பெண்கள் உரிமைக்காக போராடிய தாஹிரி


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

தம்மை திருமணம் செய்துகொண்டால் தாஹிரியை விடுதலை செய்வதாகக் கூறும் நாஸிரிட்டின் ஷா – நாடகத்தின் ஒரு காட்சி

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: