ஜோனாதன் கன்டோமியின் படைப்பின் தமிழாக்கம்
ஹஃப்பிங்டன் போஸ்ட்
http://www.huffingtonpost.com/jonathan-gandomi/a-vision-for-world-peace_b_906540.html?view=screen
“பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா “உலகம் ஒரே நாடு மனிதர்கள் அதன் பிரஜைகள்,” மற்றும் “உங்கள் பார்வை உங்கள் மீது மட்டும் இல்லாமல் உலகந் தழுவியதாக இருக்கட்டும்,” என 19ம் நூற்றாண்டின் நடுவில் பதிவு செய்தார்.
உலகம் முழுவதிலும் சுமார் 2,000 கலாச்சார பின்னனிகளையும் இனங்களையும் பிரதிநிதிக்கும் பல பஹாய்களுக்கு இந்த எளிய ஆனால் ஆற்றல் மிகு அறிவுரைகள் அவர்களின் செயல்பாட்டுக்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குகின்றன. என்னையும் உட்படுத்தி பல பஹாய்களுக்கு மனிதகுல ஒருமை குறித்த இக்கோட்பாடு ஒருவரின் ஆன்மீக நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவும் அவர்களின் செயல்பாட்டுக்கான ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது.
உலகையும் அதனுள் விளங்கும் அலங்கோலத்தையும் கண்ணோட்டம் இட்டு இதற்கு இருப்பதைவிட மேலும் நல்ல தீர்வுகள் இருக்கக்கூடும் என — நம்பிக்கையின் ஒரு அம்சமாக — நம்புவது சற்றும் எளிதான முன்மொழிவு அல்ல. தனிநபர்கள் எனும் முறையில், நாம் கூட்டு செயல்பாடு குறித்த பிரச்சனையை எதிர்நோக்குகிறோம். பெரும்பாலானோர் நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளில் பங்கேற்காமல் போகும்போது அவை ஆற்றலிழந்து போகின்றன. மேலும், வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு சுழியக் கூட்டுத்தொகை ஆட்டம் (zero-sum game), அதாவது ஒருவரின் இலாபம் வேறொருவரின் நஷ்டத்தில்தான் விளைகிறது எனும் தடுமாற வைக்கும் கருத்து நிலவுகிறது
இன்றைய செய்தி பத்திரிக்கைகளின் முன்பக்கங்களை காணும்போது, உலக அமைதி கூடுமா என்பது நடக்கமுடியாத ஆனால் வேண்டப்படும் ஓர் அவாவென பலர் கருதுகின்றனர். இவர்களை யார்தான் குறை சொல்லமுடியும்? உலகின் வல்லரசுகள் கூட்டு நலத்திற்காக ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான பரீட்சார்த்தமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் அதே வேளை தங்களின் குடிகளிடமும் அண்டை தேசங்களிடமும் தங்களின் சொந்த தேசிய தேவைகளே யாவற்றிலும் முன் அவசியம் மிக்கவை என வலியுறுத்துகின்றன. ஒரு வேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான மானிட மேம்பாட்டின் இறுதியில் (இரு குற்றவாளிகள் மற்றவனை காட்டிக்கொடுக்க வேண்டிய சிக்கலிலிருந்து வெளிப்பட முடியாதது மாட்டிக்கொண்டிருப்பது போன்று) பூரணத்துவத்திற்கு சற்று வெளிப்புறமாக உள்ள விளைவுகளை மட்டுமே நாம் அடைந்துள்ளோமா?
குறிப்பிட்டது போன்று இதுதான் சூழ்நிலை என பலர் நம்புகின்றனர், மற்றும் அறிவுக்கு ஏற்புமிகு வகையிலான இத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதற்காக அவர்களை குறை சொல்லவும் முடியாது. இருந்தும் இத்தகைய இருள் சூழ்ந்த காலங்களில் நாம் இதைவிட மேலும் நல்ல சூழ்நிலையை உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது மட்டுமின்றி, நமது கூட்டு மேம்பாட்டின் உச்சமே இறுதியில் நமக்கு விதிக்கப்பட்டதும் ஆகும். “உலக அமைதி சாத்திமானது மட்டுமல்ல, மாறாக அது தவிர்க்கமுடியாததும் கூட,” “மற்றும் அது இப்பூவுலகின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமும் ஆகும்,” என பஹாய்கள் நம்புகின்றனர். ஒரு குழந்தை முதிர்ச்சி நிலைக்கு வளர்வது போன்று, ஒரு தனிச்சிறப்பு மிகு உருபொருள் எனும் வகையில் மானிட இனம் ஒரு பரிணாம செயற்பாட்டை கடந்து, பல கடுமையான மற்றும் கடக்கவேண்டிய அதிர்ச்சியான கட்டங்களைக் கடந்து இறுதியில் “ஓனாயும் செம்மறியாடும் ஒன்றாக வாழும்,” முதிர்ச்சிமிகு ஒரு நிலையை அடையும் என 19ம் நூற்றாண்டின் மத்தியில் பஹாவுல்லா போதித்தார்.
நான் தற்போது கடமையாற்றும் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது போன்று இத்தகைய அபாயமிகு சூழ்நிலையையும் வாக்களிக்கப்பட்ட அக்காலகட்டத்தை அடைவதற்கான அகண்ட இடைவெளியையும் வேறேங்கும் நான் காணவில்லை. இங்கு காணப்படும் முரண்பாடு மிகவும் சிக்கலானது. இனம், பழங்குடிகள், புவி-அரசியல், பொருளாதார, மற்றும் சமய ஆற்றல்கள் இங்கு செயல்படுகின்றன. முப்பது வருடகால உறுதியற்ற நிலை மற்றும் சச்சரவிற்குப் பிறகு, உலகில் எங்கு காண முடியாத அளவு குறிப்பாக பெண்களும் குழந்தைகளும், துன்பத்தை அனுபவித்த, ஒரு நிலபகுதியை காண்பது சிரமம். இதன் விளைவாக ஆஃப்கான் நாட்டின் பெரும்பகுதி மக்கள் தங்கள் நாட்டிற்கு அமைதி வேண்டும் என உறுதியாகவே விரும்புகிறார்கள். ஆனால் எப்படி?
ஓர் இராணுவத்தை பயிற்றவிப்பது, பள்ளிகள் கட்டுவது, அல்லது அரசாங்க ஊழலை குறைப்பதற்கும் அப்பால் ஆஃப்கான் நாட்டின் குழப்பத்திற்கான தீர்வு பெரிதும் சிக்கல் மிகுந்தது. இவை யாவும் போற்றுதற்குறிய முயற்சிகளாயினும், அவை அடிப்படை நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக நோய்க்குறிகளுக்கு மட்டுமே மருந்திடுகின்றன. அரசியல் ரீதியான முயற்சி அல்லது உதவித்திட்டம் போன்றவற்றிற்கும் மேல் அந்த நோய்க்குறிகள் புரிந்துகொள்வதற்கு மிகவும் குழப்பம் மிகுந்தவை.
மழுப்பலான உலக அமைதியின் ஓர் அங்கமாக நாம் அனைவரும், பிரிக்கமுடியாக வகையில் இணைக்கப்பட்ட பொதுநலனைக் கொண்ட நிலையில், ஒருவரை ஒருவர் ஒரே மானிட இனத்தின் உறுப்பினர்களாக காணவேண்டும். “மானிட உலகு ஒரே ஒருமித்த சரீரமாகும், மற்றும் அந்த உயிர்ப்பொருளின் ஒரு பகுதி பாதிக்கப்படுமாயின் அதன் பிற அங்கங்கள் யாவுமே அதன் விளைவை அனுபவிக்கும்,” என பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன. மானிடத்தின் ஒருமைத்தன்மையை மனதார ஏற்றுக்கொள்வதானது ஒருவரின் தினசரி வாழ்விற்கு ஆழ்ந்த விளைவுகளைக் கொண்ட ஓர் ஆன்மீக செயற்பாடாகும்.
இவ் விஷயத்தை அகண்ட நிலையில் பார்க்கும்போது, இது சமுதாயத்திற்கும் நமது கூட்டுத்தேர்வுகளுக்கும் பின்விளைவுகளைக் கொண்டதாக இருக்கின்றது. நமது கூட்டுநலனை உளப்பதிவு செய்வதில்தான் மானிட இனத்தின் பிழைப்பு மேம்பாடு ஆகிய இரண்டும் அடங்கியுள்ளன எனும் முடிவிற்கு உலகம், தானே தேர்வு செய்த ஓர் குழப்பம் மிகுந்த பாதையின் வழியாக இறுதியில் வந்துசேரும் என பஹாய் சமயம் போதிக்கின்றது. “தன் நாட்டை மட்டுமே விரும்புகிறான் என ஒருவன் பெருமைகொள்ள முடியாது, மாறாக உலக முழுமையையும் விரும்பும் ஒருவனே அதில் பெருமை கொள்ளமுடியும்,” என பஹாவுல்லா பதித்துள்ளார்.
பஹாய் வரலாற்றில் ஒரு முக்கிய மனிதரும், 1892ல் தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு பஹாய் சமூகத்தை வழிநடத்திய பஹாவுல்லாவின் திருமகனும் ஆகிய அப்துல் பஹா, வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடித்த பிரபல கண்டுபிடிப்பாளராகிய எச். மேக்சிம் அவர்களை ஒரு சமயம் சந்திக்க நேர்ந்த்து. போர் மற்றும் மனித அழிவு குறித்த அறிவியலில் அவரது பெயர் மிகவும் பிரபலமாகியுள்ள அதே வேளை, மானிடத்தின் அடித்தலத்தையே ஆட்டங்காண செய்யக்கூடிய அன்பெனும் துப்பாக்கிகளை கண்டுபிடிப்பதன் வாயிலாக அமைதி குறித்த அறிவியலிலும் அவர் பிரபலமாகவேண்டும் என அப்துல் பஹா அவரிடம் கூறினார். “துப்பாக்கிகளை கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்பாளரை, தேசங்களின் சச்சரவுகளுக்கு ஒரு முடிவு கண்டும் போர் எனும் மரத்தை வேரோடு சாய்த்ததற்காக; வாழ்வு மற்றும் அன்பை அதிகரிப்பதற்கான வழிகளையும் கண்டுபிடித்ததற்காக மக்கள் போற்றுவார்கள். அதன் பிறகே வரலாற்றின் ஏடுகளில் உமது பெயர் பொண்ணால் ஆன எழுதானியினால் எழுதப்படும்,” என அப்துல் பஹா கூறினார்.
அன்பு மற்றும் அமைதிக்கான பயன்விளைவுகள் மிக்க வழிகளை கண்டுபிடிப்பதற்கு மாறாக அதிக அளவில் அழிவுக்கான வழிகளை கண்டுபிடிப்பது பெரிதும் எளிதாக இருப்பதை நாம் காண்கின்றோம். கைப்பற்றும் வழிகளை உருவாக்கும் நமது திறமையாற்றல்கள், உணவு, மூலப்பொருட்கள், பொருளாதாரம், தொழில்நுட்ப ஆற்றல், சித்தாந்தம், தீவிரவாதம் ஆகியவற்றிலும் இப்போது செயல்படுகின்றன. சமுதாயம் மேம்பாடு அடையும் அதே வேளை, நமது கைவசம் உள்ள உலகை மாற்றவும் அதன் மீது தாக்கம் செலுத்தவும் கூடிய தொழில்நுட்பமும் கருவிகளும் மேம்பாடு கண்டுள்ளன. இ்ப்போது நமது பகுத்தறிவு, ஆற்றல், மற்றும் உருவாக்கும் சக்திகளை நிலையான மற்றும் உறுதியான ஒரு முறையை அமைக்கக்கூடிய அமைதிக்கான ஆற்றல்களாக மாற்றவேண்டியது நமது கடமையாகும்.
இதே சிந்தனையில் அப்துல் பஹா பின்வருமாறு எழுதியுள்ளார்: “நாம் அமைதியைத்தான் சற்று பயன்படுத்தி பார்ப்போமே? அப்படி போர்தான் சிறந்தது எனப் பட்டால், மீண்டும் போரிடுவது ஒன்றும் சிரமமாக இருக்காது.: