அன்பே கடவுள் அருளாட்சியின் இரகசியமும், சர்வ-இரக்கமிக்கவரின் வெளிப்படுகையும் ஆன்மீகப் பொழிவுகளின் ஊற்றுக்கண்ணும் ஆகும் என்பதை உறுதியாகவே நீ அறிவாயாக.
அன்பே விண்ணுலகின் கருணைமிகு ஒளியும் மனித ஆன்மாவுக்கு உயிர்ப்பூட்டும் புனித ஆவியின் நித்திய மூச்சுக்காற்றும் ஆகும்.
அன்பே கடவுள் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் காரணமும், தெய்வீகச் சிருஷ்டிக்கிணங்க எல்லா வஸ்த்துக்களின் மெய்ம்மையினுள்ளும் இயல்பாகவே வீற்றிருக்கும் இன்றியமையா பிணைப்பும் ஆகும்.
அன்பே இம்மையிலும் மறுமையிலும் உண்மையான கழிபேருவகையை உறுதிபடுத்தும் ஒரே வழியாகும்
அன்பே இருளில் வழிகாட்டும் ஒளியும், மனிதனைக் கடவுளோடு ஐக்கியப்படுத்தும் உயிர் இணைப்பும், ஒளிபெற்ற ஆன்மா ஒவ்வொன்றின் மேம்பாட்டினை உறுதிபடுத்துவதும் ஆகும்.
அன்பே இவ்வாற்றல்மிகு, தெய்வீகமான காலவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிபெரும் கட்டளையும், பருப்பொருளான இவ்வுலகின் வேறுபட்டத் தனிமங்களை ஒன்றிணைத்திடும் தனிச்சிறந்த சக்தியும், விண்வெளியில் கோள்களின் நகர்ச்சியை வழிநடத்தும் தனிப்பெரும் காந்தசக்தியும் ஆகும்.
அன்பே தவறாததும் எல்லையற்றதுமான ஆற்றலோடு இப்பிரபஞ்சத்தில் உள்ளடங்கியுள்ள மர்மங்களை வெளிப்படுத்துகிறது.
அன்பே மானிடம் எனும் அலங்கரிக்கப்பட்ட உடலுக்கு உயிராவியும், மாள்வுக்குரிய இவ்வுலகில் உண்மையான நாகரிகத்தை ஸ்தாபிப்போனும், மேன்மையான நோக்குடைய இனம் மற்றும் தேசம் ஒவ்வொன்றின் மீதும் அழிவே இல்லாத கீர்த்தியைப் பொழிவோனும் ஆகும்.
-அப்துல் பஹா-