பெற்றனர் என்பதையும் உணர்ந்துள்ளேன். அந்த புனித நூலை அவர்கள் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதும், இளைஞராய் இருக்கும்போதும், முதியவராய் இருக்கும்போதும், அடுத்த உலகிற்கு தங்களை தயராக்கிக்கொள்கின்ற வயதான காலத்திலும் படிப்பார்கள். அத்திருநூலைப்பற்றிய தங்களது புரிந்துகொள்ளுதல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என அவர்கள் கருதவேமாட்டார்கள். அதுபோன்றுதான், பொற்காலத்தை நோக்கி மலர்ச்சியுடன் முனனோக்கி நடைபோடும் பஹாய் சமயகாலகட்டத்திலும். நாம் பெற்றிருக்கும் புனித நூல்களை வாழையடிவாழையாக, தலைமுறையாக, நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம், தாங்கள் முழதும் வாசித்துக்கொண்டேயிருப்பார்கள். எந்தவொரு கட்டத்திலும் அவர்கள், “புனித நூல் கற்பது முடிந்துவிட்டது, ஒரு முடிவுக்கு வந்து விட்டது” என்று சொல்லவே மாட்டார்கள். ஏனெனில், திருவெளிப்பாட்டை புரிந்து கொள்ளல் என்பது உண்மையில் எல்லையற்றதாகும். இந்த ஓர் அம்சம்தான் திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காண்பிக்கின்றது.
இன்னொரு அம்சம் என்னவென்றால், திருவெளிப்பாடு பற்றிய ஆழமான அறிவு பெறுவதற்கு பிரதான தேவை ஆன்மீக அடிப்படையே அன்றி ஏட்டுப்படிப்பல்ல, தமது வார்த்தைகளை புரிந்துகொள்வதும், விண்ணுலகக் குயில்களின் திருமொழியினைவிளங்கிக்கொள்வதும் மானிட கல்வியை அடிப்படையாகக் கொண்டதல்ல என பஹாவுல்லா கூறுகிறார். அது உள்ளத்தூய்மை, ஆத்மாவின் புனிதம், ஆவியின் சுதந்திரத் தன்மை ஆகியவற்றை பிரதான அடிப்படைகளாகக் கொண்டது. இது மிக முக்கியமான அம்சம். அதனைப் பற்றி பிறகு மீண்டும் சொல்கிறேன்.
பஹாய்க் கல்விப்புலமை பற்றி நான் ஓரிரு வாத்தைகள் சொல்ல விரும்புகிறேன். பஹாய்களாகிய நாம் மானிடக் கல்விக்கு எதிரனவர்கள் அல்ல. திருவெளிப்பாடுபற்றிய நமது புரிந்துகொள்ளுதலோடு மானிடக் கல்வி தொடர்புகொள்வதை நாம் காணலாம். ஆனாலும், திருவெளிப்பாடு பற்றிய ஓர் ஆழ்நிலை கல்விக்கு, அதனைப்பற்றிய ஒர் ஆழமான புரிந்து கொள்ளுதலுக்கு ஒருவரது ஏட்டுக் கல்வித் தகுதி பிரதான அடிப்படைத் தேவையாகாது. திருவெளிப்பாடு பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுதல் என்பது நமது எந்த விதமான ஏட்டுக்கல்வி பாண்டித்யத்தையும் பொறுத்தது அல்ல. ஒருவர் எழுத்துப்படிப்பு வாசனையே இல்லாமலிருக்கலாம். ஆனால் அப்படியிருந்தும்கூட அவருக்கு திருவெளிப்பாடுபற்றி ஆழமான புலமை இருக்கும். ஏட்டுக்கல்வியற்ற எத்தனையோ நம்பிக்கையாளர்கள், தங்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தி, தங்களது உயிர்ப்பு ஆவியினை பரிசுத்தப்படுத்தி, கனல்மிகுந்த ஆவலுடனும், பக்தியுடனும், பணிவுநிலையிலும், கடவுளின்பால் வழிகாட்டலுக்காகவும், உதவிக்காகவும் பிரார்த்தித்து அதன் வழி அவர்கள் மாபெரும் விவேகத்தையும், மாபெரும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுள்ளனர். இப்படி பல உதாரணங்கள் உண்டு. இங்கு முக்கியமான கருத்து என்னவென்றால், எவரும் திருவெளிப்பாடுபற்றிய புரிந்துகொள்ளலைப் பெறலாம். ஏனெனில், படிப்பறிவு இல்லாதவரும் சரி, எமுதப்படிக்கத் தெரிந்தவரும் சரி, கல்வி பெற்றவரும் சரி, கல்வியறிவு இல்லாதவரும் சரி, ஒவ்வொருவரின் மானிட ஆவியிலும், திருவெளிப்பாட்டில் உள்ள ஞான முத்துக்களை கண்டுணரக்கூடிய, மாபெரும் உண்மைகளை பகுத்துணரக்கூடிய ஆற்றல் உண்டு. எனவே, எவரும் திருவெளிப்பாடு பற்றிய கல்வி எனக்கு இல்லை என சொல்லிவிட முடியாது. இது முக்கியமான விஷயம். இந்த சமயக் காலகட்டத்தில் இதனை நாம் பாதுகாத்து, தூய்மையாக மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதனால், அது எதிர்கால தலைமுறைளுக்கு விவேகத்தின் பொக்கிஷமாக அமைவது மட்டுமின்றி, யாவரும் திருவெளிப்பாட்டை மனிதர்களுடைய வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி சரியான பாதையில் அணுகுவர்.
கற்றல் என்ற பதத்திற்கு பஹாய்களாகியா நாம் விளக்கம் கொடுக்கும்போது நமது விளக்கம் திருவெளிப்பாட்டோடு சம்பந்தப்படிருக்கும். அவ்விளக்கம் சாதாரண வழக்கமான விளக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும். கற்றல் என்ற வார்த்தையை நாம் வேறுவகையில் விளக்கப்படுத்தியுள்ளோம். அந்த விளக்கம்பற்றி சொல்லும்போது முதலில் பஹாவுல்லாவின் வார்த்தைகளை உங்களுளோடு நான் பகிர்ந்துகொள்கின்றேன். “இறைத்தூதைரை ஏற்றுக்கொள்ளத் தவறும் ஒரு மனிதன், எல்லைக்குப்பட்ட மானிட அறிவைப் பெறுவதில் பல காலங்களை செலவழித்திருப்பினும், எங்கனம் அவனை நீதியுடன் கற்றறிந்தவன் என அழைத்திட முடியும்?” மேலும் அவர் தொடர்ந்து சொல்கின்றார் இப்படி “எல்லா மனிதர்களிடையேயும் எழுத்துவாசனையற்ற ஒரு மனிதன் இந்த ஓர் உயரியநிலையை பெற்றிருப்பின், அவன் மெய்யாகவே கடவுளது அறிவைப் பெற்றிருக்கும் இக்கற்றறிந்த மனிதர்களில் ஒருவன் எனக் கருதப்படுவான்.” எனவே, அளவுகோள் வித்தியாசமானது. கற்றறிந்தவர் என்பது பற்றிய நமது கருத்து, மெய்யான அறிவின், அதாவது இக்காலகட்டத்தில் பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்புகொள்வதிலிருந்து வருகின்றது. இதற்கு திருவெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதர், அந்த திருவெளிப்பாட்டிற்கு தமது இதயத்தைத் திறக்கும் ஒருவர் அவர் படித்தவரோ, எழுதப் படிக்கத் தெரியாதவரோ, உலக வழக்கத்தில் கல்வியறிவு பெற்றவரோ அல்லது கல்வியறிவு பெறாதவரோ, அவர் மெய்யாகவே கற்றறிந்தவர். மெய்யான கற்றறிதல் என்பது நமக்கு இவ்வாறுதான் விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.
நான் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். பஹாய் சமய சொற்களஞ்சியத்தில் அந்த விஷயம் கடந்த சில வருடங்களில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பஹாய் கல்விப்புலமை என்பதுதான் அந்த சொற்பகுதி. பல பஹாய் நூல்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதை நீங்கள் காணலாம். உலக நீதிமன்றத்திலிருந்து வரும் செய்தியில் பஹாய் கல்விப்பலமை குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நீதிமன்றத்தின் வழிக்காட்டலின் கீழ் சில பஹாய் ஸ்தாபனங்கள் இந்த விஷயத்தை மேற்கொன்டுள்ளன. பஹாய்க் கல்விப் புலமையை மேம்படுத்துவதற்காக உலக நீதிமன்றம் அண்மையில் அனைத்துலக போதனை நிலையத்தை உலகெங்கிலுமுள்ள ஆலோசகர்களிடம் பஹாய்க் கல்விப்புலமையை மேம்படுத்திடும் கூடுதல் பொருப்பினை வழங்குமாறு பணித்தது. எனவே, இந்த காரணத்திற்காகத்தான் நான் அதுபற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். அது எவ்வாறு பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றியும் நான் எனது கருத்தினை கூறவிரும்புகின்றேன். நான் என்ன புரிந்துகொள்கின்றேன் என்றால், அது சம்பந்தமாக “தேசிய பஹாய் மறுசீராய்வு” என்ற சஞ்சிகையின் 1979-ஆம் ஆண்டில் ஜுன் மாத இதழில் பிரசுரமான மிக ஒளிமயமான ஒரு கட்டுரையில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கை உலக நீதிமண்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்டதாகும். இரண்டு பக்கங்கள் நீளமான அக்கட்டுரையில் இந்த வாக்கியம் காணப்படுகின்றது. ” சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்குமிடையேயுள்ள இணக்கம் என்பது சமய போதனைகளை தர்க்கரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் கற்க வேண்டு மென்பது மட்டுமல்ல. அவற்றோடு சேர்த்து படைப்பில் உள்ள யாவற்றையும், மானிட வாழ்வின் சகல அமசங்களையும், அறிவையும், தர்க்கரீதியாகவும், திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்றல் வேண்டும். ” அதை நான் எளிமையாகப் பிரித்துச் சொல்கிறேன். அந்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நம் சமயத்தில் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்றால் சமய போதனைகளை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் மட்டும் கற்பது அல்ல. அதோடு சேர்த்து தர்க்க ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாவும் கற்க வேண்டும். இது அந்த வாக்கியத்தில் ஒரு பாதி. அதில் மறுபாதி என்னவென்றால் படைப்பில் உள்ள வாழ்வில் உள்ள, மானிட அறிவில் உள்ள யாவற்றையும்நாம் பகுத்தறிவோடும் திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்க வேண்டும். வேறொருவகையில் சொல்வதென்றால், திருவெளிப்பாட்டினைப் பகுத்தறிவு கொண்டும் நாம் கற்கவேண்டும் நம்பிக்கை மற்றும் தியானத்தோடும் நாம் கற்க வேண்டும். அதோடு பகுத்தறிவு கொண்டு கற்கப்படும் விஞ்ஞானம், முகவியல் விஞ்ஞானம் முதலிய துறைகளிலுள்ள அம்சங்களைப் திருவெளிப்பாட்டின் துனைக்கொண்டு கற்க வேண்டும். பஹாய் கல்விப்புலமை எனபது இந்த இரு அம்சங்களையும் கொண்டது என்றுதான் நான் நினைக்கின்றேன்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் அம்சம் போதனைகளை தர்க்க ரீதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் கற்க வேண்டும் என்பதுதான். இது சம்பந்தமாக பாதுகாவலரது எழத்துக்களில் காணலாம். அதில் ஒன்றிரண்டை நான் படிக்கின்றேன். ஒன்றில் அவர் கூறுகின்றார், “கல்வியின் பல கூறுகளை கற்பதானது ஒருவரது அபிப்பிராயத்தை விரிவடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு பஹாய் இயக்கம் மற்றும் அதன் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை நம்மால் மேலும் புரிந்துகொண்டு உணரமுடியும்”. வேறொரு வகையில் சொல்வதென்றால் மாணிட கல்வியின் பல்வேறு கூறுகளை கற்பதினால் நாம் சமயபோதனைகளைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது பஹாய் கல்விப்புலைமயின் மீதி அம்சம். இன்னொரு இடத்தில் பாதுகாவாலர் தமது செயலாளர்வழி இப்படி எழதுகின்றார், “இளம் வயதினர் சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதரகல்விகளை ஆழமாக கற்றிட பாதுகாவலர் எப்போதுமே அறிவுறுத்தியுள்ளார். அது எல்லைக்குட்பட்ட பட்டியல் அல்ல. அதனால் நாம் திருவெளிப்பாட்டினைப் புரிந்துகொள்ள புதிய கோணங்களைப் பெறுகின்றோம்,” இதற்கு நேர்மாறான நடைமுறையும் உண்டு. நேர்மாறான நடை என்னவென்றால் திருவெளிப்பாட்டின் சக்தியின் வாயிலாகவும், ஒளியின் வாயிலாகவும் மானிட அறிவின் பலகூறுகளை கற்பதுதான். பாதுகாவலர் மோலும் கூறகிறார் இப்படி, “சரித்திரம் பொருளாதாரம் சமுகவியல் முதலிய துறைகள் வழங்கும் அறிவுகள் மீது நமது போதனைகள் புதிய ஒளியினை பாய்ச்சமுடியும்”. இது நான் சற்றுமுன்பு படித்தவாக்கியத்திற்கு நேர்மாறான விஷயம் என்பதை கவனியுங்கள். நான் முதலில் படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால், நாம் சரித்திரம், பொருளாதாரம் சமுகவியல் முதலிவற்றை படிக்கவேண்டும். ஏனென்றால் அவை பஹாய் போதனைகளைப் புதிய கோணத்தில் புரியவைக்கின்றன. நான் இப்பொழது படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நாம் அந்தப் பாடங்களை படிக்க வேன்டும். ஏனெறால், நமது போதனைகள் அவற்றின் மீது புதிய ஒளியினை பாய்ச்சுகின்றது. இதன் பொருள் என்ன வென்றால் பாதுகாவலர் இங்கே ஒத்து இயங்கும் ஒருபொது உறவை விவரிக்கின்றார். ஏனெனில், மானிட அறிவு என்ற உலக கல்வியும் திருவெளிப்பாட்டு அறிவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மானிட கல்வியான சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதர பாடங்களைக் கற்பதன் வழி பஹாய் போதனைகளை புதிய கோணத்தில் புரிந்துகொள்ளலாம். அதுபோல பஹாய்ப் போதனைகள் வழி கொண்டு மானிட கல்வியைப் புதிய கோனத்தில் புரிந்து கொள்ளலாம். எனவே கல்விக்கும் திருவெளிப்பாட்டுக் கல்விக்கும் இங்கே ஓர் இணக்கம் உண்டு.
சரித்திரத்தில் கற்றுக்குட்டியாக இருக்கும் எனக்கு இந்த வாக்கியம் பெரிதும் மன நிறைவளிக்கின்றது. ஏனெனில், பல்வேறு சமய காலக்கட்டங்களின் இரண்டாம் நூற்றான்டில் அறிவார்ந்த நிலைக்கு எதிர்ப்பு இருந்தது. கிறிஸ்துவ சமயத்தின் இரண்டாம் நூற்றண்டு காலத்தில் நிலவிய அறிவுப்பூர்வமான கல்விக்கு இருந்துள்ள எதிர்ப்பை நீங்கள் கவனித்தால், இஸ்லாம் சமத்தின் இரண்டாவது நூற்றாண்டில் இருந்த நிலையினை நீங்கள் கவனித்தால், ஒரு நிலைக்கு சமயம் பரவியதுடன் சமயம் ஏளனத்திற்கும், கொடுமைக்கும் உள்ளானது. அறிவுப்பூர்வ நிலைக்கு எதிரியாக விளங்கிய சமயவர்கள் ” தேவையான எல்லா அறிவும் எங்களுக்கு உண்டு. இதற்கு வெளியே உள்ள அறிவில் எங்களுக்கு அக்கறையில்லை ” என்று சொன்னார்கள். மிதமிஞ்சிய நிலையில் அவர்கள், “அது சாத்தானின் உலகம். எங்களுக்கு திருக்குர்-ஆன் போதும், எங்களுக்கு ஏசுநாதரின் திவ்விய மொழிகள் உண்டு. அவரது மருவருகையின் வாக்குறுதியும் உண்டு, அது போதும்” என்று சொன்னார்கள். இதனால் மதம் என்பது அறிவுப்பூர்வமான கல்விக்கு எதிரியாக மாறி, ஒரு வடுவை ஏற்படுத்த, கடந்த நூற்றாண்டுகளில் மதம் வீழ்ச்சியுற்றது. நமது சமயத்தில் அத்தகைய வீழ்ச்சி, ஒப்பந்தத்தின் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்ற கோட்பாட்டின் வழி சமயம் அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரி என்ற அபாயம் தடுக்கப்பட்டது. மேலும் சமயம் முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமான சமாச்சாரம் என்ற நினைப்புக்கு இட்டுச்செல்லும் பாதகமும் பஹாய் கல்விப்புலமையின் கோட்பாடுகளால் தவிர்க்கப்பட்டுள்ளது. மானிட சரித்திரத்தில் யுகம்-யுகமாக பஹாய் மிகவும் கடினப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பரந்த அளவிளான மானிட அறிவோடு சமயத்தையும் அதன் உயிர்ப்பு சக்தியையும் இணைப்பதன் வழி சமயம் பாதுகாப்பாக இருக்கின்றது என்ற நிலையையும் அந்த பஹாய் கல்விப்புலமை கோட்பாடு உறுதிசெய்ததுள்ளது. அக்கோட்பாடு மிக அற்புதமான ஓர் இணக்க நிலையைப் பேணி பாதுகாத்துள்ளது. மானிட அறிவுக்கும் பஹாய் திருவெளிப்பாட்டிற்கும் இடையேயுள்ளதொடர்புறவை நாம் துண்டித்தால் சமய வெறி தலைதூக்கும். அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரான நிலை ஏற்பட்டுவிடும், அல்லது சமயம் என்பது விஞ்ஞான அளவுகோள்களிடம் சரணடைந்துவிடும். வெறும் அறிவுப்பூர்வமான நிலையிலேயே சஞ்சரிக்கும். இத்தகைய எல்லா அபாயங்களும் பஹாய் கல்விப்புலமையில் உள்ள ஏக்கத் தன்மையின் வழி தடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, நான் எனது உரையை முடிப்பதற்க்கு முன்பு ஆக்க சக்திமிக்க இறைவனின் திருவாக்கினை பயன்படுத்தி நாம் பரிபூரண மாற்றம் அடைவதில் நாம் சந்திக்கும் வீழ்ச்சிகளை மிக சுருக்கமாக கூறிவிடுகின்றேன். நாம் பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாட்டின் சக்தியை பெற முயலுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நமது இதயங்களை அதன்பால் திறக்கின்றோம். அந்த திருவெளிப்பாட்டில் உள்ளுர புதைந்து கிடக்கின்றது என வாக்களிக்கப்பட்ட அருளாவியினைப் பெறுவதற்கு நாம் முயலுகின்றோம். இதில் தடைகள் என நான் கருதுவதை முதலில் பட்டியலிடுகின்றேன். அப்படி முயற்சி மேற்கொள்ளும்போது ஒருவரது கண்களுக்கு அனைத்துமே தெரிந்துவிடாது. அதனால் ஒரு ஏமாற்றம் வரக்கூடும், அதை நான் அப்பட்டியலில் இணைக்கவில்லை. நான் சொல்லப் போகும் முதல் தடை ஒரு மாபெரும் அபாயம். அது என்னவென்றால், திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிவிருந்து வேறுபடுத்தி உணராமல் இருப்பதன் வாயிலாக சமயபோதனைகளை வெறும் மனிதர்களின் வார்த்தைகளாக கருதிவிடும் அபாயம். பிறகு நாம் போதனைகளை மனிதனின் சாதாரன வார்த்தைகளாக கருதுவோம். பிறகு என்ன இருக்கும்? பல நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த போதனைகளில் குற்றம் குறைகளை கண்டுபிடிக்க ஆரம்பிப்போம். இறைதூதரின் நாவிலிருந்து வெளிவருகின்ற தெய்வீகமாக கட்டளையிடப்பட்டு வெளிவருகின்ற புனிதமிகு வார்த்தைகளை எடைபோட குறையுள்ள மானிதனின் மானிட அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றோம். நண்பர்களே, இது எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம். பஹாவுல்லா இவ்வாறு நம்மை கடுமையாக எச்சரிக்கின்றார், கடவுளது திருநூலை உங்களுக்கிடையே உள்ள எத்தகைய அளவு கோல்களினாலும், விஞ்ஞான முறைகளினாலும் எடைபோடப் பார்க்காதீர்கள். ஏனெனில், அந்த திருநூலே மாசற்ற துலாக்கோலாக மனிதர்களுக்கிடையே நிலை நாட்டப்பட்டுள்ளது”. உலக நீதிமன்றமும் இதுபற்றி எழுதியுள்ளது. உலக நீதிமன்றம் இப்படி எழுதியது, “எனவே, புனிதவாசகங்களை புரிந்துகொள்ள முயலும்போது, அந்த வாசகங்களில் உண்மையான முரண்பாடு இல்லை என்றும், அப்படிப்பட்ட முரண்பாடு காணப்படமாட்டாது என்றும் உணரவெண்டும்”. இந்த பார்வைகொண்டுதான் அவ்வாசகங்கள் கொண்டிருக்கும் பொருளின் ஒற்றுமையை நாம் நம்பிக்கையோடு தேடவேண்டும். இது ஒரு தடை.
இரண்டாவது தடை என்னவென்றால் போதனைகாளப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரிந்துள்ள அபிப்பிரயாயங்களோடு சமய போதனைகளை அணுகுதல். இந்த முன் அபிப்ராயாயத்தால் போதனைகள் நம்மை வழிநடத்திடவிடுதற்கு பதிலாக, போதகைளை நாம் விரும்பும் வழிக்கு கொண்டுபோகிறோம். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டு நூல்கள் ஏறத்தாழ 100 இருக்கும். நாம் சில வேளையில், இங்கே ஒரு வார்த்தை, அந்த நூலில் ஒரு சொற்றொடைரயும், இன்னொரு நூலின் ஒரு வாக்கியத்தையும் எடுத்து விரும்பியவாறு பயன்படுத்துவோம். பிறகு என்ன நடக்கும்? திருவெளிப்பாட்டிற்கு நமது ஆன்மாக்களை சரணடையச்செய்து அதனிடம் முழுதும் ஒப்படைத்து அது இட்டுச்செல்லும் வழியில் செல்ல தயாராகாமல் நாம் விரும்பிய வழிக்கு போதனையை எடுத்துச் செல்ல ஆரம்பிப்போம். எனவே, போதனைகளை வாசிப்பதிலும், அவற்றை கற்பதிலும், அவற்றிலிருந்து விவேகத்தை பெறுவதிலும் நமக்கு மாபெரும் சோதனை உண்டு, அகந்தை எனும் சோதனை உண்டு, போதனைப் பற்றி ஏற்கனவே நாம் முடிவு செய்திருக்கும் முன் அபிப்பிராயத்தில் திளைத்திருக்கும் சோதனை உண்டு, நமது விருப்பத்தை இறைத்தூதரின் விருப்பத்திற்கு சரணடைந்து அவர்தம் போதனைகள் நம்மை வழிநடத்தவிடும் சோதனை உண்டு. இந்த சோதனையில் எனக்கு ஏற்படும் அதிர்ச்சி உங்களுக்கும் ஏற்படும். உங்களுடைய அதிர்ச்சி எனக்கும் ஏற்படும். இது நமது சோதனை. போதனைகள் நம்மை வழிநடத்திட வழிவிட விரும்பமுகின்றோமா அல்லது போதனைகளை நிறுத்தி நாம் விரும்பு வழிக்கு அதை வற்புறுத்தி இழுக்கின்றோமா? ஒரு சில காலத்திற்கு பஹாய் நம்பிக்கையாளராக இருந்துவிட்ட ஒருவர் அதிர்ச்சியளிக்கும் ஒருசில போதனைகளைப் படித்துவிட்டு” எனக்கு தெரியாதே இதையெல்லாம் நாம் நம்புகின்றோம் என்று, இது உண்மையாய் இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லையே” என்று கூறுவார்கள். எனக்கும் இந்த அனுபவம் உண்டு, உங்களுக்கு நிச்சியமாக இந்த அனுபவம் இருக்கும்.
