பஹாவுல்லாவின் துன்பங்களுக்கான நோக்கம்
(அப்துல் பஹாவின் நிருபம் ஒன்றின் பகுதிகள்)
மேன்மைப் படுத்தப்பட்ட அழகரின்பால் உங்கள் முகத்தைத் திருப்பியுள்ளோரே. இரவும் பகலும், காலை வேளைகளிலும் அந்தி வேளைகளிலும், இருள் சாயும் பொழுதிலும், அதிகாலையிலும், என் சிந்தையிலும் இதயத்திலும் தேவரின் அன்புக்குரியவர்களை நான் நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன், சதா நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன். அந்தத் தூய்மையானதும் புனிதமானதுமாகிய தேசத்தில் வசிக்கும் நேசத்துக்குரியவர்களின் மீது அவரது ஆசீர்வதிப்பு பொழியப்படுமாறு நான் அவரிடம் இறைஞ்சுகிறேன், மற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றியை அவர்களுக்கு அளிக்குமாறும், அவர்களது குணத்தில், அவர்களது நடத்தையில், அவர்களது வார்த்தைகளில், அவர்களது வாழ்க்கை நெறியில், அவர்கள் இயங்கிச் செயலாக்கும் எல்லாவற்றிலும் அவர்கள் மனிதர்களிடையே தனிச்சிறப்பை அடையுமாறு செய்வாராக; அவர்களது இதயங்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் ஏங்கும் அன்போடும், அறிவோடும் மெய்யுறுதியோடும், பற்றுறுதியோடும் ஒற்றுமையோடும், அவர்களது வதனங்கள் அழகோடும் பிரகாசத்தோடும் இருக்கும் வகையில் அவர் அவர்களை உலக சமூகத்தினுள் ஒன்றிணைப்பாராக.
தேவரின் நேசத்திற்குரியவர்களே! இந்நாள் ஒற்றுமைக்குரிய நாள், மனித இனம் அனைத்தும் ஒன்று கூட்டப்படும் நாள். “மெய்யாகவே இறைவன், ஒரு திடமான சுவரைப்போல், அவரது சமயத்திற்காக இணைந்த வரிசைகளாக போரிடுவோரைத்தான் நேசிப்பார். அவர் “இணைந்த வரிசைகள்” என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள் – இதன் பொருள் கூட்டமாகவும் பிணைந்துகொண்டும், ஒருவர் மற்றோருவருடன் கட்டுண்டும், ஒருவர் தனது அன்பர்களுக்கு உதவுவதுமாகும்.
புனித வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், போர் செய்வதென்றால், சகாப்தத்திற்கெல்லாம் அதி உயர்வான இந்த சகாப்தத்தில், வாளோடும் ஈட்டியோடும், அம்போடும், துளைக்கும் கனைகளோடும் முன்செல்வதென்று பொருளல்ல – மாறாக தூய்மையான எண்ணங் கொண்டும், நேர்மையான நோக்கங்களைக் கொண்டும், உதவிடும் மற்றும் விளைவுகள் தந்திடும் ஆலோசனைகளைக் கொண்டும், இறை பண்புகளைக் கொண்டும், சர்வ வல்லமை பொருந்தியவரை மனம் நிறைவடையச் செய்யும் செயள்களைக் கொண்டும், தெய்வீக இயல்புகளைக் கொண்டும் போர் செய்வதே ஆகும். இது மனிதர்கள் யாவருக்கும் கல்வி புகட்டுவதும், எல்லா மனிதர்களுக்கும் வழி காட்டுவதும், ஆவியின் தித்திக்கும் நறுமணங்களை பரவலாகவும் விசாலமாகவும் பரப்புவதும், இறைவனின் ஆதாரங்களைப் பிரகடனம் செய்வதும், தெய்வீக மற்றும் தெளிவான வாதங்களை முன்வைப்பதும், அரச்செயல்களைச் செய்வதுமே ஆகும்.
எப்போதெல்லாம் புனித ஆன்மாக்கள், வின்னுலகச் சக்திகளைப் பெற்றுக் கொண்டு, அத்தகைய ஆன்மீக இயல்புகளைக் கொண்டு எழுந்து, ஒன்றிணைந்து, அணிவரிசை அணிவரிசையாக அணிவகுத்துச் செல்வார்களாயின், அந்த ஆன்மாக்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆயிரம் ஆன்மாக்களுக்குச் சமமானவர்களாவர், மேலும் அந்தச் சக்திவாய்ந்த சமுத்திரத்தின் பொங்கி எழும் அலைகள் வின்னுலகப் படைகளுக்குச் சமமாக இருக்கும்.
நாம் எல்லோரும் ஒருபொழுதில் தனித்திருந்த ஊற்றுகளும், நீரோடைகளும் அருவிகளும், விரைந்தோடிடும் நீர் உற்றுகளும், தனித் துளிகளுமாக இருந்தபின், ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு ஒரு மாபெரும் கடலாக ஆக்கப்பட்டால் – அது எத்தகையதொரு அருளாகும். மேலும், அங்கு வியாபிக்கும் எல்லோருடைய இயல்பான ஒற்றுமையாகப்பட்டது, இந்த மானிடர்களின் மிளிரும் வாழ்கையின் கலாச்சாரம், கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வேற்றுமைகளானவை தனித் தனித் துளிகளைப்போல் அந்த ஒருமைத்தன்மை எனும் பெருங்கடலானது பாய்ந்துப் பொங்கியெழுந்து ஓடுகையில் அழிந்து மறைந்துவிடும்.
ஆதி அழகானவரின் மேல் நான் ஆனையிடுவது, யாதெனில், அத்தகையதொரு வேளையில் வியக்கச் செய்யும் கருணை எல்லோரையும் வட்டமிடும், மற்றும் ஆகக் குறுகளான நீரோடையானது எல்லையற்ற சமுத்திரத்தைப் போல அகன்று வளர்ந்துவிடும், மற்றும் ஒவ்வொரு நுன்னிய துளியும் ஆழங்கானா சமுத்திரமாகிவிடும்.
இறைவனின் நேசத்துக்குரியோரே! அந்த உயர்ந்த நிலையினை அடைந்திட முயல்வீராக, இந்தப் பூமியின் எல்லைகளுக்கப்பால் பிரகாசித்திடும் ஒரு பிரகாசத்தை உருவாக்குவீராக, அதனால் அதன் கிரனங்கள் நித்தியமெனும் தொடுவானத்திலிருக்கும் ஓர் உதயபீடத்திலிருந்து பிரதிபலிக்குமாக.
இதுவே இறை சமயத்தின் மெய்யான அஸ்திவாரமாகும். இதுவே இறை சட்டங்களின் மெய்யான வித்தாகும். இதுவே ஆண்டவனின் தூதர்களினால் எழுப்பப்பட்ட மாபெரும் அமைப்பு. இதன் காரணமாகத்தான் ஆண்டவனின் உலகத்தின் சூரியன் உதிக்கின்றது. இதனால்தான் இறைவன் தமது மனித உடல் எனும் சிம்மாசனத்தின்மீது தம்மை ஸ்தாபித்துக்கொண்டார்.
இறைவனின் நேசத்துக்குரியோரே! இந்த உயர்ந்த நோக்கத்திற்காக மேன்மைப் படுத்தப்பட்ட வரான (பாப் பெருமானார்) – பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் அவருக்கு அர்ப்பனம்செய்யப்படுமாக – தனது புனித நெஞ்சத்தினை சோதனையின் கனைகளுக்கு இரையாக்கினார்; மற்றும் தொள்ளழகரின் (பஹாவுல்லாவின்) – மேலுலகவாசிகளின் ஆன்மாக்கள் அவருக்காக அர்ப்பனம் செய்யப்படுமாக — நோக்கம் இதே ஆன்மீக குறிக்கோளினை வென்றிட வேண்டும் என்பதனால் — மேன்மைப் படுத்தப்பட்டவர், வஞ்சகமும் வெறுப்பும் கொண்ட மக்களினால் துளைக்கப்பட்ட எண்ணிலடங்கா குண்டுகளுக்குத் தனது புனித மார்பைக் குறியாக்கினார். அவர் அதி தாழ்மையுடன் உயிர்த் தியாகியாக மரணமடைந்தார்.
இந்தப் பாதையின் புழுதியில்தான் ஆயிரமாயிரமான தெய்வீக ஆன்மாக்களின் புனித இரத்தம் பொங்கிப் பீரிட்டது, மேலும் எத்தனையோ முறை ஒரு நேர்மையான இறை நேசனின் புனித உடல் தூக்கிலுடும் விருட்சத்தில் தொங்கவிடப்பட்டது.
அப்ஹா அழகர் – எல்லா உயிரினங்களின் ஆன்மாக்களும் அவரது நேசர்களுக்காக அர்ப்பணிக்கப்படுமாக — எல்லா வித இன்னல்களையும் தானே தாங்கிக்கொண்டார், மேலும் பெரும் இடுக்கண்களையும் தானே ஏற்றுக்கொன்டார்.
தன் புனித மேனி உட்படுத்தப்படாத கடும் சித்திரவதைகள் எதுவுமில்லை, தன்மீது பொழிந்திடாத சோதனைகள் எதுவுமில்லை. எத்தனை இரவுகள்தான், அவர் சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்கும் வேளையிள், தமது இரும்புக் கழுத்து வளையத்தின் பாரம் தாங்கவியலாமல், தூக்கமின்றிக் கிடந்தார்; எத்தனை நாட்கள்தான் தம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகள் மற்றும் சங்கிலிகளின் வாட்டிடும் வலி அவரு க்கு ஒரு வினாடி நிம்மதியைக்கூட தரவில்லை.
நியாவரானிலிருந்து தெஹெரான் வரை அவரை ஓடச்செய்தார்கள் — உருவெடுத்த ஆவியான அவர், அலங்கரிக்கப்பட்ட பட்டுத் துனியினாலான பஞ்சு மெத்தைகளின் மேல் உறங்கி பழக்கப்பட்டவரான அவர் — சங்கிலியால் கட்டப்பட்டு, காலனி இல்லாமல், தலைப்பாகையற்று ஓடச்செய்யப்பட்டார்; மேலும், மன்னின் ஆழத்திற்குள், அந்த நெறுக்கமான பாதாளத்தின் கடுமையான இருளில், கொலையாளிகள், தீவிரவாதிகள் மற்றும் திருடர்களுடன் அவர் அடைக்கப்பட்டார்.
மேலும் மேலும் அவர்கள் ஒரு புது சித்திரவதைக்கு அவரை ஆளாக்கினார்கள், அவர் உயிர்த்தியாகியென மரணம் அடைவார் என அவர்கள் எல்லோரும் ஒரு வினாடிக்கு மறு வினாடி உறுதியாக இருந்தனர். சில காலத்திற்குப் பிறகு அவர்கள் அவர் பிறந்த நாட்டை விட்டு அவரை நாடு கடத்தி, அந்நிய மற்றும் தூரமான நாடுகளுக்கு அனுப்பினர்.
ஈராக்கில் பல ஆண்டுகளுக்கு, ‘அவரது புனித இதயத்தை ஒரு புதிய கனை துளைத்திடாமல் ஒரு விநாடி கூட கடந்திடவில்லை; ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு புது வாள் அவரது புனித மேனியின் மேல் பாய்ந்தது. ஒரு கனம் கூட பாதுகாப்பையோ ஓய்வையோ அவர் எதிர்பார்த்திட இயலவில்லை.
இடைவிடாத வெறுப்புடன் எல்லா திசைகளிலிருந்தும் தம் எதிரிகள் தாக்குதல் நடத்தினர்; தனியாகவும் ஒருவராகவும் எல்லோரையும் அவர் எதிர்த்து நின்றார். இப் பேரிடர் எல்லாவற்றுக்கும் பிறகு, இந்த உடற் காயங்கள் யாவற்றிற்கும் பிறகு, அவர்கள் அவரை ஆசியா கன்டத்திலுள்ள ஈராக்கிற்கு வெளியே ஐரோப்பா கண்டத்திற்கு அவரைத் துரத்தினர். அந்த கசப்பு மிகுந்த நாடுகடத்தப்பட்ட இடத்தில், கடுமையான கஷ்டங்கள் நிறைந்த இடத்தில், குர்-ஆனை நம்புவோர்கள் அவர்பால் சுமத்திய பழிகளுக்கு மேல் இப்பொழுது பாயானை பின்பற்றுவோரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களும், மோசமான தாக்குதல்களும், நாச வேலைகளும், அவதூறுகளும், தொடர்ச்சியான விரோதமும் வெறுப்புகளும் பொறாமையும் சேர்ந்துகொண்டன.
என் எழுதுகோல் இவை எல்லாவற்றையும் எழுதிட பலமற்றுள்ளது; ஆனாலும் நீங்கள் நிச்சயமாக இவைகளை அறிந்திருப்பீர்கள். பிறகு, இருபத்து நான்கு வருடம் இந்த அதி பெரும் சிரையில், நொந்தும் கடும் நோயுற்றும், அவரது நாட்கள் இறுதி கட்டத்தை நெருங்கின.
சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆதி அழகர், இந்த மாயை உலகில் தாம் கடந்து செல்கையில், எப்பொழுதுமே, சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கைதியாகவோ, அல்லது ஒரு வாளின் கீழ் வசிப்பவராகவோ, அல்லது ஆகக் கடுமையான துயரங்களுக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப் பட்டவராகவோ, அல்லது இந்த அதி பெரும் சிரையில் அகதியாகவோ தான் இருந்தார். தனக்கு நேர்ந்த சோதனைகளினால் விளைவிக்கப்பட்ட தனது உடல் வலிமையின்மையின் காரணத்தால், அவரது புனித உருவம் ஒரு சுவாசமாகத் தேய்ந்துப் போனது; நீண்ட துயரத்தின் காரணத்தினால் அது ஒட்டடையைப் போல் கனமற்றுப் போனது. அவர் இந்தப் பெரும் பாரத்தைச் சுமந்து, தனது அலைகளை வானத்தின் உயரத்திற்கு ஓங்கிடச் செய்யும் சமுத்திரத்தைப் போல் திகழ்ந்த இந்த சோகங்களை எல்லாம் தாங்குவதின் காரணம் — அவர் கனமான இரும்புச் சங்கிலிகளை அனிந்ததற்கான காரணம், பரிபூரனப் பொறுமை மற்றும் தாழ்மை என்பதற்கான மெய்யான அடையாளமாக ஆவதற்கான காரனமானது, உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் சமாதானம், நட்பு மற்றும் ஒருமைத்தன்மைக்கு வழிகாடுவதற்கும்; இறைவனின் ஒருமைத்தன்மையின் சாயலை எல்லா மக்களிடமும் அறிவிப்பதற்குமாகும். இதன் நோக்கமானது, இறுதியாக எல்லா படைக்கப்பட்டப் பொருட்களின் இதய மையத்திற்குள் பொதிக்கப்பட்டிருக்கும் முதன்மை ஒருமைத் தன்மையானது தனது முன்விதிக்கப்பட்ட கனியைக் காய்க்கும் என்பதற்கும், ‘கருணை எனும் இறைவனின் படைப்பில் ஏதேனும் வேறுபாட்டினை நீங்கள் கண்ணுர வியலாது’ எனும் அட்சரங்களின் பிரகாசம் தன் கிரணங்களைப் பரவச் செய்வதென்பதற்குமே ஆகும்.
தேவனின் அன்புக்குரியோரே, இதுதான் தீவிர முயற்சி கொள்வதற்கான சரியான நேரம். நீங்கள் கடும் முயற்சி செய்து, போராடுவீராக. மேலும், ஆதி அழகர் பகல் வேளையிலும், இரவுக் காலங்களிலும் உயிர்த் தியாகமெனும் களத்தில் முன்வைக்கப்பட்டார் எனும் காரணத்திற்காக, நாமும், நமது பங்கிற்கு கடுமையாக உழைத்து, இறை ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து சிந்திப்போமாக; நம் உயிர்களைத் தூக்கி எறிந்திடுவோமாக, நம் குறுகிய மற்றும் எண்ணிக்கைக்குள் அடங்கிய நாட்களை துறந்திடுவோமாக. இவ்வுலகின் வேறுபட்ட உருவங்களைப்பற்றிய வெறும் வீன்கனவுகளிலிருந்து நம் கண்களை நாம் திருப்பிடுவோமாக, மாறாக இந்த அதி மேன்மையான, இந்த மாபெரும் அமைப்பிற்காக சேவையாற்றுவோம். நமது சொந்த கற்பனைகளின் காரணத்தினால், இறை கருணை எனும் கரங்கள் நட்டிருக்கும் இந்த விருட்சத்தை நாம் வெட்டிவிட வேண்டாம்; நமது வீண் தப்பெண்ணங்களெனும் இருள் மேகங்களைக் கொண்டு, நமது சுய விறுப்பங்களைக் கொண்டு, அப்ஹா இராச்சியத்திலிருந்து பொழியும் மகிமையினை நாம் அகற்றிட வேண்டாம். சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் அலைபாயும் சமுத்திரத்தைக் கட்டுப்படுத்திடும் சுவர்களாக நாம் ஆகிட வேண்டாம். சர்வ மேன்மையான அழகரின் வனத்தின் தூய்மையான, தித்திக்கும் நறுமணங்கள் தொலைவாகவும் பரவலாகவும் ஊதி வீசிடுவதை நாம் தடை செய்ய வேண்டாம். இந்த ஒன்றுகூடும் நாளில், மேலுலகிலிருந்து பொழியும் இறை மழை எனும் கருணையை நாம் தடுத்திட வேண்டாம். உண்மைச் சூரியனாகியவரின் பிரகாசங்கள் என்றுமே மங்கி அழிந்திட நாம் ஒப்புக் கொள்ள வேண்டாம். தமது புனித நூல்களிலும் வாசகங்களிலும், தமது ஆலோசனைகளை நேர்மையானவர்களுக்குப் போதிக்கும் தம் நிருபங்களிலும் பொதிக்கப் பட்ட இறைவனின் ஆலோசனைகள் இவைதான்.
மேன்மையும், கடவுளின் கருணையும், கடவுளின் ஆசீர்வாதமும் உங்களைச் சாருமாக.