‘கடமை’ என்றால் என்ன?


பின்வரும் கட்டுரை கடமை எனும் வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன மற்றும் அதன் கருத்தாக்கம் குறித்த விளக்கமாகும்.

குறிப்புகள்: ஐரா வில்லியம்ஸ்

ஐரா வில்லியம்ஸ் பஹாய் புனித நிலத்திற்கு மேற்கொண்ட புனிதப்பயணத்தின்போது கடவுள் சமயத் திருக்கரமான புஃருட்டானுடனான சந்திப்பு குறித்த அனுபவங்கள்.

திரு புஃருட்டான் அவர்களின் உலக வாழ்வின் இறுதி நிமிடங்களின் தனிச்சிறப்பான வர்ணனை… உண்மையில் வியக்கத்தக்க ஒன்றாகும்.

பஹாய்கள் எக்காரியத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும் கடவுள் அவர்களுக்குச் சோதனைகளை அவ்வப்போது அனுப்பிக்கொண்டுதான் இருப்பார். அதேபோன்று எங்கள் அனுபவங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், சில காலம் சென்றவுடன் இச்சோதனைகள் யாவும் ஆனந்தமான அனுபவங்களாக நமது நினைவில் பதிந்துவிடும்.

நான் கண்ட மற்றும் அனுபவித்த யாவும் என் ஆன்மாவில் ஆழப்பதிந்திருந்தன. காலம் நேரம் ஆகியவற்றைக் கடந்த ஒரு நிலையில் நான் இருந்தேன். நான் 100 – 150 வருடங்களுக்கும் அப்பால் சென்று, காலங்கள் கடந்த பிறகே புரிந்துகொள்ளக்கூடிய முக்கியத்துவம் கொண்ட, அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான பஹாய் சமூகத்தின் வளர்ச்சியை என் மனக்கண்ணால் அங்கு கண்டேன்.

மனதில் நிற்கும் மற்றும் தனிச்சிறப்பானதும், எனக்கு ஆன்மீகப் பாடமாகவும் காந்தத்தின் ஈர்ப்புச் சக்திமிக்கதாகவும், அதன் பிறகு என் வாழ்விற்கு ஒளியாகவும் அமைந்த பஹாய் புனிதஸ்தலத்திற்கான என் புனிதயாத்திரையின் முக்கிய தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பஹாய்களுக்குத் திருவொப்பந்த தினமான 26 நவம்பரில் அது நடந்தது. அன்று எங்கள் குழு ஆக்கா நகர் சென்றது. அங்கு பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் சிறைவைக்கப்பட்டிருந்த ஆக்கா சிறைச்சாலையைக் கண்டோம்; பஹாவுல்லா கித்தாப்-இ-அக்டாஸ் எனப்படும் அதிப்புனித நூலை வெளிப்படுத்திய அப்புட் இல்லத்திற்குச் சென்றோம் மற்றும் வேறு பல பஹாய் புனித இடங்களுக்கும் சென்றோம். என் மனம் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டும் அத்தருணங்கள் யாவும் மனதில் ஆழப்பதிந்தும் இருந்தன.

ஆனால், இவ்விஜயங்கள் யாவும் அன்றைய தினத்தை முழுமைபெறச் செய்யவில்லை. அன்று மாலை புனிதப்பயணிகளுக்கான வரவேற்பு மையத்தில் கடவுள் சமயத்திருக்கரமான திரு புஃருட்டானுடனான ஓர் சந்திப்பு நிகழவிருந்தது. கூட்டம் மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது அவருடனான எங்களின் முதல் சந்திப்பாகும். அவரை முதன் முதலில் புனிதப்பயணத்தின் முதல் தினமான 24 நவம்பரன்று கண்டேன். அவர் அன்று அற்புதமானதோர் உரையை வழங்கி அடிக்கடி எங்களை வந்து சந்திப்பதாகவும் வாக்குறுதியளித்துச் சென்றார். அதற்கு முன் அவருடைய முதுமை காரணமாக இரண்டு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அவர் புனிதப்பயணிகளைச் சந்தித்தார். சமயத்தைப் போதிப்பது குறித்து உரையை தாம் வழங்கவிருப்பதால் அவர் புதன்கிழமையன்று எங்களை எங்கள் குடும்பத்தோடு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், கூட்டத்திற்காக காத்திருந்த எங்களுக்கு அன்று திரு புஃருட்டான் உரை நிகழ்த்திட வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டவுடன் எங்கள் ஏமாற்றம் எப்படியிருந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துபாருங்கள். அப்போது, அவர் எங்களை முதன் முதலில் வந்து கண்டபோது முகம் மிகவும் வெளுத்து பலவீனமாகவும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவருடைய சக்தி அவரைவிட்டு சிறிது சிறிதாக விலகுவதாக தோன்றியது. அவர் உடல்நலன் காரணமாகவே வரமுடியவில்லை என நான் நினைத்துக்கொண்டேன். (திரு புஃருட்டான் அப்போது தமது 98 வயதைத் தாண்டியிருந்தார்)

எங்களுடன் இருந்த பல புனிதப்பயணிகள் திரு புஃருட்டான் வரவில்லை என கேள்விப்பட்டவுடன் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளுக்குத் திரும்பினர், ஆனால் நாங்கள் சிலர் மட்டும் அவர் ஒரு வேளை வந்து உரை நிகழ்த்தக்கூடும் எனும் எதிர்ப்பார்ப்பில் அங்கேயே காத்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாக அவர் வருகின்றார் எனும் செய்தி வந்தபோது நாங்கள் பெருமகிழ்வெய்தினோம். அத்தனிச்சிறப்பு மிகுந்த மனிதர் அரைக்குள் நுழைந்தபோது அவர் அங்கு வர எத்தகைய முயற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகியது. பார்ப்பதற்கு அவர் மிகவும் முகம் வெளுத்துப்போய் கண்ணாடி போன்று தோன்றினார். அவர் அதுமுதற்கொண்டு இவ்வுலகத்தைத் துறந்துவிட்டார் என தோன்றியது. இருந்தபோதிலும் அவர் தமது பலவீனத்தை பொருட்படுத்தாமல் மேடை சென்று உரையாற்றவாரம்பித்தார்.

அன்று அவர் உரை கடவுளின் சமயத்தைப் போதிக்கும் கடமை குறித்து நிகழ்த்தப்பட்டது. அவர் முதலில் மேற்கண்ட பஹாவுல்லாவின் திருவாக்கைப் படித்தார்:

“கூறுவீராக: பஹாவின் மக்களே, இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக; ஏனெனில் இறைவன் ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தைப் பிரகடனஞ் செய்யும் கடமையை விதித்து, அதனைச் செயல்களிலெல்லாம் மிகப் போற்றுதலுக்குரிய செயலாகக் கருதுகின்றார். சமயத்தைப் போதிக்கும் அவர், எல்லாம் வல்லவரான, கிருபையாளரும் மேன்மைமிகு பாதுகாவலருமான இறைவனிடத்தில் திட நம்பிக்கை கொண்டிருக்கும் போதுதான், அத்தகையச் செயல் ஏற்புடையதாகும். மேலும், மனிதர்களின் சொல்லாற்றலின் மூலமாகத்தான் அவரது சமயம் போதிக்கப்படவேண்டுமே அல்லாது பலாத்காரத்தை மேற்கொள்வதன் மூலமாக அல்லவென்று அவர் கட்டளையிட்டுள்ளார். இவ்வாறுதான் அதி மேன்மைப்படுத்தப்பட்ட, சர்வவிவேகியான அவரது இராஜ்யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.”

அதன் பிறகு திரு புஃருட்டான் அவர்கள் ‘கடமை’ எனும் வார்த்தையின் அர்த்தம் குறித்த தமது புரிந்துகொள்ளலைப் பகிர்ந்துகொண்டார். அதற்கு உதாரணமாக ஒரு கதை சொன்னார். அக்கதை ரஷ்ய நாட்டை 2வது நிக்கோலாய் ஸார் மன்னன் ஆண்ட போது நடந்ததாகும். ஒரு நாள் நிக்கோலாய் தமது அரண்மனையை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அங்கு காவலுக்கு இருந்த ஒரு காவலாளியைக் காண நேர்ந்தது. அக்காவலாளி மிகவும் சோர்ந்து முகம் சிவந்தும் வீங்கியும் இருந்தான். நிக்கோலாய் அவன் அருகே சென்று அவனுக்கு என்ன நோய் என வினவினான். அதற்கு அந்த காவலாளி தனக்கு மலேரியா நோய் கண்டுள்ளது எனக் கூறினான். அதற்கு நிக்கோலாய் அக்காவலாளிக்கு தனி கவனிப்பு தேவைப்படுகிறது என கூறி அவனை இல்லம் செல்லுமாறு கூறினான். ஆனால் அக்காவலாளி தன் மேலதிகாரியின் அனுமதியின்றி தான் வீடு திரும்ப முடியாது எனவும் அரண்மனையை தன் கடைசி மூச்சு உள்ள வரை காவல் காக்கவேண்டும் எனக் கூறினான். அதற்கு நிக்கோலாய் அக்காவலாளிக்குப் பதிலாக தானே அங்கு காவல் புரிவதாகவும், காவலளியின் தலைவனிடம் தான்தான் அக்காவலாளியை வீடு செல்லக் கூறியதாகவும் அக்காவலாளி தன் கடமையை செவ்வனே செய்துள்ளான் என தெரிவிப்பதாகவும் கூறினான். ‘கடமை’ எனும் வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என திரு புஃருட்டான் கூறினார். நான் இன்று இங்கு வரவேண்டியது என் கடமையாகும் ஆகவே நான் வந்தேன். நமக்கு ஒரு கடமை விதிக்கப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.

திரு புஃருட்டான் அவர்கள் ரஷ்ய நாட்டில் வாழ்ந்து கல்வி கற்றார் மற்றும் ரஷ்ய மொழியைப் பேசுவதிலும் ரஷ்ய மொழி பேசுபவர்களையும் மிகவும் விரும்புவார் என்பது பலருக்குத் தெரியும். நல்ல வேளையாக ரஷ்ய மொழி பேசும் அணைவரும் அங்கு கூடியிருந்தனர். அவர் அக்கதையைக் கூறியபோது அவர் சில வார்த்தைகளை, குறிப்பாக ‘கடமை’, ‘பொருப்பு’ ஆகிய வார்த்தைகளை அவ்வப்போது ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார். அவர் தமது உரையை முடித்தவுடன் அவர் ரஷ்ய மொழி பேசும் புனிதப்பயணிகள்பால் சென்று: “நண்பர்களே, நான் கூறியது உங்களுக்குப் புரிந்ததா,” என வினவினார். ‘கடமை’ மற்றும் ‘பொருப்பு’ என்பது என்னவென இப்போது புரிந்ததா எனக் கேட்டார்.

ஏறத்தாழ இவ்வார்த்தைகளே அவர் இவ்வுலகவாழ்வின் இறுதியில் பேசிய வார்த்தைகளாகும். அதன் பிறகு அவர் சில நிமிடங்களில் காலமானார். அவர் எங்கள் கண் முன்னாலேயே தாம் மிகவும் நேசித்த புனிதப்பயணிகளின் கைகளிலேயே அமைதியாகவும் கௌரவத்துடனும் விண்ணேற்றம் அடைந்தார். அவரின் வாழ்வும் மறைவும், எனக்கு உண்மையான சேவகம், திருவொப்பந்தத்தில் உறுதிப்பாடு, கடவுளின் சமயத்தின்பால் விசுவாசம் ஆகியவற்றுக்கான உதாரணங்களாக விளங்கின. அவர் தமது வாழ்க்கையின் வாயிலாகவே கடமை என்றால் என்ன என்பதைக் காண்பித்து அதை நமது கடைசி மூச்சு உள்ள வரை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதையும் எடுத்துக்காட்டினார்.

அன்பு மற்றும் பிரார்த்தனையுடன்

ஐரா.

One thought on “‘கடமை’ என்றால் என்ன?”

  1. வணக்கம் ஐயா!

    நான், கடமைகளைச் செய்வது பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

    நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

    http://www.lusappani.blogspot.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: