அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும்


அமாத்துல் பஹா ரூஹிய்யா கானும் (1910-2000)

ruhiyyih-khanum

கடந்த 19-1-2000ல் நமது இதயமெல்லாம் கொள்ளை கொண்ட அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும் அவர்கள் காலமானார். இதனைத் தொட்டு மதிப்புக்குரிய உலக நீதி மன்றம் அன்னவருக்கான நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தும்படி உலக பஹாய்களைக் கேட்டுக் கொண்டது. உலக அளவில் பல நினைவாஞ்சாலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் அமாத்துல் பஹா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களில் இருந்து சிலவற்றைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

கடவுள் சமயத் திருக்கரம்

அமாத்துல் பஹா அவர்கள் நமது மதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய பாதுகாவலரின் துணைவியார் மாத்திரமல்லர். அவர் புனிதக் குடும்பத்தின் கடைசியானவரும் கூட. அதோடு அவர் கடவுள் சமயத் திருக்கரமும் கூட. இந்தக் கடவுள் சமயத் திருக்கரங்களைப் பற்றி பஹாவுல்லா இவ்வாறு கூறுகிறார்.

“எவரின் வாயிலாக ஆழ்ந்த துன்பம் எனும் ஒளி ஜொலித்ததோ, சக்தியுடையோனும், வல்லமையுடையோனும், சுதந்திரமுடையோனுமாகிய இறைவனால் அதிகாரம் என்னும் பிரகடனம் நிரூபிக்கபட்டதோ; மற்றும் எவரின் வாயிலாக வழங்குதல் என்னும் கடல் அசைந்து, மனித குலத்தின் பிரபுவாகிய கடவுளின் சகாயம் என்னும் தென்றல் வீசப்பட்டதோ, அந்தத் தம்முடைய சமயத்தின் திருக்கரங்களின்மீது ஒளியும், மகிமையும், வாழ்த்தும் போற்றுதலும் குடிகொள்ளட்டுமாக.”

பஹாவுல்லாதான் கடவுள் சமய திரக்கரங்கள் என்னும் ஸ்தாபனத்தை உருவாக்கினார். அவர் பாரசீக நம்பிக்கையாளர்களின் மத்தியில் இருந்து நால்வரை கடவுள் சமயத் திருக்கரங்களாக நியமித்தார். அப்துல் பஹா நேரடியாக தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமிக்காவிட்டாலும் கூட, அவர் பஹாவுல்லாவின் மற்ற நான்கு நம்பிக்கையாளர்களையும் கடவுள் சமயத் திரக்கரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அப்துல் பஹாவின் உயிலும் மரண சாசணமும் என்னும் ஏட்டின்படி, கடவுள் சமயத் திருக்கரங்களை நியமிக்கின்ற அதிகாரம் பாதுகாவலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தின்படி, பாதுகாவலர் மொத்தம் 42 கடவுள் சமயத் திருக்கரங்களை நியமித்தார். அதன்படி, பஹாய் சமயத்தில் மொத்தம் 50 கடவுள் சமயத் திருக்கரங்கள் நியமிக்கப்பட்டனர். அமாத்துல் பஹாவின் நியமனம் 1952-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி செய்யப்பட்டது. (அமாத்துல் பஹா அந்த நியமனத்தை எவ்வளவோ மறுத்தும் கூட பாதுகாவலர் அந்த மறுப்பை ஏற்பதாக இல்லை)

பாதுகாவலர் இந்த கடவுள் சமயத் திரக்கரங்களை “பஹாவுல்லாவின் கரு வடிவிலான உலகப் பொதுநல அரசின் பிரதான பராமரிப்பாளர்கள்” எனவும் “அதன் உயர் ஸ்தானம் கொண்ட அலுவலர்கள்” எனவும் வருணிக்கிறார். அவர்களின் பொதுவான பணிகள் இரண்டு. முதலாவதாக சமயத்தைப் போதித்தல், அடுத்தது சமயத்தைப் பாதுகாத்தல் ஆகும். பாதுகாவலர் கடவுள் சமயத் திருக்கரங்களை 1951-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரைக்கும் அவர்களுக்கு நேரடியான வாழிகாட்டுதலுக்கான சில அளவு கோல்களை வைத்திருந்தார். சமயத்திற்குச் சேவை செய்வதில் அவர்கள் காண்பித்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைக் கொண்டு அவர்களைப் பாதுகாவலர் நியமித்தார். அந்த வகையில், அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனுமை கடவுள் சமயத் திருக்கரமாக நியமித்த போதும்கூட, அன்னவரிடம் இருந்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைப் பாதுகாவலர் உணராமல் இல்லை. அமாத்துல் பஹா வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் ஆற்றிய சேவைகளையும் காணும் போது பஹாய் உலகமே வியப்பில் மூழ்கும். அமாத்துல் பஹாவின் சேவைகளைக் காலக் கறையான்கள் அரித்திடப் போவதில்லை, அவற்றை பஹாய் உலகமும் மறதிக்கடலில் கறைக்கப்போவதில்லை. அவரின் நினைவு நித்தியமாக நிலைத்திருக்கும்.

பிறப்புப் வளர்ப்பும்

மே எல்லிஸ் போல்ஸ் என்பவர்தான் ரூஹிய்யா கானுமின் தாயார். அவர் சமயத்தின் தொடக்ககாலத்து சேவகிகளில் ஒருவரான லுவா கெட்சிங்கரின் வழியாக சமயத்தை ஏற்றுக்கொண்டார். 1898-ஆம் ஆண்டில் சில பஹாய்கள் ஒன்று கூடி அக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுள் மே எல்லிஸ் போல்ஸ் அவர்களும் அடங்கினார். அவர்கள் யாவரும் 1898-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் அக்காநகர் வந்து சேர்ந்தனர். புனித யாத்திரை முடிந்தபின்னர் அந்த அம்மையார் பிரெஞ்சு நாட்டின் தலைநகரில் தங்கினார். 1902-ஆம் ஆண்டில் கேனடா நாட்டின் வில்லியம் சதர்லாண்ட் மேக்ஸ்வெல் என்னும் கட்டிடக் கலைஞரை மணந்தார். திரு வில்லியம் அவர்கள் கிஹிஸ்த்துவ சமயத்தின் கத்தோலிக்கப் பிரிவின் பாதிரியார் ஆவார். திருமணம் புரிந்த போதெல்லாம் மே எல்லிஸ் போல்ஸ் அவர்கள் சமயத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும்கூட திரு வில்லியம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தத் தம்பதிகளுக்குக் குழந்தைச் செல்வமே இல்லை. 1909-ஆம் ஆண்டில் அந்த அம்மையார் இரண்டாவது முறையாக அக்காநகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். இந்த முறை தம் கணவரும் உடன் வந்தார். அப்போது அவர்கள் பாதுகாவலரைக் குழந்தையாகக் கண்டனர். அப்போது எல்லிஸ் போல்ஸ், அப்துல்-பஹாவிடம் தமக்குக் குழந்தைச் செல்வம் கிடையாது என முறையிட்டார். அப்துல்-பஹாவும் அவருக்காக பஹாவுல்லாவின் புனித கல்லறையில் பிரார்த்தித்தார். அதன் பிறகு திருமதி மே மேக்ஸ்வெல் அமெரிக்கா திரும்பினார். அங்கு நியூ யார்க் நகரில் 1910-ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைதான் மேரி மேக்ஸ்வெல் ஆவார். அதாவது, நமது அன்பிற்குரிய ரூஹிய்யா காஃனும் அவர்கள்.

1912-ஆம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்றபோது கெனடா நாட்டின் மொண்ட்ரீல் மாநகரில் ரூஹிய்யா காஃனும் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது ரூஹிய்யா கானும் அவர்களுக்கு வயது இரண்டு. அவ்வேளையில் திருமதி மே மேக்ஸ்வெல் அப்துல்-பஹா தமக்காக பஹாவுல்லாவின் புனிதக் கல்லறையில் பிரார்த்தனை கூறி, அதன் வழியாகத் தமக்குப் பிள்ளைச் செல்வம் கிடைத்ததை நன்றிப்பெருக்கோடு அப்துல்-பஹாவுக்கு நினைவுபடுத்தினார். பிள்ளைச் செல்வமே கிடைக்க வழி இல்லை என மருத்துவர்களே கைவிரித்த பின்னர் பஹாவுல்லாவின் திருவருளால் பிறந்தவர் ரூஹிய்யா காஃனும் அவர்கள். அத்துடன் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களுக்கு வயது 40 இருக்கும் போது அவரது உடல் நிலை நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டிருந்த போது ரூஹிய்யா காஃனும் பிறந்தார்.

1921-ஆம் ஆண்டில் அப்துல்-பஹா காலமானபோது, அதனைக் கேள்விப்பட்ட திருமதி மே மேக்ஸ்வெல் மிகுந்த வேதனைக்குள்ளார், அதனால் அந்த அம்மையாரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகியது. அந்த அம்மையார் தொடர்ந்து உயிர் வாழ்வாரோ மாட்டாரோ என்னும் ஐயம் அவரது கணவர் வில்லியம் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்டது. ஒரு வேளை புனித நிலத்திற்கு மீண்டும் யாத்திரை மேற்கொண்டு, அப்துல் பஹாவின் வாரிசான ஷோகி எஃபெண்டியைக் கண்டால் மனதுக்கும் உடலுக்கும் ஒரு வேளை ஆறுதல் கிடைக்கலாம் என திரு வில்லியம் மேக்ஸ்வெல் கருதினார். அதன்படி 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களும் 13 வயது நிரம்பிய ரூஹிய்யா காஃனுமும் புனித நிலத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது திருமதி மே மேக்ஸ்வெல் சக்கர வண்டியில் தான் நடமாடினார். அந்த அம்மையாருக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றியவர் ஷோகி எபெண்டி. பாதுகாவலரின் அன்பு கனிந்த வார்த்தைகளினாலும் பரிவான கவனத்தினாலும் அந்த அம்மையாரின் உடல் நிலை பெரிதும் தேறியது.

