மனுக்குல ஒருமைத்தன்மைக்கு உதாரணமாக விளங்குகின்றது இந்த ஜோடியின் திருமணம்


http://www.bahai.us/2011/10/12/jack-and-farzaneh-guillebeaux/
அக்டோபர் 12, 2011

பெரும்போலானோருக்கு ஜேக், பஃர்ஸானே ஜோடி காதல் வயப்பட்டது சரியாகப்படவில்லை.

ஜேக்பாஃபார்
வில்மட் பஹாய் வழிபாட்டு இல்லத்தில்ஜேக் மற்றும் பார்ஸானேயின் திருமணம்

1960களில் வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையிலான காதல் உறவுகள் அனுமதிக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்டிருந்தது.

ஆனால், பஹாய்கள் அதை அவ்வாறு காணவில்லை. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான திருமணங்கள் மனிதகுலத்திற்கு ஆற்றப்படும் சேவையே என ஒரு முறை பஹாவுல்லா கூறியுள்ளார் மற்றும் இவ்வார்த்தைகளே 1965ல் திருமணம் செய்துகொள்வதெனும் இந்த ஜோடியின் தீர்மானத்தின் உந்துசக்தியாக இருந்தது.

இந்த ஜோடி ஆஷ்வில் N.C. நகரின் பஹாய் விளக்க கூட்டம் ஒன்றில் சந்தித்தனர். அப்போது பாஃர்ஸானே காலேஜ் செல்லும் முடிவோடு இரான் நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா வந்திருந்தார்.

“நான்கு வருடங்கள் பள்ளி சென்றும் அதன்பின் வீடு திரும்புவதும் என் திட்டமாக இருந்தது. ஆனால் கடவுளின் திட்டம் வேறாக இருந்தது,” என அவர் கூறினார்.

ஆஷ்வில் பஹாய் சமூகத்தினர் இந்த இளம் ஜோடி தங்களின் உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய புகலிடத்தை வழங்கியதன் வாயிலாக அவர்களுக்கு ஆதரவும் பராமரிப்பும் அளித்தனர். அக்காலத்தில் கலப்பின ஜோடியினர் வட காரோலினாவில் ஒன்றாக வாழ அனுமதியிருந்தது, ஆனால் அவர்கள் அந்த மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ளமுடியாது. ஆகவே அவர்கள் 500 மைல்களுக்கு அப்பால் வில்மட் நகரில் இருந்த பஹாய் வழிபாட்டு இல்லத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

“ நாங்கள் பெரிதும் வறிய நிலையில் இருந்தோம். நான் மாணவியாக இருந்தேன், ஆனால், காதல் வயப்பட்ட நாங்கள் என்னதான் செய்வது? என பாஃர்ஸானே கூறினார்.”

அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவ்வளவு தூரத்தில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை, ஆகவே திருமண தம்பதியினர் இல்லம் திரும்பியவுடன் அவர்களுக்காக ஆஷ்வில் நகர் YWCAல் ஒரு திருமண விருந்து நிகழ்வை நடத்திட தீர்மானித்தனர்.

அவ்விருந்து நிகழ்வின் போது அவர்களுக்கு பழக்கமில்லாத பல முகங்களைக் கண்டனர். அந்த பழக்கமில்லாத மனிதர்கள் அனைவரும் இத்தகைய தடுக்கப்பட்ட திருமணத்திற்கான விருந்து நிகழ்வை தாங்களே நேராக காண வந்திருந்தனர் என ஜேக் கூறினார்.

ஜேக் மற்றும் பாஃர்ஸானே1
46 வருடகால திருமண நிறைவு

“இத்தகைய பொதுநிகழ்வை மக்கள் கண்டதில்லை என்பது அப்போது மிகவும் தெளிவாகியது, என ஜேக் கூறினார் .” சமூகத்தில் இருந்த பலருக்கு இது ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது. சிலர் அதை வெளிப்படையாகவே தெரிவித்தனர், பிறரோ இது எவ்வளவு காலத்திற்குதான் நிலைத்திருக்கும் என காத்திருந்தனர்.

அன்று இரவு அந்த விருந்து நிகழ்வில் வெடி குண்டு மிரட்டல் ஒன்று இருந்ததென ஜேக் ஜில்லபோ தம்பதியினர் கூறினர்.

புதுமணத் தம்பதியினரைப் பற்றி மக்கள் பலவாறாகப் புறம்பேசினர், அவர்களை உறுத்து பார்த்தனர், சிலர் அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூட மறுத்துவிட்டனர். கில்லபோ தம்பதியினர் இவ்விஷயங்களைப் பற்றி விவரிக்கையில் முகத்தில் புன்னகையோடே விவரித்தனர்.

“எங்களுக்கு இது மிகவும் நகைப்பாக இருந்தது. நாங்கள் தெருவில் நடந்து செல்கையில் திடீரென நாங்கள் திரும்பிபார்த்தால் எங்களையே பார்த்துக்கொண்டிருந்த பலர் தங்கள் முகத்தை அப்பால் திருப்பிக்கொள்வதைக் காண்போம்,” என சிரித்துக்கொண்டே பாஃர்ஸானே கூறினார்.

இவர்கள் எதோ ஒரு கருத்தை வலியுறுத்தவில்லை. கில்லபோ தம்பதியினர் இன தப்பெண்ணத்திற்கு எதிராக ஒரு விதமான போராட்டதை நடத்தினர்.

“கலப்புத் திருமணங்களை மானிடத்திற்கான சேவை என பஹாவுல்லா ஏன் கூறினார் என்பதை நாங்கள் நேரடியாகவே கண்டோம் . தப்பெண்ணங்கள் கற்றுக்கொள்ளப்படும் ஒன்றாகும் மற்றும் ஒரு கலப்பின தம்பதியினரை நேரில் காணும்போது அத்தகைய தப்பெண்ணங்கள் சிறிது சிறிதாக அழிவுறுகின்றன. நாங்கள் சந்திக்க நேர்ந்த மக்களில் அத்தகைய மனப்பான்மைகள் மாறுவதை நாங்கள் நேராகவே கண்டோம்,” என பாஃர்ஸானே கூறினார்.

