ஜூலை 25
இரான் நாட்டின் சிறு பான்மை சமூகங்களில் ஆகப் பெரியதும், நீண்டகாலமாகவே ஒடுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ள பஹாய் சமூகத்தின் மீதான தாக்குதல்களை இரான் நாட்டின் இஸ்லாமிய அரசு அதிகரித்து வருகின்றது, என அச்சமூகத்தின் பரிந்துரையாளர்கள் கூறுகின்றனர்.
சமீப காலமாக இரான் நாட்டின் பஹாய் சமய உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் இடுகாடுகள் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகள் ஆராயப்பட்டும் வருகின்றன.
ஜூலை மாதம் 18ம் தேதியன்று, இஸ்பஃஹான் மற்றும் புருஜிர்ட் நகரங்களில் உள்ள இரண்டு பஹாய் இடுகாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளதாக இரான் நாட்டின் எதிர்கட்சி செய்தித்தலமான ரஹானா அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இஸ்பாஃஹான் நகரத்தில் உள்ள இடுகாட்டின் நுழைவாயிலில் அத்துமீறி தடுப்புகள் வைக்கப்பட்டன. இவ்விஷயம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது ஆனால் அவ்வதிகாரிகள் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது அரசாங்கத்தின் சார்பாக பஹாய் இடுகாடுகளை சீரழிப்பதற்கான மறைமுகமான திட்டத்தின் ஒரு பகுதி என ரஹானா பத்திரிக்கை நிருபர் கூறினார்.
மேற்கொண்டு, பிர்ஜான்ட் நகரில் உள்ள வங்கிகள் பஹாய்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆராய வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளன என எதிர்கட்சி சார்பான ஹிரானா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இ்ந்த மறைமுக ஆய்வுகள் இரான் நாட்டின் இண்டெலிஜன்ஸ் அமைச்சினால் ஆணையிடப்பட்டும் பஹாய் வணிகர்கள் மற்றும் அவர்களின் முஸ்லிம் அண்டைவீட்டினரை சென்று சந்தித்தலையும் இது உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விசாரனைகளின் வாயிலாக பெறப்படும் தகவல்களைக் கொண்டு அதிகாரிகள் என்ன செய்திட திட்டமிட்டுள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை.
28 ஜூன் அன்று, இவெல் எனும் இடத்தில் பஹாய்களுக்கு சொந்தமான 50 வீடுகள் தீயிடப்பட்டும் பின் தரைமட்டமாக்கப்பட்டும் உள்ளன. பஹாய்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் குறிவைக்கும், அதிகாரபூர்வமான அனுமதியைப் பெற்றுள்ள அடக்குமுறை திட்டங்களே இவை என பஹாய் உலக செய்தி சேவையகம் கருத்து தெரிவித்துள்ளது.
“பஹாய்கள் இந்த இடத்தில் 100 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் மற்றும் இங்கு ஒரு காலத்தில் பெரிய பஹாய் சமூகம் ஒன்று இருந்தது,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாட்டின் பிரதிநிதியான டையேன் அலாயி கூறினார்.
“ஆனால், இரான் புரட்சிக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து, 1983ல், ஏறக்குறைய 30 குடும்பங்கள் இங்கும் அதற்கு அருகில் இருந்த கிராமங்களில் இருந்தும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அது முதற்கொண்டு அவர்கள் சட்டபூர்வமாக இதற்கு தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் எந்த முடிவும் காணப்படவில்லை. இவர்கள் கோடைக்காலங்களில் தங்கள் நிலங்களின் விளைச்சல்களை அறுவடை செய்வதற்காக மட்டுமே இங்கு வந்துசெல்கின்றனர்,” என அவர் மேலும் கூறினார்.
ஒரு காலத்தில் ஷீயா இஸ்லாத்தின் ஒரு சிறு பிரிவு என நம்பப்பட்ட பஹாய் சமயம் ஒரு தன்னிச்சையான சமயமாகும். அதை ஷீயா மதகுருக்கள் இஸ்லாத்திற்கு எதிரான மதப்பிரிவு என குற்றஞ்சாற்றியுள்ளனர். இருந்த போதும் சில இரான் நாட்டின் மறுசீரமைப்பு கொள்கையுடைய மதகுருக்கள் பஹாய்களோடு இணக்கம் காணவும் கடந்த காலங்களில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு தங்கள் வருத்தத்தையும் தெரிவிக்கவும் செய்துள்ளனர்.
எகிப்து உட்பட பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் சுன்ன இஸ்லாமிய தீவிரவாதிகளின் மத்தியில் பஹாய்கள் இத்தகைய எதிர்ப்புக்களை அனுபவித்து வருகின்றனர்.
— லோஸ் எஞ்சலிஸ் டைம்ஸ்