பிணைப்புகள்


பெரும்பாலும் கிராமப்புரங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் இன்று சமுதாய மேம்பாட்டின் பயனாக சிறிது சிறிதாக வெளிநகர் பகுதிகள் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ்கின்றனர். கடந்தகாலத்தில் கூட்டு வாழ்க்கை என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தது.  ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ளோரோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். ஆனால் இன்று அது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. தன் பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் வாழ்கிறார்கள். பிணைப்புகள் சிறிது சிறிதாக தோய்ந்துகொண்டிருக்கின்றன.

மனிதன் தன் வாழ்க்கை சூழ்நிலையோடு இரு விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளான். ஒன்று, பௌதீகம் மற்றது ஆன்மீகம். ஒன்று பொருள் சார்ந்தது, மற்றது ஆவி சார்ந்தது.

முதலாவதாக, மனிதன் தன் பிறப்பிற்கு முன் தாயின் கர்ப்பத்தில் தொப்புள் கொடியின் வாயிலாக தன் தாயோடு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தான். அந்த கர்ப்ப உலகில் அவனுக்கு தேவைப்பட்ட ஊட்டம் அனைத்தும் அவன் தன் தாயோடு கொண்டிருந்த அந்த பிணைப்பின் வாயிலாக அவனுக்கு கிடைத்து வந்தது மற்றும் அப்பிணைப்பின் வாயிலாகவே அவன் வளர்ச்சியும் அடைந்தான். ஆனால், கர்ப்ப உலகில் தொப்புள் கொடியின் பிணைப்பு அறுபட்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு துண்டிக்கப்பட்டால், குழந்தை மடிந்துவிடும்; அதற்கு மாற்று கிடையாது. மேலும் கூறப்போனால், மனிதன் கர்ப்ப உலகில் எப்போதுமே தன்னிச்சையாக வாழவில்லை, வாழவும் முடியாது. கர்ப்ப உலகில் குழந்தைக்கு தன்னிச்சையென்பது இறப்பிற்கு சமமாகும்.

இரண்டாவதாக, பிறப்பிற்கு பின் தக்க வயது வந்து அக்குழந்தை தன் வாழ்வை தானே நிர்ணயித்துக்கொள்ளும் காலம் வரை தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொடர்பு வேறு வகைகளில் நீடிக்கின்றது. மனிதன் கர்ப்ப உலகிலிருந்து இயலுலகிற்குள் பிரவேசிக்கும் போது தொப்புள் கொடி அறுபடுகிறது. தாய்க்கும் சேய்க்கும் உள்ள பௌதீக தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், எல்லா தாய்மார்களுக்கும் இயல்பாகவே உள்ள தாய்-சேய் இயல்புணர்வான மற்றும் ஆன்மீக ரீதியான இணைப்பு தொடர்கிறது, அது தாயன்பாக, பாசமாக வெளிப்படுகிறது. தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாள், உணவூட்டுகிறாள், குழந்தையின் நலனை பேணிப் பாதுகாக்கிறாள், அக்குழந்தைக்கு கல்வியளிக்கின்றாள். தொப்புள் கொடியின் இணைப்பைப்போல் இத்தகைய ஆன்ம இணைப்பும் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த இணைப்பு இறுக்கமாக இருக்கும் வரை குழந்தையின் உடல்நலன், மனநலன், ஆன்மநலன் யாவும் அதன் தாயின் மூலமாக பாதுகாக்கப்படுகின்றன.

தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் இந்த இரண்டாவது வகையான பிணைப்பைப் போன்றே மனிதன் இயலுலகோடு பிணைக்கப்பட்டுள்ளான். பௌதீக ரீதியில் அவனுக்கு தேவைப்படும் யாவும் இப்பூமியின் வாயிலாகவே அவனுக்கு கிடைக்கின்றது. உணவு, நீர், பிராணவாயு போன்றவற்றை நாம் இங்கு முக்கியமாக குறிப்பிடலாம். மனிதன் உயிரோடு இருக்கும் வரை அவன் இப்பிணைப்பிலிருந்து தப்பிக்க முடியாது. படைப்புலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓரிடம் உள்ளது, ஆனால் அது தன்னிச்சையானது அல்ல. மனிதன் தன் சூழ்நிலையோடு, தன்னினைவில்லாமல் பிணைக்கப்பட்டுள்ளான். உதாரணமாக, காற்று மண்டலத்தை விட்டு மனிதன் பத்தே நிமிடங்கள் அகன்றால் அவன் நிலை என்னவாகும்? இதுதான் அவனுடைய மெய்ம்மை.

தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றே கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஓர் பிணைப்பு உள்ளது. அது ஓர் ஆன்மீக, உறுதிமிகு பிணைப்பாகும். ஆனால், இங்கு ஒரு வேறுபாடு உள்ளது. கர்ப்பத்தில் தாயோடு கொண்டிருக்கும் சேயின் பிணைப்பு தன்னிச்சையானதல்ல. குழந்தை என்னதான் முயன்றாலும் அப்பிணைப்பை தானே துண்டித்துக்கொள்ள முடியாது. ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பிணைப்பு மனிதனின் விருப்பத்தை பொறுத்த ஒன்றாகும். மனிதன் விரும்பினால் மட்டுமே அவன் அந்த ஆன்மீகத் தொடர்பில், பிணைப்பில் ஈடுபடமுடியும். இது கடவுள் மனிதனுக்கு வழங்கியிருக்கும் பல ஆற்றல்களில் ஒன்றான தன்விருப்ப ஆற்றல் குறித்ததாகும் (free-will).

இந்த இரண்டாவது வகையான இணைப்பின் வாயிலாகவே மனிதன் தன் பிறப்பின் இரகசியத்தை, படைப்பின் குறிக்கோளை. தான் யார் என்பதையும் தன் வாழ்நாளில் தான் ஆற்ற வேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றை புரிந்துகொள்ளமுடியும். பஹாவுல்லா இப்பிணைப்பு குறித்து பின்வரும் திருவாக்கை வழங்கியுள்ளார்:

உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.

அடுத்து, கடவுளோடு நாம் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் அவர்மீது அன்புகொள்வது எவ்வாறு எனும் கேள்வி நம் மனதில் எழக்கூடும். ஒருவரை அறவே அறிந்துகொள்ளாமல் அவர்மீது அன்பு ஏற்படுவது அறிது. கடவுள் மீது எவ்வாறு அன்பு ஏற்படும்? இதற்கு பதில், ஒரு குழந்தை தான் பிறக்கும் போதே தாய்ப்பால் குடிக்கும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றது. இதை யாரும் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அதே போன்று மனிதன் தன்னை படைத்த கடவுளை அறிந்து கொள்ளும் ஆற்றலை இயல்பாகவே பெற்றிருக்கின்றான் என பஹாவுல்லா கூறுகின்றார்.

உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து பாராட்ட முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்?

தகுந்த கல்வியின் மூலம் மனிதன், கடவுளை அறிந்துகொள்ளும் ஆற்றல் உட்பட, தான் இயல்பாகவே பெற்றிருக்கும் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ளமுடியும், கடவுளை அறிந்துகொள்ள முடியும் மற்றும் தன் படைப்பின் நோக்கத்தை தெரிந்துகொள்ளவும் முடியும். ஆனால், அது அவன் விருப்பத்தை பொருத்த ஒன்றாகும். மனிதனாக விரும்பினால் அன்றி அவன் தன் படைப்பாளரோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

பாதுகாப்புக்கும் குணப்படுத்துதலுக்குமான ஒரு பிரார்த்தனை


உயரிய, அதி மேன்மையுடைய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பெயரால்! தேவரே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! எனதாண்டவரே, என் பிரபுவே, என் தேவரே, என் ஆதரவாளரே, என் நம்பிக்கையே, என் புகலிடமே, என் ஒளியே. உம்மைத் தவிர வேறெவருமே அறிந்திராத, மறைவாயுள்ள, பாதுகாக்கப்பட்ட உமது திருநாமத்தின் பெயரால், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் ஈதியிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும்; திங்கிழைப்போரின் தீமையிலிருந்தும், இறைநம்பிக்கையற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, வேதனை, துன்பம், ஆகிய ஒவ்வொன்றிலிருந்தும் அவனைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, சகலத்தின்மீதும் சக்தி கொண்டுள்ளவர் நீரே. நீர் விரும்பியாவாறு நீர் செய்கின்றீர், நீர் திருவுளங்கொண்டதற்கேற்ப ஆணையிடுகின்றீர்.
மன்னருக்கெல்லாம் மன்னரே!
கருணைமிக்க தேவரே!
புராதன அழகிற்கும், அருளுக்கும், தயாளத்திற்கும் ஈகைக்கும் ஊற்றாகியவரே!
நோய்களைக் குணப்படுத்துபவரே!
தேவைகளைப் பூர்த்தி செய்பவரே!
ஒளிக்கெல்லாம் ஒளியானவெரே!
ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே!
ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே!
தயாள குணமுடையவரே!
கருணையாளரே!
அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணையின் மூலமாகவும், கிருபையின் மூலமாகவும், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவனது உள்ளமும் மனமும் வெறுக்கத் தக்க யாவற்றிலிருந்தும் அவனைக் காத்தருள்வீராக. சக்தி வழங்கப் பட்டோரிடையே நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர்.
உதய சூரியனே, இறைவனின் ஒளி உம்மீது லயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேரெவருமிலர் என எல்லாம்வல்ல, அதி அன்பரான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர், சாட்சியம் அளிப்பீராக.
~ பஹாவுல்லா

புதிய அவமதிப்பு: இரானிய பஹாய் ஒருவரை முஸ்லீம் சமய அடிப்படையில் புதைக்கப் போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்


http://news.bahai.org/story/845

ஜெனிவா – மத பாகுபாடு குறித்த மூர்க்கத்தனமான ஒரு புதிய சம்பவத்தில், இரான் நாட்டின் டப்ரிஸ் நகரின் அதிகாரிகள் பஹாய்களின் பஹாய் சட்டங்களுக்கு ஏற்ப ஒரு உறவினர் அடக்கம் செய்யப்படுவதை அனுமதிக்க மறுத்து – அதற்கு பதிலாக இறந்து போன பெண்ணை சவப்பெட்டி இல்லாமல் முஸ்லீம் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளனர்.

“மத்திய கிழக்கு கலாச்சாரத்தை புரிந்த எவருக்கும், ஒரு சமயத்தின் விசுவாசியை வேறோர் அன்னிய சமயத்தின் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்திட அவரின் குடும்பத்தை வற்புறுத்துவது எல்லை தாண்டிய ஒரு செயலாக விளங்கும்,” என ஜெனேவாவில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரிதிநியான டையேன் அலாயி கூறினார்.

பஹாய்களின் சவ அடக்க சடங்கின்படி இறந்தவர் ஒரு சவப்பெட்டியில் வைத்தே அடக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் முஸ்லிம் சட்டப்படி சவப்பெட்டி பயன்படுத்தப்படுவதில்லை.

“இந்த சம்பவம் ஈரானிய அதிகாரிகள் பஹாய்களுக்கு எதிராக தங்கள் பாரபட்சம் மற்றும் விரோதத்தை வெளிப்படுத்த எந்த அளவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார்.

இவ்விஷயம் கடந்த திங்கட்கிழமையன்று ஆரம்பித்தது. டப்ரிஸ் நகர அதிகாரிகள் இறந்தவரை பஹாய் சட்டத்தின்படி உள்ளூர் இடுகாட்டில் புதைக்க இயலாது என்று திருமதி பாத்திமா-சுல்தான் குடும்பத்தினரிடம் கூறினர். மாறாக, அவர் முஸ்லீம் வழக்கத்தின் படிதான் புதைக்கப்பட வேண்டும் என கூறினர்.

இதற்கு, அந்த இடுகாடு எல்லா சமயத்தவர்களும் அவரவர் விருப்பப்படி தங்களுக்கு வேண்டியவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் ஓர் இடமாக இருந்துவந்துள்ளது, என இறந்தவரின் குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு காரணமாக, அதிகாரிகள் சவப்பெட்டி இல்லாமல் திருமதி ஸையேரி புதைக்கப்பட வேண்டும் என அதிகாரத்துடன் வற்புறுத்தினர் – மற்றும் அவர்கள் இறந்தவரின் உடல் வேறு எங்காவது எடுத்து செல்லப்பட மறுத்து இறந்தவரின் உடலை, 48 மணி நேரம் தடுத்து வைத்தனர்.

நேற்று, குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் இடுகாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, இறந்தவரை வேறு எங்காவது புதைத்திட, அவரது உடலை விடுவிக்கும்படி மன்றாடினர். அதற்கு அவர்கள் இறந்தவர் முஸ்லீம் சடங்குகளின்படி , வியாழன் அன்று ஒரு சவப்பெட்டி இல்லாமல் அடக்கம் செய்யப்படுவார் என அறிவித்தனர் – மற்றும் இறந்தவரின் கனவர் மட்டுமே சவ அடக்கத்தின்போது அனுமதிக்கப்படுவார் எனவும் கூறினர்.

இது அவர்களின் இறந்தோரை அடக்கம் செய்திட பஹாய்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் நீண்ட வரலாற்றில் மிக சமீபத்திய சம்பவமாக உள்ளது. இரான் நாட்டின் பல நகரங்களில், முஸ்லீம் கல்லறைகளை பயன்படுத்துவதிலிருந்து பஹாய்கள் நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளனர், மாறாக அவர்கள் தங்கள் சொந்த இடுகாடுகளை கொண்டிட அனுமதிக்கப்பட்டுவந்துள்ளனர்.

எனினும் இந்த பஹாய் கல்லறைகள் அடிக்கடி அவற்றின் புனிதம் கெடுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில், இரான் நாட்டின் பல நகரங்களில் உள்ள பஹாய் கல்லறைகள் டிராக்டர்கள் கொண்டு அழிக்கப்பட்டுள்ளன அல்லது சில பல வழிகளில் பஹாய் சமூகத்திற்கு அவை கிடைக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கிலாவன்ட் நகரில் மட்டும் நான்கு கல்லறைகள் ஒரு டிராக்டர் கொண்டு அத்துமீறி அழிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக, மார்ச் மாதம், நஜாஃப் அபாட் நகரில் ஒரு பஹாய் குடும்பம் அதிகாரிகளின் அனுமதி பெற்றிருந்தும், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை கல்லறையில் அடக்கம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தனர்.

“இரானிய அதிகாரிகள் சமய ரீதியில் தங்கள் அரசாங்கம் எவரையும் துன்புறுத்துகிறது என்பதை எப்போதுமே மறுத்து வந்துள்ளனர். பஹாய்கள் தங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக விளங்கவில்லை. ஆனால், பஹாய் கல்லறைகள் மீதான பிரச்சினைகள் மற்றும் அவை அழிக்கப்படுதல் ஆகியவை சமய ரீதியில் மட்டுமே நடைபெறுகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன,” என திருமதி அலாயி தெரிவித்தார்.