டாக்டர் பீட்டர் காஃன் அவர்களின் சொற்பொழிவு
வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2001
இராஜ்யத்தின் மாநாடு, மில்வௌக்கீ, விஸ்கான்சின்
அன்பு மிகு நண்பர்களே, ஐக்கிய அமெரிக்காவின் எல்லா பாகங்களிலிருந்தும் நாம் இங்கு கூடியுள்ளோம். பார்க்கப்போனால், உலகின் பல பாகங்களிலிருந்தும் கூடியுள்ளோம் எனவே கூறலாம். அப்படி கூடியுள்ள நாம், இறைவனின் சாம்ராஜ்யம் உலகில் நிறுவப்படும் நாள் வரப்போகின்றது எனும் நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனையாமல் வைத்திருந்த எண்ணிகையிலடங்கா தலைமுறையினரின் வாரிசுகள் ஆவோம். சில சமய நம்பிக்கைகளில், இறைவனே பூமிக்கு வந்து தமது மக்களிடையே குடியிருப்பார் எனும் நம்பிக்கையோடு இது தொடர்புபெற்றிருந்தது. இந்த அனைத்து எதிர்ப்பார்ப்புகளிலும், மனித நடவடிக்கைகளில் இறைவனே தலையிடுவார் எனவும், நீண்ட காலமாக வாக்களிக்கப்பட்டிருந்த சுபிட்சம், ஐக்கியம், மற்றும் சாந்தி ஆகியவை உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஒரு விழிப்புணர்வு இருந்துவந்துள்ளது.
நாம் வாழ்ந்துவரும், சமய முக்கியத்துவம் பெரிதும் குறைந்துள்ள இக்காலத்தில், அந்த எதிர்ப்பார்ப்பு மங்கிவிட்டது. ஆனால், கடந்த பல வருடங்களாக, உலகில் நடந்துவரும் சம்பங்களால் அது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதோடு, உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பரினாமம் குறித்த விழிப்புணர்வினாலும் இந்த எதிர்பார்ப்பு தலைதூக்கியுள்ளது. உங்களில் பலர் அல்லது எல்லாருமே உணர்ந்துள்ளதுபோல், இது பஹாய் சமயத்தின் மைய செய்தியும் ஆகும். உலகத்தில் இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படப் போகின்றதெனும் தொன்மையான தீர்க்கதரிசனம், நிறைவேறும் காலத்தில்தான், நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
நாம் எங்கெங்கு பார்க்கினும், மாற்றியமைக்கும் சக்திகள், மனித சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் எல்லா நிலைகளினூடும் தனியாத வேகத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை, இக்குறிக்கோளின் நிறைவேற்றத்திற்கு ஏற்புடைய மாற்றங்களை உருவாக்கிவருகின்றன. நம்மிடையே பலர், பஹாய் சமயத்தின் உறுப்பினர்களாக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள், உலகில் நடப்பவற்றை ஆன்மீகமயமாக்குதல் குறித்தும் அஃது ஒரு நிலையான அஸ்திவாரத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கும் ஒரு முக்கிய பங்காற்றவிருக்கின்றீர்கள். இந்தக் கடமையை நீங்கள் தொண்டு ரீதியில் ஏற்றுள்ளீர்கள். இது நமது சலுகையாகும். இது நமது உரிமையாகும்.
பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் என்றால் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்கும் அதே வேளையில், இது குறித்து பஹாய் சமயம் என்ன கூறுகின்றது என்பது பற்றிய எனது புரிந்துகொள்ளலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன். என் நம்பிக்கை என்னவெண்றால், நம்மைச் சுற்றிலும் இந்த விஷயம் குறித்து மேலோங்கியுள்ள பொதுவான நம்பிக்கையிலிருந்து பஹாய் சமயத்தின் கண்ணோட்டம் மூன்று வகைகளில் வேறுபடுகின்றது என்பதாகும். முதலாவதாக, பஹாய்களெனும் முறையில், இது தீடீரென நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சி. என நாம் நம்பவில்லை. மனித காரியங்களில் இறைவனின் தலையீடு என்பது தொடரும் வளர்செயற்பாடே என்பது நமது நம்பிக்கை. சரித்திரமென்பது பெரும் வியப்பளிக்கும் முறையில் ஒரு முடிவிற்கு வரும் எனவோ, கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு தன்மை மாற்றம் ஏற்பட்டு, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியின் மீது படியும் எனவோ நாம் எதிர்பார்க்கவில்லை. பார்க்கப்போனால், இறைவனின் சாம்ராஜ்யம் என்பது, நீண்ட கால இடைவெளியில், மகத்தான, வலுமிக்க ஒரு முயற்சியின் விளைவாகவே உருபெறும் என நாம் நினைக்கின்றோம். இந்த உருபெறும் காலம், பத்தாண்டுக் காலங்களாக அல்ல, மாறாக, நூற்றாண்டுக்காலங்களாக கணக்கிடப்படுகின்றது..
இந்த உலகில் இறைவனின் சாம்ராஜ்யத்தின் வருகையானது, தற்போதைக்கு அற்பமாகத் தோன்றும், ஆனால், காலப்போக்கில் பெரும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படப்போகின்ற செயல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்பதே நமது நம்பிக்கை. தனிமனிதர்கள், தங்களின் மாபெறும் சாதனைகளை, தங்களின் ஆழ்ந்த மனதிருப்தியை, தங்களின் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த அதி ஆழ்ந்த ஞானத்தை, சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வளர்செயற்பாட்டில் தங்களை ஈடுபடித்திக்கொள்வதன் வாயிலாக அடையப்போகின்றனர் என்பதே நமது நம்பிக்கை. இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்திடுமாறு நாம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளோம். ஆரம்பமாக, இதை நமக்குள், நமது இதயங்களில், நமது ஜீவனின் ஆழ்மையத்திற்குள்ளேயே ஸ்தாபிக்கவேண்டும். அடுத்ததாக, உலகந்தழுவிய நிலையில் உள்ள பஹாய் சமூகத்திற்குள் அதை ஸ்தாபிக்கவேண்டும்.
மூன்றாவதாக, இராஜ்யத்தை உருவாக்குவதற்காக உலகின் நாலாமூலைக்களுக்கும் இந்த சமூகம் பரவிச்செல்வதன் வாயிலாக அது ஸ்தாபிக்கப்படப்போகின்றது. இராஜ்யத்தைப் பற்றிய பஹாய் எண்ணத்தின் அசாதாரன அம்சங்களில் அதுவும் ஒன்று. எல்லா தேசங்களையும், இனங்களையும், பின்னனிகளையும் சார்ந்த மக்களின் பெரும் முயற்சி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் வாயிலாக அது சிறுகச் சிறுக உருபெறப்போகின்றது. எனது இரண்டாவது கருத்து என்னவென்றால், இராஜ்யத்தின் உருவாக்கம் குறித்த நமது அறிவு, மனித வரலாற்றில் இதுவரையிலும் நடந்திராத அதிமேன்மையான படைப்புச் செயல் ஒன்றை அது உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும். குழுக் குறிக்கோளைப் பின்தொடருவதில் மனிதர்களின் கூட்டுமுயற்சியில் ஒரு மகத்தான நிலைமாற்றமாகும் இது.
பஹாவுல்லா, உயிர்ப்பொருளியல் சார்ந்த ஒருமங்களை உருவாக்கும்படி விதித்துள்ளார் என்பதே என்னுடைய புரிந்துகொள்ளல் ஆகும். இது, மனித நடவடிக்கை மற்றும் நடத்தைமுறைகளின் வரலாறு இதுவரை கண்டிராத ஓர் அம்சமாகும். இந்த உயிர்ப்பொருளியல் ஒருமங்கள், பஹாய்கள் எனும் முறையில் ஒரே நம்பிக்கையைக் கொண்டுள்ள குழுக்களையும், தனிநபர்களையும் உள்ளடக்கியுள்ளன. ஆனால், இந்த ஒருமங்கள் அவற்றின் தனிக்கூறுகளின் ஆற்றலைக்காட்டிலும் அதி உயர்வான ஆற்றலைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் உள்ளூர் ஆன்மீக சபைகளெனவும், தேசிய ஆன்மீக சபைகளெனவும், நியாய மன்றங்கள் எனவும் அழைக்கின்றோம். அவை, நடைமுறை ரீதியில் உண்மையாகவே மனிதநிலைக்கும் அப்பாற்பட்டவை. அவற்றின் கூறுகளின் ஒன்றுதிரண்ட ஆற்றல்களைக்காட்டிலும் அவை அதி உயர்வான ஆற்றல்களைக் கொண்டுள்ளன. எந்த ஒரு நேரத்திலும், அவற்றின் உறுப்பினர்களாக உள்ளடங்கியிருக்கும் தனிபர்களின் வாழ்க்கையைக் காட்டிலும், அவற்றிற்கு நிலைத்து நிற்கும் ஓர் இருப்பு நிலை உண்டு.
அவை அதி ஆழ்ந்த ஆன்மீக ஆற்றல்களின் வாயிலாக உந்துதல் அளிக்கப்படுகின்றன. அறிந்துள்ளவரை, பெரும்பாலும் ஆற்றல் குறைந்த ஓர் ஆரம்ப நிலையிலிருந்து வலுவும், ஆற்றலும் நிறைந்த ஓர் நிலையை நோக்கி படிப்படியாக வளர்ச்சியடைகின்றன. நம்மைச் சுற்றிலும், செயல்படாத நிலையில் இருக்கும் பல உள்ளூர் ஆன்மீக சபைகளை அடிக்கடி காணுகின்றோம். ஒன்றுகூடுவதற்கு இயலாதவைகளாகவும், மிகவும் அடிப்படையான தீர்மானங்கள் எடுப்பதற்கு இயலாதவைகளாகவும், தங்களின் கலந்தாலோசனை குறித்த கடமைகளின் அடிப்படை அம்சங்களிலேயே பிரச்னைகளை எதிர்நோக்குபவைகளாகவும் இவை இருக்கின்றன. நாம், ஒரளவிற்கு வலுவற்றிருக்கும் இந்த ஸ்தாபனங்களைப் பார்க்கின்றோம். பெரும் அன்புடனும் நம்பிக்கையடனும் நாம் அவற்றை பார்க்கின்றோம். ஏனெனில், இந்த சாதாரன ஆரம்ப நிலைகளிலிருந்துதான், ஆன்மீகப் படிமுறை வளர்செயற்பாட்டின் வழி, பத்தாண்டுக்காலங்கள் மற்றும் நூற்றாண்டுக்காலங்களினூடே, வரலாறு காணாத இந்த மகத்தான உயிர்ப்பொருளியல் ஒருமங்கள் உருவாகின்றன என்பது நமக்குத் தெரியும்.
அவற்றின் தற்போதைய ஆற்றல் குறைந்த நிலையை நாம் கண்டனம் செய்ய கிளம்புவோமானால், தெளிவாகவே ஆற்றல் குறைந்த நிலையில் இருக்கும் பச்சிளம் சிசுக்களையும் நாம் கண்டனம் செய்யவேண்டும். இந்த ஆன்மீக சபைகளின் பராமரிப்பு, அன்பு, மற்றும் மேம்பாட்டில் நாம் ஈடுபட மறுத்தோமானால், அன்றலர்ந்த பச்சிளம் சிசுக்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும், அவற்றை அவற்றின் வழிக்கே விட்டுவிட வேண்டும், கேட்பாரற்று அவை அழிந்து போகவும் விடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்த உள்ளூர், தேசிய உயிர்ப்பொருள் ஒருமங்கள், ஓர் உலகளாவிய உயிர்ப்பொருள் அமைப்பாக ஒன்று சேர்கின்றன. இந்த ஒன்றசேர்க்கை, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில நிறுவப்படுவதற்காக நாம் பயன்படுத்தவிருக்கும் குறைவான வளங்களை செயல்விளைவுகளிக்கும் வகையில் பஹாய் சமூகங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்கின்றது. பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் குறித்த பஹாய் புரிந்துகொள்ளலாக, மூன்றாவது அம்சமாகவும், ஒரு வேளை மனதை பெரிதும் ஈர்ப்பதாகவும் இருக்கக்கூடிய ஒன்று உள்ளது. இராஜ்யத்திற்குள் நிறைவளிக்கும் இருப்புநிலை, வளர்ச்சியாற்றல் கொண்டநிலையே எனவும், இயங்காநிலையி அல்ல எனும் பஹாய் புரிந்துகொள்ளலே அது. இயங்காநிலை, மாற்றமற்றநிலை, மற்றும் உண்மையில் சொகுசுநிலை ஆகியவை சம்பந்தமான உணர்விலேயே சுவர்க்கநிலை மனதுக்குகந்த நிலையென்பது பாரம்பரிய சமயநம்பிக்கையாகும். இதற்கு நேர் எதிர்நிலையில் மேற்கண்ட பஹாய் கருத்து உள்ளது.
தனிமனிதர்களும் சமூகஅமைப்புக்களும் நிறைவு பெறுவதற்கு, தொடர்ந்தாற் போன்ற நிலையிலான மாற்றங்களும், வளர்ச்சியும் அத்யாவசிய தேவைகளாகின்றன என்பது நமது கருத்தாகும். ஏன்? ஏனெனில், மனிதர்கள் படைப்புணர்வு மிக்கவர்கள். பஹாய்கள் எனும் முறையில், இதன் காரணமாகவே படைப்புத்திறன் வெளிப்படும் ஓர் தூண்டுகோலாக நமது சமயம் இருப்பதே நமது குறிக்கோளாகவும், முயற்சியாகவும் இருக்கவேண்டும். அன்றி, பகுத்தறிவுக் கைவிலங்காக அது இருக்கக்கூடாது. அஸ்திவார நம்பிக்கைகளின் மாற்றவியலா தன்மையை இசைவிணக்கமான பயன்படுத்துதலோடு இணைத்திட நாம் முற்படுகின்றோம்.
என்றும் தொடர்ந்து கல்வி கற்கும், என்றும் தொடர்ந்து மேம்பாடு காணும், என்றும் தொடர்ந்து விரிவடையும் ஓர் சமூகத்தை உருவாக்கவே நாம் முயற்சி செய்கின்றோம். அவ்வித சமூகத்தில், பல்வகைப்பட்ட பின்னனிகள், திறன்கள், ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களைக் கொண்ட எல்லா தனிமனிதர்களும் தங்களுடைய ஆழ்ந்த நிறைவுநிலையை அடையமுடியும். ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை என கருதப்படும் அம்சங்களை அறிவுக்கப்பாற்பட்ட உயிர்ப்பொருளியல் ரீதியில் ஒன்றிணைக்க நாம் முயலுகின்றோம். வாழ்க்கையில், தியாகம் சார்ந்த முயற்சிகளுடன் ஒத்துப்போகும் இன்பத்தைத் தேடுவது நியாயமான ஒன்றாக இருக்கக்கூடிய இராஜ்யத்தை அமைக்க நாம் முயற்சி செய்கின்றோம். தன்னிச்சை என்பது இணக்கமான முறையில் கட்டொழுங்குடன் ஒன்றிணையும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம்.
கூட்டு ஸ்தாபனங்களின் அதிகாரத்திற்குக் கீழ்படிவதோடு இசைவிணக்கம் கொள்ளக்கூடிய, தனிமனிதத்தன்மை பராமரிக்கப்படும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம். நம்பிக்கையில் உறுதிப்பாடு என்பது, எதையும் ஆராயும் ஓர் உணர்வுடன் இசைவுகொள்ளக்கூடியதும், வேறுபடும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக்கூடியதுமான ஓர் இராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க முயலுகின்றோம். இராஜ்யத்தை உருவாக்கு வழிவகைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பல விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன. நாளை, தேசிய ஆன்மீக சபை தனது அற்புதமான திட்டத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள விருக்கின்றது. இத்திட்டம், இந்த வளர்செயற்பாட்டில் ஒரு பெரிய அடி எடுத்துவைக்கப்படுவதற்கு இணையாகும். இருந்தபோதிலும், இராஜ்யத்தை உருவாக்கும் விஷயம் குறித்து ஒரிரண்டு கருத்துக்களை முன்வைக்க எனக்கு அனுமதி தாருங்கள்.
ஒரு தூரநோக்கை மேம்படுத்திக்கொள்வதே நமது மிகப் பெரியதும், அதி அடிப்படையானதுமான ஒரு தேவையாக இருக்கின்றது என்பது என் கருத்து. நமக்கு என்ன வேண்டும், எங்கு செல்கின்றோம், மற்றும் அங்கு எவ்விதம் சென்றடையப்போகின்றோம் என்பது குறித்த ஓர் கூர்நோக்கை நாம் நம் மனதில் உருவாக்கிக்கொள்வோம். அடிப்படையில், புனித வாசகங்களில் மூழ்குவதன் வாயிலாகவும், பஹாய் வாழ்வுமுறையின் வாயிலாகவும், அவ்வப்போது நமது ஸ்தாபனங்கள் அமுல்படுத்தும் வெவ்வேறு திட்டங்களின் வாயிலாகவும் இந்தக் கூர்நோக்கை நாம் அடையலாம். இந்தக் கூர்நோக்கை சுலபமாக அடைந்துவிடுவோம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அவ்வப்போது வாசகங்களில் மூழ்குவதால் மட்டும் இந்தக் கூர்நோக்கு ஒரு பரிசாகக் கிடைக்கும் என நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அல்லது, அவ்வப்போது பஹாய் சமூக வாழ்வு முறையில் பங்கெடுப்பது, அமெரிக்க பஹாய் சமூகத்தின் முயல்வுகளான பல்வேறு திட்டங்களில் அவ்வப்போது பங்கெடுப்பது, ஆகியவை மூலமாகவும் கிடைக்கும் என நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். இந்த எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன் வாயிலாக மட்டுமே இக்கூர்நோக்கு நமக்குக் கிடைக்கும்.
இந்த கூர்நோக்கை அடைவதன் வாயிலாக, விலைமதிப்பற்றதும், அபூர்வமானதும், பார்க்கப்போனால், தனிச்சிறப்புடையதுமான ஒன்றை நாம் அடைவோம். ஒரு விசாலநோக்கை அடைவோம். அந்த விசாலநோக்கு, உலகில் இராஜ்யத்தை உருவாக்கிட உதவும் ஆன்மீக, பௌதீக சக்திகள் மற்றும் வளர்செயற்பாடுகள் ஆகியவற்றின் இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு புதிய அறிவு, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய உள்ளம், ஒரு புதிய செவிப்புலன், மற்றும் உறுதியாகவே, ஒரு புதிய குரலையே நாம் பெறுவோம். இறைவனின் திருவிருப்பத்திற்கிணங்க, உலகில் செயல்பட்டும், அதை மாற்றியமைத்தும், நிலைமாற்றம் செய்யவும் கூடிய ஆன்மீக மற்றும் பௌதீக சக்திகளை உள்ளடக்கிய ஒரு கூர்நோக்கு அது. இந்த மேம்படுத்தப்பட்ட பார்வையின் வாயிலாக, ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். பல்வகைப் பரிமானங்களை உள்ளடக்கிய ஒரு சமூகமாக அது இருக்கும். குறிப்பிட்ட இடம் எனும் குறுகிய உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக உணர்வு அது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, வட அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, அமெரிக்க துணைக் கண்டத்தில் உள்ள பஹாய்களோடோ மட்டும் கொண்ட ஒற்றுமை மற்றும் ஐக்கிய உணர்வல்ல. மாறாக, உலகம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு உணர்வாக அது இருக்கும்.
ஒரே உண்மையான, அறிவிற்கப்பாற்பட்ட பல்வகைத் தன்மை, புலனுக்கோ, கணிப்பிற்கோ அப்பாற்பட்ட அன்பெனும் பந்தங்களால் ஐக்கியப்படுத்தப்பட்ட குடும்பம் எனும் உணர்வை இன்று, இங்கு இந்த கூட்டத்தில் நாம் உணர்வது போலவே நாம் உணர்வோம். காலப்பரிமானத்தைத் தாண்டிய ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். நமக்கு முன் சென்றவர்களோடும் நாம் ஒரு சமூக உணர்வைப் பெறுவோம். ஈரான் நாட்டின் ஆரம்ப பஹாய்கள் மற்றும் உதயத்தைத் தோற்றுவித்தவர்களின் உற்சாக உணர்வில் நாமும் பெங்குபெறுவோம். இந்த வீர ஆன்மாக்களோடு ஒரு சமூக உணர்வை நாம் பெறுவோம். நாம் உற்சாகம் அடைவோம். அமெரிக்க பஹாய்கள், ஈரானிய பஹாய்களின் ஆன்மீக சந்ததியினராக தங்களை கருதிக்கொள்கின்றனர், எனும் ஷோகி எபெஃண்டி அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். அதற்கும் அப்பால் நமது சமூக உணர்வு, வானவெளியை மட்டும் தொடுவதாக இருக்காது, கடந்தகாலங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்காது, ஆனால், இனி வரப்போவோருடனும் நாம் தொடர்புகொள்வோம்.
