பஹாய் சமயத்தின் வளர்ச்சி


சமயத்தின் வளர்ச்சி

கடந்த பல வருடங்களாக வளர்ச்சி, முறைப்பாட்டுடனான வளர்ச்சி எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி செவியுறுகின்றோம். அவை பயிற்சி முறையோடு ஒன்றிணைத்துப் பேசப்படுகின்றன. சமயம் தோன்றியதிலிருந்து அதன் வளர்ச்சியென்பது இயல்பான ஒன்று எனவே நாம் அணைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். நாம் விரும்புகின்றோமோ இல்லையோ சமயம் அதன் போக்கில் வளரவே செய்யும் என்றும் நமக்குக் கூறப்பட்டுள்ளது. அவருடைய சமயப் பணிக்கு நாம் நம்மை அர்ப்பணிக்கவில்லையெனில், அவர் சுள்ளிகளையும் கற்களையும் கொண்டு தமது காரியத்தை நிறைவேற்றுவார் எனவும் பஹாவுல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆக, சமயத்தின் வளர்ச்சியென்பது நிச்சயமான ஒன்று என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அஃது எவ்வளவு விரைவில் அடையப்படக்கூடும் என்பதே கேள்வி. தம்முடைய வார்த்தைகளுக்குப் பஹாய்கள் செவி சாய்த்திருப்பார்களேயானால், தம்முடைய காலத்திலேயே உலகம் பெரும்பாலும் தமது சமயத்தைச் சார்ந்திருக்கும் என பஹாவுல்லா ஒரு மிகவும் ஆர்வமூட்டும் விஷயத்தை இன்னமும் மொழிமாற்றம் செய்யப்படாத ஒரு நிருபத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அது கூறப்பட்டு இப்போது நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ப‎ஹாவுல்லாவின் காலத்திலேயே சமயம் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை. அதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. ஒரே காரணம்தான் இருக்க முடியும். பஹாய்கள் தங்கள் வாழ்க்கைகளில் பஹாவுல்லா கூறியவற்றை தக்க முறையில் செம்மையாகக் கடைப்பிடிக்கவில்லை என்பதே ஆகும்.
சமயம் தோன்றியதிலிருந்து அது சமயத்தின் எதிர்ப்புச் சக்திகளால் பெரும் சோதனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துள்ளது. ஆயிரக்கணக்கில் நம்பிக்கையாளர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் சமயத்தை அழிக்கும் நோக்கோடு செயல்படுத்தப்பட்ட இத்தகைய செயல்கள் குறித்து ப‎ஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

இச்சமயப் பணிக்காலத்தில் பேரழிவு, சூரையாடல், நாடுகடத்தல் போன்ற செயல்களின் மூலமாக தெய்வீக சக்தி எனும் கரம் ஏற்றிவைத்துள்ள விளக்கை அனைத்திடவோ என்றும் நிலையான பிறங்கொளியெனும் பகல் நட்சத்திரத்தை மறைத்திடவோ முடியும் என மதிப்பற்றவர்களும் மூடர்களும் களிப்புடன் கற்பனை செய்வதைப் பாருங்கள். இந்த விளக்கின் தீயைத் தூண்டிவிடும் எண்ணெயாக அவ்வித கஷ்டமே உள்ளதெனும் உண்மை குறித்து அவர்கள்தாம் எவ்வளவு உணர்வற்றவர்களாக உள்ளனர்.
-பொறுக்குமணிகள், பக். 72-

ஆனால், சமயத்திற்கு உண்மையிலேயே கேடு விளைவிக்கக்கூடியவர்கள் தமது நாமத்தைத் தாங்கிக்கொண்டிருப்பவர்களே என்பதை ப‎ஹாவுல்லாவின் பின்வரும் வாசகத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது:

எமது சிறைவாசமோ யான் அனுபவிக்கும் கொடுமைகளோ, அல்லது எமது கொடுமைக்காரர்களின் கைகளினால் எமக்கு நேர்ந்துள்ளவற்றாலும் எமக்குத் தீங்கு நேரவில்லை. எமக்குத் தீங்கிழைக்கக்கூடியவை, எமது நாமத்தைத் தாங்கியிருந்த போதிலும், எமது உள்ளத்தையும், எழுதுகோலையும் புலம்பச் செய்யக்கூடியவற்றை இழைப்பவர்களின் நடத்தையே ஆகும்.
-ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்-

சமயத்தின் வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தைத் துரிதப்படுத்த நம்மால் முடியும். இது நமக்கருளப்பட்டுள்ள ஒரு கருணையாகும். அதே வேளை அதன் வேகத்தை நாம் அறிந்தோ அறியாமலோ குறைக்கவும் முடியும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் நம்மை ஆளாக்கிக்கொள்ளவும் முடியும். சமய வளர்ச்சியை நாம் எந்தெந்த வழிகளில் தடுக்கின்றோம் என்பதை இப்போது பார்ப்போம். ஒன்று, பஹாவுல்லா கூறியுள்ளது போல், அவரது நாட்களில் அவருடைய சொற்படி பஹாய்கள் வாழ்ந்திருந்தார்களேயானால் பெரும்பாலன உலகமே அவரது சமயத்தை ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் அப்போது வாழ்ந்த பல பஹாய்களின் செய்கைகள் அவ்வாறு நடக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பஹாவுல்லா கூறியபடி எதை பஹாய்கள் செய்ய தவறிவிட்டனர்? சமயத்தின் வளர்ச்சிக்கும், அதன் கௌரவத்திற்கும் பெரும் பாதகம் விளைவித்த சில நம்பிக்கையாளர்களின் செயல்களை இப்போது பார்ப்போம்.
முதலாவதாக, பாப் அவர்கள் இறந்தவுடன் அவரது சிஷ்யர்களில் மூவர் மூளை குழம்பிய நிலையில் செய்த காரியத்தைப் பார்ப்போம். அந்த மூவரும் பாப் அவர்களின் இறப்புக்கு அந் நாட்டு அரசனான நாசிருத்தீன் ஷாவே காரணம் என ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். ஆகவே, அந்த அரசனை அவர்கள் பழிவாங்க நினைத்தனர். பஹாவுல்லாவுக்கு அது தெரிய வந்த போது அவர் அக் கொடிய செயலை கைவிடுமாறு அவர்களுக்குக் கூறினார். ஆனால் அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதன் பின்விளைவாக நடந்த அசம்பாவிதங்களும் நமக்குத் தெரியும். ஆயிரக்கணக்கில் பாப்’இக்கள் மடிய நேர்ந்தது. பாப்’இ சமயத்தின் பெயருக்குப் பெரும் களங்கமும் ஏற்பட்டது. பஹாவுல்லாவே அச்செயலுக்குப் பொறுப்பாளி என குற்றஞ்சாற்றப்பட்டு சிய்யாச் சால் எனும் கருங்குழிக்குள் நான்கு மாதம் அடைக்கவும் பட்டார். அதோடு மட்டுமா நின்றது, அவர் பாரசீகத்தின் மண்ணைவிட்டு இனி என்றுமே திரும்பமுடியாத ஒரு தேசப்பிரஷ்டத்திற்கும் உள்ளானார்.
அடுத்து பாக்தாத் நகருக்கு அவர் சென்று சேர்ந்த போது, அதுவரை யாரும் அறியா வண்ணம் ஒரு அராபியன் போலவும், ஒரு வியாபாரியைப் போலவும், பெண்களின் உடையில் மறைந்தும் வாழ்ந்து வந்த பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா யா‎ஹ்யா பஹாவுல்லாவை வந்தடைந்தான். அவனால் பஹாவுல்லாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவன் பாப்’இக்கள் சமூகத்தில் ஏற்படுத்திய குழப்பங்களினால் ‎பஹாவுல்லா இரண்டு வருட காலங்கள் சுலைமானிய்யா காடுகளில் அஞ்ஞாத வாசம் புரிந்தார். பிறகு அப்து’ல்-ப‎ஹாவின் வேண்டுகோளுக்கு இணங்கள் அவர் பாக்தாத் திரும்பிய போது பாப்’இ சமூகம் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருந்து. அதன் பிறகு பஹாவுல்லாவின் முயற்சியினால் பாப்’இ சமயம் மறுமலர்வு கண்டது. இந்த மிர்சா யா‎ஹ்யாவை பாரசீகம் திரும்பிச் செல்லும்படியும், அங்கு பாப் அவர்களின் சமயத்தைப் போதிக்கும்படியும் பஹாவுல்லா உபதேசித்திருந்தார். ஆனால் அவன் கேட்கவில்லை, மாறாக சமயத்தினுள் பெரும் குழப்பங்கள் விளையக் காரணமாக இருந்தான்.

அத்தோடு நின்றார்களா. இஸ்தான்புல்லில் பஹாவுல்லாவுக்கு மறுபடியும் ஒரு நாடுகடத்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அவர் அதற்குத் தலைவணங்க முடியாது என கூறிவிட்டார். என்ன குற்றம் செய்தோம் எதற்காக இந்த தண்டனை என அவர் அதிகாரிகளைக் கேள்வி கேட்டார். உயிர்த்தியாகம் செய்யவும் அவர் தயாராக இருந்தார். அப்படி ஏதாவது நேருமானால் சமயத்திற்குப் பெரும் பிரகடனம் வந்து சேரும் எனவும் அவர் கூறினார். ஆனால் நடந்தது என்ன? மிர்சா யா‎ஹ்யாவும் அவனுடைய சகாக்களும் பஹாவுல்லாவிடம் சென்று ஊளையிட்டனர். எங்கள் குடும்பங்கள் என்னவாவது, அதிகாரிகள் எல்லாரையும் கொடுமைப்படுத்துவார்களே என்றெல்லாம் அழுது முரண்டுபிடித்தனர். அதன் பயனாக பஹாவுல்லா தேசப்பிரஷ்ட ஆணைக்கு மறுபடியும் தலைவணங்கினார். பல முறை பஹாவுல்லா, மிர்சா யாஹ்யாவை பாரசீகம் திரும்பிச் சென்ற பாப்’இ சமயத்தை போதி என அறிவுரை வழங்கினார். ஆனால், மிர்சா யா‎ஹ்யா அவ்விதம் செய்ய மறுத்துவிட்டான். மறுத்ததோடு அல்லாமல் அவனது செயல்களால் சமயத்திற்குப் பெரும் தீங்கும் விளைந்தது. அவனது நடத்தையால் சமயத்தின் நல்ல பெயருக்கு பங்கம் விளைந்தது. ஏட்ரியாநோப்பிலில் மிர்சா யா‎ஹ்யா பல பிரச்சினைகளை உருவாக்கினான். அதில் ஒன்று அவன் பஹாவுல்லாவுக்கு எதிராக தானும் ஓர் இறைத்தூதன் எனப் பிரகடனப்படுத்தினான். அதன் விளைவாக ‘அதிபெரும் பிரிவு’ என ப‎ஹாவுல்லாவால் வருணிக்கப்பட்ட பிரிவு ப‎ஹாவல்லாவுக்கும், மிர்சா யாஹ்யாவுக்கும் இடையே ஏற்பட்டது. ஏட்ரியாநோப்பிலில் பல அரசியல் பிரமுகர்கள் வசித்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் சமயத்தின் நற்பெயருக்கு இந்த நிகழ்ச்சியினால் பெரும் களங்கம் நேர்ந்தது. இறுதியில் அந்த மிர்சா யா‎ஹ்யாவின் செயல்களால் பஹாவுல்லா மறுபடியும் ஒரு தேசப்பிரஷ்டத்திகுள்ளானார். இம்முறை அவர் ஆக்கா சிறைச்சாலை செல்ல நேரிட்டது. ஆனால், அதே வேளை மிர்சா யா‎ஹ்யா தான் விரித்த வலையில் தானே வீழ்ந்தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் சைப்ரஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கேயே அவன் கடைசி வரை விளைவுகளற்ற வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போனான்.

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி ஆக்கா நகரிலும் நடந்தது. சமய எதிரிகள் ஏற்படுத்திய பல தொல்லைகளினால் மாதக் கணக்கில் பிரயாணம் செய்தும் தங்கள் பிரபுவான ப‎‎ஹாவுல்லாவைக் காண வருவோர் அவரைக் காண இயலாது திரும்பிச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் பொறுமையிழந்த சில ப‎ஹாய்கள் அந்தச் சமய எதிரிகளைக் கொல்ல முடிவெடுத்தனர். இதையறிந்த பஹாவுல்லா அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என ஆணையிட்டார். ஆனால் பல காலம் அனுபவித்த கொடுமைகளினால் ஆத்திரமடைந்திருந்த அந்த பஹாய்கள் அவருடைய சொற்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து குறிப்பிட்ட அந்தச் சமய எதிரிகளைக் கொன்று சமயத்திற்கு அதனால் பெரும் களங்கத்தை ஏற்படுத்தினர். அதன் விளைவாக பஹாவுல்லா கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு மூன்று நாட்கள் அங்கேயே தடுத்து வைக்கவும் பட்டார். அதன் பயனாகத்தான் ப‎ஹாவுல்லா பின்வரும் வேதனைமிக்க வார்த்தைகளை வெளியிட்டார்:

எமது சிறைவாசமோ யான் அனுபவிக்கும் கொடுமைகளோ, அல்லது எமது கொடுமைக்காரர்களின் கைகளினால் எமக்கு நேர்ந்துள்ளவற்றாலும் எமக்குத் தீங்கு நேரவில்லை. எமக்குத் தீங்கிழைக்கக்கூடியவை, எமது நாமத்தைத் தாங்கியிருந்த போதிலும், எமது உள்ளத்தையும், எழுதுகோலையும் புலம்பச் செய்யக்கூடியவற்றை இழைப்பவர்களின் நடத்தையே ஆகும்.
-ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்-

அப்து’ல்-பஹாவின்வாழ்க்கையைக் கண்ணுறும் போதும் இதே போன்ற பல நிகழ்ச்சிகளே நிறைந்துள்ளன. இம்முறை அவருடைய ஒன்றுவிட்ட தம்பியே அச்செயல்களுக்குப் பெரும் காரணமாக விளங்கினான். ப‎ஹாவுல்லாவுக்குப் பிறகு அப்து’ல்-ப‎ஹாவே தலைமையேற்க வேண்டும் என்பதை பஹாவுல்லாவின் உயிலும் சாசனத்திலுமிருந்து அனைவரும் அறிந்திருந்தனர். மாஸ்டர் அவர்களின் ஒன்றுவிட்ட தம்பியும் அதை ஒப்புக்கொண்டான். ஆனால், உலகம் முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான நம்பிக்கையாளர்களின் மரியாதைக்குரிய ஒரு பதவியில் தான் இல்லையே எனும் எண்ணம் அவனை வாட்டி வதைத்தது. பொறாமை உணர்ச்சி கொழுந்துவிட்ட எரிந்தது. மிர்சா முகம்மது அலி எனப்படும் அந்த ஒன்று விட்ட தம்பி அதுமுதல் கீழறுப்பு வேலைகளில் இறங்கினான். அப்து’ல்-ப‎ஹாவைப் பற்றி அரசாங்கத்திடம் பல அவதூறுகளைக் கிளப்பினான். இதன் விளைவாக அப்து’ல்-பஹா கைது செய்யப்பட்டு ஆப்பிரிக்க நாடு ஏதோ ஒன்றுக்கு தேசப்பிரஷ்டம் செய்யப்படப்போவதாகவும் வதந்திகள் நிலவின. ஆனால் இறைவன் அருளால் அந்த நிலை மாறி மாஸ்டர் அவர்களைக் கவிழ்க்க ஏற்பட்ட சதி ஒட்டமான் அரசாங்கமே கவிழும் நிலை ஏற்பட்டதன் வாயிலாக தவிர்க்கப்பட்டது.
அப்துல் ப‎ஹாவின் இந்தத் தம்பி தான் இறக்கும் வரை இதே போன்ற பல சதி வேலைகளில் ஈடுபட்டான். இறுதியில் அவனுடைய நாச வேலைகள் எதுவுமே பலனளிக்காமல், இறந்தும் போனான். அவன் ப‎ஹாய் சடங்குகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய சடங்குகளுடனேயே இறுதியில் அடக்கம் செய்யப்பட்டான்.

பாதுகாவலர் காலத்திலாவது இவ்வித எதிர்ப்புகள் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அனுபவித்த கொடுமைகள் அவரை பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கின. பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் அப்து’ல்-ப‎ஹாவுக்குப் பிறகு சமயத்தை அவருடைய ஒன்றுவிட்ட தம்பியாகிய மிர்சா முகமது அலியே வழிநடத்தவேண்டுமென விதித்துள்ளார். ஆனால், அந்த ஸ்தானம் ஒரு சில விதிமுறைகளுடன் இணைந்து வருவதை நாம் காணலாம். அதில் ஒன்று ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பது. மிர்சா முகமது அலி இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில் தவறிவிட்டான். மாஸ்டர் அவர்களை எதிர்த்ததன் வாயிலாக அவன் இந்த ஸ்தானத்தை இழந்துவிட்டான். ஆனால், மாஸ்டர் அவர்கள் மறைந்த போது மிர்சா முகமது அலி பாலஸ்தீன தினசரிகளிலெல்லாம், தானே அப்துல் ப‎ஹாவின் வாரிசென பிரசுரம் செய்யப்பட ஏற்பாடு செய்தான். அதுவும் அப்துல் ப‎ஹா தமக்குப் பிறகு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டியை நியமித்துள்ளார் என்பதைத் தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்தான். அதோடு, ப‎ஹாவுல்லாவின் சொத்துக்களில் தமக்கும் பங்குண்டு எனவும் அவன் இஸ்லாமிய சட்டத்தைக் குறிப்பிட்டு நீதி மன்றத்தில் முறையிட்டான். இவ்வித செய்கைகள் சமயத்தின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தின. அன்றை ஆட்சியாளர்களாகிய பிரிட்டிஷார் முன்னிலையில் பெரும் தலைகுனிவிற்கும் இது வழிவகுத்தது.

இவ்விதமான போக்குகள் பாதுகாவலரின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன. ஒப்பந்தத்தை மீறுதல் எனும் இந்த வியாதி அப்துல் ப‎ஹாவின் குடும்பத்தினரிடையிலும் காட்டுத் தீபோல் பரவி இறுதியில் பாதுகாவலரைத் தவிர வேறு எவருமே சமயத்தில் இல்லாது போயினர். அவர்கள் அனைவரும் மாஸ்டர் அவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல், பாதுகாவலர் எனும் முறையில் ஷோகி எஃபெண்டிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத் தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது. மற்றும் இவர்கள் அனைவரும் பழைய ஒப்பந்த மீறிகளோடு சேர்ந்துகொண்டு பாதுகாவலரை மிகவும் வன்மையாக எதிர்த்து வந்தனர். பா‎ஹ்ஜி மாளிகையைப் பழைய ஒப்பந்த மீறிகள் ஆக்கிரமித்துக்கொண்டு 60 ஆண்டுகாலங்கள் அந்த இடத்தை பெரிதும் கலங்கப்படுத்தி வந்தனர். மாஸ்டர் அவர்களோ, பாதுகாவலரோ புனித நினைவாலயத்திற்கு வரும்போதெல்லாம் இவர்கள் அவர்களை நோக்கி அவமானப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்தும், கொச்சையாகத் திட்டியும் வந்தனர். பா‎ஹ்ஜி மாளிகையைச் சுற்றிலும் அதனை ஒட்டினாற்போல் குதிரைக் கொட்டில்கள் போன்ற வீடுகளைக் கட்டி அம் மாளிகையை பெரிதும் அசிங்கப்படுத்தியும் இருந்தனர். ஆனால் மாஸ்டர் அவர்களும் சரி பாதுகாவலரும் சரி இவர்களுடைய அட்டூழியங்களை வெளிப்படுத்தாமலேயே இருந்தனர். அதைப் பற்றி அப்துல் ப‎‎ஹாவிடம் கேட்டபோது, சமயத்தின் ஸ்தாபகரான ப‎ஹாவுல்லாவின் உறவினர்களே இப்படி கேவலமாக நடந்துகொள்கின்றனர் என நான் எவ்வாறு மக்களுக்கு அறிவிப்பது, அல்லது மக்கள்தான் நம் சமயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கூறுவார்.

நமது சமயத்தின் ஸ்தாபகர்களோடு அனுக்கமாக உறவு பூண்டவர்கள் தவிர்த்து பிற நம்பிக்கையாளர்களும் சமயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தீங்கு விளைவித்தவர்கள் கூட்டத்தில் அடங்குவர். உதாரணமாக, ப‎ஹாவுல்லாவின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அகா ஜானை எடுத்துக்கொள்வோம். இவர் ப‎‎ாவவுல்லாவிடம் தாம் புரிந்த தமது 40 ஆண்டுகால சேவையை தாமே நாசப்படுத்திக்கொண்டார். பஹாவுல்லா மறைவதற்கு சில வருடங்களுக்கு முன்பாகவே இவர் சமயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். அன்பர்கள் பஹாவுல்லாவுக்கு வழங்கிய காணிக்கைகளை இவர் கையாட ஆரம்பித்தார். அவ்விதமாக அவர் நிறைய சொத்துக்களை சேர்த்தார். ஆனால், பஹாவுல்லாவின் காலத்திலேயே இவருடைய செய்கைகள் அம்பலப்பட்டுவிட்டன.

பஹாய் சமயத்திற்காக ஈரானில் சேவை செய்தவர்களில் ஜமால்-இ-புருஜிர்டி என்பவரும் உள்ளார். இவர் ஈரானில் சமய விஸ்தரிப்புக்கு பெரும் பங்காற்றியவராரவார். ஆனால் இவருடைய பரந்த சேவை இவருக்கு பெரும் தலைக் கனத்தை விளைவித்துவிட்டது. ஒரு சமயம் இவர் ப‎ஹாவுல்லாவிடம் சென்று கித்தாப்-இ-அக்தாஸின் சட்டதிட்டங்களிலிருந்து தமக்கு விதிவிலக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். அதற்கு பஹாவுல்லாவும் அப்படியே ஆகட்டும் என அனுமதியளித்தார். ஆனால், பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு இவர் அப்துல் ப‎ஹாவை எதிர்த்தார். தம்மைவிட அப்து’ல்-பஹாவுக்கு குறைவான அனுபவமே உள்ளது எனவும், தாமே தலைமைத்துவ பொறுப்புக்கு ஏற்றவர் எனவும் பிதற்ற ஆரம்பித்தார். அப்து’ல்-பஹா உலகின் மற்ற இடங்களை நிர்வகித்துக்கொள்ளட்டும் எனவும், தாம் ஈரான் நாட்டின் பஹாய்களை வழிநடத்துவதாகவும் அப்து’ல்-பஹாவிடம் கூறினார். மிகந்த வன்மையுடன் இவர் மாஸ்டர் அவர்களை எதிர்த்தார்.
இதன் விளைவாக இவர் ஒப்பந்தத்தை மீறியவராக பிரகடணப்படுத்தப்பட்டார். அது வரை இவருக்கு பெரும் மதிப்பளித்து வந்த ஈரானிய பஹாய்கள் அதுமுதற்கொண்டு அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

இதே வரிசையில் சமயத்தை அமெரிக்காவில் பிரகடனப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இப்ரா‎ஹிம் ஃகைருல்லாவையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர் அமெரிக்காவில் பெரும் சேவையாற்றியவர். ஐக்கிய அமெரிக்காவை சமயத்திற்காக திறந்துவைத்தவர் என இவர் பெயரே வருங்காலத்தில் நிலைத்திருக்கும். ஆனால் அந்த நற்பணிகளை எல்லாம் நாசப்படுத்தும் வகையில் இவர் கர்வம் பிடித்தவராக, ஜமால்-இ-புருஜிர்டியைப் போல், அப்துல் ப‎ஹா வேண்டுமானால் கிழக்கை நிர்வகிக்கட்டும், மேற்கை நிர்வகிக்க தாமே சிறந்தவர் என அப்து’ல்-பஹாவிடமே கூறிவிட்டார். அதன் பயனாக இவரும் ஒப்பந்த மீறியானார்.

இப்படி பல பெயர்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சமயத்திற்குச் சிறந்த பனியாற்றிய போதும், சமயத்தின் ஆன்மீகப் போதனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்காததன் காரணத்தினால் இவர்கள் தங்களை நரகத் தீயில் தள்ளிக்கொண்டது மட்டுமின்றி சமயத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பாதகம் விளைவித்தனர்.

சமயத்தின் வளர்ச்சியை ஒப்பந்தத்தை மீறுதல் போன்ற நிகழ்ச்சிகள் மட்டும் பாதிப்பதில்லை. சாதாரன ப‎ஹாய்களாகிய நமது நடவடிக்கைகளும் சமயத்தின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்பது தெளிவு. உதாரணமாக பிப்ரவரி 23, 1924 என திகதியிடப்பட்ட கடிதத்தில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே சமயத்திற்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும் என பாதுகாவலர் கூறுகின்றார். அதாவது எந்தளவுக்கு ப‎ஹாய்கள் தங்களுடைய அகவாழ்விலும் பிரத்தியேக நடத்தையிலும் பஹாவுல்லாவால் பிரகடனப்படுத்தப்பட்ட நித்திய கோட்பாடுகளை பிரதிபலிக்கின்றனரோ அந்த அளவிற்கே சமயத்தின் வெற்றியை நாம் நிச்சயித்துக்கொள்ள முடியும் என பாதுகாலவர் கூறுகின்றார். அதாவது போதனைகள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; ப‎ஹாவுல்லா நமக்கு கூறியுள்ளவற்றை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்ய தவறும்போது மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் பின்விளைவாகின்றன. சமயத்தின் வளர்ச்சி தடைப்படுகின்றது.

ஒரு சமூகத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சியை ஒரே ஒரு ப‎ஹாய் தாம் அறியாமையினால் செய்யக்கூடிய அல்லது செய்யாமல் இருக்கும் காரியத்தினால் முற்றிலுமாக சிதைத்துவிடக்கூடிய அபாயமும் உள்ளது. இவ்வுலகில் ஒரு புதிய நாகரிகத்தை ஸ்தாபிக்க வந்தவர் ப‎ஹாவுல்லா. மனிதர்கள் இறைவனின் நற்பண்புகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அந்த ஆற்றல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மனமுதிர்ச்சியை மனிதன் அடைந்துள்ளான். இந்த ஆற்றல்கள் ப‎ஹாவுல்லாவின் போதனைகளின் வாயிலாக வெளிப்படும் போது இவ்வுலகம் ஒரு புதிய நாகரிகத்தை அடையும். அதே வேளை பஹாவுல்லாவின் மற்றொரு போதனையும் உண்டு: “சொற்களல்லாது செயல்களையே உங்கள் அனிகலன்களாக கொள்ளுங்கள்,” எனும் போதனைதான் அது. ப‎ஹாய் போதனைகளை வாயளவில் மட்டும் உயர்த்திவிட்டு செயல்களில் அவற்றைக் காட்டாத போது என்ன நடக்கும்? அப்து’ல்-ப‎ஹா கூறுவதைப் பார்ப்போம்:

