பஹாய்களுக்கு தெரிந்தவரை யூத, கிருஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்கள் தவிர்த்து வேறு சமயங்கள் எதை பற்றியும் பஹாவுல்லா தன்னிச்சையாகவும் விரிவாகவும் கருத்துரைத்ததில்லை. பார்ஸி சமயத்தவரான மானிக்ஜி என்பார் பஹாவுல்லாவிடம் ஹிந்து மற்றும் பார்ஸி (Zoroastrianism) சமயங்கள் பற்றி சில கேள்விகள் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு பஹாவுல்லா சில நிருபங்கள் மூலமாக பதிலளித்துள்ளார். அப்பதில்கள் அடங்கிய நிருபங்கள் மானிக்ஜியின் செயலாளராக பணியாற்றிய மிர்ஸா அபுல் பாஸில் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அந் நிருபங்களில், சமய ஒப்பீடு, ஹிந்து சமயம் மற்றும் பிற சமயங்கள் பற்றி பஹாவுல்லாவின் கருத்துரைகள் உள்ளன, ஆனால் அதில் பஹாவுல்லாவின் பதில்கள் வெளிப்படையாக இல்லாமல் பெரும்பாலும் உள்ளர்த்தம் கொண்டவையாக மிகவும் கவனமாக படிக்கப்படவேண்டிய நிலையிலும் உள்ளன. மேலும், அவருடைய பதில்கள் உலக சமயங்களின் ஒருமைத்தன்மை குறித்த புரிந்துகொள்ளலை வழங்கிடவே பெரும்பாலும் முற்படுகின்றன. இந்த கேள்விகளும் பதில்களும் உள்ள நிருபங்கள் இன்று ‘ஒற்றுமை எனும் திருக்கோயில்’ (Tabernacle of Unity) எனும் நூலின் ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஹிந்து சமயம் குறித்து மானிக்ஜி கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இங்கு தனியே வழங்கப்படுகின்றன.
விண்ணகத் திருநூல்கள் குறித்த உங்களது கேள்வி தொடர்பாக:
அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார். அவர் வியாதியை அறிகின்றார்; தனது தவறா விவேகத்தினைக் கொண்டு பரிகாரம் வழங்குகின்றார். ஒவ்வொரு காலமும் அதற்குச் சொந்தமான பிரச்சினையையும், ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும் கொண்டுள்ளது. இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது. நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.
இப்பதிலிலிருந்து உலக சமயங்களுக்கிடைய நிலவும் வேறுபாடுகளுக்கான காரணங்களை நாம் நன்கு யூகிக்கமுடிகிறது. ஒவ்வொன்றும் காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்ப உலகில் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் ஒருவித சூழ்நிலைக்கு மிகவும் ஏற்புடையாதாக இருக்கும் ஒரு சமயம் பிற்காலத்தில் உருவாகும் வேறுவிதமான சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அது அச்சமயத்தின் குறையல்ல. அது தோன்றியது ஒருவித சூழ்நிலைக்கு ஆனால், உருவாகியிருப்பதோ வேறுவிதமான சூழ்நிலை.
மானிக்ஜி சாஹிப் ஏற்கனவே கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பஹாவுல்லா பதிலளித்திருந்தார். ஆனால் அப்பதில்களால் மானிக்ஜி திருப்தியடையவில்லை. அது குறித்து பஹாவுல்லா:
மதிப்புமிகு அறிஞர் சாஹிப் – அவர் மீது இறைவனின் கிருபை தவழட்டுமாக- அவர் கேட்டிருந்த கேள்விகள் தொடர்பாக நீங்கள் எழுதியிருந்தது குறித்து, அவர் எழுதியனுப்பியதை வைத்துப் பார்க்கையில்,அவரது மன நிலையும், சூழ்நிலையும் தெள்ளத்தெளிவாகவே புலனாகின்றன. இப்பொழுது அவரது கேள்விகள் சம்பந்தமாக, அக் கேள்விகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவ்வாறான பதில்,விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில்புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும். அவ்வாறிருந்தும், தெய்வீக உதவியெனும் விண்ணுலகிலிருந்து அற்புதத் தெளிவுடன் துல்லியமாக அவரது நற்பெயரின்பேரில் மறுமொழிகள் வழங்கப்பட்டன. ஆயினும், அவ்விஷயத்தை அவர் மிக அணுக்கமாகக் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், அவர் முறையாக அம்மறுமொழிகளை கவனித்திருப்பின், எந்தவொரு கருத்தும் மறுமொழியளிக்கப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பதை அவர் உடனே ஒப்புக் கொண்டு, “இது மிகத் தெளிவானதும்,ஆணித்தரமானதுமான வெளியிடுகையேயன்றி வேறில்லை,” என வியந்து கூறியிருப்பார்.
இங்கு பஹாவுல்லா ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் பெரும் விவேகத்துடன் “அவ்வாறான பதில், விவேகத்திற்கு முரணாக அமைந்து விடுவதுடன், அம்மறுமொழி மனிதர்களிடையே தற்போது வழக்கில் புழங்கி வருவனற்றிற்குப் பொருத்தமற்றதாக அமைந்து விடும்“, என கூறியுள்ளார். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாகும். பூர்வீகத்தில் ஹிந்து சமயம் எனும் ஒரு தனி சமயம் கிடையாது. பின்னாளில் வெள்ளையர் ஆட்சியின் போது சிந்து நதிக்கு அப்பால் வாழ்வோர் அனைவரையும் இந்துக்கள் என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். அங்கு வழக்கில் இருந்த வைதீகத்தை அடிப்படையாக கொண்ட சமயங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஹிந்து சமயம் என அழைக்கப்பட்டன. பஹாவுல்லாவின் சமயம் உலக சமயங்கள் தங்களுக்கிடையிலான ஒற்றுமையை புரிந்துகொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஹிந்து சமயம் குறித்த பஹாவுல்லாவின் பதில்கள் ஒரு சாரருக்கு ஏற்றதாக இருக்கும் அதே வேளை பிறருக்கு அது ஏற்றதாக அமையாமல் போகலாம். ஏற்கனவே இருக்கும் பிரிவுகளுக்கிடையே மேலும் ஒரு புதிய விளக்கத்தையும், பிரிவினையையும் உருவாக்குவதை பஹாவுல்லா தவிர்த்து மக்களின் கவனம் நாம் வாழும் காலத்தின் தேவைகளின்பால் இருப்பதே முக்கியம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றார் என்றே பொருள்படுகிறது.
மானிக்ஜியின் கேள்விகளுள் ஒன்று பின்வரும் வினாவை உள்ளடக்கியுள்ளது:
… சில இந்து தீர்க்கதரிசிகள் பிரகடனப்படுத்தியுள்ளதாவது: ”யாமே இறைவன். எம்பால் விசுவாசம் காண்பித்திடுவதை படைப்பு முழுமைக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பிளவும், பிரிவும் தோன்றும் போதெல்லாம், அதனை அணைப்பதற்காக யாம் முன்னெழுந்திடுவோம்.” தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் “ஆதியில் தோன்றியவரும் யாமே,” என அறிவித்தள்ளனர், எனும் வரிகளை குறிப்பிட்டு இக்கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடுமா மற்றும் எந்த தீர்க்கதரிசி அல்லது அவதாரத்தை ஏற்றுக்கொள்வது என மானிக்ஜி வினவுகிறார்.
முதலாவதாக, தீர்க்கதரிசிகள் எனும் வார்த்தை ஆங்கிலத்தில் ‘ப்ரொஃபெட்’ (Prophet) எனும் வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். சமய ஸ்தாபகர்கள் இரண்டு நிலையில் வெளிப்படுகின்றனர். ஒன்று தீர்க்கதரிசிகள்(Prophets) எனும் நிலை மற்றது கடவுளின் அவதாரங்கள்(Manifestations of God) எனும் நிலை. கடவுளின் அவதாரங்கள் அல்லது வெளிப்பாட்டாளர்கள் எனும் நிலையில் இவர்கள் கடவுளின் நிலையிலேயே பேசுகின்றார்கள், அதாவது கடவுள் மானிடத்திற்கு கூற நினைப்பதை தமது அவதாரங்கள் மூலமாக தெரியப்படுத்துகின்றார். பகவத் கீதையில் ஒவ்வொரு செய்யுளின் ஆரம்பத்திலும் ‘ஸ்ரீகிருஷ்ன உவாச’ என்றில்லாமல் ‘ஸ்ரீபகவான் உவாச’ எனும் வார்த்தைகள் உள்ளன. அதாவது கிருஷ்னர் கடவுளின் நிலையிலிருந்து பேசுகிறார் என்பது இதன் விளக்கமாகும். ஆகவே, பகவத் கீதையில் வரும் பின்வரும் வரிகள் இவ்விளக்கத்தின்படியே பார்க்கப்படவேண்டும்:
ஸ்ரீ பகவான் திருவாய்மொழிகின்றார்:
இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
இதற்கு மறுமொழியாக அர்ஜுனன் பின்வருமாறு வினவுகின்றான்:
அர்ஜுனன் கூறுவது:
உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீரே இதை ஆதியில் கூறினீரென்று நான் தெரிந்துகொள்வதெப்படி? .
இதன் பொருள் காலங்காலமாக கடவுள் தமது திருவிருப்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தியே வந்துள்ளார். அவர் முதலில் விவஸ்வானுக்கும் பிறகு மனுவிற்கும் அதன் பிறகு இக்ஷ்வாகுவிற்கும் நிகழ்காலத்தில் கிருஷ்னர் மூலமாக அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார்.
“…எல்லா திருத்தூதர்களும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்து, மீண்டும் அவரிடமே திரும்பிச் சென்றுள்ளவர்கள்.” .
மேலும் கீதோபதேசத்தில் இதே பொருள் குறித்த பின்வரும் வரிகள் காணக்கிடக்கின்றன:
பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் ஒரு (புனித)ஆன்மாவைப் படைக்கின்றேன்.
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் சம்பவிக்கின்றேன்”. .
கடவுள் தமது அவதாரங்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார். அவ்வாறு வந்தவர்களே ராமர், கிருஷ்னர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மத் போன்றோர். இவர்கள் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் தங்கள் மெய்ம்மையில் இவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிபிம்பங்களே ஆவார்கள்.
“…இந்த வகையில் பார்க்குமிடத்து அவர்கள் அனைவரும் ஒரே நபர் ஆவர். ஏனெனில், தங்களது சொந்தவிருப்பத்தின் பேரில் அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசினார்களில்லை, ஒரு செய்தியைக்கூட கொண்டு வந்தார்களில்லை அல்லது ஒரு சமயத்தைக் கூட வெளியிட்டார்களில்லை. இல்லை. அவர்கள் மொழிந்துள்ளவை அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப்பட்டு வந்தவையாகும்.”
மானெக்ஜியின் கேள்வி ஒன்று கடந்தகால தீர்க்கதரிசிகளுள் யாரை தேர்வு செய்வது என்பதாகும். இதற்கு பஹவுல்லா:
“அவரது திருத்தூதர்கள் எவரையுமே யாம் வேறுபடுத்திப்பார்த்ததில்லை.” “தீர்க்கதரிசிகள் அனைவருமே இறைவனது திரு ஆலயங்களே என்பது உங்களுக்குத் தெளிவானதும் ஆதாரப் பூர்வமானதும் ஆகும். நீங்கள் உய்த்துணரும் கண்களைக் கொண்டு கூர்ந்து கவனிப்பீராயின், அவர்கள் அனைவருமே அதே கூடாரத்தினில் வசிப்பதையும், அதே வானத்தில் பறப்பதையும், அதே அரியாசனத்தின் மீது அமர்ந்திருப்பதையும், அதே சொற்பொழிவை ஆற்றிடுவதையும், அதே சமயத்தினைப் பிரகடனப் படுத்திடுவதையும் காண்பீர்.”
என கூறுகின்றார். (உலகில் இதுவரை 127,000 திருத்தூதர்கள் தோன்றி மறைந்துள்ளனர் எனும் ஒரு நம்பிக்கை இஸ்லாம் சமயத்தில் உள்ளது.)
சாஹிப் அவர்களின் மற்றுமொரு கேள்வி சமய கோட்பாடுகள் மற்றும் சட்டதுறை குறித்த்தாகும். ஹிந்து சமயத்தில் சட்டத்துறை யல்லாது கோட்பாடுகளே யாவற்றையும் வழிநடத்துகின்றன. சட்டங்கள் அனைத்தும், நீர் அருந்துவது தொடர்பான சட்டங்கள் கூட அல்லது திருமணத்தில் கொடுத்தல், எடுத்தல் போன்ற சட்டங்கள் கூட, மானிட வாழ்வில் மற்ற அம்சங்களைப் போலவே, இக் கோட்பாடுகளின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றன. இதில் எது சிறந்தது என்பது சாஹிபின் கேள்வியாகும்.
இதற்கு பஹாவுல்லாவின் பதில்:
சமயக் கோட்பாடுகள் பல்வேறு நிலைகளையும்,ஸ்தானங்களையும் கொண்டவை. எல்லாக் கோட்பாடுகளுடைய ஆணிவேரும், எல்லா அடித்தளங்களின் அஸ்திவாரமும் இறைவனை அறிந்து கொள்ளுதலாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது, இனியும் அவ்வாறே அது நிலைத்திருக்கும். இன்றைய நாள்கள் உண்மையில் எல்லா கருணைமிக்கவரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளலின் வசந்த காலமாகும். அவர்தம் சமயமெனும் களஞ்சியத்திலிருந்தும், அவர்தம் வெளிப்படுத்துதலிருந்தும் எதுவெல்லாம் வெளிவருகின்றதோ அதன்பால், உண்மையில் அனைவரும் விசுவாசங் காண்பிக்க வேண்டும் என்பது அடித்தள கோட்பாடாகும். மேலும்:
“நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.”
என அவர் அறிவுறுத்துகின்றார்.
மாமிசம் அருந்துவது குறித்தது சாஹிபின் அடுத்த கேள்வி. அதாவது ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை மற்றும் முஸ்லீம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை. இதற்கு பஹாவுல்லா பின்வருமாறு பதிலளிக்கின்றார்:
“அனைத்தும் அறிந்த மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார்,” எனும் வாசகமே அவரது கேள்விக்கான பதிலாக இருக்கின்றது. அவர் மேலும் கூறுவதாவது: “நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளின்பால் அதிக அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப்படுத்துங்கள்.” மேலும், ஏற்கணவே கூறியுள்ளது போல், “இவ்வுலகிற்குத் தேவைப்படும் தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது.”
அதாவது அறிவியல் வளர வளர உணவு வகைகளும் மாறி வருகின்றன. சுகாதார சூழ்நிலைகள் பெருகிவிட்டன; மனிதர்களுக்கு ஏற்ற உணவு வகைகளை அறிவியல் ரீதியில் நாம் கண்டறிந்துகொள்ளலாம்.
ஹிந்துக்களின் அஹிம்சை கோட்பாடு குறித்த மற்றொரு கேள்விக்கு:
எவருடனும் சச்சரவு கொ ள்வது அனுமதிக்கப்படவுமில்லை, ஓர் ஆன்மாவைத் துன்புபறுத்துவதோ, கொடுமைப்படுத்துவதோ இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. எல்லா வேளைகளிலும், ஒவ்வொரு காலத்திலும் இந்த உயரிய வார்த்தைக ள் அதி உயரிய எழுதுகோலிலிருந்து பெருக்கெடுத்துள்ளன- அவர் ஆசீர்வதிக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்படுவாராக: “மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கமானது, மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”
ஒருவர் பிறப்பால் மட்டுமே ஹிந்துவாகவும் ஸோராஸ்திரியராகவும் (யூதராகவும்) இருக்கமுடியும் மாறாக, ஒருவர் சுயவிருப்பதால் அச்சமயங்களில் சேர முடியாது எனும் நம்பிக்கை, மற்றும் வன்மதமாற்றம் குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:
மனிதர்களின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். சகோதரத்துவத்திற்கான முன்தேவைகள் பல்வகையானவை. அவற்றில் ஒன்று, தனக்காக எதை ஒருவர் விரும்புகின்றாரோ, அதனையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். எனவே, உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான பரிசைப் பெறும் ஒருவர் அல்லது விண்ணுலகத் திவ்விய உணவைச் சுவைத்திடும் ஒருவர், தனது நண்பர்களிடம் அதனைத் தெரிவித்து அதி அன்புடனும், இரக்கத்துடனும் அவர்களையும் அதன்பால் அழைத்திட வேண்டும் என்பது அவருக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
மற்றும்,
அவர்கள் அதற்குச் சாதகமாக செவிசாய்ப்பின், அவரது குறிக்கோள் அடையப்பட்டுவிட்டது; அவ்வாறில்லையெனில், அவர்களுடன் எதிர்வாதம் செய்யாமலும் அல்லது அவர்களுக்குக் கிஞ்சிற்றும் சோகமிழைக்கவல்ல எந்தவொரு வார்த்தையையும் கூறாமலும், அவர்களை அவர்களுடைய வழியிலேயே விட்டுச் சென்றிட வேண்டும்.”
மேலும் படித்திட:
Tabernacle of Unity
Baha’i Publishing Trust of Malaysia