மைய நடவடிக்கைகள் எதற்காக


மைய நடவடிக்கைகள்

உலகம் முழுவதும் உள்ள பஹாய் சமூகங்களில் இன்று நடைபெறும் நடவடிக்கைகளில் மைய நடவடிக்கைகளாக பயிற்சி வட்டங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், இளைய இளைஞர் ஒன்றுகூடல்கள் மற்றும் குழந்தைகள் வகுப்புகள் உள்ளன. இந்த நான்கும் அடிப்படை நடவடிக்கைகளாக விளங்குகின்றன. இந்த நடவடிக்கைளுக்கான அடிப்படை நோக்கம் என்ன?

பெரும்பாலான பஹாய்கள் சமய வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் என நினைக்கின்றனர். ஆனால், பஹாய்களின் அனைத்துலக ஆலோசகரான டாக்டர் முஹாஜர் அவர்கள் (இப்போது உலக நீதிமன்ற உறுப்பினர்) இந்த நடவடிக்கைகளுக்கான நோக்கம் சமுதாயத்திற்கு சேவை செய்வதும் “எழுத்தில் வடிக்கபட்டவற்றை மெய்ப்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதாகும்,” என வலியுறுத்தினார். அதாவது, உலக சீர்திருத்தத்திற்கு சேவை செய்வது.

நம்மில் பலர் ரூஹி பயிற்சியாளர்களாக இருக்கின்றோம். நம்மில் எத்தனை பேர் நாம் செயல்படுத்தும் இந்த மையநடவடிக்கைகளை, தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகம், ஒரு புதிய மனித இனத்தை உருவாக்குவது, சமுதாய சீர்திருத்தத்திற்கான வழி என காண்கிறோம்? பெரும்பாலும் மைய நடவடிக்கைகள் பஹாய் சமயத்தைப் போதனை செய்வது மற்றும் பஹாய் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது என்பதே நம்மில் பலரின் கருத்தாகும். ஆனால், நமது மைய நடவடிக்கைகளின் நோக்கமே சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான நமது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வதாகும். அதன் மூலமாக இந்த நடவடிக்கைகள் சமூகங்கங்களை உருவாக்குதலன்றி வெறும் சமய போதனை மட்டுமே சார்ந்தவையன்று.

டாக்டர் முஹாஜர் அவர்கள் 1 – 7 வரையிலான ரூறி பயிற்சி நூல்களை சமுதாயத்தின் கண்களைக் கொண்டு பார்க்குமாறு கூறுகிறார். அவ்வாறு செய்து அந்தப் பயிற்சி நூல்களில் பதிந்துள்ள கருத்துக்கள் வெறும் சமய விரிவாக்கம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு என்றில்லாமல் அவை எவ்வாறு சமுதாய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்பது குறித்து ஆழச்சிந்திக்கச் சொல்கிறார். உதாரணமாக, ரூஹி முதல் நூலின் முதல் வாசகக்குறிப்பு தூய்மையான நற்செயல்களின் மூலம் உலக சீர்திருத்தம் ஏற்படக்கூடுதல் பற்றி விவரிக்கின்றது. அப்துல்-பஹாவின் போதனையான “உங்கள் பாதையில் குறுக்கிடும் அனைவருக்கும் உங்கள் உள்ளங்கள் அன்பெனும் தீயினைக் கொண்டு எரியட்டும்” என்பது சகல தப்பெண்ணங்களையும் அகற்றக்கூடும் என்பது பற்றி சிந்தித்திருப்பீர்களா? நாம் மேலும் மேலும் வாய்மையோடு வாழ முயல்வது நமது ஆன்மீக வளர்ச்சி மட்டுமின்றி மேலும் நல்ல சமுதாயம் ஒன்று உருபெறுவதே நோக்கம் என்பது குறித்து நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்கின்றோமா? ஆதலால், நமது மைய நடவடிக்கைகளில் பங்கெடுப்போர்களுள் சமுதாய தன்மைமாற்றம் மற்றும் சுயதன்மைமாற்றத்திற்கான ஓர் அகக்காட்சி வழங்கப்படுவது அவசியம் என்பது தெளிவு.

சரி இப்போது யாராவது நீங்கள் எதற்காக இந்த ரூஹி பயிற்சிக்கு என்னை அழைக்கிறீர்கள் என கேட்டால், அதன் வாயிலாக என்னை பஹாய் ஆக்கிடுவது உங்கள் நோக்கமா என கேட்டால், அதற்கு நாம் வெகு தைரியாமாக ‘இல்லை’ எனக் கூறி இந்த மைய நடவடிக்கைகளின் நோக்கம் சமுதாயத்தின் தன்மைமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதே நோக்கம் என கூறிடலாம்.