மறுபிறவி நம்பிக்கைக் குறித்துப் வழங்கப்படும் பின்வரும் கருத்துக்கள் சிந்தனையை தூண்டும் நோக்கங் கொண்ட மேலோட்டமான சில எண்ணங்களே. மிகவும் ஆழமான மற்றும் விசாலமான இ்வ்விஷயத்தை பின்வரும் சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே விளக்கிட முடியாது. ஒருமுறை பஹாவுல்லாவின் திருமகனாராகிய அப்துல் பஹாவிடம் மறுபிறவி பற்றி வினவப்பட்டது. அதற்கான அவருடைய பதிலின் சில பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு:
வழங்கப்படும் விளக்கம் மெய்ம்மையை விளக்கிடவன்றி மற்றவர்களின் நம்பிக்கைகளைக் குறைகூறவே ஏளனம் செய்திடவோ அல்ல; உண்மையை விளக்கவுரை செய்திடுவதே நோக்கம். மற்றவர்களின் நம்பிக்கைகளை நாம் எதிர்க்கவில்லை மற்றும் குறைகூறலை நாம் அங்கீகரிக்கவும் இல்லை.
மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டோர் இருவிதமாக இருக்கின்றனர்: ஒரு விதத்தினர் விண்ணுலகின் ஆன்மீகத் தண்டனை மற்றும் வெகுமதிகளில் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் மனிதன் மீண்டும் மீண்டும் இவ்வுலகிலேயே பிறந்து தன் வெகுமதிகளையும் தண்டனைகளையும் பெற்றுக்கொள்கின்றான் எனவும் சுவர்க்கமும் நரகமும் இவ்வுலகிலேயே உள்ளன எனவும் கூறுகின்றனர். விண்ணுலகத்தைப் பற்றி இவர்கள் எதுவும் கூறவில்லை. இவர்களுக்குள் இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒரு பிரிவினர் சில வேளைகளில் மனிதன் இவ்வுலகில் ஒரு மிருகமாகப் பிறந்து பல துன்பங்களை அனுபவித்து மிருக உலகிலிருந்து விடுபட்டு மனித உலகில் மீண்டும் பிறக்கின்றான் எனக் கூறுகின்றனர். இது கூடுவிட்டுக் கூடு பாய்தல் எனக் கூறப்படுகிறது. மற்ற பிரிவினர் மனிதன் இவ்வுலகிலேயே மீண்டும் மீண்டும் பிறந்தும் அதன் வாயிலாக முற்பிறவியில் செய்தவற்றிற்கான தண்டனை மற்றும் வெகுமதியைப் பெறுகின்றான். இது மறுபிறவி அல்லது புனர்ஜென்மம் எனக் கூறப்படுகிறது. இவ்விரு குழுக்களுமே இவ்வுலகம் தவிர வேறு உலகங்கள் பற்றி எதுவுமே கூறவில்லை.
இரண்டாது பிரிவினர் பரலோகம் என ஒன்று உள்ளதென வலியுறுத்துகின்றனர் மற்றும் மறுபிறப்பின் வாயிலாக மனிதன் முழுநிறைவை நோக்கி முன்னேறுகிறான் எனவும் கூறுகின்றனர். மனிதன் லௌகீகம் மற்றும் சக்தியுடையவன் என இவர்கள் நம்புகின்றனர். அதாவது மனிதன் முதல் வட்டத்தில் லௌகீகமானவனாக இருந்து பிறகு மீண்டும் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்பி ஒரு தூய்மையான கண்ணாடியைப் போன்று ஆகிடும் வரை மேம்பாடும் மெருகும் அடைகின்றான்; மற்றும் சக்தி என்பது அதாவது ஆன்மா என்பது, இதனூடே அனைத்து முழுநிறைவுகளுடனும் வெளிப்படுகிறது என இவர்கள் கூறுகின்றனர்.
இப்போது மறுபிறவியென்பது ஏன் சாத்தியப்படாது என்பதைப் பார்ப்போம். வெளித்தோற்றம் என்பது உள்மெய்ம்மையின் வெளிப்படுத்தலே ஆகும். இவ்வுலகம் ஆன்மீக உலகின் வெளிப்படுத்தலாகும். லௌகீக உலகம் ஆன்மீக உலகோடு ஒத்திசைவானது. மேலும் உலகில் ஒரே உருவம் கொண்ட இரு பொருள்கள் எங்குமே கிடையாது. (உதாரணமாக, ஒரே மாதிரியான கட்டைவிரல் கைரேகைக் கொண்ட இருவர் உலகில் எங்குமே கிடையாது). தனித்துவம் எனும் தன்மை உலகம் முழுவதுமே வியாபித்துள்ளது. ஆகவே, உலகில் ஒத்த உருவம் கொண்ட இருவரை காண்பது இயலாததாகும். எல்லா பொருள்களிலும் தனித்துவத்தை நம்மால் காண முடிகிறது. தனிச்சிறப்பும் கடவுளின் ஒருமைத்தன்மையும் எல்லா பொருள்களிலும் உள்ளடங்கியுள்ளது ஆகவே, ஒரே உருவின் மீள்தோற்றம் என்பது முற்றிலும் இயலாததாகும்.
அதாவது, ஒரே மனிதன் இறந்தபின் மீண்டும் முற்பிறவியின் அதே மெய்ம்மையோடு மறுபடியும் பிறப்பது இயலாதது என அப்துல் பஹா இங்கு எடுத்துக்கூறுகிறார். ஒரு முறை மனிதன் இறந்துவிட்டால் அவன் உடல் மண்ணுக்குள் சென்று உரமாகி மற்ற உயிரனங்களுக்கு உணவாகிவிடுகின்றது. பிறகு மறுபடியும் இதே மனிதன் பிறப்பது எவ்வாறு? அல்லது அதே மனிதன் மிருகமாகப் பிறக்கின்றான் என வைத்துக்கொண்டாலும் மிருகம் மிருகந்தான் அது மனிதனாக முடியாது. இருள் என்பது என்னதான் முயன்றாலும் ஒளியாகவே முடியாது. பாறை என்னதான் முயன்றாலும் அது மென்மைபெற முடியாது. ஆகவே மனிதன் மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குச் செல்லும்போது அவன் மனித நிலையில் பெற்றிருந்த அனைத்துப் பண்புகளையும் இழந்துவிடுகின்றான். அதன் பின் அவன் மனிதனாக மறுபடியும் பிறக்கும் போது அவன் குழந்தை நிலையிலிருந்து எல்லா மனிதப் பண்புகளையும் மீண்டும் பெறவேண்டும்.
மறுபிறவி குறித்த கருத்து அது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு மாறாக மேலும் பல கேள்விகளுக்கே இடமளிப்பதாக உள்ளது. உதாரனமாக, ஒரு பிறவியில் அடைந்த அனுபவங்கள் குறித்த ஞாபகம் எதுவுமே இல்லாமல் அதற்கடுத்த பிறவியில் ஒரு மனிதன் முற்பிறவியின் அனுபவங்களை அடித்தலமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் எவ்வாறு மேம்பாடு அடைவது? அதே போன்று, ஒரு பிறவியில் நல்ல மேம்பாடு கண்ட ஒரு மனிதன் தன் அடுத்த பிறவியில் அந்த நிலையிலிருந்து வழுக்கி விழ மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இப்படி மாறி மாறி ஒவ்வொரு ஜென்மமாக எடுத்தும் அவன் முன்னேறவே இல்லையெனில் என்னவாவது?
“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது,” என்பது அவ்வையாரின் கூற்றாகும். பிறவிகளிலேயே மானிடப் பிறவி அதி உயர்ந்த பிறவியாகும். படைப்புப் பொருள்கள் அனைத்தையும் அதனதன் சாயலில் படைத்த கடவுள் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் என்பது பெரும்பாலான சமயங்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாகவே மானிடப் பிறவி மிக அரிதான பிறவியாகின்றது மற்றும் மனிதனென்பவன் தெய்வமாகலாம் எனவும் கூறப்படுகிறது. ஒரு மனிதன் வாழ்க்கையை ஒழுங்காக வாழாமல் இருந்தாலும், அவன் எடுத்திருக்கும் பிறவி அரிதான பிறவியாகும். அவன் மனிதப்பிறவிக்கான ஆற்றல்களையும் பண்புகளையும் பிறக்கும் போதே பெற்றுள்ளான். அப்படி அவன் பாவங்கள் புரிந்தும் அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் மிருகமாக பிறக்கின்றான் என வைத்துக்கொள்வோம். ஓர் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலன்றி ஒரு மனிதன் மோட்சத்தை அடையமுடியாது. ஆனால், மிருகங்களுக்கு பகுத்தறிவும் கிடையாது தேர்வு செய்யும் ஆற்றலும் கிடையாது. அவற்றுக்கு நல்லது கெட்டதும் தெரியாது, துன்பம் மற்றும் இன்பத்தின் கருத்தாக்கங்களை அதனால் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மீக ரீதியில் அவற்றுக்கு முன்னேற்றமோ பின்னேற்றமோ கிடையாது. மனித ஜென்மத்தின் மூலமாகவே அவன் நற்செயல்கள் புரிய முடியும் ஆன்மீக ரீதியில் முன்னேர முடியும். ஆகவே மனித ஜென்மம் மூலமின்றி மனிதன் ஆன்மீக ரீதியில் முன்னேற முடியாது. அதுவும் இந்த வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது.
அல்லது ஒரு மனிதன் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தன் பாவங்களிலிருந்து மோட்சம் பெற்று சுவர்க்கம் செல்வான் என்பது தர்க்க ரீதியில் எவ்விதத்தில்தான் சாத்தியப்படக்கூடும்? பூரணத்துவம் அல்லது முழுநிறைவு என்பது கடவுளுக்கே உரியது, மனிதனுக்கு அது கிடையாது. மனிதன் முடிவே இல்லாத முடிவு வரை முன்னேறிக்கொண்டே இருப்பான் ஆனால், முழு பூரணத்துவத்தை அவன் எட்டுவது சாத்தியப்படாது.
மறுபிறவி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வருடா வருடம் இறந்தோருக்காக பூஜைகள் செய்வது எதற்காக? அவர்களில் யார் மோட்சம் அடைந்துவிட்டனர் அல்லது யார் மறுபிறவி எய்தியுள்ளனர் என்பதை இத்தகைய பூஜைகள் செய்வோர் அறிவார்களா? இறந்தோருக்கான பூஜைக்கும் மறுபிறவி நம்பிக்கைக்கும் சம்பந்தம்தான் என்ன?
மறுபிறவி என்பது சிருஷ்டியின் ஓர் அம்சம் என்பதற்கு மாறாக அது விளங்கிக்கொள்ள முடியாத ஒரு விஷயத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு விளக்கம் என்பதே பொருத்தமாகும். வேதங்களிலிருந்து விளைந்தவை உபநிஷதங்களாகும். இந்த உபநிஷத உரைக்காரர்களிடமிருந்தே முதன் முதலில் மறுபிறவி குறித்த கருத்து தோன்றியதாக கருதப்படுகிறது. அதாவது இவ்வுலகில் நமது கர்மங்களின் அடிப்படையில்தான் நாம் இறந்தவுடன் நமது ஆன்மா மோட்சகதி அடைகிறது அல்லது மீண்டும் மனிதப் பிறவி எடுக்கின்றது.
கீதோபதேசமான பகவத் கீதையில் மறுபிறவி குறித்த கூற்றுகள் பலவுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
ஸ்ரீ கிருஷ்னர் மனிதனின் இறப்புக்குப் பின் அவனுடைய ஆன்மா புது உடல் பெறுகிறது எனப் பின்வரும் செய்யுளில் கூறுகிறார்.
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥
நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
எவ்வாறு ஒரு மனிதன் தன் உடைகள் நைந்துவிட்டால் அவற்றைக் கழற்றி எறிந்துவிட்டு புதிய உடைகள் பெறுகின்றானோ அதே போன்று உடல் நைந்துவிட்டால் புதிய வேறொன்றை மனிதன் பெறுகிறான் என்பது இதன் பொருளாகும்.
இங்கு புதியது என்பது பௌதீகமான ஒரு புதிய உடல் என குறிப்பிடப்படவில்லை. இவ்வுலக வாழ்விற்கு மனிதனுக்குப் பௌதீகமான ஓர் உடல் தேவைப்படுகிறது. அதாவது இங்கு மனிதன் மற்றும் உடல் என இரு விஷயங்கள் உள்ளன. மனிதன் நிரந்தரமானவன் ஆனால் அவன் உடல் நிரந்தரமற்றது அதற்கென ஒரு மெய்ம்மை கிடையாது. ஒரு மனிதனின் தனித்துவம் அழிவதில்லை. அவன் உடலே அழிகின்றது.
नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥
இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
அதாவது இல்லாத ஒன்றுக்கு உருவம் கிடையாது; அதே போன்று மெய்ம்மை உடையது என்றுமே இல்லாமல் போகாது. ஆகவே ஒரு தனித்தன்மை அல்லது மெய்ம்மையோடு பிறக்கும் ஒரு மனிதன் இறந்தபின் மீண்டும் அதே மெய்ம்மையோடு பிறப்பது முற்றிலும் இயலாததாகும். இறந்த பின்னும் அவனுடைய மெய்ம்மை வெவ்வேறு நிலைகளில் தொடந்து மேம்பாடு அடையுமே ஒழிய அதன் மெய்ம்மை மாறி வேறு ஒரு மெய்ம்மையில் அது மறுபடியும் பூமியில் பிறக்காது செயல்படவும் செய்யாது.
देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥
ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.
இங்கு ஸ்ரீ கிருஷ்னர் உடல் சார்ந்த ஒரு தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதாவது குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் முதுமைப் பருவம் வாய்ப்பது போல் முதுமையைத் தொடர்ந்து மனிதனுக்கு வேறோர் உடல் வாய்க்கின்றது. ஆனால், இங்கும் மனிதன் மீண்டும் அதே மனிதப்பறவி பெறுவான் என கூறப்படவில்லை.
இதே தொனியிலான பல கூற்றுகளை நாம் ஆங்காங்கே கீதோபதேசத்தில் காணலாம். ஆனால், புது உடல் கிடைக்கும் எனக் கூறும் அதே நேரத்தில் இறப்பிற்கு பின் ஆன்மாவுக்கு மீண்டும் உலக வாழ்க்கை அமையும் என அவர் எங்குமே வெளிப்படையாகக் கூறவில்லை.
ஒருவன் தன் கர்மபலன்களின் விளைவாக மிருகப்பிறவியை அடைகின்றான் எனும் கருத்தின் கருத்தாக்கம் அவன் மனிதனாக இருந்தபோதும் அவனுடைய குணங்கள் ஒரு மிருகத்தின் குணங்களாக இருக்கின்றன ஆகவே அவன் நிலை அத்தகைய ஒரு மிருகத்தின் நிலையே என்பதாகவும் கருதப்படலாம். மாறாக, ஒரு மனிதன் உண்மையிலேயே ஒரு மிருகமாக பிறக்கின்றான் என்பது சரியாகாது.
படைப்பனைத்தும் ஒரே சீராக ஒரே திசையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எல்லாமே முன்னோக்கியே செல்கின்றன. எதுவுமே பின்னோக்கிச் செல்வதில்லை. அதே போன்றதுதான் மனிதப் பிறப்பும். கடவுளின் தெய்வீக உலகிலிருந்து உதிக்கும் மனிதன் தாயின் கர்ப்பத்தில் உருபெற்று, இவ்வுலகில் பிறந்து வளர்ந்து முதுமையடைந்து இறக்கின்றான். ஆனால் அவன் இறப்பு ஒரு பிறப்பேயன்றி வேறில்லை. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் பிறக்கும் மனிதன் இவ்வுலகிலிருந்து அவ்வுலகமான ஆன்மீக உலகிற்குள் பிரவேசிக்கின்றான். அங்கு ஆரம்பமில்லா ஆரம்பத்திலிருந்து முடிவில்லா முடிவுவரை அவன் பற்பல உலகங்களினூடே தொடர்ந்து வளர்ச்சியடைந்து ஆன்மீக ரீதியில் மேம்பாடு கண்டு கடவுளின் அன்மையை நெருங்கிக்கொண்டிருப்பான்.
नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.
உலக வாழ்வில் நமது நோக்கமே கடவுளை அறிந்து அவர் வழியில் செயல்படுவதே ஆகும். இதன்வாயிலாகத்தான் மனிதன் ஆன்மீக ரீதியில் முன்னேற முடியும். இதைத்தான் பின்வரும் செய்யுளும் எடுத்துரைக்கின்றது.
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.