பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எஃபெண்டி அவர்கள் உலகின் எதிர்காலம் பற்றி கூறுகையில்:
- “(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”
என கூறியுள்ளார்.
ஆனால் மனிதர்கள் தங்களின் படைப்பின் நோக்கத்தைத் தெரிந்துகொள்வதில் கவனமற்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்தால் என்னவாகும் என்பது குறித்து பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா எச்சரிக்கின்றார் . உதாரணமாக:
- உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப் பட்டுவிட்டன என்று எண்ணிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களால் செதுக்கி வைத்துள்ளது.
- மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!
இதே தொனியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி பஹாய் போதனைகளின் தன்மைகள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
- ‘(போதனைகள்)எல்லா விஷயங்களிலும் மிதத்தன்மை’ குறித்த கோட்பாட்டை வலியுறுத்துகின்றன; தன்னிச்சை, நாகரிகம் மற்றும் அதுபோன்றவை எதுவாயினும், மிதத்தன்மையின் எல்லைகளை மீறும்போது அது மனிதர்கள் மீது பெருங் கேடுபயக்கவல்ல தாக்கத்தை உண்டாக்கும்
மேலும்,
- “மேற்கத்திய நாகரிகம் உலக மக்களைப்பெருங் கலக்கத்துக்குள்ளாக்கவும் திகிலடையவும் வைத்துள்ளது; மற்றும் ‘அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் தீ’ நகரங்களைத் தனக்கு இறையாக்கிக்கொள்ளும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது,”
என ஆரூடமாகக் கூறியுள்ளார்.
கட்டுப்பாடற்ற உலகில் அனுசக்தியால் ஏற்படக்கூடிய அழிவுகளை பஹாவுல்லா அக்காலத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
- “வினோதமும் அதே வேளை அற்புதமானதுமான ஒரு கருவியம் (அனுசக்தி) உலகில் உள்ளது; ஆனால் அது மனங்களுக்கும் ஆன்மாக்களுக்கும் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியம் உலகம் முழுவதன் காற்றுமண்டலத்தையே மாற்றியமைக்கும் ஆற்றலைக்கொண்டது, மற்றும் அதன் பீடிப்பு அழிவை ஏற்படுத்தும்.”
அப்துல் பஹாவின் முதலாம் உலக யுத்தம் குறித்த எச்சரிக்கைகள்:
- இப்போதிருந்து சுமார் இரண்டு வருடங்களில், ஒரு சிறு பொறி கூட போரில் மூழ்கச் செய்யக்கூடிய அபாயம் ஐரோப்பா கண்டம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. எல்லா நாடுகளிலும் மூண்டுள்ள சமூக ரீதியிலான அமைதியின்மை, இச்சகாப்தத்தின் முன் அறிகுறிகளுள் ஒன்று, இப்போதே தோற்றங்கண்டுவிட்டதுமான மதங்கள் மீதிலான அவநம்பிக்கை ஆகியவை விவிலியத்தின் தானியல் நூலில் உரைத்துள்ளபடி ஐரோப்பா முழுவதையும் போர்த்தீயில் மூழ்கச்செய்யவிருக்கின்றது. 1917ற்குள் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து பெரும் பிரளயங்கள் இவ்வுலகை உலுக்கவிருக்கின்றன.
என அப்துல் பஹா 1910ல் தமது அமெரிக்கா விஜயத்தின் போது கூறியுள்ளார்.
ஜனவரி 1920ல் முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இரண்டாம் உலக யுத்தம் குறித்த அப்துல் பஹாவின் ஆரூடம்:
- “உலகத்தை இப்போது பாதித்துள்ள நோய்கள் … மேலும் பன்மடங்காகும்; அதைச் சூழ்ந்துள்ள இருள் மேலும் அதிகரிக்கவே செய்யும். பால்கன்(Balkan) பிரதேசங்களில் இப்போது பரவியுள்ள கொந்தளிப்புக்கள் அடங்காது. அதன் அமைதியின்மை மேலும் அதிகரிக்கும். (போரில்) தோல்வியுற்ற நாடுகள் தொடர்ந்து அமைதியை குலைத்தே வரும். போரை மீண்டும் தூண்டிவிடக்கூடிய எல்லாவித நடவடிக்கைளிலும் அவை தொடர்ந்து ஈடுபட்டுவரும்.”
இருந்த போதும் இறுதியில் பாதுகாப்பாளர் ஷோகி எஃபெண்டி கூறியுள்ளபடி:
- “(உலகின்) உடனடி எதிர்காலம் காரிருள் சூழ்ந்ததாகும், ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அதன் வருங்காலமோ எல்லையற்ற பிரகாசமிக்கதாகும்”