ஆனால், ஒவ்வொன்றிற்கும், இறைவன் ஓர் அடையாளத்தையும், ஓர் அறிகுறியையும் படைத்துள்ளார், அவை குறித்த அறிவைப் பெறுவதற்கான முன்மாதிரி நயங்களையும் சோதனைகளையும் அவர் ஸ்தாபித்துள்ளார். ஆன்மீக அறிவு பெற்றவர்கள் அக மற்றும் புற பூரணத்துவங்கள் இரண்டினாலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அவர்கள் நன்னடத்தை, ஒளிபெற்ற இயல்பு, தூய குறிக்கோள், அதோடு பகுத்தறிவாற்றல், பிரகாசமும் அறியும்தன்மையும், உள்ளுணர்வு, கவனமும் முன்னறிவும், கட்டுப்பாடு, பயபக்தி, மற்றும் இறைவன்பாலான உளமார்ந்த பயம் ஆகியவற்றை அடைந்திருக்கவேண்டும். ஏற்றப்படாத ஒரு மெழுகுவர்த்தி, என்னதான் பருமனாகவும் உயரமாகவும் இருந்த போதிலும், கனிகொடுக்காத ஈச்சமரம் அல்லது காய்ந்த விறகுக் குவியல் ஆகியவற்றைப் பார்க்கிலும் சிறந்ததல்ல.
மலர்வதனம் கொண்டோர் முகம்கோணலாம் அல்லது சரசமும் ஆடலாம்,
செந்நிறம் கொண்ட கொடுங்கோளர் சினப்படலாம் வசியமும் செய்யலாம்;
ஆனால் கோரத் தோற்றமுடையோர் நானிக் கோனுவதை யார் இரசிப்பார்,
கண்ணே குருடாம் அதில் நோவும் கண்டால் அஃது இருமடங்கு துயரமென்பார்.
-அப்து’ல்-ப‎ஹா, தெய்வீக நாகரிகத்தின் மர்மம்-

ப‎ஹாவுல்லாவை ஏற்றுக்கொள்வதும், அவருடைய ஆனைகளுக்குக் கீழ்படிவதும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவையாகும். பஹாவுல்லாவின் மேல் அன்பு இருந்தால் மட்டும் போதுமானதல்ல. அவருடைய ஆனைகளை சரிவர கடைப்பிடிக்கவும் வேண்டும். சமயத்துக்குத் துரோகமிழைத்த பலர் ப‎ஹாவுல்லாவின்மேல் பெரும் அன்பு வைத்திருந்தவர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்களுடைய கீழான அகங்கார உணர்வுகளுக்கு அடிமையானதன் விளைவாக தாங்கள் அதுவரை அடைந்திருந்த உயர்ந்த ஸ்தானத்திலிருந்து நரகத்தீயில் விழுந்தனர்.

முதலாவது மறைமொழியானது, “தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக…” என கூறுகின்றது. மற்றொரு மறைமொழியில், “உங்கள் உள்ளங்கள் தன்னலம், வெளிவேஷம் எனும் தூசியிலிருந்து தூய்மைப்படுத்தப்படவும், கீர்த்தி எனும் சபையில் சலுகைகள் காணவும் நீங்கள் முயலுவீர்களாக; ஏனெனில், வெகு விரைவில் மனிதகுலத்தை எடைபோடுபவர்கள், வழிபாட்டுக்குறியவரான அவரது தெய்வீக முன்னிலையில், முழுமையான நற்பண்பையும், அப்பழுக்கில்லாத தூய்மையும் கூடிய செயல்களையும் தவிர வேறெதனையும் ஏற்கமாட்டார்கள், ” என குறிப்பிடுகின்றது. அப்துல் ப‎ஹாவின் அறிவுரை ஒன்றில், இம் மறைமொழிகள் செவிமடுக்கப்பட வெளியிடப்படவில்லை, ஆனால் செயல்படுத்தப்படவே வெளியிடப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இது தவிர, ப‎ஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள விதிமுறைகளும் சட்டங்களும் ஒளிவிளக்குகள் என வர்ணிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறப்பு. அவ்வாறு செய்யாத போது, நாம் நமக்கு மட்டும் தீங்கிழைத்துக்கொள்வதில்லை, மாறாக நாம் வணங்கிப் போற்றும் நமது சமயத்திற்கே தீங்கிழைத்தவர்களாவோம்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்றும் உள்ளது. நமது ஒத்துழைப்பின்றி சமயம் தன்னிச்சையாக வளரும் என்பது உண்மைதான்; ஆனால் அதற்காகப் பாடுபடுவது நாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் ஓர் உதவியே அன்றி சமயத்திற்கோ, வேறு எவருக்காகவோ செய்து கொள்ளும் ஓர் உதவியாகப் பார்க்கப்படக்கூடாது. ப‎ஹாவுல்லாவின் பின்வரும் வாசகத்தைப் பார்ப்போம்:

அவரைத் தவிர மற்ற அனைத்துமே அவரது திரு வாசலில் ஏழ்மையிலும் வறிய நிலையிலும் நிற்கின்றன, அவரது சக்தியின் மகத்துவத்திற்கு முன்னால் அனைவருமே சக்தியற்றுக் கிடக்கின்றனர், அவரது இராஜ்ஜியத்தில் அனைவருமே அடிமைகளைத் தவிர வேறில்லை, அனைத்து படைப்பினங்களையும் துறக்கின்ற அளவுக்கு அவர் போதிய செல்வம் படைத்தவராவார்.
பஹாவுல்லா, பொறுக்குமணிகள் பக்கம் 93

வழிபாட்டுக்குறியவருக்கும் வழிபடுவோருக்கும் இடையில், படைப்பினத்திற்கும் படைப்பாளருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவகம் எனும் பந்தம் மனிதர்களின் மீது அவரது கருனையின் அடையாளமாகக் கருதப்படவேண்டுமே ஒழிய, அது அவர்களுக்கு உரிய புண்ணியத்திற்கான அறிகுறியாகக் கருதக்கூடாது. ஒவ்வொரு உண்மையான, பகுத்தறியும் நம்பிக்கையாளரும் இதற்கு சாட்சியமளிப்பார்.
-பஹாவுல்லா, பொறுக்குமணிகள் பக்கம் 193 -194-

ஆகவே, சமய வளர்ச்சியென்பது வேறு யாருக்கோ நாம் செய்யும் ஓர் உதவியல்ல. அது நமக்கு நாமே செய்து கொள்ளும் ஓர் உதவியாகும். அதே போன்று, சமயத்தின் தேவைகள் காலப்போக்கில் மாறும்போதும் நம்மை நாமே மாற்றிக்கொள்வதும் அடிப்படையில் நாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் ஓர் உதவியே ஆகும். நமது சேவை இறைவனுக்குத் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளை நமது சேவை இறைவனுக்கே சொந்தம் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். சேவையென்பது நமக்கு ஒரு விசேஷ ஆசீர்வாதமாகும். அஃது இறைவனின் கருணையாகும். சேவை செய்வதன் வாயிலாகவே சமயம் வளரவும் செய்யும். மனிதனின் படைப்பு குறித்த ஒரு விஷயமும் உண்டு; அது மனிதன் கொடுப்பதற்கென்றே படைக்கப்பட்டுள்ளான் எனும் விஷயமாகும். கனி கொடுக்காத மரம் ஒரு பழமரமாகாது, நீர் கொடுக்காத ஓர் ஊற்று நீரூற்றாகாது, மழை கொடுக்காத மேகம் மேகமுமல்ல, அதே போல் தன் நேரத்தை, பொருளை, சக்தியை சேவைக்கு வழங்காத ஒரு மனிதன் மனிதனும் அல்ல.

கடந்தகால இறைத்தூதர்கள் இக்காலத்திற்காகவே தங்கள் வெளிப்பாடுகளைக் கொணர்ந்தனர் எனவும், ஒரு நிமிடமாவது சமயத்திற்குச் சேவை செய்திட வேண்டும் என அவர்கள் ஆவல் கொண்டும் உள்ளதாக சமயப் புனித வாசகங்கள் நமக்கு அறிவிக்கின்றன. நாம் வாழும் இந்த நாளுக்காகவே மனிதன் இறைவனால் படைக்கப்பட்டுள்ளான். மகத்தான நாளில் வாழ்கின்றோம் அதற்குத் தகுந்த மகத்தான காரியங்களையும் புறிந்து சமயம் தழைத்தோங்கச் செய்திடுவோமாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: