ஒரு நண்பருக்கான பிரார்த்தனை


உலக பஹாய்களுக்கு,

என் பெயர் ஏவா, ஆகுஸ்டி, நோர்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் வாழும் ஒரு ஸ்பேய்ன் மொழி பேசும் பஹாய். சென்ற வாரம் ஸ்பேய்ன் நாட்டிலிருந்து ஒரு கெட்ட செய்தி வந்தது. என் நல்ல நண்பரான அட்டாவுல்லா தைபிஃக் தமது குடும்பத்திற்காக ஊதியம் தேடும் முயற்சியில் தமது உயிரை இழந்தார். ஸ்பேய்ன் நாட்டில் கடும் பொருளாதார பிரச்சினை நிலவுகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனால் நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் என் நண்பர் இராணுவத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். தமது வேலையின் காரணமாக அவர் தமது மனைவி, மகன், மகள் ஆகியோரை விட்டு ஆப்ஃகானிஸ்தான் சென்றார்.

ஒரு நாள் அவர் இரு காவலதிகாரிகளுடன் இரண்டு இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்றார். அவர் தமது மொழிபெயர்ப்பு வேலையை முடிக்கும் போது அவரும் அவருடன் வந்திருந்த இரண்டு இராணுவ வீரர்களும் ஒரு தீவிரவாதியினால் முதுகில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர் மிக மிக நல்ல நண்பர், எப்போதும் களிப்பு மிகுந்தும், சதா புன்னகைத்துக் கொண்டும், எல்லா வேளைகளிலும் எல்லோருக்காகவும் சேவை செய்தும் வந்தார்.

நடந்ததை என்னால் மாற்றமுடியாது, அது ஏதோ ஒரு காரணத்திற்காக நடந்துள்ளது. இப்போது பஹாய் சமயம் ஸ்பேய்ன் நாட்டின் செய்திகளில் அதிகமாக காணப்படுகின்றது, மற்றும் பலர் அதில் ஆர்வம் காண்பித்தும் வருகின்றனர். என் நண்பர் தமது மரணத்திற்கு பின்பும் என் நகரத்தில் உள்ள தமது சமூகத்திற்காக சேவை சேவை செய்து வருகின்றார்.

அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலளிக்கும் ஒரு முயற்சியாக உலகில் உள்ள பஹாய்களை அவருக்காக பிரார்த்தனை செய்ய ஒன்று கூட்ட முயற்சிக்க விரும்புகின்றேன். ஆகவே, இந்த மின்னஞ்சல் இது குறித்ததே ஆகும். உலகம் முழுவதும் அவருக்காக ஒரு பிரார்த்தனையை வேண்டுகிறேன், அல்லது ஒரு பிரார்த்தனை கூட்டம், அல்லது ஒரே ஒரு பிரார்த்தனை செய்திட வேண்டுகிறேன். இம்முயற்சியின் வாயிலாக அட்டாவுல்லா தைபிஃக்கிற்காக உலகம் ஒரு மனதானது, நமது நோக்கங்களுக்காக நாம் மேலும் அதிக வலுவுடன் முயற்சிக்க முடியும், பஹாய்களாகிய நாம் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றோம் மற்றும் அவருடய மரணம் நம் எல்லாரையும் மேலும் ஒன்றுபடுத்தியுள்ளது என அவருடைய குடும்பத்திற்காக நாம் வெளிப்படுத்த முடியும்.

ஆகவே, என்னுடைய முயற்சிக்கு நீங்கள் உதவிட விரும்பினால், நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் மற்றும் எங்கு பிரார்த்தனை செய்தீர்கள், அல்லது ஒரு படத்தையோ அனுப்பினால், ஸாராகோஸா பஹாய் நிலையத்தில் பெரிய உலக வரைபடம் ஒன்றை நாங்கள அமைத்திடுவோம். இதை உங்களால் செய்ய முடியாவிட்டாலும், அவருக்காவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் பிரார்தனையாவது செய்யுங்கள், அதன் மூலமாக, அவர்கள் அதை தெரிந்துகொள்ளாவிடினும் நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள்.

இதை படித்ததற்காகவும், உங்களுடைய உதவிக்காகவும் என் முன் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்!

பஹாய் அன்புடன்,

ஏவா மரியா ஆகுஸ்டி பூலிடோ

ஏவாவின் மின்னஞ்சல் முகவரி: eva.agusti@gmail.com

இரான் நாட்டின் அரசியலமைப்பு கட்சியின் பிரகடனம்


5 செப்டம்பர்

அயராத உறுதிப்பாட்டின் பாடங்கள்

இரான் நாட்டின் அரசியலமைப்பு கட்சியின் பிரகடனம்

இரான் நாட்டின் பஹாய் சமூகத்தின் தலைவர்களின் சிறை தண்டனை குறித்து வெறும் அனுதாபம் காட்டுவது மற்றும் கண்டனக் குரல் எழுப்புவது மட்டும் போதாது. இஸ்லாமிய சர்வாதிகார அரசு, இரான் நாட்டின் தனிச்சிறப்பு மிக்க இவ்விரண்டு பெண்களையும் ஐந்து ஆண்களையும், (யாரான் எனப்படும் இரான் நாட்டு பஹாய் தலைமைத்துவம்) அவர்கள் பஹாய்கள் எனும் காரணத்திற்காக மொத்தம் நூற்றிநாற்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு உட்படுத்தியுள்ளது. பஹாய் சமூகத்தின் தலைமையை அழித்துவிடும் தொடர் குறிக்கோளுக்கு இணங்க, மீண்டும் ஒரு பஹாய் குழு அவர்களின் சமய-சமூக நம்பிக்கைக்காக பலியிடப்பட்டுள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காஃஜார் ஆட்சியின் கீழ் கொடூரமான முறையில் இரத்தக்களரியில் ஆரம்பித்த நீண்ட வெட்கக்கேடான கதையோடு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இஸ்லாமிய குடியரசினால் தொடரப்படும் சமய சிறுபான்மையினரை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இக்குழுவினருக்கு எதிரான சிறைத் தண்டனையாகும். ஆனால், இந்த நீண்ட வெட்கக்கேடான கதைக்கு வேறொரு முகப்பும் உள்ளது, குறிப்பாக ஆட்சியிலுள்ள சர்வாதிகாரத்திற்கெதிரான மக்களின் போராட்டம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்: பஹாய்கள் அரசியலில் பங்கேற்பதில்லை; ஆனால் இரான் நாட்டு அரசியல் அவர்களிடமிருந்த நல்ல பாடங்களை கற்றுக்கொள்ளமுடியும்.

எத்தகைய பெருங் கொடுமையின் கீழும் சற்றும் வழுவாத உறுதிப்பாடென்பது பஹாய்கள் இரான் நாட்டவர்களுக்குக் வழங்கக்கூடிய முதல் பாடமாகும். பஹாய் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, வியாபாரங்கள் முடக்கப்பட்டுள்ளன, உடைமைகள் திருடப்பட்டுள்ளன, தொழில் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து பஹாய்கள் விரட்டப்பட்டுள்ளனர், அவர்கள் மரணதண்டனை அல்லது நீண்ட சிறைவாசத்தை எதிர்நோக்குகின்றனர், ஆனால், அவர்கள் சிறிதும் அயரவோ முனகவோ நம்பிக்கையிழந்தோ போவதில்லை. அவர்கள் தாங்கள் மனதொடிந்ததாகவோ வகையற்று போனதாகவோ கூறிக்கொள்வதில்லை. பச்சை இயக்கத்தின்(தற்போது இரான் நாட்டில் முடங்கிப்போய்விட்ட புரட்சிக்கு இடப்பட்ட பெயர்) தோல்வி குறித்து பேசுபவர்கள் தங்களின் சக பஹாய் பிரஜைகளைப் பார்த்தால் போதும். இவர்களுள் தோல்வி தொனியில் பேசுவதற்கு தகுதியானவர் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்?

முதல் பாடம் போன்று அதே அளவு முக்கியத்துவம் கொண்டது, குறைந்த தனிநபர் ஆற்றல்களை ஒன்றுதிரட்டி அவர்களை ஒரு வலிமைமிக்க சமூக பின்னலமைப்பாக மாற்றுவது இரண்டாவது பாடமாகும். இந்த இஸ்லாமிய குடியரசு ஆட்சியின் போது பஹாய்கள் கையாண்ட சுயபாதுகாப்பு திட்டமுறைகள் வருங்காலத்தில் இரான் நாட்டின் அதிமேன்மைமிக்க வரலாற்றுப் பக்கங்களில் பதிக்கப்படப்போகின்றன. பஹாய் மாணவர்களுக்கு பல்கலைகழகங்களின் கதவுகள் மூடப்பட்டபோது, பஹாய்கள் தங்கள் இல்லங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றினர். ஐரோப்பாவிலும் அமெரிக்கவிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட கூடுவதற்கு சிறந்த பஹாய் போதகர்கள் சிறு குழுக்களான மாணவர்களுக்கு வீடுகளிலேயே இலவச பாடங்கள் வழங்கினர்.

பஹாய்களுக்கு முல்லாக்களோ மதகுருக்களோ கிடையாது. திருமணங்கள், பிறப்பு மற்றும் பிற சமய அனுசரிப்புகள் போன்ற “சொந்த விவகாரங்களை” பஹாய் சமூகங்களின் உள்ளூர் நிர்வாகிகள் கவனித்துக்கொள்கின்றனர். இத்தகைய நிர்வாகிகளே அடிப்படையாக எப்போதுமே நசுக்கல்களுக்கு குறிவைக்கப்படுவதால், எங்கெங்குமுள்ள பஹாய் உள்ளூர்களில் தனிநபர் பஹாய்கள் தேவையான பயிற்சிக்கு பிறகு இவ்வித கடமைகளை தாங்களே செயல்படுத்துகின்றனர். (பஹாய்) “தலைமைத்துவம்” அதன் எல்லைகள் வரை அகலச் செய்யப்பட்டுள்ளது. தலைமை பன்மடங்காகிவிட்டதால் இஸ்லாமிய குடியரசு அவற்றையெல்லாம் அழிக்க முடியாது.

அரசியல் மற்றும் சமய சமரசத்தை தனது திறந்த ஜனநாயக உரையில் தலையாய சிறப்பம்சமாக ஏற்றுக்கொண்டுள்ள பச்சை இயக்கம் தனது சக பஹாய் பிரஜைகளை சற்று கூர்ந்து கவனிப்பது அவசியமாகும். தாக்குதல்களின் போது சற்றும் அயராத அதன் தலைமைத்துவம், அத்தாக்குதல்களைச் சமாளிக்க ஒருமச் சிதறல்களாக உருமாறியுள்ளது. கூட்டுறவு மற்றும் எவ்வளவு சிறிதான போதும் தனது ஆற்றல்களை ஒன்று திரட்டுவது இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்கு உதவுவது போன்று பச்சை இயக்கத்திற்கும் அது உதவே செய்யும்.

இரான் நாடு நீடூழி வாழ்க! இரான் நாட்டு மக்கள் நீடூழி வாழ்க!

-இரான் நாட்டின் அரசியலமைப்புக் கட்சி(சுதந்திர ஜனநாயக கட்சி)

கித்தாப்-இ-இகான் – ஓர் அறிமுகம்


(ஆக்கம்: திரு அந்தோனிசாமி)

பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலேயே இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கும் மிக வலிமை பொருந்திய திருநூலான கித்தாப்-இ-இகான் (மெய்யுறுதி நூல்) பாக்தாத் நகரில் பஹாவுல்லா அவர்களால் இரு பகல் மற்றும் இரண்டு இரவுகள் காலஅளவு நேரத்திற்குள் வெளிப்பாடு செய்யப்பட்டது. பாப் பெருமானாரின் தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முகமது அவர்கள் தமது தங்கையின் புதல்வரைப் பற்றி தொடுத்திருந்த கேள்விகளுக்கு மறுமொழியாகத்தான் பஹாவுல்லா இறைவனின் இத்தகைய கிருபைமிகு வெளிப்பாட்டை வெளியிட்டார். இம் மாபெரும் திருநூல் கடந்த காலத்தினுடைய புனித நூல்களின் மர்மங்களைத் திரை நீக்குவதுடன் மனிதகுல முழுமைக்கும் பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டிய ஓர் இரத்தினச் சுரங்கத்தை வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

