பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம்


பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம்
(தற்காலிக அதிகாரபூர்வமற்ற மொழிபெயர்ப்பு)

வஸந்த காலத்தின் உதயத்தின் போது, இறைவனின் பூங்காவிலுள்ள ஆன்மீக ரோஜா மர்ம அர்த்தங்கள் கொண்டு மலர்ந்தது. ஆனால், லௌகீக இராப்பாடிகளோ கவனமின்மையில் ஆழ்ந்திருந்திருந்தன.

ரோஜா கூறியது: “இராப்பாடிகளே! யாமே உங்கள் நேசத்திற்குறியவர். முழுநிறை வர்ணம், நறுமணம், மற்றும் பசுமையும், புதுமையும் கொண்ட அழகுடன் யான் தோன்றியுள்ளேன். வாருங்கள், உங்கள் நண்பனோடு வீற்றிருங்கள். பறந்து சென்றுவிடாதீர்கள்.“

மேலோட்டமான இராப்பாடிகளோ: “நாங்கள் மதினாவின் பூர்வகுடிகள், நாங்கள் அராபிய ரோஜாவின் நண்பர்களாக இருந்தோம். நீ வேறு இடத்திலிருந்து வந்துள்ளாய், மற்றும் ஈராக் நாட்டின் தோட்டம் ஒன்றில் உனது முகத்திரையை நீ வீசியெறிந்து விட்டாய்,”

ரோஜா: “ஆக, இவ்வளவு காலமாக, சர்வ-இரக்கமிக்கவரின் அழகிலிருந்து நீ தூரமாகவே இருந்துள்ளாய் என்பது இப்போது தெளிவாகியுள்ளது; மற்றும் நீ என்னை என்றுமே கண்டுணரவே இல்லை. ஐயமின்றி, ஆந்தைகளைப் போல், நீங்கள் சுவர்களையும், விட்டங்களையும், கூறைகளையும் மட்டுமே கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் என்னை எப்போதுமே அறிந்திருந்தால், உங்கள் நண்பனை விட்டு இப்போது பறந்தோடியிருக்க மாட்டீர்கள்.

இராப்பாடிகளே! யாம் மதினாவையோ, மக்காவையோ சார்ந்தவர் அல்ல, அல்லது ஈராக்கையோ, சிரியாவையோ சார்ந்தவரும் அல்ல. மாறாக, பார்வையிடுவதற்காக காலத்திற்குக் காலம் நான் எல்லா நாடுகளினூடும் பிராயணம் செய்வேன். ஒரு சமயம் நான் எகிப்பதில் தோன்றினேன், வேறு சமயம் பெத்லெஹமில் தோன்றினேன். ஒரு காலத்தில் நான் அரேபியாவில் இருந்தேன், மற்றொரு நேரம் நான் ஈராக்கில் பூத்திருந்தேன், பிறகு ஷிராஸில் மலர்ந்திருந்தேன். இப்போது, அடிர்னேயில் நான் மீண்டும் தோன்றியுள்ளேன்.

என்மீதான உங்கள் அன்புக்கு நீங்கள் பெயர் பெற்றிருந்தீர்கள், ஆனால், நீங்கள் இப்போது என்னை புறக்கணிக்கின்றீர்கள். நீங்கள் இராப்பாடிகளாக பாவனை செய்யும், காக்கைகள் எனவே தோன்றுகிறது. மாயத்தோற்றம் மற்றும் கண்மூடித்தனமாகக் கீழ்படிதல் எனும் தேசத்தில் நீங்கள் அலைந்துகொண்டிருக்கின்றீர்கள், மற்றும் நீங்கள் தெய்வீக ஒருமையெனும் புனிதத் தோட்டத்தை இழந்தவர்கள் ஆவீர்.

ஒரு முறை இராப்பாடியிடம்: ‘உங்களைவிட காக்கைகளே அழகாகப் பாடக்கூடியவை‘ எனக் கூறிய அந்த ஆந்தையைப் போன்றவர்களே நீங்கள்.

அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, எவ்வாறு நீ நியாயமில்லாமல் இருந்தும், உண்மையின்பால் உன் கண்களை மூடிக்கொண்டும் இருக்கின்றாய்? ஒவ்வொரு கூற்றும், இறுதியில் நிரூபிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குமூலமும் தக்க ஆதாரங்கள் கொண்டு மெய்ப்பிக்கப்பட வேண்டும். நான் இங்குதான் இருக்கின்றேன், மற்றும் காக்கையும் இங்குதான் உள்ளது. ஆகவே, அதுவும் பாடட்டும், பிறகு நானும் பாடுகின்றேன்‘ என மறுமொழி பகன்றது.

ஆனால் அதற்கு ஆந்தை: ‘நான் உனது சவாலை ஏற்றுக்கொள்ள முடியாது, மற்றும் உன் ஆதாரங்களை நான் ஏற்கமறுக்கின்றேன். ஏனெனில், ஒருமுறை ஒரு தோட்டத்தில் இருந்து மகிழ்ச்சியளிக்கும் கீதம் ஒன்று ஒலிப்பதைக் கேட்டேன். பிறகு, அதைப் பாடியவர் யார் எனக் வினவினேன். அதற்கு அவர்கள் அஃது ஒரு காக்கையின் குரல் என்றனர். அந்தக் காக்கை தோட்டத்தை விட்டு வெளியே வருவதைக்கூட நான் கண்டேன். ஆகவே, அந்தப் பதில் உண்மையென்றே நான் உணர்ந்தேன்,‘ என பதிலிறுத்தது.

பாவம் அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, அது காக்கையின் குரல் அல்ல. அஃது என்னுடைய குரலே. நீ செவிமடுத்த அதே போன்ற கீதத்தை, ஏன் அதைவிட சிறந்த ஒன்றை, தனிச்சிறப்புமிக்க ஒன்றை இப்போதே பாடுகின்றேன்,‘ எனக் கூறியது.

“அதற்கு ஆந்தை: ‘நான் கூறியவற்றிலிருந்து நான் சிறிதும் மாறப்போவதில்லை. உன் கோரிக்கையை நான் நிராகரிக்கின்றேன். என்னுடைய மூதாதையர்களும், தோழர்களும் அவ்வாறே கூறுகின்றனர். காக்கை தன்னுடைய வாதத்தை நிரூபிக்க சாட்சிப்பத்திரங்களை அப்போது வைத்திருந்தது. எப்போதும் நீ தான் அங்கு இருந்தாய் என்றால், அதனுடைய பெயர் ஏன் பிரபலமடைந்தது?‘

அதற்கு இராப்பாடி: ‘நீ முற்றிலும் நியாயமின்றி இருக்கின்றார். வெறுப்புமிகு வேட்டைக்காரன் என்னைக் கண்ணிவைத்துப் பிடித்திருந்தான். அவன் கொடுங்கோன்மை எனும் வாளை என் முதுகில் பிடித்திருந்தான். அதன் காரணமாகத்தான் காக்கை பிரபலமடைந்திருந்தது. முழுமையாக வெளிப்படுத்தப்படுவதற்குப் பதிலாக நான் மறைக்கப்பட்டிருந்தேன். முழுநிறைவுடன் பாடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நான் மௌனமாக இருந்தேன். செவிபடைத்த எவரொருவருமே சர்வ-இரக்கமுடையவரின் பாடலுக்கும், காக்கை கரைவதற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணரமுடியுமே. உண்மையை உனக்குப் புகட்டும் வண்ணம், இப்போது என் குரலையும், கீதத்தையும் கேள்,‘ எனக் கூறியது.

“இராப்பாடிகளான நீங்கள் அனைவரும் அந்த ஆந்தையைப் போன்றவர்களே. ஒரு சிறிய மாயத்தோற்றத்தை ஒரு நூறாயிரம் நிச்சயத்தன்மைகளாகவும், அல்லது செவியுற நேர்ந்த ஓர் அசையெழுத்தை பிரபஞ்சமளவுக்கும் பெரிதாக்கிவிடாதீர்கள். நண்பரின் ஆலோசனையைக் கேளுங்கள், அந்நியனின் கண்களைக் கொண்டு உங்கள் அன்புக்குகந்தவரைப் பார்க்காதீர்கள். என்னை எனது இருக்கையையோ, ஓய்வுத்தலங்களையோ கொண்டல்லாமல் என் வாயிலாகவே உணரமுயலுங்கள்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் திடீரென, இறைவனின் அடையாளத்தை ஏந்திய ஒளிபெற்ற இராப்பாடி ஒன்று, தெய்வீக பாடல் ஒன்றை பாடிக்கொண்டு அந்தப் புனிதப் பூங்காவிலிருந்து தோன்றியது. அஃது அந்த ரோஜாவை சுற்றிச் சுற்றி வந்தும், பிறகு: “நீங்கள் இராப்பாடிகளின் உருவமைப்பு கொண்டிருந்தாலும், நீங்கள் நீண்டகாலமாக காக்கைகளுடனேயே இருந்துள்ளீர்கள், மற்றும் அவற்றின் வழிகளையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். உங்களுக்கு இந்தப் பூங்காவில் இடமில்லை. பறந்து போய்விடுங்கள்! இந்த ஆன்மீக ரோஜா தெய்வீகக் கூட்டின் இராப்பாடிகளே வலம் வரக்கூடிய மையமாகும்” எனக் கூறியது.

பிறகு, மனித இராப்பாடிகளே, நண்ரை அறிந்துகொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். தெய்வீகத் தோட்டத்தின் ரோஜாவை அதன் எதிரிகளிடமிருந்து காத்திடுங்கள். உண்மையின் நண்பர்களே! நீங்கள் சேவை எனும் ஆயுதம் தரித்தும், சச்சரவுகளைத் தூண்டிவிடுவோர்களின் சதிகளிலிருந்தும், பாசாங்குகளிலிருந்தும் உலக மக்களை பாதுகாத்திடுங்கள். மக்களிடையே நீங்கள் மரியாதை எனும் அலங்கரிப்புடனும், பனிவுடனும், இறைவனின் மற்ற எல்லா பண்புகளுடனும் தோன்றிட வேண்டும். புனிதத்தன்மையெனும் அங்கிக்கரை சைத்தான் அதன் வெளிப்பாடுகளிலின் அவதூறுகளிலிருந்து தூய்மையாகவும், மாசுபடாமலும் இருக்கட்டும். மற்றும் பொய்யர்களின் பொய்கள் உலக மக்களுக்குத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தோன்றட்டுமாக. ஒரு வேளை, கடவுள் தடுப்பதாக, முறைகேடான ஒரு செயலை நீங்கள் செய்துவிட்டீர்களானால், நீங்கள் அனைவரும் அதி புனித உறைவிடத்திற்குக் கண்டிப்பாகத் திரும்பிச் செல்லுங்கள். மற்றும் இதே செயல்களே உங்களைப் பழியிலிருந்து விடுவிக்கக்கூடியவையாக இருக்கும். இதுவே உறுதியான உண்மை.
உலகங்களின் ஆண்டவராகிய, இறைவன் புகழப்படுவதாக.

பின்னூட்டமொன்றை இடுக