‘ஜுக் நூல்’ என்பது ‘வசிஷ்ட யோகம்’ எனும் நூலாகும். இந் நூல் முகாலயர் ஆட்சியின் போது மொழிபெயர்கப்பட்டு பாரசீக நாட்டில் பல நூற்றாண்டுகாலமாக பிரபலமாக, குறிப்பாக இந்திய-பாரசீக விஷய ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில் ஆதாமுக்கு முற்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லாதது பற்றி அவர் கருத்துரைக்கின்றார். இங்கு அவர் ஜுக்-பஸிஷ்ட் (ஜுக் நூல்) எனும் வசிஷ்டயோக நூலைச் சுட்டுகின்றார். இந்த நூல் ஹிந்து மறைபொருளியல் குறித்த படைப்பாகும்.
வசிஷ்டர் வாழ்ந்த காலத்தில் நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிய இராமர் நாட்டில் தாம் கண்ட காட்சிகளினால் (புத்தரைப் போன்றே தாமும்) மனம் குழம்பியிருந்தார். அது கண்ட இராமரின் பிதாவான தசரதர் வசிஷ்ட முனிவரை அழைத்து தமது கவலையை தெரிவித்தார். வசிஷ்டரோ இராமர் இப்போது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தயாராக இருக்கின்றார் எனவும் இதில் அவர் உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறார். இதன் தொடர்பில் இராமர் கேட்ட கேள்விகளும் அதற்கான வசிஷ்டரின் பதில்களுமே வசிஷ்ட-யோகம் என வழங்கப்படுகின்றன.
இந்த நூல் நிஸாமுட்-டின் பானிப்பதி என்பவரால் 16ம் நூற்றாண்டின் இறுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. சாஃபாவிட் காலத்து இரானிய தத்துவ-மறைஞானியான மீர் பிஃன்டிரிஸ்கி (கிபி.1641) என்பார் பானிப்பதி மொழிபெயர்த்த வசிஷ்ட யோகத்தின் சில பகுதிகளை விரிவுரைத்துள்ளார். இந்த வஸிஷ்ட யோகத்தின் அத்தியாயங்களுள் ஒன்றான புஸுந்தாவின் (ஒரு முதிய முனிவர்) கதையில், ஹிந்து பஞ்சாங்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள பூவுலக வரலாற்றில் வரும் தொடரான சகாப்தங்களை புஸுந்தா நினைவுகூறுகிறார். இப்பகுதியில், பஹாவுல்லா இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ சமயங்கள் போதிக்கும் உலகத்தின் வயது குறித்த 6,000 அல்லது 12,000 வருடங்களைவிட ஹிந்து சமயத்தின் வேத, புராண, இதிகாசங்கள் குறிப்பிடும் கோடிக்கணக்கான வருடங்களையே தேர்வு செய்கிறார். உண்மையில் இதே நிருபத்தில் பஹாவுல்லா ஹிந்துக்களில் பலர் நம்பும் “சிருஷ்டி என்றென்றுமே இருந்துவந்துள்ளது” எனும் கூற்றை முன்வைக்கின்றார். ஓர் அன்பர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பஹாவுல்லா இந்த நூலில் வரும் பூவுலக வரலாற்றை சுட்டி பின்வருமாறு பதிலளிக்கின்றார்:
வரலாற்று குழப்பங்கள்
இப்பொழுது, “மனித இனத்தின் தந்தையாகிய ஆதாமிற்கு1 முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரசர்களையும் பற்றிய பதிவேடுகள் எதுவுமே காணப்படவில்லையே, அது எப்படி?” என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: அவர்கள் சம்பந்தமான எவ்விதக் குறியீடுகளும் இல்லாதிருப்பது அவர்கள் இல்லாதிருந்தனர் என்பதற்கு ஆதாரமாகாது என்பதை நீங்கள் அறிவீராக. அவர்களைக் குறிக்கும் பதிவேடுகள் எவையும் இப்பொழுது கிடைக்காததற்குக் காரணம், அக்காலம் நெடுங்காலத்திற்கு முந்தியதாய் இருந்ததுதான்; அதோடு, அவர்களின் காலத்திற்குப் பின் உலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களும் அதற்கு மற்றொரு காரணமாகும்.
எழுத்துமுறை குழப்பங்கள்
மேலும், மனிதரிடையே இப்பொழுது வழக்கிலிருந்து வரும் எழுத்து வகைகளும் முறைகளும் ஆதாமுக்கு முன்பாக இருந்த தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது. மனிதர்கள் முற்றிலும் எழுத்தறிவே இல்லாதிருந்த ஒரு காலமும் இருந்தது; அக்காலத்தில், இப்பொழுது அவர்கள் உபயோகித்து வரும் முறையை விட முழுமையாக வேறுபட்ட முறையை மேற்கொண்டிருந்தனர். இதனைப் பொருத்தமுற விவரிப்பதற்கு விரிவான விளக்கம் தேவைப் படும். ஆதாமின் காலமுதல் இன்றுவரை தோன்றியுள்ள மாற்றங்களை எண்ணிப் பாருங்கள்.
மொழி குழப்பங்கள்
இப்பொழுது உலக மக்களால் பேசப்படும் பல்வேறான, பரவலாகத் தெரிந்துள்ள மொழிகள், இப்பொழுது அவர்களிடையே நடைமுறையிலுள்ள விதிகளையும் சம்பிரதாயங்களையும் போலவே, தொடக்கத்தில் தெரியாதிருந்தன. அக்காலத்திய மக்கள், இப்பொழுதுள்ள மக்களுக்குத் தெரிந்திராத ஒரு மொழி பேசினர். மொழி வேறுபாடுகள் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன; அது பேபல்2 எனப்படும் இடத்தில் நிகழ்ந்தது. அது “மொழிகளில் குழப்பம் தோன்றிய இடம்“ என பொருள்படுவதால் அதற்கு பேபல் என்ற பெயர் கொடுக்கப் பட்டது. அதற்குப்பின், அப்பொழுது இருந்த மொழிகளில் சிரியாக்3 மொழி பிரபலமடைந்தது. முந்தைய திருமறைகள் அம்மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன. பிறகு, ஆப்ரஹாம், ஆண்டவனின் நண்பர்4, தோன்றி, தெய்வீக வெளிப்பாட்டின் ஒளியினை உலகின்மீது விழச்செய்தார். அவர் ஜோர்டான் நதியைக் கடக்கும் பொழுது உபயோகித்த மொழி ஹிப்ரு5 மொழியாகும் (இப்ரானீ); அதன் பொருள், “கடக்கும் மொழி”. அதன் பிறகு, இறைவனின் நூல்களும் திருமறைகளும் அந்த மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன; ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே அரபு மொழி வெளிப்பாட்டு மொழியாக ஆகியது …. ஆகவே, ஆதாமின் காலம் முதல் இன்றுவரை, மொழி, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்துணை எண்ணற்றதும் பரவலானதுமாய் இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள். இன்னும் எந்தளவு அதிகமானதாய் இருந்திருக்க வேண்டும் அவருக்கு முன்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்!
கடந்தகால அவதாரங்கள்
யாம் இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் நோக்கம், ஒரே உண்மைக் கடவுளாகிய அவர், தமது அதிவுயரிய, அனைத்திற்கும் மேம்பட்ட ஸ்தானத்தில், எப்பொழுதுமே தன்னைத் தவிர மற்றனைவரின் புகழ்ச்சிக்கும், புரிந்துகொள்ளலுக்கும் மேலான மிகச் சிறந்த நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் எக்காலத்தும் அவ்வாறே இருந்தும் வருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே. அவரது படைப்பு எக்காலத்தும் இருந்து வந்தே உள்ளது; அவரது தெய்வீக மகிமையின் அவதாரங்களும் அவரது நித்திய புனிதத் தன்மை என்னும் பகலூற்றுகளானோரும், நினைவுக்கெட்டாத காலம் முதல், மனித இனத்தை ஒரே உண்மைக் கடவுளின்பால் அழைத்திடுமாறு பொறுப்பு வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் மறக்கப்பட்டும், அவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் பதிவேடுகள் இழக்கப்பட்டுமிருப்பற்கு உலகத்தில் ஏற்பட்டு வந்துள்ள கொந்தளிப்புகளும் மாற்றங்களுமே காரணங்களாகும்.
பிரளயங்கள்
சரித்திரக் குறிப்புகளும் மற்றப் பொருள்களும் உள்பட, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் அழித்திட்ட ஒரு பிரளயத்தைப் பற்றிச் சில நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது; அன்றியும், பல நிகழ்வுகளின் அடையாளங்களைத் துடைத்தழித்திட்டப் பல பிரளயங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், இப்பொழுதிருக்கும் சரித்திர வரலாறுகளில் வேறுபாடுகள் காணப் படுகின்றன; உலகின் பல்வேறான இனங்கள் ஒவ்வொன்றும் அக்காலக் கட்டத்தையும் அதன் சரித்திரத்தையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன. சில, எட்டாயிரம் ஆண்டுகளிலிருந்து அவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றன; மற்றவை, பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கின்றன. “ஜூக்“ நூலைப் படித்திருப்பவர் யாராயினும் அதற்கும் பற்பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாறுகளுக்கும் இடையே எந்தளவு வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் தெரிந்திடும். நீங்கள், இம் முரண்பாடான கதைகளையும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் புறக்கணித்து, இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டின்பால் உங்கள் பார்வையைத் திருப்பிட இறைவன் அருள் புரிவாராக.
அதாவது, பஹாவுல்லா வசிஷ்ட யோகத்தில் காணப்படும் காலக் கணக்கை தாமும் ஆதரிக்கின்றார் எனவே இதிலிருந்து புலப்படுகின்றது.
குறிப்புகள்:
1 – ஆதாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியில் ஜனனம் (Genesis) வரும் ஒரு அவதார புருஷராவார். இவரே முதல் மனிதர் எனும் நம்பிக்கை பரவலாக இருந்தபோதிலும் பஹாய் திருவாக்குகள் இவரை ஓர் அவதார புருஷர் எனவே விவரிக்கின்றன.
2 – பேபல் (Babel) – ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு மொழி மட்டுமே பேசி வந்தனர் எனவும் பிற்காலத்தில் பேபல் எனும் இடத்தில் (இராக் நாட்டில் இருந்த ஓர் இடம்) மொழிகள் பலவாறாக பிரிந்தன எனவும் கூறப்படுகிறது. இவ்விஷயத்தை பஹாய் திருவாக்குகளும் ஆதரிப்பனவாக இருக்கின்றன.
3 – சிரியாக் (Syriac) – ஹிப்ரூ மற்றும் அரமேய்க் மொழிகள் தோன்றுவதற்கு முன் பேசப்பட்டு வந்த ஒரு மொழி
4 – ஆப்ரஹாம் (ஆண்டவரின் நண்பர்) – இவர் பழைய ஏற்பாட்டில் வரும் அவதார புருஷர் மற்றும் விவிலியத்தில் வரும் எல்லா அவதார புருஷர்களுக்கும் இவரே தோற்றுவாய் என குறிக்கப்படுகிறது.
5 – ஹிப்ரூ மொழி – தற்போது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழி.
அருமையான மொழிப்பெயர்ப்பு. உங்களின் மற்றொரு சிந்தனை காவியம். நன்றி அங்கள்.