ஆசிய்யி காஃனும்
(பாஹிய்யா காஃனும் வாய்மொழிந்தவை)
திருமணம்
பஹாவுல்லாவுக்கு ஏறத்தாழ பதினைந்து வயதாகிய போது, அவரது மூத்த தமக்கையாகிய சாரிஃ காஃனுமுக்கும், யால்ரூட் நகரை சார்ந்த மிர்ஸா இஸ்மாயில்-இ-வஸீரின் மகனாகிய மிர்ஸா மஹ்மூட்டுக்கும் திருமணம் நடந்தது. புதிய சமயத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மிர்ஸா மஹ்மூட்டுக்கு ஓர் இளைய தங்கை இருந்தார். அவருடைய பெயர், ஆசிய்யி காஃனும் என்பதாகும். இவர் கவர்ச்சிமிக்கவர், துடிப்புமிக்கவர், மற்றும் பெரும் அழுகுடையவர். இவர் பருவமடைந்ததும், சாரிஃ ஃகானும் தமது தந்தையை அனுகி ஆசிய்யி காஃனுமைத் தமது தம்பியாராகிய பஹாவுல்லாக்குப் பெண் கேட்கும்படி வேண்டினார். அப்போது பஹாவுல்லா பதினெட்டு வயதை அனுகிக்கொண்டிருந்தார். இவர்களுடைய திருமணம் 1835ம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது. இந்த ஆசிய்யி ஃகானுமே மாஸ்டராகிய அப்துல் பஹாவின் தாயார் ஆவார்.
பாஹிய்யா காஃனும் கூறியவை
அவர் மிர்ஸா இஸ்மாயிக் எனும் ஒரு உயர்நிலை பாரசீக வஸீரின் ஒரே மகளாவார். இந்த வஸீரும் மிர்ஸா அப்பாஸ் புஸூர்க்காகிய என் பாட்டனாரும் பெரும் செல்வம் படைத்தவர்கள். என் தாயாரின் சகோதரர் என் தந்தையாரின் சகோதரியை மணந்தபோது, அந்த இரண்டு மேல்மட்ட குடும்பங்களின் இரட்டை உறவு மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. “செல்வத்தோடு செல்வம் சேர்ப்பது இதுவென” மக்கள் பேசிக்கொண்டனர். ஆசிய்யி காஃணும் அவர்களின் சீர்வரிசைகள் அவருடைய குடும்பத் தகுதிக்கு ஏற்றவாறு மிக அதிகமாகவே இருந்தன. அவர் தமது கனவரின் வீட்டுக்கு வந்த போது நாற்பது கோவேறு கழுதைகளில் அவருடைய பொருள்கள் சுமந்துவரப்பட்டன.
ஆசிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டி ஆகியோரின் கல்லரைகள்
திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு பொற்கொல்லர் அவருடைய வீட்டிற்கு வந்து நகைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய உடைகளின் பொத்தான்கள் கூட தங்கத்தினாலும் வைரங்களாலும் ஆனவை. (இந்தப் பொத்தான்கள் பஹாவுல்லா நாடுகடுத்தப்பட்டு திஹரான் நகரிலிருந்து பாக்தாத் செல்லும் மிகக்கடுமையான பயணத்தின் போது ரொட்டிக்காக பண்டமாற்று செய்யப்பட்டன) நான் அவரை முதன் முதலில் கண்டது போல் நீங்கள் காண முடிந்தால்! அவர் உயரமாகவும், மெல்லிய தேகம் கொண்டவராகவும், மென்நயம்மிக்கவராகவும், கருநீலக் கண்களுடையவராகவும், பெண்டிரிடையே ஒரு முத்தாகவும், ஒரு மலராகவும் விளங்கினார்.
சிறுவயது முதற்கொண்டே அவருடைய விவேகமும் நுண்ணறிவும் தனிச்சிறப்பு மிக்கவையாக விளங்கியதாக நான் அறிந்துள்ளேன். என் சிறு வயது முதலான அவரைப் பற்றிய என் ஞாபகத்தில், அவர் தமது குணபாவத்திலும் வனப்பிலும் ஒரு ராணியைப் போல் விளங்கியே வந்துள்ளார். அனைவரைப் பற்றியும் அக்கறை கொண்டவராகவும், மென்மைமிக்கவராகவும், வியக்கவைக்கும் தன்னலமற்றவராகவும், இருந்தார். அவருடைய எந்த ஒரு செயலும் அவருடைய தூய்மையான இதயத்தை வெளிப்படுத்தத் தவறியது கிடையாது. எங்கெங்கு அவர் சென்ற போதும் நான்கு திசைகளையும் மென்மையான பணிவெனும் நறுமணத்தால் அரவணைக்கும், அன்பும் மகிழ்ச்சியும் மிக்க ஒரு சூழ்நிலையை அவருடயை பிரசன்னம் உருவாக்கியது.
என் பெற்றோர்கள், அவர்களுடைய திருமணத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே, அரசாங்க அலுவல்கள், சமூக சடங்குகள், பாரசீகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், பொருள்வளம் மிகுந்தவர்களும் கடைப்பிடித்து வந்த ஆடம்பர வாழ்வுமுறைகள் ஆகியவற்றில் குறைந்த அளவே கலந்துகொண்டனர்; என் தாயாரும் அவருடைய மேன்மைமிகு கனவரும், இத்தகைய லௌகீக மகிழ்ச்சிகளை அர்த்தமற்றவை என கணக்கிட்டு, ஏழைகள், வாட்டமுற்றோர், துன்பமுற்றோர் ஆகியோருக்கு உதவுவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதையே விரும்பினார்கள்.
எங்கள் வீட்டு வாசலிலிருந்து எவருமே திருப்பியனுப்பப்பட்டதில்லை; வருகையளித்த எல்லாருக்குமே எங்கள் விருந்து மேஜை தயாராக இருந்தது. ஏழைப் பெண்கள் என் அம்மாவைக் காண அடிக்கடி வருவார்கள்; அவரிடம் தங்கள் சோகக் கதைகளைக் கூறுவார்கள்; அவருடைய அன்பான உதவியின் மூலமாக ஆறுதலும், தேறுதலும் பெற்றுச் செல்வார்கள்.
என் தந்தையை எல்லாருமே “ஏழைகளின் தந்தை” என அழைத்த அதே வேளை என் தாயை “ஆறுதலின் அன்னை,” என அழைத்தார்கள். அதிலும், என் தாயின் முகத்தைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே ஏறெடுத்துப் பார்த்ததுண்டு.
இவ்வாராக எங்களுடைய அமைதியான நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சில வேளைகளில் நாட்டுப்புறத்தில் உள்ள எங்களுடைய வீட்டுக்கு நாங்கள் செல்வதுண்டு; அங்கு என் அண்ணன் அப்பாஸும் நானும் அற்புதமான பூக்கள் மலர்ந்தும் பழுத்த பழங்களுமுடைய அழகான தோட்டங்களில் விளையாட மிகவும் விரும்புவோம்; ஆனால் என் இளவயதில் நடந்த இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் எனக்கு மங்கலாகவே இருக்கின்றன.
ஒரு நாள், எனக்கு அப்போது ஆறு வயதுதான் இருக்கும், நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது, ஒரு சில மூளை குழம்பிய பாப்‘இக்களால் ஷா மன்னர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது நியாவரானில் உள்ள தமது நாட்டுப்புற வீட்டிற்கு என் தந்தை சென்றிருந்தார். அஃது அவர் வசமிருந்த சொத்தாகும். அங்கு வசித்த கிராமவாசிகள் அனைவரும் என் தந்தையால் பராமரிக்கப்பட்டு வந்தவர்களாவர்.
திடீரென ஒரு சேவகன் என் அம்மாவைக் காண திகிலுடன் ஓடி வந்தார். “நமது யஜமானர், நமது யஜமானரைக் கைது செய்துவிட்டார்கள், நான் என் கண்ணால் கண்டேன்,“ என கூக்குரலிட்டான்.
அவர் பல மைல்கள் நடத்திவரப்பட்டுள்ளார்! ஐயோ, அவரை அவர்கள் அடித்துவிட்டிருக்கின்றார்கள்! அவர் பாஸ்டினாடோ சித்திரவதையை அனுபவித்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள்”. அவருடைய கால்களில் இரத்தம் வடிந்துகொண்டிருக்கின்றது. அவருடைய கால்களில் காலணிகள் இல்லை. அவருடைய தலைப்பாகையையும் காணவில்லை! அவருடைய மேலாடைகள் கிழிந்திருக்கின்றன! அவருடைய கழுத்தைச் சங்கிலிகளால் பிணைத்திருக்கின்றார்கள்!
பாவம், என் தாயாரின் முகம் சிறிது சிறிதாக வெழுத்து வந்தது. சிறார்களாகிய நாங்கள் பெரிதும் பயப்பட்டிருந்தோம்; எங்களால் உரக்க அழவே முடிந்தது. உடனடியாக எல்லாரும், எங்கள் உறவினர்கள், நண்பர்கள், சேவகர்கள் உள்பட அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து ஓடிவிட்டார்கள். இஸ்ஃபாண்டியார் எனப்படும் ஒரே ஒரு சேவகரும் ஒரு பெண்ணும் மட்டும் ஓடிப்போகவில்லை.
எங்கள் மாளிகை, மற்றும் அதனைச் சுற்றிய சிறிய வீடுகள் அனைத்தும் சூரையாடப்பட்டன. அவற்றில் இருந்த மரச்சாமான்கள், பொக்கிஷங்கள், யாவுமே மக்களால் திருடப்பட்டன. எங்கள்பால் எப்போதுமே அன்பாக இருந்த எங்கள் தந்தையின் தம்பியாகிய மிர்ஸா மூசா, என் தாயாரும் அவருடைய மூன்று குழந்தைகளும் தப்பிச் சென்று மறைந்துகொள்ள உதவினார். என் தாயார் தமது திருமண சீர்வரிசைகளிலிருந்து ஒரு சிலவற்றை பாதுகாப்பாக மறைத்துவிட்டிருந்தார். எங்களுடைய பரந்த சொத்துக்களில் மீதமிருந்தவை இவை மட்டுமே.
இவை விற்கப்பட்டன; அந்தப் பணத்தைக்கொண்டு சிறையில் இருந்த என் தந்தைக்கு என் தாயார் சிறைக்காவலர்களின் மூலம் உணவு கொண்டுசெல்லப்பட வழி செய்தார்; மற்ற செலவுகளை ஈடு செய்யவும் வழி வகுத்தார். இப்போது நாங்கள் சிறைக்கு அருகாமையிலிருந்த ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம். மிர்ஸா யாஹ்யா (ஸூப்-இ-அஸால்) பேரச்சத்துடன் மாஸிந்தரான் ஓடிச் சென்றார்; அங்கேயே அவர் மறைந்தும் இருந்தார்.
ஆகா, அந்த நேரத்தில் என் தாயார் அனுபவித்த பெரும் துயரத்தை என்னவென்றுதான் சொல்வது! குழந்தைப் பேற்றை எதிர்நோக்கிய (இதை நான் இதற்குப் பிறகே அறிய வந்தேன்) எந்த ஒரு பெண்ணும் எதிர்நோக்கக்கூடியதற்கும் அதிகமானதுதான் அந்தத் துயரம். என் தந்தை அடைக்கப்பட்டிருந்து சிறை மிகவும் பயங்கரமானது; பூமிக்குக் கீழே ஏழு தளங்கள் இரங்கவேண்டும்; கனுக்கால் அளவு கஸ்மலம் நிறைந்தும், புழுப்பூச்சிகள் பரவியும், விவரிக்கமுடியாத துர்நாற்றமுமாக அந்த இடம் இருந்தது.
இவற்றோடு சேர்ந்து அந்தக் கொடுமையான இடத்தில் சிறிது கூட ஒளி கிடையாது. அதனுள் நாற்பது பாப்‘இக்கள் அடைக்கப்பட்டிருந்தனர்; கொலைகாரர்களும் வழிப்பறிக்கொள்ளையர்களும் அங்கு நிறைந்திருந்தனர். என் மேன்மைமிக்க தந்தை இந்தத் கரிய அறைக்குள் தள்ளப்பட்டிருந்தார்; கனமான சக்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்; அவரோடு வேறு ஐந்து பாப்‘இக்களும் சங்கிலிகளால் இணைக்கப்பட்டிருந்தனர்; இங்கு அவர் நான்கு மாதங்கள் இருந்தார். இப்பயங்கரத்தை நீங்களே கற்பனை பன்னிப்பாருங்கள்.
சிறிது நகர்ந்தாலும் சங்கிலிகள் சதையை மேலும் ஆழமாக வெட்டின. ஒருவரை மட்டும் அல்ல, மற்ற ஐவருக்கும் இவ்வாரே நடந்தது. சிறிதும் தூங்கமுடியாது; உணவு கொடுக்கப்படவில்லை. மிகுந்த சிரமங்களிடையேதான் அந்த பயங்கர சிறைக்குள் என் தாயார் என் தந்தைக்கு உணவும் நீரும் அனுப்பி வைக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்த நிலையிலும், பாப்‘இக்களின் உற்சாகம் சிறிதும் குறையவில்லை.
உயிர்த்தியாகிகளின் ஜீவமகுடமாகிய துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்த்துறப்பதென்பதே, அவர்களுடைய நோக்கமும் தீவிர ஆவலுமாக இருந்தது. அவர்கள் இரவும் பகலும் பிரார்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு காலை வேளைகளிலும் இந்த மனோதைரியமும் அர்ப்பண உணர்வும் மிக்க நண்பர்களில் ஒருவரோ பலரோ பல வழிகளில் சித்திரவதை செய்யப்படவும் பிறகு கொல்லப்படவும் வெளியே கொண்டு செல்லப்படுவர்.
இந்த பாப்‘இக்களுக்கு நடந்தது போல நாஸ்திகர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அல்லது பலரின் மீது சமய தீவிரவாதம் தூண்டிவிடப்படும்போது, அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொலைஞரால் கொல்லப்படுவதில்லை, மாறாக, மக்களில் பல்வேறு பகுதியினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். கசாப்புக் கடைக்காரர்கள் சித்திரவதை செய்வதற்கு தங்களுக்கென பிரத்தியேக முறைகளை வைத்திருந்தனர்; ரொட்டி செய்பவர்களும் அவ்வாரே தனி முறைகளைக் கையாண்டனர்; காலனி தைப்பவர்களுக்கும், கொல்லர்களுக்கும் அவ்வாறே வெவ்வேறு சித்திரவதை முறைகள் இருந்தன. பாப்‘இக்கள் மீது இவர்கள் அனைவரும் தங்களுடைய பட்சாதாபமற்ற சத்திரவதைகளை செயல்படுத்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
இந்தக் கொடும்பாவிகள் பாப்’இக்களின் தணிக்கவியலா ஆன்மவுணர்வைக் கண்டு மேலும் அதிக கோரத்தனமாக நடந்துகொண்டனர். பாப்‘இக்களும் அதற்குத் தகுந்தாற்போல், தங்களுடைய இறுதி மூச்சு வரை சிறிதும் அசராமலும், பிரார்த்தனைகளைப் பாடியும், தங்களைச் சித்திரவதை செய்வோருக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், இறைவனை வாழ்த்திக்கொண்டும் இருந்தனர். இத்தகைய பயங்கர காட்சிகளைக் காண கூட்டங்கள் கூடியும், சபித்துக்கொண்டும் இருந்தனர். இவையெல்லாம் நடக்கும் போது மேளம் ஒன்று சப்தமாக தட்டப்படும். இந்தக் கொடூர சப்தங்கள் எனக்கு நன்கு ஞாபம் இருக்கின்றது. நாங்கள் மூவரும் என் தாயாரை இருகக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்போம். அவரோ, அங்கு பலியாகிக்கொண்டிருப்பது, தமது அன்புக் கணவரா அல்லவா என்பது தெரியாமல் கலங்கிக்கொண்டிருப்பார்.
என் தகப்பனார் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதை என் தாயார் அன்று நல்லிரவு வரை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தார். அதுவும், தமது உயிரைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் வெளியே சென்று விசாரித்த பிறகே அவர் தெரிந்துகொண்டார். அக்கொடூரங்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் என பாகுபாடு பார்க்கவில்லை. என் தம்பி மிர்ஸா மிஹிடிக்கு அப்போது இரண்டே வயதுதான் இருக்கும். நான் என் தம்பியை என் மடியில் உட்கார வைத்துக்கொண்டு என் பலமே இல்லாத என் கைகளால் அவனை இருகப் பிடித்துக்கொண்டு கும்மிருட்டில் பேரச்சத்தால் நடுநடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருப்பேன். அப்போது நடந்த கொடுமையான செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்திருந்தன. என் தாயாரும் அக்கொடும்ைக்காரர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒன்றும் செய்ய இயலாத நிலையில் என் தாயாரின் வருகைக்காக நான் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.
அப்போது ஒளிந்த வண்ணம் இருந்த என சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா, என் தாயார் என்ன செய்தி கொண்டுவந்துள்ளார் என்பதை அறிய வருவார். இந்த துயர்மிகு காரியங்களின் போது என் அண்ணன் அப்பாஸும் என் தாயாரோடு செல்ல நேர்ந்தது. என் சிற்றாப்பாவிடம் என் தாயார் தெரிவித்த விஷயங்களை நாங்களும் ஆர்வத்தோடு செவிமடுப்போம். இச்செய்திகள் யாவும் என் தாத்தாவின் சகோதரி ஒருவரின் வாயிலாகவே கிடைத்தது. அவர் மிர்ஸா யூசிஃப் எனும் ஒரு ருஷ்ய பிரஜையை மணந்திருந்தார். மிர்ஸா யூசிஃப் தெஹரானில் உள்ள ருஷ்ய தூதரின் நண்பராக இருந்தார்.
என் தாத்தாவின் மைத்துனரான இவர், விசாரனைகள் நடக்கும் போதெல்லாம் சென்று என் தகப்பனார் பற்றிய செய்திகளை அறிந்து வருவார். யார் யார் அன்று கொல்லப்படப்போகிறார்கள் என்பதை அறிந்து அக்கொடுமையான நாட்கள் கடந்துசெல்லும் வரை என் தாயாரின் துயரத்தைக் கலைவதற்கு வழி செய்தார். மிர்ஸா யூசிஃப் அவர்களே என் தகப்பனாருக்கு உணவு கொண்டுசெல்லப்பட என் தாயாருக்குப் பெரிதும் உதவினார். அவர்தான் எங்களையெல்லாம் சிறைச் சாலைக்கு அருகே இருந்து இரண்டு சிறிய அறைகளுக்கு இடம் பெயர உதவிசெய்தார். அங்குதான் நாங்கள் மறைவாக தங்கியிருந்தோம்.
இக்காரியங்களைச் செய்வதில் அவர் பெரும் அபாயங்களுக்கும் தம்மை உட்படுததிக்கொண்டார். அவர் ருஷ்ய பிரஜை எனும் முறையில் ருஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பைப் பெற்றிருந்ததால் இந்த அபாயங்களின் கடுமைகள் சிறிது தனிவாக இருந்தன. அந்த நாட்களின் போது என் தாயாரை வந்து சந்திக்க எங்கள் நண்பர்கள், உறவினர்கள் எவருக்குமே, தைரியமில்லை. ஆனால், என் தகப்பானாரின் அத்தையாகிய மிர்ஸா யூசிஃபின் மனைவி மட்டுமே எங்களை வந்து கண்டு சென்றார்.
ஒரு நாள் மிர்ஸா யூசிஃப் என் தகப்பனாரின் எதிரிகளான கொலைகார முல்லாக்கள் அவரைக் கொல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதை அறிந்தார். மிர்ஸா யூசிஃப் ருஷ்ய தூதரைச் சந்தித்தார்; பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அந்த நண்பரும் இத்திட்டம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமென தீர்மானித்தார். மரண தண்டனைகள் விதிக்கப்படும் நீதிமன்றத்தில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு நிகழ்சி நடந்தது. ருஷ்ய தூதர் நீதிமன்றத்தில் அச்சமின்றி எழுந்து நின்று: “நான் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்! நான் மிகவும் முக்கியமான விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கப்போகின்றேன்” (அவரடைய குரல் சப்தமாக ஒலித்தது. நீதி மன்றத் தலைவரும், அதிகாரிகளும் பதலிளிப்பதற்குக்கூட முடியாமல் பிரமித்து நின்றனர்.) “நீங்கள் இதுவரை பலிவாங்கியதெல்லாம் போதாதா? அடிப்படையற்ற பொய்க்குற்றச்சாட்டுகளென நீங்களே நன்கு அறிந்துள்ள இக்குற்றச்சாட்டுகளின் விளைவாக, ஒன்றுமறியா மக்கள் பலரை நீங்கள் இதுவரை கொலைசெய்துள்ளீர்கள். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த இதுவரை நீங்கள் இயற்றிய இக்கொலைகாரக் கொடுமைகள் போதாதா? ஷா மன்னரை சுடுவதற்கு இம்மேன்மைமிகு கைதி தான் அந்த முட்டாள்தனமான திட்டத்தைத் தீட்டினார் என உங்களால் எப்படித்தான் சிந்திக்க முடிகின்றதென என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.
“அந்த இளைஞர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த வெற்றுத் துப்பாக்கி ஒரு குருவியைக் கூட கொன்றிருக்க முடியாதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், அவ்விளைஞன் வெளிப்படையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிந்ததே. இக்குற்றச்சாட்டு பொய்யானதுமட்டுமல்ல, அது ஐயத்திற்கிடமில்லாமல் முட்டாள்தனமானதும் கூட. இதற்கெல்லாம் ஒரு முடிவேற்பட வேண்டும்.
இக்குற்றமற்ற மேன்மகனுக்கு ருஷ்ய நாட்டின் பாதுகாப்பை வழங்குவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன்; இது உங்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை! இக்கணத்திலிருந்து அவரது சிரசிலிருந்து ஒரு முடி பாதிப்படைந்தாலும், உங்கள் நகரத்தில் குருதி வெள்ளமாகப் பாயும்.
“இவ்விஷயத்தில் என் எச்சரிக்கையை நீங்கள் செவிமடுப்பது உங்களுக்கு நல்லதென்றே நினைக்கின்றேன். இவ்விஷயத்தில் என் நாடு எனக்கு முழு பக்கபலமாக இருக்கின்றது.” இவ்விஷயம் மிர்ஸா மூசா அவர்களால் என் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.
என் தம்பியும் நானும் அங்கு நடந்ததை எவ்வளவு ஆர்வத்துடன் செவிமடுத்தோம் எனவோ, நாங்கள் எல்லாரும் வடித்த ஆனந்தக் கண்ணீரையோ இங்கு நான் அறிவிக்க வேண்டியதில்லை.
அந்த எச்சரிக்கையின் விளைவாக என் தந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால், அவரும் அவரது குடும்பமும் பாரசீகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் விதியின் பேரிலேயே அவர் விடுவிக்கப்ட்டார்.
நாங்கள் அனைவரும் பத்தே நாட்களில் தெஹரானைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் தந்தை அப்போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் எங்கள் இரு சிறிய அறைகளுக்கு வந்தார். அவரது வருகையால் நாங்கள் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை!
ஜமால்-இ-முபாரக் (என் தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர்) தாம் அந்த பாதாளச் சிறறையிலல் அனுபவித்த அந்த நான்கு மாத கொடுமையான சிறைவாசத்தைப் பற்றி வெகு குறைவாகவே பேசினார். அவர் அனுபவித்த கொடுமைகளின் சின்னங்களை நாங்கள் பார்த்தோம்; அவருடைய மென்மையான தோலை, குறிப்பாக அவரது கழுத்தில், சங்கிலிகள் வெட்டிய இடத்தைப் பார்த்தோம், பாஸ்டினாடோ சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த அவருடைய கால்களை நாங்கள் கண்டோம். எங்கள் தாயாரோடு சேர்ந்து நாங்கள் வடித்த கண்ணீரை என்னவென்று சொல்வது.
நாங்கள் பத்து நாட்களில் மேற்கொள்ளவேண்டிய பயணத்திற்கு வேண்டிய வலுவை என் தகப்பானார் பெற வேண்டும் என்பதற்காக என் தாயார் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனால், காலமோ மிகவும் கடியதாக இருந்தது. என்தாயார் எவ்வாறுதான் ஏற்பாடுகளைச் செய்ய போகின்றார்?
பரிதாபத்திற்குரிய அப்பெண்மனி தமக்கு சீர்வரிசைகளாக வழங்கப்பட்ட, கிட்டத்தட்ட, எல்லா பொக்கிஷங்களையும் விற்றார். அவற்றுள், ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட துனிகள், நகைகள், மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் விற்றார். அவை அனைத்திற்கும் அவருக்குக் கிடைத்தது 400 டூமான்களே. இப்பணத்தைக் கொண்டு அக்கொடுமையான பயணத்தின் வழிசெலவுகளை அவர் சரி செய்ய முடிந்தது. (அவர்கள் நாடுகடத்திய எவருக்கும் அரசாங்கள் உதவி எதையுமே வழங்கவில்லை.)
பயணம் விவரிக்க முடியாத கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. என் தாயாருக்கு எந்த அனுபவமும் கிடையாது, வேலைக்காரர்கள் இல்லை, உணவுப் பொருட்கள் கிடையாது, செலவுக்கு பணமும் மிகவும் குறைவாகவே இருந்தது. என் தந்தையார் சிறைவாசத்தின் கொடுமைகளிலிருந்து இன்னமும் மீளாது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நாங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது விடைகூறுவதற்கு, எங்கள் உறவினர்களும், நண்பர்களும் பயந்துகொண்டு வரவில்லை. என் தாயாரின் வயதான பாட்டி ஒருவர் மட்டுமே வந்நார்.
எங்களோடு இருப்பதற்கு சிறிதும் பயப்படாத இஸ்ஃபாண்டியாரும், நீக்ரோ பெண்மனி ஒருவரும் மட்டுமே எங்களுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால், குழந்தைகளாகிய நாங்கள் மூவரும் மிகவும் சிறிய வயதினராக இருந்தோம், என்ன அண்ணனுக்கு எட்டு வயதும், எனக்கு ஆறு வயதும் ஆகியிருந்தன. மிகவும் பலவீனமாகவும், குழந்தையாகவும் இருந்த மிர்ஸா மிஹ்டியை தெஹரானிலேயே, என் தாயாரின் பாட்டியோடு விட்டுச் செல்ல என் தாயார் சம்மதித்தார். ஆனால், அவனை விட்டு பிரிவது தாங்க முடியாததாக இருந்தது.
இறுதியில், நான்கு வாரங்கள் பிடித்த அந்த பிராயாணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்; அது கொடிய குளிர்காலம், தரையெங்கும் வெண்பனி விழுந்து கிடந்தது. பாக்தாத் செல்லும் வழியில் நாங்கள் ஒரு சில வேளைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத பிரதேசங்களில் நாங்கள் தங்கவேண்டியிருந்தது. ஆனால், அந்த டிசம்பர் மாதத்தில் குளிர் மிகவும் பயங்கரமாக இருந்தது; நாங்கள் அக்குளிருக்குத் தயாராகவும் இல்லை. பாவம் என் தாயார்; பயணம் முழுவதும் அவர் பெரும் இம்சைக்குள்ளானார். அவர் கோவேறு கழுதைமேல் ஏற்றப்பட்ட ஒரு பல்லக்கில் பிரயானம் செய்தார்! அதுவும், அவர் மகப்பெற்றை எதிர்நோக்கியிருந்த ஆறு வாரங்களுக்கு முன்பாக இத்துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது!
ஆனாலும், அவர் ஒரு வார்த்தைகூட இதைப்பற்றி முறையிடவில்லை. அவர் எல்லா வேளைகளிலும் மற்றவர்களுக்கான உதவிகளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவர் எல்லாருடைய இன்னல்களின்போதும் தமது எல்லையற்ற கருணையை வழங்கத் தயங்கியது கிடையாது.
அவர் கூறிய கதையைக் கேட்ட என் கண்களில் வழிந்ததது: “அது மிகவும் சோகமான காலம். அதைப் பற்றி நான் கூறினால் நான் உன்னை மேலும் சோகத்திற்குள்ளாக்க நேரிடும்.” “ஆனால், அன்பிற்கினிய ஃகானும், உங்கள் சோகம் அனைத்திலும் நானும் மானசீகமாகப் பங்குகொள்ள விரும்புகின்றேன்,” என நான் கூறினேன். “என் சோகம் மிகுந்த நாட்களில் நான் என் சிந்தனைகளில் வாழ்ந்ததைத் தவிர என் வாழ்வில் வேறு எதுவும் கிடையாது. சோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஆனால், இறைவனின் பாதையில் சோகத்தை அனுபவிக்கும் போது, அதுவே உண்மையான ஆனந்தமாகும்!”