அந்த ஆண்டில் பாதுகாவலர் ஷோகி எஃபென்டி, பாப் அவர்களின் புனிதக் கல்லறையைச் சுற் றி பூங்காக்களை அழகிய முறையில் எழுப்பிக்கொண்டிருந்தார். மே மாதம் 28-இல் பஹாவுல்லாவின் மறைவு தினத்தை அனுசரிப்பதற்காக திருமதி மே மேக்ஸ்வெல்லும் ருஹியா கானுமும் அக்காநகரில் உள்ள பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்குச் சென்றனர். திரும்பும் போது அவர்கள் இருவரும் பாதுகாவலரோடு அவரின் காரிலேயே வந்தனர். அந்தக் காரின் கூறை திறந்து மடிக்கப்பட்டிருந்தது. இருக்கையின் மீது அமராமல் அந்த மடிக்கப்பட்ட கூறையின் மீது அமர்வதாக ரூஹிய்யா காஃனும் பிடிவாதம் பிடித்தார். அவ்வாறு அமர்ந்தால் விழுந்திடும் வாய்ப்பு உண்டு எனபு பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமை எச்சரித்தார். ஆனால் தாம் விழாமல் பார்த்துக் கொள்வதாக ரூஹிய்யா கானும் நம்பிக்கையோடு சொன்னார். அந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலர் கெனடா நாட்டின் மலைப் பிறதேசங்களை காணத் துடிப்பதையும் மலை ஏறுவதை விரும்புவதாகவும், அவர்கள் இருவரிடமும் தெரியப்படுத்தினார். இந்த முதல் சந்திப்பின் போது இந்த இருவரும் அவ்வளவாகப் பேசக்கிடையாது. இந்தப் பயணத்தின்போது திருமதி மே மெக்ஸ்வெல் பாதுகாவலரைக் கண்டது முதற்கொண்டு அவர் தமது சேவைகளைப் பாதுகாவலருக்கே அர்ப்பணம் செய்தார்.

1926-ஆம் ஆண்டில் திருமதி மே மேக்ஸ்வெல்லின் தோழிகளுடன் ரூஹிய்யா காஃனும் தமது இரண்டவது யாத்திரையைப் புனித நிலத்திற்கு மேற் கொண்டார். அடுத்தப்படியாக ரூஹிய்யா காஃனும் அவர்களும் அவரது தாயாரும் ஐரோப்பாவில் இண்டு ஆண்டு காலம் அயராது சேவை செய்தனர். அதன் பிறகுதான் 1937-ஆம் ஆண்டில் ரூஹிய்யா கானுமும், அவரது பெற்றோர்களும் புனித நிலத்திற்கு வருகைப் புரிந்தனர். இந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலருக்கும் ருஹியா கானுமுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

மதிப்புக்குரிய பாதுகாவலரை மணக்க வேண்டும் என ஏங்கியோர் பலர். ஆனால் அவர் ரூஹிய்யா காஃனும் அவர்களைத் திருமணம் புரிவார் என எவருமே எதிர்பார்க்கவில்லை. அமாத்துல் பஹாவை மணக்க வேண்டும் என்னும் முடிவைப் பாதுகாவலர் எடுத்திருந்தாலும் கூட, அது பற்றி அவர் எவரிடத்திலும் கூறவில்லை. பாதுகாவலர் சதா திருவொப்பந்தத்தை மீறியவர்களினால் சூழப்பட்டிருந்ததனால், இந்த ரகசியம் வெளியே வந்தால் அவரது திருமணத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என அவர் அஞ்சினார். அதனால் அது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. அதிபெரும் புனித இலையாகிய பாஹிய்யா காஃனும் அவர்கள் ஷோகி எபெண்டி அவர்களுக்கு ஒரு மோதிரத்தைக் கொடுத்திருந்தார். பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமைத் திருமணம் செய்வதாக முடிவெடுத்த அன்று, அவர் அந்த மோதிரத்தை ரூஹிய்யா கானுமிடம் கொடுத்து, அதனைத் தமது கழுத்தின் சங்கிலியில் கோர்த்து மறைத்துவைக்கும்படி கூறினார். ரூஹிய்யா காஃனுமும் அவ்வாறே செய்தார். இந்த விஷயத்தை இருவரும் வேறு எவரிடமும் சொல்லவில்லை.

1937-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ருஹியா கானும் அவர்கள் மூன்றாவது முறையாக புனித நிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தின்போதுதான் இந்த வலராற்றுபூர்வத் திருமணம் நடைபெற்றது. அப்துல் பஹாவுக்கும் முனிஃரி கானுமுக்கும் இடையிலான திருமணம் எவ்வளவு எளிமையாக நடைபெற்றதோ, அதுபோன்றே பாதுகாவலருக்கும் ரூஹிய்யா காஃனுமுக்கும் இடையிலான திருமணமும் அவ்வளவு எளிமையாக நபைெற்றது. 1937-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் நாள் பிற்பகலில் பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் காரில் அமர்ந்திருக்க காரோட்டி அவர்களை ஹைஃபாவில் இருந்து அக்காநகருக்கு ஓட்டிச் சென்றார். அங்கே பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்கு – அதாவது பூமியில் உள்ள அதி புனிதமான ஸ்தலத்திற்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஊரின் கலாச்சாரத்தின் படி பெண்கள் வெளியே புறப்படுவதாக இருந்தால் கறுப்பு உடையில்தான் புறப்படுவார்கள். அமாத்துல் பஹாவும் கறுப்பு உடையும் வெள்ளை ரவிக்கையும் அணிந்து உள்ளுர் பெண்ணைப் போல உடன் சென்றார். இது பாதுகாவலரின் விருப்பமாகவும் இருந்தது.

பாஹ்ஜி சென்றவுடன் இருவரும் பஹாவுல்லாவின் புனித கல்லறைக்குள் புகுந்தனர். உடனே பாதுகாவலர் முன்பு ரூஹிய்யா கானும் அவர்களிடம் கொடுத்துவைத்திருந்த மோதிரத்தைக் கேட்டார். தமது கழுத்துச் சங்கிலியில் இருந்து ரூஹிய்யா காஃனும் அவர்கள் அதனைக் கழற்றி பாதுகாவலரிடம் கொடுத்தார். அதனைப் பாதுகாவலர் ரூஹிய்யா காஃனும் அவர்களின் வலது கரத்தின் மோதிர விரவில் அணிவித்தார். அதன் பிறகு பாதுகாவலர் அந்தப் புனிதகல்லறையின் உள் அறைக்குள் புகுந்தார். அங்கு காய்ந்து உதிர்ந்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் சேகரித்து தன் கைக் குட்டையில் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் நேர்வு விருபத்தை ஓதினார். அதன் பிறகு இருவரும் புறப்பட்டு ஹைபா நகருக்கே திரும்பினார்கள். ஹைபா நகரில் உள்ள அதிபெரிய புனித இலையாகிய பஹியா கானும் அவர்களின் அறையில்தான் அவர்களின் எளிமையான திருமணம் நடைபெற்றது, அங்கு திருமண விழா இல்லை, பூவலங்கரிப்பு இல்லை, விசேஷமான சடங்கு சம்பிரதாயமில்லை, திருமண உடையுமில்லை, விருந்துபசரிப்பும் இல்லை. இந்த திருமணம் பற்றி உற்றார் உறவினருக்கும் கூட அதிகமாகத் தெரியாது. இந்த திருமணம் நடைபெறப்போவதை பாதுகாவலரின் பெற்றோர்களும், ஹைபாவில் தங்கியிருந்த அவர்தம் சகோதர் ஒருவரு இரண்டு சகோதரிகளும், அமாத்துல் பஹாவின் பெற்றோர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பஹியா கானும் அவர்களின் அறையில், திருமணத்திற்கான சான்றிதழில் பாதுகாவலரின் பெற்றோர்கள் கையொப்பம் இட்டனர். அப்பொழுது ருஹியா கானும் அவர்களின் பெற்றொர்கள் மேற்கத்திய யாத்திகர் இல்லத்தில் இருந்தனர். அந்த திருமண சான்றிதழில் கையொப்பம் இடப்பட்டதும் ருஹியா கானும் அவர்கள் சாலைக்கு அப்பால் உள்ள மேற்கத்திய யாத்திகர் இல்லத்துக்குச் சென்று தன் பெற்றோர்களிடம் சேர்ந்து கொண்டார். ஷோகி எபெண்டி அவர்கள் தம் வழக்கமான பஹாய்ப் பணிகளை கவனிப்பதற்காகப் போய்விட்டார்.

இரவு விருந்து வேளையில் பாதுகாவலர் அந்த மேற்கத்திய யாத்திரிகர் இல்லத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களுக்கு தம் அன்பையும், நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் புலப்படுத்தினர் எவருக்கும் கிடைக்காத பேறு ருஹியா கானும் அவர்களின் குடும்பத்திற்குக் கிடைத்தல்லவா, அதற்காக! முன்பு பஹாவுல்லாவின் புனித கல்லறையின் உள் அறையில் சேகரித்து தம் கைக்குட்டையில் வைத்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் அன்னையின் கரங்களில் ஒப்படைத்தார். பிறகு ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் திருமணப் பத்திரத்தில் கையொப்பம் இட்டனர். இரவு விருந்து நடைபெற்ற வேளையில், புஜித்தா ( ஜப்பானில் இருந்து புனித நிலத்திற்கு வந்து தோட்டக்காரராகப் பணியாற்றியவர்) அமர்த்துல் பஹாவின் பெட்டிகளை பாதுகவலரின் இல்லத்திற்குத் தூக்கிச்சென்றார். இரவு விருந்துக்குப் பிறகு பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் தங்கள் இல்லத்திற்குப் புறப்பட்டனர். பாதுகாவலரின் குடும்ப அங்கத்தினர்களுடன் சற்று நேரம் உறையாடி விட்டு, பிறகு எற்கனவே மாபெறும் புனித இலையாகிய பஹியா கானும் அவ்கள் பாதுகாவலருக்காக மாடியில் கட்டியிருந்த இரண்டு குடியேறினர் அறையில். இதுவரைக்கும் மேரி போல்லீஸ் சுதர்லாந்து மேக்ஸ்வெல் என அறியப்பட்டுவந்த அவர், திருமணத்திற்குப் பின் ருஹியா ரப்பானி என வழங்கப்பட்டார். பிற்காலத்தில் அன்னவருக்கு பாதுகாவலர் “அமாத்துல் பஹா ருஹியா கானும்” என பட்டப் பெயர் கொடுத்தாதர்.

பாதுகாவலரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றாலும், அது முக்கியத்துவம் அற்றது என எண்ணிடப்படக் கூடாது. அத்திருமணம் பற்றி பாதுகாவலர் வரைந்து, தம் தாயாரின் பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தந்தி ஒன்றே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி காட்டுகிறது. அந்த தந்தி இப்படி வாசிக்கிறது : “அன்புக்குரிய பாதுகாவலரின் திருமணக் கொண்டாட்டம் பற்றி சபைகளுக்கு அறிவிக்கிறேன். பஹாவுல்லாவின் பணிப்பெண்ணாகிய ருஹியா கானும் என்ற குமாரி மேரி மேக்ஸ்வெல் அவர்களின்மீது அளவிட முடியாத கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பஹாவுல்லாவினால் பிரகடனப் படுத்தப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கின் இணைப்பு பினைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு பாதுகாவலரின் தாயாராகிய சியாபா.”

இது போன்றதோர் இன்னொரு தந்தி பாரசீகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பாதுகாவலரின் திருமணம் என்பது நீண்ட காலமாக பஹாய்களினால் எதிர்பார்க்கப்பட்டது. திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானதும் பாதுகாவலர் உலகம் முழுதும் இருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெறத்தொடங்கினார். அமெரிக்கா மற்றும் கேனடாவின் தேசிய சபையிடம் இருந்து கிடைத்த வாழ்த்துக்களுக்கு ஷோகி எபெண்டி இவ்வாறு பதில் எழுதினார்:

“உங்கள் செய்தியினால் ஆழமாக உள்ளம் நெகிழ்ந்துள்ளேன். பஹாய் சமயத்தின் இரட்டை ஸ்தாபகரானவர்களோடு கொண்ட அங்கபந்த தொடர்பின் வழியாக மேன்மைப்படுத்தப்பட்டுவிட்ட பஹாவுல்லாவின் சமயத்தின் நிர்வாக முறையின் பிரயதான அடிக்கல்லாகிய பாதுகாவலர் எனும் ஸ்தானம் மேற்கோரு, குறிப்பாக பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையைக் கொண்டுருவதை தங்கள் ஆன்மீக விதியாகக் கொண்டுள்ள அமெரிக்க நம்பிக்கையாளர்களுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வழியாக இப்பொழுது மேலும் மறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. என் பங்காக, தங்கள் சமயத்தின் இவ்வளவு வளமான ஓர் அங்கத்தோடு அவர்களை வலுவாகப் பினைத்துள்ள ஓர் பந்தத்தைப் பெற்றமைக்காக அமெரிக்க நம்பிக்கையாளர்களின் சமூகத்தைப் பாராட்டுவதற்கு ஆவலுறுகிறேன்.” இப்படியாக பாதுகாவலர் ஏராளமான வாழ்த்துக்களுக்கு பதில அனுப்பிக்கொண்டிருந்தார். பாதுகாவலிரின் திரமணத்தின் சாரமே, அது கிழக்கையும் மேற்கையும் ஒன்றுபடுத்தியது என்பதாகும். இந்த திருமணத்தின் வழியாக கிழக்கும் மேற்கும் இனைந்தன, பாரசீகமும் (பாதுகாவலர்) அமெரிக்காவும் (ருஹியா கானும்) இணைந்தன எனவும், பிரிட்டிஷ் மக்களுக்கும் அது கொளரவாமாகும் ( ருஹியா கானும் அவர்களின் தந்தை ஸ்காட்லாந்தைச் சார்ந்தவர்) என்ற பொருளில் பாதுகாவலர் அமெரிக்கா சபைக்கு ஒரு தந்தி அனுப்பினார். இந்த திருமணம் அமெரிக்காவில் ஆழ்ந்த ஆன்மீக அலைகளை எழுப்பிற்று. அப்பொழுது அங்கே 71 உள்ளுர் ஆன்மீக சபைகள் இருந்தன. சபை தோறும் தலா 19 அமெரிக்க டாலரை அந்த தேசிய சபை பாதுகாவலருக்கு திருமாண பரிசாக அனுப்பியது. ” அமெரிக்க பஹாய்களை பாதுகாவலர் எனும் ஸ்தானத் தோடு பினைத்துள்ள புதிய பந்தத்தை உடனடியாக வலுபடுத்துவதற்காக “என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின்மீது பாதுகாவரின் திருமணம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கியது. அமெரிக்காவின் விதி பஹாவுல்லாவின் நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவது என்பது முன்பே எழுதப்பட்ட தீர்பமாகும். அதற்கு இந்திருமணம் மேலும் அடித்தளத்தை அமைத்தது!

ருஹியா கானும் அவர்கள் மட்டும் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களின் புதல்வியாக இல்லாது போயிருந்தால் பதுகாவலர் அவரை மணந்திருக்கப் போவதில்லை என பாதுகாவவரே ருஹியா கானும் அவர்களின் கூறினார். அதுபோல் “மே மேக்ஸ்வெல் அவர்களின் தோழமை ஒருவருடைய அன்மாவை எழுச்சியூட்டி வளர்க்கிறது ” என அப்துல் பஹாவும் எழுதியுள்ளார். அப்படியானால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் ஆற்றிய பணியை நாம் காண வேண்டும்.

பெற்றோர்களின் பெரும் பணி

ருஹியா கானும் அவர்களின் தாயாராகிய மே எல்லிஸ் போல்லிஸ் அவர்கள் இளைய பருவத்திலேயே லுவா கேட்சிங்கரின் வழியாக பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டவர் ஆவார். சமயத்தை ஏற்றுக்கொண்ட நாள் தொடங்கி அவர் தம்முடைய வாழ்வை சமயத்திக்காக அர்ப்பணம் செய்தார். நிறைய விவேகம் உள்ளவராகவும் சமயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும் அவர் திகழ்ந்துவந்தார். 1898ம் ஆண்டில்தான் முதன் முதலாக மேற்கத்திய நாடுகளில் இருந்து அக்கா நகருக்கு புனித யாத்திரை மேற் கொள்ளப்பட்டது. அந்த முதல் குழுவில் மே எல்லிஸ் போல்லிஸ் இடம் பெற்றார். அங்கே அப்துல் பஹா அந்த அம்மையாருக்கு என ஒரு விசேஷமான பணியைக் கொடுத்தார். பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் மாநகரில் தங்கி சேவை செய்யுமாறு அப்துல் பஹா மே எல்லிஸ் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அந்த அம்மையார் பாரிசுக்குப் போனார். ஒரு சில மாதங்களுக்குள் அந்த அம்மையார் பாரிஸ் மநகரில் முதல் பஹாய் நிலையத்தை நிறுவினார். அதுவே ஐரோப்பிய கண்டத்திற்கான முதல் பஹாய் நிலையமாகும். “ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய்” என்ற பெருமையும்கூட இவரையே சாரும். அப்துல் பஹாவின் முதல் சில சீடர்களில் இவரும் ஒருவராவார். பாரிஸ் மாநகரில் ஓர் ஆங்கிலேயரை சமயத்தில் உறுதிபடுத்திய முதல் பஹாயும் இந்த அம்மையார்தான். முதல் பிரந்சு பஹாய் அன்பரான ஹிப் போலிட் என்பவரை உருவாக்கியவரும் கூட இந்த அம்மையார்தான். இந்த அம்மையார் வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் என்ற கேனடா நாட்டு கட்டிடக் கலைஞரை 1902ம் ஆண்டில் மணந்து, இருவரும் அந்த நாட்டின் மொண்ட்ரீல் நகரில் குடியேறினார்கள்.

1912ம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்ற போது அவர்கள் இல்லத்திற்கு பல முறை சென்றுள்ளார். சமயத்தை ஏற்ற காலம் தொட்டு அந்த அம்மையார் அயராது சமயத்திற்காக பாடுபட்டுள்ளார். குறிப்பாக போதிப்பதிலும் சமய விவாகரங்களை நிர்வகிப்பதிலும் அவர் திறம்டச் செயல்பட்டார். அமெரிக்க கண்டத்தில் பலருக்கும் பஹாவுல்லாவின் செய்தியைக் கொடுத்தார். பஹாய் சமயத்திற்காக இவ்வளவு உதாரணத்துவ சேவைகளை வழங்கிவந்த போதிலு,ம் கூட, தாம் இன்னும் உயர்வுமிக்கச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை அவர்தம் உள்ளத்தில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 1940ம் ஆண்டில் பாதுகாவலர் முன்னோடிகளுக்கான அழைப்பை விடுத்த போது திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் முன்னெழுந்தார். அப்பொழுது அவருக்கு வயது எழுபது! அவர்தம் உடல் நிலையும் மிகவும் மோசமாகியது. தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நகரில் அப்பொழுதுதான் பஹாய் சமயம் உதயமாகிவந்தது. அங்கு முன்ணோடியாகச் செல்வதற்கு அவர் முன்னே முந்தார். அதனைப் பாராட்டி பாதுகாவலர் தந்தி அனுப்பினார். அர்ஜெண்டினா நாட்டு தலைநகராகிய புவெனோஸ் ஏரிஸ் நகரை அடைந்ததும் (1940ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி) அந்த அம்மையார் மாரடைப்பால் காலமானார். அவர் ஓர் உயிர்த்தியாகியின் மரணத்தை அடைந்ததாக பாதுகாவலர் குறிப்பிட்டார். அதோடு அந்த அம்மையாரின் மரணம் பற்றி பாதுகாவலர் ஈரான் நாட்டின் தேசிய சபைக்குத் தெரிவித்தபோது, “விண்னுலகின் தெய்விக ஆன்மாக்களை கூட அந்த அம்மையாரிடம் இருந்து நல்லாசிகளை நாடுகின்றன” எனக் குறிப்பிட்டார். ஆகவே திருமதி மே மேகஸ்வெல் அவர்களின் வாழ்வு அளமானது, பஹாய் சமய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படக் கூடியது.

திருமதி மே மேக்ஸ்வெல் காலமானபோது, பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் தந்தை திரு வில்லியம் சதார்லாந்து மேக்ஸ்வெல் அவர்கட்கு தந்தி அனுப்பி அவரை ஹைபா நகரில் வந்து குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களும் ஹைபா நகரில் வந்து குடியேறினார். அப்போதெல்லாம் பாதுகாவலரின் உறவினர்கள் பாதுகாவலருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். திரு வில்லியம் மேக்ஸ்வெல் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தது பாதுகாவலருக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவர் கட்டிடக் கலைஞாராக இருந்தது மிகவும் வசதியாயிற்று. அப்துல் பஹா அவர்கள் புனித பாப் அவர்களின் கல்லறையைக் கட்டி முடிந்தார். அதற்கு அழகிய கோபுரத்தை எழுப்பும் பணி பாதுகாவலரின் மீது வீழ்ந்தது. திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்ததால், அவர் பாதுகாவலருடன் கலத்துகொண்டு பல கட்டிட வரைபடங்களை உருவாக்கினார். இறுதியில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் படி உருவாக்கப்பட்டதுதான் இன்று நாம் காண்கின்ற பாப் அவர்களின் புனித கல்லறையின் கோபுரம்.

திரு வில்லியம் அவர்களின் உடல் நலம் திடிறென்று பாதிப்புற்றபோது அவர் இறந்துவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 1951ம் ஆண்டில் அவரை பாதுகாவலர் சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் ன்ெறார். அவர் உடல் நலம் தேறினார். ஆண்டில் அவரை மீண்டும் அங்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கிருந்து அவரை பாதுகாவலர் கேனடா நாட்டுக்கு அனுப்பிவைத்தார். உறவினர்களைக் கண்டு ஆறுதல் அடைவதற்காக. அப்போது அவர்தம் உடல் நிலை இன்னும் மோசமாகியது. அப்பொழுதுதான் பாதுகாவலர் திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களை தெய்வச்சமயத் திருக்கரமாக நியமிதார். 1915ம் ஆண்டில் மார்ச் மாதம் 25ம் நாளில் அவர் காலமானார்.

1953ம் ஆண்டில் ருஹியா கானும் சிக்காகோ நகருக்கு சென்று கண்டங்களுக்கு இடையில்லான மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கேனடா நாட்டில் மொண்ட்ரீல் புறப்பட்டார். ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை கேனடா நாட்டு தேசிய சபையின் சொத்தாக எழுதிவைக்க முன்பே ஆசைப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை ருஹியா கானும் செய்தார். கேனடவுக்கு அப்துல் பஹா சென்ற போது அவர் சென்று விஜயம் செய்த ஒரே இல்லம் அவர்களின் இல்லம் தான்! தன் தந்தையின் கல்லறைக்கு ருஹியா கானும் சென்றார். அப்போது பாதுகாவலர் ருஹியாா கானும் அவர்கட்கு தந்தி அனுப்பி, திரு வில்லியம் அவர்களின் கல்லறையில் பஹாய்கள் ஒன்றுகூடி நினைவாஞ்சாலி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புனித கல்லறையில் இருந்து கொண்டுபோன பூக்களையும் அங்கு வைக்கச் சொன்னார். தம் சார்பாக நீல நிற பூக்களில் தலை சிறந்தவற்றை நூறு டாலருக்கு வாங்கி கல்லறையின் மீது வைக்கப்படிச் சொன்னார். (நீல நிறம் திரு வில்லியம் சதர்லாந்து அவர்கட்கு பிடித்த கலர் என பாதுகாவலருக்கத் தெரியும்) கல்லறையில் அவறைப் பாராட்டும் வார்த்தைகளைச் ஒதுக்குபடி கூறி, அந்த வார்த்தைகளையும் பாதுகாவலர் தெரிவித்தார். அங்கு பஹாய்கள் கட்டுகின்ற தேதியையும் நேரத்தையும் தந்தியில் தெரிவித்தால், அப்பொழுது தாமும் புனித கல்லறையில் அவருக்காக பிரார்த்தனை கூறுவதாகவும் பாதுகாவலர் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகையினால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் சமயத்தில் சாதாரண மக்கள் அல்லர்! ருஹியா கானும் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சமயத்தில் பஹாய் சமய வரலாறு வாழும் காலம் வளர வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இப்படியான உயர்வுமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் நம் மதிப்புக்குரிய பாதுகாவலருக்குத் துணைவி ஆனார்கள்.

இங்கு நாம் இன்னும் சில ஒற்றுமைகளைக் காணலாம். பாதுகாவலர் பிறந்த நாள் மார்ச் மாதம் 1ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தாயார் காலமானதும் மார்ச் மாதம் 1ம் நாள்தான். பாதுகாவலர் திருமணம் செய்த நாள் மார்ச் மாதம் 25ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தந்தை காலமனதும் மார்ச் மாதம் 25ம் நாள்தான். இவ்வாறான ஒற்றுமைகள் வேறெங்கும் கண்டதுண்டா?

பாதுகாவலருக்கு உதவியாக

அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலருக்கு துணைவி மட்டுமல்ல. அவர் பாதுகாவலருக்கு செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டினார். 1951ம் ஆண்டில் பாதுகாவலர் அனைத்துலக பஹாய் பேராவையை நியமித்தார். இந்தப் பேரவைதான் வருங்கால (1963) உலக நீதி மன்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.1952ம் ஆண்டில் இந்தப் பேரவையின் அங்கத்துவத்தை அவர் விரிவுபடுத்தினர். அதன் படி அவர் அமாத்துல் பஹா அவர்களையும் ஓர் அங்கத்தினராகவும், தமக்கும் அந்த அனைத்துலக பஹாய்ப் பேரவைக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார். 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரமாகிய வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் (அமர்த்துல் பஹாவின் தந்தை) காலமானர். அவருக்கு பதிலாக பாதுகாவலர் அமாத்துல் பஹா அவர்களை சமயத் திருக்கரமாக நியமித்தார்.

அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் உள்ள பஹாய் கோவிலுக்கு அடிக்கல்லை நாட்டியவர் அப்துல் பஹா. இது நடந்தது 1912ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி. 1933 ஆண்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வேளையில் அந்தக் கோயிலருகே வந்து பிரார்த்தனைகள் கூறியவர் ருஹியா கானும் அவர்கள். 1953 ஆண்டு மே மாதம் 2ம் தேதி முழுமைப் பெற்ற அந்தக் கோவில் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவுக்கு பாதுகாவலர் அவர்களே நேரில் வர நினைத்ததுண்டு. ஆனால் ஏராளமான வேலையின் பளுவின் காரணமாக அவரால் வர இயலவில்லை. அதனால் தம்மைப் பிரதிநிதிக்குமாறு பாதுகாவலர் தம் அன்பிற்குரிய துணைவியார் அமாத்துல் பஹா அவர்களை அனுப்பிவைத்தார். அப்துல் பஹா அடிக்கல் நாட்டிய கோவிலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தவர் அமாத்துல் பஹா அவர்கள்.

பாதுகாலரின் மறைவுக்கும் பின்

1957ம் ஆண்டில் மதிப்புக்குரிய பாதுகாவலர் திடீரெனக் காலமானார். அப்பொழுது உலக நீதி மன்றம் இன்னும் அமைக்கப்படவில்லை. 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்படும் நாள் வரைக்கும் சமயம் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அப்பொழுது 26 தெய்வச் சமயத் திருக்கரங்கள் கையொப்பமிட, 9 தெய்வ சமயத் திருக்கரங்கள் “பஹாய் உலக சமயத்தின் காப்பாளர்கள்” என நியமிக்கப்பட்டனர். உலக நீதி மன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இந்த 9 தெய்வ சமயத் திருக்கரங்களும் புனித நிலையத்தில் தங்கி சமயத்தைப் பாதுகாத்து, பணியாற்றிவருவதே அவர்களின் பணியாகும். அந்த ஒன்பது பேர்களில் அமர்த்துல் பஹா அவர்களும் அடங்கினார். அதோடு பாதுகாவலர் 1953ம் ஆண்டில் பத்தாண்டு உலக அறப்போரை (உலகப் போதனைத் திட்டம்) தொடக்கிவைத்தார். அது 1963ம் ஆண்டில் முடிவுற வேண்டும். ஆனால் அவர் பாதிக் காலக்கட்டத்தில், அதாவது 1957ல் காலமாகிவிட்டார். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்கின்ற பெரும் பொறுப்பும் இந்தக் காப்பாளர்களின் தோள்மீது வீழ்ந்தது.

1960ம் ஆண்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கேனடா நாட்டுக்கும் ஒரு விரிவான பாயணத்தை மேற்கொண்டு அந்த சமூகத்தினருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.

1958ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது, அங்கு எழுப்பப்படவிருந்த வழி பாட்டு இல்லத்திற்கு அடிக்கல்லை நாட்டினார். 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்பிரிக்க கண்டத்தின் அன்னைக் கோவில் உகான்டாவில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபுர்வமாகத் திறந்துவைப்பதற்காக அமர்த்துல் பஹா மீண்டும் ஆப்பிரிக்கா சென்றார். அதன் பின்னர் அவர் ஆப்பிரிக்காவில் மக்கள் அணிஅணியாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளுக்கும் சென்றார்.

1961 ஆண்டு ஆகஸ்டு – செப்டப்பர் மாதங்களில் அமாத்துல் பஹா தென்கிழக்காசிய பயணத்தை மேற்கொண்டு சிங்கை, மலாயா வந்துள்ளார். 1961 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா கண்டத்தின் அன்னைக் கோவில் சிட்நியில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பதற்காகவும் அமர்த்துல் பஹா அங்கு சென்றார். பின்னர் ஆஸ்திரேலியா, மற்றும் நியூ சீலாந்து நாடுகளின் பஹாய் சமூகங்களைக் கண்டு வந்தார்.

பாதுகாவலர் செய்த பெரும் பணிகளில் ஒன்று புனித நிலத்தில் பழம் பொருள் காப்பகத்தை ஏற்படுத்துவதாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக அவர் மறைந்துவிட்டார். அந்த மாபெறும் பணியை நிறைவு செய்வதில் அமாத்துல் பஹா அயராது உழைத்தார். 1962ம் ஆண்டுக்குள்ளாக அது பூர்த்தி செய்யப்பட்டால், புனித யாத்திரைக்கு வருவோருக்கு பலனாக இருக்கும் என்று கருதி அதனை நிறைவு செய்வதில் மும்முரமாகச் செயல்பட்டார்.

1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது. பாதுகாவலர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை புனித நிலத்தில் தங்கி சமயத்திற்கு உதவியாக இருக்கும்படிச் செய்தார். அதுபோலவே, உலக நீதி மன்றத்திற்கு ஆலோசனைகளைக் கூறி உதவுவதற்காக, உலக நீதி மன்றம் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமித்து அவர்களை புனித நிலத்தில் தங்க வைத்தது. இம்முறையும் அந்த ஐவரில் அமாத்துல் பஹா அவர்களும் அடங்கினார்.

உலக உலா

1992ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக மாநாட்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்தார். பாதுகாவலர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் ருஹியா கானும் அவர்களிடம் திடீரென இவ்வாறு கேட்டாராம் “நான் இறந்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” அதற்கு ருஹியா கானும் அவர்கள் அழுதவாறு “அதன் பின் நானும் மூச்சு விட விரும்பவில்லை” என்றராம். அப்போழுது தம் மரணத்திற்குப் பின்னால் ருஹியா கானும் உலகம் முழுதும் சென்று பஹாய்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என பாதுகாவலர் கேட்டுக்கொணடார். 1957ம் ஆண்டில் பாதுகாவலர் மரணமடைந்து, பிறகு 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது முதற்கொண்டு தம் கடைசி காலம் வரைக்கும் அமாத்துல் பஹா அவர்கள் உலகை வலம் வந்தார். 1957ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் கூட அமாத்துல் பஹா உலகில் சில பாகங்களுக்குச் சென்றுவந்ததுண்டு. ஆனாலும் அவர் புனித நிலத்தில் தங்கி சமயப் பணிகளை கவனிக்கவேண்டிய சுமைகளைத் தாங்கியதன் காரணமாக அவர் சுதந்திரமாக உலகம் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை. உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட பின்புதான் அவர் ஏராளமான உலகப் பயணங்களை மேற்கொண்டு பஹாய்களைக் கண்டு உற்சாகம் வழங்கியதோடு, பஹாய் அல்லாதவர்களுக்கும் சமயத்தைக் கொடுத்தார். கடைசி 35 ஆண்டுகளில் அவர் 185 நாடுகளுக்குச் சென்று சாதனைப் புரிந்தார். Ñற்ற உலகர் தகைவர்கள்கூட. இத்தனை நாடுகளைச் சென்றடைந்திருப்பாரா என்பது சந்தேகமே.

அமாத்துல் பஹாவின் பயணங்களில் முக்கியமான ஒன்று இந்திய துணை கண்டத்திற்கு அவர் விஜயம் செய்ததாகும். 1964ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமார்த்துல் பஹா அவர்கள் இந்தியாவுக்கு வந்து ஒன்பது மாதகாலமாக இந்தியா முழுதும் பயணத்தை மேற்கொண்டார். மொத்தம் 55,000 மைல்கள் பயணம் செய்து 70க்கும் கூடுதலான கிராமங்களுக்கு விஜயம் செய்தார். விமானம், கார், ஜீப், படகு மற்றும் கால் நடையாகவும் அவர் பயணத்தை மேற்கொண்டு பழங்குடு மக்களில் இருந்த மேட்டுக்குடி மக்கள் வரைக்கும் சென்று சமயத்தைப் சோதித்தார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து எவரும் கூட இதுநாள் வரைக்கும் இப்படி யொரு சூறாவளிப் பயணத்தை இந்தியாவில் மேற்கொண்டதில்லை எனலாம்.

1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அமாத்துல் பஹா இலங்கைக்குச் சென்றார். அங்கு தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஏப்ரல் 23 முதல் 28 வரைக்கும் அமாத்துல் பஹா மலேசியாவில் இருந்தார். மலேசியாவின் தேசிய ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் பேராளர் மாநாட்டில் அவர் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தாய்லாந்தின் தேசிய பேராளர் மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வதற்காகச் பாங்காக் சென்றார். அங்கிருந்து மீண்டும் மே மாதம் 7ம் நாள் இந்தியாவுக்குத் திரும்பி தம் சுறவளிப் பயணத்தை தொடர்ந்தார். 1964ம் ஆண்டு ஜீலை மாதம் 4ம் நாள் ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய் தொழுகை இல்லத்தை ஜெர்மனி நாட்டின் பிரங்க் பர்ட் நகரில் அதிகாரபூவமாகத் திறந்துவைத்தார்.

உலகம் முழுதும் உள்ள 6 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்ற சமூகங்களை அவர் இயன்றவரைக்கும் சென்று கண்டுவந்தார். குறிப்பாக பழங்குடி மக்களை பஹாய் சமூகத்திற்கு ஈர்ப்பதிலும், அவர்கட்கு உற்சாகம் வழங்கவதிலும் அமாத்துல் பஹா வசேஷமான கவனம் செலுத்தினார். அவர் தென் அமெரிக்காவின் நாடுகளான பேரு, பொலிவியா, சுரிநாம், குயானா மற்றும் பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுக்கு சமயத்தைப் போதித்தார். அதனை ஒரு செய்திப்படமாகத் தயாரித்து அதற்கு “தி கிரீன்லைட் எக்ஸ் பெடிஷன்” என்று பெயர் சூட்டினர். அவர் சென்ற மேற்குறிப்பிட்ட நாடுகள் முன்னேடியாகச் செல்வதற்கு மிகவும் சிரமமான இடங்களாகும். இருந்தும் வயதான காலத்தில், உடல் வலு குறைந்த வேளையிலும் அவர் அப்பயணத்தை மேற் கொண்டார். தம்மால் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றால் வாலிபர்களாலும் இயலும் என்பதுவும் அப்பயணத்தின் செய்தியாகும். ஆறுமாத காலத்திற்கு நீடித்த இக்கடும் பயணத்தை ஒரு திரைப்படமாக அவர் தயாரித்துள்ளார். இதன் வழியாக தாம் ஒரு தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எனவும் நிரூபித்தார். இத்திரைப்படம் பிகவும் பிரமாதமாக அமையவே, அது உலகின் பல நாட்டு தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக 1990ம் ஆண்டில் அது சீனர்களின் கேண்டனீஸ் பாஷையில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவின் தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை குறைந்தது 5 மில்லியன் சீனர்கள் கண்டுள்ளனர்.

1986ம் ஆண்டில் இந்திய நாட்டின் புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தை அவர் அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். 1992ம் ஆண்டிலே நியூ யார்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது பஹாய் உலக மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரநிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

உலகத் தலைவர்களைச் சந்த்தார்
வேறு எந்த பஹாய் அன்பரும் செய்திடாத அளவுக்கு பஹாய் சமயத்தை அவர் உயர்மட்ட மக்களுக்குக் கொண்டு சென்றார். சீன நாட்டு பேராசிக்கு அவர் சமயத்தைக் கொண்டுச் சன்றுள்ளார். சீனாவுக்கு அவர் நான்கு முறை சென்றுள்ளார். 1985ம் ஆண்டில் உலக அமைதிக்கான வாக்குறுதி, எனும் அறிக்கை உலக நீதி மன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் அமர்த்துல் பஹா அவர்கள் அதனை ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். இந்திய பிதமர் இந்திரா காந்தி, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் பேரரசர் ஹெய்ல் செலாஸ்சீ, அர்ஜெண்டினா நாட்டு ஜனதிபதி கார்லோஸ் மெனம், ஜெமாய்க்கா நாட்டின் பிரதமர் எட்வார்ட் சீகா, ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர் ஜாவியர் பெரேஃஜ் டெ செல்லர், ரோமானியா நாட்டின் இளவரசி ஹெலினா முதலியோரை அமாத்துல் பஹா கண்டு சமயத்தை வழங்கியுள்ளார். சோவியட் யூனியன் நாடுகளுக்கு 1993ம் ஆண்டு நீண்ட காலம் பயணம் மேற் கொண்டு சேவை செய்துள்ளார்.

பிற சேவைகள்
இன்னும் பல சர்வ தேசக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிலிப் அவர்களோடு ஓரே மேடையில் தோன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பாதுகாப்பதில் அமாத்துல் பஹா தம்மை ஈடுபடுத்திக் கொன்டார். அதனால் உலகலாவில் இயற்கைப் பாதுகாப்பு நிதி நிறவனத்தின் செயல் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் அவர் தமது ஆதரவை வழங்கியுள்ளார். 1988ம் ஆண்டில் லண்டன் மாநகரின் “சயோன் ஹவுஸ் ” என்ற இடத்தில் அந்த நிறுவனத்திற்கான நிதி திரட்டும் விழாவில் சொற்பொழிவாற்றினார். அதோடு “ரிலிஜின் அண்டு கன்சர் வேஷன் ” என்ற பெரும் பணியைத் தொடங்கிவைத்தார். தமது தந்தை ஒரு கட்டிடக் கலைஞர். அந்த தாக்கம் அமாத்துல் பஹா மீதும் இருந்தது. அவருக்கு கலைகளின் மீது இயற்கையான ஆர்வம் இருந்தது. இதனால் பஹாய் சமயத்துடன் தொடர்புடைய பல பழைய கட்டிடங்களை புதுப்பித்து அழகுபடுத்துவதில் தம் உழைப்பைக் கொடுத்தார்.

எழுதிய நூல்கள்

அமாத்துல் பஹா அவர்கள் பல துறைகளில் துலங்கியவர், சிறந்த புலமைப்பெற்றவர். மெக்கில் பல்கலைக்கழகப் பட்டதாரியும் கூட. அவர் பன்மொழிப் புலமைப் பெற்றவரும் கூட,ஆங்கிலம், பாரசீகம், பிரஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசி எழுதும் வல்லமைப் பெற்றவர் அவர். சிறந்த எழுத்தாளர் என்பதோடு பேச்சாளரும் கூட. அவர் நான்கு முக்கியமான நூல்களை இயற்றியுள்ளார்.

1. “பிரிஸ்கிருப்ஷன் ஃபார் லிவிங்” (வாழ்வதற்கான அறிவுரைகள்) என்ற நூல், இது ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டு எவ்வாறு வாழ்வது என்பதற்கு வழிகாட்டுகின்ற நூலாகும். நல்ல பஹாய் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.

2. பாதுகாவலர் 1957ம் ஆண்டில் காலமான பின்னர் சோகத்தில் மூழ்கியிருந்த அமாத்துல் பஹா தம் கைப்பட எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு இது.

3. “தி பிரைஸ்லஸ் பேர்ல்” ( விலைமதிப்பில்லா முத்து) – ( 1969 ) என்ற நூலில் ஷோகி எபெண்டி பற்றிய ஒரு முழுமையான வடிவத்தை அவர் நமக்குத் தருகிறார். பாதுகாவலர் எக்காலத்திலும் தம்மைப் பற்றி வெளிச்சம் போட்டுக்கொண்டதில்லை. மற்றவர்களின் சாதனைகளை அவர் நமக்குக் காட்டுவார், தம் சொந்த சாதனைகளை அவர் மறைத்துவிடுவார். இன்று உலக பஹாய்களுக்கு பாதுகாவலரின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, மகிழ்வு, சாதனை, வேதனை போன்ற எண்ணற்ற அம்சங்கள் தெரியவந்ததற்குக் காரணம் அமதுல் பஹா இயற்றிய “தி பிரைஸ்லஸ் பேர்ல்” என்ற நூல்தான். 20 ஆண்டு காலத்திற்கு அவரோடு வாழ்ந்த அமாத்துல் பஹா தான் அவரைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர். இந்த நூல் பஹாய்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ” பஹாய் சமயத்தின் பாதுகாவலர் 1988 ” என்ற இன்னொரு நூலையும் தொடர்ச்சி நூலாக அவர் எழுதியுள்ளார்.

4. தி டிசையர் ஆஃப் தி வொர்ல்டு ( உலகின் ஆவாலுக்குரியவர்) -( 1982 ) என்ற பொருளில் ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்த நூல் பஹாவுல்லாவின் பண்புகள், தன்மைகள்,குணங்கள், மற்றும் நாமங்களை எடுத்து விளக்குகின்ற நூலாகும். இந்த நூலை வாசிப்பதன் வழியாக நாம் பஹாவுல்லாவைப் புரிந்துகொள்ளவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நூல் ஒரு வகையில், தியானம் செய்வதற்காக எழுதப்பட்டுள்ளது.

5. “மினிஸ்ட்ரி ஆப் தி கஸ்டோடியன்ஸ்” ( காப்பாளர்களின் பதவிக்காலம்) – (1992) என்ற நூல் முக்கியமான நூலாகும். இந்த நூலுக்கு அமாத்துல் பஹா அவர்கள் ஒரு முன்னுரை வாழங்கியுள்ளார். இது பாதுகாவலர் காலமாகிய 1957ம் ஆண்டு முதல் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட 1963ம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் புனித நிலத்தில் உள்ள தெய்வ சமயத் திருக்கரங்கள் உலகுக்கு அனுப்பிய செய்திகளின் தொகுப்பாகும்.

அவரின் எண்ண அலைகள்

அமாத்துல் பஹா அவர்கள் ஆற்றிய உரைகளிலும். எழுதிய நூல்களிலும் நமக்காக அவர் நிறைய அறிவுரைகளைக் கூறியுள்ளார், பல அருமையான கதைகளையும் உவமைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவை யாவுமே அவரின் தெளிவான, வளமான சிந்தனைக்கு, அவை எடுத்துக்காட்டாகின்றன. எதனையும் சிக்கலின்றி தெளிவாகச் சிந்தித்து, அதனைச் சித்தரிக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவரின் எண்ண அலைகளில் சில வருமாறு:
இந்திய கிராமவாசிகள் :

கிராமவாசிகள் யாவரும் இந்தியாவில் உள்ள சமயம் எனும் மாபெறும் மரத்தின் ஊட்டமளிக்கப்படவேண்டிய வேர்களுக்குச் சமமானவர்கள். நாம் அவர்கள் மீது கவனம் காண்பித்து அவர்கட்கு தெய்வீகப் போதனைகளைக் கொடுக்கவேண்டும்.

பஹாய் போதனைகள் :

பஹாய் போதகர்களாக எவருமே உருவாக்கப்பட்டவரல்லர். நாம் பாட்டுக்கு வெளியே சென்று போதிக்க வேண்டும். மற்றவை யாவும் பின் தொடர்ந்து, அதன் பிறகு ஒரு போதகர் தோன்றுகிறார். அவர் பிரார்த்தனை கூறிவிட்டு முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.

காலம் :

நமக்குப் போதுமான நேரம் இருக்கிறது என நாம் எண்ணவே கூடாது. நேரம் இருந்தாலும் வாய்ப்பு நிரந்தரமாக நழுவிவிடக்கூடும். போதிப்பதற்கு அங்கே போதிய காலம் இல்லை. நேரம் இருக்கும் போதே சந்தர்ப்பத்தை அதிசிறப்புடன் பயிர் செய்ய வேண்டும்.

கல்வயறிவற்றவர்கள் :

அறியாமையில் உள்ளவர்கள் எனவும், எழுத்தறிவற்றவர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள் எதோ புதிதான ஒன்றுக்காக பசியோடு காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக பசியோடு உள்ளனர். அவர்கட்டு நாம் தெய்வீகத் தீணியைக் கொடுக்காவிட்டால் அவர்கள் லௌகீக இயக்கங்களோடு ஒட்டிக்கொள்வார்கள்.

கிராமிய மனிதர்களின் மனங்கள் :

பெரும்பாலான மனிதர்களின் மனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தெய்வீகப் பொழிவுகளைப் பெறுவதற்காக தயார்படுத்தப்பட வேண்டும். ஆனால் கிராமிய மனிதர்களின் மனங்கள் பற்றுகளில் இருந்து விடுபட்டுள்ளதோடு, போதனைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயராக உள்ளன.

சேவையில் போட்டிகள் :

கடவுளின் சமயம் என்ற சேவையில் நாம் ஒருவருக்கொருவர் போட்டி இடுவோம். நீங்கள் எழுந்தால், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

பாதுகாவலரின் மகிழ்ச்சி :

அவருக்கு 20 ஆண்டுகள் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற காலத்தில், அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது கடவுளின் சமயத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி ஒன்று தான். அவருடைய கடைசி அண்டுகளில் பாதுகாவலருக்கு உயிர் மூச்சாக இருந்தது, அவரைத் தொடர்ந்து இயங்கும்படிச் செய்தது எல்லாம் பத்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி, கடவுளின் சமயத்தின் விஸ்தரிப்பு; ஆகியவைதாம். அடிப்படையில் போதனைத் துறையில் பெற்ற வெற்றிகளே அவருக்கு மகிழ்ச்சியூட்டின.

இரண்டு தரப்பினரின் கடமைகள் :

உலகில் இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் சரிசமமாக இயங்கவேண்டும். கடவுளின் தீர்க்கதரிசி தோன்றும் போது, அவருடைய நாமத்தை பற்றி கேள்விப்பபடுவதும் அவரை ஏற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மக்கள் தீர்க்கதரிசியின் நாமத்தைக் கேள்விப்படவில்லையானால் அது பஹாய்களின் தவறாகும். அதுபோல் கேள்விப்பட்ட பின்பு அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தனிப்பட்ட மனிதர்களின் தவறாகும்.

அறிவும் நம்பிக்கையும் :

சமயம் பற்றிய அறி நம்பிக்கை ஆகிய இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும். நாம் அவற்றை ஒன்றுகலக்கக் கூடாது. நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். அதோடு நாம் படிப்படியாக சேகரிப்பதுதான் அறிவு

ஆன்மீகப் பயிற்சி :

உடல் நலத்தில் குறை இருக்கும் போது நாம் அதனை நிவர்த்தி செய்வதற்காக தேகப் பயிற்சி செய்கிறோம். அது போல் நம்மிடம் இல்லாத பண்புகளை நாம் பயிற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்து முடிப்பதற்கான பலத்தை இறைவன் நமக்குக் கொடுக்காமல் ஒரு காரியத்தை அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். உலக மக்கள் தங்களின் நடத்தைகள், தங்களின் சிந்தனைகளை, தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும்படி கடவுள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பலத்தை அவர்கட்டு அவர் வழங்குவார்.

மற்றவர்களுக்கு உதவுவதானால் :

மற்றவர்களின் துன்பங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்களின் சிரமங்கள் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு உதவுவதற்கான முதல் படியாகும். சகிப்பின்மை எந்த பிரச்சினைகளையும் தீர்காது : நாம் விவேகமுள்ள மருத்துவரைப்போல், நோயைக் கண்டுபிடிப்பதற்காக, அறிகுறிகள் என்னவேன்று செவிமடுக்கவேண்டும்.

தாராளகுணம் படைத்ாேதர்

தாராள குணம் என்பது அனைவரும் நாடுகின்ற இன்னொரு மனிதப் பண்பாகும். ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாகக் கூரின், பணக்காரர்கள் அல்லது வசதியுடையோரைக் காட்டிலும் ஏழைகளே அதிக தாராள குணம் படைத்தவர்களாக உள்ளனர்.

முகபாவனை :

கடுகடுப்பான பகைமைக் கொண்ட கோபம் கொண்ட முகங்களைக் கொண்ட மனிதர்களை நீங்கள் விரும்முவதுண்டா? அநேகமாக விரும்பமாட்டீர்கள். ஆகையினால் உங்கள் சொந்த முகங்களை அப்படியெல்லாம் வைத்துக் கொண்டுஉங்கள் சக மனிதர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

நாவின் வன்மை :

மனிதப் பிறவிகளின் நாக்குகள் மிகவும் பலமான ஆயுதங்களாகும். நாக்குகளினால் தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தேசங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் பேச்சு என்பது மனிதனின் மாபெறும் சாதனைகளில் ஒன்றாகும் ; அப்படி இருந்தும் கூட, இரண்டு முனையுள்ள வாளைப்போல் அது இரண்டு பக்கமும் வெட்ட முடியும். இவ்வளவு பலம் கொண்ட ஆயுதத்தை நன்மைக்கோ அல்லது திமைக்கோ பயன்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மரணமும் அடக்கமும்

யார் எப்பொழுது, எங்கே தம் உயிரைத் துறப்பார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அமர்த்துல் பஹா அவர்கள் உலகில் 185 நாடுகளுக்கு மேல் சென்று சமயத்திற்காக சேவை செய்துள்ளளார். வெளிநாட்டுக்குப் போகும் போதெல்லாம் தாம் அங்கேயே உயிரைத் துறந்து அந்த நிலைத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என அமாத்துல் பஹாவின் உள் மனது ஏங்கியதுண்டு. ஆனால் இறைவனின் விருப்பம் வேறு விதமாக இருந்துவிட்டது. கடைசி ஒரு வருடமாக (1999) ருஹியா கானும் அவர்களின் உடல் நலம் சரியில்லாததால் அவர் புனித நிலத்தை விட்டு வெளியேறவே முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார். முன்பெல்லாம் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பஹாய்களையும் மற்ற வருகையாளர்களையும் அமாத்துல் பஹா வரவேற்றுப் பேசி உபசரித்ததுண்டு. ஆனால் கடைசிக் காலத்தில் இவ்வாறு மற்றவர்களைப் பார்ப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார். 1998ம் ஆண்டில் தடைபெற்ற அனைத்துலகப் பேராளர் மாநாட்டில் மேடையில் தோன்றினார், ஆனால் அதுவும் கூட மற்றவர்கள் அவரை மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது அபூர்வம், அல்லது கிடையாது என்றகுவிட்டது.

கடைசி ஒரு வருடமாக அமாத்துல் பஹா நடமாட முடியாமல் போய்விட்டது. அவர் கீழே விழுந்திடவே, அவரின் முதுகில் காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் படுத்த படுக்கையாகக் காலத்தை ஓட்டினார். அவரை கவனிப்பதற்கு என உலக நீதி மன்றம் ஒரு தாதியை ஏற்பாடு செய்துதிருந்து. அவருக்குப் பக்கத் துணையாக இருந்ததவர் அவருடைய நீண்ட காலத்து தோழியாகிய திருமதி வைலட் நக்ஜவனி. இந்த அம்மையார் உலக நீதி மன்ற அங்கத்தினர் திரு அலி நக்ஜாவானி அவர்கிளின் துணைவியார். 1964ம் ஆண்டிலே அமாத்துல் பஹா இந்திய நாட்டுக்கு நீண்ட காலம் விஜயம் செய்தபோது அவரோடு உடன் பயணம் செய்தவர் திருமதி அலி நக்ஜவனி, “அமாத்துல் பஹாவின் இந்திய விஜயம்” என்ற பெயரில் ஒரு நாலை எழுதி அந்தப் பயண அணுபவங்களை விவரித்தவர் இந்த திருமதி அலி நக்ஜவனி.

ஆகையினால், தாம் வெளிநாட்டில் அடக்கம் செய்யப்படவேண்டும் என அமாத்துல் பஹா விரும்பினாலும்கூட, அது சாத்தியமாகாதபடி, கடைசிக் காலத்தில் அவர் நாட்டை விட்டே வெளியேறமுடியாதபடியான சூழ்நிலை உண்டாகிவிட்டது. அவர் புனித நிலத்தில்தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாயிற்றே! அது பேரன்புக்குரிய பாதுகவலரின் விருப்பமும் கூட என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நமது பாதுகாவலர் “பூமியில் ஆண்டவனின் அடையாளம்” என்றிருக்கும் போது அவருக்குத் வருங்காலத்தைக் கூறக்கூடிய வல்லமை இல்லாமலா போய்விடும்.?

காலமானார்
ஜனவரி மாதம் 18ம் நாள் நள்ளிரவைத் தாண்டிய அதிகாலை நேரத்தில் (19ல்) அமர்த்துல் பஹா அவர்கள் கடைசி மூச்சை விட்டார். இந்த துக்கச் செய்தி உலக நீதி மண்றத்தின் அங்கத்தினகட்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிகாலை மூன்று மணிக்கு உலக நீதி மன்றத்தின் கூட்டச் சபையில் ஒன்றுகூடினார். அவர்கள் கலந்தாலோசித்த முதல் விஷயம் அமாத்துல் பஹாவை எங்கு அடக்கம் செய்வது என்பதாகும். கார்மல் மலைமீதுள்ள அந்த ஞாபகார்த்த பூங்காக்களில் புனித பாப், அப்துல் பஹா, பஹாவுல்லாவின் துனைவியார் நவ்வாப், பஹாவூல்லாவின் புதல்வி பஹியா கானும் பஹாவுல்லாவின் புதல்வர் மிர்சா மிஹிடி, மற்றும் அப்துல் பஹாவின் துனைவியார் முனிரி கானும் ஆகியோரின் நல்லுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் அடக்கம் செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட அவர்கள் பாவரும் வேறு ஸ்தானங்களைக் கொண்டவர்கள் என்பதனால் அமாத்துல் பஹாவை அங்கு அடக்கம் செய்ய இயலாது. அதே வேளையில் ஹைபா நகரில் உள்ள பொது மயானத்திலும் அடக்கம் செய்யும் அளவுக்கு அமாத்துல் பஹா சாதாரண மனிதரல்லர். இந்த நேரத்தில்தான் பாதுகாவலர் உயிரோடு இருந்தபோது அவர் சொன்ன குறிப்பு உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

அப்துல் பஹா காலமானது முதற்கொண்டு பாதுகாவலரும் பஹியா கானும் அவர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தில் தங்கிவந்தனர். பஹியா கானும் காலமாகியபின்னர் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களை மணந்தார். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் இல்லதில்தான் வாழ்ந்தனர். அப்பொழுது அப்துல் பஹாவின் இல்லத்திற்கு எதிர்புறத்தில் உள்ள ஒரு காலி நிலத்தை பாதுகாவலர் விலைக்கு வாங்கினார். ஒரு நாள் பாதுகாவலர் அந்த நிலத்தை அமாத்துல் பஹாவிடம் காண்பித்து, “அதோ,அதுதான் உன்னுடைய பூங்கா” என்று கோடி காட்டினார். அதன் உள் அர்த்தம் அப்பொழுது அமாத்துல் பஹாவுக்குத் தெரியவில்லை. அதுபோல் பாதுகாவலர் பல விஷயங்களை அமாத்துல் பஹாவிடம் கோடிக்காட்டியுள்ளார். அவை யாவும் பிற்காலத்தில் நடந்தேறியுள்ளன. அத்தகைய கூற்றுகளையும் குறிப்புகளையும் நாம் அமாத்துல் பஹா எழுதிய பிரைஸ்லஸ் பேர்ல் ( விலைமதிப்பில்லா முத்து ) என்ற நூலில் காணலாம்.

ஆகவே பாதுகாவலர் சொன்ன அந்தக் கருத்து உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்ததும் பாதுகாவலர் வாங்கிய அந்தக் காலி நிலத்தில் அமாத்துல் பஹாவை அடக்கம் செய்திட உலக நீதி மன்றம் முடிவெடுத்தது, அந்த நிலம் பாதுகாவலர் காலாமாகிப் பனனெடுங்காலமாகவே அப்படியே இருந்து விட்டது. அங்கு மரங்கள் அடர்த்தியா வளர்ந்திடவே பலரின் பாார்வை அந்த நிலத்தின்மீது பாயக்கிடையாது. ஆனால் அமாத்துல் பஹா காலமானபோதுதான் அந்த நிலத்தின் முக்கியத்துவமே புரியவந்தது. ஆகையினால் பாதுகாவலர் அமர்த்துல் பஹா அவர்களை விட்டுப் பிரிவதற்கு முன்னபே அமாத்துல் பஹாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், அவர் உயிர் துறந்துள்ளார்.

19ம் தேதி அதிகாலையின் கிழக்கு வெளுத்து கதிரவன் உதிர்பதற்கு முன்பே அமாத்துல் பஹாவின் அடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக நீதி மன்றம் செய்துமுடித்துவிட்டது. வேலைகள் மள மளவென்று ஆரம்பிக்கப்பட்டன. 23ம் நாள் பிற்பகல் 2.00 மணிக்கு அன்னவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. அதனால் உலக நீதி மன்றம் சில கட்டளைகளைப் பிறப்பித்தது. முதலாவதாக அமாத்துல் பஹா மறைந்த இல்லத்திற்கு பஹாய்கள் யாரும் போகக்கூடாது என்பதாகும். குறிப்பாக புனித யாத்திரைக்கு வந்துள்ளவர்கள் அங்கு போக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் புனித நிலத்தில் கூடுதல் காலத்திற்கு தங்கி அமாத்துல் பஹாவின் சவ அடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. புனித யாத்திரைக்கு வந்தவர்கள் யாத்திரையொடு திரும்பியாக வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமாத்துல் பஹாவின் நல்லுடலுக்காக ஒரு பஹாய் அன்பர் ஒரு விசேஷமான சவப்பெட்டியை உருவாக்கினார். அது தரமான தேவதாரு மரத்தல் இருந்து உருவாக்கப்பட்ட சவப்பெட்டியாகும். அமாத்துல் பஹாவின் நல்லுடல் அனுள்ளே கிடத்தப்பட்டு காற்று போகாதபடி முத்றை இடப்பட்டது. அதனால் அவரின் முகத்தைக் காண்பதற்கான வாய்ப்பில்லாமல் மூடப்பட்டிருந்தது. மறுபக்கம் மயானத்தில் புதை குழிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உலகில் உள்ள தேசிய ஆன்மீக சபைகளை உலக நீதி மன்றம் தொடர்பு கொண்டு அவை தலா இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டது. பல தேசிய சபைகளும் அவ்வாறு பிரதிநிதிகளை அனுப்பின. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து அப்போது தேசிய அங்கத்துவம் வகிக்காத இருவர் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அந்த இருவரும் தேசியா சபையின் பிரநிதிகளாக இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமா என அந்த சபை கேட்டதற்கு உலக நீதி மன்றம் மறுத்துவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் உள்ளநாட்டு பத்திரிகைகளிலும் பொது தொடர்புச் சாதானங்களிலும் அமாத்துல் பஹாவின் மறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. உலகம் முழுதும் இருந்து பல பஹாய் அன்பர்களும் விமான நிலையத்தில் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர்.

பிப்ரவரி மாதம் 23ம் நாளன்று அமாத்துல் பஹாவின் நல்லுடலை அடக்கம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு புனித நிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அமாத்துல் பஹா காலமானது பிப்ரவரி மாதம் 19ம் நாளன்று. அதற்கு சில நாட்கள் முன்பு வரைக்கும் புனித நிலத்தில் உஷ்ணம் அதிகமாக இருந்தது, ஊரே காய்ந்து கொண்டிருந்தது, மழை வர வேண்டும், வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தும் வேண்டியும் கொண்டிருந்தனர். அமாத்துல் பஹா காலமாகிய 19ம் நாளன்று மக்கள் எதிர்பார்த்த அந்த மழை பெய்தது. ஊரும் குளிர்ந்தது, மக்களின் உள்ளமும் குளிர்ந்தது. அந்த வகையில் அமாத்துல் பஹாவின் மறைவு நாளில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 23ம் நாள் பிற்பகள் 2.00 மணிக்கு அமாத்துல் பஹாவுக்கான இறுதி மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி சம்பவம் நடைபெறுவதாக இருந்தது. அன்றும் கூட மழை லேசாகத் தூறிக்கொண்டுதான் இருந்தது. அப்துல் பஹாவின் இல்லத்திற்கு முன்னால் உள்ள சாலையில் நண்பர்கள் கூடத்தொடங்கினார்கள். பலரும் குடைகளைப் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தனர். கார்மல் மலைக்கு மேலே கார்மேகங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே ஒரே அமைதியாக இருந்தது. புனித நிலத்தில் பணிபுரிகின்ற பஹாய்கள் வருகைத் தந்தவர்களை வரவேற்று தக்க இடங்களுக்கு அழைத்துச்சென்றனர்.

மணி இரண்டை நெருங்கும் போது சில கார்கள் அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே வந்து நின்றன. அவற்றில் இருந்து தெய்வச் சமயத் திருக்கரங்களாகிய திரு புருட்டான் மற்றும் டாக்டர் அலி வர்கா ஆகியயோர் இறங்கினார். அமாத்துல் பஹா ருஹியா கானும் காலமானதோடு இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே வாழும் தெய்வ சமயத் திருக்கரங்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் வீட்டின் முன்னே உள்ள பாதையில் நடந்து படிக்கட்டிகளில் ஏறி முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அந்தப் பாதையின் இரண்டு ஓரங்களிலும் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த இருவறையும் தொடந்து உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள், கண்ட ஆலோசகர்கள் இன்னும் அழைக்கப்பட்ட விசேஷமான பிரமுகர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தினுல் நுழைந்தனர். அந்த வீட்டில்தான் ருஹியா கானும் அவர்களின் நல்லுடல் மூடப்பட்ட சவப்பெட்டியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களும் அழைக்கப்பட்டவர்களும் பஹாய் உலக மையத்தின் ஊழியர்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பூங்காக்களில் குழுமி இருந்தனர்.

சரியாக மணி இரண்டுக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக வேண்டும். தீடிரென்டு தூறல் நின்றது, மேகம் கலைந்தது, வானம் தெளிந்தது, சூரிய ஒளி படர்ந்து. நிகழ்ச்சி ஆரம்பமானது.. உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர் திரு யான் சேம்பல் அவர்கள், அமாத்துல் பஹாவின் மறைவைப் பற்றி உலக பஹாய்களுகு உலக நீதி மன்றம் அனுப்பிய செய்தியை வாசித்தார். கடந்த சில தினங்களாக அடாத மழையின் காரணமாக பறவைகளும் பாடுவதை நிறுத்துக் கொண்டன. எண்ணே ஆச்சரியம்! உலக நீதி மன்றத்தின் கடிதம் வாசிக்கப்பட்ட வேளையில் பக்கத்து பூங்காக்களின் மரங்களில் இருந்து பறவைகளும் பாடத் தொடங்கின! அந்த கடிதம் வாசிக்கப்பட்டு முடிந்ததும், ஆறு பிரார்த்தனைகளிள் ஓதப்பட்டு புனித வாசகங்கள் வாசிக்கப்பட்டன. ஒளி பெருக்கிக் கருவிகள் அந்தப் புனித வாசங்களை அப்துல் பஹாவின் இல்லத்திலும் பக்கத்துப் பூங்காக்களிலும் கொண்டு சேர்த்தன. உயிர் துறந்தவர்களுக்கான பிரார்த்தனை கூறி முடிக்கப்பட்டதும், உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள் அந்த சவப்பெட்டியை சுமந்து கொண்டு அப்துல் பஹாவின் இல்லத்தின் வெளி வாசலில் கொண்டு போய் வைத்தனர். அங்கிருந்து வேறு அறுவர் அந்த சவப் பெட்டியை சுமந்து கொண்டு, சாலைக்கு மறு பக்கம் இருந்த புதைகுழியின் அருகே வைத்தனர். அந்த ஆறுவரும் உலகின் பல்வேறு நிறங்களைப் பிறநிதித்த பஹாய்கள்.

கடந்த நான்கு நாட்களாக அமாத்துல் பஹாவுக்கான சவக்குழியை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. புனித நிலத்தில் ஒரு பழக்கம் உண்டு.சவக்குழியைத் தோண்டி, குழியின் அடியிலும் நான்கு ஓரங்களிலும் சிமென்டு பூசுவார்கள். சவப்பெட்டி உள்ளே இறக்கப்பட்டவுடன் சிமெண்டினால் செய்யப்பட்ட தட்டையான மூடியினால் சவக்குழியை மூடி விடுவார்கள். அமாத்துல் பஹாவுக்கும் அவ்வாறான புதை குழிதான் உருவாக்கப்பட்டிருந்தது. அன்னவரின் சவக் குழியின் ஓரங்களில் ரோஜா மலர்கள் பொறுத்தப்பட்டன. உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வந்த நுாற்றுக்கணக்கான பூக்கூடைகள் அருகில் அழகுற அடுக்குவைக்கப்பட்டிருந்தன. அதனால் அந்த இடமே இடுகாடு போல காட்சித் தராமல் நந்தவனம் போல கோலம் கொண்டது.. சவப் பெட்டியின் மீதும் ஏராளமான ரோஜாப் பூக்கள் அடுக்கிவைக்கப்பட்டன. சவக் குழியின் அருகே மூன்று பிரார்த்தனைகள் கூறப்பட்டன. இத்துடன் மொத்தம் ஒன்பது பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அதன் பின்பு அமாத்துல் பஹாவின் நல்லுடலைத் தாங்கிய சவப் பெட்டி புதை குழியினுள் இறக்கப்பட்டது. உலக நீதி மன்றத்தின் மதிப்புமிகு அங்கத்தினர்களும் இன்னும் உயிர் வாழும் இரண்டு தெய்வச் சமயத் திருக்கரங்களும் இன்னும் பலரும் கண்ணீர் பெருக்கெடுக்க சோர்ந்த முகத்தோடு இருந்தனர். சவப் பெட்டி இறக்கப்படும் வரைக்கும் தூறாமல் இருந்த வானம், சவப் பெட்டி இறக்கபடும் வேளையில் மீண்டும் தூறி, தன் கண்ணீர்த் துளிகளையும் காணிக்கையாகச் செலுத்தியது. இந்த முறை பலமாகவே மழை பெய்தது. சவப் பெட்டி இறக்கப்பட்டதும், அக்குழியின் மேலே தட்டையான சிமென்டு மூடிகள் போட்டு மூடப்பட்டது. அங்கு வந்திருதவர்கள் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்தினார். வருகைத் தந்தவர்கள் மழையைப் பொருட்படுத்தாமல், பூக்கூடையில் இருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து சவக்குழியின் மீது வைத்தனர். அங்கு ஒரு மலர் மலையே உருவாகியது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடமே காலியாகியது.. அங்கிருந்து பார்த்தால் ஹைபா வளைகுடாவுக்கு மேலே வானவில் தன் வண்ணக் கோலத்தைக் காட்டியது. லண்டனில் பாதுகாவலர் அடக்கம் செய்யப்பட்ட போதும் இது போலத்தான் மழை பெய்துள்ளது. அப்படி ஒரு பொருத்தம்.

மறுநாள் புனித நிலத்தில் இன்னெரு அதிசயம். வானம் தெளிவாகியது. சூரியன் சுத்தமான ஒளி வீசியது. ஓரு புது பொலிவும் உற்சாகமும் புனித நிலத்தில் குடிகொண்டது! ‘என் உதவியாளர் “என் கேடயம்,” “நான் சுமந்துள்ள கடினமான பணிகளை நான் மேற்கொண்டபோது என் அயாரத ஒத்துழைப்பாளர்.” என்றெல்லாம் பாதுகாவலரினால் அழைக்கப்பட்டவர் இந்த அமாத்துல் பஹா. 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரம் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்ட அவரின் நல்லுடல் இன்று புனித நிலத்தில் பாதுகாவலரினால் தேர்தெடுக்கப்பட்ட தனி நிலத்தில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துள்ளது.

முடிவாக
அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களின் வழ்க்கை மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். பாதுகாவலரினால் மிகவும் போற்றப்பட்டவர்கள் அமாத்துல் பஹாவின் பெற்றோர்கள். அப்துல் பஹா பிரார்த்தனை கூறி, அதன் வழி பிறந்தவர் தான் ருஹியா கானும். அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலரின் துணைவி என்ற முறையிலும், தெய்வ சமயத் திருக்கரம் என்ற முறையிலும், பேச்சாளர் என்ற முறையிலும், நாடாகமாந்தர் என்ற முறையிலும் எழுத்ாளர் என்ற முறையிலும், போதகர் என்ற முறையிலும்,படத்தயாரிப்பாளர் என்ற முறையிலும், இன்னும் ஒரு பஹாய் சேவகி என்ற முறையிலும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்தார். தாம் தொட்ட துறைகள் யாவுமே துலங்கிடும் வண்ணம் அவர் சேவை செய்தார். சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைக்கும், 90 வயது வரை வாழ்ந்து மூன்ற தலைமுறையினரும் முக்காலமும் நினைவில் வைக்கவல்ல வாழ்க்கையை வாங்கினார். பாதுகாவலர் லண்டனில் 1957ல் காலமான பின்பு 1958ம் ஆண்டில் அவருக்கான கல்லறையை அமாத்துல் பஹா எழுப்பினார். அமாத்துல் பஹா காலமான போதும் பாதுகாவலர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிலத்தில் தான் அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டார். அப்படி ஓர் ஆன்மீக பந்தம் அவர்களுக்கு இடையில்! அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னாலும் கூட, அவர் விட்டுச் சென்ற சேவைகளின் வழியாக, அவர் வாழ்ந்துக் காட்டிய உதாரணங்களின் வழியாக அவர் என்னெற்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: