‘பெர்செப்ஷன்’ (கருத்துணர்வுகள்?)
(நன்றி K. Gopal)
…உங்கள் சிந்தனைக்கு…
வாஷிங்கடன் டி.சி. மெட்ரோ நிலையத்தில் குளிர் நிறைந்த ஜனவரி 2007 காலைப்பொழுது ஒன்றில் பின்வரும் சம்பவம் நிகழ்ந்தது. வயலின் ஏந்திய மனிதர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு இசைக் கலைஞர் பாக்’கின் 6 படைப்புக்களை வாசித்தார். அவ்வேளை சுமார் இரண்டாயிரம் பேர்கள் அந்த நிலையத்தை கடந்துகொண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்களாவர். சுமார் 3 நிமிடங்கள் கழித்து நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கு இசைக்கலைஞர் ஒருவர் இசைமழை பொழிவதைப் பார்த்தார். அவர் சற்று நிதானித்து சில வினாடிகள் நின்று பிறகு தன் வழியே விரைவாகச் சென்றார்.
4 நிமிடங்களுக்குப் பிறகு:
அந்த இசைக் கலைஞர் தமது முதல் டாலரைப் பெற்றார்: ஒரு பெண்மனி அவர் முன் இருந்த தொப்பியில் பணத்தை வீசிவிட்டு, ஆனால் நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்றார்…
6 நிமிடங்கள்:
ஓர் இளைஞர் சுவற்றில் சாய்ந்தவாறு இசையை செவிமடுத்தும், பிறகு தமது கைக்கடிகாரத்தைக் கவனித்துவிட்டு தொடரந்து நடக்கவாரம்பித்தார்.
10 நிமிடங்கள்:
மூன்று வயது சிறுவனொருவன் நின்றான் ஆனால் அவனுடைய தாயார் அவனை விறுவிறுவென்று இழுத்துச் சென்றாள். அச்சிறுவன் மீண்டும் இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்தான், ஆனால் அவனுடைய தாயார் அவனை மேலும் வற்புறுத்தி தொடர்ந்து நடந்தாள், சிறுவனும் அவ்வப்போது இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். மேலும் பல சிறுவர்கள் அதே போன்று செய்தனர். ஆனால், பெற்றோர்கள் அவர்களை விரைவாகவே இழுத்துச் சென்றனர்.
45 நிமிடங்கள்:
இசைக் கலைஞர் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ஆறே ஆறு பேர்கள் மட்டும் சற்று நின்று இசையை செவிமடுத்துச் சென்றனர். சுமார் 20 பேர்கள் பணத்தை போட்டுவிட்டு ஆனால், நிற்காமல் நடந்து சென்றனர். அம்மனிதருக்கு அன்று கிடைத்த வருமானம் 32 டாலர்.
1 மணி நேரம்:
அவர் தமது வாசிப்பை முடித்துக் கொண்டார். அங்கு நிசப்தம் நிலவியது. யாரும் எதையும் கவனிக்கவில்லை. யாரும் கை தட்டவில்லை அல்லது யாரும் அவரை அறிந்துகொள்ளவும் முயலவில்லை.
யாருக்கும் தெரியாது, ஆனால் நமது இசைக்கலைஞரின் பெயர் ஜோஷுவா பெல் ஆகும். அவர் உலகளாவிய நிலையில் ஒரு மாபெரும் இசைக்கலைஞராவார். அவர் அந்த மெட்ரோ நிலையத்தில் மிகவும் சிக்கலான இசைப் படைப்பு ஒன்றை 3.5 மில்லியன் டாலர் விலையுடைய வயலினில் வாசித்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜோஷுவாவின் இசை நிகழ்ச்சி ஒன்றின் 100டாலர் மதிப்புடைய சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு முடிந்து போயின.
இது ஒரு உண்மைக் கதை. ஜோஷுவாவின் அந்த நிகழ்ச்சி வாஷிங்டன் போஸ்ட்’டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் ‘பெர்செப்ஷன்’, சுவை மற்றும் முக்கியத்துவங்கள் குறித்த ஒரு ஆய்வின் பகுதியாக அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எழுந்த கேள்வி: ஒரு பொது இட சூழ்நிலையில் மக்கள் தங்கள் அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘அழகு’ கண்களுக்கு தெரிகிறதா? நிதானித்து அதை நாம் ரசிக்கின்றோமா? எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் நாம் கலையாற்றலை கண்டுகொள்கிறோமா?
பின்வருவது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கக்கூடும்: உலக பிரசித்தி பெற்ற ஓர் இசைக் கலைஞர், பெருமதிப்புடைய இசைக்கருவி ஒன்றில் இதுவரை எழுதப்பட்ட இசைகளுள் தலையாய இசை ஒன்றை வாசித்ததை ரசித்திடக்கூட நமக்கு நேரம் இல்லையெனில்… நாம் தினந்தோறும் வேறு எத்தனை எத்தனை விஷயங்களைத்தான் இவ்வாறு தவறவிடுகிறோமோ?
உங்களது மொழிப்பெயர்ப்பு நன்று. மிக்க நன்றி.