“வாய்மையே எல்லா மனித நற்பண்புகளுக்கும் அஸ்திவாரமாகும். -பஹாவுல்லா-“
பொய் சொல்வதென்பது இன்று ஒரு சாதாரண செயலாகிவிட்டது. உலகம் செயல்படுவதே பொய்களின் அடிப்படையில்தான் எனக் கூறலாமோ என்று தோன்றுகிறது.
சினிமாப் படங்களில் கற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் பல பொய்யானப் பண்புகளை மனதில் தோற்றுவிக்கின்றன. விளம்பரதாரர்கள் வியாபாரத்திற்காக பொய்களுக்கு பலவித அலங்காரங்கள் செய்வித்து அவற்றை தங்கள் பொருள்களுக்கு அனிவித்து சந்தையில் அவிழ்த்துவிட்டுள்ளனர். அரசியல் ரீதியில் சில போர்கள் கூட உண்மைக் காரணத்தை மறைத்து பொய்க் காரணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படுகின்றன. இப்படி உலகில் எங்கு பார்த்தாலும் பொய்யே பல நிலைகளில் பிரதானமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் விளம்பரப் பொய்களைப் பார்க்கும் சிறார்கள் மனதில் அவை ஆழப்பதிந்து தவறான பண்புகளைப் பதிக்கின்றன. சில வேளைகளில் பெற்றோர்களும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” எனும் கூற்றுக்கு இணங்க குழந்தைகள் பொய் சொல்லக் கற்றுக்கொள்வதற்கு மூலகாரணமாக இருக்கின்றார்கள். குழந்தைப்பருவத்தில் கற்றுக்கொள்ளப்படும் பழக்கங்கள் பசுமரத்தாணி போன்று வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும்.
ஒரு நண்பரைச் சந்திக்கின்றோம், “எப்படி இருக்கின்றீர்கள்,” என வினவுகிறோம், அதற்கு அவர் “நன்றாக இருக்கின்றேன் என்பார்.” மற்ற ஒருவரை சந்திக்கின்றோம், சாப்பிட்டீர்களா என வினவுகின்றோம், அதற்கு அவர் “ஓ சாப்பிட்டாயிற்றே,” என்பார். “கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்,” என ஒருவரை அழைப்போம், அதற்கு அவர் “நீங்க முன்னுக்கு போங்க நான் பிறகு வரேன்” என்பார். “ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்,” எனக் கேட்டால் “ஒன்றுமில்லையே, நன்றாகத்தானே இருக்கின்றேன்,” என்பார்கள். உன்னிப்பாக கவனித்தால், இவை யாவும் வழக்கமாக ஒரு பேச்சுக்காக சொல்லப்படும் பதில்களே தவிர அவற்றில் பெரும்பாலும் உண்மையிருக்காது. நன்றாக இருக்கிறேன் என்பவர் நன்றாக இருக்கமாட்டார், சாப்பிட்டாயிற்று எனக் கூறுபவர் ஒரு வேளை சாப்பிட்டிருக்கமாட்டார், போங்க வரேன் என்பவர் வரப்போவதில்லை. ஒன்றுமில்லை என்பவர் மனதில் ஆயிரம் போராட்டங்கள் நிறைந்திருக்கும்.
வேறு ஒரு விதமான பொய்யும் உள்ளது. நாம் எதை அல்லது எவற்றைப் பார்க்க நினைக்கின்றோமோ அவை அப்படியே தத்ரூபமாக நமது கண்ணுக்கத் தெரியும். உதாரணமாக வர்ணங்களை எடுத்துக்கொள்வோம். எந்த வர்ணம் நம் மனதில் பதிந்துள்ளதோ அந்த வர்ணமே பார்க்குமிடங்களிலெல்லாம் தோன்றும். அதே போன்றுதான் ஒரு மனிதரிடத்தில் நாம் பார்க்க விரும்பும் விஷயங்கள் மட்டுமே நமது கண்களுக்கு பளிச்சென்று தெரியும். அந்த மனிதரிடம் ஆயிரம் நல்ல விஷயங்கள் நிறைந்திருக்கும் ஆனால், அவர் எப்போதோ செய்த ஒரு சிறு தவறு மட்டுமே அத்தருணம் மனதிற்குத் தோன்றும். சில நேரங்களில் இல்லாத ஒன்றுகூட இருப்பதாகத் தொன்றும். சொல்லாத ஒன்று சொல்லப்பட்டதாகத் தோன்றும். முக்கியமாக கனவன் மனைவிக்கிடையே இத்தகைய “பார்வைக் குறைவுகள்” இருப்பின் அக் குடும்பத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
இப்படி நமக்கு விருப்பமானவற்றை மட்டுமே நாம் பார்க்கவும் சொல்லவும் விரும்புவதன் காரணமென்ன? ஒருவர் சாப்பிடவில்லையென்றால் அதை அவ்வாறே சொல்வதற்கென்ன அல்லது உடல்நலம் குறைவாக இருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்துவதில் என்ன தவறு? ஒருவரிடம் உள்ள நல்லவற்றை பார்க்காமல் அவரிடம் இருக்கும் ஒரு தவறு மட்டுமே நம் கண்களுக்குத் தெரிவதன் காரணமென்ன?
இந்த உலகம் முழுவதிலுமுள்ளோரைப் பார்க்கையில் பொய் சொல்வதற்கு மிகச் சுலமான ஒருவர் இருக்கின்றார் என்றால் அது நாம்தான். தனக்குத் தானே பொய் சொல்வது மிகவும் எளிதாகும். ஏனெனில் தனக்குத் தானே பொய் சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், அதே பொய்யைப் பிறரிடம் சொல்லும்போது சற்று கவனமாக இருப்பது அவசியப்படுகின்றது.
பொய் சொல்வதைப் பொருத்தவரை நாம் பிறரிடம் சொல்லும் பொய்யைவிட நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்யே அதிகமாகும் மற்றும் கேட்டை விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
இப்போது தனக்குத்தானே எவ்வாறு பொய் சொல்லக்கூடும் என்பதைப் பார்ப்போம். ஒரு காரியம் செய்யவேண்டியுள்ளது ஆனால், மறந்துவிட்டது; பரவாயில்லை நாளைக்கு அதைச் செய்யலாம், அதற்குள் என்னவாகிவிடப் போகின்றது என தனக்குத் தானே கூறிக்கொள்வது; குடும்ப நிலை கஷ்டமாக இருக்கும் போது பிறரிடம் அதைக் காட்டிக்கொள்ளாமல் பகட்டாக நடந்துகொள்வது; யாராவது நம்மைப்பற்றி ஒரு உண்மையைச் சொல்லும் போது உடனே எதிர்வாதம் செய்து அது உண்மையல்ல என வாதிடுவது; தினசரி நமது வாழ்வில் செய்யவேண்டிய முக்கியமானவற்றைச் செய்யாமல் ஏதாவது காரணத்தை முன்னிட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமே நடக்காதது போன்றிருப்பது. நமது தவறுகளை நமக்கு நாமே ஒப்புக்கொள்ளாமல் அவற்றை நியாயப்படுத்துவது என்பன போன்ற பல சூழ்நிலைகள் தனக்குத்தானே பொய்சொல்லிக்கொள்வதன் உதாரணங்களாகும்.
தனக்குத்தானே பொய்சொல்லும்போது நமக்கே தெரியாமல் பல பின்விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். “எச்சூழ்நிலையிலும் நமக்கு நாமே பொய் சொல்லிக்கொள்ளவே கூடாது. தனக்குத்தானே பொய் சொல்லிக்கொண்டும் அதை நம்பிக்கொள்ளவும் செய்பவன் தனக்குள் அல்லது தன்னைச் சுற்றிலும் அடங்கியுள்ள உண்மையை உணர்ந்துகொள்ள முடியாமல் தன்பாலும் மற்றவர்பாலும் மதிப்பிழந்து போகும் நிலையை அடைவான். மதிப்பிழந்தவன் அன்பு செலுத்தும் ஆற்றலை இழந்துவிடுவான்; உணர்வெழுச்சிக்கு அடிமையாகி பண்படாத இன்பங்களில் ஆழ்ந்துவிடுவான்; மிருகத் தனமான கெட்ட பழக்கவழங்கங்களுக்கு அடிமையாவான். இவை யாவும் ஒருவன் தனக்குதானேயும் பிறரிடமும் வழக்கமாக பொய் சொல்லும் பழக்கத்திற்கு ஆளாவதன் பின்விளைவுகளாகும். தனக்குத் தானே பொய் சொல்லுபவன் வெகு விரைவின் மனம் புண்பட்டுப்போவான். இப்படி மனம் புண்படுவது அவ்வாறு புண்படுவோர் மனதுக்கு இதமாக இருக்கும். சிலர் இல்லாத ஒன்றை கற்பனையாக உருவகப்படுத்திக்கொண்டு யாருமே ஒன்றும் செய்யாதபோதும் தன்னை யாரோ கேவலப்படுத்திவிட்டதாக தனக்குத் தானே ஒன்றை உருவாக்கிக்கொண்டு, பொய்சொல்லியும் அப்பொய்யை வெகு கவர்ச்சியாக்கி, மடுவை மலையாக்கிவிடுவார். அது அவருக்கும் தெரியும், ஆனால் அவர் தாமே அதனால் புண்பட்டும் அப்புண்படுதலில் ஆழ்ந்தும் அதனால் களிப்புணர்வடைந்தும், இறுதியில் உண்மையான பழியுணர்வையும் அடைவார்.”
இதிலிருந்து, “பொய்” எனும் வார்த்தைக்கு நமக்குத் தெரிந்ததைவிட பல அர்த்தங்கள் உண்டென்பதை நாம் கண்டுகொள்ளவேண்டும். நமக்குத் தெரியாத அர்த்தங்கள் தெரிந்தவற்றைவிட மிகவும் ஆபத்தானவையாக இருக்கலாம். ஆகவே எச்சூழ்நிலையிலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திட வேண்டும். அதற்காக, எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. தேவைப்படும் போது உண்மையும் இல்லாமல், நிச்சயமாகப் பொய்யும் பேசாமல், நிலைமையைச் சமாளிக்கும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
தெளிவான விளக்கம்…..