நியூ யார்க் டைம்ஸ் – அன்னையர் தின கதை


6 மே 2011

ஹூஸ்டன் — அன்னையர் தினத்திற்கு முன்னைய தினம், கடுங்காற்று வீசிய இரவில், ஒரு மாதும் அவருடைய மகளும் முடிதிருத்தும் நிலையத்தில் சோபா ஒன்றில் ஒன்றாக உட்கார்ந்திருந்தனர். நிக்கா சபேட் பள்ளி முடிந்து அந்த நிலையத்திற்கு வந்திருந்தாள், ஏனெனில் அங்குதான் அவளுடைய தாயாரான நாஹிட் சபேட் பணிபுரிந்து வந்தார். மாலை 8.00 ஆகி கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்றுவிட்டிருந்தனர். இ்ப்போது திருமதி சபேட் தமது கதையை நிக்காவிற்கு கூறலாம். நிக்காவுக்கு இதுவரை அக்கதை முழுதாக கூறப்படவில்லை.

அது அன்பு, தியாகம், உறுதி ஆகிய ஒரு தாயின் பன்புகள் அடங்கிய அன்னையர் தினத்தை தழுவிய கதை. இருந்தும் அது எல்லா அன்னையர் தின கதையைப் போல் இல்லை. ஏனெனில் அதில் அடங்கிய விஷயங்கள் யாவும் கற்பனை செய்யமுடியாத சமய ரீதியிலான கொடூரங்களின் சூழ்நிலையில் நடந்தவையாகும்.

பல மணி நேரங்களாக சிறிது சிறிதாக திருமதி சபேட்டால் கூறப்பட்ட அக்கதை, சுமார் 40 வருடங்களுக்கு முன் தெஹரான் நகரில் ஆரம்பித்தது. அவ்வேளை திருமதி சபேட் தமது குடும்பத்தாரின் சமயத்தை விடுத்து பஹாய் சமயத்தை தழுவினார். பஹாய் சமயம் அதற்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன் ஒரு பாரசீக பிரபுக்கள் வர்க்கத்தை சேர்ந்த ஒருவரால் ஒரே கடவுள் மற்றும் போரொழிப்பு குறித்த சமயமாக பிரகடணப்படுத்தப்பட்டது. ஆனால், நாஹிட்டின் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் உட்பட, இரான் நாட்டின் முஸ்லிம்கள் பலரிடையே, பஹாய் சமயம் இஸ்லாம் சமயத்திற்கு முரனான சமயமாக கருதப்படுகிறது.

ஆயாத்துல்லா கோமேனியின் சமயகுருமார்கள் ஆட்சி ஷா மன்னரின் ஆட்சியை கவிழ்த்தவுடன் பஹாய்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். அப்போது நாஹிட்டிற்கு 20 வயதிற்கு மேல் இருக்கும். பஹாய்கள் குற்றவாளிகளாகவும், அரசுக்கு எதிரானவர்களாகவும், ஜியோனிஸத்தின் இரகசிய ஒற்றர்கள் என கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் சித்திரவதையும் செய்யப்பட்டனர்; அவர்களின் வணிகங்கள் முடக்கப்பட்டன மற்றும் கல்வியும் நிறுத்தப்பட்டது.

சமயத்துரோகியாகிவிட்ட நாஹிட்டிற்கு அவரது பெற்றோர்கள் ஒரு முஸ்லிம் கனவரை ஏற்பாடு செய்தனர். நாஹிட்டின் பிள்ளைகள் ஒன்று கூட பஹாய் சமயத்தைச் சாராது என அவரது சகோதர் ஒருவர் சபதமிட்டார். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, நாஹிட்டின் கனவரான அப்துல்ரேஸா அராஷ் தமது மனைவியை ஒரு பஹாய் எனும் முறையில் ஏற்றுக்கொள்வார் என நாஹிட்டின் குடும்பத்தினர் எதிர்பார்க்கவி்ல்லை.

அவருடைய பரந்தமனப்பான்மைக்காக அராஷுடைய மின்பொறி தொழிச்சாலை பரிமுதல் செய்யப்பட்டது மற்றும் அவர் பல முறை சிறைக்கும் செல்ல நேரிட்டது. நாஹிட் தமது கணக்காய்வாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார், மூன்று முறை கைது செய்யப்பட்டார், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார், மின்சார கம்பிகளால் தாக்கப்பட்டு தமது சமயத்தை கைவிடவும் பிற பஹாய்கள் குறித்து ஒற்று வேலை செய்யவும் வற்புறுத்தப்பட்டார். ஆனால், அவர் இரண்டையுமே செய்யவில்லை.

திருமதி நாஹிட் சபேட் 1980களிலும் 1990களிலும் மூன்று முறை கர்ப்பம் தரித்தார். ஆனால், தமது சகோதரர் மற்றும் உறவினர் ஒருவரால் அவர் மூன்று முறை தாக்கப்பட்டு மூன்று முறையும் கர்ப்பம் கலைந்து போனது என நிக்காவிடம் முடிதிருத்தும் நிலையத்தில் கூறினார். கர்ப்பங்கள் கலைந்தபோது அவர் சுமார் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை கர்ப்பமாக இருந்திருந்ததால், ஒரு பெண் மற்றும் இரு ஆண் மகவுகள் கலைந்து போனதை அவர் உணர்ந்தார்.

நிக்காவின் கண்களில் நீர் வழிய, “அவர்கள் செய்தது, தீய எண்ணத்தினால் அல்ல மாறாக அறிவின்மையால் அவ்வாறு நடந்துகொண்டனர்,” என திருமதி சபேட் தமக்கு கொடுமைகள் செய்தவர்கள் பற்றி அவளிடம் கூறினார். “அவர்கள் எனக்கு நன்மை செய்வதாகவே நினைத்தனர். நான் தனிமையில் பிரார்த்திக்கும்போது அவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு நான் கடவுளிடம் பிரார்த்தித்தேன்,” என அவர் மேலும் கூறினார்.

ஒரு வகையில் அவர்கள் அறிவின்மையால் அல்லா மாறாக அறிந்தே அவ்வாறு செய்தனர் ஏனெனில் அவர்கள் செய்தது அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு இணக்கமாகவே இருந்தது. திருமதி சபேட்டிற்கு தஞ்சம் கிடைத்தபோதும் இரான் நாட்டின் பஹாய் தலைமைத்துவம் இன்றுவரை சிறையில் வாடுகின்றனர். இரான் நாட்டின் ஷீயா அரசாங்கம் தொடர்ந்து இன்றுவரை அனைத்துலக சமய சுதந்திரம் குறித்த ஐக்கிய அமெரிக்க கமிஷனால் கண்டிக்கப்பட்டே வருகிறது. ஆனால் எவ்வித பலனும் இல்லை.

1993ல், திருமதி சபேட் தாம் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். இம்முறை அவர் தமது குடும்பத்தாரை விட்டு வேற்றிடம் சென்று மறைந்துகொண்டார். சில வேளைகளில், ஒரு இஸ்லாமிய புனித இடத்தில் அதன் பொறுப்பாளர்களின் உதவியோடு இரவில் தூங்குவார். சில வேளைகளில் தமது கைகளில் இருந்து சிறிது பணத்தோடு நகரம் நகரமாக சென்று ஆங்காங்கே பஹாய் குடும்பங்களோடு தங்கிக்கொள்வார். 14 ஜூன் 1997ல் தெஹரான் நகருக்குத் திரும்பி அங்கு ஒரு பஹாய் பிரசவ மருத்துவர் வீட்டில் நிக்காவை பெற்றெடுத்தார்.

நிக்காவிற்கு 3 மாதங்களான போது நிக்காவின் தகப்பனார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒரு வருடம் கழித்து ஆயத்துல்லா கோமேனியின் பிறந்த நாளன்று அவர் விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் சபேட்டும் நாஹிட்டும் இரான் நாட்டைவிட்டு தப்பியோடுவது என முடிவு செய்தனர். சபேட் ஒரு முஸ்லிம் மற்றும் அவருடைய மனைவி குழந்தை இருவரையும் உள்ளடக்கிய ஒரு கடவுச்சீட்டுடன், மூவரும் துருக்கி நாட்டையும் சுதந்திரத்தையும் அடைந்தனர்.

நிக்காவிற்கு 3 அல்லது 4 வயதிலிருந்து அவளுக்கு ஞாபகம் இருக்கின்றது. அப்போது அவர்கள் ஹூஸ்டன் நகரில் அகதிகளாக இருந்தனர். அடுத்து 2002ல் நிக்காவின் தந்தை தற்கொலை செய்து கொண்டது ஞாபகம் இருக்கின்றது. அவர் மனோவியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அதற்கு காரணம் இரான் நாட்டின் முல்லாக்களும் தங்களுக்கு கொடுமைசெய்தவர்களுமே காரணம் என திருமதி சபேட் அன்றும் சரி இன்றும் கூறுகிறார்.

ஹூஸ்டன் நகரில் திரு அராஷின் மரணத்திற்கு பின் திருமதி சபேட் மறுமணம் புரிந்து கொண்டார் ஆனால், அத்திருமனம் நீடிக்கவில்லை. வாழ்க்கை இரான் நாட்டில் இருந்தது போலவே இருந்தது. நிக்காவும் திருமதி சபேட்டும் பல மாதங்கள் குடும்பங்களுக்கான அரசு புகலிடத்தில் தங்கியிருந்தனர். கிடைத்த வேலைகளுக்கிடையே, அவர் கர்ப்பூசனி பழத்தை வெள்ளிக்கு ஒன்று என விற்று வாழ்க்கையை ஓட்டினர்.

2007ம் வருடம், மாலைப்பள்ளியில் ஷாம்ப்பூ உதவியாளர் பயிற்சியில் பயிலும்போது, அவர் ஒரு தற்காலிக வேலைக்கு அனுப்பப்பட்டார். அதன் உரிமையாளர், கேரன், சபேட்டை மென்மையானவராகவும், பயந்தசுபாவமுடையவராகவும் கண்டார். சிறிது சிறிதாக சபேட்டின் கதை வெளிவந்தது. இரான் நாட்டில் பட்ட அடிகளின் விளைவாக மீண்டும் மீண்டும் வரும் பல்வலி, தன் தாயே தன்னைவிட்டு விலகிப்போனது மற்றும் மூன்று குழந்தைகளை இழந்தது எல்லாம் தெரியவந்தது.

திருமதி கேரன் கடும் ஜஹோவாவின் சாட்சிகளான தமது பெற்றோரை விட்டு 16 வயது முதல் விலகியிருந்தார். அவரால் சபேட்டின் நிலையை வார்த்தைகளுக்கும் அப்பால் புரிந்துகொள்ள முடிந்தது. திருமதி சபேட் 55 வயதில் தமது தற்காலிக வேலையை பயிற்சியை முடிக்காத காரணத்தினால் கைவிட நேர்ந்தபோது திருமதி கேரன் அவரை தமது குழந்தைகளுக்கு தாதியாக அமர்திக்கொண்டார்.

கேரன் தமது ஆண் குழந்தையை திருமதி சபேட்டின் கைகளில் காணும்போதெல்லாம் வார்த்தைகளுக்கு அடங்காத ஒரு மென்மையை அங்கு கண்டார். “அது எனக்கு குணப்பாடு போன்று இருந்நது. ஏனெனில், அது ஒரு குழந்தை. அதற்கு நான் தேவைப்பட்டேன்,” என திருமதி சபேட் கூறினார்.

2011ம் வருடம் அன்னையர் தினத்தன்று, திருமதி சபேட் தமது கொஸ்மாட்டோலோஜி லைசன்சை பெற்றார், அதுவும் ஏழு முறை முயன்ற பிறகே கிடைத்தது. பிறகு அவர் மீண்டும் திருமதி கேரனிடம் வேலைக்கு சேர்ந்தார். 13 வயதான நிக்கா நகைகள் செய்கிறாள், நீச்சல் பயிலுகிறாள், மற்றும் பள்ளி நாடகங்களில் நடிக்கின்றாள்.

சென்ற வருடம் விடுமுறையின் போது, நிக்கா தன் தாயாரை இரவு விருந்திற்கு அழைத்துச் சென்றும் அவருக்கு இருதயத்தின் வடிவிலான ஒரு நெக்லஸ் நகையை பரிசாகவும் வழங்கினாள். இவ்வருட பரிசு அன்னையர் தினம் வரையில் இரகசியமாக இருக்கும் அல்லது ஒரே வேளை அது கொடுக்கப்பட்டு விட்டதோ என்னவோ.

நிக்காவைப் பார்த்து, அவள் தமக்கு “கடவுளின் பரிசு” என திருமதி சபேட் கூறுகிறார். நான் அனுபவித்த கொடுமைகள் சிலவற்றை அவள் முகத்தில் காண்கிறேன். நான் எந்த குழந்தைக்குமே தாயாக முடியாது என சபதம் செய்தவர்களால் நான் சூழப்பட்டிருந்தேன். நிக்காவை இப்போது பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: