உண்ணா நோன்பு


பஹாய் சமயம், திருவெளிப்பாடு கண்ட எல்லா மதங்களையும் போல, ஆன்மீகப் பயிற்சிக்கு இன்றியமையாத மதிப்பினைக் கொண்ட ஒரு விஷயமாக உண்ணா நோன்பைப் காண்கிறது. கடவுள் அவதாரங்கள் தங்கள் வாழ்நாளில் சில நாள்கள் தனிமையை நாடி உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி பிரார்த்தித்தும் அவரை தியானித்துமுள்ளனர். பஹாவுல்லாவும் ஓர் இரண்டு வருடகாலம் தனிமையை நாடி இத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். கித்தாப்-இ-அக்டாஸ் எனப்படும் அதிப் புனித நூலான பஹாய் சட்ட நூலில் பஹாவுல்லா இந்த உண்ணா நோன்பை பஹாய்களுக்கு விதித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் முதிய பஹாய்கள் (15 வயதை அடைந்தோர்) சூர்யோதயத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருந்திட பத்தொன்பது நாள்களை பஹாவுல்லா விதித்திருக்கின்றார். பஹாய் வருடம் (361+4) அல்லது 361+5) நாள்களைக் கொண்டது, அதற்குப் பத்தொன்பது மாதங்கள் (19×19) உள்ளன. மேற்கொண்டு நான்கு அல்லது ஐந்து நாள்கள் உபரி நாட்கள் எனப்படும். ஒவ்வொரு மாதத்திற்கும் கடவுளின் நற்பண்பு ஒன்றே பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பஹாய்கள் அனைவரும் மார்ச் மாதம் 2ம் நாளில் (இத்தினம் Vernal Equinox எனப்படும் இளவேனில் விசுவத்தை வைத்து தீர்மானிக்கப்படும்) ஆரம்பித்து 19 நாள்கள் வரை பஹாய் வருடத்தின் கடைசி மாதமாகிய ‘அலா’ அல்லது ‘உயர்வு’ மாதத்தில் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். மார்ச் மாதம் 21ம் தேதி பஹாய் வருடப்பிறப்பாகும் (இத்தேதியும் இளவேனில் விசுவத்தை பின்பற்றி தீர்மானிக்கப்படும்). இவ்வருடப் பிறப்பு இந்து பஞ்சாங்கத்தில் மஹாவிஷுவம் (vernal equinox) எனப்படும் இளவேனிற்காலத்தின் முதல் நாளில் உண்டாகின்றது. ஆகவே, பஹாய்களின் உண்ணா நோன்பானது, பிறக்கப்போகும் வருடம் முழுவதற்குமான ஆன்மீகத் தயார்நிலை மற்றும் புத்துயிர் பெறுதலாகக் காணப்படும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், எழுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள், நோயுற்றவர்கள், பயணங்களில் ஈடுபட்டுள்ளோர், கடின உடலுழைப்பில் ஈடுபட்டுள்ளோர், பதினைந்து வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் உண்ணா நோன்பைக் கடைப்பிடிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்த உண்ணா நோன்பு நாள்களைத் தவற விடுவோர் அவற்றை மற்ற நாள்களில் ஈடுசெய்ய முடியாது. உண்ணா நோன்புக்கென பஹாவுல்லா நியமித்துள்ள நாள்கள் பெரும் மகத்துவம் பொருந்திய நாள்கள்.

உண்ணா நோன்பு நாள்களின் போது சூர்ய உதயத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை பஹாய்கள் எவ்வித உணவோ பானமோ அறவே அருந்தாமல் இருப்பர். அடிப்படையில் இந்த நாள்கள், தியானம், பிரார்த்தனை, ஆன்மீகப் புத்துயிர்ப் பெறுதல் ஆகியவற்றில் பஹாய்கள் ஈடுபட்டு, தங்களின் அகவாழ்விற்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களின் ஆன்மாவில் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் ஆன்மீக ஆற்றல்களுக்குப் புத்துணர்ச்சியும் புத்துயிரும் தரும் காரியங்களில் ஈடுபடுவர். ஆகவே, உண்ணா நோன்பின் தனிச்சிறப்பும் நோக்கமும் ஆன்மீகத்தையே அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளன. உண்ணா நோன்பு ஓர் அடையாளக் குறியும் அது தன்னலமும் உடலிச்சைகளிலிருந்தும் விடுபட்டிருக்கவேண்டும் என்பதற்கான ஓர் நினைவூட்டலும் ஆகும். உணவின்றி தவிக்கும் மக்களின் போராட்டத்தை உணரவும் இந்த நாள்கள் பயன்படுகின்றன. அப்துல்-பஹா, உண்ணா நோன்பானது, “மனிதனில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு காரணமாக இருக்கின்றது”, எனக் கூறுகின்றார். “இதயம் மென்மையடைகின்றது, மனிதனில் ஆன்மீகம் அதிகரிக்கின்றது. இது மனிதனின் சிந்தனைகள் கடவுளை நினைவுகூர்தலில் மட்டுமே ஈடுபட்டுள்ளன எனும் பொருண்மையினால் உண்டாகின்றது; இந்த விழிப்புநிலை மற்றும் அகத்தூண்டலின் மூலம் பூரண மேம்பாடுகள் தொடர்கின்றன”. (Star of the West)

உண்ணா நோன்பு மனிதனுள் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருக்கின்றது. மனித இதயம் மென்மைபெற்றும் அவனது ஆன்மீகம் அதிகரிக்கவும் செய்கின்றது. உண்ணா நோன்பு லௌகீகம் மற்றும் ஆன்மீகம் என இருவகைப்படும். லௌகீக நோன்பு என்பது உடலிச்சைகள் மற்றும் உடல் தேவைகளைத் தவிர்த்திருப்பது. ஆனால் தக்கதான ஆன்மீக நோன்பு என்பது மனிதன் தன்னல இச்சகைளிலிருந்தும், கருத்தின்மையிலிருந்தும், பைசாச மிருக குணங்களிலிருந்தும் விடுபட்டிருப்பது என்பதாகும். ஆகவே, லௌகீக உண்ணா நோன்பென்பது ஆன்மீக நோன்பிற்கான ஓர் அடையாளமே ஆகும். அதாவது: ‘கடவுளே! நான் உடலிச்சைகளிலிருந்து நோன்பு நோற்றும் உண்பதிலும் அருந்துதலிலும் ஈடுபடாமல் இருப்பதனால், அதே போன்று என் இதயத்தையும் வாழ்வையும் உமது அன்பைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தூய்மைப்படுத்தவும் புனிதப்படுத்தவும், என் ஆன்மாவை சுய இச்சைகளிலிருந்து பாதுகாக்கவும் பதனப்படுத்தவும் செய்வீராக… இவ்வகையாக ஆன்மா புனிதமெனும் நறுமனங்களின்பால் தொடர்புகொண்டு உம்மை நினைவுகூறுதலைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் நோன்பு நோற்றிருக்குமாக.’