மூன்றாவது அபாயம் அறிவுப்பூர்வமான அகந்தை. சமூகத்திற்கு வெளியே “கல்விமான்” என்ற அடைமொழியை படித்திருப்போம். அத்தகைய “படித்த மேதையோடு” பழகும்போது நாம் அவமானப்படுத்தப்பட்டிருப்போம், ஒதுக்கப்பட்டிருப்போம். நாம் போதனைகளைப்பற்றி ஆராயும்போது, பஹாய் கல்விப்புலமையில் நாம் நடைபோடும் போது பஹாய் சமுகத்தினுள் அகந்தை என்ற அறிவுத் தற்பெருமையை நுழையவிடாமலிருப்பதில் நாம் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பஹாவுல்லா நமக்காக தயார் செய்த நல்விருந்து மேஜைக்கு அந்த வேன்டத்தகாத விருந்தாளியைக் கொண்டுவரக்கூடாது. பஹாவுல்லாவே இப்படி சொல்லியுள்ளார், “தங்களது சாதனைகளில் பெருமையடையாதவர்கள் ஆசிபெற்றவர்கள்” இன்னொரு இடத்தில் உலக நீதி மன்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்ட மிக அழகிய, அற்புதமான இந்த வாக்கியம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிப்பதாய் உள்ளது. கேள்வி இதுதான், மாபெரும் கல்வியைத் தொடர்பவர்கள், தங்களது அபிப்பிராயங்கள் கருத்துக்கள் சம்பந்தமாக நாம் காட்டிட வேண்டிய அதே பணிவுநிலை, தோழமைநட்பு, சகிப்புத்தன்மை, மரியாதை ஆகியவற்றை பிரதிபலிப்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டவர்களா?” இக்கோள்விக்கு இதே வாக்கியத்தில் காணப்படும் பதில் அபாரம், “இல்லை. நீங்கள் விதிவிலக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதரும் அந்த தன்மைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவரது மெய்யான கல்வியிலும் விலக்களிக்கப்படவில்லை”.
அந்த வாக்கியத்தில் தொடர்ந்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “கல்விமான்கள் மட்டுமின்றி எல்லா மனிதர்களும் தங்களது பேச்சுகளின் விவேகத்தையும், மற்றவர்களது கருத்தை மதிப்பிடும்போது சகிப்புத்தன்மையையும், தங்களது நடத்தையிலும், பேச்சிலும் தோழமைநட்பையும் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.”
இன்னும் இரண்டு தடைகள் உள்ளன. நான் முடிப்பதற்து முன்பு இவற்றை சொல்ல விரும்புகின்றேன். அதில் ஒன்று, நமக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான். நாம் திருவெளிப்பாட்டை கற்றிடும்போது தனிநபர் விளக்கவுரையின் திருவாசகங்களில் தெளிவாக உள்ளது. நமது சமயத்தின் நோக்கம் எல்லைக்குப்பட்ட ஒரு அறிவுக்கல்வி கூடு அல்ல. ஒரு கருத்தை நமது மனங்களில், நமது அக்கறையை எழச்சிபெறச்செய்து, நமது சிந்தனையின் எல்லைகள் அகலப்படுத்திட நமது சமயம் ஊக்குவிக்கின்றது. அதன் விளைவுதான் விளக்கம். ஆனால் இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அது தனிநபரின் சுயவிளக்கம். சமய போதனைகளில் அதிகாரப்பூர்வமாக உள்ள, இலைமறை காய்மறையாக உள்ள சட்டங்களுக்கு தெளிவையும் விளக்கத்தை கொடுக்கும் பொறுப்பு உலக நீதிமன்றத்திற்கு உள்ளது.