மருத்துவருக்கான நிருபம்


பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமுமான பஹாவுல்லாவின் எழுத்துக்களை சுமார் 100 நூல்களாக தொகுக்கலாம். பல நூல்களையும், ஆயிரக்கணக்கில் நிருபங்களையும் அவரது 40 வருட சமயப் பணிக்காலத்தில் அவர் படைத்துள்ளார். பெரும்பாலான அவரது எழுத்துக்கள் இதுவரை மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று “மருத்துவருக்கான நிருபம்” என்பதாகும். உடல் நலம் குறித்து ஓர் அன்பரின் வினாக்களுக்கான பதிலாக இந்த நிருபம் வரையப்பட்டது. இந்த நிருபம் இதுவரை அதிகாரபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை ஆனால், அதன் சில பகுதிகள் தற்காலிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்:

பௌதீக குணப்பாடு

பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து, உடல்நலத்திற்கான சில கோட்பாடுகள்.

கடவுளே! அதிவுயர் அறிவாளரே! தொன்மையான நா மருத்துவர்கள் இல்லாத நிலையில் விவேகமிக்கவர்களை மனநிறைவுறச் செய்யக்கூடியதை உரைக்கின்றது.

மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.

வெற்று வயிறாக இருக்கும்போது உடற்பயிற்சி நன்மைபயக்கும்; அது தசைநார்களை வலுப்படுத்துகிறது. வயிறு நிறைந்திருக்கும்போது அது தீங்குமிக்கதாகும்.

தேவைப்படும் வேளையில், மருத்துவ உதவியை புறக்கணிக்காதீர்கள், ஆனால் உடல் நலமடந்தவுடன் போது அதை கைவிட்டுவிடுங்கள்

ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.

நோயை முதன்மையாக உணவுமுறையைக் கொண்டே குணப்படுத்துங்கள், மற்றும் மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலத்திற்கான நிவாரணம் ஒரே ஒரு மூலிகையில் நீங்கள் காணமுடிந்தால் பல்கூட்டான மருந்துவகைகளை பயன்படுத்தாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைகளை விட்டுவிடுங்கள், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே அதை பயன்படுத்துங்கள்.

வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…

நீங்கள் உணவு உண்டபின் அந்த உணவு படிவுற சற்று நடக்கவும்

(பற்களால்)அரைபட கடினமானவை விவேகமிக்கவர்களால் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறாகவே அதிவுயரிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகிறது.

காலையில் எளிய உணவு உடலுக்கு ஒளி போன்றது.

தீங்குவிளைவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்த்துவிடுங்கள்: அவை உலகில் துயரத்தை விளைவிக்கின்றன.

நோய்களுக்கான காரணங்களை கண்டறியுங்கள். இவ்வாக்கே இவ்வாய்மொழிதலின் முடிவாகும்.
(Star of the West, தொ. 13, எண். 9, டிசம்பர் 1922, ப. 252)

ஆண்டவரிலேயே நமது நம்பிக்கை இருக்க வேண்டும். குணப்படுத்துபவர், அறிவாளர், உதவுபவர் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை… மண்ணுலகு அல்லது விண்ணுலகில் உள்ள எதுவுமே கடவுளின் கைப்பிடிக்கு அப்பாற்பட்டதல்ல.

மருத்துவரே! நோயுற்றோரை குணப்படுத்துவதில், முதலில் தீர்ப்பளிக்கும் நாளுக்கு உடையவரான, கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள், பிறகு கடவுளால் தமது படைப்பினங்களின் குணப்பாட்டிற்கென விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்துங்கள். என் வாழ்வின் மீது ஆணையாக! எமது அன்பெனும் மதுவை அருந்திய மருத்துவர் (எவரோ), அவரது வருகை குணமளிக்கக்கூடியது, அவரது மூச்சு கருணையும் நம்பிக்கையும் ஆகும். உடல்கட்டமைப்பின் நலனுக்கு அவரையே பற்றிக்கொள்ளுங்கள். தமது சிகிச்சைமுறையில் அவர் கடவுளால் உறுதிபடுத்தப்படுகிறார்.
(Star of the West, தொ. 21, எண். 5, ஆகஸ்ட் 1930, ப. 160)

உலகம் அழியப்போகின்றது?


சமீப காலமாக உலகம் அழியப்போகிறது எனும் பேச்சு ஆங்காங்கு எழுந்துவருகின்றது. அது குறித்த செய்திப்படங்கள் கூட தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன மற்றும் விரைவில் உலகம் 2012ல் அழியப்போகிறது என்பது பற்றி ஒரு முழு நீள திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழிவு குறித்த பேச்சு “2012” படத்தை நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உலகம் அழியப்போகிறது இது முதன்முறையல்ல. பல முறை இது போன்ற செய்திகள் உலகை வலம் வந்துள்ளன. உதாரணமாக 1963ல் இதே போன்று உலகம் அழியப்போகிறது எனும் செய்தி கிராமப்புரங்களில் கூட பேசப்பட்டது. ஆனால் அழிந்தது என்னவோ உலகம் அழியப்போகிறது எனும் செய்திதான். இப்போது அது மறுபடியும் தலைதூக்கியுள்ளது.

“நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?” எனும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை கோடானுகோடி வருடங்களாக உலகையும் அதனுள் வாழ்வன அனைத்தையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ள படைப்பாளரான கடவுள் அதை ஒரு நொடியில் அழிப்பதற்காகவா அத்தனை முயற்சி செய்துள்ளார்?

2012ல் உலகம் அழியப்போகிறது எனும் கருத்து அமெரிக்காவின் மாயா பூர்வகுடியினரின் வழக்கிலிருந்து பிறந்ததாகும். அவர்களுடைய பஞ்சாங்கம் 2012ல் ஒரு முடிவுக்கு வருகின்றதால் உலகமும் அதனோடு அழிந்துவிடும் எனும் கருத்தும் தோன்றியுள்ளது. இதிலும் கருத்தவேறுபாடு உண்டு. சிலர் இந்த மாயா பஞ்சாங்கள் உண்மையில் 2012ல் முடியவில்லை என கூறுகின்றனர். அப்பஞ்சாங்கம் மிகவும் சிக்கலானது. அதை தவறாக புரிந்துகொண்டவர்கள் உலகம் முடியப்போகின்றது என கூறுகின்றனர்.

இது போக, உலக அழிவின் மீது மக்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம்? கிருஸ்துவர்களின் சில குழுவினர், விசுவாசிகளை விசுவாசம் அற்றவர்களிடமிருந்து பிரிக்கும் செயலே இது என்கிறார்கள். விசுவாசிகள் அனைவரும் இவ்வுலகிலிருந்து சுவர்கத்திற்கு நேரே போய்விடுவார்களாம். இப்படி இன்னும் பல நம்பிக்கைகள். அப்படியே உலகம் அழிவதாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படுபவர்கள் என யாரையும் காணமுடியவில்லை. வாழ்க்கை எப்போதும் போலவே நடந்துகொண்டிருக்கின்றது, வயதான காலத்தில் ஓய்வ்வூதியத்திற்காக பாடுபடுவோர் உலக அழிவைப் பற்றி சிறிதும் கவலையுறாமல் தமது நோக்கிலேயே கவனமாக இருக்கின்றார்கள். உடலை வருத்தி வேலை செய்வோர் அதில் முழு கவனத்துடனேயே இருக்கின்றனர். உலகில் மாமூலாக அட்டூழியங்கள் எப்போதும் போலவே நிகழ்கின்றன.

அப்படியானால் உலக அழிவு குறித்த கவனம் ஏன்? மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்திற்கான விஷயங்கள் குறைந்துவிட்டதா? “எக்சைட்மெண்டுக்காக” இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றோமா? இது மனித இயல்பு போலும்.

எது எவ்வாறு இருந்த போதிலும், பஹாய் திருவாக்குகளில் இந்த “உலக அழிவு” குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் காணும்போது, உலக அழிவு விரும்பிகளுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். பஹாவுல்லா, தமது சமயம் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது எனவும், அந்த சகாப்தம் ஏறக்குறைய 5,00,000 வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கூறுகின்றார். இக்கால அவதாரமும் தீர்க்கதரிசியுமான அவர் பல விஷயங்கள் குறித்து தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். அவை யாவும் நடந்தேறியுள்ளன. அதே போன்று உலகம் குறைந்தது மேலும் 5.00,000 வருடங்களுக்கு நீடிக்க போகின்றது என அவர் கூறியதிலும் சந்தேகம் ஏதும் ஏற்பட வழியில்லை.

ஆனால், “உலக அழிவு” என்பது ஒரு வகையில் உண்மையே. வியாக்கியானத்தில்தான் தவறே ஒழிய உட்கருத்தில் தவறு கிடையாது. இந்த “உலக அழிவு” என்பது எல்லா சமயங்களிலும் ஏதோ ஒரு வகையில் குறிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் பிரலயம் எனவும், கிருஸ்துவ சமயத்தில் “உலக முடிவு” எனவும், இஸ்லாத்தில் “கியாமத்” எனவும் கூறப்பட்டுள்ளது. அர்த்தங்கள் சற்று மாறுபட்டிருந்தாலும் இவை யாவும் உலகில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

பஹாவுல்லாவின் எழுத்துக்களில் பின்வரும் திருவாக்குக் குறிப்புகளை காணலாம்:

மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!

உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன என்று எண்ணிவிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களாள் செதுக்கி வைத்துள்ளது.

உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பபொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி (பறவை) அதன் இன்னிசையை ஒலித்திடும்.

இங்கு பஹாவுல்லா தற்போது உலகில் நிகழும் ஒழுக்கமின்மை குறித்து தமது காலத்திலேயே முன்கூறியுள்ளார். ஏதோ ஒரு நிகழ்ச்சி, உலகையே உலுக்கும் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு உலகில் மாற்றங்கள் உண்டாகும் மற்றும் அமைதி நிலவும் என்பது புரிகிறது.

பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாசகத்தைக் காணலாம்:

மனிதனின் புத்திரனே! எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உள்ளளூர அது ஒளியும் கருணையும் ஆகும்.

இதிலிருந்து உலக சீர்திருத்தம் அடைய பேரிடர் ஒன்று அவசியம் என பொருள்படுகின்றது. ஆனால் அதன் முடிவு ஒளி நிறைந்ததாகும்.

கிருஸ்தவ விவிலியத்தில் “உலக அழிவு” எனும் வார்த்தைகள் அக்காலத்து ரோமானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டதாகும். சிலர் ரோமானிய மொழியில் இதற்கு மற்றொரு அர்த்தம் “காலங்களின் முடிவு” எனவும் எடுத்துக்கூறியுள்ளனர். அதாவது ஏதோ ஒன்று அழிந்து அதனிடத்தில் மற்றொன்று புதிதாக பிறக்கும் என்பதாகும். உலகம் அழியாது மாறாக, பெரும் மாற்றம் ஏதோ மனிதர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது. அழியப்போவது உலகம் ஒட்டுமொத்தமும் அல்ல; அழியப்போவது மனிதர்கள் குறித்த ஏதோ ஓர் அம்சம்.

கிருஸ்தவ விவிலியத்தில் பதிக்கப்பட்டுள்ள பின்வரும் பிரார்த்தனையை காண்போம்:

பரமண்டலங்களில் இருக்கும் பிதாவே
உமது நாமம் பரிசுத்தபடுவதாக
உமது இராஜ்யம் வருவதாக
உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுப்போல
பூமண்டலத்திலும் செய்யபடுவதாக
அன்றேன்று எங்களுக்குறிய ஆகாரத்தை தாரும்
எங்களுக்கு விரோதமானவர்கள் குற்றங்கள் செய்வதை
நீங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமல்
இரட்சித்துக்கொள்ளும்
உமது இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உடையவைகளே

இந்த பிரார்த்தனையில் சுவர்க்கத்தில் இருப்பது போல இந்த உலகமும் ஆகிட பிரார்த்தனை செய்யப்படுகின்றது. உலகின் பௌதீக அழிவு குறித்து இதில் அறிகுறிகள் இல்லை ஆன்மீக ரீதியில்தான் மாற்றங்கள் பிரார்த்திக்கப்படுகின்றன. அதே போன்று இயேசு நாதரிடம் அவரது மறு வருகை குறித்து கேட்கப்பட்டபோது அவர் பல குறிப்புகளை வழங்கியுள்ளார். இரவில் திருடனைப்போல் வந்துசெல்வேன் என்றெல்லாம் கூறியுள்ளாரே ஒழிய உலக அழிவு பற்றி அவர் எதையுமே கூறவில்லை. சுவர்க்கத்தை போன்று இந்த உலகமும் மாறும் எனும் உற்சாகம் வழங்கும் குறிப்புகளே உள்ளன. இதைப் போன்று மேலும் பல எடுத்துக்காட்டுகளை வழங்கலாம்.

பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளராக விளங்கிய ஷோகி எஃபெண்டி அவர்கள் உலக நிலை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்:

“தற்போது அதன் நிலையைக் காண்கையில், உண்மையில் அதன் அன்மை வருங்காலம் பெரிதும் இருள் சூழ்ந்ததாக, பெருந்துயரமளிக்கும் இருள் சூள்ந்ததாகவே உள்ளது. ஆனால், இதன் பிறகு காணப்படும் வருங்காலமோ பிரகாசம் மிக்கதாக, தேஜஸ் நிறைந்த பிரகாசம் மிக்கதாக உள்ளது.”

என கூறியுள்ளார். உலகம் ஏதோ ஒரு கட்டத்தை இப்போது அடைந்துகொண்டிருக்கின்றது. அது மிகவும் இருள் சூழ்ந்த ஒரு காலம் என்பது உண்மை. உலகையே உலுக்கும் பேரிடர் ஏதோ ஒன்று நிகழப்போகின்றது.  ஆனால், இந்த துயர சூழ்நிலை அழிந்து பிரகாசம் மிக்க எதிர்காலம் இவ்வுலகிற்காக காத்துக்கொண்டிருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

“தூய்மையான மற்றும் நற்செயல்களின் மூலமும் மெச்சத்தகுந்ததும் மிக பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகசீர்திருத்தம் அடையப்படக்கூடும்,”

எனும் பஹாவுல்லா திருவாய்மொழிந்தருளியுள்ளார். அழியப்போவது இவ்வுலகமல்ல, மாறாக, உலகில் காணப்படும் ஆன்மீக இருளே. ஆகவே உலகம் அழியப்போகின்றது எனும் வீண் எண்ணத்தை விடுத்து உலக நன்மைக்காக பாடுபடுவோமாக, இவ்வுலகைச் சூழ்ந்துள்ள ஆன்மீக இருளின் அழிவிற்காக பாடுபடுவோமாக.