பஹாய்களும் அரசியலும்


மூலம்: http://www.bahai.org/misc/politics

பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு ஒற்றுமையை மையமாகக் கொண்டது. கடவுள் ஒருவரே, சமயங்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர் எனும் முப்பெரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒற்றுமை பேணப்படும்.

பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்கள் சச்சரவு மற்றும் சண்டைகளில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளார், ஏனெனில், அவை இன்று வழக்கிலுள்ள கட்சிசார்ந்த அரசியலின் கூறுகளாகும். எந்த நாட்டில் வாழ்ந்த போதும் பஹாய்கள் அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினர்களாக இருப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.

மேலோட்டமாகப் பார்க்கையில், பஹாய்கள் தங்களின் சர்வலோக கோட்பாடுகளின் மேம்பாட்டிற்காக பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருப்பார்கள் என சிந்திக்க தோன்றும். ஆனால், அது முற்றிலும் தவறாகவே இருக்கும். பஹாய்கள் சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் பங்கை ஆற்றிட ஊக்குவிக்கப்படுகின்றனர். அவற்றுள் ஒன்று தங்களின் குடிமைக் கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

ஆகவே, சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றிட முடியும் என தாங்கள் கருதுவோருக்கு அவர்கள் போதுத் தேர்தல்களில் இரகசிய முறையில் வாக்களித்திடும் சுதந்திரம் உண்டு.

பஹாய்கள் அரசியல் சார்பற்ற அரசாங்க நியமனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா்ல, அவர்கள் எந்த அரசியல் கட்சியோடும் தங்களை அடையாளப்படு்த்திக்கொள்ளக்கூடாது அல்லது எந்த அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது.

மனிதகுலத்தின் ஒற்றுமையைப் பேணுவதே மக்களும் தேசங்களும் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் சவால் எனும் ஓர் அடிப்படை பஹாய் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். உண்மையான சமூக அபிவிருத்தி என்பது மனித நாகரிகத்தின் இப்புதிய கட்டத்தின் (மனிதகுலத்தின் ஒற்றுமையின்) மேம்பாட்டையே சார்ந்திருக்கின்றதென பஹாவுல்லா போதிக்கின்றார். “மனிதகுலத்தின் பொதுநலம், அதன் அமைதி, பாதுகாப்பு ஆகியவை அதன் ஒற்றுமை உறுதியாக ஸ்தாபிக்கப்படும்வரை அடையப்படவே முடியாது.”

அவற்றின் சாரத்தின் சர்வலோகத்தன்மை வாய்ந்த பிரச்சனைகளுக்குக் கட்சி சார்ந்த மற்றும் பிரிவிணையை இயல்பாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தீர்வுகளை வழங்கிட முடியாதென்பது பஹாய் போதனையாகும். தேசிய, இன, கலாச்சார அல்லது சித்தாந்த ரீதியான இ்ப்போதைய அரசியல் சாதனங்கள் எதுவுமே எல்லைக்குட்பட்டவை மற்றும் தனிப்பட்டவையாகும்.

அரசியல்சார்பின்மை எனும் பஹாய் கோட்பாடு பஹாய்கள் முற்றிலும் சமூக மற்றும் நெறிமுறைகள் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்திடவில்லை. பார்க்கப்போனால், இனசமத்துவம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற பல சமூக பிரச்சனைகளில் பஹாய்கள் முன்னணியிலிருந்த சேவையாற்றி வந்துள்ளனர்.

அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் கோட்பாடு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் எனும் பஹாய் போதனையோடு நம்பிக்கை செயற்பாடு ஆகிய இரு ரீதியிலும் வெகு நெருக்கமான ஒன்றாகும்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு என்னேரத்திலும் விசுவாசமாக இருக்கவேண்டும், மற்றும் கீழறுப்பு போன்ற செயல்களில் முற்றாக ஈடுபடக்கூடாது என பஹாவுல்லா தமது நம்பிக்கையாளர்களுக்குப் போதிக்கின்றார். ஆட்சி மாறும்போது, வரக்கூடிய புதிய அரசாங்கத்திற்கு பஹாய்கள் அதே விதமான கடமை உணர்வோடு, தங்களின் விசுவாசத்தை, அரசியலில் ஈடுபடாமை எனும் கோட்பாட்டிற்கிணங்க வழங்கிடவேண்டும்.

பஹாய் தேர்தல் முறை

(இருபத்தொரு வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பஹாய் சமூகத்தின் தேர்தல் முறைகளில் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்பாளர் நியமணம் கிடையாது மற்றும் பிரச்சாரங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன. சமூகத்திற்குச் சிறந்த முறையில் சேவையாற்றிட முடியும் என தாங்கள் நினைக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு பஹாய்கள் பன்மைமுறையில் பிரார்த்தனையோடு வாக்களிப்பார்கள். இவ்விதத்தில் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒருவர் அல்லது பலர் தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட பதவிகளில் கடவுள் விசுவாசத்துடன் சேவையாற்றுவார்கள்.)

எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய 10 பஹாய் பெண்மணிகள்


மூலம்: http://www.huffingtonpost.com/homa-sabet-tavangar/10-bahai-women-everyone-should-know_b_1371029.html

“பெண்களும் ஆண்களும் கடவுளின் பார்வையில் சமமானவர்களாகவே இருந்துவந்துள்ளனர் இனி என்றென்றும் அவ்வாறே இருந்தும் வருவர்” – பஹாவுல்லா

பஹாய்களுக்குச் சமத்துவமும் ஆற்றலடைதலும் இன்றியமையா ஆன்மீக கோட்பாடுகளாகும். “மானிட உலகு இரு இறக்கைகளால் ஆனது: ஆண் மற்றும் பெண்.” இவ்விரு இறக்கைகளும்… வலுவில் சமமதிப்பும் அதிகாரமும் அடையும்போது, (மனுக்குலத்தின்) பறக்கும் ஆற்றலானது வெகு மேம்பாடு அடைந்தும் தனிச்சிறப்பும் பெறும்.

இத்தகைய அழுத்தந்திருத்தமான வாக்குமூலங்களினால், உலகளாவிய பஹாய் சமூகம் அதன் 160 ஆண்டுகளுக்கு முன்பான ஆரம்பத்திலிருந்து பெண்கள் உரிமையின் மேம்பாடு குறித்த இயக்கத்தின் முன்னணியில் இருந்து வந்துள்ளது மற்றும் இதன் பயனாக பல பஹாய் பெண்மணிகள் பிரமிப்பூட்டும் பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்டவர்களாகவும், பலதரப்பட்ட தொழில்களின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுள் சிலரைக் கீழே காண்போம்.

(இக்கட்டுரை, மாஹ்வாஷ் மற்றும் பாஃரிபா போன்று உலகம் முழுவதும் நியாயமற்ற முறையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களின் மனவுறுதி, உளவலிமை, மற்றும் உற்சாகம் நம் எல்லோருக்கும் ஒரு நல்ல உலகை உருவாக்கும்.)
தாஹிரி

தாஹிரி(கி.பி.1817-1852), ஈரான் நாட்டின் தலைசிறந்த பாவலர் மற்றும் கல்விமான்களில் ஒருவராவார். இவர் பஹாய் இயக்கத்தின் ஆரம்பகாலத்தின் 18 சீடர்களுள் ஒருவரும் ஆவார். இவர் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன், “நீங்கள் என்னை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் கொலை செய்யலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்கவே முடியாது,” எனக் கூறி உயிர்விட்டார். இவர் உலகளாவிய நிலையில் பெண்கள் வாக்குரிமை குறித்த முதல் உயிர்த்தியாகியாகக் கருதப்படுகிறார்.

***************************************

கேரொல் லொம்பார்ட்

இவர் கேரோல் லொம்பார்ட் (1908-1942) எனப்படும் ஹாலிவூட்நடிகையாவார். 1930களில் இவரே பெரிதும் பெயர் பெற்றிருந்த நடிகையாவார் மற்றும் “screwball comedy” எனப்படும் ஒருவகை காமெடி வகையின் முன்னோடியும் ஆவார். இவர் கணவர் அக்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்த ஹாலிவூட் நடிகரான கிளார்க் கேபிள் ஆவார். மற்றொரு காமெடியாளரான லூசில் போல் என்பவரின் “ஐ லவ் லூசி” எனும் தொடருக்கு இவரே தூண்டலளித்தார். இவருக்கு 33 வயதாகிய போது போர்க்கால நிதி (சுமார் 2 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டது) வசூல் ஒன்றின் போது விமான விபத்தொன்றில் காலமானார். அதிபர் பிராங்க்லின் ரூஸவெல்ட், இரண்டாம் உலக யுத்தத்தில் தன் நாட்டிற்காக உயிர்விட்ட முதல் பெண்மணி இவரே ஆவார் எனக் கூறினார். இவரின் மறைவுக்குப் பிறகு அமெரிக்க ‘அதிபரின் சுதந்திர விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இவர் ஐக்கிய அமெரிக்க பஹாய் சமூகத்தில் ஓர் அங்கத்தினராகவும் இருந்தார்.

***************************************

டோரதி நெல்சன்

டோரதி நெல்சன் (பிறப்பு 1928) ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் நீதிபதி ஒருவராவார். இவர் ஐக்கிய அமெரிக்க இடையீட்டு நீதிமன்றங்களை ஆரம்பித்து அவற்றை பரவலாக்கியதன் மூலம் பிரபலம் ஆனார். இவர் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முதல் சட்டத்துறை பேராசிரியராவார். 1969ல் இவர் அதன் பெண் முதல்வராக நியமிக்கப்பட்டதன் வாயிலாக முக்கிய அமெரிக்க சட்டப்பள்ளி ஒன்றின் பெண் முதல்வர் எனும் தனிச்சிறப்படைந்தார். ஐக்கிய அமெரிக்காவின் பஹாய் நிர்வாக சபையின் உறுப்பினர்களுள் இவரே நீண்டகாலம் சேவையாற்றியவராவார்.

***************************************

ஸாங் சின்

ஸாங் சின் எனும் பெயர் கொண்ட இவர் 1965ல் பிறந்தவராவார். தொழிற்சாலை ஒன்றின் முன்னாள் ஊழியரான இவர், தற்போது பீச்சிங் நகரின் மிகப் பெரிய ‘ரியல் எஸ்டேட்’ மேம்பாட்டாளராக விளங்குகிறார் மற்றும் இவர் ‘போர்ப்ஸ் (Forbes)’ வெளியீட்டில் உலகின் அதிசக்திவாய்ந்த பெண்களுள் ஒருவர் எனவும் அதில் “உலகின் 10 இலட்சக்கோடீசுவரப் பெண்களுள் ஒருவரெனவும்” பிரபலமடைந்துள்ளார். இவர் சமீபத்தில் நியூஸ்வீக் மாதவெளியீட்டில் “சீனாவின் இலட்சக்கோடீஸ்வரப் பெண்புலிகளின் எழுச்சி” எனும் தலைப்பில் முன்பக்கத்தில் தோற்றம் கண்டார். இவர் தமது நீதி, சமத்துவம் மற்றும் வணிகஒழுக்கத்திற்கு பெயர் போனவராகவும் விளங்குகிறார். இவரின் CNN பாஃரீட் ஸாக்காரியாவுடனான பேட்டியை</a> இங்கு கானலாம். இவரும் இவர் கணவரும் 2005ம் வருடத்திலிருந்து பஹாய் சமயத்தை ஏற்று சேவையாற்றி வருகின்றனர்.

***************************************

பாட்ரீஷியா லோக்

நல்ல விழிப்புணர்வும், இரக்கமனப்பான்மையும் மிக்க பாட்ரீஷியா லோக் (1928-2001) மேக்கார்த்தர் வாரியத்தின் ஜீனியஸ் விருதைப் பெற்றவராவார். இவர் அது வரை கீழடக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பூர்வக்குடியினர் மொழிகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படைச் சேவைகளுக்காக இந்த விருதைப் பெற்றார். 2005ம் வருடம் இவர் ஐக்கிய அமெரிக்காவின் ‘தேசிய பெண் பிரபலங்களின் கூடத்தில்’ சேர்க்கப்பட்டார். இவர் பூர்வகுடியினரால் நடத்தப்படும் 17 கல்லூரிகளை ஸ்தாபிக்க உதவியுள்ளார். இவர் ஐக்கிய அமெரிக்க பஹாய்களின் தேசிய நிர்வாக சபையில் பலகாலம் சேவையாற்றியுள்ளார்.

***************************************

மில்டிரெட் மொட்டாஹாடி

மில்டிரெட் மொட்டாஹாடி (1908-2000) நுன்சீனப்பீங்கான் வணிகச் சபை ஒன்றின் இணை ஸ்தாபகரும், வணிகத்துறை, வடிவமைப்பு மற்றும் சமுதாயத்தொண்டில் ஓர் உலகளாவிய இயக்குனர்களுள் ஒருவராகவும் இருந்தார். இவரின் சீனப்பீங்கான் வடிவமைப்புக்கள் அமெரிக்க வெள்ளை மாளிகையை அலங்கரித்தும் மூன்று அதிபர்களின் பதவியமர்வுச் சடங்குகளிலும் பங்குபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகளின் ஆரம்ப சாசனக் கையொப்பச் சடங்கில் இவரும் கூடியிருந்தார். இவரின் உலக அமைதி மற்றும் மேம்பாடு குறித்த முன்னோட்ட ஈடுபாட்டை இவர் பெண்கள் கல்விக்காக, குறிப்பாக 50க்கும் மேற்பட்ட வருடங்களுக்கும் முன் இந்தியாவில், ஆற்றிய சேவையில் காணலாம். இவர் பஹாய்களின் அனைத்துலக பஹாய் வாரியத்தில் அதன் பிரதிநிதியாகப் பலகாலம் சேவையாற்றியுள்ளார்.

***************************************

லேய்லி மில்லர்

லேய்லி மில்லர்-மியூரோ (பிறப்பு 1972), நியூஸ்வீக் மாத இதழினால் 150 பெண் தலைவர்களுள் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். இவர் இக்கட்டுரையில் ஆரம்பத்தில் காணப்படும் தாஹிரி அம்மையாரின் பெயரில் தாஹிரி நீதி மையம்” எனும் ஒரு ஸ்தாபனத்தின் ஸ்தாபகராகவும் அதன் CEO ஆகவும் பணியாற்றி வருகின்றார். இச் சேவைக்காக இவர் ‘2012 Diane Von Furstenberg மக்கள் குரல் விருதைப்’ பெற்றார். இந்த நீதி மையம் வன்முறைகளிலிருந்து தப்பிவரும் குடியேறிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இவர் வாஷிங்டன் போஸ்ட்டின் ‘Excellence in Non-Profit Management’ விருதையும் பெற்றுள்ளார்

***************************************

மாஹ்வாஷ் & ஃபாரிபா

மாஹ்வாஷ் (1953) மற்றும் பாஃரிபா (1963) இருவரும் பஹாய்கள் என்பதனாலும், அவர்கள் அரசாங்க கல்வி நிலையங்களில் இடம் மறுக்கப்பட்ட பஹாய் மாணவர்களுக்கென மறைமுகமாக உருவாக்கப்பட்ட BIHE எனப்படும் பஹாய் உயர்கல்வி நிலையங்களின் தலைமைத்துவத்தில் சேவையாற்றினர் என்பதனாலும் கைது செய்யப்பட்டு மிகவும் கொடுரமான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசாங்கம் இந்த BIHE கல்வி ஸ்தாபனத்தை அழிக்க முயன்று வந்தாலும் இந்த கல்வி ஸ்தாபனம் இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உட்பட உலகம் முழுவதுமுள்ள பல பல்கலைக்கழகங்களினால் ஆங்கீகரிக்கப்பட்டுள்ளது.

***************************************

எல்ஸீ ஆஸ்டின்

எல்ஸீ ஆஸ்டின் (1908-2004) சமூகவுரிமை இயக்கங்களில் ஒரு முன்னோடியாக சேவையாற்றியவர். 1930ல் இவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கராவார் மற்றும் அதைத் தொடர்ந்து அவர் ஒஹாயோ மாநிலத்தின் உதவி அட்டர்னி-ஜெனரலாக சேவையாற்றினார். இவர் தமது சேவைக்காலத்தை பொதுச் சேவையிலேயே கழித்தார் மற்றும் பெண்கள் நடவடிக்கைகள் திட்டம் ஒன்றை ஆப்பிரிக்காவில் தாம் உருவாக்கிய ஐக்கிய அமெரிக்க தகவல் ஸ்தாபனத்தின் மூலம் செயல்படுத்தினார். இருதய நோயால் மரணமுற்ற இவருக்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் உகாண்டா நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லங்களில் நினைவாஞ்சலிகள் நடத்தப்பட்டன.

***************************************

மரீ இராணியார்

மாட்சிமை பொருந்திய ரோமானியா நாட்டின் அரசியார் (1875-1938), இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியார் மற்றும் ரஷ்ய நாட்டின் ஸார் மன்னர் 2வது அலெக்ஸாண்டரின் மகள் வழி பேத்தி ஆவார். இவரே அரச பரம்பரையினருள் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்ட முதல் ராணியார் ஆவார்.முதலாம் உலக யுத்தத்தின் போது இவர் நோய் மற்றும் காயம் பட்டவர்களுக்கு சேவையாற்றிட செஞ்சிலுவைத் தாதியாக பணிபுரிந்தார். முதலாம் உலக யுத்தத்தில் தமது நாடு இழந்த பிரதேசங்களை இவர் ரோமானியா நாட்டின் பிரதிநிதியாக வேர்சேய்ல்ஸ் சென்று மீட்டுத் தந்தார்.

எதிர்காலம்


பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எஃபெண்டி அவர்கள் உலகின் எதிர்காலம் பற்றி கூறுகையில்:

“(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”

என கூறியுள்ளார்.

ஆனால் மனிதர்கள் தங்களின் படைப்பின் நோக்கத்தைத் தெரிந்துகொள்வதில் கவனமற்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்தால் என்னவாகும் என்பது குறித்து பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா எச்சரிக்கின்றார் . உதாரணமாக:

உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப் பட்டுவிட்டன என்று எண்ணிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களால் செதுக்கி வைத்துள்ளது.
மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!

இதே தொனியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி பஹாய் போதனைகளின் தன்மைகள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

‘(போதனைகள்)எல்லா விஷயங்களிலும் மிதத்தன்மை’ குறித்த கோட்பாட்டை வலியுறுத்துகின்றன; தன்னிச்சை, நாகரிகம் மற்றும் அதுபோன்றவை எதுவாயினும், மிதத்தன்மையின் எல்லைகளை மீறும்போது அது மனிதர்கள் மீது பெருங் கேடுபயக்கவல்ல தாக்கத்தை உண்டாக்கும்

மேலும்,

“மேற்கத்திய நாகரிகம் உலக மக்களைப்பெருங் கலக்கத்துக்குள்ளாக்கவும் திகிலடையவும் வைத்துள்ளது; மற்றும் ‘அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் தீ’ நகரங்களைத் தனக்கு இறையாக்கிக்கொள்ளும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது,”

என ஆரூடமாகக் கூறியுள்ளார்.

கட்டுப்பாடற்ற உலகில் அனுசக்தியால் ஏற்படக்கூடிய அழிவுகளை பஹாவுல்லா அக்காலத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“வினோதமும் அதே வேளை அற்புதமானதுமான ஒரு கருவியம் (அனுசக்தி) உலகில் உள்ளது; ஆனால் அது மனங்களுக்கும் ஆன்மாக்களுக்கும் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியம் உலகம் முழுவதன் காற்றுமண்டலத்தையே மாற்றியமைக்கும் ஆற்றலைக்கொண்டது, மற்றும் அதன் பீடிப்பு அழிவை ஏற்படுத்தும்.”

அப்துல் பஹாவின் முதலாம் உலக யுத்தம் குறித்த எச்சரிக்கைகள்:

இப்போதிருந்து சுமார் இரண்டு வருடங்களில், ஒரு சிறு பொறி கூட போரில் மூழ்கச் செய்யக்கூடிய அபாயம் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. எல்லா நாடுகளிலும் மூண்டுள்ள சமூக ரீதியிலான அமைதியின்மை, இச்சகாப்தத்தின் முன் அறிகுறிகளுள் ஒன்று, இப்போதே தோற்றங்கண்டுவிட்டதுமான மதங்கள் மீதிலான அவநம்பிக்கை ஆகியவை விவிலியத்தின் தானியல் நூலில் உரைத்துள்ளபடி ஐரோப்பா முழுவதையும் போர்த்தீயில் மூழ்கச்செய்யவிருக்கின்றது. 1917ற்குள் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து பெரும் பிரளயங்கள் இவ்வுலகை உலுக்கவிருக்கின்றன.

என அப்துல் பஹா 1910ல் தமது அமெரிக்கா விஜயத்தின் போது கூறியுள்ளார்.

ஜனவரி 1920ல் முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இரண்டாம் உலக யுத்தம் குறித்த அப்துல் பஹாவின் ஆரூடம்:

“உலகத்தை இப்போது பாதித்துள்ள நோய்கள் … மேலும் பன்மடங்காகும்; அதைச் சூழ்ந்துள்ள இருள் மேலும் அதிகரிக்கவே செய்யும். பால்கன்(Balkan) பிரதேசங்களில் இப்போது பரவியுள்ள கொந்தளிப்புக்கள் அடங்காது. அதன் அமைதியின்மை மேலும் அதிகரிக்கும். (போரில்) தோல்வியுற்ற நாடுகள் தொடர்ந்து அமைதியை குலைத்தே வரும். போரை மீண்டும் தூண்டிவிடக்கூடிய எல்லாவித நடவடிக்கைளிலும் அவை தொடர்ந்து ஈடுபட்டுவரும்.”

இருந்த போதும் இறுதியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி கூறியுள்ளபடி:

“(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”