வள்ளலார் இராமலிங்கரின் பாடல் ஒன்றில் பின்வரும் வரிகளைக் காணலாம்:
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே
வள்ளலார் இராமலிங்கர் இப்பாடலை சாதி மற்றும் சமய அடிப்படையில் பாடியிருந்தபோதும் இப்பாடலின் பொது கருத்து மனிதர்கள் எவ்வாறு மனிதவாழ்வின் மைய குறிக்கோளை மறந்துவிட்டு தேவையற்ற பிரச்சினைகளில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறித்ததாகும். சாதி மற்றும் சமய சண்டைகள் பெரும்பாலும் குறைந்துவிட்டிருந்தாலும் இன்று பொருளாதார ரீதியிலான ‘போர்கள்’ மனிதவாழ்வை ஆக்கிரமித்துள்ளன. இராமலிங்கரின் இப்பாடல் சாதி மற்றும் சமயம் தவிர பொருளாதார ரீதியிலும் இன்று பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் ‘rat race’ எனும் ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை போட்டி போட்டுக்கொண்டு ஊதியம் தேடுவதிலும், செல்வம் சேர்ப்பதிலும், சுகபோகங்களை அடைவதிலும் செலவிடுகின்றனர். பயனீடு (consumerism) எனும் புதிய சமயம் இன்று மனிதர்களில் வாழ்வை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளது. காலையிலிருந்து மாலை வரை மனிதர்களின் வாழ்க்கை இதன் அடிப்படையில் செலவிடப்படுகின்றது. அடிப்படை தேவைகளுக்கு ஊதியம் தேடுவது இன்றியமையாததுதான் ஆனால், இன்று அதற்கும் மேலாக வாழ்க்கை சௌகரியங்களை தேடுவதையும் செல்வம் சேர்ப்பதையும் வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டுவிட்ட பெரும்பாலான மனிதர்களை காண்கின்றோம். மனிதப்படைப்பின் நோக்கமே லௌகீக இலாபங்களை அடைவதற்கே எனும் தோற்றத்தை மனிதர்களின் இக்கால வாழ்க்கைமுறை ஏற்படுத்துகின்றது.
பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பின்வரும் ஒரு குறிப்பை காணலாம்:
கூறுங்கள்: இதை உணர்ந்துகொள்வோராயின், நீங்கள் இம்மை வாழ்வு மற்றும் அதன் படாடோபங்களை தேடுவோராயின், அவற்றை நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பப் பையால் சூழப்பட்டிருந்த போதை தேடியிருக்க வேண்டும், ஏனெனில் அவ்வேளை நீங்கள் அவற்றை தொடர்ந்தாற்போல் அனுகிக்கொண்டிருந்தீர்கள். மாறாக, நீங்கள் பிறந்ததிலிருந்து முதிர்ச்சியடைந்தது வரை, உலகிலிருந்து பின்வாங்கிக்கொண்டும், புழுதியை நோக்கி விரைந்துகொண்டும் இருக்கின்றீர்கள். உங்கள் வாழ்நாள்கள் கணக்கிடப்பட்டும், உங்கள் வாய்ப்புகள் ஏறத்தாழ கைநழுவியும் போகும் வேளை உலகின் பொக்கிஷங்களை குவிப்பதில் ஏன் இத்தகைய பேராசையை வெளிப்படு்த்துகிறீர்கள்? அக்கறையற்றோரே, நீங்கள் உங்கள் தூக்கத்திலிருந்து விழிப்புற மாட்டீர்களா?
பஹாவுல்லா, SLH_5.40, p”CURSOR:-202
நாம் ஓரிடத்திற்கு சென்று வாழவேண்டுமென்றால் அங்கு வெறுங்கையுடன் சென்று வாழமுடியாது. தேவையான பொருள்வசதிகளை சேகரித்த பிறகே அங்கு செல்ல வேண்டும். ஆவது ஆகட்டும் அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் பிறகு விளைவு ஆபத்துதான். இது பொது அறிவு. அதே போன்று வாழ்க்கையின் குறிக்கோள் இவ்வுலகில் வசதியாக வாழ்வது மட்டுமே என்றிருந்தால் இவ்வுலக வாழ்வுக்கு தேவையானவற்றை நாம் பிறக்கும் போதே கையோடு கொண்டு வந்திருக்க வேண்டும்.இங்கு வந்த பிறகு பொருள் சேர்ப்பதில் வாழ்நாட்களை விரையம் செய்து பிறகு மாண்டும் போகின்றோம். சேகரித்த சுகபோகங்களை முழுவதாக அனுபவிக்கக்கூட முடியாமல் போகின்றது. அப்படியென்றால் மனிதப் பிறப்பின் நோக்கம்தான் என்ன?
இது குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதை பார்ப்பதற்கு முன் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தை ஆராய்ந்து பார்ப்போம். அந்த அத்தியாயம் முழுவதும் வாழ்வும் மரணமும் பற்றியது. தன் மகனான அபிமன்யுவை இழந்து தவிக்கும் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்னர் ஆன்மாவைப் பற்றியும் மறுமை உலகைப் பற்றியும் அளிக்கும் உபதேசம் அதில் காணப்படுகிறது. மனிதனுக்கு இரண்டு இயல்புகள் உள்ளன. ஒன்று மிருக இயல்புடைய அவனுடைய உடல் மற்றது ஆன்மீக இயல்புடைய அவனது ஆன்மா. ஸ்ரீ கிருஷ்னர் தமது உபதேசத்தில் உடல் அழியும் ஆனால் ஆன்மா அழியாது என்பது குறித்து அர்ஜுனனுக்கு அறிவுரை வழங்குகிறார்.
மனிதன் இவ்வுலக வாழ்விற்கு தேவையானவற்றை உழைத்து சம்பாதிக்கவேண்டும். அது தவிர்க்கவியலாதது. இது இவ்வுலக வாழ்வின் முடிவு வரை தேவைப்படும் ஒன்று. ஆனால், இதற்கும் மேலாக மனிதனின் ஆன்மாவுக்கும் மனிதன் சேகரிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. இது மனிதனின் உயிரை பாதுகாப்பதற்கும் மேல் முக்கியமானதாகும்.
ஆன்மா சம்பந்தமான பஹாவுல்லாவின் திருவாக்குகளை படிப்போர் மனிதனுக்கு என்றுமே அழிவில்லை, அழிவது அவன் உடலே என்பதை புரிந்துகொள்வார்கள். ஆன்மாவிற்கு உடல் உடையைப் போன்றதே. உடை நைந்துபோனால் அதை வீசிவிடத்தான் வேண்டும். ஆனால், அதை அனிந்திருந்த மனிதன் அப்படியேதான் இருப்பான். அவனுக்கு அழிவில்லை.
மனிதன் தன் ஆன்மாவை பற்றிய அறிவு பெற்றும் அதை எவ்வாறு பேணி வளர்க்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோளாகும். இம்மை வாழ்விற்கு உடல் தேவைப்படுவது போன்று மறுமை வாழ்விற்கு ஆரோக்கியமான ஆன்மா தேவைப்படுகின்றது.
இதை அறிந்து அதற்கேற்றவாறு வாழாமல் மனிதர்கள் சம்பந்தா சம்பந்தமில்லாதவற்றை தேடியலைந்து தங்கள் பொண்ணான வாழ்வை வீனாக்கி இறுதியில் மண்ணோடு மண்ணாகிவிடுகின்றனர்.