தாஹிரி ஜம்ஷிட்


தாஹிரி ஜம்ஷிட்

ஓல்யாவின் கதை எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

இரான் நாட்டில் இன்று பல பஹாய்கள் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் ஒரே குற்றம் உலகசீர்த்திருத்தம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட்டதே ஆகும். ஆம், இவர்கள் பஹாய்கள் ஆவர். அதுதான் அவர்கள் இழைத்த குற்றம்.
தாஹிரி சீயாவுஷீயை ஷிராஸில் வஹ்டாட்களின் இல்லத்தில் 1977-இல்தான் முதல் முதலில் சந்தித்தேன். அடுத்து நாங்கள் இருவரும் சந்தித்தது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேப்பா சிறைச்சாலையின் இருண்ட சில்லிட்ட அறை ஒன்றில் தாஹிரி என்னை அன்புடன் கட்டித் தழுவிய போதே. தாஹிரியும் அவளது கனவரான ஜம்ஷிட் இருவரும் ஒன்றாகவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக அனுபவித்த கொடுமைகளைப் பின்வருமாறு தாஹிரி விவரித்தாள்:

1977-இல், ஜம்ஷிட்டும் நானும் யசூஜிற்கு நகர முடிவெடுத்தோம். 1978 இரானிய புரட்சியின் ஆரம்பத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். எங்கள் வீடு, உடமைகள் மற்றும் ஜம்ஷிட்டின் புதியக் கடை அனைத்தும் அபகரிக்கப்பட்டன. நான் தாதி வேலை செய்து வந்த மருத்துவ மையத்திலிருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டேன்.

அதன் பிறகு கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் ஷிராஸ் திரும்பினோம். கையில் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை மறுபடியும் அமைக்க ஆரம்பித்தோம். சிறிது காலத்திற்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆனாலும் இருந்ததைக் கொண்டு மனநிறைவு அடைந்தோம். நான் பல மருத்துவ நிலையங்களில் வேலைத் தேடினேன். என் சேவைத் தேவைப்பட்டபோதும், நான் பஹாய் எனும் காரணத்தினால் அங்கு என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. ஜம்ஷிட்டும் துனிக் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு, நான்கு வருடங்களாகச் சொந்த வீடு இல்லாத நிலைக்குப் பிறகு சொந்தமாக ஒரு இடத்தைப் பெறும் நிலையில் இருந்தோம். போன வாரம்தான் ஒரு குளிர்சாதனப் பெட்டி, படுக்கை, மற்றும் சிறு சிறு பொருட்கள் என சிலவற்றை வாங்கினோம். ஆனால் இந்த சிலவற்றைக் கூட நாங்கள் பெற்றிருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். இப்போது நாங்கள் இருவரும் இங்கு சிறையில் இருக்கின்றோம். அக்டோபர் மாத இருதியில், இரவு நேரத்தில், வீதியில் ஜம்ஷிட் கைது செய்யப்பட்டு நேராக சேப்பா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் 10 மணியளவில் அவர் எங்கள் வீட்டிற்குக் கொண்டுவரப்பாட்டார். அவரைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அவர் வெடவெடவென்று நடுங்கி, நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அவரை அவர்கள் என்ன செய்துவிட்டனர் என்பதை அறிய அவர் அருகே விரைந்தேன், ஆனால் அவர்கள் எங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனராகையால் நான் அவரிடம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. அவர்கள் பஹாய் பதிவேட்டிற்கும், பஹாய் நிதிகளைப் பறிமுதல் செய்வதற்காகவும் வந்திருக்க வேண்டும் என யூகித்தேன். ஜம்ஷிட் பதிவேடு மற்றும் நிதி இரண்டையும் தமது கையில் வைத்திருந்தார் ஆனால் புரட்சிக் காவலர்களிடன் அவற்றை ஒப்படைக்க மறுத்துவிட்டார். மற்ற பஹாய்களின் பெயரைப் பெற அவரை அவர்கள் நிச்சயமாகச் சித்திரவதை செய்திருக்கவேண்டும். எங்கள் இருவரையும் பயமுறுத்த எங்கள் இருவரையும் பிரித்து என்னை ஒர் அறையில் அடைத்து வைத்தனர். அவர்கள் ஜம்ஷிட்டிடம், “பதிவேட்டையும் பணத்தையும் கொடுக்கப்போகிறாயா அல்லது இங்கேயே உன்னைக் கொல்ல வேண்டுமா?” என பயமுறுத்துவது எனக்குக் கேட்டது. நான் பெரும் பீதிக்குள்ளானேன்; அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நான் அலறியவாறு கதைவைக் கைகளால் பலமாகத் தட்டினேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கும் பொருட்டு அவர்கள் கதவைத் திறந்து என்னை வேளியே விட்டனர்.

அவர்களின் தாக்குதலை எதிர்க்கவேண்டும் எனும் தீர்மானம் ஜம்ஷிட்டின் முகத்தில் நன்குத் தெரிந்தது. ‘அதாஹிரி, நான் அஹமதுவிடம் அந்த பதிவேட்டைக் கொடுத்தேன் ஆனால் அவர் எங்கு வைத்துவிட்டாரோ தெரியவில்லை,’ என்றார்
உண்மையில் அந்த புத்தகத்தை ஜம்ஷிட் பாதுகாப்பாக வைத்திருந்தார். தம் உடன்பிறந்தவரிடம் அதை ஒப்படைத்தும், அப்படித் தாம் கைது செய்யப்ப்டடால் அதை எடுத்து நம்பிக்கையான ஒருவரிடம் அதை ஒப்படைக்கும்படியும் கூறியிருந்தார். இதன் மூலம் பஹாய்களின் பெயர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மிகுந்த வேதனையோடு பெருமூச்சு ஒன்றை விட்டார். அவர் தமக்குள் நடத்திய போராட்டத்தினால் அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. ஒரு புரம் உள்ளூர்ப் பஹாய்களைப் பாதுகாத்திடும் பொருட்டு அவர் சிறையில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும், மறுபுறம் அவர் நேர்மையாக இருக்கவேண்டும் எனும் நம்பிக்கையினால் பொய் சொல்ல அஞ்சினார். காவலர்கள் முன்னிலையில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவலர்களின் முன்பாகவே ஜம்ஷிட்டை நோக்கிச் சென்றேன். அவரது கையைப் பற்றி அவர் நடப்பதற்கு உதவி செய்தேன். ஒரு பார்வையிலேயே பதிவேடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதையும் அஹமது நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதையும் தெரிவித்தேன்.

பதிவேட்டை காண முடியாத காவலர்கள் ஜம்ஷிட்டை மறுபடியும் சிறைக்கே கொண்டு சென்றனர். ஒரு மாதம் கழித்து, அவர்கள் திரும்பி வந்து என்னையும் கைது செய்தனர். என் மேல் சாற்றப்பட்ட குற்றச் சாட்டு நான் பஹாய்ப் பதிப்பகக் குழுவில் அங்கம் வகித்தேன் என்பது.

தாஹிரிக்கும் அவளது கனவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்தன. அவ்விருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். தாஹிரிக்கு முப்பது வயதும் ஜம்ஷிட்டுக்கு முப்பத்தி நான்கு வயதும் ஆகியிருந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. சிறையில் தாஹிரி சதா ஜம்ஷிட்டின் பெயரை உச்சரித்து அவருக்காக ஏங்கி அழுது கொண்டிருப்பாள். பல மணி நேரங்கள் அவ்விருவருடைய உறவைப் பற்றியும் ஜம்ஷிட்டின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருப்பாள். ‘ஓல்யா,’ என என்னை அழைத்து, ஜம்ஷிட்டை கொலை செய்து விடுவார்கள் என எனக்குப் பயமாக இருக்கின்றது, அவர் இல்லாமல் என்னால் வாழ இயலாது,’ என்றாள்.

அவள் தன் உயிரைத் தன் கணவனுக்காகத் தியாகம் செய்ய விரும்புவதாக எப்போதும் கூறிக்கொண்டிருப்பாள். தாஹிரியின் தியாக உணர்வும் அன்பும் பிரமிக்கச் செய்வதாக இருந்தது. அந்த மோசமான நிலையிலும் அவள் எல்லோரையும் கவனித்தும் எல்லோருக்கும் தன்னாலான உதவிகளையும் செய்து வந்தாள்.

சிறையில் பலர் அடிக்கடி நோய் வாய்ப் பட நேர்ந்தது. ஆனால் அங்கிருந்த வசதிக் குறைவுகளினால் ஒரே தட்டிலிருந்து கைகளாலேயே உண்ண வேண்டியிருந்தது. ஒரு நோயாளியோடு ஒரே தட்டிலிருந்து உண்ணுவது எனக்குக் குமட்டலை ஏற்படுத்தும் என்பதை தாஹிரி உணர்ந்திருந்தாள். அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவள் என்னைப் பார்த்து, ‘ஓல்யா, நாம் இருவரும் இடம் மாற்றிக் கொள்ளலாமே?’ என்பாள்

நாங்கள் குளிக்கும் போது அவள் எங்கள் துணிகளைத் துவைப்பதற்கு முன்வருவாள். முதல் சில வாரங்களில் எங்களுக்குப் போட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு உடை மட்டுமே இருந்தது. பல நாட்ளுக்குப் பிறகே எங்கள் குடும்பத்தினர் எங்களுக்கு மாற்று உடை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தாஹிரி தான் கைது செய்யப்பட்ட போது மிகவும் சமயோசிதமாக ஒரு மாற்று உடையைத் தன்னோடு கொண்டு வந்திருந்தாள். அன்றிரவு காவலர்கள் அவளுடைய வீட்டிற்கு வந்த போது மாற்று உடைகளும் குளியல்பொருட்கள் சிலவற்றையும் அவள் முன்யோசனையுடன் ஒரு பையில் எடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் என் (ஓல்யா) நிலையோ, நான் கைது செய்யப்பட்ட நாளன்று சிறைக்குள் எனக்குத் தேவையான பொருட்களை என்னுடன் கூட எடுத்த வருவதற்கு அனுமதி கேட்ட போது காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அதுவும் பல முறை கெஞ்சிக் கேட்ட பிறகே, என் கனவர் எனக்குத் தேவையான சில பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அந்த வேளைகளில் நான் குளித்து என் உடையைத் துவைக்கும் போது தாஹியிரியின் உடையையே உபயோகப் படுத்த வேண்டியிருந்தது. எங்கள் விசாரணைகளின் போது நாங்கள் மொத்தமான காலுறைகளும், காற்சட்டைகளும், நீண்ட தளர் மெய்யங்கிகளும், முக்காடும், சடுர் எனப்படும் கறுப்பு உடையும் தரித்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் கைது செய்யப்பட்டபோது சாதரண உடைகளே போட்டிருந்ததால் காலில் சாதரண மெல்லிய காலுறைகளே அனிந்திருந்தோம். தாஹிரி இரண்டு ஜோடிக் காலுறைகள் வைத்திருந்தாள். முதல் வாரத்தில் நாங்கள் அவளுடைய காலுறைகளேயே அனிந்து செல்வோம். ஒரு முறை நான் திடீரென விசாரனைக்காக அழைக்கப்பட்டேன். அப்போது தாஹிரி தான் அனிந்திருந்த காலுறைகளைக் கலற்றி என்னிடம் கொடுத்தாள். அப்போது நான், “ஒரு வேலை உன்னை அவர்கள் திடீரென அழைத்தாள் நீ என்ன செய்வாய். காலுறைகள் இல்லாமல் நீ அவதிப்படுவாய்,” என்றேன்.
‘பரவாயில்லை, நீ இதை இப்போது அனிந்த செல்,’ எனத் தாஹிரி கூறினாள்.’

விசாரனை முடிந்து திரும்பியவுடன் நான் தாஹிரியின் காலுறைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கள் விசாரனைக் குறித்தும் நாங்கள் படும் அவஸ்தைக் குறித்தும் பேசினோம். அப்போது தாஹிரி திடீரென என்னிடம் ‘ஓல்யா, இந்த காலுறைகளை நான் உன்னிடமே கொடுக்கப்போகின்றேன் எனக் கூறினாள்.’

‘தாஹிரி, எப்போதாவது ஒரு நாள் நான் இங்கிருந்து வெளியேறினால், நீ கொடுக்கும் இவற்றை உன் ஞாபகார்த்தமாக நான் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் என்றேன். நமது துன்பம் நிறைந்த இந்த நாட்களையும், உன்னுடையத் தியாங்கள் அனைத்தையும் அவை எனக்கு ஞாபகப்படுத்தும். அந்த நேரத்தில் நான் விடுதலையாவேனா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால், இப்போது தாஹிரி கொடுத்த அந்த காலுறைகளை நான் பொக்கிஷங்களாக மதிக்கின்றேன்.
தாஹிரியின் விசாரனை எங்களுடன் சேர்த்துச் செய்யப்படவில்லை. ஒரு நாள், அவள் விசாரனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள், ஆனால், மீண்டும் அறைக்குக் கொண்டுவரப்படவில்லை. அவளுக்கு என்னவாயிற்றோ என நாங்கள் கதிகலங்கிப்போனோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அரசியல் கைதி ஒருவர் எங்கள் அறைக்குக் கொண்டு வரப்பாட்டார். அவர், தாஹிரி தனியறைச் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எங்களைப் பயப்படுத்துவதற்குச், சிறைக் காவலர்கள் எங்களில் யாரையாவது எங்கள் பொது சிறையறையிலிருந்து கொண்டு போய் தனியறைச் சிறையில் அடைப்பதுண்டு. பத்துத் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தாஹிரியை மறுபடியும் எங்கள் அறையிலேயே கொண்டு வந்த அடைத்தனர். அந்ந நாட்களில் தான் மிகவும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தாஹிரி தெரிவித்தாள். ஆனாலும், ஜம்ஷிட்டைப்பற்றியும் தன்னைப்பற்றியும் தவிர வேறு எவரைப்பற்றியும் தான் எவ்விதத் தகவலையும் அவர்களுக்கு வெளியிடவில்லையென தாஹிரி தெரிவித்தாள்.

முடிந்தபோதெல்லாம், எங்கள் அறைக்குள் நாங்கள் ஒன்றுகூடி, மனவேதனைகளை மறந்திருக்க வேடிக்கையாக எதையாவது பேசியும், சிரித்துக்கொண்டும், இருப்போம். கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது இருக்கும். குறிப்பாக, தாங்கள் கொலையுறப்போவது குறித்து அனைவருமே எதையாவது சொல்வார்கள். தாஹிரி அதைப்பற்றி வேடிக்கையாக எதையாவது கூறுவாள். “யா பஹாவுல்லா, தயவு செய்து என்னை மட்டும் இதற்குத் தேர்ந்தெடுக்காதீர்கள். நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. நான் ஒரு பஹாயாக இருந்து உயிர் வாழவே விரும்புகிறேன்.” அவ்வாறு கூறிவிட்டு மெல்லச் சிரித்து, “யா அப்துல் பஹா, நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. அது வலுக்கட்டாயமானது இல்லை தானே?  ஜம்ஷிட்டின் கரத்தை என் கரத்தில் வைத்து எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ விடுவீர்கள் என்பதே என் ஆசை. நாங்கள் இருவரும் ஒன்றாகவும் பஹாய்களாகவும் இருக்கும் வரை, தெருவோரத்தில் குடிசையில் வாழ்வதானாலும் பரவாயில்லை.” என வேண்டிக்கொள்வாள்.
எங்கள் மரணச் செய்தி கேட்டு நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு பதபதைப்பார்கள் என்பதை ஒரு சில அன்பர்கள், நடித்துக்காட்டி எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள். ஆனால் தாஹிரி மட்டும் சிரிக்க மாட்டாள். “இந்த வெறி பிடித்த மனிதர்கள் நம்மேல் வைத்துள்ள தப்பபிப்ராயத்தால் நம் எல்லோரையுமே கண்டிப்பாக கொல்லப்போகின்றனர்.” தாஹிரிக்குத் தான் கொல்லப்படப்போவது ஆரம்பித்திலிருந்தே தெரிந்திருந்தது போலும். ஆனால், அவள் சிரித்துக்கொண்டே, “கேளுங்கள், அவர்கள் நம்மை தூக்கிலிடும்போது நமது நாக்குகள் தொங்கிப்போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருக்கும். ஆகவே, வாயை நன்கு மூடிக்கொண்டு புன்னகைத்த வண்ணமாக இருங்கள்.” என்றால்.

பல நேரங்களில் நான் சிறிது மறந்திருந்தாலும் அவள் எனது தற்போதைய ஆசீர்வாதங்களை ஞாபகப்படுத்துவாள். ‘நாம் இனி கவலைப்படத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்த புரட்சிப் படையினர் எப்போது நமது வீட்டுக் கதவைத் தட்டி நம்மை கைது செய்வார்களோ எனும் பதபதைப்பு இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது நமக்கு அந்த பயம் இல்லையல்லவா.’ என்பாள்.

வருகையாளர்கள் தினங்கள் தாஹிரிக்கு மிகவும் சிறமமிக்க நாட்களாக விளங்கின. ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவாள். அவளது கனவனின் சகோதரராகிய அகமது, கர்ப்பமான தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு ஷிராஸ் நகரைவிட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தப் பெண்மனி தனது இரு குழந்தைகளோடும் கையில் பழங்கள் நிறைந்த பைகளுடனும், துணிகளுடனும், பணத்துடனும், தாஹிரியையும் அவளது கனவரையும் சந்திக்க வருவாள். அங்கு சிறை வாசலில் 7 அல்லது 8 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். காவலாளிகளின் ஏச்சையும் பேச்சையும் திட்டல்களையும் கொச்சை வார்த்தைகளையும் செவிமடுக்க வேண்டும். அதுவும், கண்ணாடித் தடுப்பின் வழி அந்த 10 நிமிடங்களுக்கும் குறைவான நேர சந்திப்பிற்காகவே. இது ஒவ்வொரு முறையும் தாஹிரியின் இதையத்தைக் கசக்கிப் பிழிந்துவிடும். ‘அந்தப் பெண்ணின் தியாகமும் தன்னலமின்மையும் என்னை நானிக் குறுகச் செய்கின்றன’ என அவள் கூறுவாள்.

ஜம்ஷிட் ‘சமாரிட்டான்’ குழுவின் அங்கத்தினர் எனவும், அவர் ஜோர்தானில் பிறந்தவர் எனவும் காவலர்கள் அறிந்த போது, அவரைப் பிறரைக்காட்டிலும் அதிகமாக துன்புறுத்தவாரம்பித்தனர். அவரை எழுபது நாட்கள் சேப்பாவில் தனிச்சிறை வைத்தனர். தாஹிரியும் ஜம்ஷிட்டும் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் உயிரையே வைத்திருந்து காவலர்களுக்குத் தெரியும். இதை அவர்கள் உபயோகப்படுத்தி ஒருவரிடம் மற்றவர் சமயத்தைத் துறந்துவிட்டதாகப் பொய் சொல்வார்கள். ஆனால், அது எப்போதுமே வேலை செய்ததில்லை. தாஹிரியிடம் இந்தக் கதையைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் அவள், ‘நான் பஹாய்’ என்பாள்.

நீ அவரது மனைவி அல்லவா?’ என அவர்கள் வினவுவார்கள்.

‘நம்பிக்கை என வரும்போது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாவுக்கு அவர்களே பொறுப்பாளிகள்’ என தாஹிரி கூறிவிடுவாள்.
விசாரனை செய்பவர், தாஹிரியின் மனோ தைரியத்தினால் மிகவும் சினமுற்று விசாரனை அரைக்கு அவளைக் கொண்டு சென்று, ‘நீ உன் சமயத்தைத் துறக்காவிடில் ஜம்ஷிட்டைச் சாகும் வரை துன்புறுத்த ஆனையிடுவேன்’ எனக் கூறுவார்.
‘நான் பஹாய். சாகும் வரை நான் அவ்வாறே இருப்பேன்,’ என அவள் தைரியமாக பதிலளிப்பாள். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் என் சமயத்தைத் துறக்கப்போவதில்லை.’

‘உன் ஜம்ஷிட்டை நாங்கள் என்ன செய்துவிட்டிருக்கிறோம் என்பதை மட்டும் நீ அறிந்தால். அவரை நீ இப்போது பார்த்தால் அடையாளமே தெரியாது. உனக்கு உன் ஜம்ஷிட் சிறிது கூட மீதமில்லாமல் செய்துவிட்டோம்’ என விசாரனை செய்யும் காவலர் கூறினார்.
ஜம்ஷிட் மீது உயிரையே வைத்திருந்த தாஹிரி, அது கேட்டு ஜம்ஷிட்டின் நிலை குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு காவலாளியைக் கெஞ்சினாள். அப்போது அவர்கள் ஜம்ஷிட்டை அந்த அரைக்குள் கொண்டுவந்து அவர்கள் இருவரையும் 15 நிமிடங்கள் சந்திக்க விட்டனர். அதன் பின் அவள் சிறைக்குத் திரும்பி வந்தாள். வரும்போது மேனியெல்லாம் நடுங்க அழுதுகொண்டே வந்தாள்.

