ஒரு குழந்தையின் கூக்குரல்


ஆசிரியர் குறிப்பு: கடந்த 30 ஆண்டுகளாக, இரான் நாட்டின் பஹாய் சமூகத்தினருக்கான உயர்கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டதன் விளைவாக BIHE எனப்படும் திறந்தமுறை பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது புதிய பகிஷ்காரமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. பஹாய் மாணவர்கள் ஆரம்ப மற்றும் இடைநிலை கல்விநிலையங்களில் தங்களைப் பதிந்துகொள்வதினின்று தடுக்கப்பட்டு வருகின்றனர். (Iran Press Watch , பார்க்கவும்). இச்சூழ்நிலையின் பின்னனியிலேயே பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை வழங்கப்படுகிறது.

நன்றி, சமந்தர் மிஷ்கிபாஃப்

என் சினேகிதி ஒருவர் தமது மூத்த மகவை பள்ளிக்கு அழைத்து சென்ற போது (தானும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனும் பெரும் ஆர்வமுடைய) அவருடைய இரண்டாவது குழந்தை தன் தாயைப் பார்த்து தனக்கு ஏன் தன் மூத்த சகோதரனுடையதைப் போன்றே பிறந்த பத்திரம் எடுக்கவில்லை எனவும் அப்படி எடுத்திருந்தால் தானும் தனது சகோதரனோடு பள்ளிக்கு செல்ல இயலுமே என ஆத்திரத்துடன் கூறினாளாம்…
அவ்விஷயம் நடந்து இப்போது பல வருடங்களாகிவிட்டன ஆனால், நமது குழந்தைகள் வாஞ்சைமிகுந்த அன்பான ஆசிரியர் ஒருவரின் கீழ் அகர வரிசையையும் அதற்கு மேலும் கற்கும் அதே ஆர்வத்துடன் இருந்தும் பள்ளி செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர்… ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பள்ளி சென்றிட மாணவர்கள் மும்முரமாக இருப்பார்கள்; சிறார்கள் புதிய புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் பிற பள்ளி சாதனங்களை வாங்கிட தங்கள் பெற்றோர்களுடன் பெரும் உற்சாகத்தோடு செல்வார்கள்.

ஆனால் என் குழந்தைக்கோ, அதே பள்ளி திரும்பும் மாதம் பெரும் பயம், ஏமாற்றம் மற்றும் சோகம் நிறைந்ததாக இருக்கும். ஆகவே, உங்கள் நாடுகளில் பெரும் சுதந்திரத்துடன் வாழ்வோர்களே, உங்கள் குழந்தைகளை எந்த நேரத்திலும், எந்தப் பள்ளியிலும் பதிந்து அவர்கள் விரும்பும் கல்வியைக் கற்க அவர்களை வழியனுப்பும்… அந்திப் பொழுதில் உங்கள் நாற்காலிகளில் அமர்ந்து பெட்ரோலிய மூலப்பொருள் குறித்தும் உலக சந்தையில் அதன் விலையின் ஏற்ற தாழ்வுகள் போன்ற உலக செய்திகள் குறித்தும்… இந்த தொழிற்சாலை பொருளின் அல்லது வாணிபத்தின் சந்தை விலைகளின் ஏற்றதாழ்வு குறித்தும்… அல்லது ராக்கெட் அறிவியல் ஆய்வு மற்றும் அனு ஆற்றலை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நாடுகள் குறித்தும் வானொலியில் செவிமடுத்துக்கொண்டிருப்போர்களே… உங்களை நான் கூவியழைக்கின்றேன்…

பள்ளி திரும்பும் காலம் குறித்து தனது பேரார்வத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் என் மகவின் குரலை சற்று செவிமடுக்கக் கோரி… உங்களை நான் கூவியழைக்கின்றேன்:

இவ்வுலகில் என்னைப் பற்றி சிறிதேனும் சிந்திக்கும் எவராவது இருக்கின்றார்களா? பள்ளிக்கால நாட்கள் ஆரம்பிக்கும்போது, என்னை ஏற்றுக்கொள்ளும் பள்ளி எங்கேனும், ஏதாகிலும் உள்ளதா எனும் விளக்கமுடியாத பயம் என்னை கவ்விக்கொள்கிறது… நானும் என் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய இடம் எதையாவது காண்பேனா? உலகின் மற்ற நாடுகளில் பிறந்த உங்கள் குழந்தைகளுக்கும் இரான் நாட்டில் பிறந்த என் போன்ற குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைகள் எனும் வகையில் நாங்களும் இந்த உலகின் வருங்கால சந்ததியினர்தானே? பின் நான் என் அடிப்படை உரிமையை இழந்து நிற்கும் அதே வேளை உலகின் பிற பாகங்களில் சுகத்துடன் அமைதியாக உட்கார்ந்துகொண்டு இத்தகைய கேடுகெட்ட ஒரு நிலை குறித்து நீங்கள் ஏன் குரலேதும் எழுப்பாமல் இருக்கின்றீர்? அல்லது என் போன்ற குழந்தைகளின் நிலையை ஒரு பேரிடருக்கு இணையாக நீங்கள் கருதவில்லையா? ஒருவரை தாக்கும் ஒரு தோட்டா அல்லது வெடி அவரது உயிரை உடனடியாக பறித்து அவர் அக்கணமே இவ்வுலக வாழ்வை இழக்கும்படி செய்யும்… ஆனால் என் ஆன்மா அனிதினமும் வதைக்கப்படுகின்றது… இல்லை இல்லை ஒவ்வொரு மணி நேரமும் உலகின் இந்த மூலையில் இப்பேரிழப்போடு வாழும் என் ஆன்மா வதைக்கப்படுகின்றது – இருந்தும் இவ்வுலகம் என்னைப் பற்றி அக்கறைப்படுவதாக தெரியவில்லை!

என் தாயாரின் கையைப் பிடித்துக்கொண்டு நான் பள்ளிக்கூடத்தின் பதிவுக் காரியாலயத்தினுள் நுழைகின்றேன். என் தாயாரால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பார்த்த அந்த மனிதர் ஏமாற்றத்துடன் தன் தலையை ஆட்டிக்கொள்கிறார்… என் தாயாருக்கும் அவருக்கும் இடையில் சட்டம் போன்றவை குறித்து நடக்கும் வாக்குவாதம் எதையும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை… இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாங்கள் அனுப்பப்படுகின்றோம். நான் என் தாயாரின் முகத்தை ஆர்வ மிகுதியுடன் பார்க்கின்றேன், அவர் வாஞ்சைமிகுந்த தமது பார்வையால் என்மீது தமது அன்பை பொழிகின்றார். ஆனால், எங்கள் புகார் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர் தம்முன் உள்ள காகிதங்களில் இருந்து தமது பார்வையை அகற்றாமல் தமது தலையை இல்லையென்பதற்கு அடையாளமாக ஆட்டிக்கொண்டு – வாசலை நோக்கி தமது விரலைச் சுட்டி – எங்களை வெளியேறும்படி கூறிகிறார்… அப்போது நான் இந்தப் பள்ளியும், அதற்கு முன்பு நாங்கள் சென்ற மற்ற பள்ளியைப்போல் எனக்கு இடம் தர மறுத்துவிட்டது என்பதை உணர்கின்றேன்…

தொலைக்காட்சி செய்திகள் மற்றும் என் பெற்றோர்களின் உரையாடல்களிலிருந்து, தங்கள் குழந்தைகளுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் உலகத்தின் பிற பாகங்களில் உண்டு மற்றும் அங்கு இளம் ஆன்மாக்களை அரசாங்கங்கள் ஆதரித்தும் பாதுகாக்கவும் செய்கின்றன… இந்த அரசாங்கங்கள் தங்கள் குழந்தைகள் யாவும் அந்த நாடுகளின் வருங்காலத்திற்கான பொக்கிஷங்கள என நம்புவதால், அவை எல்லா வாழ்க்கை நிலைகளிலும் உள்ள குழந்தைகளுக்கான கல்வியை தாங்களே ஒருங்கிணைக்கின்றன.

என் நாட்டில் மட்டும் ஏன் அப்படியில்லை என என்னால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை!!! நான் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு பந்தாடப்படுகின்றேன்; அல்லது ஏதோ ஒரு பள்ளி என்னை ஏற்றக்கொண்டாலும் அப்பள்ளியில் நான் எவ்விதம் நடத்தப்படுவேன் என்பதும் தெரிவில்லை. இவ்விதமான குழப்ப சூழ்நிலைக்கு என் பெற்றோர்கள் பஹாய்களாக இருப்பதுதான் காரணம் என்பது தெரியும். நெறிமுறை ஒன்றை விளக்குவதற்கான வார்த்தை ஒன்றை அவ்வப்போது நான் செவிமடுத்திருக்கின்றேன்… சிலர் பெற்றிப்பதும் சிலர் பெறாதிருப்பதுமான ஓர் ஒழுக்கசீலம் அது … அவ்வார்த்தை “நியாசிந்தனை” என்பதாகும்… என்னைப் பொருத்தவரையில் இந்த ஒழுக்கநெறி இல்லாதவர்களுள் இரான் நாட்டின் பள்ளி தலைமை ஆசிரியர்களும் அடங்குவர். அவர்கள் மேலிடத்திலிருந்து தங்கள் ஆணகளை பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். உங்களிலும் பெரும்பாலானோர் நியாயமனப்பான்மை மிக்கவர்களாக இருப்பீர்கள், ஆகவே என்னுடைய கேள்வி: என் சார்பாக நீங்கள் ஏன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கின்றீர்கள்? “ஒவ்வொரு மனிதனும் கல்வி பெறுவது அவரவர்களின் உரிமை இவ்வுலகில் எவருமே கல்வியற்றவர்களாக இருக்கக்கூடாது,” என ஏன் கூறமால் இருக்கின்றீர்கள்? அனுசக்தி போன்றவற்றில் மட்டும்தான் உங்கள் சிந்தனைகள் இலயித்திருக்குமா? போர்கள் மற்றும் கொலைக்குற்றங்களில் மட்டும்தான் நீங்கள் ஆர்வாமாக இருப்பீர்களா? நீங்கள் அனைவரும் என்னை ஏன் மறந்துவிட்டீர்கள்? இவ்வுலகின் பெரும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்னைப்போன்ற பாதுகாப்பற்ற குழந்தைகளுக்காக ஏன் வாதாடாமல் இருக்கின்றார்கள்? பெரிய பெரிய விஷயங்களில் மட்டும்தான் நீங்கள் மேன்மையானவர் என காண்பிப்பீர்களா? உங்கள் வீட்டிலேயே உங்கள் குழந்தை ஒன்றுக்கு இந்த கொடுமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்களுக்காவும் மற்றவர்கள் முன்னெழுந்து வருவார்கள் என எதிர்ப்பார்க்கமாட்டீர்களா? ஆகவே – நான் மீண்டும் உங்களை கேட்கின்றேன் – என்னை மறந்துவீட்டீர்களா?

ஒவ்வொரு வருடமும் இதே காலத்தில் மற்ற எல்லோரும் பள்ளி திரும்பும் உற்சாகத்துடன் இருக்கையில் கல்விக்கான வாய்ப்பை இழந்துவிடுவோம் என மனதில் பயமும் குழப்பமும் கொண்ட பல பஹாய் குழந்தைகள், பால்ய இளைஞர் மற்றும் இளைஞர் மனதில் இந்தக் கேள்விகளே தீபோல் எரிந்துகொண்டிருக்கின்றன… இக்கூக்குரலுக்கு செவி சாய்ப்போர் யாரும் இல்லையா? என் குழந்தையின் இக்கூக்குரலை யாராவது செவிமடுப்பார்களா?

[மொழிபெயர்ப்பாளர்: குலோரியா யஸ்டானி]