தன்மை மாற்றத்திற்கான அமைவுமனை
(உங்கள் மெய்நிலையை எய்துதல் எனும் கையேட்டிலிருந்து – டேனியல் சி. ஜோர்டன்)
பஹாவுல்லா, மனுக்குலத்தின் தன்மைமாற்றத்தைப் பாதுகாத்தும் ஊக்குவிக்கவும்கூடிய ஸ்தாபனங்களை உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கும் வழிவகைகளை அளித்துள்ளார். ஆகவே, பஹாய் சமூகமானது, தன்மைமாற்றம் நிகழக்கூடிய ஓர் அமைவுமனையாகின்றது.
மனுக்குலத்தின் ஒறுமைக் குறித்த கோட்பாட்டைப் பஹாவுல்லா வலியுறுத்துவதால், பஹாய் சமூகங்கள் பலவகையான மொழிகள், இனங்கள், தேசிய மற்றும் சமயப் பிண்ணனிகளைக் கொண்ட மனிதர்களை உள்ளடக்கியுள்ளன. பஹாய் சமூகத்தின் இந்தப் பல்வகைமை சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறியப்படாத பலவற்றைப் பிரதிநிக்கின்றது, அல்லது, தெளிவான வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண நிலையில் ஒருவர் நெருங்க விரும்பவோ அல்லது சினேகம் கொள்ளுவதற்காகத் தேர்ந்தெடுக்கவோ விரும்பாத பல மனிதர்களைக் கொண்டது பஹாய் சமூகம். நாம் சிந்திப்பனவற்றையே தாமும் சிந்திப்பவர்களாகவும், பிற விஷயங்களைப் பற்றி நாம் உள்ளுணர்வுகொள்வதைப்போலவே தாமும் உள்ளுணர்வுகொள்பவர்களாகவும், ஒரே விதமான நாட்டங்கள் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ஈடுபாடுகளைக் கொண்டவர்களாகவும் இருக்கும் பிறரையே நாம் நமது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க முனைவோம் என்பது வெளிப்படையான ஒன்று. ஒரியல்பு கொண்ட இவ்வித நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரது தன்மைமாற்ற செயற்பாடு சுலபத்தில் தேக்கநிலையடைந்துவிடும், ஏனென்றால், அங்கு எல்லாச் சூழ்நிலைகளுக்கும் மாறாத நிலையிலான பதில் செயல்களே (அல்லது ஆங்கிலத்தில் ‘ரெஸ்போன்ஸ்’ எனப்படுவது)உருவாக்கப்பட்டு, வேறு புது விதங்களில் நடந்துகொள்வதற்கு எவ்விதத் தூண்டுகோளும் இல்லாது போகும். இதனால்தான், ஒரு பஹாய் சமூகத்தின் விலைமதிப்பில்லாத் தன்மைகளில் ஒன்றாக அதன் பல்வகைமை இருக்கின்றது. ஒருவர் ஒரு பஹாய் சமூகத்தில் இனைந்திடும் போது அவர் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தான் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டிய மிகவும் பல்வகையான மனிதர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தில் இனைகிறார். தாம் அங்கு வெளிப்படுத்தக்கூடிய தமது பழையப் பதில்செயல்கள் அனைத்துமே போதியவை அல்ல என்பதை அவர் முதலில் கண்டுகொள்கிறார். அங்குப் பெரிய அளவிலான பல்வகைப்பட்ட மனிதர்கள் அதிக எண்ணிக்கையிலான அறிந்திராதவற்றைப் பிரதிநிதிக்கின்றனர். அறிந்திராத விஷயங்கள்பால் கொள்ளும் தொடர்பு, மனிதரில் ஒருவித சக்தியைத் தூண்டுகின்றது. இச்சக்தியாகப்பட்டது, நம்பிக்கை மற்றும் துனிவு ஆகியவற்றின் மூலமாக அறிவது அன்புகொள்வது எனும் பிரதிச்செயற்பாடு ஒன்றை ஆரம்பித்து வைக்கின்றது. மனதிற் தோன்றும் இந்த உலைச்சல் உருவாக்கும் சக்தியை ஆக்கத்துடன் உபயோகப்படுத்திடக்கூடிய ஒரு ஏற்புடையக் குறிக்கோளை வரையறுப்பதென்பது, புதிய பதில் செயற்களஞ்சியம் ஒன்றுக்கு (ரெஸ்போன்ஸ்) அறைகூவல் விடுக்கும். சூழ்நிலைக்கொத்த ஒவ்வொரு புதிய நடத்தையும் மனித இயற்திறனின் வெளிப்பாடு ஆகும் — அது ஒருவரது உள்ளார்ந்த ஆற்றலை விடுவிப்பதாகும். இதை வேறு விதத்திற் கூற வேண்டுமானால், வேறெங்குமே காணமுடியாத, வளர்ச்சியைப் பராமரிக்கும் ஒரு சூழ்நிலையில், அறிந்து அன்புகொள்வதற்குத் தேவையான வாய்ப்புக்களை பஹாய் சமூகம் அதிகமாக வழங்குகிறது என்பதே ஆகும்.
பொதுவாகத், தனது சக சமூக உறுப்பினர்களின் பலவகைமைத் தன்மைகள்பால் சகிப்புத்தன்மை என்பதுடன் ஆரம்பிக்கும் ஒரு ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிப்பாங்கு ஒன்றின் வழி ஒரு பஹாய் கடந்து செல்கிறார். அறிவு சேரும்போது, இந்தச் சகிப்புத் தன்மைப் புறிந்துணர்வாகின்றது. அன்பு சேர்க்கப்படும் போது, புறிந்துணர்வு போற்றுதலாக மலர்கிறது. பலவகைத்தன்மையின் மீதான இந்தப் போற்றுதல் இனவகை இயலின் ஆன்மீக மற்றும் சமூக ரீதியிலான எதிர்ப்பதமாகும். இனவகையியல் கடந்து, சகிப்புத் தன்மை மற்றும் புறிந்துணர்வு ஆகிய கட்டங்கள் வழி நாம் நடந்து, போற்றுதலெனும் நிலையை எய்துவது பல கவலையுணர்வுகளையும் சந்தேகங்களையும் சுமத்துகிறது. பல வேளைகளில், என்ன செய்வதெனத் தெரியாத சூழ்நிலைக்கு உட்படுத்தப்படுகிறோம், அல்லது, என்ன செய்வதெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு நாட்டமற்றிருக்கின்றோம். இவை தன்மைமாற்றத்திற்கு முன்னவசியமான சோதனைகளாகும். பஹாவுல்லாவின் திருமகனாராகிய, அப்துல் பஹா, சோதனைகள் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சிக் கிடையாது என ஐயத்திற்கிடமில்லாமல் கூறுகிறார்.
இங்கு நாம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறோம். பல வேளைகளில் சோதனைகள் ஒரு மனிதனை அழித்துவிடும். இறைவனிடமிருந்து அப்பால் திரும்பிச் சோதனைக்குத் தீர்வு காண நாம் முயன்றால் அச்சோதனை நம்மை உண்மையிலேயே அழித்துவிடும். சோதனைக்குத் தீர்வுகாண நாம் இறைவன்பால் திரும்பியும் அவ்விஷயத்தில் சமூகத்தின் பிற அங்கத்தினர்களின் அன்பான பக்கபலமும் இருந்தால் நாம் அந்தச் சோதனையை வெற்றிகரமாகக் கடக்க முடியும். ஆகவே, பஹாய் சமூகமானது, அதன் பலவகைத்தன்மையின் காரணமாக, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமான அத்தகையச் சோதனைகள் பவற்றை நமக்களிக்கின்றது. அதே வேளை, ஸ்தாபனங்கள் மூலமாகக் கிடைக்கும் வழிகாட்டல்களும் சமூக அங்கத்தினர்கள் இறுதியில் அடையக்கூடிய நிலைக் குறித்த சமூக உறுப்பினர்களின் பொறுப்புணர்ச்சியும் மனித இயற்திறன்களை விடுவிக்கக்கூடிய ஆன்மீக மேம்பாட்டுக்கான வாகனங்களாக அத்தகைய சோதனைகளை மாற்றிடுவதற்குத் தேவையான மனவுறுதியை வழங்கிடும்.
சுருக்கமாகக் கூறப்போனால், இதுவே இன்னல்கள் என்பதன் ஆன்மீக விளக்கமாகும். “எமது பேரிடர்களே எமது வள்ளன்மை. வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந்தீர்த்தலும் போல் தோன்றியபோதிலும் உள்ளூர அவைகள் ஒளியும் இரக்கமும் ஆகும். அவைகளின்பால் விரைவாயாக. அதனால் நீ நிலையான ஒளியாகவும் என்றும் இறவா ஆவியாகவும் ஆகக்கூடும். இதுவே உனக்கு எமது கட்டளை ஆகும். அதனைக் கடைப்பிடிப்பாயாக,” என பஹாவுல்லா கூறுகின்றார்.
ஆகவே, ஒரு பஹாய்க்கு இன்பம் என்பது பதற்றம் மற்றும் மனஉலைச்சல் ஆகியவையற்ற வாழ்வு வாழ்வதென்பதல்ல. அவ்வித வாழ்வு “போரடித்துப்போவது” என்பதன் பஹாய் விளக்கவுரையே அகும். ஒரு பஹாய்க்குச் சந்தோஷம் என்பது வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொண்டும், தனது அறிதல் மற்றும் நேசித்தல் ஆற்றல்களை மனுக்குலத்திற்குச் சேவை செய்வதன் மூலம் மேலும் மேம்படுத்திடத் தேவையான மனவுறுதியை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். ஒரு சமூகத்தில் வாழ்வது, சோதனைகளை உள்ளடக்கியுள்ளது. இச்சோதனைகள் கருத்தியலான கோட்பாடுகளை உறுதியான மெய்மைகளாக மாற்றிடும் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களாகின்றன. இது, ஆன்மீக மேம்பாட்டில் அடையப்படும் பலன்களை உறுதிபடுத்தி, தொடர்ந்தாற்போன்ற வளர்ச்சிக்கான அஸ்திவாரத்தை வழங்கக்கூடிய உண்மையான சூழ்நிலைகளின்போது சமயக் கோட்பாடுகளை எப்படி பயன்படுத்துவது என்பதில் நமது சமயப்பற்றுக்கு ஒரு விழிப்புநிறைந்த அறிவெனும் அஸ்திவாரத்தை வழங்குகிறது.