அவர்கள் ஜம்ஷிட்டைத் கைத்தாங்கலாக அறைக்குள் கொண்டுவந்தனர். அவரைப் பார்த்தவுடன் நான் அலறிவிட்டேன். அவர் வெறும் எலும்பும் தோலுமாகப் பேயைப் போல் நின்றார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவரது கால் நகங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் ஆன்மா திடமாகவே இருந்தது. அவர் என்னைத் தேற்றியவாறு, ‘தாஹிரி, என்னைப்பற்றி கவலைப்படாதே. நான் உயிர்வாழ்வேன்,’ என்றார்.

நான் அதற்கு, ‘ஜம்ஷிட் உம்மை அவர்கள் கொன்றுவிட்டால் நாம் அடுத்த உலகில் சந்திப்போம். அங்கு நாம் ஒன்றாக இருக்கலாம்.’ அப்போது, ஜம்ஷிட் ஏதோ என்னிடம் சொல்ல விரும்புவதாக உணர்ந்தேன். ஒருவேலை நான் விடுதலையாகி வெளியே சென்றால், அவர் கூறக்கூடிய விஷயங்களைத் தேசிய ஆன்மீக சபையிடம் தெரிவிக்கவேண்டும் என விரும்பியிருக்கலாம். அவர் தமது சட்டையின் பின்புறத்தைத் தூக்கித் தமது முதுகைக் காண்பித்தார். அவர் வாங்கியச் சாட்டை அடிகள் அவரது முதுகெலும்பைப் புறையோடச் செய்திருந்தன. விசாரனைச் செய்பவர் முன்னிலையிலேயே, ‘தாஹிரி, நான் எழுபது நாட்கள் சித்திரவதைகளும் எழுபது நாட்கள் தூக்கமின்மையையுைம் அனுபவித்துவிட்டேன். இதற்கு மேலும் இச்சகோதரர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றே தெரியவில்லை. பகலில் என்னைச் சித்திரவதை செய்கிறார்கள். இரவில் என்னைத் தூங்கவிடுவதில்லை. ஷிராஸ் நகரப் பஹாய்களின் பெயயர்ப் பதிவேடும் அவர்கள் விலாசங்களும் வேண்டுமெனக் கேட்கின்றார்கள், முக்கியமாக உள்ளூர் ஆன்மீகச் சபை அங்கத்தினர்களின் பெயர்களையும் விலாசங்களையும் கேட்கின்றார்கள். என்னைத் தவிர சபை அங்கத்தினராக இருந்த வேறு எவரையும் எனக்குத் தெரியாது எனக் கூறினாலும் நம்ப மறுக்கின்றனர். வறிய நிலையில் இருந்த பஹாய்களுக்கு நான் உதவி செய்ததாகவும், அப்படி நான் செய்யாதிருந்திருந்தால் அவர்கள் இந்நேரம் இந்த நாட்டின் சமயத்தைத் தழுவியிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். சண்டையிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட எல்லா சமய சகோதரர்களுக்கும் பஹாய்கள் வழங்கிய நான்கு லாரி உதவிப் பொருட்களுக்கான ரசீதை இவர்களிடம் கொடுத்துவிட்டேன். இதிலிருந்தே நாம் தேவைப்படுவோர் யாருக்கும் பேதமில்லாமல் உதவுகின்றோம் என்பது தெரிந்திருக்கும். நிற, சமய வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவவேண்டும் என்பது நமது நம்பிக்கையல்லவா. இவர்களிடம் ஒரு துளி நீதி இருந்திருந்தாலும் அது நாம் குற்றமற்றவர்கள் என்பதை அவர்களுக்கு நிரூபித்திருக்கும்.

அப்போது ஒரு காவலாளி, ‘நீர் பொய் கூறவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது உம்மைச் சிறிது நேரம் வெளியே தூய்மையான காற்று படும்படி கொண்டுசெல்கிறோம்,’ என்றார்.

தனி அறைச் சிறைக் கைதிகள் காற்றுப் புகாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தூய்மையான காற்றுக்கு ஏங்கிய போதிலும், சிரமமில்லாவிடில், ஜம்ஷிட், தாம் பொதுச் சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமது தோழர்களைச் சந்திக்கவே விரும்புவதாகக் கூறினார். அதுவே தமக்குப் பெரும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நான், ஜம்ஷிட்டின் கைகளிலும் கழுத்திலும் ஆழமானக் காயங்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். அவை என்னவென நான் வினவினேன். அதற்கு காவலாளி ஒருவர், ‘ஜம்ஷிட் கெட்ட பையன், அவன் இருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினான்,’ எனக் கூறினார்.

‘தாஹிரி,’ என என்னை ஜம்ஷிட் விளித்தார், ‘என்னை மன்னித்துவிடு, ஆனால், தனிச் சிறையடைப்பில் இவ்வளவுச் சித்திரவதைகளையும், உடல் மற்றும் மனோ ரீதியில் நான் பட்ட கொடுமைகளையும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் இவ்வளவு காலம் சென்றும் நமக்குக் குழுந்தைகள் இல்லையென்பது குறித்து என்னை மிகவும் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தனர். ‘இந்த நிலைக்குக் காரணம் நீயா அல்லது நானா எனவும் கேட்கின்றனர்.’ அல்லது நடு இரவில் என்னை எழுப்பி அவர்களோடு சென்று பஹாய்களின் இல்லங்களைச் சுட்டிக் காட்ட வெண்டும் எனவும் கூறுகின்றனர்.’

அடுத்த நாள் அவர்கள் ஜம்ஷிட்டை அழைத்துக்கொண்டு தாஹிரியைக் காண வந்தனர். இம்முறை அச்சந்திப்பிற்குப் பிறகு தாஹிரி புன்னகைத்தவாறு வந்தாள். ‘இங்கிருந்து ஜம்ஷிட்டுக்கு நான் ஏதாகிலும் கொண்டு செல்ல முடியுமா?’ எனக் களிப்புடன் விசாரித்தாள். நேற்று நடந்ததில் காவலாளிகளுக்கு ஜம்ஷிட் மேல் சிறிது கருணை பிறந்துள்ளது என நான் நினைக்கின்றேன். அவரைத் தனி அறையிலிருந்து பொது அறைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தனிச் சிறையில் இருந்தவரை அவர் பழங்கள் எதையுமே காணததால் நான் அவருக்குப் பழங்கள் ஏதும் கொண்டுச் செல்லலாம் எனவும் கூறினர்’ என்றாள்
நல்ல வேளை, அன்று எங்களிடம் பழங்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஜம்ஷிட்டைக் காண தாஹிரி சென்றாள். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், பழங்களோடு திரும்பி வந்தாள். ‘இக்காவலாளிகள் நம்மோடு விளையாடுகிறார்கள். நாம் இவர்களின் கைப்பொம்மைகள். நம்மைச் சித்திரவதைப்படுத்தி அவர்கள் மகிழ்கின்றார்கள். அவர்களின் தயவின் கீழ்தான் நாம் இருக்கின்றோம்,’ என மனம் வெதும்பிக் கூறினாள்.

அதற்குப் பிறகு, அடிலபாட் சிறைக்குத் தாஹிரி மாற்றலாகி சென்று இரண்டு வாரங்கள் கழித்து, அவள் தனது இறுதிச் சுற்று விசாரணைக்குச் சென்ற நாள் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. அன்று மாலை அவள் சிறைக்குத் திரும்பியபோது, அறைக்குள் அவள் மிகுந்தச் சாந்தத்துடனும் கம்பீரமாகவும்  நடந்து வந்தாள். களிப்பு நிறைந்த முகத்தில் புன்னகை தவழ்ந்தது. முகம் பிரகாசித்தது. ‘தாஹிரி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றாய்?’ என நான் வினவினேன்.
அவள் மிகவும் சாந்தத்துடன், ‘இவ்வளவு நாட்கள் அவர்கள் ஜம்ஷிட்டை மட்டுமே கொல்லப்போகின்றார்கள் என நான் நினைத்துவந்தேன். ஆனால், இன்று நீதிபதி என்னையும் சேர்துக் கொல்ல ஆணை பிறப்பித்துவிட்டார். எனது இப்பயணத்தில் நான் என் கணவருடன் சேர்ந்தே செல்லப்போகின்றேன்.’ என்றாள் தாஹிரி.

அந்த நாளுக்குப் பிறகு அவள் அழுதோ கவலைப்பட்டோ நான் பார்க்கவில்லை.
அவளது இறுதி ஆசையும் சிறிது நாட்களில் நிறைவேறியது. அப்ஹா இராஜ்ஜியத்தில் அவளும் அவளது கனவனும் ஒன்றிணைந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: