பஹாய் சமயத்தின் நிர்வாக அமைப்புக்கள் தனிச்சிறப்பு மிக்கதும் எதிர்ப்புணர்வு அற்றதுமான கலந்தாலோசனை எனும் முடிவுகள் எடுக்கும் செயல்பாட்டை எல்லா நிலைகளிலும் பயன்படுத்துகின்றன.
கலந்தாலோசனைக்கான கோட்பாடுகள் பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பதிக்கப்பட்டுள்ளன, மற்றும், கருத்தொருமித்தலை பேணுவதற்கும் உண்மையை ஆராய்வதற்கும் உரிய ஒரு வழிமுறையெனும் வகையில் அக்கோட்பாடுகள் விரிவான பயன்பாட்டிற்கான உள்ளாற்றலை பெற்றிருக்கின்றன. பார்க்கப்போனால், குழுத்தீர்மானம், கூட்டுறவு ஆகியவை தேவைப்படும் எந்த சூழ்நிலையிலும் அவை பயன்மிக்கவையாக இருப்பதை பஹாய்கள் காண்கின்றனர். இக்கோட்பாடுகள் பஹாய் சமயத்தின் ஸ்தாபனங்களால் மட்டுமல்லாமல் பஹாய்களின் தொழில்களில், பஹாய்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மற்றும் பஹாய் குடும்பங்களில் எடுக்கப்படும் தினசரி தீர்மானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அதன் சாரத்தில், கலந்தாலோசனை பல்வேறு விஷயக் கூறுகளை தனித்தனியே பிரித்துப் பார்ப்பதற்கு பதிலாக அவற்றை ஒன்றிணைக்கும் வகையில் கருத்தொருமிப்பை பேணுகின்றது. அது பல்வகையான மாறுபட்ட கருத்துக்களை ஊக்குவித்து வழிவழி மரபாக பயன்படுத்தப்பட்டுவரும் தீர்மானசெயற்பாட்டு முறைகளில் இயல்பாகவுள்ள அதிகாரம் செலுத்த முயலும் போட்டி மனப்பான்மைகளை கட்டுப்படுத்துகின்றது.
பஹாய் கலந்தாலோசனை பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது:
பலதரப்பட்ட கருத்துக்களை குறிவைத்து முடிந்த அளவு பரவலான மூலாதாரங்களிலிருந்து தகவல் சேகரிக்கப்படவேண்டும். ஒரு வேளை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அல்லது அறிவியலாளர்கள் போன்ற வல்லுணர்களின் உதவி இதற்காக நாடப்பட வேண்டியிருக்கலாம். மேலும், வழிவழியான தகவல் சேகரிப்பு சாதனங்ளுக்கும் அப்பால் தகவல் சேகரிப்பட அல்லது பல்வேறு பின்னனியில் உள்ள சமூக உறுப்பினர்களின் கருத்துக்களை கண்டறிய விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கலாம்.
கலந்தாலோசிப்பின் போது, பங்கேற்பாளர்கள் முடிந்த அளவு ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையாகவும், அதே வேளை மற்றவர்களின் கருத்துக்களின்பால் பனிவான அக்கறை மனப்பான்மையை கொண்டிருக்கவும் வேண்டும். தனிநபர்களை தாக்கிப்பேசுவது, இறுதி எச்சரிக்கைகள், மற்றும் பாரபட்சமான வார்த்தைகளை தவிர்க்கவேண்டும்.
ஒரு கருத்து முன்மொழியப்பட்டவுடன் அது அக்குழுவின் உடைமையாகிவிடுகின்றது. இது கேட்பதற்கு எளிமையாக இருந்தபோதிலும், கலந்தாலோசனை குறித்த கோட்பாடுகளுள் இது ஓர் ஆழமான கோட்பாடாகும். ஏனெனில், இக்கோட்பாட்டின் அடிப்படையில் எல்லா கருத்துக்களும் எந்த தனிநபர், துணைக்குழு, அல்லது தோகுதியினருக்கும் உடைமையாகாது. தனிநபரை உயர்த்துதல் அல்லது தன்னைச்சுற்றி ஆதரவாளர்களை சேகரிக்கும் ஆசையிலிருந்து பிறக்கும் கருத்துக்களோடு ஒப்பிடுகையில், சேவையாற்றவேண்டும் எனும் தூய்மையான ஆவலிலிருந்து பிறக்கும் எண்ணங்களை இக்கோட்பாடு தூண்டிவிடுகிறது.
குழு கருத்தொருமிப்புக்காக முயலுகின்றது, ஆனால், இறுதி முடிவெடுப்பதற்காக பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படலாம். இக்கோட்பாடு குறித்த ஒரு முக்கிய அம்சம் யாதெனில் ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், குழுவினர் அனைவரும் அம்முடிவுக்கு ஒற்றுமையோடு உடனடியாக கீழ்படிய வேண்டும் என்பதாகும் – இது அம்முடிவுக்கு எத்தனை பேர்கள் வாக்களித்தனர் என்பதைப் பொருத்ததல்ல.
இந்த நிலையில் கலந்தாலோசனையில் “சிறுபான்மையினர்” அறிக்கை அல்லது “எதிர்ப்பாளர்கள் நிலை” என்பது இருக்கமுடியாது. மாறாக, ஒரு முடிவு தவறான முடிவாகவே இருந்தபோதிலும், முடிவெடுக்கும் குழுவும், சார்புடைய சமூகத்தினரும் முழுமனதோடு அம்முடிவை ஆதரிக்கும் பட்சத்தில் அத்தவறு அம்முடிவின் அமலாக்கத்தின்போது கண்டிப்பாக வெளிப்படும்.
ஒரு முடிவோ திட்டமோ தோல்வியுறும்போது, (அதன் விளைவான) பிரச்சினை அக்கருத்து சார்ந்ததாக இருக்குமே ஒழிய, சமூக உறுப்பினர்களின் ஆதரவு அல்லது அக்கருத்தின் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கை சார்ந்ததாக இருக்காது என்பதை ஒற்றுமை குறித்த கடமையுணர்வு உறுதிசெய்கின்றது.
மீண்டும், இங்கு கோட்பாடு, ஒற்றுமையின் ஆற்றல் பற்றிய புரிந்துகொள்ளலையே சென்று சாருகின்றது. பஹாவுல்லாவின் திருமகனாரான, அப்து’ல்-பஹா, பஹாய்கள் எக்காலத்திலும் எப்பிரச்சினையிலும் கருத்தொருமிப்பு காண முயல வேண்டும் என கூறியுள்ளார்:
அவர்கள் ஒரு விஷயம் குறித்து சரியாக இருந்து ஆனால், கருத்துவேறுபாடு கொண்டவர்களாக இருப்பதைவிட தவறான கருத்து கொண்டிருந்தபோதிலும், அதில் ஒத்தகருத்தினராக இருப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில், கருத்துவேறுபாடு தெய்வீக அடித்தலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். ஒரு சாரர் சரியான கருத்துடையவராகவும் (மற்றவர் வேறு கருத்துடையவராகவும் இருந்து) அதனால் அங்கு கருத்துவேறுபாடு நேர்ந்தால் அக்கருத்துவேறுபாட்டின் விளைவாக அங்கு ஆயிரம் தவறுகள் ஏற்படக்கூடும். ஆனால், அவ்விரு குழுக்களும் கருத்தொருமித்து ஆனால் தவறான முடிவே எடுக்கும்போது, அவர்கள் ஒற்றுமையாக இருக்கும்நிலையில் உண்மை வெளிப்பட்டு தவறு திருத்தப்படும்.
மூலாதாரம்: http://info.bahai.org/article-1-3-6-3.html