கித்தாப்-இ-இகான் திருநூலின் மகத்துவத்தை எடுத்துரைக்கையில் பஹாய் சமயத்தின் பாதுகாவலாரான ஷோகி எபெஃண்டி அவர்கள் கூறுகின்றதாவது: “பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு என்னும் ஆர்ப்பரித்திடும் மகா சமுத்திரத்திலிருந்து வெளிவந்துள்ள கித்தாப்-இ-இகான் திருநூல். பாரசீகக் கவித்துவத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், அசல்தன்மைமிக்கதாகவும், புனிதமிக்கதாகவும், விறுவிறுப்புமிக்கதாகவும், பாராட்டத்தக்க அளவில் மிகத்தெளிவாகத் துலங்குவதாகவும் விளங்குகின்றது. அத்துடன் தனது வாதத்தில் வலிமைமிக்கதாகவும், எதிர்க்கப்படவியலா தனது கனிவான தன்மையில் ஈடிணையற்றும் திகழும் இத் திருநூல் இறைவனது மாபெரும் மீட்புப் பணியை எடுத்துரைத்து, பஹாய் இலக்கியத்தில் பஹாவுல்லாவினுடைய அதிபுனித திருநூலான கித்தாப்-இ-அக்டாஸ் நூலைத் தவிர மற்ற எந் நூலுமே வகித்திடாத ஓர் அதிவுயரிய நிலையில் ஈடிணையற்றதாகத் திகழ்கின்றது.”

பாப் பெருமானாரின் தாய் மாமன்கள்

பாப் பெருமானாருக்குத் தனது தாய்வழி மூன்று மாமன்மார்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஹஜி மிர்ஸா சிய்யித் அலி ஆவார். இவருக்கு “கால்-யி-அஸாம்” (மாபெரும் மாமன்) என்ற ஓர் அடைமொழியும் உண்டு. பாப் பெருமானாரின் தந்தையாருடைய மரணத்திற்குப் பிறகு இவர்தான் பாப் அவர்களைப் பராமரித்து வந்தார். அத்துடன் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்ட முதல் தாய் மாமனும் இவரே என்பது இங்குக் குறிப்படத்தக்கதாகும். இவர் பாப் பெருமானாரின் சமயத்தில் இறுதி வரை பற்றுறுதியுடன் இருந்தார். பாப் பெருமானார் உயிர் தியாகமடைவதற்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். தமது சமய நம்பிக்கையைக் கைவிட மறுத்ததற்காக இவர் பொது மக்கள் முன்னிலையில் உயிர்த் தியாகத்தை தழுவினார். தெஹ்ரானின் ஏழு உயிர்த் தியாகிகளில் இவரும் ஒருவராவார்.

பாப் பெருமானாரின் தாய் மாமன்களில் மூத்த தாய் மாமன் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம் மது ஆவார். இவருக்கு “கால்-யி-அக்பர்“ என்றும், “கால்-யி-அஸ்கார்“ என்றும் அடைமொழிகள் உண்டு. இவர் பூஷிர் பட்டணத்தில் வணிகராக இருந்தவர். பாப் பெருமானார் ஷிராஸ் நகரில் தமது சமயத்தைப் பிரகடனம் செய்தத் தருணத்தில் இவர் இன்னமும் பூஷிர் பட்டணத்திலேயே தமது வணிகத்தொழிலை மேற்கொண்டிருந்தார். இவர் பாப் பெருமானார் பறைசாற்றிய வெளிப்பாட்டில் பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். ஆனால், இவர் பஹாவுல்லாவைச் சந்திக்கும் வரை சமயத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இவர் எழுப்பிய வினாக்களுக்கு மறுமொழியாகத்தான் பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலை வெளிப்பாடு செய்தார்.

பாப் பெருமானாருடைய இளைய தாய் மாமன் ஹஜி மிர்ஸா ஹாசான் அலி ஆவார். தமது சகோதரருடன் பயணம் சென்றிருக்கையில் இவர் முதலில் பஹாவுல்லாவை சந்திக்க மறுத்து சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையானாலும்கூட, பின்னாளில் சமயத்தை ஏற்றுக்கொண்டு இறுதி வரை பற்றுறுதியுடன் வாழ்ந்தவர்.

கித்தாப்-இ-இகான் வெளிப்பாடு செய்யப்பட்ட சூழ் நிலை பாப் பெருமானார் தமது சமயத்தை ஷிராஸ் நகரில் முல்லா ஹ§சேய்னுக்கு பிரகடனம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த சரித்திரமே. 1845ம் ஆண்டு வசந்த காலத்தின்போது, பாப் பெருமானார் மெக்கா நகருக்கு புனித யாத்திரையை மேற்கொண்டு அங்குச் சில பிரமுகர்களுக்கும், சக யாத்திரிகர்களுக்கும் தமது சமயச் செய்தியை வழங்கி விட்டு புஷீர் பட்டணத்திற்குத் திரும்பினார். அங்கு தமது தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அவர்களின் இல்லத்தில்தான் பாப் பெருமானார் தங்கியிருந்தார். இருபத்தைந்தே வயதுடைய தமது சகோதரியின் புதல்வரது மகிமைமிக்க ஸ்தானத்தை அறியாதிருந்த அந்தத் தாய்மாமன் தமது அன்னைக்கும், அன்பு சகோதரிக்கும் பின் வருமாறு ஒரு கடிதம் எழுதினார்: “பிரகாசமும், மதிப்புமிக்க எனது அன்னைக்கும், சகோதரிக்கும்(அடியேன் எழுதும் கடிதம்). இறைவனின் சாந்தம் உங்கள் மீது தவழ்வதாக. மாண்புமிகு ஜினாபி ஹஜி அவர்கள் பாதுகாப்பாக இல்லம் திரும்பியுள்ளதற்கு இறைவன் போற்றப்படுவாராக. எனது நேரத்தை அவரது முன்னிலையில் கழிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிறிது காலத்திற்கு அவர் புஷீர் பட்டணத்தில் தங்கியிருப்பதுதான் நல்லது எனத் தெரிகின்றது. ஆனாலும், வெகு விரைவிலேயே அவர் (ஷிராஸ்) இல்லத்திற்குத் திரும்பி விடுவார். கவலையடையா தீர்கள்….மெய்யாகவே, அவரது கொடைமிகு ஆன்மாவானது இவ்வுலக மக்கள் மற்றும் மறுவுலக மக்களின் பெரும் ஆனந்தத்திற்கு மூலாதாரமாகும். எங்கள் அனைவருக்கும் அவர் நன்மதிப்பைக் கொண்டு வருகின்றார்.” (திரு.அடீப் தாஹெர்சாடி எழுதியுள்ள “பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு” முதல் தொகுதி, பக்கம் 154)

இதன் பிறகுதான் பாப் பெருமானார் உரிமைகோரிய அந்த இறைசெய்தி ஷிராஸ் நகரில் பரவியது. இதன் வாயிலாக பாப் பெருமானாரின் அன்னையும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரைப் பற்றி வெகுவாகவே கவலைப்படலானார்கள்.

பாப் பெருமானாரின் இந்த மூத்த தாய் மாமன் இதே நேரத்தில் தமது இளைய சகோதரருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். தமது தங்கையின் புதல்வர்(பாப்) பறைசாற்றுகின்ற செய்திக்குத் தாம் ஆணித்தரமாகச் சாட்சியமளிப்பதாகவே அக் கடிதத்தின் வாசகங்கள் தெரியப்படுத்துகின்றன. தமது சமயம் குறித்துத் தமது உறவினர்கள் சிலரது மனங்களில் தலைதூக்கியுள்ள நம்பிக்கையின்மையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் பாப் பெருமானார் அடைந்த மன வருத்தத்தைப் பற்றி அக் கடிதம் தெரிவிப்பதாக உள்ளது. அக் கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு: “தமது சமயத்தைச் சந்தேகித்து, உண்மையின் பாதையில் தற்பெருமையுடன் நடைபோடும் எவரும் தம்மை நேருக்கு நேர் சந்திக்க முன்வர வேண்டுமென பாப் பெருமானார் தமது நூல்கள் பலவற்றில் சாட்சியமளித்துள்ளார். தமது கோரிக்கையை மிக மிக உறுதியுடன் வலுவாக எடுத்துரைக்கும் அவர் எங்ஙனம் புத்தி சுவாதீனமற்றவராக இருக்கக்கூடும்? அவர் புத்தி சுவாதீனமற்றவர் என அவர்கள் கூறினால் எந்தப் பகுத்தறிவும் அந்த வாதத்தை முறியடித்து விடும். ஏனெனில், அவர் புத்தி சுவாதீனமற்றவராக இருப்பின், எங்ஙனம் அவர் அறிவுமிக்கவராக இருக்கின்றார்? அவர்களது பாஷையில் அவர் “புத்தி சுவாதீனமற்றவராக” ஆனவுடன் அவர் ஒரு கல்விமானுக்குள்ள அறிவுடன் வாதிடுகின்றாரே? இந்த அடியேனுக்கு அவரதுச் சமயத்தைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. எனக்குத் தெரிந்த வரையில் இது இறைவனிடமிருந்து வந்த சமயமே.”

பாப் பெருமானாரின் சமயத்தில் இந்தத் தாய் மாமன் நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பது இக்கடிதத்தை வாசிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்தாலும் கூட, இந்தத் தாய் மாமனுக்கும் ஒரு சந்தேகம் அவரது மனதிற்குள்ளாகவே வெகு நாட்களாக இருந்து வந்தது என்பது அக் காலத்தில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமது சந்தேகமிகு கேள்விகளுக்கு மறுமொழியாக பஹாவுல்லா வெளியிட்ட கித்தாப்-இ-இகான் பெறப்பட்ட பின்னரே இந்த ஐயப்பாடு அவரை விட்டு நீங்கியது.

பாப் பெருமானாரின் ஷிராஸ் இல்லத்து மெய்க்காவலர்களில் ஹஜி மிர்ஸா ஹபிபுல்லா என்பவரும் ஒருவர். இவரது தந்தையான அகா-மிர்ஸா-நூரிடின் என்பவர் பாப் பெருமானாரின் நம்பிக்கையாளர்களில் ஒருவர். பாப் அவர்கள் உயிர்த்தியாகமடைந்த பிறகு இந்த அகா-மிர்ஸா-நூரிடின் என்பவர் பாப் பெருமானாரின் தாய் மாமனான ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மதுவுடன் மேற்கொண்ட உரையாடல்ளைப் பற்றி மகன் ஹபிபுல்லாவிடம் எடுத்துரைக்க, அவரும் அதுபற்றி குறித்து வைத்துள்ளார். பாப் பெருமானாரின் தாய் மாமனது ஆன்மீக வாழ்க்கையில் இந்த உரையாடல்களே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இறைவனின் சமயச் செய்தியை நம்பிய அவர் தமது தங்கையின் புதல்வரான பாப் பெருமானார்தான் வாக்களிக்கப்பட்ட காயிம் என்பதை நம்புவதில் சிரமத்தை எதிர்நோக்கினார் என்பது அந்தக் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றது. அந்த உரையாடலும், அதன் பிறகு சம்பவித்த நிகழ்ச்சிகளையும் விளக்கும் இக்குறிப்புக்கள் சிலவற்றை இப்பொழுது நாம் பார்ப்போம்:

“…..உரையாடலின் ஆரம்ப நிலையின்போது நான் எந்தவிதமான ஆதாரங்களை முன் வைத்தாலும் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அதனைக் தட்டிக் கழிப்பதாகவே தெரிந்தது. இத்தகைய ஆரம்பநிலை மறுப்பு எங்களது பல சந்திப்புக்களில் தொடர்ந்தது. அத்தகைய ஓர் உரையாடலின்போது நான் ஆணித்தரமாக எனது வாதத்தை முன்வைத்தபோது, அவர் என்பக்கம் திரும்பி, ‘மெய்யாகவே எனது தங்கையின் புதல்வர்தான் வாக்களிக்கபட்ட காயிம் என நீங்கள் கூறுகின்றீரா?’ என்று கேட்டார். அக் கேள்விக்கு ‘ஆமாம்,’ என நான் பதில் சொல்லியபோது, அவர் அது தமக்கு விந்தையாக உள்ளதாகக் கூறிவிட்டுப் பிரார்த்தனைக்குச் சென்று விட்டார். அவர் பிரார்த்தனையில் ஈடுபட எத்தணிக்கும் போது அவரது நிலையைக் கண்டு நான் சிரித்து விட்டேன். எனது சிரிப்புக்கானக் காரணத்தை அவர் என்னிடம் கேட்டபோது நான் ஒன்றுமில்லை எனக்கூறி மழுப்பி விட்டேன். சிரிப்புக்கானக் காரணத்தை அறிந்துகொள்ள அவர் பிடிவாதமாக இருந்தார். அப்பொழுது நான், ‘உங்களது தங்கையின் புதல்வரான பாப் பெருமானார்தான் வாக்களிக்கப்பட்ட காயிம் என்பதை நீங்கள் மறுப்பதைக் காணும் பொழுது, தமது தங்கையின் புதல்வரான முஹம்மதுதான் திருத்தூதர் என்பதை நம்பிட மறுத்த அபு லாஹாப் அவர்களின் மறுப்பும் உங்களது மறுப்பும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது’ என பதிலளித்தேன். தொடர்ந்து நான், ‘அவரும் கூட, தனது தங்கையின் புதல்வர் எப்படி இறைத்தூதராக ஆக முடியும் என்றே வினவினார். ஆனால், உண்மையில் அண்ணல் முஹம்மதுதானே இறைத்தூதராக விளங்கினார்? இப்பொழுது இந்தச் சமயத்தைப் பற்றி தீவிரமாக ஆராய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பு. உண்மையின் மெய்ம்மைச் சூரியன் உங்களது குடும்பத்தில் உதித்துள்ளதற்காகவும், உங்கள் இல்லத்திலிருந்து ஒளிவீசுவதற்காகவும் நீங்கள் நிச்சயமாகப் பெருமை கொள்ள வேண்டும். அந்த உண்மையை நீங்களே தடுத்து விடாதீர்கள்…’ என்று சொன்னேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளால் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது கவரப்பட்டு, ‘நீங்கள் சொல்லிய இந்த உண்மை மறுக்க முடியாததாகும். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று என்னையே திருப்பிக் கேட்டார். ஈராக் தேசத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, பாப் பெருமானார் உயிர்த்தியாகமடைந்து விட்ட பிறகு அங்கேயே தங்கியிருக்கும் தமது தங்கையைச் சென்று கண்டு விட்டு, பிறகு அங்கிருந்து பாக்தாத் நகர் சென்று பஹாவுல்லாவைக் கண்டு தனது சந்தேகங்களை அவரிடம் முன் வைத்திட நான் ஆலோசனைக் கூறினேன். இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் மிக தீவிர முயற்சி மேற்கொண்டு இறைவன் மீது முழுநம்பிக்கை வைக்குமாறு நான் அவருக்கு வலுவாக அறிவுறுத்தினேன். உண்மையைக் காண்பதிலிருந்து அவரைத் தடுத்திடும் திரை விலக்கப்பட்டு இறைவனின் மெய்யான சமயத்தை அவர் அடைவார் என்ற எனது நம்பிக்கையையும் அவரிடம் நான் சொன்னேன். தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அதுவே சரியான வழிமுறை என அப்போது அவர் ஒத்துக் கொண்டார்.”

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது கடைசி இளைய சகோதரரான ஹஜி மிர்ஸா ஹாஸான் அலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த இளைய சகோதரர் யாசிட் நகரில் ஒரு வணிகராவார். புனித ஸ்தலங்களுக்குச் சென்று விட்டுத் தங்களது தங்கையை சந்திக்க தாம் திட்டமிட்ட பயணத்தில் கலந்து கொள்ளுமாறு அக் கடிதத்தில் அவர் தமது இளைய சகோதரரை அழைத்திருந்தார். அந்த இளைய சகோதரரும் அத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்து, தாம் ஷிராஸ் நகர் வரும்வரை காத்திருக்கும்படியும் மறுமொழி எழுதினார். பிறகு, திட்டமிட்டபடி சகோதரர்கள் இருவரும் பூஷிர் பட்டணம் வழியாக தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனாலும், ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது பயணத்தின் உண்மையான நோக்கத்தைத் தனது கடைசி இளையச் சகோதரருக்கு பாக்தாத் நகர் அடையும் வரையில் தெரிவிக்கவே இல்லை. பாக்தாத் நகர் சென்ற பிறகுதான் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது பயணத்தின் தலையாய நோக்கம் சமயத்தின் உண்மையை ஆராய்ந்து விட்டு, புனித ஸ்தலங்களைச் சென்று கண்டு விட்டு, பாப் பெருமானாரின் தாயையும் போய் பார்ப்பதுதான் என்று கூறினார். பஹாவுல்லாவைச் சென்று காண்பதற்கு ஏதுவாக தமது இளைய சகோதரர் பாக்தாத் நகரில் சிலகாலம் தங்குவது நல்லது என ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது எடுத்துச் சொன்னார்.

இதைச் செவிமடுத்த இளைய சகோதரர் சினமடைந்து தனது மூத்த சகோதரரை எதித்துப் பேசினார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் அத்தகைய விவகாரங்களில் அவருடன் கூட்டுச் சேரப்போவதில்லை எனவும், புதிய சமயத்தைப்பற்றி தாம் அறிந்து கொள்ள விரும்பவில்லை எனவும் இளைய சகோதரர் காட்டமாகவே கூறிவிட்டு அன்றைய தினமே பாக்தாத் நகரிலிருந்து புறப்பட்டு விட்டார்,” (ஆதாரம்: திரு.அடிப் தாஹெர் சாடி எழுதியுள்ளள பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாடு, பாகம்1, பக்கம் 155-157)

இதைக் கண்ட மூத்த சகோதரர் தனது இன்னொரு இளைய சகோதரருடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று விட்டு பாக்தாத் திரும்பியபோதுதான் பஹாவுல்லாவுடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்லபட்டார். ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனியாகவே பஹாவுல்லாவைச் சந்தித்தார். இச் சம்பவம் நடந்தது 1862ல் . முதல் சந்திப்பிலேயே ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது பஹாவுல்லாவின்பால் நன்கு வசப்பட்டு விட்டார். சந்திப்பின் இறுதியில் பாப் பெருமானாரின் செய்தியைப் பற்றியும், வரவிருக்கும் காயிம் பற்றியும் மரபுவழக்குகளின் நிறைவேற்றம் குறித்தும் சந்தேகங்கள் சிலவற்றைத் தமக்குத் தெளிவுபடுத்துமாறு அவர் பஹாவுல்லாவை வேண்டினார். பஹாவுல்லாவும் அதற்கு இணங்கினார். தமக்கு ஏற்பட்டுள்ளச் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவாகக் பட்டியலிட்டுத் தம்மிடம் கொண்டு வருமாறு கூறி பஹாவுல்லா அவரை வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது அவர்கள் பஹாவுல்லா அறிவுறுத்தியது போலவே தமது சந்தேகங்களைத் தெளிவாகக் பட்டியலிட்டுக் கொண்டு வந்தார். ஹஜி மிர்ஸா சிய்யித் முஹம்மது தனது கேள்விகளை நான்கு தலைப்புக்களின் கீழ் பட்டியலிட்டுக் கொண்டு வந்தார். அத் தலைப்புக்களின் சுருக்கம் பின்வருமாறு:

(அ) மீண்டும் உயிர்த்தெழும்நாள் – இதை அப்படியே நேரடியாக அர்த்தம் கொள்ளலாமா? எப்படி நீதிமிக்கவர்கள் நடத்தப்படுவார்கள், எப்படி அநீதிமிக்கவர்கள் தண்டிக்கப்படுவார்கள்?

(ஆ) பன்னிரண்டாவது இமாம்- பன்னிரண்டாவது இமாம் பிறந்து எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது ஒரு மரபுவழக்கு. இம் மரபு வழக்கு அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுகின்றது. அவ்வளவுதான். இக்கூற்றை எப்படி விளக்கலாம் ?

(இ) புனித நூல்களுக்கான விளக்கவுரை- காலங்காலமாக மக்கள் நம்பிக்கை வைத்திருந்த உண்மைகளை இந்த பாப்-யி- சமயம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. வாசிக்கும்போது, புனித வாசகங்களின் நேரடியான அர்த்தங்களை ஒருவர் புறக்கணிக்க முடியாது. இதனை எப்படி விளக்குவது?

(ஈ) இமாம்கள் வழங்கியுள்ள மரபுவழக்குகளுக்கொப்ப சில சம்பவங்கள் காயிம் அவதரிக்கும் பொழுதுதான் நிறைவேற வேண்டும். அத்தகைய சம்பவங்கள் இதுவரையில் நடைபெறவில்லை. இதனை எப்படி விளக்குவது?
(ஆதாரம் : ஹாசான் பால்யூசி எழுதிய மகிமையின் மன்னர் பஹாவுல்லா, ப.163-165)

அந்த வினாக்களுக்கு மறுமொழியாக பஹாவுல்லா இரு பகல் இரண்டு இரவுகள் நேர கால அளவுக்குள் கித்தாப்-இ-இகான் எனும் புனித நூலை வெளிப்பாடு செய்தார். அப் புனித நூல் வெளிப்பாடு செய்யப்பட்ட வேளையில் அதைத் தம்கைப்பட எழுதியது அப்துல் பஹாதான். அப்பொழுது அப்துல் பஹாவுக்குப் பதினெட்டே வயதுதான். இந்த புனித நூல் சிய்யித் முஹம்மதுவின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது. ஆரம்ப நாட்களில் இப்புனித நூல் ‘மாமனுக்கான திருமுகம் ‘ என அழைக்கப்பட்டது. ஆனால், பின்னர் அதன் தலைப்பை பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் (மெய்யுறுதி நூல்) என்று மாற்றினார்.

கித்தாப்- இ- இகான் திருநூலின் அசல்பிரதியினைப் பற்றிய சில கூடுதல் தகவல்கள்

கித்தாப்-இ-இகான் திருநூலின் வாசகங்களை பஹாவுல்லா அவர்கள் வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல அவரது மூத்த புதல்வரான அப்துல் பஹாதான் அதனைத் தமது கைப்பட எழுதினார். எனவே, கித்தாப்-இ-இகான் திருநூலின் அசல் பிரதி அப்துல் பஹாவினுடைய கையெழுத்துப் பிரதிதான். அந்தக் காலத்தில் பாரசீகத்தில் அச்சுத்தொழில் மிக பிரபலம் அடையவில்லை. எனவேதான், பஹாவுல்லா வெளியிட்ட புனித நூல்களை நம்பிக்கையாளர்கள் பார்த்து எழுதிக்கொள்வார்கள். அதி புனித நூலான கித்தாப்-இ-அக்டாஸ் கூட பஹாவுல்லாவினுடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு 1893ம் ஆண்டு இந்திய நாட்டு பம்பாய் நகரிலுள்ள (இப்பொழுது அந்நகரம் மும்பாய் என அழைக்கப்படுகின்றது.) ஓர் அச்சுக்கூடத்தில்தான் அச்சடிக்கப்பட்டது. கித்தாப்-இ-இகான் திருநூல் 1882ல் பம்பாய் நகரில் அச்சடிக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. ஆக, பஹாய் சமயத்தில் முதன் முதலாக அச்சேறிய முதல் நூல் இந் நூல்தான்.

சிய்யித் முஹம்மது 1877ல் காலமானவுடன் அவரது விருப்பத்திற்கு ஏற்ப ஷிராஸ் நகரத்தின் ஒரு மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டார். தாம் இறப்பதற்கு முன்பதாக எழுதிய உயிலில் தாம் பஹாய் சமயத்தை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவியும் ஐந்து பிள்ளைகள் அனைவரும் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் சமயத்தில் பற்றுறுதியுடன் இருந்தனர்.

பாப் பெருமானாரின் தாய் மாமனது இல்லத்தில்தான் கித்தாப்-இ-இகான் திருநூலின் அசல்பிரதி 1948 வரை இருந்தது. பிறகு, பாப் பெருமானாரின் தாய் மாமனுடைய கொள்ளுப் பேத்தியான பாத்திமி-கனும் -இ-அஃப்னான் அந்த அசல்பிரதியை அன்புமிகு பாதுகாவலரான ஷோகி எஃபெண்டியிடம் சமர்ப்பிக்கும் பொருட்டுக் கொடுத்தனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு அந்த அசல் பிரதியை ஷோகி எஃபெண்டி அவர்கள் பஹாய் உலக நிலையத்திலுள்ள பஹாய் அருங்காட்சியகத்தில் வைத்தார். இன்றைக்கும் அப்துல் பஹாவின் கையெழுத்திலான அந்த அசல்பிரதி அக் காப்பகத்தில் அப்படியே பத்திரமாக இருக்கின்றது. அப்துல் பஹாவின் கையெழுத்துப் படிவத்தில் கித்தாப்-இ-இகானின் அசல்பிரதி ஷோகி எஃபெண்டியிடம் புனித பூமியில் முதன் முறையாக வந்து சேர்ந்தபோது, இறைசமயத்தின் திருக்கரம் டாக்டர் யுகோ கியாச்சேரி அங்கிருந்தார். ஷோகி எஃபெண்டி பற்றிய தமது “மலரும் நினைவுகள்” எனும் நூலில் அந்த இனிய சம்பவத்தை டாக்டர் யுகோ கியாச்சேரி பின்வருமாறு விவரிக்கின்றார்: …..சமயத்தினுடைய எழுத்தோவியங்கள் மற்றும் சரித்திரத்தைப் பற்றிய பின்னணித் தகவல்களையும், உண்மைகளையும் சேகரிப்பதில் ஷோகி எஃபெண்டிக்கு இருந்த அளவிட முடியா ஆர்வத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நாள் மாலை நேரம் நான் ஷோகி எஃபெண்டியினுடைய சாப்பாட்டு அறையில் நுழைந்தபோது, அந்த அறையில் ஷோகி எஃபெண்டி ஏற்கனவே அமர்ந்திருந் தார். அவரது முகம் மறைக்கப்பட முடியாத ஒருவித மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. அவர் அமர்ந்திருந்த சாப்பாட்டு மேசையின் மேல் வண்ண ஓவியங்கள் கொண்ட ஒரு பட்டுக் கைக்குட்டையால் ஒரு பொருள் சுற்றப்பட்டிருந்தது. மிக முக்கியமான ஒரு பொருளை இப்படி வண்ணக் கைக்குட்டையால் சுற்றப்படும் இப் பழக்கம் குறிப்பாக ஈரான் நாட்டில்தான் உள்ளது. நாங்கள் அனைவருமே சாப்பாட்டு மேசை நாற்காலிகளில் உட்கார்ந்து விட்ட பிறகு, இரவு உணவு பரிமாறப்படுவதற்கு முன்பு ஷோகி எஃபெண்டி முந்திக்கொண்டு, தெஹ்ரான் நகரிலிருந்து அன்று ஒரு யாத்திரிகர் வந்திருப்பதாகவும் அவர் தம்மோடு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டிய ஒரு தஸ்தாவேஜுவை பழஞ்சுவடிக் காப்பகத்தில் வைக்கப்படும்பொருட்டு தம்மிடம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். பிறகு, ஷோகி எஃபெண்டி அக் கைக்குட்டையை அவிழ்த்து அதிலிருந்து புத்தக வடிவிலான ஒரு பிரதியை மிக மிக பயபக்தியுடன் தமது கையில் எடுத்து அனைவரும் பார்க்கும் வண்ணம் மேசை மீது வைத்தார். அதில் இரண்டு நிருபங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று இகான் திருநூல் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். அதிலிருந்த மற்றொரு நிருபத்தின் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை.”

முதலில் இகான் திருநூலின் உள்ளடக்கத்தைப் பஹாவுல்லா வாய்மொழியாக எடுத்துச் சொல்லியபோது, அதனை அப்துல் பஹா கையெழுத்தில் எழுதிக்கொண்டார் என்றும், பிறகு அதனை பஹாவுல்லா சரிபார்த்தபோது, சில பத்திகளின் ஓரத்தில் தமது சொந்தக் கையெழுத்தில் சில கூடுதல் குறிப்புக்களைச் சேர்த்துக் கொண்டார் என்றும் ஷோகி எஃபெண்டி எங்களுக்குத் தெரிவித்தார். ஷோகி எஃபெண்டி இகான் திருநூலின் அசல் பிரதியை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பதுடன், பஹாவுல்லா தாம் வெளியிட்ட இகான் திருநூலைச் சரிபார்ப்பு செய்தபோது பஹாவுல்லா தமது கைப்பட எழுதி இணைத்துக்கொண்ட ஒரு வாசகத்தைத்தான் ஷோகி எஃபெண்டி தமது “உதயத்தை வென்றவர்கள்” எனும் மொழிபெயர்ப்பு நூலின் முதற் பக்கத்தில் பொருத்திடத் தேர்ந்தெடுத்தார். (பாப் பெருமானாருக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட) அந்த வாசகம் பின்வருமாறு: “இவை அனைத்திற்கும் நடுவே எமது உயிரைக் கையில் பிடித்தவாறு அவரது விருப்பத்திற்கே சரணடைந்து நிற்கின்றோம். ஒருவேளை இறைவனின் அன்புப் பரிவு, கிருபை ஆகியவற்றின்வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளதும், துலங்கச் செய்யப்பட்டுள்ளதுமான இவ்வெழுத்து (பஹாவுல்லா), அதி மேன்மையான சொல்லும், பிரதான மையப் புள்ளியுமான அவரது (பாப்) பாதையில் தனது உயிரைத் தியாகம் செய்யக்கூடும்.”

அந்த இரவு நேரத்தில் பாதுகாவலர் வெறும் மகிழ்ச்சியில் மட்டும் திளைத்திருக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் பாப் பெருமானாரின் வாழ்வுக்குத் தமது சொந்த வாழ்வையே தியாகம் செய்திடத் துடிக்கும் பஹாவுல்லாவின் ஏக்கத்தை உள்ளடக்கியுள்ள இந்தப் பத்தியை (அதாவது பஹாவுல்லா விசேஷமாக இகான் திருநூலில் இறுதியாக தமது சொந்தக் கையெழுத்தில் இணைத்த இந்த வாக்கியத் தொடரைத் தம்மை அறியாமலேயே) தேர்ந்தெடுத்ததின்வழி, தாம் தெய்வீகமாக வழிகாட்டப்படும் ஒரு செயல்பாட்டைக் கண்டு பிரமித்துப்போனார். பாதுகாவலருக்கும், கண்ணுக்குப் புலனாகா இறைவனுக்கும் உள்ள இந்த மர்ம தொடர்பை நாம் ஒருபோதும் சந்தேகப்படலாகாது என்பதை உணர்ந்து நாங்கள் அனைவரும் மிக ஆழமாக உருகினோம் என்றுதான் சொல்ல வேண்டும்.”

கித்தாப்-இ-இகான் திருநூலைக் கற்பதன் முக்கியத்துவம்
பல சமய அறிஞர்கள் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொள்வதற்கு கித்தாப்-இ-இகான் திருநூல் காரணமாக இருந்துள்ளது. உதாரணமாக, பஹாய்களுக்கு மிகவும் அறிமுகமான மிர்ஸா அபுல் பஃடீல் பல காலமாக பஹாவுல்லாவை ஏற்றுக் கொள்ளாதபோதிலும், இறுதியில் பஹாவுல்லாவின் மகத்துவத்தை கித்தாப்-இ-இகான் திருநூலின் பக்கங்களை நேர்மையான மனதுடன் திருப்பும் போதுதான் சமயம் எடுத்துரைக்கும் உண்மைகளை ஏற்றுக்கொண்டார். இறைசமயத்தின் திருக்கரம் ஜார்ஜ் டௌன்ஷெண்ட் கித்தாப்-இ-இகான் திருநூலை விவரிக்கையில், அதனை விவிலிய நூலின் இதயமென வருணிக்கின்றார். இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று, பஹாய் சமயத்தின் அன்புமிகு பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி இத் திருநூலை வருணிக்கப் பயன்படுத்திய பின்வரும் வார்த்தைகளிலிருந்து இத்திருநூலின் முக்கியத்துவம் புலனாகின்றது. இத்தகைய வருணனைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம் .

“..சமயத்தினுடைய ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல்களிலேயே மிக முக்கியமான நூல் கித்தாப்-இ-இகான் திருநூலாகும் .” (ஷோகி எஃபெண்டியின் சார்பாக 14 ஜூன் 1930 எனத் தேதியிடப்பட்டு ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து)

“சமயத்தினுடைய அடிப்படை நம்பிக்கைகளைப் பஹாவுல்லா விளக்கியிருக்கும் மிக முக்கியமான நூல் கித்தாப்-இ-இகான் ஆகும்.” (ஷோகி எஃபெண்டியின் சார்பாக, 28 ஜூன் 1930 எனத் தேதியிடப்பட்டு ஒரு தேசிய ஆத்மீக சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து)

பாப் பெருமானாரின் புனித நூல் பாயான் என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும். அந்த பாயான் பற்றி குறிப்பிட்ட பொழுது, பாயான் இன்னும் முழுமை பெறவில்லை என்றும் “கடவுள் வெளிப்படுத்தப் போகும் அவர்” தோன்றுகையில் அந் நூல் முழுமைபெறும் என்றும் பாப் பெருமானார் வாக்களித்துள்ளார். கித்தாப்-இ-இகான் ஆனது பாயானின் தொடர்ச்சி என நம்பப்படுகின்றது. பாயான் திருநூல்பற்றி ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டபோது, கடவுள் கடந்து செல்கிறார் எனும் தமது நூலில், ”முடிவு பெறாத பாரசீக பாயான்..” என்றுதான் குறிப்பிடுகின்றார். நமது புனித பூமியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பஹாவுல்லாவினுடைய நிருபங்கள் ஒன்றில் பஹாவுல்லா அவர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலினை “நூல்களுக்கெல்லாம் பிரபு“ என வருணித்துள்ளதைக் காண முடியும். இந்த பின்னணித் தகவல்களோடு கித்தாப்-இ-இகான் திருநூலினுள் காலடி எடுத்து வைத்தால்தான் சில சமய உண்மைகளைப் பஹாவுல்லா சற்று வித்தியாசமாக விளக்கியிருப்பதன் காரணம் சற்றுத் தெளிவாக நமக்கு விளங்கும்.

அன்புமிகு உலக நீதிமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர் திரு.ஹ§ப்பர் டுன்பார் அவர்கள் உலக நிலையத்தில் பணியாற்றி வரும் தொண்டூழியர்களுக்குப் பதினான்கு மாதகாலம் கித்தாப்-இ-இகான் திருநூல்பற்றி ஆழ்நிலை வகுப்பினை நடத்தி வந்துள்ளார். அந்த ஆழ்நிலை வகுப்பு நடைபெற்றபோது நான்கு வருடத் திட்டம் நடப்பிலிருந்த நேரம் அது. கித்தாப்-இ-இகான் திருநூலோடு தம்மை மிக நெருக்கமாக இணைத்துக் கொண்டது குறித்து திரு.ஹ§ப்பர் டுன்பாரை திரு.நய்சான் சபாஹ் என்பவர் பேட்டி கண்டார். அந்த நேர்காணலின்போது திரு.டுன்பார் அவர்கள் தாம் இகான் திருநூலோடு பின்னியிருப்பதற்குக் காரணமாயிருந்த ஒரு கடிதச் செய்தியை பகிர்ந்து கொள்கின்றார். பஹாய் சமயத்தின் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கலிஃபோர்னியாவிலுள்ள நண்பர் ஒருவருக்கு இகான் திருநூல் குறித்து எழுதிய கடிதம் தான் அது. “பஹாய் சமயத்தில் திறமையான, பயனுள்ள போதகர்களாகத் திகழ விரும்பும் நண்பர்கள் கித்தாப்-இ-இகான் திருநூலில் காணப்படும் ஒவ்வொரு விவரத்தையும் தங்களால் இயன்ற அளவுக்கு மிக ஆழமாக அறிந்து வைத்திருப்பதை தங்களது முதல் கடமையாகக் கருதிட வேண்டும். அதனால் அவர்கள் சமயச் செய்தியை மிகவும் ஏற்புடைய வகையில் பிறருக்கு வழங்க முடியும்,” என்னும் வாசகங்களை வாசிக்க நேர்ந்த பிறகுதான் கித்தாப்-இ-இகான் திருநூலைப் பற்றி ஓர் ஆழமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கை தம்மிடம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். அந் நேர்காணலில் பல சுவையான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.