வருங்காலத்தில் வரப்போகிறவர்கள், கால ஓட்டத்தில் தங்கள் உலகவாழ்வை நோக்கி வந்துகொண்டிப்பவர்கள், வருங்காலத்திலிருந்து நம்மை நோக்கி அனிவகுத்துவருபவர்கள், தங்கள் கைகளில் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றவர்கள், இந்த காரியங்களில் நமக்கு உதவிசெய்ய போகின்றவர்கள், வரப்போகும பத்தாண்டுகளிலும், நூற்றாண்டுகளிலும் தாங்கள் அனுபவிக்கப்போகும் ஐக்கியத்திற்கும் சுபிட்சத்திற்குமான அஸ்திவாரமாக நமது தற்போதைய முயற்சிகளை காணப்போகின்றவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்வோம்.
இந்த தூரநோக்கின் மூலமும், இந்த சமூக ரீதியிலான உணர்வின் மூலமும், இன்னமும் பிறந்திடாத வருக்கால சந்ததியினரின் நல்வாழ்வு குறித்து நாம் எந்த அளவிற்கு பொறுப்பேற்றுள்ளோம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இராஜ்யத்தை உருவாக்கும் இந்த நேரத்தில், மனதில் வீர உணர்வுகளை மறுமலர்வு பெறச் செய்வதே இப்போதைய தேவையாகும்.
சுகவாழ்வை நாடும், பேராசையும் தன்னலமும் மிகுந்த, அவநம்பிக்கை மிக்க ஒரு காலத்தில் நாம் வாழுகின்றோம். இங்கு, இன்று கூடியுள்ள நாம், அமெரிக்க வாழ்வுக்கும், ஈரானிய பஹாய் சமூகத்தின் வாழ்வுக்கும், மேற்கு நாடுகளின் வாழ்வுக்கும் கடந்த காலங்களில் மையமாக விளங்கிய அந்த அம்சங்களை மறுஉயிர் பெறச் செய்திட ஆணையிடப்பட்டுள்ளோம். வீர உணர்வு பெற ஆணையிடப்பட்டுள்ளோம். மேன்மை மிகு குறிக்கோள்களின்பால் நாம் நம்மை அர்ப்பணம் செய்திட வேண்டும். மனித இயல்பின் சிறப்பு அம்சங்களை மறு உயிர்பெறச் செய்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தியாகம் செய்ய தூண்டும், மனிதர்களின் அதிய உயர்ந்த நாட்டங்களாக மேன்மையான நோக்கங்களை உள்ளடக்கியிருக்கும் மனிதர்களின் அந்த சிறப்பம்சங்களை, நாம் மறு உயிர்பெறச் செய்திட வேண்டும்.
இன்று நிலவக்கூடிய அந்த இன்னல்களுக்கு எதிராக விடாமுயற்சியை நமது உள்ளங்களில் மறுஉயிர்பெறச் செய்திட நாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். இந்த இன்னல்கள், இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நமது முயற்சியின்போது வருங்காலங்களிலும் கண்டிப்பாக எழவே செய்யும். வீரம், அர்ப்பண உணர்வு, மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்கள், தனிமனித ஆன்மீக ம்ேமாடுக்கும், நமக்குள்ளேயே இராஜ்யத்தை அமைத்துக்கொள்வதற்கும் மிகவும் இன்றியமையாதவை. இது சுலபமாக நிறைவேறப் போவதில்லை. இது விரைவாகவும் நடக்கப்போவதில்லை. அவ்வப்போது நிகழும் நடவடிக்கைகளின் மூலமாகவும் அது நடந்தேறப்போவதில்லை. நமக்குள், இராஜ்யத்தின் ஆன்மீக பண்புகளை அடைவதற்கு, தேவையான சீரான, தொடர்ந்தாற்போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
இவ்வழியில், மேம்பட்ட ஓர் அர்ப்பண உணர்வை நாம் பெறுவோம். நம்முடைய சமயத்தின் அஸ்திவாரமாக விளங்கும் ஆன்மீக நடைமுறைகளின்பால் ஒரு புதிய விழிப்புணர்வைப் பெறுவோம். அதோடு, பிரார்த்தனை நடவடிக்கைகள், தியானம், நோன்பு நோற்பது, நல்லியல்புகளை உருவாக்கிக்கொள்வது ஆகியவற்றின்பாலும் ஒரு புதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திக்கொள்வோம். வீரம், அர்ப்பணம், மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்களை பஹாய் நிர்வாக முறையில் ஊக்கத்துடன் ஈடுபடுத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்படப்போகின்றோம். அதன் வாயிலாக கூட்டு மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் குறித்த புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டும், அவை ஸ்தாபன நிலையை அடையவும் கூடும். அதன் வாயிலாக, பஹாய் சமூகத்தின் தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டை மேம்படுத்துவதன் குறிக்கோளை நிர்வாகமுறை சாதிக்கவும் கூடும்.
நான் மேற்கொண்டு ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் முக்கியமானது. மனித வரலாறு தோல்வியடைந்த முயற்சிகளையும், நிறைவேறாத மேன்மையான குறிக்கோள்ககளையும், மண்ணாகிப்போன ஆவல்களையும், உருபெறாத உற்சாகமூட்டும் திட்டங்களையும் கொண்ட ஒரு குறிப்பேடாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக, மேன்மையான குறிக்கோள்கள் ஆகாயக்கோட்டைகள் என விமர்சிக்கப்பட்டுள்ளன என்பதை வரலாறு காண்பிக்கின்றது. அற்புதங்கள் நிறைந்த நாட்கள், அமைதி நிறைந்த நாட்கள், இணக்கம் நிறைந்த நாட்கள் ஆகியவவை குறித்து மனிதர்கள் ஏங்கியுள்ளனர். இந்த மேன்மை மிக்க குறிக்கோள்களை நோக்கிய முயற்சியில் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பனித்து தோல்வியடைந்துள்ளனர்.
தற்போதைய மனிதவரலாற்றில், நனவாகாத கனவுகளின் குறிப்புகள் நிறைய உள்ளன. நிரந்தரமான நிலையில் ஓர் புதிய உலகை ஸ்தாபிக்கும் மனித முயற்சிகள் ஏன் சதா தோல்வியடைந்துள்ளன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன என்பது அவர்களின் முடிவாகும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல்; லௌகீகம்; பொருளாசை மிகுந்திருத்தல்; அகங்காரம் ஆகியவை. வெளியே உள்ள கெட்ட எண்ணம் கொண்ட எதிர்வாதிகளின் வேற்றுமை வளர்க்கும் போக்கு. சமூகத்தினுள் கடுமையான போட்டிக் குழுக்களாக பிரிந்து போகுதல். இவை யாவும், பல நூற்றாண்டுகளான, ஆயிரமாண்டுகளான, மனுக்குலம் முயற்சித்து வந்த மேன்மையான குறிக்கோள்கள் மற்றும் உயர்ந்த எண்ணங்களின் தோல்வியின் குறிப்புகளின் ஒரு பகுதியாகும்.
பஹாய் கண்ணோட்டம் யாதெனில், இந்த யுகத்தில், வரலாறு இனி மீண்டும் திரும்பப்போவதில்லை என்பதாகும். உணர்வு ரீதியில் இந்த விஷயம் குறித்து வாதிடுவது வீன் வேலையாகும். நமது நோக்கங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் குறிக்கோள்களை விட தூய்மையானவை என நாம் கோர முடியுமா? அல்லது, மனித நிலையை மேம்படுத்திட ஏங்கிய கடந்தகால மனிதர்களின் பண்புக்கூறுகளைவிட நமது பண்புக்கூறுகள் மேன்மையானவை என நாம் கூறிட முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை. வரலாறு இனி திரும்பாது எனும் நமது கண்ணோட்டம், முன்பு மனித, சமய அல்லது சமூக வரலாற்றில் காணப்படாததும், இக்காலத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததுமான ஒரு புதிய அம்சம் உள்ளது என்பதை அடிக்கோலிடுகிறது. இந்த அம்சம், பல ஆயிரம் நூற்றாண்டுகளான வரலாற்று வடிவங்களை தலைகுப்புற வீழ்த்தக் கூடியதாகும்.
அந்த சிறப்பு மிகுந்த வலிமை வாய்ந்த புதிய அம்சம் மட்டும் இல்லையனில், கடந்தகாலத்தில் மனுக்குலத்தை பீடித்த அதே தோல்வியை நாமும் அடைவது தின்னம். நமது வாதங்கள் யாவும் இந்த ஒரு விஷயத்தையே முற்றாக சார்ந்துள்ளன. பஹாய் ஒப்பந்தம் என நாம் அழைக்கும் அந்த ஒன்றே இந்த தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். அஃது இல்லையெனில் நாம் வெற்றியை அடைய முடியாது. பஹாய் ஒப்பந்தத்தினால் நமது வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பஹாய் ஒப்பந்தம் எனும் சிறப்பினால் அஃது அதிகாரம் சார்ந்த ஒற்றுமையை வழங்குகிறது. அஃது ஒன்றிணைவை வழங்குகிறது. நமது போதனைகளின் பிரிவுபடாமயை அஃது உறுதிபடுத்துகிறது. வளரும், விரிவடையும் மற்றும் மேம்பாடு காணும் பஹாய் சமூகத்தின் வளைந்துகொடுக்கும் தன்மையை மற்றும் ஆக்கமிக்கமையை பராமரிக்கும் உத்தரவாதத்தையுைம் அது வழங்குகிறது.
அகங்காரம் நோக்கிய நமது உள்ளார்ந்த நடத்தையை ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது. தனிநபர்களின் கட்டுப்படுத்தப்படாத தனியாத நடவடிக்கைகளினால் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய நிரந்தர பாதிப்புக்களிலிருந்து தற்காப்பு தரும் வஜ்ரம் போன்ற வழிவகைகளை ஒப்பந்தம் பெற்றுள்ளது. தனிநபர்கள் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் எனும் நினைப்பால் மனுக்குலத்தின் ஐக்கியத்தை தகர்ப்பதிலிருந்து அது நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. தலைமைத்துவம், சக்தி, மற்றும் அதிகாரத்திற்கான பேராசையினால் விளையும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. இந்த வெளிப்பாட்டில் பரிசுகளிலெல்லாம் சிறந்த பரிசை ஒப்பந்தம் நமக்கு வழங்கியுள்ளது. ஒப்பந்தம் நமக்கு நிர்வாக முறையை வழங்கியுள்ளது. மக்கள், அது தரவல்ல சமநிலை, புதிரான விஷயங்கள், வழங்கக்கடிய ஆன்மீக வெகுமதிகள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைவார்களாக. கூட்டு அதிகாரம் கொண்ட தேர்வு செய்யப்பட்ட அமைப்புக்கள்; உற்சாகமளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், தூண்டுதலளிக்கவும், பாதுகாப்பு தரவும், விவேகமும் அன்பும் கூடிய தனிநபர்கள். அன்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் பொதுவான குறிக்கோள்களுடன் அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர்.
நான் குறிப்பிடும் விஷயம், என்னுடை இறுதி குறிப்பு, இதுவே: பூமியின் மீது இறைவனின் சாம்ராஜ்யம் உருவாகுவதற்காக உழைத்திட உறுதியெடுத்திட நாம், இன்று, இங்கு கூடியிருந்தோமானால், இதுவே நமது வாழ்க்கையில் மையக் குறிக்கோள் என முடிவெடுத்தோமானால், நமது அதிஉயரிய குறிக்கோள்கள் மற்றும் முயற்சிகள், இந்த வழியிலேயே பூரணமான நிறைவேற்றத்தைக் காணப்போகின்றன என முடிவெடுத்தோமானால், ஒப்பந்தத்திலிருந்து உதித்துள்ள நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு நமது முழு ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய படைப்பினை இறுதி அழிவிலிருந்து இந்த ஒரே வழியினால் மட்டுமே நாம் பாதுகாக்க முடியும். உணர்ச்சிகளைத் தூண்டும் கோரிக்கைகள் மூலமாக அவை பாதுகாக்கப்பட போவதில்லை. அல்லது, அதி உயரிய நமது நோக்கங்கள் குறித்து உரக்க பிரகடணப்படுத்துவதன் வாயிலாகவும் அது பாதுகாக்கப்பட போவதில்லை. நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு ஆதரவு நல்கிடுவதற்காக நாம் அளிக்கும் நமது முழு ஈடுபாட்டின் வாயிலாகவே அது அழிவிலிருந்த பாதுகாக்கப்படுகின்றது. இதுவே நமது அரண். இதுவே நமது முன் நோக்கிய வழி. இதுவே முன்னேற்றத்திற்கான பாதை. நமது தனிச்சிறப்புடைய குறிக்கோள்களையும், நமது அவாக்களையும், நமது ஆவல்களையும் நமது இலட்சியங்களையும் இந்த ஒரு வழியின் வாயிலாகவே நாம் அடையமுடியும்.