தப்பெண்ணங்கள் அறியாமையினால் உருவாகின்றன மற்றும் எல்லா கலப்பின தம்பதியினரும், கலப்பின குழந்தைகளும் (அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன), நாடு முன்னோக்கி செல்வதற்கு பெரிதும் உதவுகின்றன.

சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஜோர்ஜியாவுக்கும், பிறகு தற்போது வாழும் அலபாமாவிற்கும் மாறிச் சென்றனர். அவர்களின் வெள்ளி வருடவிழாவை, தாங்கள் 25 வருடங்களுக்கு முன் தங்களின் திருமண விழாவின் அதே ஆஷ்வில் நகரின் YWCAவில் கொண்டாட அப்போது முடிவெடுத்தனர். உள்ளூர் நிருபர்கள் அவர்களின் அந்த நிகழ்வு குறித்து செய்திகளை சேகரித்தனர் மற்றும் அதன் பயனாக கில்லபோ தம்பதியினர் மீண்டும் அந்த நகரின் உரையாடல்களின் கருப்பொருளானார்கள். ஆனால் இந்த முறை அது வேறுபட்டிருந்தது. மக்கள் அவர்களை பார்த்து இகழ்வாக சிரிக்கவில்லை. மக்கள் அவர்களின் கைகளைப்பிடித்து குலுக்கி, அவர்களை வரவேற்று சமூகம் இப்போது மாறிவிட்டதெனவும் கூறினர்.

அந்த நகரில் அவர்களை திருமணம் செய்துகொள்ளவிடாமல் தடுத்ததற்காக திருமண லைசன்ஸ் அதிகாரிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.

இந்த கோடைக் காலத்தில் அவர்கள் தங்களின் 46வது திருமண வருட விழாவை கொண்டாடினர்.

1965ஐ பார்க்கையில் சமூகம் எவ்வளவோ மாறிவிட்டிருந்த போதிலும் கலப்புத் திருமண தம்பதியினர் இப்போதும் கண்ணோட்டத்திற்கு இலக்காகவே செய்கின்றனர்.

“தாங்கள் எதைப் பார்க்கின்றனர் மற்றும் அது எதைக் குறிக்கின்றது என்பது பற்றி மக்கள் சிந்திக்கவேண்டும். புதிய விதிமுறைகள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது உதவுகின்றது,” என அவர் கூறினார்.

ஒரு பஹாய் ஆக இருப்பதில் முக்கிய அங்கமே இதுதான் என அவர்கள் மேலும் கூறினர்.

“எழுதப்பட்டவற்றை மெய்மைப்படுத்தி செயல்படுத்துவதற்காக முயலுவதே இதன் விளக்கம் ஆகும்,” என பார்ஸானே கூறினார்.

தங்கள் சமய நம்பிக்கையின்றி அவர்கள் இந்த நான்கு பத்தாண்டுகாலமாக தாங்கள் எதிர்நோக்கிய சவால்களை சந்தித்திருக்கவே முடியாது என அவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்கள் சமயநம்பிக்கையே தங்களின் ‘துருவ நட்சத்திரமாக’ விளங்கியது என ஜேக் கூறினார்.

“தங்களின் சமய நம்பிக்கை பலவிதமான கேள்விகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது மற்றும் எங்கள் சமய போதனை எங்களுக்கு என்ன கூறுகின்றது என்பது எங்களுக்கு தெரியும் , அதிலிருந்து அப்பால் திரும்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை,” என அவர் கூறினார்.

அறம் செய விரும்பு – 1


வயதான பிச்சைகாரருக்கு குடை பிடித்து உதவிய பெண்

திடீரென கடும் மழை பெய்ய துவங்கியது. கால்கள் செயலிழந்த வயதான பிச்சைக்காரர் ஒருவர் மழையில் நனைந்திட ஆரம்பித்த போது சிறு வயது பெண் ஒருவர் அது கண்டு தான் நனைந்தாலும் பரவாயில்லை அப்பெரியவர் நனையாமல் இருந்திட தன் குடையை அவர் தலைக்கு உயரே பிடித்து உதவினார். அப்போது சீருடையில் இருந்த ஒருவர் (காவலர்) அச்செயலை பார்த்துக்கொண்டிருக்கின்றார். சீனாவின் ஸூஸௌ நகரில் நடந்த ஓர் உண்மையான சம்பவம் இது. அவ்விடத்தில் இருந்த ‘நெட்டிஸன்’ ஒருவர் இப்படங்களை எடுத்துள்ளார். இப்படங்களின் உண்மையை உறுதிசெய்து அனுப்பிய நிருபர் அப்பெரியவருக்கு உதவிய பின்னர் தன் இடத்திற்கு திரும்பிய அப்பெண் அழுததாக அந்த ‘நெட்டிஸன்’ கூறியதாக எழுதியுள்ளார். அப்பெண்ணின் செயலை ‘நெட்டிஸன்கள்’ பலர் இண்டர்நெட்டில் பெரிதும் பாராட்டி, அது போன்ற ஒரு மனதை தொடும் காட்சியை தாங்கள் கண்டதே இல்லையென எழுதியுள்ளனர்.

குடை பிடிக்கும் பெண் - 1
அவசரமாக சாலையை கடக்க முடியாத நிலை
குடை பிடிக்கும் பெண் - 2
நனைந்துகொண்டே உடன் செல்கின்றார்
குடை பிடிக்கும் பெண் - 3
உதவிக்கு வந்தவர் முழுதாக நனைந்துவிட்டார்
குடை பிடிக்கும் பெண் - 4
வேடிக்கை பார்க்கும் காவலர்

கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம்


கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும்

மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளமும் நிரூபனமுமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார்.

மனிதனின் சிருஷ்டிகர்த்தா மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி. அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும், எனெனில் சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும்.

சிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா? ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா? (ஓவியம்) அவனுடைய கலை மற்றும் சிருஷ்டியாகும். மேலும், ஓவியம் ஓவியனைப்போலவே இருக்கவும் முடியாது; இல்லையென்றால் அந்த ஓவியம் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிக்கும். சித்திரம் எவ்வளவுதான் முழுநிறைவானதாக இருந்தபோதும், ஓவியனோடு ஒப்பிடுகையில்அச்சித்திரம் முற்றிலும் பூரணத்துவமற்றதே ஆகும்.

நிலையற்ற இப்பூவுலகம் பெரும் குறைபாடுகள் மிக்கதாகும்: குறைகள் அற்றவராக கடவுள் இருக்கின்றார். இந்த நிலையற்ற உலகின் குறைபாடுகள் கடவுள் பூரணமானவர் என்பதற்கான அடையாளமாகும்.

உதாரனமாக, மனிதனை பாக்கும்போது அவன் வலிமையற்றவனாக இருக்கின்றான். மனிதனின் இந்த வலிமையில்லாமையே என்றும் நிலையான கடவுளின் வலிமைக்கு ஆதாரமாகும், ஏனெனில் வலிமை என ஒன்று இல்லையெனில் வலிமையின்மை என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியாது. அதனால், சிருஷ்டியின் வலிமையின்மையே கடவுளின் வலிமைக்கான ஆதாரமாகும்; சக்தி என்பது இல்லையெனில், சக்தியின்மை என்பது இருக்கமுடியாது; ஆகவே இந்த சக்தியின்மை என்பது சக்தி எனும் ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கின்றது. மேலும், நிலையற்ற இவ்வுலகில் வறுமை நிலவுகிறது; ஆகவே வறுமை என ஒன்று வெளிப்படையாக இருப்பதால் செல்வம் என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது. இப்பூவுலகில் அறியாமை நிலவுகிறது; ஆகவே, அறியாமை என ஒன்று இருப்பதால் அறிவு என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது; ஏனென்றால், அறிவு என ஒன்று இல்லையெனில் அறிவில்லாமை என ஒன்றும் இருக்க வழியில்லை; அறியாமை என்பது அறிவாற்றல் இல்லாமையை குறிக்கின்றது, மற்றும் இருத்தல்நிலை இல்லையெனில் இருத்தலின்மையை நாம் உணரமுடியாது.

ஆகவே, இப்படைப்புலகு கீழ்ப்படியாமல் இருக்கமுடியாத ஒரு விதிக்கு தான் உட்பட்டதாக இருக்கின்றது என்பது உறுதி; மனிதன் கூட இறப்பு, தூக்கம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டவனாவான் – அதாவது, மனிதன் சில விஷயங்களில் ஆளுமைக்கு உட்பட்டவன், ஆகவே ஆளுமை என ஒன்று இருக்கும்போது ஆளுனர் என ஒருவர் இருப்பது உறுதி. ஏனெனில், நிலையற்ற சிருஷ்டிகளின் ஓர் அடையாளம் எதையாவது சார்ந்திருப்பதாகும், மற்றும் இந்த சார்தல்நிலை ஓர் இன்றியமையா தேவையும் ஆகும், ஆகவே, எதையும் சாராத சுயேச்சையான ஒரு திருப்பொருள் கண்டிப்பாக இருக்கவேண்டும் மற்றும் அதன் தன்னிச்சை அதற்கு இன்றியமையாத ஒன்றும் ஆகும்.

இதே முறையில், ஒருவன் நோய்வாயப்பட்டுள்ளான் எனும்போது உடல்நலத்தோடு ஒருவன் உள்ளான் என்பது அறிவு; ஏனெனில் சுகம் இல்லையெனில், அம்மனிதனின் சுகமின்மை நிரூபிக்கப்படமுடியாது.

ஆகவே, சகல பூரணத்துவங்களையும் உடைய என்றும் நிலையான சர்வவல்லமை மிக்க ஒருவர் இருக்கின்றார் என்பது வெளிப்படையாகின்றது. எனெனில், அவர் அவ்விதம் சகல பூரணத்துவங்களையும் பெறவில்லையெனில் அவர் தமது படைப்புகளைப்போலவே தாமும் இருப்பார்.

படைப்புலகு முற்றும் இவ்வாராகவே இருக்கின்றது; ஆகச் சிறிய சிருஷ்டியும் தன்னைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக, இந்த ரொட்டி அதனை செய்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாகும்.

கடவுள் வாழ்த்தப்படுவதாக! ஆகச் சிறிய தனிமம் ஒன்றில் நிகழ்த்தப்படும் குறைந்த அளவான மாற்றம் கூட சிருஷ்டிகர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது: ஆகையால், முடிவில்லாத, இம்மகத்தான பிரபஞ்சம், வஸ்துவும் தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்ட பரிசெயல்பாட்டினால் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியுமா? இத்தகைய ஒரு கருத்து வெளிப்படையாகவே எவ்வளவு தவறானதாக இருக்கின்றது!

இந்த வெளிப்படையான விவாதங்கள் வலிமையற்ற ஆன்மாக்களுக்காக குறிப்பிடப்படுகின்றன; ஆனால், ஆன்மீகப்பார்வை திறக்கப்படுமாயின், ஆயிரமாயிரம் தெளிவான ஆதாரங்கள் பார்வைக்கு வெளிப்படும். அதுபோல், தன்னுள் வதியும் ஆன்மாவை மனிதன் உணர்வானாயின், அதன் இருப்பு குறித்து அவனுக்கு ஆதாரங்கள் தேவையில்லை; ஆனால், அதியாத்மீகத்தின் அருள் இல்லாதாருக்கு வெளிப்படையான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.

(அப்துல் பஹா, சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள், ப. 5)

படவுருச் சின்னமான தாமரை கோவில் – உலகளாவிய சுற்றுலா இயக்கத்துக்கான கவனமையம்


பஹாய் செய்தி – 856

புது டில்லி — கெனடா நாட்டின் ஒட்டாவா நகரின் ஒரு பேருந்தில் ஏறுங்கள்; பாரீஸ் நகரில் ஒரு சஞ்சிகையை புரட்டுங்கள்; அல்லது இத்தாலி நாட்டின் ரிமினி தொடர்வண்டி நிலையத்தின் மேற்புறம் பாருங்கள் — உலகம் முழுவதும், பொதுமக்களின் கவனத்தை இந்தியநாட்டின் பஹாய் வழிபாட்டு இல்லம் ஈர்க்கின்றது. அதன் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி, தென் ஆஃப்ரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரை, தாமரை வடிவிலான அக்கோவில் 14 நாடுகளில் விளம்பர தட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கேனடா நாட்டில் பஹாய் கோவில் விளம்பரம்
தாமரை கோவில் விளம்பரம்

இது ‘வியத்தகு இந்தியா’ எனும் விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது இந்திய நாட்டின் கலாச்சார பல்வகைத்தன்மை மற்றும் அதன் தனிச்சிறப்பு வாய்ந்த சாதனைகளை காட்சியகப்படுத்தும் ஒரு திட்டமாகும்.

“இந்திய நாடு மானிடம் முழுமையின் ஆன்மீகத் தன்மையை பிரதிநிதிக்கின்றது,  மற்றும் எந்த சமயம் அல்லது நம்பிக்கையை  சார்ந்தவரானாலும் தியானத்திற்காகவும் பிரார்த்தனைக்காவும் செல்லக்கூடிய ஒரே இடமாக பஹாய்களின் இத்திருக்கோவில் திகழ்கிறது,” என சுற்றுலா அமைச்சரான மதிப்பிற்குறிய சுபோத் காந்த் சஹாய் கூறினார்.

புது டில்லியில் உள்ள இக்கோவில் சுமார் ஆறு ஆண்டுகளான கட்டுமானத்திற்கு பிறகு டிசம்பர் 1986ல் திறப்புவிழா கண்டது. இதன் ஆரம்பத்திலிருந்து சுமார் ஏழு கோடி மக்கள் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது. தினசரி சுமார் 8,000த்திலிருந்து 10,000 பேர்கள் வரை இங்கு வருகை தந்து உலகத்திலேயே அதிமாக வருகை தரப்படும் இடங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.

Lotus Temple advertisements
தாமரை கோவில் விளம்பரங்கள்

மாநில சுற்றுலா அமைச்சரான திரு சுல்தான் அஹ்மெட், “வருகை தரப்படுவதற்கு இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடம். இது அனைத்துலக தரத்திலான கட்டடக்கலையில் அமைந்துள்ளது, மற்றும் தெளிந்தமைதியான சூற்றுச்சூழலையும் ஏற்றம் தரும் சூழ்நிலையையும் கொண்டுள்ளது ” என கூறுகின்றார்.

இக்கோவில் உலகம் முழுவதுமான ஏழு பஹாய் வழிபாட்டு இல்லங்களுள் ஒன்றாகும். இது அமைதியான வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எல்லா மக்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ள ஓரிடமாகும்.

உள்படுத்துவதான இச் செய்தி வியத்தகு இந்தியா விளம்பர நடவடிக்கையின் ஓரம்சமும் கூட என இந்திய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான திருமதி நாஸ்னீன் ரௌஹானி கூறுகின்றார்.

“இவ் விளம்பரத்தை காணும் எவருமே இது ஒரு கோவில் என புரிந்துகொள்வர், ஆனால் அதைவிட முக்கியமாக, அக்கோவில் எதற்காக என்பதையும் அது எதை பிரதிநிதிக்கின்றது என்பதையும் மக்கள் அறிந்துகொள்வார்கள்”. இவ்விளம்பரங்கள் அதை ‘பஹாய் வழிபாட்டு இல்லம் — இந்தியாவின் இனங்களின் இணக்கத்தையும்,’ அல்லது ‘இந்தியாவின் மனிதகுல ஒருமைத்தன்மையின் சின்னம்,’ அல்லது மதங்களின் ஒற்றுமை, குறித்து விளம்பரப்படுத்துகின்றன என்றார் திருமதி ரௌஹானி.

அமைதி குறித்த ஒரு செய்தி

உடனடியாக இந்த வியத்தகு இந்தியா முன்முனைவைத் தொடர்ந்து, புது டில்லியில் மற்றொரு விளம்பர இயக்கத்தின் ஒரு பகுதியாக இப் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் நிழற்படம் தோற்றமளிக்கவிருக்கின்றது. “டில்லி மேரி ஜான்” (என் பிரியமான டில்ல) முன்முனைவு சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

“இக்கோவிலின் 25 வருடகால நிறைவையும் இன்று காணப்படும் நவீன டில்லியின் 100 வருட கால்ததையும் நாங்கள் நினைவுகூறுகின்றோம். இது ஒரு மாபெரும் உடன்நிகழ்வு,” என டில்லி நகரின் முதலமைச்சரான ஷெலியா தீக்ஷித் விளக்கினார்.

“இது ஓர் அழகான கட்டிடம். அது உருச்சின்னமாகியுள்ளது.”

இக்கோவில் “எல்லா மக்களையும் அகப்படுத்துவதே” அதன் ஈர்ப்புசக்தியாகும், என முதல் அமைச்சர் மேலும் கூறினார்.

“பஹாய் சமயம் மனதைக்கவரும் ஒரு சமயமாகும். அது அமைதி, செழுமை மற்றும் மனக்களிப்பு குறித்த… ஒரு செய்தியை மானிடத்திற்கு வழங்குகின்றது,” என அவர் மேலும் கூறினார்.

அடுத்த மாதம் அக்கோவிலில் நடைபெறவிருக்கும் அதன் 25வருட நிறைவுவிழாவிற்கு சுமார் 50 நாடுகளிலிருந்து 4000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இக்கோவில் எல்லாருக்குமே, ஒவ்வொரு சமயம், நம்பிக்கை மற்றும் மக்களுக்கு, சொந்தம் என்பதை இந்த விளம்பர தட்டிகள் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. ஆகவே, அதன் 25 ஆண்டு நிறைவு விழாவும் எல்லாரையும் உட்படுத்துவது இயல்பானதே” என்றார் நாஸ்னீன் ரௌஹானி.

வாழ்வும் மரணமும்


மனிதர்களின் வாழ்வில் பிறப்புக்கு பின் இறப்பு என்பது தவிர்க்கமுடியாததாகும். காலங்காலமாக மனிதர்கள் இறப்பிலிருந்து விடுபட முடியுமாவென வினவிக்கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால், இதுவரை மரணத்திற்கு மாற்றை யாரும் கண்டுபிடித்ததில்லை. மரணம் என்றால் என்ன? பஹாவுல்லா தமது மறைமொழிகள் எனும் நூலில் மரணத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:

அதீதரின் மைந்தனே!
மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளேன். நீ ஏன் வருந்துகிறாய்? ஒளியின் பிரகாசத்தினை உன்மீது விழுமாறு செய்துள்ளேன். அதிலிருந்து நீ ஏன் உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்?

பெரும்பாலான மனிதர்கள் என்றுமே இறப்பை கண்டு பயந்தே வந்துள்ளனர். இது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பாகவே உள்ள ஓர் உணர்வு. அதை ஓர் ஆற்றல் எனவும் கூறலாம். ஆம், பயம் என்பதும் ஒருவித ஆற்றல்தான் அதாவது பயப்படுவதற்கான ஆற்றல். இந்த ஆற்றல் இயல்பானது, உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது குறித்த உணர்வு மிகவும் அவசியமாகின்றது. பயம் இல்லையேல் மனிதர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கமாட்டார்கள். மனிதப் பிறவியின் பாதுகாப்பிற்கு இந்த உணர்வு அவசியமாகின்றது. ஆனால், இந்த உணர்வு மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பிரத்தியேக உணர்வும் அல்ல. அது எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. மனிதர்கள் சில வேளைகளில் இப்பய உணர்வை மீறி தற்கொலை, போர் போன்றவற்றில் மரணத்தை தழுவுகின்றனர். வேறு சிலர் தங்கள் நம்பிக்கைக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். உதாரனமாக பஹாய் சமயத்தின் ஆரம்பகாலத்தில் புதிய சமயமான பஹாய் சமயத்தின் துரிதமான பரவலால் பீதியடைந்த அதிகாரிகள் சுமார் 20,000 விசுவாசிகளை கொன்றனர். இதில் விசேஷம் என்னவெனில் இவர்கள் எல்லோரும் தங்கள் நம்பிக்கையை விடமுடியாது என கூறியதால் கொலை செய்யப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இரான் நாட்டில் சுமார் 300க்கும் அதிகமானோர் இதே ரீதியில் கொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் மரண தண்டனைக்கு உள்ளாகியும் உள்ளனர். ஆகவே மரணம் இயல்பாகவும் நிகழலாம் அல்லது அகாலத்திலும் நிகழலாம்.

மனிதர்களின் படைப்பு குறித்த பஹாய் வாசகங்களைப் படிப்போர் பின்வரும் குறிப்பைக் காணலாம்:

வள்ளன்மையின் மைந்தனே!
வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்;…

எல்லா சமயங்களிலும் உள்ளது போல், மரணத்திற்கு பிறகு வாழ்வு குறித்த பஹாய் கருத்துப்படிவம் ஆன்மாவின் இயல்பு மற்றும் இவ்வுலக வாழ்வின் நோக்கத்தோடு மிகவும் ஆழமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பகுத்தறியும் தனி ஆன்மா உள்ளது என பஹாவுல்லா உறுதிபடுத்தியுள்ளார். இறைவனின் உலகங்களில் இந்த ஆன்மா தோற்றம் காண்கிறது. அந்த உலகம் லௌகீகமானதல்ல. அஃது ஆன்மீக உலகம். கருத்தரிப்பின் போது அனுவளவே ஆன பூதவுடல் ஜடப்பொருள்களால் உருவாகின்றது மற்றும் அத் தருணமே இறைவனின் உலகில் இருக்கும் ஆன்மா இந்த கருவோடு இனைகின்றது, இந்த உலக வாழ்வின் போது அந்த ஆன்மா பௌதீக உடலோடு இணைந்தே உள்ளது மற்றும் அதன் பயனாக மனிதப்பிறவி ஏற்படுகின்றது. ஆன்மா நமது உடலுக்கு உயிரியக்க சக்தியை வழங்குகின்றது மற்றும் அந்த ஆன்மா நாமே அன்றி வேறெதுவுமில்லை.

ஆன்மாவை நாம் பௌதீக கருவிகளைக் கொண்டு கண்டுணர முடியாது ஆனால், ஒவ்வொரு தனிமனிதனோடும் நாம் தொடர்புபடுத்தும் நடத்தைப் பண்புக்கூறுகளால் ஆன்மா தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. அன்பு மற்றும் கருணை, நம்பிக்கை மற்றும் மனவுறுதி, மற்றும் மனிதனை ஒரு மிருகம் அல்லது ஒரு பல்கூறான ஜீவனுடைய யந்திரம் என மட்டும் விளக்கமுடியாத இது போன்ற பிற “மானிட” பண்புக்கூறுகளுக்கும் ஆன்மா ஒரு குவிமையமாகும்.

ஆன்மா மரிப்பதில்லை; அது என்றும் நிலைத்திருக்க வல்லது. மனித உடல் மரணமெய்தும்போது, ஆன்மா பூதவுடலுடனான தனது தொடர்பிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பொருளுலகிலிருந்தும் விடுபட்டு ஆன்மீக உலகங்களினூடே அதன் வளர்ச்சியை ஆரம்பிக்கின்றது. ஆன்மீக உலகென்பது நேரம், இடம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட, நமது பிரபஞ்சத்தின் ஒரு தொடர்ச்சியே என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும் – அதற்கு மாறாக அது எங்கோ உள்ள அல்லது நமக்கு அப்பாற்பட்ட ஓர் இடமல்ல.

ஒன்பது மாத காலம் மனிதன் தாயின் கர்ப்பத்தில் வளர்ச்சி பெறுகின்றான். ஆனால், இந்த கர்ப்ப உலகம் அவனுக்கு நிலையானதல்ல. பிறகு தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகில் பிறக்கின்றான். இவ்வுலகில் சுமார் என்பது தொன்னூறு வருடங்கள் வாழ்ந்து அவன் மடிந்துவிடுகின்றான். இவ்வுலக வாழ்வும் அவனுக்கு நிறந்தரமல்ல. தாயின் கர்ப்பத்திலிருந்து அவன் ஒன்பது மாதமானவுடன் வெளிவந்துவிடுகின்றான். அதை பிறப்பு என்கிறோம். பிறகு அவன் காலம் கனிந்தவுடன் மரணம் எய்துகிறான், அதை இறப்பு என்கிறோம். ஆனால், பஹாய் திருவாக்குகள் மரணத்தை, அதாவது இறப்பை மனிதனின் மறுபிறப்பு என கூறுகின்றன. அதாவது கர்ப்பத்திலிருந்து இந்த உலகிலும், அதன் பிறகு இந்த உலகிலிருந்து வேறோர் உலகில், ஓர் ஆன்மீக உலகிலும் மனிதன் பிறக்கின்றான். ஆனால், கர்ப்பத்தில் உள்ள ஓர் சிசு எவ்வாறு இவ்வுலகை உணர முடியாதோ அதே போண்று நாம் இந்த உலகிலிருந்துகொண்டு மறு உலகை உணரமுடியாது. இந்த உலகிற்கு புலன்களும் அவயங்களும் அவசியமாகின்றன. அவ்வுலகிற்கு வேறு விதமான ஆற்றல்கள் அவசியமாகின்றன. கர்ப்பத்தில் நாம் இவ்வுலகிற்கு தேவையான புலன்களையும், அவயங்களையும் அடைந்தது போல், அவ்வுலகிற்கான ஆற்றல்களை நாம் இவ்வுலகிலேயே அடைய வேண்டும். மறுமை உலகிற்கான நமது பிரவேசம் நமக்கு பெரும் களிப்பை அளிக்கும் இயல்திறம் கொண்டது. பஹாவுல்லா மரணத்தை பிறப்பு குறித்த ஒரு படிசெயற்பாட்டோடு ஒப்பிடுகின்றார். அவர் பின்வருமாறு விளக்குகின்றார்: “தனது தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையின் உலகு இவ்வுலகினின்று எவ்வாறு வேறுபட்டுள்ளதோ அதுபோன்றே அவ்வுலகு இவ்வுலகினின்று வேறுபட்டுள்ளது.”

உலகவாழ்வு குறித்த பஹாய் கண்ணோட்டத்தை கர்ப்பம் குறித்த ஒப்புமை பல வகைகளிலும் தொகுத்துரைக்கின்றது. ஒரு மனிதனின் ஆரம்ப உருவாக்கத்திற்கு கருப்பை எவ்வாறு ஒரு முக்கிய இடமாக திகழ்கின்றதோ, அது போன்றே பொருளுலகு தனி ஆன்மாவின் மேம்பாட்டிற்கான ஒரு முதிர்விடமாக திகழ்கின்றது. அதன்படி, இவ்வுலகவாழ்வை அடுத்த உலகிற்கு தேவைப்படும் பண்புக்கூறுகளை மேம்படுத்திடும் ஒரு பயிலரங்கமென பஹாய்கள் கருதுகின்றனர்.

பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

“ஒரு மனிதனின் ஆன்மா இறைவன் வழியில் நடந்திருக்குமாயின், அது நிச்சயமாகத் திரும்பிச் சென்று, நேசரின் பேரொளியினில் ஒன்று திரட்டப்படும் என்பதை, நீங்கள், மெய்யாகவே அறிவீராக. இறைவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த ஓர் எழுதுகோலும் விவரிக்க இயலாத, எந்த ஒரு நாவும் வருணிக்க இயலாத ஸ்தானத்தை எய்திடும்.”

ஆனாலும், நாம் நமது வாழ்க்கையை பின்வரும் எச்சரிக்கை்கு இணங்க வாழ்ந்தால் மட்டுமே தேவையான அந்த ஆன்மீக ஆற்றல்களை நாம் அடைய முடியும்.

தூய்மையான நற்செயல்களின் மூலமும், மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்

என்பது மற்றொரு போதனை. இங்கு உலக சீர்திருத்தம் என்பது தனிமனிதனின் சீர்திருத்தத்தை உள்ளடக்கியுள்ளது. தனிமனிதனின் சீர்திருத்தம் அவனுடயை தூய்மையான நற்செயல்கள் மற்றும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தை சார்ந்திருக்கின்றது. அடுத்த உலகிற்கான நமது ஆன்மீக ஆற்றல்கள் இந்த தூய்மையான நற்செயற்களையும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தையும் சார்ந்துள்ளன. நல்ல உணவு உடலுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிப்பது போல நல்ல செயல்களும் நல்லொழுக்கமும் நமது ஆன்மாவுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிக்கின்றன, நாம் ஆன்மீக ஆற்றல்களை அதன் மூலம் பெற்றிட வாய்ப்பும் ஏற்படுகின்றது.

உயிருருவின் புத்திரனே!
மொத்தக் கணக்குப் பார்க்க அழைக்கப்படுவதற்கு முன், நீ, உனது ஒவ்வொரு நாளையச் செயலையும் கணக்கிட்டுக் கொள்வாயாக; ஏனெனில், மரணம், முன்னறிவிப்பு எதுவுமின்றி உன்னைத் தாக்கும், அப்பொழுது, நீ, உன் செயல்களுக்குக் காரணம் கூற அழைக்கப்படுவாய்.

