சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஓரினக் காதல் குறித்த ஒரு சட்டம் திருத்தப்பட்டது, அதாவது ஓரின திருமணத்திற்கு இச்சட்டத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் தொடர்பில் அங்கு பல ஒரினக் காதலர்கள் உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார்களாம்.
பார்க்க: http://www.bbc.co.uk/news/world-us-canada-14270593
முன்னுறை
பஹாய் சட்டம் திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதிகளுக்கிடையில் மட்டுமே பாலுறவை அனுமதிக்கின்றது. திருமண பந்தத்திற்கு வெளியே பஹாய் நம்பிக்கையாளர்கள் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அதே வேளை, பஹாவுல்லாவின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதோர் மீது பஹாய்கள் தங்கள் விதிமுறைகளை தினிக்க முயலமாட்டனர், அதாவது பஹாய் திருமண சட்டம் பஹாய்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பாலியல் அல்லது வேறு எந்த விஷயம் குறித்தும் மேன்மையான நடத்தையை எதிர்பார்க்கும் அதே வேளை, மனித குறைபாடுகளை மனதிற் கொண்டு பொறுமை மற்றும் புரிதலை பஹாய் போதனைகள் அறிவுறுத்துகின்றன. இக்கருத்தில், ஒரினக்காதலர்களை தப்பெண்ணத்தோடு பார்ப்பது பஹாய் போதனைகளின் உணர்விற்கு எதிர்மாறானதாகும்.
ஒரினக்காதல் குறித்த சில பஹாய் கருத்துக்களின் ஆய்வு
உலக வரலாற்றின் கால ஏடுகளில் ஒரினக்காதல் நடவடிக்கைகள் குறித்து ஆங்காங்கே காண முடிகிறது. 1951-இல் ஓரினக்காதல் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இ்ந்த ஆய்வு எழுபத்து ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 விழுக்காடு நாடுகளில் ஓரினக்காதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் ஒரின பாலுறவு என்பது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவும் இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் சிவப்பிந்திய சமூகத்தினர், பசிபிக் சமுத்திரத்தில் சில தீவுகள், ஆஸ்திரேலிய பூர்வகுடியினரிடையே இது பழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அதே போன்று அக்காலத்தில் கிரேக்கர்கள், கெல்ட்டியர்கள், ரோமானியர்கள், அராபியர்கள், சூஃபீக்கள், ஜப்பானியர் மற்றும் இந்தோ-ஐரோப்பியரின் சமய ரீதியான வழக்கமாகவும் இது காணப்படுகின்றது. இதில், பிரபஞ்சத்தின் படைப்பு, மானிடத்தின் ஆண்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் இலிங்கம் (phallic) சம்பந்தமான சமயப் பிரிவுகள் மற்றும் கருவள(fertility) சம்பிரதாயங்கள், புராணம், மற்றும் ஆவி, விந்து மற்றும் ஆன்மாவோடு தொடர்பு கொண்டுள்ள சமயம் சார்ந்த மற்றும் சடங்கு அடிப்படையிலான ஒரின பாலுறவியல் நிகழ்கின்றது
ஆனால், சில கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களின் ஒரினபாலுறவு குறித்த சடங்குபூர்வமான விஷயங்களுக்கு எதிராக, செமிட்டிக் (semitic) மதங்கள் ஒரினபாலுறவை வன்மையாக கண்டித்துள்ளன. இணக்கம் கொண்ட இரு ஆண்களிடையே ஒரினபாலுறவு நடவடிக்கைகள் அருவருக்கத் தக்கவை மற்றும் மரண தண்டனைக்கு உட்பட்டவை என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தால்முட் (talmud) எனப்படும் யூத சாஸ்திரங்கள் மரண தண்டனை போக தன்னைத் தானே கசையால் அடித்துக்கொள்வது, பெண்கள் ஒரிணக்காதல் ஆகியவற்றையும் உட்படுத்திக் கண்டிக்கின்றன. யூத மதகுரு சாஸ்திரங்கள் ஒரினக்காதலுக்கு எதிரான வன்மையான தடை குறித்து பல காரணங்களை வெளியிட்டுள்ளன. தீர்க்கதரிசியான நோவாவின் (Noah) வாரிசுகளின் ஏழு கட்டளைகளிடையே இத்தடை ஓர் அனைத்துலக சட்டமாகக் கருதப்படுகிறது–இது மனித மேன்மையினை இழிவுபடுத்தும் இயற்கைக்கு எதிரான ஓர் முறைகேடு. இத்தகைய செயல்கள் இயல்பான பாலுறவின் இனப்பெருக்க நோக்கத்தினை முரியடிக்கின்றன மற்றும் ஒரினக்காதலன் மனைவியை கைவிடுவதன் வாயிலாக குடும்ப வாழ்வு அழிகின்றது. யூத சட்டங்கள் அன்பு(காதல்) என்னும் கருத்தில் புறமண பாலுறவு அல்லது முறையற்ற கலவி போன்றவை என்னதான் இருபாலரின் இணக்கத்திலும் தூய அன்பெனும் அடிப்படையிலும் நிகழ்ந்தாலும் அது எப்படி சட்டபூர்வமானது ஆகாதோ அதேபோன்று ஒரினக்காதலை எவ்வித உடல்சார்ந்த களிப்பின் அடிப்படையிலும் அவை ஆதரிக்கவில்லை.
என்னதான் கிருஸ்தவர்களின் மனப்பான்மைகள் காலத்தால் மாறியிருந்தாலும் கிருஸ்தவ சமயத்தில், ஒரினக்காதல் மற்றும் பாலுறவு தீய ஒழுக்கங்களோடு சேர்க்கப்பட்டு வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. திருக்குரான் ஒரினக்காதலை “தெய்வநிந்தனையான” செயல் என குறிப்பிடுகின்றது. அதே போன்று ஹதீஸ்கள் (hadith) ஒரினக்காதலர்கள் இருவரும் கொல்லப்படவேண்டும் என குறிப்பிடுகின்றன. இவ்வுலகில் தனது பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் ஒழிய, மற்றொரு மனிதனிடம் ஒரின உறவு கொள்ளும் ஒருவன் மறுவுயிர்த்தெழுதல் (resurrection) நாளன்று நிலையான நரகவாசத்திற்கு ஆளாவான்.
பஹாவுல்லாவும் ஒரினக்காதலைத் தடை செய்துள்ளார். அவரது சட்ட நூலான அக்டாஸ் திருநூல் அதைத் தடை செய்துள்ளது. பின்வரும் கருத்துகள் இத்தடை குறித்த ஆய்வாகும்.
இங்கு பயன்படுத்தப்படும் சில சொற்பாங்குகளை ஆலோசித்தல் சற்று பயன்மிக்கதாக இருக்கும். ஒரின பாலுறவு என்னும் வார்த்தை இரு குறுகிய கருத்துகளை உள்ளடக்கிட சற்று விரிவான நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. முதலாவதானது ஓரினபாலியல்பாலான கவர்ச்சியாகும். இது, தன்னியல்பாகவும் தூண்டுதல் இல்லாமலும் தன்னினத்தின் மீதே கவர்ச்சிகொள்ளும் மற்றும் தன்னினத்தை உள்ளடக்கிய பாலியல் மன கற்பனைகொள்ளும் ஓர் ஆண் அல்லது பெண் குறித்த மனோநிலையை அல்லது உளநிலையை குறிப்பதாகும். இரண்டாவது, ஒரினபாலுறவு நடத்தை, அதாவது தன்னினத்தோடு, ஓர் ஆண் மற்றோர் ஆணோடு அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு உடலுறவு கொள்ளுதல். முதலாவது நிலை, சரியாக புரிந்துகொள்ளப்படாத சக்திகளினால் மற்றும் அச்சக்திகளின்மீது அக்குழந்தைக்கு எவ்வித அடக்குந்தன்மையும் இல்லாத நிலையில் குழந்தைப் பருவகால வளர்ச்சியின் போது அடையப்படுகின்றது அல்லது வெளிப்படுகின்றது. இரண்டாவது நிலை, ஒரின உறவில் சுயநினைவோடு ஈடுபடும் மற்றும் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு நடத்தை குறித்ததாகும். ஒரு மனிதன் ஒரினபாலியல் மனநிலையால் பாதிக்கப்பட்டவனாக ஆனால், அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கக்கூடும் மற்றும் ஒரு மனிதன் ஒரினபாலுறவு மனநிலை இல்லாதவனாக ஆனால் ஓரினபாலுறவில் ஈடுபடுபவனாகவும் இருக்கக்கூடும்.
ஓரினக்காதல் மனநிலை குறித்து பஹாய் போதனைகள் ஒருவிதமான மனப்பான்மையையும், ஒரின பாலுறவு பழக்கம் குறித்து வேறுவிதமான மனப்பான்மையையும் வலியுறுத்துகின்றன. முதலாவதானது அனுதாபம் மற்றும் இரக்க உணர்வை வருவிக்கவேண்டும்: “இவ்விதமாக பாதிக்கப்படுவது ஒரு மனச்சான்றுக்கு உட்பட்ட ஆன்மாவிற்கு பெரும் சுமையாகும்”. ஆனால், மற்றது பஹாய் திருவாக்குகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஓரினக்காதல் மனோநிலையை பொறுத்தவரை, அது “மனித இயல்பின் பிறழ்ச்சி” மற்றும் “இயற்கைக்கு மாறான” ஒன்று என பஹாய் திருவாக்குகள் கூறியபோதிலும் அத்திருவாக்குகள் ஒரினக்காதலுக்கான காரணங்களைக் குறித்துக் காட்டவில்லை. அறிவியல் சமூகத்தினரிடையே ஓரினக்காதல் குறித்து எவ்வித இணக்கமும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இப்போது மரபியல் கூறு சம்பந்தமான சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பஹாய் நிலையோடு எவ்விதத்தில் இயைபுறும்?
இயற்கை குறித்த பஹாய் கருத்துப்படிவம் (concept) நோக்கியலானதாகும் (teleological); அதாவது, இறைவனால் மனித இயல்பிற்குச் சில பண்புகள் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன, மற்றும் இப்பண்புகளோடு இணக்கப்படாத பிற பண்புகள் “இயற்கைக்கு மாறானவை” என வருணிக்கப்படுகின்றன. அதற்காக பஹாய் திருவாக்குகளின் கண்டிப்பிற்கு ஆளாகும் சில நடத்தைகள் இயற்கையின் செயல்பாட்டினால் விளையவில்லை என பொருள்படாது. மதுப் பித்து ஒரு நல்ல உதாரணமாகும். அது மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம் என ஆதாரங்கள் காட்டுகின்றன. அந்த ரீதியில் அது இயற்கை காரணங்களால் விளைகின்றது, ஆனால், அதற்காக ஒரு மனிதன் மதுப்பித்தனாக இருப்பது இயல்பான ஒன்றென அர்த்தப்படாது. ஒரினக்காதல் மரபியலான, பௌதீக ரீதியிலான, அல்லது மனோவியல்பான காரணங்களால் விளைந்தபோதிலும், அது மனித இயல்பிற்கு நோக்கமாக கொள்ளப்பட்ட ஒரு பண்பு அல்லவென பஹாய் போதனைகள் தெளிவுபடுத்துகின்றன. ஏனில்லை? இதற்கான பதில் ஒரினக்காதல் சமுதாயத்தின் மீதும் தனிமனிதர் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளில் காணப்படலாம். ஒரினக்காதல் தனிநபரை பொருத்தவரை, 1981-இல் ஒரு பஹாய் எழுத்தாளர் மனோவியல்பு குறித்த இலக்கியங்களின் சுருக்கத் தோகுப்பு ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ஒரினக்காதலர் குறித்த நான்கு திடுக்கிடச் செய்யும் பண்புகளை அவை வெளிப்படுத்துவதாக உணர்ந்தார். முதலாவதாக பீதி உணர்வின் பங்கு – ஆண் ஓரினக்காதலருக்கு பெண்கள்பால் ஏற்படும் பெரும் பயத்தினால், ஒரு மனோதத்துவ நிபுணர் கூறுவது போன்று, அவர் ஆண்கள் நிறைந்த ஓர் உலகிற்குள் ஒளிந்துகொள்கின்றார். இரண்டாவது, உளஞ்சார்ந்த வலியில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை (psychic masochism) – அதாவது தன்னிரக்கம், மனம் புண்படுதல், அநியாயங்களை உள்ளத்தில் பதியவைத்துக்கொள்ளுதல் ஆகியவை. மூன்றாவது எதிர்மறையான பண்பு, மன ஆழத்தில் பதிந்துள்ள போதாத அல்லது நிலைகுறைவு உணர்வினால் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மை. இறுதியாக ஒரினக்காதலர்கள் வாழ்வில் பாலியலின் ஆதிக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது என்பது நோய்நிவாரண சிகிச்சையாளர்களின் கருத்து. இதன் பயனாக, பல சமுதாய காரணங்களின் பங்கு இதில் இருந்தபோதிலும், மதுப்பித்தின் அதிகரிப்பு, சோர்வுமனப்பான்மை, வேதனையில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. சராசரி 30 வயதிற்கு உட்பட்ட அமெரிக்க ஓரினக்காதலர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களுள் 26 விழுக்காட்டினர் சுமார் 1000 வேறுபட்ட நபர்களோடு பாலுறவு கொண்டுள்ளனர், மற்றும் சந்திக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் 50 விழுக்காடு நேரம் அவர்கள் முன்பின் தெரியாதோரிடமே பாலுறவு கொண்டதாகக் கூறியுள்ளனர். இத்தகைய புள்ளி விவரங்கள், ஒரினக்காதல் வாழ்வுமுறை அமைதி நிறைந்தது மற்றும் மனநிறைவானது என்பதற்கு எதிர்வாதங்களாகும். அதற்கு மாறாக அது நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்வுமுறையாகும். அடிக்கடி நிகழும், தற்செயல் பாலுறவுகள் ஒரினக்காதலுக்கு எதிரான (மற்றும் எத்தகைய பால்தன்மையூட்டும் உறவுக்கும் எதிரான) குற்றச்சாட்டாகும். இத்தகைய பாலுறவுகள் அதன் பின்விளைவான அபாயங்கள் (நோய்கள், உடல் வதை, அச்சுறுப்பு) குறித்து கவனமின்றியிருந்து, அது ஏதோ ஒரு பழக்கப் பித்தாக செயல்பட்டு, மனநிறைவு காணமுடியாத ஒன்றாகவும் செயல்படும்.
ஆன்மீக ரீதியில், பின்வரும் வகையில் அதன் விளைவுகள் பெரும் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சில பஹாய் எழுத்தாளர்கள் வாதித்துள்ளனர்: ஓர் ஓரினக்காதலரின் உள்மன பய உணர்வு நேரடியாக எதிர்கொள்ளப்படாததால், அத்தகைய நபர் சோதனைகளை நேர்முகமாக எதிர்கொள்வதால் கிடைக்கும் ஆற்றல் மேம்பாட்டை இழந்துவிடுகிறார். ஆகையால் அந்த நபரின் உளநோய் நிலையாகத் தொடர்ந்து, தற்காப்பு உணர்வுமிகு ஒரு கொடிய வட்டத்தை உருவாக்கியும், இறுதியில் பாதிக்கப்பட்ட நபரின் தன்னகமே தனக்குத் தானே பலியாகின்றது. ஆன்மீக ரீதியில் வளர்ச்சியுறாமல், அதற்கு மாறாக, அத் தனிநபர் தனது உணர்வெழுச்சிகள் மற்றும் வீண் கற்பனைகளின் சுமை மற்றும் ஆதிக்கத்திற்கு ஆளாகின்றார்.
வியாதிகளின் பரவலால் மட்டும் சமுதாயம் துன்புறவில்லை, அதற்கு மேல் தன்னைச் சுற்றியுள்ளோரை பாலியல் பொருள்களாகக் கருதுவதன் காரணத்தால் அந்த நபர் ஏற்படுத்தக்கூடிய நுண்ணய மற்றும் தவிர்க்கவியலா தாக்கங்களாலும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. பயம் மற்றும் வெறுப்புணர்வு நிறைந்த தனிநபர்கள் சமுதாய ஐக்கியம் நிறைந்த ஒரு முழுமையான சூழ்நிலைக்குப் பங்காற்ற முடியாது. மற்றும், மிக முக்கியாமாக, ஓரினக்காதலர்கள் குடும்பங்களை உருவாக்கும் செயற்பாட்டை விழிப்புணர்வுடனேயே தவிர்த்துக்கொள்கின்றனர்.
பஹாவுல்லாவின் சட்டங்கள் தரிசானதும் மனிதத்தன்மையற்றதுமான ஒரு சட்டமுறையை பிரதிநிதிக்கவில்லை, மாறாக அவை தெய்வீக அறிவுரைகளாகும், மற்றும் இப்பூவுலகின் ஆற்றல்களோடு இணக்கத்துடன் வாழ்வதற்கு எவ்விதம் இயற்கையின் விதிமுறைகளை ஒழுங்காக மதித்துணர்வது உதவுகின்றனவோ, அதே போன்று அவை உண்மையான சுதந்திரம் மற்றும் ஆன்மீக களிப்புணர்வை அடைந்திட ஒரு தனிநபர் செயல்படுவதற்கான ஒரு வரைமுறையும் ஆகும். பாலியல் குறித்த பஹாய் போதனைகள் பாலியல் தூண்டுசக்தியின் தெய்வீகத்தையும் ஆற்றலையும் அங்கீகரிக்கின்றன, மற்றும் அது ஒரு வரம்பிற்குள் இருக்க (regularize) வேண்டும் எனவும் கூறுகின்றன, மற்றும் பஹாவுல்லாவின் சட்டம் திருமண உறவு குறித்த வெளிப்படுத்துதல்களோடு மட்டுமே தன்னை உட்படுத்திக்கொள்கின்றது. இனப்பெருக்கமே பாலியலின் அடிப்படை குறிக்கோளாகும். பாலியலின் வாயிலாகத் தனிநபர் களிப்புறுகிறார் என்பது இறைவனின் கொடைகளுள் ஒன்றாகும். காதல் முதல் திருமணம் வரை, குழந்தைப் பேறு, குழந்தைகளைப் பேணி வளர்த்தல், மற்றும் இரண்டு ஆன்மாக்களிடையே இவ்வுலக வாழ்விற்கும் அப்பால் நிலைக்கக்கூடிய பரஸ்பரமாக ஆதரிக்கப்படும் உறவினை ஸ்தாபிக்கும் ஒரு நீண்ட செயற்பாட்டில் பாலுறவின் பங்கு ஒரு கணநேரமே ஆகும்.
சில தம்பதிகள் குழந்தைப் பேறு அடையமுடியாமல் தவிக்கின்றனர். அது தன்னிலையாக ஒரு பாதிப்பே ஆனாலும், திருமண உறவின் பிற கொடைகள் அனைத்தையும் இவ்விஷயம் செல்லாதவையாக்கிடவில்லை. சிலர் பலவித காரணங்களால் ஒரு துணையைப் பெற முடியாது போகின்றனர், அல்லது தனியாக வாழ்ந்திடத் தீர்மானிக்கின்றனர்; இவர்கள் பிற வழிகளில் தங்கள் நற்பண்புகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரினக்காதலர்கள் குழந்தைகள் பெற முடியாத ஈரினதம்பதியினர் போன்று தாங்களும் பரஸ்பரம் ஆதரவாகவும் ஒருவருக்கு ஒருவர் துணைபோகவும் நிலையான உறவுகளை ஸ்தாபித்துக்கொள்ளவும் முடியும் என நாம் முடிவுசெய்ய முடியும். இத்தகைய முடிவிற்கே சில கிருஸ்தவ சமூகங்களும் அரசாங்கங்களும் வந்துள்ளன. ஆனால் பஹாவுல்லா, மனித இயல்பு குறித்த தெய்வீக ஞானம் பெற்ற காரணத்தினால், இத்தகைய உறவு அனுமதிக்கப்படவில்லை அல்லது ஓரினக்காதலரின் நிலைக்கு அது பயன்மிக்க தீர்வும் அல்ல என குறிப்பிடுகின்றார். ஈரின திருமணத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு ஓர் ஓரினக்காதலர் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை என்னும்போது அவர் தனிக்கட்டையாக இருந்தும், எவ்வித உடலுறுவிலும் ஈடுபடாதிருக்கவும் வேண்டும் (என்பது அறிவுரை). திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஓர் ஈரின பாலியலாருக்கும் இதுவே விதியாகும். ஒரினக்காதல் குறித்த ஓர் அனுகுமுறையைச் சுருக்கமாக ஆலோசித்ததில், ஓரினக்காதலர்பாலான பஹாய் மனப்பாங்கின் சில அம்சங்கள் யாவை? பஹாய் சமயத்தைச் சாராத ஓரினக்காதலர் ஒருவர்பால் கொள்ளும் அதே மனப்பான்மையே குடிப்பழக்கத்திற்கு ஆளான பஹாய் சமயத்தைச் சாராத ஒருவர்பாலும் கொள்ளப்படுகின்றது. இது குறித்த பஹாய் விதிமுறைகளை அவர் பின்பற்றிட எவ்வாறு பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாதோ அதே போன்று அவர்கள் குடிப்பழக்கத்தை விடுவார்கள் எனவும் பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாது. ஒரினக்காதலராக ஒரு பஹாய் இருப்பின், அதற்கான பல கருத்துக்கள் உள்ளன. பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி பின்வருமாறு எழுதியுள்ளார்: “மற்ற ஆன்மாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகு கடுமையாக நுண்ணாய்வு செய்திடும் அளவிற்கு நன்னெறி பூரணத்துவத்தின் ஒரு கட்டத்தை பஹாய்கள் நிச்சயமாகவே அடைந்திடவில்லை, மற்றும் ஒவ்வொரு தனிநபரும் அவரது சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கப்பட வேண்டும், மற்றும் தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான தூய விருப்பமும் வேண்டும். தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்ந்திட பல பஹாய்கள் முயல்கின்றனர், ஆனால், அவர்கள் அதில் தனிமையையும் ஒதுக்கப்பட்ட நிலையையும் மற்றும் துணையற்றநிலையையும் நம்பிக்கையின்மையும் அனுபவிக்கின்றனர், ஏனெனில், அவர்கள் தங்களின் ஓரினக்காதல் குறித்த விஷயத்தால் தாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெறுக்கப்படுவோம் என்னும் பயமே அதற்கான காரணம். அதே சமயம், தங்களின் பிரச்சினையைச் சமாளிப்பதற்கும் தீர்ப்பதற்குமான முயற்சியில் உதவிக்கு எங்கு திரும்புவது என தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இத்தகைய ஆன்மாக்களின்பால் பஹாய் சமூகங்கள் பெரும் கருணையையும் ஆதரவையும் காண்பிக்க வேண்டும். இவ்வுலகில் கடவுளின் மகிமையையும் பண்புகளையும் பிரதிபலிக்கும் முயற்சியில், தவித்துக்கொண்டிருக்கும் எல்லாவிதமான ஆன்மாக்களுக்கும் பஹாய் சமூகம் ஒரு சரனாலயமாகவும் புகலிடமாகவும் இருக்கவேண்டும். இதை அடைவதற்கு ஆதரவு மிக்க ஒரு சிந்தனையும் உணர்வும் மிகுந்த சூழ்நிலை, ஊக்குவிக்கும் மற்றும் தேவைகளை புரிந்துகொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். ஒரு நிலையில் பார்க்கும் போது, உலகம் தான் சுமந்துகொண்டிருக்கும் மானிட பிரச்சினைகளை அது கொண்டுவருவதை வரவேற்கும் ஒரு பணிமனையாக அல்லது ஆய்வுமனையாக பஹாய் சமூகம் இருக்கவேண்டும் மற்றும் சக பஹாய்களுடன் சேர்ந்து, நம்பிக்கையுடன் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் கருவிகளை பயன்படுத்தி முழு முயற்சியுடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் இக்குழப்பங்களுக்கான நிவாரணம் காணவும் முயலவேண்டும். பிரார்த்தனை, தியானம், கலந்தாலோசனை, பஹாவுல்லாவின் விதிமுறைகள் வழங்கும் ஆன்மீக வழிகாட்டல் ஆகியவை இக் கருவிகளாகும். இப்பணிமனை ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, ஆதரவு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கவும் வேண்டும்.