உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது.
உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்தாலியில் உள்ள 60,000 மக்களை உள்ளடக்கக்கூடிய செயின்ட் பீட்டர் தேவாலயத்தையும் நாம் குறிப்பிடலாம். இன்று உலகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள பஹாய்களின் வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடக்கூடும்.
இங்கு கோவில்கள் என ஒரு மதச்சார்ப்புடையோரின் கோவில்களை மட்டும் உள்ளடக்காமல் எல்லா சமய வழிபாட்டு இல்லங்களையும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். ஐரோப்பிய நாடுகளில் எழுப்பப்பட்டுள்ள மாதாகோவில்கள், இஸ்லாமிய நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக்களின் கோவில்கள் பெரும்பான்மையானவை. கடந்தகாலத்தில் பல அரசர்கள் இத்தகைய பெரும் பெரும் வழிபாட்டு இல்லங்கள் கட்டியே தங்கள் பொக்கிஷங்களை காலி செய்தும் உள்ளனர்.
வழிபாட்டுக்காக கோவில்கள் தேவைதான். ஆனால், அவை இத்தகைய மாபெரும் கட்டிடங்களாக இருக்கவேண்டுமா எனும் கேள்வி எழக்கூடும். சிறு சிறு கோவில்களில் வழிபாடுகள் செய்யமுடியாதா? அவற்றில் செய்யப்படும் வழிபாடுகளை கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டாரா?
இது குறித்து சற்று ஆழ சிந்தித்தோமானால் இத்தகைய பிரமாண்டமான கோவில்கள் நிறுவப்பட்டது வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல் கடவுள் மீதுள்ள தங்களின் பக்தியை மக்களும் அரசாங்கங்களும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இதை நாம் கருதக்கூடும் மற்றும் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு பொருள் கடவுளின் உயர்வை பிரதிபலிப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். அவற்றை இங்கு விமர்சிப்பது நமது நோக்கமல்ல.
கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவதன் நோக்கமென்ன? ஆண்டவரை நாம் வீட்டில் இருந்து கொண்டே வழிபட முடியாதா? அவர் அத்தகைய வழிபாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டாரா? இதுவும் தேவை அதுவும் தேவைதான். தனிமையில் வழிபடுவதும் முக்கியம்தான் அதே வேளை ஒரு சமூகமாக வழிபடுவதும் முக்கியம்தான். அனைத்திற்குமே அதனதன் தாத்பரியங்கள் உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் ஒப்பீடு செய்யவும் முடியாது அவற்றை குறைத்து மதிப்பிடவும் முடியாது.
வழிபாடு என்பது வழிபாட்டு இல்லங்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டுமா அல்லது வழிபாட்டுக்கு வேறு உள்ளர்த்தங்களும் உண்டா என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவேண்டும்.
உலகில் பல பிரமாண்டமான கோவில்கள் உள்ளன ஆனால், நாம் அறியாத, எல்லயற்ற, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அதிவுயர்ந்த கோவில் ஒன்று உள்ளது என்பதை நாம் அறிவோமா? இக்கோவிலில் செய்யப்படும் வழிபாடே மற்ற எல்லா வழிபாடுகளுக்கும் மூலாதாரம் என்பதையும் நாம் அறிவோமா? இக்கோவிலில் வழிபாடு இல்லையெனில் எக்கோவிலிலும் உண்மையான வழிபாடு கிடையாது.
இந்த மனித அறிவிற்கு அப்பாற்பட்ட கோவிலோடு ஒப்பிடும்போது மற்ற கோவில்கள் அனைத்தும் வெறும் பிரதிபலிப்புக்களே ஆகும். ஒப்பீடற்ற இக்கோவிலுக்கு இயல்பான அளவு கிடையாது. இக்கோவிலில் சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் அங்கு செய்யப்படும் வழிபாட்டின் அளவை எல்லைக்குட்பட்டதாக்குகின்றன. எல்லையற்ற இக்கோவிலின் அளவை நமது கடவுள் வழிபாடுகளின் வாயிலாக நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம் பிறகு அதனை மாற்றியும் கொள்ளலாம்.
அப்படியானால் இது எந்த கோவில்?
பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாக்கு ஒன்றை நாம் காணலாம்:
இருப்பின் புத்திரனே!
உனது உள்ளமே எனது இல்லம். எனது வருகைக்காக அதனை புனிதப்படுத்துவாயாக
ஆம், கடவுள் உண்மையிலேயே குடிகொண்டிருக்கும் கோவில் நமது உள்ளமே ஆகும். அவர் அங்குதான் முதன்மையாக குடிகொண்டிருக்கவேண்டும். நமது உள்ளத்தைதான் இறைவன் தமது இல்லமென்கிறார். இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் கோவிலும் ஆகும். ஆகவே, அவர் இருக்கும் அல்லது இருக்கவேண்டிய இடத்தை ஒரு புன்யபீடமாக்குவது நமது கடமையாகும். நாம் அவ்வாறு செய்யவில்லையெனில் கடவுள் அங்கு குடிகொள்ளமாட்டார், அக்கோவில் ஒரு வெற்றிடமாகிவிடும் மற்றும் அவ்வுள்ளம் இருளைடைந்து போகும் பிறகு எங்கு சென்று அவரை பூஜித்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் போகும்.
மனித உள்ளம் அன்பின் உதயமையமும் ஆகும். அங்கு கடவுள் குடிகொண்டிராவிடில் உள்ளத்தில் உதயமாகும் அன்பு கடிவாளம் இல்லாத குதிரை போன்றதாகி லௌகீக பற்றுக்களில் மனிதன் ஆழ்ந்துவிடுவான்.
கடவுளை மனித இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் தாத்பர்யம் என்ன?
உள்ளம் எனும் கோவிலில் மனிதன் கடவுளை பூஜிப்பது என்பது மனதால் கொள்ளப்படும் ஒரு செயல் மட்டும் அல்ல. கடவுளின் படைப்பு இருவிதமானது. ஒன்று ஆன்மீகம் மற்றது லௌகீகம் அல்லது பௌதீகம். உணர்வுகள் ஆன்மீகம். அந்த உணர்வுகளிலிருந்து வெளிப்படும் செயல்கள் பௌதீகமானவை. அதாவது வழிபாடு என்பது வெறும் உணர்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது அவ்வாறு இருக்கவும் முடியாது. உதாரணமாக ஒருவர்பால் கொண்டிருக்கும் அன்பு எனும் உணர்வு அதே நபர்பால் செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் எவ்வித பயனும் இல்லை. அதே போன்று கடவுள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு செயல்களாக வெளிப்படாத வரை அந்த அன்பினால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை.
கடவுள் யாவற்றையும் அதனதன் சாயலிலேயே படைத்துள்ளார். ஜடப்பொருட்களை ஜடப்பொருட்களின் சாயலிலும் தாவர வகைகளை அவற்றின் சாயலிலும் மிருகங்களை மிருகங்களின் சாயலிலும் அவர் படைத்துள்ளார். ஆனால், மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார். மனிதனுக்கு தமது பன்புகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஆற்றலை வழங்கியுள்ளார். இதைத்தான் அவர் நம்மிடமிருந்தும் எதிர்ப்பார்க்கின்றார். “மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு அர்த்தமும் இதுதான். மனிதப்படைப்பின் நோக்கமும் இதுதான். மனிதன் கடவுளை தன் இதயத்தில் வைத்து பூஜிப்பது என்பதன் அர்த்தமும் இதுதான்.
மனித உள்ளம் எனும் கோவிலின் மூலஸ்தானம் ஒரு கண்ணடியைப்போன்றது. அக்கண்ணாடி எவ்வேளையிலும் இறைவனை நோக்கியே திரும்பியிருக்க வேண்டும், அவர் வழியிலேயே மனிதன் நடக்க வேண்டும். சக மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும். ஆகவே, மனிதர்களுக்கு சேவை செய்வதிலேயே மனிதன் தன் வாழ்க்கையை அர்ப்பனிக்க வேண்டும். இதுவே உண்மையான கடவுள் பக்தி மற்றும் வழிபாடு. இதுவே மனிதப்படைப்பின் குறிக்கோள். இதற்காகவே கடவுள் மனிதனுக்கு மனித உள்ளமெனும் கோவிலை வழங்கியுள்ளார்.