இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்?


பஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு பல நாடுகளிலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது ஏன்? தற்போது இரான் நாட்டில் பல பஹாய்கள் மரண தண்டனைக்குள்ளாகி மேலும் பலர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு பலவித பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஏன்?

இக்கேள்விக்கான பதிலை பல கோணங்களிலிருந்து ஆராயலாம். முதலாவதாக சமய ரீதியில் இதைக் காண்போம்.

உலகின் பெரும்பாலான சமயங்கள் ஏதோ ஒரு வகையில் அவற்றின் ஸ்தாபகரின் மறைவுக்குப் பிறகு அதே ஸ்தாபகர் அல்லது அவதாரம் மறுபடியும் உலகில் தோன்றுவர் என போதித்துள்ளன. உதாரணமாக கிருஷ்னர் “கல்கி விஷ்ணு யாஷா” எனும் பெயரில் கலி யுகத்தின் முடிவில் அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவார் என்பது ஐதீகம் மட்டுமல்ல பகவத் கீதையிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. புத்தரைப் பொருத்த மட்டில் அவர் புத்தர்களின் வரிசையில் நான்காவது புத்தர் எனவும் பிற்காலத்தில் ஐந்தாவது புத்தராக, “மைத்ரேயி அமிதபா” எனும் நாமத்தில் மறுபடியும் பூமியில் தோன்றுவார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். யூத மதத்தினர்களும் மோசஸ் குறித்து இது போன்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். கிருஸ்தவர்களும் இயேசு கிருஸ்து “இறைவனின் ஒளியில்” மறுபடியும் பூமியில் தோன்றி தமது விசுவாசிகளை இரட்சிப்பார் என எதிர்ப்பார்க்கின்றனர். இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவினரான சுன்ன வர்க்கத்தினரும் இயேசு மறுபடியும் தோன்றுவார், அதுவே கியாமத் நாள் எனவும் நம்புகின்றனர். அதே போன்று ஷீயா முஸ்லீம்கள் தங்களின் 12வது இமாம் ஆன இமாம் மெஹ்டி மறுபடியும் தோன்றுவார் என கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் முதன்மையாக வீற்றிருப்பவர்களுள் தற்போதைய இரான் நாட்டு அதிபரான அஹ்மதிநிஜாட்டும் ஒருவராவார்.

ஆனால், அந்த அந்த தூதர்கள் எங்கு, எப்படி, எச்சூழ்நிலையில் தோன்றுவர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவற்றை போதிக்கும் திருநூல்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, விசுவாசிகள் தாங்களே தங்கள் மனதில் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் இறைத்தூதர் இவ்வாறுதான் தோன்றுவார் அல்லது தோன்றவேண்டும் என முடிவு செய்து அதையே காலங்காலமாக நம்பி வருகின்றனர். யூதர்கள் இயேசு நாதரை மறுத்து அவர் மரணமுறுவதற்கு காரணமாக இருந்ததும் இவ்வித கற்பனையான நம்பிக்கைகளே ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘figments of imagination’ என கூறுவர். அவர் (இயேசு) டேவிட்டின் சிங்காதனத்தில் அமர்ந்து உலகை செங்கோல் செலுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால் அவரோ வெறும் மாட்டுத் தொட்டிலில் பிறந்தார். அவரது தந்தையோ ஒரு சாதாரன தச்சர். இதை காரணமாகக் கொண்டு அவரை கேலி செய்து பின்னாளில் அவர் சிலுவையில் அரையப்பட்டு மரணமும் அடைந்தார். ரோம் நாட்டில் அவரது விசுவாசிகள் பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பௌத்த சமயம் இந்தியாவில் உதித்த போது அது இந்திய நாட்டில் நிலைபெறாது சீன, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சியும் கண்டது. இந்திய நாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கிருஸ்துவ சமய நூலான பழைய ஏற்பாட்டிலும் ஆபிரஹாம் ஒரே கடவுள் கோட்பாட்டை போதித்த போது அவருக்கு நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு புதிய சமயம் தோற்றம் காணும் போது அது மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் அவற்றின் விசுவாசிகள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்புதிய சமயத்தின் ஒளி சிறுக சிறுகவே வெளிப்படுகிறது அதனு உண்மையும் சிறிது சிறிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

கிருஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பார்சி மதத்தினர் போன்று பஹாய்கள் “திருநூலின் மக்களாக” (People of the Book) இஸ்லாத்தில் கருதப்படுவதில்லை. மற்ற சமயங்கள் போன்று பஹாய்களும் ஒரு கடவுள், கியாமத் நாள், ஆன்மாவின் நெறிமுறை சார்ந்த தீர்ப்பளிப்பு, சாத்தானிய பன்பு போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் பஹாய்கள் திருநூலின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு முதன்மையான காரணம், முகம்மது நபியவர்களுக்கு பிறகு வேறு இறை தூதர்கள் தோன்ற போவதில்லை எனும் ஒரு கருத்தாகும். ஒரு வகையில் இக்கருத்து உண்மைதான். முகம்மது நபியவர்கள் நபிகள் வரிசையில் இறுதியானவர். அவரே “ஹாத்திமுந் நபியீன்” நபியாவார். அதாவது அவர் ‘தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியானவர்’. இதை பஹாய்கள் மறுக்கவில்லை. ஆனால், கடவுள் அவதாரங்கள் இருவகைப் படுவர்; தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்கள் (ரசூல்கள்). கடவுளின் முழு அவதாரங்களான ரசூல்கள் இனி தோன்றமாட்டார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. பார்க்கப்போனால் இஸ்லாமிய மறைகளில் வருங்காலத்தில் அத்தகைய தூதர்கள் தோன்றுவதற்கான பல குறிப்புகள் உள்ளன. இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1260ல் இத்தகைய தோற்றம் ஒன்று நடைபெறும் என்பது ஷீயா வர்க்கத்தினரின் மரபாகும். அதாவது அவர்களின் இறுதி இமாமான இமாம் முகம்மது இப்ன் அல்-ஹசான் இயேசு கிருஸ்துவோடு ஒன்றாக இவ்வுலகில் தோன்றுவார் எனவும், இஸ்லாத்தை இவ்வுலகில் மறுஸ்தாபிதம் செய்வார் என்பதும் நம்பிக்கையாகும். இதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய ஹதீஸ்களில் நிறையவே உள்ளன.

ஹி1260ல் அதாவது அதற்கு இணையான ஆங்கில வருடம் 1844ல் முகம்மது அவர்களின் திருமகளாரான பாத்திமா அம்மையாரின் வழியில் உதித்தவரான சிய்யிட் அலி முகம்மது அல்லது ‘பாப்’ அதாவது ‘வாசல்’ எனும் பெயர் கொண்டவர் தாமே அத்தகைய இறைத் தூதர் என அறிவித்தார். இரான் நாடே அல்லோலகல்லோலமாகியது. சில மதிப்பீடுகளின்படி இரான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பாப் அவர்களின் விசுவாசிகளாயினர் என கூறுப்படுகின்றது. ஆனால், திருமறைகளில் பல நிரூபனங்கள் இருந்த போதும் அதற்கு முன் உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களுக்கும் நிகழ்ந்தது போன்று பாப் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இறுதியில் 750 சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையானார்.

பாப் அவர்களுக்கு ஏற்பட்ட இம்முடிவுக்குக் காரணம், அவர் முன்கூறப்பட்டதுபோல் இஸ்லாம் சமயத்தை மறுஸ்தாபிதம் செய்யாமல் ஒரு புதிய சமயத்தையே தாம் தாங்கி வந்திருப்பதாக கூறியது ஒரு முக்கிய காரணமாகும். (பாப்’யி சமயத்தின் வரலாற்றை விவரிக்கும் நபில் அவர்களின் The Dawnbreakers நூலை காணவும்) புதிய சமயத்தைக் கொண்டுவந்தது ஒரு பக்கமிருக்க அவர் இஸ்லாத்தின் சமயக்காலகட்டம் முடிந்து தமது அறிவிப்பால் ஒரு புதிய சமயகாலகட்டம் ஆரம்பித்துள்ளது எனவும் கூறினார். மேலும் பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான முன்னோடி மட்டுமே எனவும் கூறினார். பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு 1863ல் பாப் அவர்களின் விசுவாசிகளுள் ஒருவரான பஹாவுல்லா பாப் அவர்கள் அறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் தாமே என அறிவித்தார். (பாப் அவர்களைப் போன்று பஹாவுல்லா கொல்லப்படாவிடினும் அவர் தேசப்பிரஷ்டத்திற்கு உள்ளாகி இரான், இராக், துருக்கி மற்றும் இறுதியில் 1868ல் ஒட்டமான் அரசின் சிறை நகரான ஆக்கா நகருக்கு கைதியாக அனுப்பப்பட்டார். இன்று பஹாய்களின் புனித ஸ்தலம் அன்று பாலஸ்தீனம் எனவும் இன்று இஸ்ரேல் எனவும் உருவெடுத்துள்ள நாட்டிலேயே உள்ளது. பாப் அவர்களின் விசுவாசிகள் பின்னாளில் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டு ‘பஹாய்கள்’ என வழங்கப்படுகின்றனர். திருக்குர்’ஆனுக்குப் பதிலாக பஹாய்கள் பாப் மற்றும் பஹாவுல்லா எழுதிய புனித எழுத்துக்களை தங்கள் புனித நூல்களாக கொண்டுள்ளனர். பஹாய் சமூக விதிமுறைகள் இஸ்லாத்தின் சமூக விதிமுறைகளுக்கு சற்று மாறுபட்டவை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.) உதாரணமாக பஹாவுல்லா ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கின்றார். இருபாலருக்கும் கல்வி வாய்ப்புக்கள் சமமாக இருக்கவேண்டும் அல்லது பெண்களுக்கு இதில் முதன்மை வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார். தாய்மைப் பேறு பெண்களுக்கு உரியது. அத்தாய்களுக்கு தக்க கல்வியறிவு இல்லையெனில் அவர்கள் எவ்வாறு நல்ல தாய்மார்களாக இருக்கமுடியும்? இது போன்றே பஹாவுல்லா இக்காலத்திற்கு தேவையான பல கோட்பாடுகளை போதித்துள்ளார். ஆனால், பழமை விரும்பிகளுக்கு இவை யாவும் ஏற்பு இல்லை. இரான் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதை தெளிவாகவே விளக்குகின்றது.

மேலும், பஹாவுல்லா இனி மக்களுக்கு இடையீட்டாளர்களாக மதகுருக்கள், மதத்தலைவர்கள், புரோகிதர்கள் போன்றோர் இனி தேவையில்லை என விதித்துள்ளார். கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளின் குறிக்கோளை தாங்களாகவே படித்து அறிந்துகொள்ளலாம, இடையீட்டாளர்கள் இனி தேவையில்லை. அதாவது பாதிரிகள், முல்லாக்கள் போன்றோர் தேவையில்லை.

மக்கள் சுயமாக சிந்தித்து எதையும் தேர்வு செய்ய வேண்டும் என பஹாவுல்லா போதிக்கின்றார். ஆனால், முக்கிய சமயங்களில் இது ஊக்குவிக்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் எனும் நிலை உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளான உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக ஐரோப்பாவின் இருள் காலத்தைக் குறிப்பிடலாம். மதகுருக்கள் வைத்ததே சட்டம். கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்.

ஆக, இவ்விதமாக பஹாய்கள், குறிப்பாக இரான் நாட்டில் ஏன் எதிர்ப்புக்குள்ளாகின்றனர் என்பதற்கு பல காரணங்களைச் சுட்டலாம். ஆனால், இவ்வெதிர்ப்புகள் காலப்போக்கில் சூரியனைக் கண்ட பனி போல் விலகி, இயேசுநாதர் கூறியது போல், இவ்வுலகமும் கடவுளின் சுவர்க்கத்தைப் போன்று ஆகும் என்பது நிச்சயமே.

“இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்?” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. நல்ல சுருக்கமான கட்டுரை, பஹாய்கள் மற்ற சமுதாயத்தவர்களுடன் இனைந்து ஒரு புதிய உலகை ஏற்படுத்துவார்களாக! அப்புதிய உலகம் பஹாவுள்ளாவின் கருனையினால் நிரைவேற்றப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: