12 ஏப்ரல் 1912
திருமதி பிலிப்ஸ் அவர்களின் ஸ்டூடியோவில் ஆற்றப்பட்ட உரை
39 வெஸ்ட சிக்ஸ்டி-செவன்த் ஸ்ட்ரீட், நியு யோர்க்
திரு ஜோஃன் ஜி. க்ரன்டி அவர்களால் எடுக்கப்பட்ட குறிப்புகள்
அன்பும், ஐக்கியமும் கலந்த வாழ்த்துக்களை நான் வழங்குகின்றேன். இறைவனின் அன்பர்களைச் சந்திப்பதில் ஏற்படும் களிப்போடும், தெய்வீக மகிழ்ச்சியோடும் ஒப்பிடுகையில் இவ்வுலக காரியங்கள் ஒன்றுமற்றவை எனவே கணக்கிடப்படுகின்றன. நீண்ட கடல்வழி பயணத்தால் நான் சோர்வடைந்திருந்தாலும், இப்பெரும் களிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இன்றிரவு, இந்த இறைவனின் கூட்டத்தினரின் மீது பார்வையை செலுத்தும் நான் அதிஉயர்ந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றேன். நீங்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பது நீங்கள் இறைவனின் சமயத்தை நிலைநிறுத்தியுள்ளீர்கள் என்பதற்கும், இறைவனின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு உதவியளிக்கவும், கைகொடுக்கவும் செய்கிறீர்கள் என்பதற்கும், நிச்சயமாகவே ஓர் அடையாளமாகும். ஆகவே, என் ஆனந்தத்தின் உச்சநிலையென்பது உங்கள் வதனங்களைப் பார்த்து ஆசீர்வதிக்கப்பட்ட அழகர், பஹாவுல்லாவின் சக்தியால் நீங்கள் இங்கு ஒன்றுதிரட்டப்பட்டுள்ளீர்கள் என்பதைக் கண்டுணர்வதிலேயே அடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் நீங்கள் அவரது போதனைகளை நிலைநிறுத்தி, அவரது சமயத்திற்குக் கைகொடுக்கவும் செய்கின்றீர்கள். ஆகவே, மனுக்குல உலகிற்கு ஊட்டம் வழங்குவதற்கான தெய்வீக கனிகள் தோன்றக்கூடிய நல்விருட்சமாக நீங்கள் ஆகிடுவதை நான் காண்கின்றேன்.
பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன் முன்னெழுந்த சீடர்களைப் போல், இறைவனின் அன்பெனும் நெருப்பால் உங்கள் உள்ளங்கள் தீப்பிடித்தும், தெய்வீக ஆவியெனும் உணவால் உங்கள் ஆன்மாக்கள் புத்துணர்வு பெற்றும், நற்செய்தியின் அறிவிப்பினால் மனித உள்ளங்களை உயிர்ப்புறச் செய்தும், உங்கள் முகங்களில் இறையொளியுடனும், இறைவனைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் உங்களைத் துண்டித்துக்கொண்டும் நீங்கள் முன்செல்லவேண்டும். ஆகவே, தெய்வீக போதனையின் முதல் கோட்பாடாகிய அன்புக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்.
இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட அழகரது நூற்றாண்டு!
இதுவே அவரது அழகின் ஒளியின் காலவட்டம்!
இதுவே எல்லா அவதாரங்களின் முழுமை நிறைந்த நாள்!
விதைகள் விதைத்திட வேண்டிய நாட்கள் இவையே. மரங்கள் நட வேண்டிய நாட்கள் இவையே. இறைவனின் தாரள அருட்கொடைகள் ஒன்றடுத்து ஒன்றென உள்ளன. இந்நாளில் ஒரு விதையை விதைப்பவன், தெய்வீக இராஜ்யத்தில் அதன் கணிகளிலும் அறுவடையிலும் தனது சன்மானங்களைக் காண்பான். உரியநேரத்திற்கேற்ற இந்த விதை, இறைவனின் அன்பர்களின் இதயங்களில் விதைக்கப்படும்போது, தெய்வீகப் பரிவெனும் மழையினால் நீர்பாய்ச்சப்பெற்றும், தெய்வீக அன்பெனும் சூரிய ஒளியால் வெப்பமளிக்கவும் படும். மனுக்குல ஒருமைப்பாடு, நீதியின் பூரணத்துவம், மனுக்குலத்தினரிடையே வெளிப்படும் சுவர்க்கத்தின் வாழ்த்துக்குறிய பண்புகள் ஆகியவை அதன் கணியும், மலரும் ஆகும். பஹாவுல்வாவின் போதனைகளுக்கேற்ப இவ்விதமான ஒரு விதையை விதைக்கவும், இவ்விதமான ஒரு மரத்தை நடவும் செய்பவர்கள் இத்தெய்வீக விளைவை அதன் முழுநிறைவின் படிப்படியான வெளிப்பாட்டினூடே கண்ணுறவும், தயைமிக்கவரது நல்விருப்பத்தை அடையவும் செய்வார்கள்.
இன்று உலக நாடுகள், சுயகாரியங்கள் நிமித்தமாய் இருந்தும், அழியக்கூடியதும், நிலையற்றதுமான சாதனைகளில் ஈடுபட்டும், தாபம் மற்றும் அகந்தையெனும் நெருப்பில் பொசுங்கியும் உள்ளனர். அகந்தையே ஆதிக்கம் செலுத்துகின்றது; பகைமையும், விரோதமும் மேலோங்கி நிற்கின்றன. தேசங்களும், மக்களும் தங்கள் உலகாசைகள் மற்றும் பலன்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். சண்டையின் மோதல் சத்தமும், சச்சரவின் இரைச்சலும் அவர்கள் மத்தியில் செவிமடுக்கப்படுகின்றது. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் நண்பர்களுக்கு விண்ணுலகம் மற்றும் இறையன்பைத் தவிர வேறு எண்ணங்கள் கிடையாது. ஆகவே, இறை அன்பின் பிறங்கொளியின் மினுமினுப்பைப் பரப்புவதில் உங்கள் சக்திகளை பயன்படுத்துவதில் தாமதம் செய்யாமல், அதன் பிரகாசத்தின் உதாரணங்களென அறியவும் காணவும் படும் வகையில் உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்வீர்களாக. நட்டுவைப்பீர்கள் என உங்களை நம்பிவிடப்பட்டுள்ள இந்த அரிய விதை மேலும் தொடர்ந்து வளர்ந்தும், அதன் கணிகளை வழங்கவும் கூடிய வகையில் நீங்கள் எல்லாரையும் அன்புக்கருணையோடு நடத்தவேண்டும். உங்கள் உள்ளங்களில் நீங்கள் அன்பு கொண்டிருப்பீர்களேயானால் இறைவனின் அன்பும், இரக்கமும் உங்கள் மூலமாக இதை நிச்சயம் சாதிக்கும். இராஜ்யத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. உண்மைச்சூரியனின் ஒளிகள் பிரகாசிக்கின்றன. தெய்வீக இரக்கம் எனும் மேகங்கள் தங்கள் விலைமதிப்பற்ற மணிக்கற்களைப் பொழிகின்றன. புதியதும், தெய்வீகமானதுமான இளவேனிற்காலத்தின் மென்பூங்காற்றுகள் அருவ உலகிலிருந்து சுகந்த மூச்சுக்களை மெல்ல வீசச் செய்கின்றன. ஆகவே, இந்நாளின் மதிப்பினை அறிவீராக.
இத்தெய்வீக வாய்ப்பின் நிறைவேற்றத்திற்குத் துயிலெழுவீர்களாக. இந்த நற்செய்தியைப் பரப்புவதற்கும், இந்த இரக்கம் மிகுந்த கொடையின் தோற்றத்திற்கும், உங்கள் ஆன்மாக்கள், உங்கள் செயல்கள், நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளின் சக்திகள் அனைத்தையும் கொண்டு உதவிபுரிவீர்களாக. நீங்களே உங்கள் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளின் மெய்நிலையும், வெளிப்பாடும் ஆவீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் கட்டளைகளுக்கும், போதனைகளுக்கும் இணங்க நடப்பீர்களேயானால், தெய்வீக உலகும், தொன்மையான இராஜ்யமும் உங்கள் உடைமையாகும் – நித்திய ஆனந்தமும், அன்பும், நிலையான வாழ்வும் உங்களுக்கே உரித்தாகும். தெய்வீகக் கொடைகள் பொழிகின்றன. மிகுந்த கனிகளை வழங்கும் ஒரு மரமாவதற்கான வாய்ப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே பஹாவுல்லாவின் இளவேனிற்காலம். ஆன்மீக வளர்ச்சியின் பசுமையும், இலைதழைகளும் மனித உள்ளங்கள் எனும் தோட்டங்களில் பெரும் அளவில் தோன்றிக்கொண்டிருகின்றன. இந்த உருண்டோடிம் நாட்கள் மற்றும் மறைந்துபோகும் இரவுகளின் மதிப்பினை அறிவீர்களாக. ஒருவர்பால் ஒருவர் முழுநிலை அன்பெனும் ஸ்தானத்தை அடைந்திட முயலுவீர்களாக. அன்பின்மையால், பகைமையே அதிகரிக்கும். அன்பை கடைப்பிடிப்பதால், அன்பு பலப்படுவதோடு, பகைமைகள் சிறிது சிறிதாக ஒழிந்துவிடும்.
என்னைக் கவனியுங்கள் – உங்கள் முகங்களைக் காண்பதற்காக, முற்றிய வயதான காலங்களில், உடல் பலவீனத்தின் சுமையைத் தாங்கி, பரந்த சமுத்திரத்தைக் கடந்து வந்துள்ளேன். ஆவியின் வாழ்வின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒரே ஆன்மாவாகவும், இராஜ்யத்தின் ரோஜாவனத்தை அலங்கரிக்கும் ஒரே மரமாகவும் ஆவீர்கள் என்பது என் எதிர்பார்ப்பு. இறைவனின் கொடைகள் எனும் முடிவற்ற பொக்கிஷங்கள் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கே உரித்தாகும் என்பது என் எதிர்பார்ப்பு. நித்தியமான மகிமை எனும் சுவர்க்கத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் உங்களுடைய பளிச்சிடும் ஒளிகளின் வாயிலாக விண்ணுலகத் திருக்கூட்டத்தினர் ஒளிரப்பெறுவார்கள் என்பது என் பிரார்த்தனை.
அப்துல்-பஹா: அனைத்துலக அமைதிக்கான பிரகடணம், பக். 7-9)