கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும்
மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளமும் நிரூபனமுமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார்.
மனிதனின் சிருஷ்டிகர்த்தா மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி. அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும், எனெனில் சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும்.
சிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா? ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா? (ஓவியம்) அவனுடைய கலை மற்றும் சிருஷ்டியாகும். மேலும், ஓவியம் ஓவியனைப்போலவே இருக்கவும் முடியாது; இல்லையென்றால் அந்த ஓவியம் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிக்கும். சித்திரம் எவ்வளவுதான் முழுநிறைவானதாக இருந்தபோதும், ஓவியனோடு ஒப்பிடுகையில்அச்சித்திரம் முற்றிலும் பூரணத்துவமற்றதே ஆகும்.
நிலையற்ற இப்பூவுலகம் பெரும் குறைபாடுகள் மிக்கதாகும்: குறைகள் அற்றவராக கடவுள் இருக்கின்றார். இந்த நிலையற்ற உலகின் குறைபாடுகள் கடவுள் பூரணமானவர் என்பதற்கான அடையாளமாகும்.
உதாரனமாக, மனிதனை பாக்கும்போது அவன் வலிமையற்றவனாக இருக்கின்றான். மனிதனின் இந்த வலிமையில்லாமையே என்றும் நிலையான கடவுளின் வலிமைக்கு ஆதாரமாகும், ஏனெனில் வலிமை என ஒன்று இல்லையெனில் வலிமையின்மை என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியாது. அதனால், சிருஷ்டியின் வலிமையின்மையே கடவுளின் வலிமைக்கான ஆதாரமாகும்; சக்தி என்பது இல்லையெனில், சக்தியின்மை என்பது இருக்கமுடியாது; ஆகவே இந்த சக்தியின்மை என்பது சக்தி எனும் ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கின்றது. மேலும், நிலையற்ற இவ்வுலகில் வறுமை நிலவுகிறது; ஆகவே வறுமை என ஒன்று வெளிப்படையாக இருப்பதால் செல்வம் என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது. இப்பூவுலகில் அறியாமை நிலவுகிறது; ஆகவே, அறியாமை என ஒன்று இருப்பதால் அறிவு என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது; ஏனென்றால், அறிவு என ஒன்று இல்லையெனில் அறிவில்லாமை என ஒன்றும் இருக்க வழியில்லை; அறியாமை என்பது அறிவாற்றல் இல்லாமையை குறிக்கின்றது, மற்றும் இருத்தல்நிலை இல்லையெனில் இருத்தலின்மையை நாம் உணரமுடியாது.
ஆகவே, இப்படைப்புலகு கீழ்ப்படியாமல் இருக்கமுடியாத ஒரு விதிக்கு தான் உட்பட்டதாக இருக்கின்றது என்பது உறுதி; மனிதன் கூட இறப்பு, தூக்கம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டவனாவான் – அதாவது, மனிதன் சில விஷயங்களில் ஆளுமைக்கு உட்பட்டவன், ஆகவே ஆளுமை என ஒன்று இருக்கும்போது ஆளுனர் என ஒருவர் இருப்பது உறுதி. ஏனெனில், நிலையற்ற சிருஷ்டிகளின் ஓர் அடையாளம் எதையாவது சார்ந்திருப்பதாகும், மற்றும் இந்த சார்தல்நிலை ஓர் இன்றியமையா தேவையும் ஆகும், ஆகவே, எதையும் சாராத சுயேச்சையான ஒரு திருப்பொருள் கண்டிப்பாக இருக்கவேண்டும் மற்றும் அதன் தன்னிச்சை அதற்கு இன்றியமையாத ஒன்றும் ஆகும்.
இதே முறையில், ஒருவன் நோய்வாயப்பட்டுள்ளான் எனும்போது உடல்நலத்தோடு ஒருவன் உள்ளான் என்பது அறிவு; ஏனெனில் சுகம் இல்லையெனில், அம்மனிதனின் சுகமின்மை நிரூபிக்கப்படமுடியாது.
ஆகவே, சகல பூரணத்துவங்களையும் உடைய என்றும் நிலையான சர்வவல்லமை மிக்க ஒருவர் இருக்கின்றார் என்பது வெளிப்படையாகின்றது. எனெனில், அவர் அவ்விதம் சகல பூரணத்துவங்களையும் பெறவில்லையெனில் அவர் தமது படைப்புகளைப்போலவே தாமும் இருப்பார்.
படைப்புலகு முற்றும் இவ்வாராகவே இருக்கின்றது; ஆகச் சிறிய சிருஷ்டியும் தன்னைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக, இந்த ரொட்டி அதனை செய்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாகும்.
கடவுள் வாழ்த்தப்படுவதாக! ஆகச் சிறிய தனிமம் ஒன்றில் நிகழ்த்தப்படும் குறைந்த அளவான மாற்றம் கூட சிருஷ்டிகர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது: ஆகையால், முடிவில்லாத, இம்மகத்தான பிரபஞ்சம், வஸ்துவும் தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்ட பரிசெயல்பாட்டினால் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியுமா? இத்தகைய ஒரு கருத்து வெளிப்படையாகவே எவ்வளவு தவறானதாக இருக்கின்றது!
இந்த வெளிப்படையான விவாதங்கள் வலிமையற்ற ஆன்மாக்களுக்காக குறிப்பிடப்படுகின்றன; ஆனால், ஆன்மீகப்பார்வை திறக்கப்படுமாயின், ஆயிரமாயிரம் தெளிவான ஆதாரங்கள் பார்வைக்கு வெளிப்படும். அதுபோல், தன்னுள் வதியும் ஆன்மாவை மனிதன் உணர்வானாயின், அதன் இருப்பு குறித்து அவனுக்கு ஆதாரங்கள் தேவையில்லை; ஆனால், அதியாத்மீகத்தின் அருள் இல்லாதாருக்கு வெளிப்படையான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.
(அப்துல் பஹா, சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள், ப. 5)