பிரயாணத்தின்போது நாங்கள் ஏதாவது ஒரு பட்டனத்திற்கு வந்தோமானால், என் தாயார் துணிகளையெல்லாம் எடுத்துச் சென்று பொது குளியலறைகளில் துவைத்து வருவார்; நாங்கள் அங்கு குளிப்போம். அவர் சில்லிட்ட ஈரமான துணிகளை தமது கைகளில் ஏந்தி வருவார் — அவற்றைக் காய வைப்பது பெரும்பாலும் முடியாத காரியமாகவே இருக்கும்; அத்தகைய காரியங்களில் சிறிதும் அனுபவமற்ற அவருடைய கைகள் வலியெடுத்துப்போகும்.
ஒரு சில வேளைகளில் நாங்கள் ஏதாவது சத்திரத்தில் தங்க நேரிடுவதுண்டு. அவ்விடங்களில் ஒரு குடும்பத்திற்கு ஓர் அறைதான் வழங்கப்படும், அதுவும் ஒர் இரவுக்கு மட்டுமே. இரவில் ஒளி கிடையாது, படுக்கைகளும் கிடையாது. சில நேரங்களில் எங்களுக்குத் தேநீர் கிடைக்கும், அல்லது முட்டைகள், சிறிது உறை பாலேடு, கரடுமுரடான ரொட்டி போன்றவையும் கிடைக்கும். என் தந்தையார் இருந்த நிலையில் அவரால் அத்தகைய கரடுமுரடான உணவை உட்கொள்ள முடியவில்லை. மிகவும் விசனமுற்ற என் தாயார் வேறு ஏதாவது உணவு கிட்டுமாவென சிந்தனை செய்தார். என் தந்தை நல்ல உணவு கிடைக்காமல் அதிகரிக்கும் பலவீனத்திற்குள்ளானார்.
இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் என் தாயாருக்கு சிறிது கோதுமை மாவு கிடைத்தது. ஒரு சத்திரத்தை நாங்கள் அடைந்தபோது, அவர் என் தகப்பனாருக்கு இனிப்பான கேக் ஒன்று செய்ய நினைத்தார். ஆனால், அந்தோ! – துரதரிஷ்டவசமாக, இருளில் சீனிக்குப் பதிலாக, அவர் உப்பைக் கொட்விட்டார். அந்த கேக் உண்ணமுடியாமல் போயிற்று!
தெஹரானின் கவர்னர், நாட்டின் எல்லை வரை எங்களோடு சில இராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தார். எல்லையில் எங்களை துருக்கிய வீரர்கள் சந்தித்து பாக்தாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு முதலில் ஒரு சிறிய வீடே கிடைத்தது; என் தந்தைக்கு ஒரு சிறிய அறையும், என் தாயாருக்கு ஒரு சிறிய அறையுமாக அமைந்திருந்த சிறிய வீடது. நானும், என் அண்ணனும் குழந்தையும் என் தாயாருடன் அந்த சிறிய அறையிலேயே தங்க வேண்டியிருந்தது. எங்களைக்காண அராபிய பெண்மனிகள் வந்த போது இந்த சிறிய அறையே வரவேற்பறையாக செயல்பட்டது. இந்த அராபிய பெண்கள் எங்களைக் காண வந்ததற்குக் காரணம், தாஹிரிஃ பாக்தாத்திற்கு வருகையளித்த போது அவர் அப்பெண்மனிகளுக்குச் சமயத்தைப் போதித்திருந்ததே ஆகும்.
ஒரு நாள் ஒரு வயதான பெண்மனி வருகை தந்திருந்த போது, சமோவாரைத் தயார் செய்யும்படி நான் பணிக்கப்பட்டேன். அது மிகவும் கனமான சமோவாராக இருந்தது. என் கைகளிலும் அவ்வளவாக பலமில்லை. மேல்மாடிக்கு அதை நான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. என்னைப் பார்த்து அந்த மூதாட்டி: “பாப்’இ போதனைகள் மிகவும் அற்புதமானவை என்பதற்கு ஆதாராமாக, ஒரு சிறிய வயது பெண் சமோவார் சேவை செய்கிறாள் என்பதே உள்ளது,” என்றாள். என் தந்தை அதை வேடிக்கையாக எண்ணினார். அவர் பிறகு, “உண்ணுடைய சமோவார் சேவையில் வாயிலாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பெண்மனி இதோ,” என கூறுவார்.
மிர்ஸா மூசாவுக்கும் அவரது மனைவிக்கும் பஹவுல்லாவின்பால் எப்போதுமே பக்தி அதிகம். என் சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா அவர்கள், எங்களுடைய தேசப்பிரஷ்டத்தில் தானும் பங்குகொண்டார். அவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் உதவி செய்வார். ஒரு முறை முழு சமையலையும் அவரே கவனித்துக் கொண்டார். அவர் சமயல் கலை நன்கு அறிந்தவர் ஆவார்; அவர் துணிகளை அவ்வப்போது துவைக்கவும் உதவினார்.
என் தாயார் மிகவும் பலவீனமானவர். அவருடைய பலமெல்லாம் அவர் அனுபவித்த கொடுமைகளால் பெரிதும் நலிவுற்றிருந்தன. ஆனால், அவர் தமது ஆற்றலுக்கும் மீறிய நிலையிலேயே செயல்பட்டார்.
என் தாயாருக்கு உதவியாக, அந்த மேல்வர்க்கத்துப் பெண்மனிக்கு அவ்வித வேளைகள் பழக்கமில்லாதவையாகவும், சிறமமானதாகவும் இருந்ததனால், ஒரு சில வேளைகளில் என் தந்தையாரே சமையல் வேலையில் உதவிகள் புரிவார். அவர் அனுபவித்த சிரமங்களைக் கண்டு அவருடைய தெய்வீகக் கணவரும், அவருடைய பிரபுவுமாகியவரின் மனம் பெரிதும் சோகமடைந்திருந்தது. இத்தகைய உதவிகளை அவர் சுலைமானிய்யா வாசத்திற்கு முன்பாகவும் அதற்குப் பின்பாகவும் புரிந்தார்.
பஹாவுல்லா சுலைமானிய்யாவை நாடிச் செல்வதற்கு சுப்-இ-அஸால் எனப்படும் பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பியின் நடத்தையே காரணமாக இருந்தது. அவருடைய நடத்தையினால் பாக்தாத் பாப்’இக்களுள் பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. நம்பிக்கையாளர்கள் தமக்கும் தமது தம்பிக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும், பிளவுக்குக் காரணமாக தாம் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் தமது குடும்பத்தையும் சமூகத்தையும் விட்டு யாருக்கும் தெரியாமல் சுலைமானிய்யாவுக்கு சென்றுவிட்டார். அவ்வாறு அவர் சுலைமானிய்யா செல்வதற்கு முன்பாக பாப்’இக்கள் அனைவரும் மிர்ஸா யாஹ்யாவை நல்லவிதமாக நடத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். மிர்ஸா யாஹ்யாவுக்குத் தமது இல்லத்திலேயே குடியிருக்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். திடீரென்று ஒரு நாள் பஹாவுல்லா எங்களையெல்லாம் விட்டுச் சுலைமானிய்யா சென்றுவிட்டார். ஆனால் அப்போது அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால் பெரிதும் ஆனந்தமடைந்தது மிர்ஸா யாஹ்யாவே.
அதற்குப் பிறகு மிர்ஸா யாஹ்யா எங்கள் வீட்டு நிலையான விருந்தினராகிவிட்டார். சாப்பாடு சரியில்லையென அவர் எங்களுக்குப் பெரும் துன்பங்கள் கொடுத்தார். அதுவும், எங்கள் வீட்டின் மிகச் சிறந்தவை யாவும் அவருக்கே கொடுக்கப்பட்டன.
அதே வேளை தாம் கைது செய்யப்பட நேரலாம் எனும் பயம் அவரை இப்போது வாட்ட ஆரம்பித்தது. அவர் வீட்டினுள் மறைந்துகொண்டு, எந்நேரமும் கதவை பூட்டியே வைத்திருந்தார். யாராவது கதவைத் திறந்தால் போதும், உடனடியாக அவ்வாறு செய்தவர் மேல் சீறிப் பாய்வார்.
என்னைப் பொறுத்த வரையில் நான் தனிமைமிக்க ஒரு வாழ்வே வாழ்ந்தேன் எனச் சொல்லவேண்டும். மற்ற பிள்ளைகளோடு நட்புகொள்ளவேண்டுமெனும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், சுப்-இ-அஸால் அதற்கு அனுமதிக்கமாட்டார். என் வயதுடைய குழந்தைகளை அவர் வீட்டினுள் அனுமதிப்பதில்லை, அதே வேளை என்னையும் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்!
என் பக்கத்து வீட்டில் என் வயதுடைய இரு பெண்கள் வசித்தனர். நான் அவ்வப்போது அவர்களைப் பார்ப்பேன்; ஆனால் எங்கள் வீட்டு விருந்தாளி கதவைத் திறந்ததற்காக என்னைப் பார்துக் கத்துவார்; உடனடியாக கதவையும் மூடிவிடுவார். கைது பயம் அவரை எப்போதும் வாட்டியது, அவர் தமது பாதுகாப்புத் தவிற வேறு எதைப் பற்றியும் அக்கறை கொண்டவர் இல்லை.
இந்த காலகட்டத்தில் எங்கள் வாழ்வு மிகுந்த சிறமத்திலும், அதே வேளை தனிமையிலுமாக கழிந்தது. நாங்கள் ஹம்மாம் சென்று குளிப்பதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டிற்குள் வந்து உதவி செய்யவும் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டு வேலை பெரும் சிறமம் மிக்கதாக இருந்தது. தினசரி வீட்டினுள்ளே இருந்த ஒரு ஆழமான கிணற்றிலிருந்து, நின்றுகொண்டு, மணிக்கணக்காக நான் நீர் இரைத்துக்கொண்டிருப்பேன்; கயிறு மிகவும் கடினமானது, நீர் இரைக்கும் வாளியோ மிகவும் கனமாக இருந்தது. என் தாயார் எனக்கு அவ்வப்போது உதவி செய்வார், ஆனால் அவரும் பலவீனமானவர், என் கைகளும் வலுவற்றவைகளாக இருந்தன. எங்கள் வீட்டு விருந்தினர்கள் உதவியதே இல்லை.
இக்கொடிய மனிதனுக்கு உதவி செய்ய வேண்டுமென என் தகப்பனார் கூறிச் சென்றுவிட்டார். நாங்களும் எங்களால் இயன்றவரை முயன்றோம், ஆனால், அது சுலபமாக இல்லை, அம்மனிதர் எங்கள் வாழ்க்கைகளை பெரும் சோகமிக்கவைகளாகச் செய்தார். இவ்வேளையில்தான் என் அருமைக் குட்டித் தம்பிக்கு மோசமான நோய் கண்டது. எங்கள் விருந்தினர் ஒரு டாக்டரோ, எங்கள் அண்டைவீட்டாரோ வந்து எங்களுக்கு உதவிபுரியக்கூட அனுமதிக்கவில்லை.
என் குட்டித் தம்பி இறந்த போது என் தாயார் மனமுடைந்து போனார்; என் தம்பியின் பூவுடல் யாரோ ஒரு மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் என் தம்பியை எங்கு கொண்டு சென்றான் எங்கு புதைத்தான் என்றே எங்களுக்குக் கடைசி வரை தெரியாது போயிற்று. அந்த நாட்களின் சோகம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது.
சில காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம். நல்ல வேளையாக தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ எனப் பயந்த மிர்ஸா யாஹயா எங்களோடு வரவில்லை. எங்க் வீட்டிற்குப் பின்புரம் இருந்த ஒரு சிறிய வீட்டில் அவர் மறைந்துகொண்டார். அவருக்கும், வரிவடைந்திருந்து அவருடைய குடும்பத்தினருக்கும் இப்போதும் நாங்கள் தினமும் உணவு அனுப்பி வந்தோம். அவர் எங்கள் வாழ்க்கையில் இப்போது நேரடியாக குறுக்கிடாததால் எங்கள் வாழ்க்கை இப்போது சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போது எங்கள் கவலையெல்லாம் ஜமால்-இ-முபாரக் எங்குள்ளார் என்பதைப் பற்றியே இருந்தது. அதுவரை என் தாயாரும், மிர்ஸா மூசாவும் தங்களால் இயன்றவரை விசாரித்தே வந்தனர். தன் தந்தையின் பிரிவினால் என் அண்ணனின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியதாக இருந்தது. ஒரு நாள் இரவு என் அண்ணன் ஒரே பிரார்த்தனையை, ஒரே நோக்கோடு, எங்கள் தகப்பானார் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென நினைத்து, பிரார்த்தித்தார்.
சின்னாட்களுக்குப் பிறகு எங்கள் தந்தையாரைப் பற்றி எங்களுக்கு செய்தி கிடைத்தது. அவரை அழைத்து வர எங்களுடைய விசுவாசமிக்க நண்பர் ஒருவரும், மற்றொரு நம்பிக்கையாளரும் சென்றனர். எங்கள் உள்ளங்கள் அவர்களோடு சென்றன என்பதைக் கூறவேண்டியதில்லை. அவர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் எங்களுடைய பிரார்த்தனைக்கு முடிவே இல்லை. எங்கள் எதிர்ப்பார்ப்பு இருண்ட எங்களுடைய வாழ்வின் இருண்ட பகுதிகளுள் ஒளியை வீசியது.
எதிர்ப்பார்ப்புமிக்க அந்த நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எங்கள் நம்பிக்கையும், எதிர்ப்பார்பும் அதிகரிக்கவும் வளரவும் செய்தன. வரப்போகும் நாட்களில், மிக அருகாமையில் உள்ள நாட்களில், வழிப்போக்கரான எங்கள் தந்தை, எங்களோடு மீண்டும் ஒன்று சேரப்போகிறார். “திர்மி” எனப்படும் ஒரு வகை சிகப்புத் துணியினால் என் தாயார் என் தந்தைக்கு ஒரு வித மேற்சட்டை தைத்தார். இத்துணியை இதற்கென்றே தமது திருமண பொக்கிஷங்களிலிருந்து பாதுகாத்து வைத்திருந்தார். என் தந்தையார் அனிந்துகொள்வதற்கு அஃது இப்போது தயாராக இருந்தது. இறுதியில், இறுதியில், என் தாயாரும், அணணனும் நானும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்த வேளையில், காலடியோசை கேடடது. ஒரு துறவி. ஆனால், அந்த உருவத்தின் பின்னனியில் எங்கள் நேசத்திற்குறியவரின் ஒளியைக் கண்டோம். நாங்கள் அனைவரும் அவரைக் கட்டிக் கொண்ட போது எங்கள் ஆனந்திற்கு அளவே கிடையாது.
என் தாயார் இப்போது மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கக் கண்டேன், என் அண்ணன் என் தந்தையாரின் கைகளை, இனி என்றுமே தன் பார்வைக்கு அப்பால் விடப்போவதில்லை என்பது போல் இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த துறவியின் அருவருப்பான மாறுவேட உடையில் கிட்டத்தட்ட மறைந்தே விட்டிருந்தான். மனதைத் தொட்டதும், மகிழ்ச்சிமிக்கதுமான அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது;
பாஹிய்யா ஃகானும் கூறியபடி லேடி ப்லொம்ஃபீல்ட் உரைத்தது
பாக்தாத் வாசகாலத்தின் போது, அதிப்புனித இலையாகிய பாஹிய்யா ஃகானுமே தமது தாயாரின் அன்பான உதவியாளராக இருந்தார். பல்வேறு வீட்டு வேலைகளை பொருத்த வரையில் அவர் தமது சக்திக்கும் மீறிய அளவிலேயே செயல்பட்டுவந்தார். குழந்தைத்தனமான பொழுபோக்குகளோ, சினேகிதர்களோ அவருக்குக் கிடையாது. எப்போதும் தமது தாயாரின் மீதே அவர் கண்ணாக இருந்தார், தன் தாயாருக்குக் களைப்பேற்படுத்தும் எதையும் அவர் விட்டுவைத்ததில்லை, தமது தாயாருக்கோ, தந்தைக்கோ அவர் ஏதாவது செய்ய இயன்ற போது அவர் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியடைவார்.
“என் தாயார் சில வேளைகளில் என் அண்ணன் அப்பாஸுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்; மற்ற வேளைகளில் மிர்ஸா மூசா சொல்லிக் கொடுப்பார், பிற நேரங்களில் அப்பாஸுக்கு என் தந்தையாரே பாடம் சொல்லிக் கொடுப்பார்.”
டூபா ஃகானும் வாய்மொழிந்தது
என் அன்பான பாட்டி ஆசிய்யா ஃகானுமை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது. அவர் மறைந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். பஹாவுல்லா அவரை “நவ்வாப்” என்றுதான் அழைப்பார். பாரசீக பிரபுக்கள் தங்கள் மனைவிமார்களை இவ்விதமாகத்தான் அழைப்பார்கள். அது மிகவும் மரியாதையும் பனிவும் மிக்க ஒரு பெயராகும். அவர் மிகுந்த அழகுடையவர், அன்பானவர், மென்மை குணம் படைத்தவர். பிரச்சனையுள்ள எவருமே அவரைத்தான் நாடிச் செல்வார்கள். ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர்தான் அவர்களைப் பேணுவார், ஆறுதலளிப்பார், பார்த்தும் கொள்வார்.
ஆக்கா சிறைச்சாலையில் நாங்கள் இருந்தபோது சலவைத் தொழிலாளிகள் யாருமே அங்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஃகாணும் அவர்கள்தான் பெரும்பாலான சலவைக் காரியங்களைக் கவனித்துக்கொள்வார். சமயல் வேலைகளையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். அவருக்கு என் அத்தையார்தான் (பஹிய்யா ஃகானும்) உதவி செய்வார்.
அங்கிருந்த ஒரேயொரு ஊழியரான ஒரு கருப்பினப் பெண்மனியினால் எல்லா வேலைகளையும் செய்ய இயலவில்லை. அச்சேவகி கலைப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக என் பாட்டியும், இளம் வயதினராகவிருந்த ஃகானுமும்தான் பெரும்பாலான கடின வேலைகளைச் செய்வார்கள்.
குடும்பத்தினரின் துணிகளை அவர்கள்தான் தைத்தும், ஒட்டுப்போடவும் செய்வார்கள். அவ்வேலை மிகவும் கடினமான வேலையாகும். பஹாவுல்லா சுலைமானிய்யாவிலிருந்து திரும்பியவுடன் அவருக்காக அவர்கள் இருவரும் அற்புதமான மேலுடுப்பு ஒன்றை எவ்வாறு தைத்தார்கள் என்பதை எனக்குக் கூறியிருக்கின்றனர். அன்புகலந்த அக்காரியத்திற்காக அவர்கள் சிறு சிறு துண்டுகளாலான சிகப்பு திர்மி துணியைப் பயன்படுத்தினர். பாட்டியின் திருமண பொக்கிஷங்களில் காணாமல் போன அனைத்திலும் அது மட்டும் எப்படியோ பாதுகாக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் சுமார் ஆறு மாத காலமாக அதை வெட்டி தைத்தார்கள். அதன் பயனாக மிகவும் அழகிய மேற்சட்டை ஒன்று உருவாகியது. மிகவும் தேவையான ஒரு மேலாடையாகவே அது விளங்கியது. அக்காலத்தில் பாக்தாத்தில் புதிய மேலுடுப்பு வாங்குமளவுக்கு அவர்களிடம் பணம் கிடையாது. ஆசிய்யா ஃகானும் அவர்கள் ஆக்கா சிறைச்சாலையிலிருந்து அருகிலிருந்து வாடகை வீட்டுக்குச் செல்லும் வரை உயிர்வாழ்ந்திருந்தார். அவரது சிறிய அறை வெற்று அறையாகவே காட்சியளித்தது. மிகவும் குறுகலான வெள்ளைப் படுக்கை, அது பகல்வேளைகளில் திவானாகவும் பயன்படுத்தப்பட்டது.
அறையிலிருந்த ஒரு சிறு மேஜையில் அவரது பிரார்த்தனை புஸ்தகமும் பிற நூல்களும், அவரது “ஃகலாஐ-தான்” எனப்படும் எழுதுகோல் வைக்கும் பெட்டியும், எழுதவதற்கான தாள்களும் இருந்தன; அவரது ஜெபமணிமாலையும் அதன் மேல்தான் இருந்தது; சில வேளைகளில் ஒரு ஜாடியில் மலர் இருக்கும், மற்றும் ஒரு பழைய வர்ணம் பூசப்பட்ட பெட்டி ஒன்று, அதனுள் அவருடைய உடைகள் இருந்தன.
பஹாவுல்லாவுக்கு இரண்டே மேலுடுப்புகள்தான் (கோட்) இருந்தன. அவை பாராக் எனப்படும் பாரசீக கம்பளியினால் நெய்யப்பட்டவை. அந்த இரண்டு மேலுடுப்புகளும் அடிக்கடி கிழிந்து போகச் செய்தன. அவற்றை ஒட்டுப்போடுவதிலும், தைப்பதிலும் அவருடைய பெரும்பாலான நேரங்கள் செலவழிந்தன. பஹாவுல்லாவின் காலுறைகளையும் அவர்தான் ஒட்டுப்போடுவார்.
என் கண்களுக்கு, நீல வர்ண மேலுடையிலும், அவருடைய தலையில் வெள்ளை “நிஃகாப்புமாகவும்,” அவரது சிறிய பாதங்களில் கரு நிறத்திலான மெல்லிய செருப்புமாகவும், மெய்மறந்த நிலையைக் குறிக்கும் முகபாவத்தோடு, அவர் தமது இனிய குரலில் பிரார்த்தனைகளைப் பாடுவதுமாகவுமே அவர் தெரிகின்றார். ஒரு நாள் என் பாடங்கள் முடிந்து நான் வீடு திரும்பிய போது அனைவரும் பெரிதும் சலனத்தோடு ஒன்றுகூடி நிற்பதைக் கண்டேன். “என்ன விஷயம்?” என வினவினேன்.
“உன் பாட்டி மிகவும் நோய்வாய்ப்ட்டுள்ளார்கள்,” என பதில் வந்தது. அவருடைய அறைக்குள் பஹாவுல்லா சென்றார்; சில நேரங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்தார்; என் பாட்டி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்; இவ்வுலகையும் தமது சோகமும் துயரமும் நிறைந்த நாட்களை விட்டு அவர் மறைந்துவிட்டார். நாங்கள் அழுத அழுகையை என்னவென்றுதான் விவரிப்பது! அவர் இல்லாமல் அனைத்துமே வெறிச்சோடிப் போனது; மாறாத அவருடைய அன்புக்கருணையை இழந்து நின்றோம்; அவருடைய பூரண தன்னலமின்மை எங்களையெல்லாம் ஆட்கொண்டு விட்டிருந்தது. வசீகரமும் பாசமும் மிகுந்தவர், நற்பண்பும் நேர்த்தியும் மிக்கவர், கூறிய அறவுத்திறமும், உடல்பலத்தைவிட பண்புநலன்களின் பலம் பெற்றவர் அவர். நிறைந்த நகைச்சுவைப்பண்புடையவர். அவர் பட்ட சிரமங்களும், வாழ்வின் துயர்களும் அவருடைய உடல்நலத்தை பெரிதும் பாதித்திருந்தன; அவர் என்னதான் இயலாதபோதும், தமது முழு பலத்தையும் அவர் பிரயோகிக்கத் தவறியவே இல்லை.
ஆக்கா சிறைச்சாலைவாசத்தின் போது பட்ட துன்பங்களும் கொடுமைகளும் போதாதென மனதையே சுக்கு நூறாக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. ஆம், “அதி தூய்மையான கிளை” என பஹாவுல்லாவால் அழைக்கப்பட்ட மிர்ஸா மிஹ்டி ஒரு நாள் சிறைச்சாலையில் கூறையின் மீது தமது பிரார்த்தனைகளைக் கூறிக்கொண்டிருக்கும் போது தவறுதலாக காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்து ஓர் இடைவெளியின் வழியாக கிழே விழுந்துவிட்டார். அவருடைய வயிற்றில் பயங்கரமான அடி பட்டிருந்தது; தொடை நைந்துபோய்விட்டது; வாயிலிருந்து இரத்தம் பெருகியது. இதன் விளைவாக மிர்ஸா மிஹ்டி மரணமடைந்தார். சிறைவாசத்தின் கடுமையின் காரணமாக இரகசியமாகவும், ஏழ்மையிலும், அவசரமாகவும் அதி தூய்மையான கிளை அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய தாயாராகிய ஆசிய்யி ஃகானும் இதனால் பெரும் விசனமுற்று நிற்காது அழுதுகொண்டே இருந்தார். இதையறிந்த பஹாவுல்லா, அவரிடம் வந்து அவர் அழத்தேவையில்லை எனவும், நம்பிக்கையாளர்கள் தம்மை வந்து காண்பதற்கான வழிகள் திறக்கப்படுவதற்கு மட்டுமின்றி மனிதனின் புத்திரர்கள் அனைவரும் ஒன்றுபடுத்தப்படுவதற்கும் அவர் தம் மகனை பிணையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் எனவும் ஆறுதல் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அப்புனித ஆன்மா பெரிதும் ஆறுதலுற்று தமது பேரிழப்பின் துக்கத்தை மறந்தார்.
ஷோகி எஃபெண்டியின் 21 டிசம்பர் 1939 எனும் கடிதத்திலிருந்து.
இத்தகைய ஒரு தாயார் யார்? அவர், கடவுளின் பாதையில் யாவற்றையும் துறக்க மனமுவந்த தெய்வீகமும், விசுவாசமும் வாய்ந்த ஒரு பெண் மட்டுமல்ல. ஆனால், புனித பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஐசையாவின் 54வது பகுதி அவரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:
“ஏனெனில் உம்மை உருவாக்கியவர் உமது கணவரே ஆவார்; தேவகணங்களின் பிரபு என்பது அவரது பெயர்; உம்மை விடுவிப்பவர் இஸ்ரேலின் தெய்வீக புருஷராவார்ஆ; அவர் உலகம் முழுவதின் இறைவன் என அவர் அழைக்கப்படுவார்…”
அவருக்கு பஹாவுல்லா பின்வருவனவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்:
“எம்மை மீண்டும் செவிமடுப்பாயாக, இறைவன் உன்மீது பெரிதும் திருப்பதிகொண்டுள்ளார்… அவருடைய உலகங்கள் ஒவ்வொன்றிலும் நீயே அவரது துணையாக இருக்கச் செய்தும், அவரது நாமமும், அவரது நினைவும், அவரது அரசும், அவரது சாம்ராஜ்யமும் நிலைத்திருக்கும் வரை அவரது அருகாமை, முன்னிலை ஆகியவற்றைக்கொண்டு உணக்கு ஊட்டமளித்துள்ளார்.”
அவர் மேலும் ஒரு நிருபத்தில் கூறுவது:
“ஓ நவ்வாப்! எமது விருட்சத்திலிருந்து உதித்தும், எமது துணையாகவும் இருந்துவந்துள்ள இலையே! எமது மகிமையும், எமது அன்புக் கருணையும், எல்லா ஜீவன்களையும் விஞ்சியுள்ள எமது இரக்கமும் உன்னைச் சாரட்டுமாக. உனது கண்களை இன்புறச் செய்யக்கூடியதையும், உனது ஆன்மாவிற்கு உறுதியளிப்பதையும், உனது உள்ளத்தை மகிழ்சியுறச் செய்யக்கூடியதையும் யான் உனக்கு அறிவிக்கின்றேன். மெய்யாகவே, உனது பிரபு கருணைமிக்கவர், சர்வ-கொடைாளி. இறைவன் உன் மீது திருப்திகொண்டுள்ளார், திருப்தி கொள்ளவும் போகின்றார்; அவருக்குச் சேவை செய்திட, அவர் உன்னை அவருக்கென தேர்தெடுத்தும், பகல் வேளையிலும், இரவு நேரத்திலும், அவருக்குத் துணையாக நியமித்துள்ளார்.”