சமயங்கள் அனைத்தும் மனிதர்களின் உலகவாழ்விற்கு வழிகாட்டிகளாக நம்மிடையே தோன்றுகின்றன. பஹாய் சமயமும் இதற்காகவே தோன்றியுள்ளது. அதன் போதனைகள் நாம் அடுத்த உலகிற்கு செல்வதற்கான வழிகாட்டிகளாக இருக்கின்றன. அவற்றில் நாம் கவனமாக இல்லையெனில் அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும். மேற்கண்ட வாசக குறிப்பு இதைத்தான் நமக்கு கூறுகிறது.

இறுதியில், சுவர்க்கம் என்பது ஆண்டவனின் அருகாமை குறித்த ஒரு நிலையே என ஒரு வகையில் நாம் கருதக்கூடும்; நரகம் என்பது கடவுளிடமிருந்து தூர விலகியிருக்கும் ஒரு நிலையே ஆகும். ஆன்மீக மேம்பாட்டுக்கான தனிமனித முயல்வுகளின் இயல்விளைவாக, அல்லது அவ்வாறு முயலாமல் இருந்ததின் விளைவாக ஏற்படுவதே சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் நிலைகளாகும். கடவுளின் அவதாரங்கள் வரையறுத்துள்ள வழியை பின்பற்றுவதே ஆன்மீக மேம்பாட்டிற்கான திறவுகோல் ஆகும்.

மறுமை, விண்ணுலகம், அடுத்த உலகம், சுவர்க்கம், பரமண்டலம் என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தை கொண்டவையாகும். மற்றபடி மனிதன் தோற்றம் காணும் கர்ப்ப உலகம், பிறகு இவ்வுலகம், அதன் பிறகு விண்ணுலகம் என மனிதன் ஒவ்வோர் உலகமாக படிப்படியாக வெவ்வேறு உலகங்களில் வளர்ந்துகொண்டே செல்வான் மற்றும் செல்கிறான். விண்ணுலகமும் ஒரே உலகம் அல்ல. அதிலும் கணக்கிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அவை குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

ஆண்டவனின் உலகங்களைக் குறித்து உங்கள் கேள்வி சம்பந்தமாக. இறைவனின் உலகங்கள், எண்ணிக்கையில் கணக்கற்றவை என்பதையும், அளவில் எல்லையற்றவை என்பதையும் நீங்கள், உண்மையாகவே அறிந்திடுவீராக. சர்வஞானியும் சர்வ விவேகியுமான இறைவனைத் தவிர வேறு எவருமே அவற்றைக் கணக்கிடவோ புரிந்து கொள்ளவோ இயலாது…

ஆகவே, நாம் ஒவ்வோர் உலகமாக வளர்ந்துகொண்டே செல்வோம். ஓர் உலகைத் தாண்டி அடுத்த உலகிற்குள் அடியெடுத்து வைப்பதே மறுபிறப்பென்பதாகும். அது மனிதனுக்கு தொடர்ச்சியான ஒரு முன்னேற்றமும் ஆகும்.

மறுமை உலகம் குறித்து பஹாய் திருவாக்குகள் பல குறிப்புகளை வழங்குகின்றன. அவற்றை கீழே காணலாம்:

மறுமை உலகென்பது லௌகீக உலகல்ல. அது ஆன்மீக ரீதியானது. ஆகவே அங்கு பரிமாணங்கள் (dimensions) கிடையாது. அதாவது, பொருள் சார்ந்த, நீளம், கொள்ளளவு, வெப்பம், நேரம் என்பன போன்ற அளவைகள் அங்கு கிடையாது. உதாரணமாக, நீர் உறைந்தால் கட்டியாகும், கட்டி கரைந்தால் அது திரவமாகும், வெப்பம் அதிகரித்தால் திரவம் ஆவியாகிவிடும். இந்த ஒவ்வோர் நிலையிலும் நீரின் (H2O) பண்புக்கூறுகளும் அதன் இயங்குமுறைகளும் வெவ்வேறாகவே இருக்கும். நீர் நீர்தான் ஆனால் கட்டி, திரவம், ஆவி ஆகிய நிலைகளில் அதன் செயல்பாடு முற்றிலும் வேறுபட்டிருக்கும். அது போன்றுதான் லௌகீக உலகு மற்றும் ஆன்மீக உலகின் இயல்பு. மனிதர்கள் இரண்டிலும் வாழ்கிறார்கள் அனால் அவற்றின் பண்புக்கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை.

மறுமை வாழ்வு பற்றி பஹாய் திருவாசகங்களில் கணக்கிலடங்கா குறிப்புகளை காணலாம். அவற்றுள் சில கீழே வழங்கப்பட்டுள்ளன:

“ஓர் ஆத்மா உடலை விட்டுப் பிரியும் வேளையில் உலக மனிதர்களின் வீண்கற்பனைகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும். அப்படிப்பட்ட ஆத்மா அதன் படைப்போனின் விருப்பத்திற்கிணங்கவே வாழ்ந்து, இயங்கி மிக உயரிய சொர்க்கத்தினுள் பிரவேசிக்கும். விண்ணுலகக் கன்னிகளும் மிக உயர்வான மாளிகைகளின் வாசிகளும் அதனைச் சுற்றி வலம் வருவர். இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதன் உறவை நாடுவர். அவர்களுடன் அவ்வாத்மா தங்குதடையின்றிச் சம்பாஷித்து அது எல்லா உலகங்களிலும் தேவராகிய ஆண்டவனின் பாதையில் சகித்துக் கொண்டவைகளை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.”

“இருப்பினும் நாத்திகர்களின் ஆன்மாக்கள், கடைசி மூச்சு விடும் வேளையில் அவர்களது கவனத்தை ஈர்க்காதிருந்த நற் செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். தங்களது நிலையினை எண்ணி வருந்துவர். இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர். இதற்கு யாமே சாட்சியம் கூறுகிறோம். உடலை விட்டுத் தங்களது ஆத்மாக்கள் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.”

“அவன் பாவிகளை மன்னித்து அவர்களது தாழ்வான நிலையினை நிந்திக்கச் செய்யலாகாது; ஏனெனில் இறுதியில் தன் நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. எத்தனை முறை ஒரு பாவி மரணத்தறுவாயில் இருக்கும்போது, நம்பிக்கையின் சாராம்சத்தினைப் பெற்று நிலையான நீரினைப் பருகி விண்படையினரின் முன்னிலைக்கு உயர்ந்திருக்கின்றான்! மற்றும் எத்தனை முறை பக்தியுடைய ஒரு நம்பிக்கையாளன் தனது ஆத்மாவின் பிரிவு நேரத்தில் நரகத்தீயில் விழுமளவு மாற்றம் அடைந்திருக்கின்றான்!”

“இந்த லெளகீக உலகில், எந்தப் புதிர்களைப் பற்றி மனிதன் கவனமில்லாமல் இருக்கின்றானோ, அவற்றை அவன் விண்ணுலகில் கண்டுபிடிப்பான், மெய்ம்மையின் இரகசியத்தை பற்றி அவன் அங்கு அறிவிக்கப்படுவான்: அப்படியென்றால் தான் நெருங்கி பழகியவர்களை அவன் இன்னும் எவ்வளவு அதிகமாக அடையாளங்காணவோ, கண்டுபிடிக்கவோ முடியும். சந்தேகமின்றி தூய்மையான கண்ணைக்கொண்டு, உட்பார்வைகளைக் கொண்டிருக்கும் சலுகையைப் பெற்ற புனித ஆன்மாக்கள் ஒளிகளின் இராஜ்ஜியத்தில் எல்லா புதிர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் உயர்வுமிக்க ஆன்மாவுடைய மெய்ம்மையினைப் பார்க்கும் வெகுமதியை நாடுவார்கள். மேலும் அவர்கள் அவ்வுலகில் இறைவனுடைய பேரழகினை வெளிப்படையாகக் கண்ணுறுவார்கள். அவ்வாறே, கடந்த மற்றும் சமீபத்திய காலங்கள் ஆகிய இரண்டினையும் சார்ந்த இறையன்பர்கள் அனைவரும் விண்ணுலகக் கூட்டத்தினரின் சந்நிதானத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். 15

“எல்லா மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடும், தனிச்சிறப்பும் இயற்கையாகவே, அவர்கள் இந்த லெளகீக உலகிலிருந்து பிரிந்து சென்றபிறகு, உணரப்படும். ஆனால் இது (தனிசிறப்பு) இடம் சம்பந்தமானதல்ல; ஆன்மா மற்றும் மனசாட்சி சம்பந்தமானதாகும். ஏனெனில் இறைவனுடைய இராஜ்ஜியமானது நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அது வேறோர் உலகம் வேறொரு பிரபஞ்சம். ஆனால் புனித ஆன்மாக்களுக்காகப் பரிந்துரைப்பு எனும் பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் தெய்வீக உலகங்களில் ஆன்மீக அன்பிற்குரியவர்கள் (நம்பிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் அடையாளங்கண்டு (ஒருவரோடு ஒருவருக்கான) இணக்கத்தை – ஆன்மீக இணக்கத்தை நாடுவார்கள் என்பதனை நீங்கள் நிச்சயமாகவே அறிவீர்களாக. அதுபோலவே ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தப்படும் அன்பானது இராஜ்ஜியத்தின் உலகத்தில் மறக்கப்படாது. அவ்வாறே, நீங்கள் லெளகீக உலகில் வாழ்ந்த வாழ்க்கையை (அங்கே) மறக்க மாட்டீர்கள்.”

“உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆத்மாவின் நிலை சம்பந்தமாக மேலும் தாங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள். ஒரு மனிதனின் ஆத்மா ஆண்டவனின் வழியில் சென்றிருக்குமாயின், அது நிச்சயமாக அன்பரின் ஒளியின்பால் திரும்பி அவரால் ஒன்று சேர்த்துக் கொள்ளப்படும் என்பதனை மெய்யாக நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. ஆண்டவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த எழுதுகோலும் விளக்கவோ எந்த நாவும் வர்ணிக்கவோ இயலாத நிலையினைச் சென்றடையும். ஆண்டவனின் சமயத்தின்பால் விசுவாசத்தோடு இருந்து அவரது வழியில் அசையாத வலுவுடன் நிற்கும் ஓர் ஆத்மா மேலுலகை எய்தியதும், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் அவர் மூலம் பயன் பெறும் அளவு அத்துணைச் சக்தியினைப் பெறும்.”

“எனது ஊழியர்களே! இந்நாட்களில் இவ்வுலக மட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு மாறானவைகள் இறைவனால் நியமிக்கப்பட்டு வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வருந்தாதீர்கள். ஏனெனில் பேரானந்தம், தெய்வீக மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் நிச்சயமாக உங்களுக்கென காத்துக் கொண்டிருக்கின்றன. புனிதமான, ஆன்மீக ஒளிமிக்க உலகங்கள் உங்கள் கண்களுக்கு வெளிப்படுத்தப்படும். நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் அவைகளின் நன்மைகளை அனுபவிக்கவும், அவைகளின் இன்பத்தில் பங்குப் பெறவும், அவைகளின் பேணும் அருளின் ஒரு பகுதியினைப் பெறவும், விதிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அவை ஒவ்வொன்றையும், அடைவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.”

இதற்கும் மேற்பட்டு மறுமை வாழ்வு குறித்து உண்மை நிலவரம் ஒரு பெரும் மர்மமாகும். இறப்பிற்கு பின் ஆன்மாவின் இயல்பு எவ்வகையிலும் வருணிக்கப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்.