இறைவனின் சமயத்தின் திருக்கரம் திரு லெரோய் ஐயவாஸ்
(ஆகஸ்ட் 31, 1958ல் பதிவு செய்யப்பட்ட ஒரு சொற்பொழிவின் பகுதி)
பாதுகாவலர் ஸ்தானம் குறித்து ஒரிரு வார்த்தைகள் கூற விரும்புகிறேன். அப்துல் பஹா விண்ணேற்றமடைந்தபோது, அவருக்கு (ஷோகி எபெஃண்டி அவர்களுக்கு) இவ்வுலகமே இருளாகிவிட்டது. எல்லா ஒளிகளும் அனைந்துபோய்விட்டன. அவர் புனித நிலத்திற்கு வந்தபோது, அப்துல் பஹா அவரிடம் கூறியவற்றிலிருந்து, ஷோகி எபெஃண்டி சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தார். அவர் கூறியவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன், “அப்துல் பஹா, உலக நீதி மன்றத்தை தேர்வு செய்யும் அந்த மகா சபையை ஒன்றுகூட்டும் தனிச்சிறப்பைத்தான் எனக்கு வழங்கப்போகின்றார் என நான் நினைத்திருந்தேன். (மாஸ்டர்) அவர்களின் உயில் மற்றும் சாசனத்தில் அதைச் செய்திடுமாறுதான் உத்தரவு பிறப்பித்திருப்பார் என நினைத்திருந்தேன்.”
“ஆனால், அதற்குப் பதிலாக, இறைவனின் சமயத்திற்கு நானே பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சமயத்தின் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. முதலாவதாக, நான் அதற்குத் தகுதியுடையவன் என நினைக்கவே இல்லை. அடுத்து, இந்தப் பொறுப்புக்களை சுமக்க நான் விரும்பவில்லை.” எனக் கூறினார்.
“நான் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. அதன் அர்த்தத்தை நான் அறிந்துவைத்திருந்தேன். ஒரு மனிதன் எனும் முறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டதை நான் அப்போது உணர்ந்தேன்.” அதை நான் விரும்பவில்லை, அதை எதிர்நோக்கவும் நான் விரும்பவில்லை. ஆகவே, நான் புனித நிலத்தை விடுத்துச் சென்றதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். சுவிட்சர்லாந்தின் மலைகளை நாடிச் சென்றேன். அங்கு, நான் என்னை வெற்றிகொள்ளும்வரை என்னோடு போராடினேன். அதன் பிறகே நான் திரும்பினேன். என்னை இறைவனிடம் ஒப்புவித்தேன், பிறகு பாதுகாவலரானேன்.”
“இப்போது, உலகில் உள்ள ஒவ்வொரு பஹாயும், ஒவ்வொரு மனிதனும், இதையேதான் செய்ய வேண்டும். நீங்கள் சமயத்திருக்கரமாக இருந்தபோதிலும், பஹாவுல்லாவின் வீரப்பெருந்தகையாக இருந்த போதிலும், நீங்கள் முன்னோடியாக இருந்தபோதிலும், நிர்வாகியாக இருந்தபோதிலும், எதுவாக இருந்தபோதிலும், சமயத்தைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு பஹாயும் தன்னோடு போராடிக்கொள்ளவே வேண்டும். அதன் பிறகே அவர், இறைவனின் சமயத்தின் சேவைக்குத் தக்க கருவியாகின்றார். அது நடக்கும் வரையில் அல்ல. உலகில் உள்ள ஒவ்வொரும் பஹாயும் அறிய வேண்டியது இதுவே.”
“இந்த இரவின் உரையிலிருந்து நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று இதுவே. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னோடு போராடிக்கொள்ளவேண்டும், தன்னை வெற்றிகொள்ள வேண்டும், தனது கீழான இயல்புகளை வெல்ல வேண்டும், தனது அகங்காரத்தை ஜெயிக்க வேண்டும், பிறகு, புனித ஆவி உங்கள் மூலமாக செயல்படுவதற்கு ஏதுவாக உங்களை இறைவனுக்கு அர்ப்பனிக்கவேண்டும்.” என்பது பாதுகாவலரின் அறிவுரை. புனித ஆவி உங்கள் வாயிலாக செயல்படும்போதுதான், நீங்கள் வெற்றிக்கு மேல் வெற்றி அடைவீர்கள். புனித ஆவி என்பது இறைவனின் படைப்பாற்றலின் அம்சமே ஆகும். வெற்றிகள் அடைவதும், சமயத்திற்கு ஜெயங்களை கொண்டுவருவதுமன்றி வேறெதனையும் அதனால் செய்ய முடியாது.”